Monday, September 9, 2024

நீயா நானா

நேற்றைய 'நீயா நானா'வில் அப்பா- மகன் உறவைப் பற்றின விவாதம் நடந்தது. இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று. 

அதில் ஒரு மகனார் தன்னுடைய சிறுவயதில் தனக்கு விருப்பமான ஆடையை தந்தை வாங்கித் தரவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் இப்பொழுது தான் ஒரு தந்தையாக இருக்கும் பொழுது அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினார். 

இது அனைவருக்கும் பொருந்தும். குழந்தைப் பருவத்தில் புரியாத , புரிந்திராத பல விஷயங்களும் நாம் பெற்றோர்களாக உருவெடுக்கையில் புலப்படும். நம் பெற்றோர்களின் அருமையும் புரியும். 

இன்னொருவர் தன்னுடைய பெற்றோரின் காதலைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.  

"அம்மா காலையில் காபி போட்டு எடுத்துட்டு வந்து அப்பாவுடன் குறைந்தது 45 நிமிடங்களாவது பேசிக்கொண்டிருப்பார். இளைஞனான எனக்கு அன்று அவர்களின் காதல் மீது பொறாமை கூட இருந்தது" என்றார். 

இன்று காலையில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் வேலைக்குச் செல்லவும் ஓடும் நிலையில் காதலாவது கத்திரிக்காயாவது என்றாகி விட்டிருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் ஃபோனை நோண்டி சமூக வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறோம். என்னத்த சொல்ல? 

"ஒருமுறை எனக்குச் சிறிது பணம் தேவைப்பட்டது. அப்பாவிடம் கேட்டேன். மறுத்து விட்டார். அப்பொழுது அவர் மீது கோபம் இருந்தது. இப்ப்பொழுது இல்லை."

"ஏன் சார்? பையன் ஒரு அவசரத்துக்குப் பணம் கேட்டா கொடுத்திருக்கலாமே" என்று கோபிநாத் கேட்க,

"என் காலத்திற்குப் பிறகு மனைவிக்காக சேர்த்து வைத்த பணம்.சமீபத்தில் அவள் இறந்து விட்டாள். அதற்குப் பிறகு மகனிடம் அந்தப்பணத்தை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டேன்" என்றார் அந்த அப்பா. 

இப்படித்தான் மனைவிக்காக பல கணவர்கள் சொத்துக்களை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், "பாவம் பெத்த மனம் பித்து பிள்ளைகள் மனம் கல்லு" என்பது போல அப்பா போனவுடன் அம்மாவிடம் நயவஞ்சகமாகப் பேசி பணத்தை லபக்கி அவளைப் புலம்ப வைக்கிறவர்களும் உண்டு. 

இன்னொருவர் தன் தந்தை கால் மீது போட்டு அமருவதில்லை என்றார். "வயதில் குறைந்தவர்கள் கூட அவர் முன் கால் மீது கால் போட்டு உட்காருகிறார்கள். நானும் அப்படித்தான் உட்காருவேன். இவர் மட்டும் அப்படி உட்காருவதில்லை." அவருடைய அப்பாவும் அது அடுத்தவரை அவமதிப்பதாகத் தோன்றியதால் அந்தப் பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டார். 

ஒரே ஒரு தந்தை மட்டும் கல்வி, கல்யாணம் வரையில் செலவு செய்தும் தன் அன்னைக்கு அந்த மகனார் இது வரை ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன தான் குறைவாக சம்பளம் வாங்கினாலும் ஆசையாக மகன் எதை வாங்கிக் கொடுத்தாலும் பெருமை பட்டுக்கொள்வாள் அம்மா. அங்கே இங்கே சில பேராசை பிடித்த அம்மாக்கள் குறைசொல்வதும் நடக்கிறது. அந்த அப்பா பேசியதிலிருந்து அது சிறு மனக்குறைவாகவே இருப்பது போல தெரிந்தது. அத்தனைக்கும் ஒரு பைசா மகனிடம் வாங்காமல் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். தனிக்குடித்தனம் போல. ஆக, மகனார் கையில் எதுவும் இல்லை. 

"இப்பொழுது நல்ல வேலை கிடைத்து இருக்கிறது. இனி அம்மாவிற்குச் செய்வேன்" என்று அவரும் இயலாமையுடன் பேசியதைக் கேட்க அவருக்கு என்ன கஷ்டமோ ?

உண்மையாகவே முடியாத நிலைமையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தனக்காக, தன் மனைவி, குழந்தைகளுக்காகச் செலவுகள் செய்யத் தயங்காதவர்கள், கணக்கு பார்க்காதவர்கள் பெற்றவர்களுக்காகச் செய்யும் பொழுது மட்டும் கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

"இப்ப இது உனக்கெதுக்கு? ரொம்ப அவசியமா? எதெது கேட்குறதுன்னு வரைமுறை இல்லையா?" என்று வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்கவே அத்தனை செலவழிக்க வேண்டிய காலத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தானே தங்களுடைய திருமணச் செலவைச் செய்து கொள்ள வேண்டும்? அது என்ன? வெட்கமே இல்லாமல் பெற்றோர் பணத்தில் திருமணம் செய்து கொள்வது?

இந்த மதி கெட்ட பெற்றோர்களும் நாங்கள் செலவு செய்தோம் என்று சொல்வது எதற்காக? வெட்டி பெருமைக்காகவா? பெற்றோர்கள் அப்படி இருந்தால் இப்படித்தான் பிறந்தவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் எதையும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

பெற்றோர்கள் தங்களுக்கென்று கடைசி வரை உயிர் வாழ சிறிது சேமிப்பை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களை நம்பி வாழ்வது எத்தனை கொடுமை?

அப்பா-மகன் உறவு என்பது புரிந்து கொள்ள முடியாத ஆனால் புரிய வைக்கும் உறவு. அப்பாவிடம் பேசத் தயங்கி அம்மாவைத் தூது விட்டு அவரை ஒரு தூரத்திலேயே வைத்து விடுகிறோம். அவரும் நெருங்கி வருவதில்லை. வயதில் அப்பாவை எதிர்த்தவனுக்கும் அவன் தவறுகளை உணரும் சந்தர்ப்பம் கிடைக்கும். உணர்ந்தவன் அப்பாவின் அருமையைப் போற்றுகிறான். உணராதவன் புலம்பியபடியே திரிகிறான்.

மகன்களை அப்பாக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு மகன்கள் அப்பாக்களைப் புரிந்து கொள்கிறார்களா?

அவ்வளவு தான்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...