Saturday, August 12, 2023

ஜெயிலர்

 


'ஜெயிலர்' பத்தி விமரிசனம் பண்ணவில்லையென்றால் சமூகவலைத்தளத்தில் இருந்து என்ன பிரயோஜனம்? இல்லையா மக்களே😎 எத்தனை வயதானாலும் நண்பர்களோடு படம் பார்க்கிறதென்பது ஒரு ஆனந்தம் தான். அதுவும் ரஜினி படமென்றால் அது ஒரு படி மேல் ஜாலி. அதுவும் நியூயார்க்லன்னா சொல்லவே வேண்டாம் 😊 மாலை 7.20காட்சிக்கு முன்பதிவெல்லாம் செய்துகொண்டு ஏழு மணிக்குத் திரையரங்கில் கூடி பார்க்கவேண்டுமே எல்லார் முகத்தையும்! மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 'போக்கிரி ராஜா', சிவம் திரையரங்கில் 'முரட்டுக் காளை', நடனாவில் 'தம்பிக்கு எந்த ஊரு' படங்கள் நினைவிற்கு வந்தது. முன்பதிவு செய்யும் வசதிகள் இல்லாத காலத்தில் கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் கைக்கு கிடைத்தவுடன் வரும் உற்சாகம் இருக்கிறதே! அது தனி சுகம்! பிறகு கல்லூரி படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் போகும் பொழுது என்று அந்தச் சின்ன சின்ன சுகங்கள் எல்லாம் தொலைந்து விட்டது. அதனால் கூட்டமாக நண்பர்களுடன் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பதே சுகானுபவம் ஆகிவிட்டிருக்கிறது!

கையில் செல்ஃபோன் வைத்திருந்தால் அடிக்கடி படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாடி நரம்புகளில் ஏறிவிட்டிருக்கிற உணர்வு. மறக்காமல் குழுப்படங்கள் எடுத்தாகி விட்டது. என்ன! பெரிய ரஜினி படச் சுவரொட்டிகள் தான் மிஸ்ஸிங்.

அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஆளுக்கொரு சீட்டியுடன். பொண்ணுங்க இப்படியெல்லாம் ரவுடி மாதிரி விசில் அடிக்கக் கூடாதுன்னு அடிச்சு வளர்த்ததால இயற்கையா விசிலடிக்கிறதும் மறந்து போய் விட்டது. சே! விசில் அடிச்சே பாட்டுப்பாடும் பாடகியை இந்த உலகம் இழந்து விட்டது! என்னத்த சொல்ல😉 இன்று வரையில் தொடருகிறது அதற்கான முயற்சிகள் என்பது வேறு விஷயம்.

கொஞ்ச நேரம் விளம்பரங்கள் போட்டு கழுத்தறுப்பான்னு பார்த்தா... டபக்குன்னு ஐங்கரன் படத்த போட்டுட்டான்! அவ்வளவு தான் விசிலு சத்தம்!! பாவம் ஈஷ்வர்! முன்வரிசையில் மீனா கையைத் தட்டிக் கொண்டு செம உற்சாக ஆட்டம்.

படத்தின் முதல் பாதி தாத்தாவாக பேரனுடன் ரஜினிக்கே உரிய ஜாலி குட் ஃபெல்லொ ஆக்ட். படுகச்சிதமாக இருந்தது. பேரனாக நடித்த சின்னப்பையன் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அவனைப் பார்த்தவுடனே அனைவருக்கும் ஒரே சந்தோஷம். அழகான குடும்பமாக காண்பிக்கிறார்கள் அதுவும் ஒரு காவல் அதிகாரி வீடு என்றால் கதை எப்படி போகும் என்பது தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் எளிதில் கற்பனை செய்து கொண்டுவிடலாம். நாமெல்லாம் புள்ளி வைத்தால் கோலம் போடுபவர்களாச்சே😉

கதை ஆரம்பமானது. இத்தனை வன்முறை தேவையா? என்னாயிற்று தமிழ் திரையுலகிற்கு! பில்லா,காளி படங்களும் பழிவாங்கல் படங்கள் தான். ஆனால் வன்முறையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்திற்கு நல்லதா? இதைப் பொழுதுபோக்கு என்று கடந்து செல்லவே முடியவில்லை. இதை ஆதரித்து உற்சாகப்படுத்துகிறோமோ என்று தான் தோன்றியது. நேற்று நாங்குநேரியில் பள்ளிக்கூட மாணவர்களிடையே நடந்த கத்திக்குத்து சம்பவம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பயத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்திய வன்முறைப் படங்கள் எத்தகைய தாக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? வன்முறையைக் குறைத்திருக்க வேண்டும். அதுவும் மிக நெருக்கத்தில் காதை அறுப்பது, இளநீரைச் சீவுவது போல தலையைச் சீவுவது, கழுத்தை அறுப்பது என்று ரத்த சகதி. சை! நான் தான் தமிழ்ப்படங்களில் இருந்து விலகி விட்டேனோ? ஐயோ! இந்த கொரியன் நாடகங்களைப் பார்த்து இப்படி ஆயிட்டேனா😍

