உடலில் தலை என்பது எத்தனை முக்கிய பாகம் என்று தெரிந்ததால் தான் தலைக்கவசம் அணிவது அவசியம் என்றானது. வண்டியில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டால் தலையைக் காத்துக் கொள்ள தலைக்கவசம் வேண்டும் என்பதனை வலியுறுத்தித்தான் மோட்டார் வாகன விதியாக தலைக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தியும் அணியாதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பலருக்கும் இந்தச்சட்டம் அமலில் இருப்பது தெரியுமா என்று கூட தெரியவில்லை.
இந்தியாவில், சாலை விபத்துகளில் 37% க்கும் அதிகமானவை இரு சக்கர வாகன விபத்துக்களாகவும் உயிரிழப்புகள் தலையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளின் காரணமாகப் போக்குவரத்துச் சட்டங்களை இன்னும் கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
நகர்ப்புறங்களில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் பெரும்பாலும் வண்டி ஓட்டுபவர் மட்டுமே 'ஹெல்மெட்' அணிவதும் பின்னால் அமர்ந்து வருபவருக்குத் தலைக்கவசம் தேவையில்லை என்று நினைப்பதும் எத்தனை பெரிய அபத்தம்? விபத்து என்று வந்தால் பாதிப்பு இருவருக்கும் தானே? அப்படியிருக்கையில் 'ஹெல்மெட்' இருவருமே அணிய வேண்டும் என்றல்லவா சட்டம் இருக்க வேண்டும்? அது சரி. நம்மூரில் ஒரு பைக்கில் மூன்று, நான்கு பேர் வரை பயணிக்கிறார்கள். அதை எங்கே போய்ச் சொல்வது?
தலைக்கவசம் அணிவது விபத்திலிருந்து நம் தலையைக் காத்துக் கொள்ளத்தான் என்று நினைப்பவர்கள் மட்டுமே ஒழுங்கான தலைக்கவசத்தை அதிக விலை கொடுத்து வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். இல்லையென்றால் 'டப்பா' ஹெல்மெட்டை, நான்கு தடவை கீழே விழுந்தால் சுக்கு நூறாகப் போகும் தரமற்றதைப் போட்டுக் கொண்டு டிமிக்கி கொடுக்கிறார்கள். அதுவும் காவல்துறையினர் எங்கே இருப்பார்கள் என்று பார்த்துப்போட்டுக்கொள்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்😞 இது எப்படி என்றால், கொரோனா காலத்தில் முகக்கவசம் அணியச் சொன்னால் தாடைக்கும் வாய்க்கும் போட்டுக்கொண்டு திரிந்தவர்கள் கதை தான்.
இந்த வெயிலில் ஹெல்மெட் போட்டுக்கொள்வதைப் போல சுயவதை எதுவும் இருக்க முடியாது தான். பலருக்கும் சைனஸ், தலைவலி என்று ஏகப்பட்ட உபாதைகள். என்ன செய்வது? விபத்து ஏற்படும் பொழுது தான் அதன் முக்கியத்துவம் தெரியும். தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டதால் மட்டுமே பெரிய விபத்துக்களிலிருந்து தப்பியவர்களை அறிவேன்.
குண்டும் குழியுமாய் தோண்டிய இடங்களை மூடாமல், அரைகுறையாக மூடியபடி துருத்திக் கொண்டு நிற்கும் கற்கள் நிறைந்த தெருச்சாலைகளில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கிறது. மேடும் பள்ளமுமாய் எந்த வித முன்னெச்சரிக்கையுமின்றி திடீர்திடீரென்று எதிர்படும் வேகத்தடைகள். சுதாரித்துக் கொள்ளவில்லையென்றால் 'மர்கயா' தான். இப்படி பல விஷயங்களைக் கண்டுகொள்ள வேண்டிய அரசாங்கமோ துயில் கொண்டிருக்கிறது. இந்த அழகில் எண்ணற்ற பைக்குகள் மதுரை தெருக்களில் பார்க்கவே அச்சமூட்டுகிறது!
இன்றைய காலகட்டத்தில் பிடிக்கிறதோ இல்லையோ நம் குடும்பத்தினருக்காகத் தலைக்கவசம் அணிந்து கொள்வது அவசியம். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் இன்று வரை தொடரும் தவறுகளால் பூமி வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது என்று கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் வேறு வழியில்லை. நம் தலையைக் காத்துக் கொள்ள இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் இருவரும் தலைக்கவசம் அணிவது அவசியம். அதையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
தஞ்சாவூர், கும்பகோணம் கிராமப்பகுதிகளில் அத்தி பூத்தாற் போல ஓரிருவர் தான் தலைக்கவசத்துடன் சுற்றிக் கொண்டிருந்தார்கள்! என்னடா மதுரைக்கு வந்த சோதனை? அது எப்படி? ஒவ்வொரு ஊருக்கு ஒரு சட்டம்😡 அது அனைவருக்கும் பொதுவானது அல்லவா?
மதுரையில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணிவரை முக்கிய சாலைகளில் பயணிப்போர் தலைக்கவசம் அணிகிறார்கள். மற்ற நேரங்களில் காவல்துறையினர் நிற்கிறார்கள் என்றால் மட்டுமே 'டபக்'கென்று ஹாண்டிலில் தொங்கிக்கொண்டிருக்கும் ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டு நல்லபிள்ளையாகிறார்கள். இரவு ஒன்பது முதல் காலை எட்டு மணி வரை என்ன உத்தரவாதம்? யார் கொடுத்தார்களோ? அந்த மீனாக்ஷிக்குத் தான் வெளிச்சம்.
இளைஞர்கள், யுவதிகள் என்றால் சட்டம் கொஞ்சம் கடுமையாக இருக்கிறது. இருக்க வேண்டியது தான்.சிலரின் அடாவடி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. வளைந்து வளைந்து ஸ்டைலாக ஒட்டி ஹீரோயிசம் காண்பிக்க மற்றவர்களை அச்சுறுத்துவது தவறல்லவா?
பெண்களுடன் செல்லும் தலைக்கவசம் அணியாத ஆண்களை காவல்துறையினர் சமயங்களில் பாவம் பார்த்து விட்டு விடுகிறார்கள்.
ஒரே வண்டியில் நான்கு பேர் செல்லும் அபத்தம் இன்றுவரை தொடர்கிறது. நான்கு பேர் ஹெல்மெட் போட்டால் அமர முடியாது. அப்படியாவது திருந்துவார்களா?
துப்பட்டாவைத் தலையில் சுற்றி ஹெல்மெட்டாக போட்டுக் கொண்டு அலைகிறார்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
அதுவும் திருப்பாலைக்கு அருகே புதிதாக திறந்திருக்கும் பாலத்தில் பைக்கர்கள் அதிகமாக அதிவேகத்தில் செல்வதும் பார்க்க அச்சமூட்டுவதாக இருக்கிறது.
என்னவோ போடா மாதவா 😠😠😠
Subscribe to:
Post Comments (Atom)
'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?
இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தால...
No comments:
Post a Comment