Monday, August 7, 2023

இசையால் வசமாகா இதயம் எது?


2020ல் கொரோனா வந்தாலும் வந்தது நாம் அனைவரும் வீட்டுச்சிறையில் தனிமைப்பட்டுக் கிடந்ததை மறக்க முடியுமா? வெளியே போக பயம். கடைகளுக்கு, பணியிடத்திற்கு, பள்ளிகளுக்கு என யாரும் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த நாட்களில் எப்படித்தான் பொழுதைப் போக்குவது என்று தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கினோம். பலரும் தங்களுடைய புதுத் திறமைகளைக் கண்டறிய உதவிய காலம் அது. தினம் ஒரு சமையல் என்று என் வீட்டுச் சமையலறையில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு புது உணவு வகையைச் சமைத்துப் பார்த்தோம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு, டிஸ்னி, ஹெச்பிஓ என்று ஒன்று விடாமல் பார்த்துக் களைத்துப் போனதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அதிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை என்பது தான் துயரம். 

அப்பொழுது தான் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் என்பவர் பழைய, அருமையான பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'QFR - Quarantine From Reality' என்ற வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை யூடியூபில் வழங்க, சமூக வலைதளங்களில் பரவி, தினம் ஒரு பாடலுக்காகக் காத்திருந்து பார்க்க ஆரம்பித்தோம். மெல்லிசை மன்னரின் இசையில் தொடங்கி இளையராஜா, ரகுமான் என்று நீண்ட பட்டியலில் அவர் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். அதனை ஒளிபரப்பிய விதம் அனைத்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி விட்டது.

இதனுடைய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் சுவைபட, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இசையின் நுணுக்கங்களை, வாத்தியங்களின் கோர்வையை திருமதி சுபஸ்ரீ விளக்கிச் சொன்னதை யாராலும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சில காரணங்களினால் பாடல்கள் நம்மை ஈர்த்துவிடுகிறது. அதைச் சொல்லத் தெரியாதவர்களுக்கு இவர் கூறிய விளக்கங்களைக் கேட்டவுடன் ஒருவேளை, இதனால் தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்ததோ என்று தோன்றும்.

ஒரு பாடல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைத் தருவது. அதன் வரிகள் ஏற்படுத்திய தாக்கம், படமாக்கப்பட்ட விதம், பிடித்த நடிகர், நடிகையர்களின் நடிப்பு, ஆட்டம், பாடியவரின் வசீகர குரல், இசைக்கோர்ப்பு என்று ஏதாவது ஒன்று நம்மை அறியாமல் நம் மனதில் சிம்மாசனம் போட்டு இடம் பிடித்திருக்கலாம். ஒவ்வொரு பாட்டுடனும் நம் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒன்று தொடர்புடன் இருந்திருக்கும். அந்த இனிமையான நினைவுகள் மீண்டும் நினைவில் வர, இந்தப்பாடல்கள் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க என்று நன்றாகவே பொழுதுகள் போனது.

இன்று யூடியூபில் எதையோ தேடப் போய் QFRல் மூழ்கி விட்டேன். எத்தனை திறமையான இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை அனாயாசமாக கையாளுகிறார்கள்! இப்படி ஒரு வாத்தியத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே என்று ஏங்க வைக்கிறார்கள்! பாடுபவர்கள் பலரும் சூப்பர் சிங்கரில் வந்தவர்கள். குரலில் மெருகேறியிருக்கிறது. அவரவர் இடத்திலிருந்து பாடியதைத் தொகுத்து வழங்குவது என்பது அத்தனை எளிதல்ல. அதைப் பொறுப்பாக நிகழ்ச்சியில் தொய்வே ஏற்படாமல் இத்தனை அத்தியாயங்கள் கொண்டு வந்திருப்பதே மிகப்பெரும் சாதனை! கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்று உணர முடிந்தது. ஒவ்வொரு வாத்தியங்களையும் தனித்தனியாக வாசித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு குழுவாக வாசிக்க ஆரம்பித்து என்று வெற்றிகரமாக தொடர்கிறது. வசீகர குரல் மன்னன் திரு.எஸ்பிபி அவர்களின் மறைவு நாளன்று மட்டும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சுபஸ்ரீ அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த பல பாடல்களை நாம் அடிக்கடி கேட்டிருந்தாலும் புதுக்குரலில் கேட்க வித்தியாசமாக இருந்தது. இசையால் வசமாகா இதயம் எது? என்று சும்மாவா சொன்னார்கள்😎 அர்ப்பணிப்பு என்பார்களே அப்படியொரு இசைக்குழுவுடன் சேர்ந்து நம்மை மகிழ்வித்து வரும் அந்தக் குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி இசைக்கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற சுபஸ்ரீயின் தூய எண்ணமும் நிறைவேற வாழ்த்துகள். 

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...