அமெரிக்காவில் தினம் ஒரு நாளை யாருக்காவது அர்ப்பணித்துக் கொண்டாடினாலும் சில நாட்கள் மிகுந்த அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் 6ந் தேதி செவிலியர் தினம். மே 12 வரை செவிலியர் வாரமாக நாட்டில் கொண்டாடுகிறார்கள். மருத்துவர்களைப் போலவே செவிலியர்களின் பங்கும் மருத்துவத்துறையில் அளப்பரியது. அதுவும் இந்த தொற்றுப்பரவல் காலகட்டத்தில் பெற்றோர், உற்றார்களை விட நோயாளிகளின் அருகில் இருந்தவர்கள் இவர்கள் தான். இதற்கு முன் என்னுடைய தனிப்பட்ட மருத்துவ விடுதி அனுபவத்திலும் இதை நேரில் கண்டிருக்கிறேன். என்ன தான் அவர்களுடைய பணியாக இருந்தாலும் பெரும்பான்மையோர் அதை கடமைக்காக மட்டும் செய்யாமல் அன்பாக நோயாளிகளைப் பராமரிப்பதால் தான் அவர்களின் செயலும் புனிதமாக போற்றப்படுகிறது. தேசிய செவிலியர் வாரத்தின் புதன்கிழமையன்று "தேசிய பள்ளி செவிலியர் தினம்" கொண்டாடப்படுகிறது என்று இன்று தெரிந்து கொண்டேன். பள்ளிகளில் குழந்தைகளைப் பராமரிக்கும் அனைத்துப் பள்ளி செவிலியர்களையும் கௌரவிக்கிறது இந்நாள்.
மகளின் ஆரம்பப்பள்ளி வயதில் ஒருநாள் "உங்கள் மகளுக்கு காய்ச்சல் இருக்கிறது. வந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று தொலைபேசியில் அழைப்பு.
அவளிடம் நான் பேசமுடியுமா என்று கேட்டு
"என்னாச்சு? காலையில நல்லா தான இருந்த?"
"திடீர்னு தலை வலிச்சது. ஸ்கூல் நர்ஸ் தான் காய்ச்சல் இருக்குன்னு சொல்லி அவங்க ரூம்ல இருக்கச் சொல்லிட்டாங்க."
"சரி நான் வர்றேன்."
அன்று தான் தெரிந்தது அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு செவிலியர் இருப்பார் என்று. சுகமில்லாத குழந்தைகளைப் பரிசோதித்துப் பெற்றோர்களுக்குத் தகவல் தருவது மட்டுமில்லாமல், பள்ளிக் குழந்தைகளுக்கும் சத்தான உணவு, ஆரோக்கியம் பற்றி வகுப்புகள் எடுப்பார் என்றும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் மருந்துகளைப் பள்ளி நேரத்தில் அவருடைய கண்காணிப்பில் தான் கொடுக்கிறார்கள். பள்ளியில் யாருக்காவது தொற்றுப்பரவல், நோய்களின் அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவிக்க வேண்டியது அவருடைய கடமை.
மதுரையில் நான் படித்த பள்ளியில் முதலுதவிப் பெட்டியில் காயங்களுக்குப் போடும் மருந்துகள் இருக்கும். அவ்வளவு தான். தகுதி வாய்ந்த செவிலியரோ அவருக்கென தனிஅறையோ எதுவும் இருந்ததில்லை. கண்டிப்பாக பள்ளிகளில் ஒரு செவிலியர், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கவுன்சிலர் அவசியம் இருப்பதும் நல்லது என அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.
செவிலியர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
Wednesday, May 11, 2022
National School Nurse Day
எங்கே நிம்மதி?
"ஏண்டா, அலுவலகத்திற்கு வருகிறோம் என்றிருக்கிறது. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பேசவே பிடிக்கவில்லை. வேறு வழியின்றி வந்து தொலைய வேண்டியிருக்கிறது" புலம்பித் தள்ளி விட்டார்.
பல வருடங்களாக எனக்கு அறிமுகம். வயதும் முப்பதுக்குள் தான் இருக்கும். வேலையின் நெளிவு சுளிவுகளை நன்கு அறிந்த அறிவாளி. அரைத்தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அரசின் புதிய கொள்கைகளை ஒப்பிக்கும் அளவுக்கு வேலையில் அத்தனை ஈடுபாடு!
"என்னாச்சு?" என கேட்டேன்.
இத்தனை வருடங்களாக உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறேன். பதவி உயர்வுக்கான அத்தனை தகுதிகள் இருந்தும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று வருத்ததுடன் சொன்னார்.
"வேறு அலுவலகத்திற்குப் போகலாமே"?
"அதையும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நேற்று வந்தவர்கள் எல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். யாரையும் பிடிக்கவில்லை."
"சீக்கிரம் உங்கள் விருப்பப்படி நடக்கட்டும். பை" சொல்லி என்னுடைய தளத்தில் இறங்கிக் கொண்டேன்.
நேர்மையாக தானுண்டு தன் வேலையுண்டு என்று கர்மசிரத்தையாக வேலை செய்பவர்களை விட உயர் அதிகரிகளுடன் வலிந்து பேசி சோப்பு போடுபவர்கள் விரைவில் அதிகாரப்பதவிகள் பெற்று முன்னேறுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. அதில் வந்த எரிச்சல் தான் நண்பரை இப்படி புலம்ப வைத்திருக்கிறது என்று தெரிந்தது. இப்படி புலம்புவர்களிடம் நான் சொல்வது "நீங்கள் உங்கள் அலுவலகத்தில் அடைந்து கிடக்காமல் உயர் அதிகாரிகளுடன் பேசுங்கள், நட்பு பாராட்டுங்கள். அப்பொழுது தானே அவர்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிய வரும்."
