Tuesday, August 29, 2023

இகிகை

 சொல்வனம் இதழ் 301ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை 'இகிகை', அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று ஆராயும் 'Ikigai: The Japanese Secret to a Long and Happy Life'  புத்தகத்தின் விமரிசனம்.


இன்றைய பரபரப்பான உலகில் எதையோ ஒன்றைத் தேடி அது உண்மையிலேயே நமக்குப் பிடித்தமானதா என்று யோசிக்கக் கூட நேரமில்லாமல் காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்கிறோம் என்று பலரும், வாழும் வாழ்க்கையின் பொருளை, நோக்கத்தை உணர்ந்து வாழ்பவர்கள் சிலருமாக இந்த உலகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அதனால் தான் "ஏன் தான் விடிகிறதோ? இன்றைய நாளை எப்படிக் கடந்து செல்வதோ?" என்று அங்கலாய்த்துக் கொண்டே வாழ்க்கையைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்தில் பலரும் இருக்கிறோம். ஆனால், சில உள்ளங்களே விடியலுக்காகக் காத்திருக்கும். வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.

புறக்காரணிகளால் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் அல்லது வாழ்வதாக நினைப்பவர்கள் கூட எதையோ ஒன்றைத் தொலைத்து அது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆற அமர உட்கார்ந்து எதில் உண்மையான இன்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாலே இந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு மனமகிழ்ச்சியாக வாழ முடியும் என்கிறது 'இகிகை'.

இகிகை(Ikigai) என்ற ஜப்பானிய வார்த்தைக்கு "மகிழ்ச்சியாக இருத்தலின் காரணம்" அல்லது "தினமும் காலையில் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்க ஒரு காரணம்" என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நாம் ஏன் வாழ்கிறோம் என்று புரியாமலே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே ஏனோ பிறந்தோம் வாழ்கிறோம் என்றில்லாமல் வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் கண்டறியும் ஒரு வழியாக சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்து வரும் ஒரு கோட்பாடு 'இகிகை'. ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான ஒரு குறிக்கோள் உள்ளது. அது அவர்களின் உணர்வுகள், திறமைகள், மதிப்புகளின் தனித்துவமான கலவையாக இருக்கும். இதுவே அவர்களின் வாழ்க்கைக்கு நிறைவையும் திருப்தியையும் அளிக்கிறது என்கிறது இந்த ஜப்பானியக் கோட்பாடு.

உலகிலேயே அதிக ஆயுட்காலம் உள்ள நாடுகளில் ஒன்றான ஜப்பானின் 'ஒகினாவா' மாகாணத்தில் வாழும் மக்கள், சமூகம் மற்றும் வாழ்க்கை நோக்கத்தின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர். இதுவே அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் காரணமாகவும் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. வாழும் வாழ்க்கையில் நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் "இகிகை' என்பது அனைவருக்குள்ளும் இருந்தாலும் அதைக் கண்டறிந்து வாழ்பவர்களால் மட்டுமே நீண்ட ஆயுளுடனும் மனநிறைவுடனும் வாழ முடிகிறது.

"Ikigai: The Japanese Secret to a Long and Happy Life" என்பது ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிரயெஸ்சால் எழுதப்பட்ட புத்தகம், இது 'இகிகை' பற்றிய கருத்தை ஆராய்ந்து அது எவ்வாறு நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது என்பதை விளக்குகிறது. இந்தப் புத்தகம் ஜப்பானியத் தீவான ஒகினாவாவில் வசிப்பவர்களுடன் நடந்த நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. அங்கு பலரும் நீண்ட ஆயுள், மனமகிழ்வுடன் ஒரு சமூகமாக இணைந்து வாழும் கலாச்சாரம் உள்ளது. ஆசிரியர்கள் நடத்திய நேர்காணல்களையும், உளவியல், நரம்பியல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் ஆராய்ச்சி செய்து, ஒருவரின் சொந்த இடுகையைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான மற்றும் அணுகக்கூடிய வழிகாட்டியை முன்வைக்கிறார்கள். "இருத்தலின் காரணம்" அல்லது "காலையில் படுக்கையிலிருந்து உங்களை எழுப்பும் விஷயம்" என வரையறுக்கப்படும் 'இகிகை' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் புத்தகம் தொடங்குகிறது.

'இகிகை' என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். "உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்" என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இகிகையின் நான்கு கூறுகள் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்து, வாசகர்களுக்கு அவர்களின் ஆர்வங்கள், திறமைகள், மதிப்புகள் மற்றும் நிதித்தேவைகளை அடையாளம் காண உதவும் நடைமுறைக் குறிப்புகள் மற்றும் பயிற்சிகளை இப்புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். இந்தச் செயல்பாட்டில் சுய விழிப்புணர்வு, பிரதிபலிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அத்துடன் புதிய அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.

