Thursday, September 5, 2024

ஆசிரியர்கள் தினம்


ஆசிரியர்கள் தினத்தன்று மட்டுமன்றி உணர்வோடு கலந்து விட்டவர்கள் தான் என் வாழ்க்கையில் வந்த எனக்குப் பிடித்த ஆசிரியர்கள். ஐந்தாம் வகுப்பிலிருந்து தான் வகுப்பெடுத்த ஆசிரியைகள் முகங்களும் பெயர்களும் நினைவில் உள்ளது. முதன்முதலில் ஆங்கிலப்பாடம் படித்ததும் அந்த வகுப்பில் தான். எழுத்துக்கூட்டி வாசிக்க கற்றுக் கொண்டதும் வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்ற பாத்திமா டீச்சரின் கண்டிப்பும் வகுப்பு முன்பாக வாசிக்க அவர் என்னை அடிக்கடி அழைத்ததும் அதில் கொஞ்சம் கர்வம் தான். ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவியாகத் தான் எப்பொழுதும் இருந்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் 'கடுகடு' கன்னியாஸ்திரி வகுப்பு ஆசிரியர். அவரைப்பார்த்தாலே அனைவருக்கும் நடுக்கம். நீ எப்படி இருந்தாலும் நான் இப்படித்தான் என்று அவரிடமும் எப்படியோ நல்ல பொண்ணு பெயரை வாங்கியாயிற்று. ஏழாம் வகுப்பில் நிர்மலா டீச்சர். நாகர்கோவில் பக்கம் என்பதால் கொஞ்சிக்கொஞ்சிப் பேசும் தமிழ். குதிகால் உயர செருப்பு போட்டுக் கொண்டு சின்ன கொண்டை, சைடில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்று பார்க்க நன்றாக இருப்பார். இவர்களைத் தவிர 'கலகல'வென்று சிரித்த முகத்துடன் ஓட்டப்பந்தய பயிற்சி கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ் சிஸ்டர். அவருக்குப் பிறகு வந்த 'ஒல்லி பெல்லி' சிலுக்கு சாயல் ஆசிரியை. அவரும் நாகர்கோவில் தான். தினமும் மாணவிகள் ஆசையாக ரோஜாப்பூக்களை வாங்கிச் செல்வோம். எப்படித்தான் அன்பைக் காமிக்கிறது? திக்குமுக்காடிப் போவார்! நடனம் சொல்லிக் கொடுத்த் லூர்து, சுகந்தி, சூசைரத்தினம் ஆசிரியைகள்! ஸ்டெல்லா சிஸ்டர் எப்பொழுதும் ஏதாவது ஒரு பரிசுப்பொருளைக் கொடுப்பார். வெள்ளந்தியாக அப்படி ஒரு கன்னியாஸ்திரி! அந்தந்த வயதிற்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நடுநிலைப்பள்ளியை மறக்க முடியாத அனுபவங்களாக்கின என் பிரிய ஆசிரியைகள்!

மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியை 'மீனாட்சி' வகுப்பு ஆசிரியரும் கூட. வகுப்பில் நெல்லிக்காய், மாங்காய் சாப்பிட்டதற்கு அத்தனை அறிவுரை! இந்தக்காலத்தில் சொல்வதென்றால் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு. ஆனாலும் சேட்டைக்கு குறைச்சல் இல்லை. மேல்நிலைப்பள்ளி வயதில் 'அட! என்னடா பொல்லாத வாழ்க்கை!' என்ற அலட்சியமும் அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் இருந்தாலும் படிப்பில் சோடை போனதில்லை. அங்கும் ஆசிரியைகளின் பிரிய மாணவியாகவே இருந்தேன். எனக்கு எப்பொழுதுமே 'கலகல'வென்று பளிச்சிடும் ஆசிரியர்களைத் தான் பிடிக்கும். பார்த்தாலே தூக்கம் வருகிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் வகுப்பு என்றாலே அலர்ஜி. அவர்கள் பாடங்களில் மட்டும் மதிப்பெண்கள் குறையும். பத்தாம் வகுப்பில் டீச்சர் ட்ரைனிங்ல் இருந்தவர் எடுத்த அறிவியல் பாடம் என்றால் அத்தனை இஷ்டம். அத்தனை அழகாக இருந்தார். அதற்குப் பிறகு வேதியியல் பாடமெடுத்த கமலா டீச்சர். அவர் சூடி வரும் மஞ்சள் கனகாம்பரம், கண்களை உறுத்தாத வண்ணங்களில் உடுத்தி வந்த பருத்திப்புடவைகள் என்று மெல்ல மெல்ல மிகவும் பிடித்த ஆசிரியை ஆனார். அந்தப்பாடத்தில் எப்பொழுதும் முதல் மதிப்பெண். +2 தேர்விலும் பள்ளியில் முதலாவதாக வந்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. 2018ல் அவரைச் சந்தித்த பொழுது பெயரைக்கூட மறக்காமல் இருந்தார். மிகவும் சந்தோஷமாக இருந்ததது. கணித வகுப்பெடுத்த மிஸ்.ஆக்னஸ். எனக்கு நீண்ட அறிவுரை கொடுத்தவர். ஒருவகையில் மருத்துவத்தின் மேல் இருந்த என்னுடைய ஆசையை மடை மாற்றியவர். "அதெல்லாம் வேண்டாம். நீ இன்ஜினியரிங் பண்ணு. அதுதான் உனக்கு செட்டாகும்" என்று அவருடைய கணித வகுப்பை விட்டுக் கொடுக்காதவர். மேல்நிலைப்பள்ளியில் கூட ஆசிரியைகள் உரிமையாக அறிவுரை வழங்கிய காலம் அது. நாங்களும் கேட்டுக் கொண்டோம்.

கல்லூரிக்கு வந்ததும் தான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி தெரிந்தது. அவர்கள் வகுப்பில் பாடம் எடுத்ததோடு கடமை முடிந்தது என்றிருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் என்றுமே என் விருப்பப்பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களை வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் சந்தித்து அளவளாவியதும் மகிழ்ச்சியான தருணம்... ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்களையுமறியாமல் நமக்கு வேண்டிய வாழ்க்கைப்பாடங்களையும் சேர்த்தே கற்பிக்கிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற, நல்வழிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியரே போதும். அவ்வகையில் எனக்குப் பல ஆசிரியர்கள் அமைந்தது வரமே.

என் ஆசிரியர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
































படித்தது கிறிஸ்தவபள்ளி என்பதால் பெரும்பாலும்

1 comment:

  1. Nicely written. Incredible memory of St Patrick's Madurai. Back to childhood. Not to forget Amali teacher who was very strict and Roslin teacher whom every student liked in 2nd standard. And kneeling down to pray on hearing church bell at 12 noon. Also scared of nun sister in 3rd standard who introduced English alphabets.

    ReplyDelete

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...