'அமெரிக்காஸ்' கால்பந்தாட்ட போட்டிகளில் லயித்திருக்க, ஜூன் 24ல் அடுத்தடுத்து தாக்கிய இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுவேலாவை பேரழிவுக்குத் தள்ளியுள்ளன. இன்றைய நிலவரப்படி, 1,943 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10,571-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கம் (Seismic Doublet), கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுவேலா சந்தித்த மிகக் கடுமையான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பல அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட ஆறு நாட்களைக் கடந்தபோதும், மீட்புப் பணிகள் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வெனிசுலா மீட்புக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருப்பவர்களை கண்டறிய மோப்ப நாய்கள், வெப்ப உணர்வு கேமராக்கள், ட்ரோன்களுடன் கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் முதல் 72 மணி நேரம் கடந்திருந்தாலும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரை உயிருடன் மீட்கும் பணிகள் இன்னும் தொடர்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, சுமார் 68 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளன. தொடர் அதிர்வுகள் (Aftershocks) ஏற்படுவதால் பலர் தற்காலிக முகாம்களிலும் திறந்த வெளிகளிலும் தங்கியுள்ளனர். பல பகுதிகளில் குடிநீர், உணவு, மின்சாரம், சுகாதார வசதிகள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. பல மருத்துவமனைகள் சேதமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன. அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மருந்துகளுடன் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தற்காலிக முகாம்களில் மக்கள் நெருக்கமாக தங்கியிருப்பதால் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) போன்ற நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
பேரழிவின் தீவிரத்திற்கு நிபுணர்கள் பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் பல பழைய கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் உள்ள மென்மையான மண், நில அதிர்வை மேலும் அதிகரித்துள்ளது. அதுவும் தவிர, நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக வெனிசுவேலாவின் கட்டமைப்பு வசதிகள், அவசரகால மீட்பு அமைப்புகள், சுகாதாரத் துறை மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றன.
பல உலக நாடுகளும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளது ஆறுதல்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவி, பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடனடி நிவாரண நடவடிக்கைகளைத் தாண்டி வெனிசுவேலாவின் நீண்டகால மறுகட்டமைப்பும், நிலநடுக்கத்தைத் தாங்கும் பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதும் அடுத்த பெரிய சவாலாக இருக்கும்.
ஒவ்வொரு பேரழிவும் நமக்கு ஒரு உண்மையை நினைவூட்டுகிறது. இயற்கையின் ஆற்றலுக்கு முன் மனிதன் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அவன் இன்னும் அதன் ஒரு சிறிய அங்கமே. நகரங்களை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாது. எனவே, பேரிடர் தயார்நிலை, பாதுகாப்பான கட்டுமானம், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உலக நாடுகளின் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றில்தான் எதிர்காலத்தின் பாதுகாப்பு இருக்கிறது. வெனிசுவேலாவின் இந்த சோகம், மனிதகுலம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு வாழும் கணத்தையும் நன்றியுடன் கடந்து செல்வோம்.
No comments:
Post a Comment