புத்தகத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று இகிகைக்கும் நல்வாழ்வுக்கும் இடையிலான தொடர்பு. அந்த வலுவான உணர்வு தான் அதிக மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளை அனுபவிக்கக் காரணமாக உள்ளது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். புத்தகத்தின் மற்றொரு முக்கியமான கருப்பொருள் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் கருத்து. "உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது தனிப்பட்ட நிறைவு மட்டுமல்ல, அதிக நன்மைக்குப் பங்களிப்பதும் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்" என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். "உங்கள் இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உங்கள் உறவுகள், பணி மற்றும் சமூகத்தில் அதிக தொடர்பையும் அர்த்தத்தையும் காணலாம்" என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில அடிப்படை கேள்விகள் மூலமாக நான்கு கூற்றுகளின் குறுக்குவெட்டைக் கண்டறிவதன் மூலம் இகிகையை அடையாளம் கண்டு, நிறைவான நோக்கமுள்ள வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? - எதில் ஒருவர் நிரந்தரமாக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெறுகிறாரோ அந்தச் செயலைக் கண்டறிவதே 'இகிகை'யின் முதல் படி. ஒருவருக்கொருவருக்கு மாறுபடும் இந்தக் கூற்று, ஒருவரின் ஆர்வத்தை/ஆர்வங்களைக் குறிக்கிறது. கலை, இசை, சமையல், நடைப்பயணம், பிரயாணம், வாசிப்பு என்று நீளும் பட்டியலில் எதுவாகவும் இருக்கலாம்.

நீங்கள் எதில் சிறந்தவர்? - ஒருவரின் திறமையைக் கண்டறிவது இரண்டாவது படி. ஒருவரின் தனித்திறன்களைக் கண்டறிவதன் மூலம் நம்பிக்கையையும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தலாம்.

உலகிற்கு என்ன தேவை? என்று அறிந்து அதற்கான பங்களிப்பை அளிப்பது மூன்றாவது படி. அது அரசியல், பருவநிலை மாற்றம், சுகாதாரம், கல்வி, திரைப்படத்துறை, பொதுப்பணித்துறை, சமூகப்பணி... என்று அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாழத் தேவையான அடிப்படை திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?- இந்த உலகில் வாழத் தேவையான செல்வத்தைப் பெற திறமைகள் அவசியம். திறமைகளை வளர்த்துக் கொண்டு மேற்கூறிய மூன்று கூற்றுகளையும்
கையாளும் பொழுது வாழ்க்கையின் நோக்கம் தெளிவாகிறது. நோக்கம் தெளிவாகையில் பயணம் எளிதாகிறது. பயணம் எளிதாகையில் மனம் நிறைவு கொள்கிறது. ஆயுள் நீள்கிறது. என்பதைத் தான் 'இகிகை' கற்பிக்கிறது.

இந்த நான்கு கேள்விகளின் பதிலைக் கண்டறிபவர் தன்னுடைய 'இகிகை'யை கண்டறிகிறார். ஒருவரின் உணர்வுகள், திறமைகள், மதிப்புகள், நிதித்தேவைகள் அனைத்தும் சங்கமிக்கும் புள்ளியில் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் காண முடியும் என்கிறது 'இகிகை' கோட்பாடு. ஆனால் அதைக் கண்டறிவது தான் கடினம். அதற்குத் தொடர்ந்து சுய பிரதிபலிப்பும் சொகுசு வாழ்க்கையிலிருந்து சவாலான புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் ஆர்வமும் தொடர்க்கேள்விகளையும் அதற்கான தீர்வுகளைக் கண்டடைய முயற்சியும் இருக்க வேண்டும்.

ஒருவரின் இகிகையை கண்டுபிடிப்பதற்கான மற்றொரு வழி, அவர்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் செயல்களில் ஈடுபடுவதாகும். ஒருவர் விரும்பும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் முன்பு அறிந்திராத புதிய திறமைகளையும் ஆர்வங்களையும் கண்டறியலாம். இகிகையை அடையாளம் கண்டுகொள்வது முதல் படி என்றால் அதை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பது இரண்டாம் படி. இது தொழில், உறவுகள் அல்லது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதைக் குறிக்கிறது. இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வதன் நன்மைகளில் ஒன்று, அது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வழிவகுக்கும். வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தத்தின் வலுவான உணர்வைக் கொண்டவர்கள் மனச்சோர்வு, பதட்டம், பிற மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வது வாழ்க்கையில் அதிக வெற்றியைத் தருவது மட்டுமில்லாமல் திருப்திக்கும் வழிவகுக்கும். மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்யும் பொழுது ஏற்படும் உந்துதல் காரணமாக ஈடுபாடும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்து மனமகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருவரின் இகிகையை கண்டுபிடிப்பதுடன் மற்றவர்களின் இகிகையை அங்கீகரித்து ஆதரிப்பதும் முக்கியம். இதன் பொருள் அவர்களின் உணர்வுகள், திறமைகள் மற்றும் மதிப்புகளை மதித்து, அவர்களின் நோக்கம் மற்றும் பொருளைப் பின்தொடர்வதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகும். இது ஆரோக்கியமான சமூகங்களையும் சூழல்களையும் உருவாக்குகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. தனக்கான சமூகத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளுடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழலாம் என்பதே 'இகிகை' கற்றுத் தரும் பாடம்.

இதை நம் வீட்டுப் பெரியவர்கள் புராணங்கள், வழிபாடுகள், வாழ்க்கைமுறைகளால் வெவ்வேறு விதமாக நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூட இந்த சமூக வாழ்வு சாத்தியமாகத் தான் இருந்தது. நாம் தான் புரிந்து கொள்ளாமல் மாயச்சூழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய 'கங்கையை நோக்கிய பயணத்தில்' இமயமலைப் பகுதிகளில் சிறுகிராமங்களில் வாழும் மக்கள் ஒரு குழுவினராக, ஒருவருக்கொருவர் ஆதரவாக தங்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொண்டு மகிழ்வுடன் இருந்ததை நேரில் கண்ட பொழுது அவர்களின் 'இகிகை'யை அறிந்து அவர்கள் வாழ்வதாகவே தோன்றியது.