இனி தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறேன்னு ரஜினி கிளம்பிய பிறகு அதுவும் அந்த திகார் சிறைக்காட்சிகள் 'மூன்று முகம்' ரஜினி அப்படியே ஸ்டைலாக நடந்து வந்தது போல் இருந்தது. ரம்யாகிருஷ்ணனின் படையப்பா வசனம் படம் முழுவதும் ஞாபகத்திற்கு வந்தால் நீயும் ரஜினி ரசிகனே😍 72 வயதிலும் இந்த மனிதரால் ரசிகர்களை உற்சாகப்படுவதால் தான் 'ரஜினி' இன்றும் முன்னணியில் இருக்கிறார்😍 இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அந்த மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறோம்😔 இந்தா! அடுத்த படத்துக்கு கமிட் ஆயிட்டாராம்! என்னவோ போடா மாதவா!

பின் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் 'எண்டே' தேசத்தைச் சேர்ந்தவர்கள் போல. மோகன்லால் வரும்பொழுதெல்லாம் ஒரே கைத்தட்டல் தான். ரஜினி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்குன்னு பேசி வியாபாரத்துக்கும் வியாபாரம் ஆச்சு. சன்டிவிக்காரனுக்குப் பணமும் ஆச்சு.

ஒரு நேர்மையான அதிகாரி யாருக்கும் பங்கம் வராமல் தந்திரமாக வில்லன்களை அழிப்பது தான் கதை. தன் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் அது அவனது மகனாகவே இருந்தாலும் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பான்ங்கிற கதையை ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் நெல்சன். ரஜினிய வச்சு சமூகநீதிப்படங்கள்னு அவரை கீழே இழுத்துவிட்ட ரஞ்சித் கும்பல் கொஞ்சம் இந்த இயக்குநர்ட்ட கத்துக்கலாம்.

பொழுதுபோக்கிற்காகத் தான் திரைப்படங்கள் எல்லாம். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக வன்முறையைத் தூண்டிவிடும் காட்சிகளில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கும் சமூக வெறியைத் தூண்டும் அரசியல்வியாதிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அந்தப்பாட்டைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் தெய்வ குற்றமாகி விடும். ஐயோ! தமன்னாவா அது? பாவம்! இப்படி "மெகபூபா மெகபூபா" குத்துப்பாடல் ரேஞ்சிற்கு இறங்கிட்டாரே! செம ட்ரெண்டிங்கில் இருக்கு அந்தப்பாடல்! அதிலும் ஒரு சிலர் ஆட்டம் எல்லாம் கிளாஸ். பலர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் 'பகீர்' என்று இருக்கிறது. அரைகுறை ஆடைகள் உடுத்திய சிறு வயதுப் பெண்களுடன் டூயட், ரொமான்ஸ், தேவையில்லாத 'பஞ்ச்' டயலாக் என்றில்லாமல் நல்ல கதை, ரஜினிக்கேற்ற படம், அதை ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி கண்டுள்ளது 'ஜெயிலர்' படம்.

 அப்புறம், ஆங்! யோகிபாபு! அவரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! அதிகம் மெனக்கெடமால் உடல்மொழியிலேயே நடிக்கிறார். பரோட்டா சூரிக்குப் பிறகு இப்போதைக்கு சிரிப்பிற்கு இவர் ஒருத்தர் தான் போல. அப்புறம் குடும்பத்தலைவியாக ரம்யாகிருஷ்ணன். இருவரும் கொடுத்த பாத்திரத்திற்கு நடித்திருக்கிறார்கள். வில்லன் நடிகர் அந்த கதாபாத்திரத்தைப் பார்த்து அவரே மிரண்டு விட்டார் போல✌

இந்தப்படத்தை நண்பர்களுடன் டொரோண்டாவில் பார்த்திருந்தால் அந்த அனுபவமே அலாதியாக இருந்திருக்கும். 'பவர்பாண்டி' படத்தை நண்பர்களுடன் டொரோண்டா திரையரங்கில் பார்த்த பொழுது இலங்கைத்தமிழ் மக்கள் அடித்த கமெண்ட்கள் கேட்க ரகளையாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். அது ஒன்று தான் எனக்கு மிஸ்ஸிங் ஆக இருந்தது.

மற்றபடி, "காதலின் தீபம் ஒன்று ஏற்றினானே என் நெஞ்சில்" என்று இன்றும் ரசிப்பவர்கள் சொல்வதெல்லாம் "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை."

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...