"அந்த மாதிரி அவர்கள் காலை நக்க வேண்டிய அவசியம் இல்லை. பழக்கமுமில்லை." என்று இயலாமையுடன் கூறுவார்கள். பணியிடத்தில் நன்கு வேலை செய்வது மட்டும் முக்கியம் அல்ல. மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதும் முக்கியம்.
அடிக்கடி நண்பரைச் சந்திக்கும் போதெல்லாம் அய்யோயோ இன்னிக்கு என்னத்த சொல்லிப் புலம்ப போகிறாரோ என்றிருக்கும்.
இன்று மீண்டும் சந்திக்கையில் சிரித்துக் கொண்டே "எனக்குப் பதவி உயர்வு கிடைத்து விட்டது. என்ன, காலையிலிருந்து மாலை வரை ஒரே மீட்டிங். அப்புறம் வழக்கமான வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது."
ம்ம்ம்ம்...அடுத்த புலம்பலா?
"நீ கேட்டது உனக்கு கிடைச்சிருக்கு." என்றேன்.
"ஆமாம். நானே வலிய போய் வம்ப வாங்கிக்கிட்டேன்." சிரித்துக் கொண்டே சொன்னவர், "இன்னும் சில வாரங்களில் என்னுடைய வேலைகளைப் பங்குகொள்ள இருவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். கொடுமை என்னவென்றால் ஆட்களே கிடைக்க மாட்றாங்க!"
"ரியலி?"
"ஆமா. ஒருத்தன் வீட்ல இருந்து வேலை பார்க்க அனுமதிப்பீங்களான்னு கேட்டான். இன்னொருத்தன் குறைந்தது 50% வீட்ல இருந்து வேலை பார்க்க அனுமதி கொடுத்தா வர்றேன்ன்னு சொல்லிட்டான்."
அடப்பாவிங்களா! வேலை இல்லைன்னு நாயா பேயா அலைய வேண்டியது. வேலை இருந்தா இப்படி வெட்டி நாயம் பேசிட்டுத் திரியறது. ஆனாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் பெருகி விட்டதும் இவர்கள் இப்படியெல்லாம் கேட்பதற்கு ஒரு காரணம்.
"சீக்கிரம் ஆட்கள் கிடைக்கட்டும்.பை" சொல்லிவிட்டு வந்தேன்.
அடேய் கொரோனா ! எப்படி மக்களை மாற்றி வைத்திருக்கிறாய் ?
இனி ஆட்கள் கிடைக்கும் வரை சின்னத்தம்பி புலம்பிட்டு இருப்பானேன்னு நினைச்சாத்தான்...
Tuesday, May 10, 2022
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
கற்றவருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதை அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது நல்ல கல்வியைப் பெற்றுத் தர போராடி வருகிறார்கள். இன்றைய சூழலில் அன்றாட வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவையும், திறன்களையும் வழங்கும் தரமான அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. இது வறுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, பாலின சமத்துவத்தை அடைவதற்கும் சமூக மேம்பாட்டிற்கும் முக்கிய உந்துதலாக இருக்கும். எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமான காரணியாக இருப்பதால் தான் உலகெங்கிலும் இயங்கும் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி கிடைத்திட பல நாட்டு அரசுகளும் முனைப்புள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே எழுத்தறிவு பெற்றோரின் விகிதத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது. பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திறமையான கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களும் தங்கள் நகர்ப்புற சக மாணவர்களுடன் சம நிலையில் போட்டியிடவும் முன்னேறும் வாய்ப்புகள் பெற்றிடவும் உதவும் வண்ணம் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரமான நவீன கல்வி, கலாச்சாரத்தின் வலுவான அம்சங்கள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, சாகசச் செயல்பாடுகள், உடற்கல்வி என அனைத்தையும் வழங்கும் அம்சங்களைக் கொண்டது இத்திட்டம்.
இப்பள்ளிகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வுத் தேர்வில் (JNVST) தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அந்த மாவட்டத்தில் உள்ள ஜேஎன்வி பள்ளிகளில் கல்வி கற்க இயலும். கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சிப் பெறும் வகையில் தேர்வு வடிவமைக்கப்பட்டு தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் எந்தவித சிரமமும் இன்றி இலவசமாக சேர்க்கைப் படிவங்களைப் பெறுவதை உறுதி செய்யவும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, உள்ளூர் செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், வித்யாலயா இணையதளங்கள் மற்றும் மாவட்டத்தின் உள்ளூர் பள்ளிகளுக்கு நவோதயா வித்யாலயா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைகள் மூலம் போதுமான விளம்பரங்களும் செய்யப்படுகிறது. ஜேஎன்வி அமைந்துள்ள மாவட்டத்தின் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது தேசிய திறந்தநிலைப் பள்ளியின் ‘பி’ சான்றிதழ் திறன் பெற்ற ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்காக விண்ணப்பிக்க இயலும்.