"இகிகை: நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய ரகசியம்" என்ற புத்தகம் நிறைவான வாழ்க்கையை வாழ விரும்பும் எவருக்கும் நடைமுறை ஆலோசனைகளையும் நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. தனிப்பட்ட கதைகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒருவரின் சொந்த இகிகையை கண்டுபிடிப்பதற்கான விரிவான மற்றும் அணுகக்கூடிய வழிகாட்டியை வழங்கியிருக்கிறார்கள் புத்தக ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பருக்கு நன்றி.

நூலகத்தில் பல நாட்கள் காத்திருந்து வாங்கி வந்து வாசித்த புத்தகம். அடிக்கடி இந்தப் புத்தகத்தை வாங்கி படித்ததைப் பார்த்து நூலகத்தில் வேலை செய்யும் பெண்மணி, "மிக நல்ல புத்தகம். நானும் பலமுறை வாசித்திருக்கிறேன். பலரும் இந்தப் புத்தகத்திற்காக காத்திருக்கிறார்கள்." என்று கூறும் பொழுது நான் அடிக்கடி எடுத்துச் செல்லும் காரணம் என் கண் முன்னே வந்து சென்றது. அது எனக்கு மட்டுமே தெரிந்த பரமரகசியம்😎
புத்தர் ஜாதக கதைகள் 

Saturday, August 12, 2023

ஜெயிலர்

 


'ஜெயிலர்' பத்தி விமரிசனம் பண்ணவில்லையென்றால் சமூகவலைத்தளத்தில் இருந்து என்ன பிரயோஜனம்? இல்லையா மக்களே😎 எத்தனை வயதானாலும் நண்பர்களோடு படம் பார்க்கிறதென்பது ஒரு ஆனந்தம் தான். அதுவும் ரஜினி படமென்றால் அது ஒரு படி மேல் ஜாலி. அதுவும் நியூயார்க்லன்னா சொல்லவே வேண்டாம் 😊 மாலை 7.20காட்சிக்கு முன்பதிவெல்லாம் செய்துகொண்டு ஏழு மணிக்குத் திரையரங்கில் கூடி பார்க்கவேண்டுமே எல்லார் முகத்தையும்! மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 'போக்கிரி ராஜா', சிவம் திரையரங்கில் 'முரட்டுக் காளை', நடனாவில் 'தம்பிக்கு எந்த ஊரு' படங்கள் நினைவிற்கு வந்தது. முன்பதிவு செய்யும் வசதிகள் இல்லாத காலத்தில் கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் கைக்கு கிடைத்தவுடன் வரும் உற்சாகம் இருக்கிறதே! அது தனி சுகம்! பிறகு கல்லூரி படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் போகும் பொழுது என்று அந்தச் சின்ன சின்ன சுகங்கள் எல்லாம் தொலைந்து விட்டது. அதனால் கூட்டமாக நண்பர்களுடன் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பதே சுகானுபவம் ஆகிவிட்டிருக்கிறது!

கையில் செல்ஃபோன் வைத்திருந்தால் அடிக்கடி படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாடி நரம்புகளில் ஏறிவிட்டிருக்கிற உணர்வு. மறக்காமல் குழுப்படங்கள் எடுத்தாகி விட்டது. என்ன! பெரிய ரஜினி படச் சுவரொட்டிகள் தான் மிஸ்ஸிங்.

அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஆளுக்கொரு சீட்டியுடன். பொண்ணுங்க இப்படியெல்லாம் ரவுடி மாதிரி விசில் அடிக்கக் கூடாதுன்னு அடிச்சு வளர்த்ததால இயற்கையா விசிலடிக்கிறதும் மறந்து போய் விட்டது. சே! விசில் அடிச்சே பாட்டுப்பாடும் பாடகியை இந்த உலகம் இழந்து விட்டது! என்னத்த சொல்ல😉 இன்று வரையில் தொடருகிறது அதற்கான முயற்சிகள் என்பது வேறு விஷயம்.

கொஞ்ச நேரம் விளம்பரங்கள் போட்டு கழுத்தறுப்பான்னு பார்த்தா... டபக்குன்னு ஐங்கரன் படத்த போட்டுட்டான்! அவ்வளவு தான் விசிலு சத்தம்!! பாவம் ஈஷ்வர்! முன்வரிசையில் மீனா கையைத் தட்டிக் கொண்டு செம உற்சாக ஆட்டம்.

படத்தின் முதல் பாதி தாத்தாவாக பேரனுடன் ரஜினிக்கே உரிய ஜாலி குட் ஃபெல்லொ ஆக்ட். படுகச்சிதமாக இருந்தது. பேரனாக நடித்த சின்னப்பையன் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அவனைப் பார்த்தவுடனே அனைவருக்கும் ஒரே சந்தோஷம். அழகான குடும்பமாக காண்பிக்கிறார்கள் அதுவும் ஒரு காவல் அதிகாரி வீடு என்றால் கதை எப்படி போகும் என்பது தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் எளிதில் கற்பனை செய்து கொண்டுவிடலாம். நாமெல்லாம் புள்ளி வைத்தால் கோலம் போடுபவர்களாச்சே😉

