கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆயிரம் வருடப் பழமையான சிவன் கோவில் இருக்கிறது என்று தம்பி எங்களை அங்கே அழைத்துச் சென்றான். அங்குச் சென்ற பிறகு தான் கோவிலைப் பற்றின பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன கோவிலை மன்னர் பனா விந்த்யாதரவின் மனைவி ரத்னவள்ளி கட்டியுள்ளார். அதன் பின் கர்நாடகாவை ஆண்ட பல மன்னர்கள் கோவிலில் மாற்றங்களைச் செய்துள்ளனர் என்பதை அதன் கட்டிடக்கலை பறைசாற்றுகிறது. பல ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள் கோவிலின் அழகைக் குறைக்காமல் கூட்டியுள்ளது தான் சிறப்பு.
கோவிலில் நுழைவதற்கு முன் வலதுபுறம் சிதிலமடைந்த பெரிய மண்டபம். கோபுரம் இல்லாத நுழைவாசல். கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர். உள்ளே மண்டபங்களைக் கடந்து சென்றால் திராவிட கட்டிடக்கலையுடன் இரண்டு கோபுரங்கள். மூன்று சந்நிதியில் அருணாச்சலேஷ்வரர், உமா மகேஷ்வரர், போக நந்தீஸ்வரர் என்று மூன்று திருக்கோலத்தில் சிவன் இங்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் பின்னே தெரியும் நந்தி மலையில் யோக நந்தீஸ்வரராக வீற்றிருக்கிறார். சந்நிதியின் சுற்றுச்சுவர்களிலும் மண்டபத்தூண்களிலும் அழகான சிற்பங்களைச் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் வடிவமைத்திருக்கிறார்கள். மைய மண்டபத்தில் இருக்கும் உமா மஹேஷ்வரர் சந்நிதி, கருங்கல் கல்யாண மண்டபம் ஹொய்சாளர்களின் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்னே வந்த விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பிரதான நுழைவாயிலும் சுற்றுச்சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. கோவில் தீர்த்தக்குளம் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
ஒரே கல்லில் செதுக்கிய நந்திகளுக்காக நந்தி மண்டபங்கள். பதினாறு தூண்களைக் கொண்ட வசந்த மண்டபம். அதற்கு எதிரே நான்கு தூண்களுடன் துலாபார மண்டபம். 'கிரிஜாம்பா சந்நிதி' என்று அம்மனுக்கு ஒரு தனிச்சந்நிதி. மண்டபங்கள், சந்நிதிகளைச் சுற்றி சிவன், பார்வதிதேவி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், தேவியர், தேவர்களின் உருவங்கள், அஷ்ட திக்பாலகர்கள், மகாபாரதம், ராமாயணக் காட்சிகளை நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கியிருக்கிறார்கள்.
இந்து மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் மக்கள் கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவில் திறக்கப்பட்டுள்ளது. கொடுங்கோலர்களின் ஆட்சியில் கோவில் முழுவதும் சிதைபடமால் தப்பித்ததே பெரிய விஷயம்!
அழகான கோவிலை மிக நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். விடுமுறை நாள் என்பதால் அன்று நல்ல கூட்டம். இந்தக் கோவிலிலும் வரிசையில் நின்று சுவாமியைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் 'டிக்கெட்' கலாச்சாரம் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல்.
கர்நாடக மாநிலத்தில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பல புராதன கோவில்கள் இருப்பதைப் படித்திருக்கிறேன். நேரில் பார்க்கும் பொழுது தான் அதன் கட்டடக்கலையும் வரலாறும் பிரமிக்க வைக்கிறது! பெங்களூரிலிருந்து ஒருநாள் பயணமாகச் சென்று வரவும் முடிகிறது. வழியெங்கும் கிளைகளைப் பரப்பி சாலைகளை அலங்கரிக்கும் மரங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது அழகு. ஒருகாலத்தில் நிழற்குடை மரங்களுக்காகவே பெங்களூருவை காதலித்திருக்கிறேன்😍
No comments:
Post a Comment