கிராமப்புற ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து 3,4,5ம் வகுப்புகளைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே இந்த தகுதித் தேர்வு எழுத முடியும். ஒரு மாவட்ட பள்ளியில் குறைந்தபட்சம் 75 சதவிகித இடங்கள் கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களாலும் மீதமுள்ள இடங்கள் நகர்ப்புற பள்ளி மாணவர்களாலும் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளாலும் நிரப்பப்படுகின்றன. எந்த மாவட்டத்திலும் தேசிய சராசரியை விட (எஸ்சி 15% ,எஸ்டி 7.5% , ஓபிசி 27%) இடஒதுக்கீடு குறைவாக இருக்கக் கூடாது என்பது தான் சட்டம். இதைத்தவிர உடற்குறைபாடு உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. JNVST அறிவித்துள்ள மாநில மொழிகளிலும் (தமிழும் இதில் அடங்கும்) ஆங்கிலத்திலும் தேர்வு எழுதும் வசதிகளும் உள்ளது சிறப்பு.
ஒவ்வொரு நவோதயா வித்யாலயாவும் மாணவர்களுக்குத் தங்கும் விடுதி, பள்ளிச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், தினசரி உபயோகப் பொருட்கள், மருத்துவச் செலவு, சிபிஎஸ்இ , ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களை இலவசமாக வழங்குகிறது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடமிருந்து வித்யாலயா விகாஸ் நிதியாக மாதம் ரூபாய் 600/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் மாதந்தோறும் ரூ.1500 செலுத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அதிக செலவுகள் செய்யப்படுகிறது. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க ஆறு சிறப்புப் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவோதயா வித்யாலயா சமிதியின் திட்டங்களுக்கான நிதியை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் மத்திய அரசாங்கத்தால் வழங்குகின்றன.
நவோதயா வித்யாலயா திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மக்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள ஒரு நவோதயா வித்யாலயாவிலிருந்து மற்றொரு மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள வித்யாலயாவிற்கு மாணவர்கள் இடம்பெயர்வது ஆகும். இத்திட்டத்தின்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 30% குழந்தைகள் ஒரு ஜேஎன்வி-யில் இருந்து மற்றொரு ஜேஎன்வி-க்கு ஒரு கல்வியாண்டுக்கு இடம்பெயர்கின்றனர். பொதுவாக இந்தி பேசும் மற்றும் இந்தி பேசாத மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் இடப்பெயர்வு தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான சமிதியின் முக்கிய அம்சமாகும். நவோதயா வித்யாலயாக்கள் சிபிஎஸ்இ-ன் மும்மொழிக் கொள்கையைப் (பிராந்திய மொழி, இந்தி, ஆங்கிலம்) பின்பற்றுகின்றன.
சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஜேஎன்வி மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த சிபிஎஸ்இ தேசிய சராசரியை விட தொடர்ந்து சிறப்பாக இருப்பது சமிதி சரியான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. கற்பித்தல், கற்றல் செயல்பாட்டில் புதுமைகள், சோதனைகள், சமீபத்திய கல்வித் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஆசிரியர்களின் பயிற்சி, வித்யாலயா ஆய்வகங்கள், நூலகம், கணிதம், அறிவியல் ஆய்வகங்களின் பயன்பாடு, வகுப்பறை பரிவர்த்தனை, பயனுள்ள தகவல் தொடர்பு, கணக்கீட்டு திறன், தொழில் ஆலோசனை மற்றும் ஊக்கமளிக்கும் அமர்வுகள் என ஒவ்வொன்றும் திட்டமிட்டு செய்யப்படுவதால் கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற பிற பள்ளி அமைப்புகளின் சராசரி தேர்ச்சி சதவீதங்களை ஒப்பிடுகையில் நவோதயா வித்யாலயா சமிதிப் பள்ளி மாணவர்களின் படிப்பறிவு சிறந்து விளங்குகிறது.
2020-21ல் 636 பள்ளிகளில் சேர பதிவு செய்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 25,43,459. தகுதித் தேர்வு எழுதியவர்கள் 19,27,354 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 45,291.
சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களும் தடையின்றி ஒருங்கிணைய ஒரு தனித்துவமான பரிசோதனையாகத் தொடங்கிய நவோதயா வித்யாலயா அமைப்பு, இன்று தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இந்திய மாநிலங்களில் நிறுவப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் மாநில அரசாங்கங்கள் பள்ளி வளாகத்திற்கான நிலங்களை மட்டுமே அளிக்கின்றன. மற்ற செலவுகள் அனைத்தும் மத்திய அரசு நிதியால் பராமரிக்கப்படுவதால் பிற மாநிலங்கள் இம்முயற்சிக்குப் பெரும் ஆதரவை அளித்து கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றன.
இந்தி எதிர்ப்புப் பிரச்சாரமும் தமிழ், ஆங்கிலம் எனும் “இரு மொழிக்கொள்கை” அரசியலால் லாபத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் மட்டும் இன்று வரையில் ஆங்கிலம், மாநில/வேற்று நாட்டு மொழியுடன் ஹிந்தி மொழிப் பாடங்கள் என “மும்மொழிக்கொள்கை” வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் தொடர்வதும் ஒருவிதத் தீண்டாமை தான். ஜேஎன்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆங்கிலமும், மாநில மொழியும் தற்போது முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இன்று வரையில் அரசியல் செய்யும் திராவிடக் கட்சிகளால் திறமையுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இலவச கல்வி வாய்ப்புகளைத் தமிழகம் இழந்து வருகிறது.