கதை ஆரம்பமானது. இத்தனை வன்முறை தேவையா? என்னாயிற்று தமிழ் திரையுலகிற்கு! பில்லா,காளி படங்களும் பழிவாங்கல் படங்கள் தான். ஆனால் வன்முறையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்திற்கு நல்லதா? இதைப் பொழுதுபோக்கு என்று கடந்து செல்லவே முடியவில்லை. இதை ஆதரித்து உற்சாகப்படுத்துகிறோமோ என்று தான் தோன்றியது. நேற்று நாங்குநேரியில் பள்ளிக்கூட மாணவர்களிடையே நடந்த கத்திக்குத்து சம்பவம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பயத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்திய வன்முறைப் படங்கள் எத்தகைய தாக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? வன்முறையைக் குறைத்திருக்க வேண்டும். அதுவும் மிக நெருக்கத்தில் காதை அறுப்பது, இளநீரைச் சீவுவது போல தலையைச் சீவுவது, கழுத்தை அறுப்பது என்று ரத்த சகதி. சை! நான் தான் தமிழ்ப்படங்களில் இருந்து விலகி விட்டேனோ? ஐயோ! இந்த கொரியன் நாடகங்களைப் பார்த்து இப்படி ஆயிட்டேனா😍

இனி தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறேன்னு ரஜினி கிளம்பிய பிறகு அதுவும் அந்த திகார் சிறைக்காட்சிகள் 'மூன்று முகம்' ரஜினி அப்படியே ஸ்டைலாக நடந்து வந்தது போல் இருந்தது. ரம்யாகிருஷ்ணனின் படையப்பா வசனம் படம் முழுவதும் ஞாபகத்திற்கு வந்தால் நீயும் ரஜினி ரசிகனே😍 72 வயதிலும் இந்த மனிதரால் ரசிகர்களை உற்சாகப்படுவதால் தான் 'ரஜினி' இன்றும் முன்னணியில் இருக்கிறார்😍 இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அந்த மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறோம்😔 இந்தா! அடுத்த படத்துக்கு கமிட் ஆயிட்டாராம்! என்னவோ போடா மாதவா!

பின் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் 'எண்டே' தேசத்தைச் சேர்ந்தவர்கள் போல. மோகன்லால் வரும்பொழுதெல்லாம் ஒரே கைத்தட்டல் தான். ரஜினி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்குன்னு பேசி வியாபாரத்துக்கும் வியாபாரம் ஆச்சு. சன்டிவிக்காரனுக்குப் பணமும் ஆச்சு.

ஒரு நேர்மையான அதிகாரி யாருக்கும் பங்கம் வராமல் தந்திரமாக வில்லன்களை அழிப்பது தான் கதை. தன் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் அது அவனது மகனாகவே இருந்தாலும் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பான்ங்கிற கதையை ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் நெல்சன். ரஜினிய வச்சு சமூகநீதிப்படங்கள்னு அவரை கீழே இழுத்துவிட்ட ரஞ்சித் கும்பல் கொஞ்சம் இந்த இயக்குநர்ட்ட கத்துக்கலாம்.

பொழுதுபோக்கிற்காகத் தான் திரைப்படங்கள் எல்லாம். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக வன்முறையைத் தூண்டிவிடும் காட்சிகளில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கும் சமூக வெறியைத் தூண்டும் அரசியல்வியாதிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அந்தப்பாட்டைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் தெய்வ குற்றமாகி விடும். ஐயோ! தமன்னாவா அது? பாவம்! இப்படி "மெகபூபா மெகபூபா" குத்துப்பாடல் ரேஞ்சிற்கு இறங்கிட்டாரே! செம ட்ரெண்டிங்கில் இருக்கு அந்தப்பாடல்! அதிலும் ஒரு சிலர் ஆட்டம் எல்லாம் கிளாஸ். பலர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் 'பகீர்' என்று இருக்கிறது. அரைகுறை ஆடைகள் உடுத்திய சிறு வயதுப் பெண்களுடன் டூயட், ரொமான்ஸ், தேவையில்லாத 'பஞ்ச்' டயலாக் என்றில்லாமல் நல்ல கதை, ரஜினிக்கேற்ற படம், அதை ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி கண்டுள்ளது 'ஜெயிலர்' படம்.

 அப்புறம், ஆங்! யோகிபாபு! அவரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! அதிகம் மெனக்கெடமால் உடல்மொழியிலேயே நடிக்கிறார். பரோட்டா சூரிக்குப் பிறகு இப்போதைக்கு சிரிப்பிற்கு இவர் ஒருத்தர் தான் போல. அப்புறம் குடும்பத்தலைவியாக ரம்யாகிருஷ்ணன். இருவரும் கொடுத்த பாத்திரத்திற்கு நடித்திருக்கிறார்கள். வில்லன் நடிகர் அந்த கதாபாத்திரத்தைப் பார்த்து அவரே மிரண்டு விட்டார் போல✌

இந்தப்படத்தை நண்பர்களுடன் டொரோண்டாவில் பார்த்திருந்தால் அந்த அனுபவமே அலாதியாக இருந்திருக்கும். 'பவர்பாண்டி' படத்தை நண்பர்களுடன் டொரோண்டா திரையரங்கில் பார்த்த பொழுது இலங்கைத்தமிழ் மக்கள் அடித்த கமெண்ட்கள் கேட்க ரகளையாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். அது ஒன்று தான் எனக்கு மிஸ்ஸிங் ஆக இருந்தது.

