Monday, May 13, 2024

நந்தி மலை

பெங்களூரூலிருந்து ஒருநாள் பயணமாகச் சென்று வரும் இடங்களில் 'நந்தி ஹில்'சும் ஒன்று. மலையடிவாரத்தில் போகநந்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. நாங்கள் சென்றிருந்த நாளன்று நல்ல கூட்டம். குடியரசு தின வார விடுமுறை வேறு! கேட்கவா வேண்டும்? கோவிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. கோட்டை மதிற்சுவர்களுடன் முகப்பில் பீரங்கிகள் இருபுறமும் நினைவுச்சின்னங்களாக நிற்கிறது. உள்ளே சென்று வாகனங்களை நிறுத்தும் இடத்தில் கட்டணம் வசூலிக்கிறார்கள். அங்கிருந்து கோவிலுக்குச் செல்ல மலை மீது நடந்தும் வாடகை வண்டி, பேருந்துகளிலும் செல்ல முடிகிறது. மலையேற்றம் கடினமான இருக்கும் என்பதால் பேருந்தில் பயணித்தோம். இறங்கும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டே இறங்கினோம். ஆனாலும் கால், மூட்டு, கணுக்கால் வலி உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இறங்குவது நல்லது என்பது பிறகு தான் புரிந்தது.


இங்குள்ள கோட்டைச் சுவர்கள் சிக்கபல்லாபுர பாலேயர்களால் கட்டப்பட்டதாகவும் பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரால் பலப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 'யோகநந்தீஸ்வரர்' கோவில் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வளாகத்தின் மையத்தில் "அம்ரித் சரோவர்" குளம் உள்ளது. நீரைச் சேமிக்க செவ்வக அமைப்பில் கட்டப்பட்டுள்ள குளம்.


புராதன கோவில், பாரம்பரிய சின்னங்கள், வரலாற்றுத்தலம் மட்டுமன்றி மலையேற்றம், சாகச விளையாட்டுக்களுக்கும் பெயர் பெற்றிருக்கிறது நந்தி ஹில்ஸ். அங்கிருந்து தெரியும் 'பனோராமிக்' காட்சி அழகு. 'சிலுசிலு' காற்றுடன் சூரிய உதயமும் அஸ்தமனமும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தென்மேற்கில் உள்ள பள்ளத்தாக்கில் மரண தண்டனை கைதிகள் தள்ளப்பட்ட இடத்தை 'திப்புஸ் ட்ராப்' என்றழைக்கிறார்கள்.


நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் யோகநந்தீஸ்வரர் கோவிலும் கர்நாடகாவில் இருக்கும் ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பழமையான கோவில்களில் ஒன்று என்று அறிந்து கொண்டோம்.




No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...