சமூக நீதிக்காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி வாய்ப்புகள் நிறைந்த மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்கத் தடையேதும் விதிக்காமல் அதைக் காரணமாகக் காட்டி, ஜவஹர் நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல் இருப்பதும் அரசியலே அன்றி வேறு எதுவும் இல்லை. அவர்களுடைய கூட்டணிக்கட்சிகளும் அமைதி காப்பது வாக்களித்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்யும் அநீதியே.
இந்தியாவின் பிற மாநிலங்களில் 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் இருப்பது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி வசதி வாய்ப்புகள் குறைந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை முன்னெடுக்க அரசு ஆதரவளிக்க வேண்டும்.
கல்வி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை ஆகும். நல்ல தரமான கல்வி நாகரீக நடத்தை கொண்ட சமூகத்தை உள்ளடக்கிய ஜனநாயகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெறுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது.
36 வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு நல்ல திட்டத்தை சுயலாப அரசியல் காரணமாக செயல்படுத்தாமல் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு திராவிடக் கட்சிகள் இழைக்கும் அநீதி இனியும் தொடராது என நம்புவோம். கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா முதல் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் மூலம் உண்மையான சமூகநீதி உருவாகட்டும். பிற்படுத்தப்பட்ட ஏழை கிராமப்புற மாணவர்களின் வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்.
Tuesday, May 3, 2022
"பட"
1996ல் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப்படம் "பட". துவக்கத்தில் வெவ்வேறு இடங்களில் போராளிகளைக் காட்டினாலும் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாக கூடும் பொழுது தான் ஏதோ நடக்கப் போகிறது என்று புரியும். படமும் அங்கிருந்து தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆதிவாசிகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் "அய்யன்காளி படை"ப் போராளிகள் நான்கு பேர் இணைந்து அரசின் திட்டத்தை முறியடிக்க கலெக்டரை சிறைபிடிக்க, அவர்களுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை தான் கதை. அரசின் சட்டங்களை மதித்து நடக்கும் கலெக்டர் அவகாசம் கேட்க, முடிவை அப்பொழுதே சொல்ல வேண்டுமென நிர்பந்திக்கும் போராளிகள். அவர்களின் நிபந்தனையை ஏற்று அரசு அதிகாரியை மீட்கவும் எதிர் வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டும் கோரிக்கைகளுக்கு இசைகிறது அரசு.
உண்மையில் நில மீட்பு கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று படித்தறிந்து கொண்டேன். அதுவும் கல்வியறிவு மிக்க கம்யூனிசம் பேசித்திரியும் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் நிலையில் எந்த வித மாற்றமுமில்லை. சொந்த ஊரில் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இடத்தைக் கைப்பற்றி செல்வாக்கு மிக்கவர்களிடம் அரசு ஒப்படைத்தது ஒப்படைத்தது தான். அதற்கான மாற்றுத்தீர்வு இல்லாத நிலை இன்று வரையில் தொடருவது தான் வேதனை.
உண்மைக்கதையை படமாக்கிய விதமும் நடித்தவர்களும் தான் இப்படத்தின் சிறப்பே. எவ்வித ஹீரோத்தனமும் இல்லாமல் நான் பெரிய நடிகன் என்ற வெற்றுகூச்சல் இல்லாமல் வேட்டியை மடித்துக் கொண்டு நடிக்க கிளப்பிவிடுகிறார்கள் இந்த சேட்டன்கள். மலையாளப்படம் என்பதாலோ என்னவோ பிரகாஷ்ராஜ் கூட அதிகம் சிலம்பாமல் அடக்கியே வாசித்திருந்தார். தீப்பொறி பறக்க கதாநாயகன் எண்ட்ரி, இரைச்சலான இசை, 'ஜோ'வென்று கூட்டத்தோடு கும்மாளம் போடும் நடனம், "பஞ்ச்" வசனங்கள், குடி, கூத்து என்று இல்லாமல் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல படம்.
ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக மத்திய அரசை எதிர்த்து கோஷம் போட்டால் தான் படத்தைத் திரையிட முடியும் என்றிருக்கும் தமிழ் சினிமா உலகம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. தமிழக மக்களும் தான்.
Sunday, May 1, 2022
தொழிலாளர் தினம்
"தொழிலாளர் தினம்" என்றவுடன் ஒரு சில முகங்கள் நினைவில் வர தவறுவதில்லை. அப்படித்தான் கருப்பு என்ற கருப்பசாமி அண்ணன் முகமும். அரசமரத்தில் அப்பொழுது வரிசையாக ரிக்க்ஷா,மாட்டு வண்டிகள், கைவண்டிகள் நின்று கொண்டிருக்கும். அருகில் ஒரு செக்கு கூட இருந்தது. வீட்டில் சாயம் போட்ட நூல்களை முனிச்சாலையில் இருந்த அப்பாவின் நண்பரின் வீட்டில் காயப்போட கைவண்டியில் எடுத்துச் சென்றவர் தான் "கருப்பு அண்ணே".
"போய் கருப்ப வரச்சொல்லு." அப்பா சமயங்களில் கூறிய பொழுது அரசமரத்திற்குச் சென்று கைவண்டி இருக்கிறதா என்று பார்த்து அருகில் அமர்ந்திருப்பவரிடம்
"அண்ணே அப்பா வரச்சொன்னாங்க" என்றவுடன்
"நீ போடா நான் வர்றேன்" என்று உடனே கிளம்பி வருவார். சாப்பிட்டுக் கொண்டிருந்தால் "சாப்பிட்டு வர்றேம்மா." என்பார். இல்லையென்றால் வேறு யார் வீட்டு வேலைக்கோ சென்றிருப்பார்.