மற்றபடி, "காதலின் தீபம் ஒன்று ஏற்றினானே என் நெஞ்சில்" என்று இன்றும் ரசிப்பவர்கள் சொல்வதெல்லாம் "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை."

Tuesday, August 8, 2023

ஸ்வீட் காரம் காஃபி



மூன்று தலைமுறைப் பெண்களைப் பற்றின வாழ்க்கைப் பயணத் தொடர்.

பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்கென்று கிடைக்கும் நேரம் என்பது அரிது. அதுவும் திருமணத்திற்குப் பின் செக்கு மாடு போல குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகள் உலகத்தில் சிக்கி தனக்கென்றிருக்கும் உணர்வுகளைக் கூட அது மறக்கடித்து விடுகிறது. அதனால் தான் புதியதொரு உலகத்தைக் காண்கையில் ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள்.

இப்பொழுதெல்லாம் பல பெண்களும் நன்கு உஷாராகி விட்டார்கள். தங்களுடைய நண்பர்கள், அவர்களுடனான பொழுதுபோக்குகள் என்று மாறி விட்டிருக்கிறது. என்ன? பல ஆண்களால் தான் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களின் உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சுய முடிவு ஓரளவுக்கு எடுக்க முடிகிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் சிறிது சிறிதாக வெளியே வர முயற்சிக்கிறார்கள்.

கணவனை இழந்த பாட்டியாய் நடிகை லட்சுமி கதாபாத்திரம் மிகவும் அருமை. பொதுவாகவே பாட்டிகளுக்குத் தான் தைரியம் அதிகமாக இருக்கும். வயதின் முதிர்ச்சியோ வாழ்க்கை அனுபவமோ மிகவும் துணிந்தவர்களாக பல பாட்டிகள் இருப்பார்கள். அப்படித்தான் இந்த சுந்தரி பாட்டி. அவருடைய இளமைக்காலத்திலேயே மனதிற்கு விரும்பியவனைத் திருமணம் செய்திருந்தாலும் ஏதோ ஒரு மன நெருடல். இழந்த தன்னுடைய நெருங்கிய நட்பைத் தேடுகிறது அவருடைய மனம். அதற்கான விடையைத் தேடி அவர் தொடங்கும் பயணத்தில் மருமகள் காவேரி பேத்தி நிவேதிதாவுடன் நடக்கும் கலந்துரையாடல்கள். முதல் காட்சியே அருமை. கணவர் இறந்த நாள். மகன் ஏதோ அம்மா கவலையாக இருப்பார் என்று அவன்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பான். அப்போது லட்சுமி மனதிற்குள்ளே பேசுவதாக வரும் வசனங்கள் அருமை.

கணவனுக்குப் பிறகும் மனைவி என்பவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். அதே போல, வயதாகி விட்டால் அவ்வளவு தான் என்பது போலத் தான் நாம் நம் பெற்றோரை நடத்துகிறோம். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்து விடுவது எவ்வளவு கொடுமை? நாளை நமக்கும் அதே நிலைமை தான் என்று உணர்ந்தாலே போதும் அவர்களை நன்கு புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவோம்.

கல்லூரி நாட்களில் சிறகை விரித்து வாழ்ந்தவள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என்று தன் உலகத்தைச் சுருக்கிக் கொண்டு அவர்களுக்காகவே உயிர் வாழ்பவளாகி விடுகிறாள். பொதுவாகவே குடும்பங்களில் அம்மாவின் இருப்பை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அச்சாக இருந்து குடும்ப சக்கரத்தைச் சுழற்றுபவள் அவளே என்று புரியும் பொழுது காலம் கடந்திருக்கும். நல்ல வேளை! இந்தத் தொடரில் அப்படி இல்லை. அதே போல, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் பலரும் தங்களுடைய கனவுகளை, அபிலாஷைகளைத் தொலைத்து வேறொரு உலகத்தில் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதையும் சிலர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். பலர் சந்தர்ப்பம் கிடைத்ததும் மீண்டு வாழ்கிறார்கள்.

மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்று நடத்தும் பல ஆண்களின் பிரதிபலிப்பாக இந்தப்படத்தில் குடும்பத்தலைவனாக வருபவரின் கதாபாத்திரம். அப்பனுக்குத் தப்பாமல் மகன். அம்மாவை அதிகம் கண்டுகொள்ள மாட்டான்.

தனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மகள். ஆனால் உலகம் ஒத்துக்கொள்ளாத விளையாட்டுத்துறை. அதுவும் அதே துறையில் இருக்கும் காதலனே முட்டுக்கட்டை போடுகிறான். தன் அண்ணனைப் போலவே உலக நடப்பு அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவள். எப்படி தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து பாட்டி, அம்மா உதவியுடன் வெளிவருகிறாள்?

இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழும் சந்தர்ப்பங்கள் அமைந்து தங்களின் பலம், பலவீனத்தைப் புரிந்து கொள்கிறார்கள். நடைமுறையில் சாத்தியமில்லாத தேவையில்லாத ஜவ்வான காட்சிகள் சில இருந்தாலும் பயணத்தில் நாம் காணும் மனிதர்களின் அறிமுகம் தரும் இனிமையான அனுபவத்தையும் பேசுகிறது இத்தொடர்.  இமாச்சல் பிரதேசம், டெல்லி ஒளிப்படக் காட்சிகள் எல்லாம் அருமை. 