ஆள் நல்ல உயரமாக கருகருவென்று வெய்யிலில் வேலை செய்து கறுத்துப்போன ஆனால் திடமான உடல்வாகு. முட்டி கொஞ்சம் வளைந்து மெதுவாக நடப்பார். வயது அதிகம் இருந்திருக்கும்!
கைவண்டியிலிருந்து மாட்டு வண்டியாக மாறியவுடன் அதில் ஏறிச்செல்ல ஆசையாக இருக்கும். நல்ல உயரமான காளை. கண்கள் பெரிதாக பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதனால் சேட்டை செய்யாமல் தூர நின்று நூல்களை ஏற்றுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். வண்டி நகராமல் இருக்க சக்கரங்களுக்கு இடையில் செங்கற்களை வைத்து விட்டு படியேறி வீட்டிற்குள் சென்று தோள்களில் நூல்களை எடுத்துக் கொண்டு வரிசையாக அடுக்கி வைத்து முடித்தவுடன் வண்டியில் ஏறி அமர்ந்து கொள்ள, நாங்கள் செங்கல்களை எடுத்து வைப்போம். கூடவே சாயப்பட்டறையில் வேலை செய்த ஒருவரும் கிளம்பிப்போவார்.
திரும்பி வரும் பொழுது காய்ந்த நூல்களை கொண்டு வந்து பணத்தை வாங்கிச் செல்வார். தலையைச் சொரிந்து கொண்டே "கொஞ்சம் கூட கொடுங்க ஐயா" என்று அப்பாவிடம் கேட்பதை இன்று நினைத்தால் அவருடைய உடல் உழைப்பிற்கான ஊதியத்தை அளித்தோமோ என்று சந்தேகமாகவே இருக்கிறது.
மதுரையில் வெயிலுக்கா பஞ்சம்? வரும் பொழுதெல்லாம் தண்ணீர் வாங்கி குடிப்பார். சமயங்களில் அம்மா மீந்திருக்கும் சாப்பாட்டைக் கொடுத்தால் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுப் போவார். இல்லையென்றால் அவருடைய வீட்டிலிருந்து பித்தளைப்பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கும் பழைய சோறும், ஊறுகாயும் தான். அவ்வப்போது தண்ணியும் அடித்து அப்பாவிடம் திட்டு வாங்கும் பொழுது பாவமாக இருக்கும். ஆனால் ஏன் இப்படி குடித்து விட்டு காசை வீணாக்குகிறார்கள் என்றும் தோன்றும். உடல் வலிக்கு மருந்தாக குடிக்கு இப்படித்தான் அடிமையாகிப் போகிறார்கள் தொழிலாளிகள்😞
எப்போதுகூப்பிட்டாலும் வீட்டில் உதவிக்கு கூப்பிட்டால் உடனே வந்து விடுவார். எப்போதும் அன்பாக பேசும் அந்த முகம் மட்டும் இன்னும் மறக்கவில்லை.
கடை நிலைத்தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம்இன்று வரையிலும் கிடைப்பதில்லை என்பது தான் துயரமே. அதைத்தான் இந்த நாட்கள் நமக்கு நினைவுறுத்துகிறது. அவர்களுக்காக உழைக்கிறேன் பேர்வழி என்று கட்சிகளும் சங்கங்களும் அவர்களை மேலும் சுரண்டிக் கொண்டிருப்பது தான் நிதர்சனம்.
தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்.
பறந்தாலும் விட மாட்டேன் - 3
"ஹாலிவுட் படங்களை நெட்ஃபிளிக்ஸ்ல் பார்ப்பேன். எனக்குப் பிடிக்கும்" என்று ஏஞ்சலா கூறி விட்டு, என்னுடைய நெற்றிப் பொட்டைப் பற்றிக் கேட்டார்.
பிறகு பேச்சு அப்படியே ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி என்று உலகநாடுகள் பற்றி அவரவர் அனுபவங்களைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். கார்லோஸ் தனது வேலை நிமித்தம் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர். கொலம்பியாவில் மருத்துவராக பணிபுரியும் ஓர்கேயும் நாடுகள் பல சென்று வந்திருக்கிறார். நான்கு குழந்தைகள் என்றவுடன்
"அப்படியா?" ஆச்சரியமாக இருந்தது எனக்கு! இரண்டு குழந்தைகள வளர்த்து ஆளாக்குறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளுது😅
அம்மணி 'சிக்'கென்று வேறு இருக்கிறார். இருவரும் இன்றும் இளங்காதலர்கள் போல கொஞ்சிக் குலாவுகிறார்கள். வாழ்க வளமுடன்!