மகள், மனைவி, மருமகள்,அம்மா, பாட்டி என்று ஒரு பெண்ணின் வாழ்வில் பல நிலைகள் இருந்தாலும் தனக்கென வாழும் தருணங்களில் தான் அவள் உயிர்ப்போடு இருக்கிறாள். அதுவே அவளின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது.

நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வதும் சிக்கலாக்கிக்கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது தேவை என்று உணர்ந்தாலே போதும். வாழ்வு சொர்க்கம்.

தமிழில் எப்பொழுதாவது தான் ஓரளவிற்கு நல்ல பொழுதுபோக்குத் தொடர் வரும். அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.


Monday, August 7, 2023

தரம் சுவை மனம்?

மூச்சுக்கு முந்நூறு தடவை 'தமிழ்' 'தமிழ்' என்று முழங்குபவர்கள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் தான் மொழியைக் கொலை செய்வதும் அதுவும் ஊடகங்களில் பேசுபவர்களாகட்டும் தலைப்புச் செய்திகளாகட்டும் பிழைகள் இல்லாமல் இருப்பதில்லை. முன்பு அதிக கவனம் எடுத்துக் கொண்டவர்கள் இப்பொழுது 'ஜஸ்ட் லைக் தட்' என கடந்து விடும் அலட்சியப்போக்கு ஆபத்தானது. நேற்று ஜீ தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டியில் ஒரு காட்சி. இட்லி பொடி விளம்பரம். 'தரம் சுவை மனம்' என்று இருந்தது. எனக்குத் தான் தவறாகத் தெரிகிறதோ?

இத்தனை பெரிய நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார்கள்? நிகழ்ச்சியை நடத்துபவர்களின் கவனத்திற்கு இந்த தவறு தெரியாமல் இருந்தது ஆச்சரியமே! இல்லையென்றால் இதை வைத்து ரேட்டிங் கூடும் என்று நினைத்திருப்பார்களோ?

ஊடகங்களின் தரம் காற்றில் பறக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. காட்டுக்கூச்சல் போடும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை, உடலை வைத்துக் கேலிசெய்யும் மலிவான தரக்குறைவான பேச்சுகள், வேறு வழியின்றி வாங்கிய காசிற்கு மௌனியாய் நடுவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

என்னவோ போடா மாதவா!




இசையால் வசமாகா இதயம் எது?


2020ல் கொரோனா வந்தாலும் வந்தது நாம் அனைவரும் வீட்டுச்சிறையில் தனிமைப்பட்டுக் கிடந்ததை மறக்க முடியுமா? வெளியே போக பயம். கடைகளுக்கு, பணியிடத்திற்கு, பள்ளிகளுக்கு என யாரும் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த நாட்களில் எப்படித்தான் பொழுதைப் போக்குவது என்று தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கினோம். பலரும் தங்களுடைய புதுத் திறமைகளைக் கண்டறிய உதவிய காலம் அது. தினம் ஒரு சமையல் என்று என் வீட்டுச் சமையலறையில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு புது உணவு வகையைச் சமைத்துப் பார்த்தோம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு, டிஸ்னி, ஹெச்பிஓ என்று ஒன்று விடாமல் பார்த்துக் களைத்துப் போனதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அதிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை என்பது தான் துயரம். 

அப்பொழுது தான் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் என்பவர் பழைய, அருமையான பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'QFR - Quarantine From Reality' என்ற வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை யூடியூபில் வழங்க, சமூக வலைதளங்களில் பரவி, தினம் ஒரு பாடலுக்காகக் காத்திருந்து பார்க்க ஆரம்பித்தோம். மெல்லிசை மன்னரின் இசையில் தொடங்கி இளையராஜா, ரகுமான் என்று நீண்ட பட்டியலில் அவர் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். அதனை ஒளிபரப்பிய விதம் அனைத்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி விட்டது.

இதனுடைய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் சுவைபட, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இசையின் நுணுக்கங்களை, வாத்தியங்களின் கோர்வையை திருமதி சுபஸ்ரீ விளக்கிச் சொன்னதை யாராலும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சில காரணங்களினால் பாடல்கள் நம்மை ஈர்த்துவிடுகிறது. அதைச் சொல்லத் தெரியாதவர்களுக்கு இவர் கூறிய விளக்கங்களைக் கேட்டவுடன் ஒருவேளை, இதனால் தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்ததோ என்று தோன்றும்.

ஒரு பாடல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைத் தருவது. அதன் வரிகள் ஏற்படுத்திய தாக்கம், படமாக்கப்பட்ட விதம், பிடித்த நடிகர், நடிகையர்களின் நடிப்பு, ஆட்டம், பாடியவரின் வசீகர குரல், இசைக்கோர்ப்பு என்று ஏதாவது ஒன்று நம்மை அறியாமல் நம் மனதில் சிம்மாசனம் போட்டு இடம் பிடித்திருக்கலாம். ஒவ்வொரு பாட்டுடனும் நம் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒன்று தொடர்புடன் இருந்திருக்கும். அந்த இனிமையான நினைவுகள் மீண்டும் நினைவில் வர, இந்தப்பாடல்கள் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க என்று நன்றாகவே பொழுதுகள் போனது.