இந்தியாவில் தான் ஒரு வயதிற்குப் பிறகு பொறுப்புகள் கூடி காதல் தூர சென்று விடுகிறதோ? "பார்றா! இந்த வயசுலயும் டூயட் பாடுறாங்க. இதெல்லாம் இந்த வயசுல தேவை தானா" என்று கேலி செய்யும் சமுதாயத்தில் வாழ்கிறோம். இவர்கள் எல்லாம் அப்படி இல்லை. குழந்தைகள் இருந்தாலும் வயதானாலும் கணவன் மனைவி உறவை நன்றாகவே பேணி கொண்டாடுகிறார்கள்😘
பேச்சு அப்படியே நெட்ஃபிளிக்ஸ்ல் வெற்றிகரமாக வலம் வந்த "நார்கோஸ்" தொடரில் வந்து நிற்க, கார்லோஸ்,
"இதுவரை நான் யாரிடமும் இத்தொடரைப் பற்றிப் பேசியதில்லை. அத்தொடரைப் பார்க்கவுமில்லை. அது தந்த கசப்பான அனுபவம் அப்படி. இன்றும் நினைவில் இருக்கிறது. நான் கல்லூரிக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு அன்று 15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றேன். வழியெங்கும் போலீஸ் வண்டிகள். கூச்சலும் குழப்பமாய் இருந்தது. பிறகு தான் தெரிந்தது அங்கு குண்டு வெடித்ததில் பலர் இறந்ததும் நான் அன்று தப்பித்ததும். இன்று நினைத்தாலும் அந்த பயங்கரத்தை மறக்க முடியவில்லை. எங்கு எப்பொழுது பார்த்தாலும் போலீஸ் எஸ்கோபாரைத் தேடுகிறேன் பேர்வழி என்று அவனும் இவர்களுக்குப் போக்கு காட்டியது என்று கொலம்பியாவின் கொடுமையான காலங்கள். இப்பொழுது மெக்ஸிகோவில் அப்படி நடந்து கொண்டிருக்கிறது." என்று வருத்ததுடன் பேசினார்.
அந்தக் காட்சி கூட தொடரில் இருக்கிறது. குடியிருப்புப் பகுதியில் போலீஸ் வேட்டையின் போது நடக்கும் அசம்பாவிதம். கார்லோஸ் அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.
மதுரை ரயில்வே தண்டவாளத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு ஒன்று அன்று வெடிக்காமல் நாங்கள் உயிர் தப்பிய நாள் நிழலாடிச் சென்றது😔
பிறகு கொலம்பியாவில் கொரோனா பற்றிப் பேசியதில் மீண்டும் கலகலப்புடன் பேச்சுக்கள் தொடர, ஏஞ்சலா, "எங்கள் ஊரில் பலரும் முருங்கைகீரைப் பவுடரை தினமும் எடுத்துக் கொண்டதால் கொரோனா வரவில்லை என்று நம்புகிறார்கள். நானும் எடுத்துக் கொள்வேன்" என்றார். தமிழகத்தில் முருங்கையின் பிரபலத்தைப் பற்றிப் பேசி நேரம் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தோம்.
கிளம்பும் முன் கொலம்பியா வந்தால் தங்களுடன் வந்து தங்கி இருக்குமாறு ஏஞ்சலாவும் ஓர்கேயும் அழைப்பு விடுக்க, நாங்களும் அவர்களை ஆல்பனிக்கு வருமாறு கேட்டுக் கொண்டோம். பழகிய சில மணிநேரங்களில் நெருங்கி வரும் அபூர்வ மனிதர்கள் பட்டியலில் இவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
ரிப்பப்ளிக் விமான நிலையத்தில் எங்களை இறக்கி விட்டு கைகுலுக்கி அரவணைத்து விடைபெற, நாங்கள் மீண்டுமொரு குலுக்கல் பயணத்திற்குத் தயாரானோம். காற்றின் வேகம் அதிகரித்து ஈரப்பதமும் கூடியிருந்ததில் குளிரவும் ஆரம்பித்திருந்தது.
"இப்ப நீ முன்னாடி உட்கார்ந்து வா. அந்த அனுபவமும் உனக்கு வேண்டும்."
"அய்யோயோ. எனக்குப் பயமா இருக்குப்பா."
"அதெல்லாம் ஒன்னுமிருக்காது. உனக்குப் பிடிக்கும்."
"இப்படித்தான் விமானத்தை நிறுத்த பிரேக் போட வேண்டும்."
மெதுவாக விமானம் நகர, "எங்க பிரேக் போடு பார்க்கலாம்." கார்லோஸ் சொல்ல,
நானும் காலை நீட்டி அமுக்கிப் பார்க்கிறேன். ம்ஹூம்!
இன்னும் நல்லா பலமா பெடலை அழுத்தணும்.
இப்பொழுது விமானம் நின்றது. "குட். எல்லாம் ஒரு அவசரத்துக்குத் தான்."
ஆரம்பமே கிலியா இருக்கே😨 "முருகா உசுரோட பத்திரமா என்னைய ஊருக்கு கொண்டு போய் சேர்த்திடுப்பா" வேண்டிக் கொண்டு சீட்பெல்ட் போட்டுக் கொண்டேன். கதவை மூடி லாக் பண்ணும் இடத்தில் நான் கை வைத்திருந்தேன். பறந்து கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக இதை அசைத்து கதவு திறந்து கொண்டால்...😱😱😱
ஈஷ்வர் ஜாலியாக பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இது வசதியாக இருக்கிறது. முன்னாடி இடம் குறுகலாக கஷ்டமாக இருந்தது என்றார்.