இன்று யூடியூபில் எதையோ தேடப் போய் QFRல் மூழ்கி விட்டேன். எத்தனை திறமையான இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை அனாயாசமாக கையாளுகிறார்கள்! இப்படி ஒரு வாத்தியத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே என்று ஏங்க வைக்கிறார்கள்! பாடுபவர்கள் பலரும் சூப்பர் சிங்கரில் வந்தவர்கள். குரலில் மெருகேறியிருக்கிறது. அவரவர் இடத்திலிருந்து பாடியதைத் தொகுத்து வழங்குவது என்பது அத்தனை எளிதல்ல. அதைப் பொறுப்பாக நிகழ்ச்சியில் தொய்வே ஏற்படாமல் இத்தனை அத்தியாயங்கள் கொண்டு வந்திருப்பதே மிகப்பெரும் சாதனை! கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்று உணர முடிந்தது. ஒவ்வொரு வாத்தியங்களையும் தனித்தனியாக வாசித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு குழுவாக வாசிக்க ஆரம்பித்து என்று வெற்றிகரமாக தொடர்கிறது. வசீகர குரல் மன்னன் திரு.எஸ்பிபி அவர்களின் மறைவு நாளன்று மட்டும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சுபஸ்ரீ அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த பல பாடல்களை நாம் அடிக்கடி கேட்டிருந்தாலும் புதுக்குரலில் கேட்க வித்தியாசமாக இருந்தது. இசையால் வசமாகா இதயம் எது? என்று சும்மாவா சொன்னார்கள்😎 அர்ப்பணிப்பு என்பார்களே அப்படியொரு இசைக்குழுவுடன் சேர்ந்து நம்மை மகிழ்வித்து வரும் அந்தக் குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி இசைக்கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற சுபஸ்ரீயின் தூய எண்ணமும் நிறைவேற வாழ்த்துகள். 

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு

நானும் எப்படியாவது இந்த நூறு சிறுகதைகளையும் வாசிச்சிடணும்னு தான்  பார்க்கிறேன். இந்த வருஷமும் முடியாது போலிருக்கு😔 ஏதோ கடமைக்கு வாசிப்பது போலிருக்கக் கூடாது என்பதால் மெதுவாக வாசிக்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம். அநேக புத்தகங்கள் ஆன்லைனில் கிடைத்து விடுவதால் பிரச்சினையில்லை. நேரம் தான் 😌




1. காஞ்சனை : புதுமைப்பித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் : புதுமைப்பித்தன்
3. செல்லம்மாள் : புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர் :மௌனி
5. பிரபஞ்ச கானம் : மௌனி
6. விடியுமா : கு.ப.ரா
7. கனகாம்பரம் : கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் :பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் : பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி : தி.ஜானகிராமன்
11. பாயசம் : தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் : கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு : கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி : கி. ராஜநாராயணன்
16. கன்னிமை : கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் :சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் :சுந்தர ராமசாமி
20. விகாசம் : சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு :லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் :லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி : நகுலன்
24. புலிக்கலைஞன் :அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் : அசோகமித்ரன்
26. பிரயாணம் : அசோகமித்ரன்
27. குருபீடம் : ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் : ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் :ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் : பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது : பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் : ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் : ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை : எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி : அ. முத்துலிங்கம்
36. நீர்மை : ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் : அம்பை
38. காட்டிலே ஒரு மான் :அம்பை
39. எஸ்தர் : வண்ணநிலவன்
40. மிருகம் : வண்ணநிலவன்
41. பலாப்பழம் : வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் : சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் : ராஜேந்திரசோழன்
44. தனுமை : வண்ணதாசன்
45. நிலை : வண்ணதாசன்
46. நாயனம் : ஆ.மாதவன்
47. நகரம் :சுஜாதா
48. பிலிமோஸ்தவ் :சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் : சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் : ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் : ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு : கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு : கிருஷ்ணன் நம்பி
54. ரீதி : பூமணி
55. இந்நாட்டு மன்னர் : நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி : பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி : பிரபஞ்சன்
58. சோகவனம் : சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் :மாலன்
60. ஒரு கப் காப்பி : இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து : திலீப்குமார்
62. கடிதம் : திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் : சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் : கந்தர்வன்
65. மேபல் :தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை : உமா வரதராஜன்
67. நுகம் : எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் : சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் : சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் :அழகிய பெரியவன்
71. கனவுக்கதை : சார்வாகன்
72. ஆண்மை : எஸ்பொ.
73. நீக்கல்கள் : சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை :கலாமோகன்
75. அந்நியர்கள் : சூடாமணி
76. சித்தி : மா. அரங்கநாதன்.
77. புயல் : கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை : கோணங்கி
79. கறுப்பு ரயில் : கோணங்கி
80. வெயிலோடு போயி : தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் : ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் : ஜெயமோகன்
83. ராஜன் மகள் : பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் : எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் :வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் :சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் : பாவண்ணன்.
89. காசி : பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் : விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் : பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி : உமா மகேஸ்வரி
93. வேட்டை : யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு : பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் : திசேரா
97. ஹார்மோனியம் : செழியன்
98. தம்பி : கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு : சந்திரா