"ஓ! இதுக்குத்தான் என்னைய இங்க உட்கார சொன்னீங்களா?😈"
"முன்னாடி உட்கார்ந்து வந்தா வேறு அனுபவமா இருக்கும். அதனால தான் சொன்னேன். என்ஜாய்"
கார்லோஸ் தகவல் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு பறக்க அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு அங்கிருந்த விதவிதமான கண்ட்ரோல்களைத் திருகி விளையாட வேண்டும் போல ஆசையாக இருந்தது. எங்கே நான் திருகி விமானம் நின்று விடுமோன்னு நினைக்கையில் பயம் வந்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
செக்லிஸ்ட் வரிசைப்படி ஒவ்வொன்றையும் சரிபார்த்து முடிக்க, "நீங்கள் கிளம்பலாம்." உத்தரவு கிடைத்தவுடன் 'டடடடடடட' என்று காற்றாடி சுழல, விமானம் சிறிது தூரம் நடக்க, வீடியோ கேம் கன்சோல் போல் இருந்த திசைமாற்றியை அசைத்து சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே வேகத்தைக் கூட்டினார் கார்லோஸ். 3000 அடியில் ஆல்பனி நோக்கிப் பறக்கப் போவதாக தகவல் தர, கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவர் எந்த திசையில் எத்தனை அதிர்வெண்ணில் கிளம்பலாம் என்று கூற, இவர் எழுதிக் கொண்டார். தானியங்கி விமானத்தை விட இது போன்ற சிறு விமானங்களை ஓட்டுவது சிரமம் தான் போலும்! என் இருக்கையின் முன்னே கூட திசைமாற்றி இருந்தது. மறந்தும் கூட தொடவில்லையே நான்😝 நல்ல பிள்ளையாக கொஞ்சமே கொஞ்ஞ்ஞ்சம் பயத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
'ம்ம்ம்ம்ம்ம்ம்' என்ஜின் உறுமலுடன் மெல்ல மெல்ல வேகமெடுத்து 'சடக்'கென்று சக்கரம் தரையில் படாமல் விமானம் மேலெழும்பியது அழகு! சில நொடிகளில் மேலே பறக்க ஆரம்பித்திருந்தோம். உண்மையிலேயே முன்னாடி அமர்ந்திருந்தது கூடுதல் பயத்தைத் தந்தாலும் கண்ணெதிரே நீல வானில் தவழும் மேகக்கூட்டங்களைப் பார்க்க, "என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்..." மனம் பாட,
இத்தனை கண்ட்ரோல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்! "எங்கு விமானம் ஓட்ட கற்றுக் கொண்டீர்கள்?" நான் கேட்க,
இல்லினாய் மாநிலத்தில் பல்கலையில் படிக்கும் பொழுது கொலம்பிய நாட்டைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவருடன் விமானப்பயணம் சென்று அங்கேயே கற்று ஆல்பனியில் ஓட்டுநர் உரிமம் வாங்கியதாக கூறினார்.
திடீரென "உனக்கு நேர் எதிரே 12 மணி திசையில் இன்னொரு குட்டி விமானம் வந்து கொண்டிருக்கிறது" என்ற தகவல் வர,
நேர்கோட்டில் ஒரு குட்டி விமானம் பறந்து வந்து கொண்டிருந்தது. எனக்குத் தெளிவாக தெரிய, கார்லோஸிற்கு அவ்வளவாகத் தெரியவில்லை. உனக்குத் தெரிகிறதா என்று கேட்க, நான் ஆமாம். அது வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்ட, கார்லோஸ் தாழ பறக்க ஆயத்தமாவதற்குள் அந்த விமானம் கீழே பறந்து இடப்புறம் 'விர்'ரென எங்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் விமானம் ஆட்டம் கண்டது. இதெல்லாம் அரசியல்ல்ல சாதாரணமப்பா என்று கார்லோஸ் கூலாக இருந்தார். எனக்குத்தான்...😓😓😓
ஆகாயத்தில் தூரத்தில் இருப்பது போல தோன்றினாலும் சிறிது நிமிடங்களில் அருகே வந்து விடுகிறது விமானங்கள். அலட்சியமாக இருக்காமல் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு சில நொடிகளில் எதுவும் நடக்கும் சாத்தியம் அதிகமிருப்பதை உணர்ந்த போது முதுகெலும்பில் "சில்ல்ல்ல்ல்" உணர்வு 😓 திடீர் திடீரென அந்தரங்கத்தில் மிதப்பது போல் இருந்தது.
"ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ! ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ" வானில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள்! தொலைவில் மழை பொழிகிறது. கருமேகக்கூட்டங்களைச் சுட்டிக் காட்டினார் கார்லோஸ். எதிரே பெரிய பஞ்சுப்பொதி மேகம். விமானம் மெதுவாக கொஞ்சம் கீழே இறங்கியது.
"இது பனிமேகம். இதற்குள் போனால் ஆட்டம் கண்டிடும்." அதான் கீழே இறக்கினேன்." இந்தியா செல்லும் பொழுது விமானி "சீட் பெல்ட் போடுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குலுங்கும் விமான காட்சி கண் முன்னால் வந்து சென்றது.
கனெக்டிகட் மாநிலத்தின் மூன்று துறைமுகங்கள், சவுத்போர்ட், பிரிட்ஜ்போர்ட், வெஸ்ட்போர்ட் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மேலிருந்து பார்க்க கொள்ளை அழகாக இருந்தது! அட்லான்டிக் கடலை விட்டு நிலப்பரப்பின் மீது விமானம் தற்போது பறக்க, இடப்புறம் ஹட்சன் ஆறு எங்களைத் தொடர்ந்தது. கேட்ஸ்கில்ஸ் மலைகளில் மழை பொழிந்து கொண்டிருந்தது. வரும் வழியெங்கும் மலைகள், ஆறுகள், குளங்கள், சிறுசிறு நகரங்கள், விளைநிலங்களுடன் பண்ணை வீடுகள், கால்நடைகள் மேய்ந்து கொண்டிருப்பதுமாய் அப்ஸ்டேட் நியூயார்க் தான் எத்தனை அழகாய் இயற்கை எழிலுடன் இருக்கிறது! கோடைக்காலத்தில் இந்தப் பயணம் பச்சைப்பசேலென மரங்களுடன் கண்ணுக்கும் விருந்தாக இருந்திருக்கும்.