Thursday, August 3, 2023

பார்பி

கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பிறகு தான் பார்பி பொம்மையின் அறிமுகமே எங்களுக்குக் கிடைத்தது. ஏதோ ஒரு நெகிழிப் பொம்மை என்று நினைத்தது எவ்வளவு தவறு. கடைகளில் விதவிதமான பார்பி பொம்மைகளைப் பார்த்தவுடன் தலையே சுற்றிவிட்டது. ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பெயர். சிறுவயதுப் பெண்குழந்தைகள் அதன் மேல் அத்தனை காதலாய் இருந்தார்கள். இப்படி ஏதாவது ஒரு பொம்மையைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் குழந்தைகள் அதற்குத் தலைசீவி விடுவார்கள். விதவிதமாக உடையை அணிவித்து மகிழ்வார்கள். டீபார்ட்டி வைத்துக் கொண்டாடுவார்கள். அதற்குப் பிறகு 'பாலி பாக்கெட்', 'கேபேஜ் பேட்ச் கிட்ஸ்', 'அமெரிக்கன் டால்ஸ்' இன்னும் பல பொம்மைகள் வெளிவந்தது. அவரவர் பர்சின் கனத்தைப் பொறுத்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்கள் பெற்றோர்கள். இந்தியாவிற்குச் சென்றிருந்த பொழுது பட்டுச்சேலை கட்டிய பார்பி பொம்மையை வாங்கிக் கொண்டாள் மகள். இன்றுவரை அவளுக்கு மிகவும் பிடித்தமான 'பார்பி' அவள் தான். இன்று இந்திய பார்பி பொம்மைகளே விதவிதமான உடைகளில் அத்தனை கிடைக்கிறது!

 


இந்த பார்பி பொம்மைகளை 'மேட்டல்' என்ற நிறுவனம் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக தயாரித்து வருகிறது. பார்பி உடுத்தும் உடையிலிருந்து வீடு, விளையாட்டுப் பொருட்கள், கார் என்று ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கும் எதையாவது ஒன்று வெளியிட்டுத் தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான 'ஒபென்ஹெய்ம்ர்', 'பார்பி' இரண்டு ஹாலிவுட் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மக்கள் பல நாட்களுக்குப் பிறகு குடும்பமாக திரைப்படத்தைக் காண திரையரங்குகளுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். பொம்மைப் படம் தானே என்று நினைத்தால் அதிக வசூலில் முன்னணியில் நிற்கிறது பார்பி! இப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் 'கிரேட்டா கெர்விக்'கிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி! அதுவும் 'ஒபென்ஹெய்ம்ர்' படத்துடன் மோதி வெற்றி பெற்றிருக்கிறது!

அமெரிக்க நிறுவனங்கள் விற்பனை செய்வதில் கில்லாடிகள். பார்பி படம் வெளியானவனுடன் பார்பி, கென் டிஷர்ட்ஸ், தொப்பிகள், கண்ணாடி என்று கடையை விரித்து விட்டார்கள். திரையரங்குகளில் ஒரே மாதிரி உடையணிந்து கொண்டு ஜாலியாக நண்பர்கள், குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்திருந்த கூட்டத்தைப் பார்க்க நன்றாகத் தான் இருந்தது.

அப்படி என்ன தான் இந்தப்படத்தில் இருக்கிறது என்று பார்க்க கிளம்பிவிட்டோம்.

தலைமுதல் கால் வரை அப்படியே பார்பி பொம்மைகளைப் போலவே உருமாறியிருந்த கவர்ச்சியான நடிகைகள். அவர்கள் பயன்படுத்தும் கார் முதற்கொண்டு அவர்கள் கற்பனை உலகத்தை அழகாக உருவாக்கியிருந்தார்கள். பார்பியின் காதலன் 'கென்' அவனுடைய நண்பர்களுடன் படம் முழுவதும் பாடிக்கொண்டே பேசிக்கொண்டே இருக்கிறார்கள் பார்பியும் பெண் நண்பர்களும். 'ரூத் ஹாண்ட்லெர்' என்ற அமெரிக்கப் பெண்மணி தான் 'பார்பி' பொம்மைகளை உருவாக்கியவர். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் அவரும் வருகிறார்.

தன்னுடைய ராஜ்ஜியத்தைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற சாகசப் பயணம் மேற்கொள்ளும் 'பார்பி' தன்னுடைய நண்பர்களுடன் ஒருவித பிணைப்பை உருவாக்கிக் கொள்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தனித்தன்மை வாய்ந்தவர்கள். இப்படத்தில் ஒருவரின் திறமைகளை அங்கீகரித்து குழுவாக செயல்படுவது, தனிப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து நட்பைப் பேணுவது, தைரியமாக தான் நினைத்த காரியத்தில் ஈடுபடுவது , தங்களுடைய ஆர்வத்தினைச் செழுமைப்படுத்திப் பின்தொடர்வது, தாய்-மகள் பாசப் போராட்டம் என்று வாழ்க்கைப் பாடங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் தங்கள் உரிமைகளைப் போராடி வெற்றிப் பெறுவதை நகைச்சுவையாக இசையும் நடனமும் வாயிலாக அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகப் படத்தை எடுத்திருப்பது தான் சிறப்பு.

நிஜ வாழ்வில் இருந்து சிறிது நேரம் கற்பனை உலகில் சஞ்சரிக்க முடிந்தவர்கள், பார்பியுடன் வளர்ந்தவர்கள், பொம்மைகள் உலகத்தில் வாழ்ந்தவர்களுக்கு இது மிகவும் விருப்பமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

"ஐயம் எ பார்பி கேர்ள் இந்த பார்பி வேர்ல்ட்' பாட்டு எப்படி ஹிட் ஆனதோ, அப்படித்தான் இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்! இனி வரிசையாக 'மேட்டல்
நிறுவனம் பொம்மைப்படங்களைத் தயாரிக்கப் போவதாக வரும் செய்திகள் உண்மையா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...