"அதோ அங்கே இருப்பது ஒரு சிறிய விமான நிலையம். இப்பொழுது என்ஜின் பழுதானால் அங்கே தான் நிறுத்தியிருப்பேன்." சிரித்துக் கொண்டே கார்லோஸ்.
"அட ராமா! எல்லாம் நல்லா தானா போய்க்கிட்டு இருக்கு. ஏன்?" மொமெண்ட் 😔
பள்ளிக்கூடங்களில் வரிசையாக மஞ்சள் வண்ணப் பேருந்துகள். கால்பந்து, டென்னிஸ், ஓடுவதற்கு மைதானங்கள் என்று கனகச்சிதமாக. நீச்சல் குளங்களுடன் பெரிய பெரிய வீடுகளைக் கடந்து வந்தே விட்டது ஆல்பனி.
மீண்டும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானம் வருவதைத் தெரிவித்தவுடன் அவர்களும் இறங்குவதில் எந்தச் சிரமுமில்லை என்று பாதையைத் தெளிவாக குறிப்பிட, வீடு தெரிகிறதா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது. எங்கே என்று தேடுவேன்.
அதற்குள் அம்புக்குறியிட்ட ஓடுபாதை தெரிய கண்மூடி திறப்பதற்குள் 'ஜல்'லென்று அலுங்கல் குலுங்கல் இல்லாமல் தரையிறக்கிய விதம் சபாஷ் போட வைத்தது. கார்லோஸ் அனுபவமுள்ள விமானி தான்!
காரை நிறுத்துவது போல் விமானத்தை இலகுவாக நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் சென்று நாங்கள் திரும்பி வந்து விட்டதைச் சொல்லி விட்டு விமானத்தில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார் கார்லோஸ். நாங்களும் அவருடன் சேர்ந்து விமானத்தைத் துடைத்துக் கொடுத்து விட்டு வந்தோம்😦
காலையில் 9.45க்கு கிளம்பி மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவிற்கு வீட்டிற்கு வரலாமே என்றவுடன் யோசிக்காமல் வருகிறேன் என்று கார்லோஸ் சொன்னவுடன் எங்கள் காரில் நாங்கள் கிளம்பினோம். அங்கிருந்து ஆறேழு நிமிடங்களுக்குள் வீட்டிற்குச் சென்று விடலாம்.
அவருடைய பெண்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். மனைவி கொலம்பியாவில் தன்னுடைய பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள சென்றிருக்கிறார். கார்லோஸ் உள்ளூர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக கணினியியல் துறையில் பணி செய்கிறார். அவருடைய இரு பெண்களும் தனியாக விமானத்தை ஒட்டும் பயிற்சியைப் பெற்றவர்கள். அடிக்கடி குடும்பத்துடன் சிறு விமானப் பயணம் செல்வது தனக்குப் பிடித்த ஒன்று என்றார். சமயங்களில் புற்றுநோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தில் நியூயார்க் நகரத்திலிருந்து அழைத்து வருவது, இங்கிருந்து அழைத்துச் செல்வது என்று சமூக உதவியும் செய்வதாக கூறியதைக் கேட்க, அவர் மீதான மதிப்பு இன்னும் கூடியது. நன்றாக செஸ் விளையாடுவார். மாலை நேரங்களில் நாங்கள் செல்லும் பூங்காவில் மாணவர்களுடன் கால்பந்து ஆடிக் கொண்டிருப்பார். இவரும் இவர் மனைவியும் அருமையாக சல்சா நடனம் ஆடுவார்கள். திறமையான குடும்பம்.
வீட்டில் என்ன இருக்கிறது? என்ன சமைக்கலாம் ? யோசித்துக்கொண்டே சப்பாத்தி,தோசை, இட்லி, சிக்கன் குருமா...சமாளித்து விடலாம்.
வந்தவுடன் 'கடகட' வென்று ஈஷ்வர் சப்பாத்தி போட, வீட்டைச் சுத்தம் செய்து வேலைகளை முடிப்பதற்குள் கார்லோஸும் வந்து சேர்ந்தார். நான் தோசை சுடுவதைப் படம் எடுத்து மனைவிக்கும் அனுப்பி விட்டார். எல்லாவற்றையும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு வெகு நேரம் பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். புலம் பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் அதே கவலைகள் அவருக்கும் இருந்தது. ஏற்கெனவே துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கொலம்பியா செல்லவிருப்பதாகவும் தென் அமெரிக்க நாடுகளில் தங்கி அடுத்த புத்தககம் எழுதும் வேலையை முடிக்க ஒரு வருடம் விடுமுறையில் செல்பவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தோம்.
எதிர்பாராத குட்டி விமான அனுபவம் அன்றைய நாளை மேலும் இனிமையாக்கி கரைந்தது.
நியூயார்க்-ஆல்பனி பயணம்
Mulitple Facets of Madurai - 2
நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தால...