Sunday, May 19, 2024
தானத்திலே சிறந்த தானம்
இன்று மதியம் 'ஆல்பனி இந்து கலாச்சார மைய'த்தில் ஒரு மணிநேர குறும்படம் 'Aye Zindagi'ஐ திரையிட்டார்கள். இதற்காகப் பல தன்னார்வலர்கள் பல நாட்கள் கடுமையாக உழைத்து சமூகத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொண்டார்கள். அதனால் நிறைய கூட்டத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், வழக்கம் போல தேர்தல் என்றால் விடுமுறை என்று ஓட்டுப்போடாமல் ஓடிப்போகும் சமூகம் இதற்கும் கல்தா கொடுத்து விட்டிருந்தது. அங்கே சென்றால் எதிர்பார்த்த அளவிற்குக் கூட்டம் இல்லை. படத்தை இயக்கியவர் சிறுநீரக மருத்துவர். அவருடைய நண்பர், சிறுநீரக மருத்துவர். எங்கள் ஊரில் இருப்பவர். அவர் மூலமாக இத்திரைப்படத்தை இந்திய மக்கள் காணும் வகையில் இலவசமாகத் திரையிட்டார்கள்.
திரையிடுவதற்கு முன்பு இயக்குநரைப் பற்றின சிறு அறிமுகம். படத்தைப் பார்த்துவிட்டுக் கலந்துரையாடல் செய்வோம் என்று படத்தைப் போட்டார்கள். இந்திப்படம் என்று தெரியும். ஆனால் எதைப்பற்றியது என்று தெரியாது. நமக்கு நன்கு அறிமுகமான ரேவதி முதல் காட்சியில் பேசிய சில வசனங்களில் தெரிந்து விட்டது படத்தின் மூலக்கதை. அதை மக்களுக்கு உணர்த்த அருமையாக, எளிமையாக, உணர்வுபூர்வமாக எடுத்திருந்தார்கள். இது உண்மையாக நடந்த கதை. அதைப் படமாக்கிய விதம் அருமை.
உயிரின் விலை மதிப்பற்றது. அந்த உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின் ஏற்படும் இழப்பு சுற்றத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் உயிரற்ற உடலின் உறுப்புகள் வேறு சிலரை வாழ வைக்கும் வகையில் மருத்துவ உலகம் முன்னேறியிருக்கிறது என்பதும் இழப்பினால் தவிப்பவர்கள் அந்த கொடிய வேதனையில் எடுக்க வேண்டிய முடிவைப் பற்றிப் பேசி உறுப்புகளின் தானத்தைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இப்படம். ரேவதியின் நடிப்பு அருமை.
குடும்பத்தில் ஒருவருக்கு கொடும்நோய் வந்து விட்டால் எவ்வாறெல்லாம் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள், மருத்துவச்செலவுகளுக்காக அவர்கள் படும் வேதனை என்று நன்றாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கொடுமையான நாட்களில் நமக்கு ஆதரவாக நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருப்பதும் வரம். எல்லோருக்கும் அந்த கொடுப்பினை இருப்பது இல்லை. கண்ணீர் எட்டிப்பார்க்கும் காட்சிகள் இருந்தாலும் சுபமாக முடிந்ததில் திருப்தி. இசை, பாடல், காட்சிகள் என்று தேர்ந்த இயக்குநரைப் போல் ஒரு மருத்துவர் இயக்கியிருந்தது சிறப்பு. நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருந்தார்கள்.
படம் முடிந்ததும் அப்படத்தை எப்படி, எதற்காக எடுத்தேன் என்று இயக்குநர் டாக்டர்.அனிர்பன் போஸ் விளக்கமளித்தார். இன்று ஒருவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வாழ்கிறார் என்றால் ஒரு உயிர் இழப்பு நடந்திருக்கிறது என்று அர்த்தம். உயிரற்ற உடலால் இன்று தோல், திசுக்கள் வரை தானம் செய்யலாம். தானத்திலேயே சிறந்த தானம் இறந்த பிறகு நம் உடலின் உறுப்புகளை வேண்டுபவர்களுக்கு வழங்குவதே. இந்தியாவில் இத்தகைய உடல் உறுப்புகளுக்காகப் பலரும் காத்திருக்கிறார்கள். மனமுவந்து இறந்தவர்களின் குடும்பங்கள் ஒத்துழைத்தால் பலரும் இன்று வாழ முடியும். அதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப்படம். இந்தக் கதையைப் பல பாலிவுட் இயக்குநர்கள் நல்ல கதை தான்ன்ன்ன்ன். ஆனால் என்று இழுத்தடித்திருக்கிறார்கள். லாபநோக்கில் படம் எடுப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் அலைந்து திரிந்து வேறு வழியின்றி அவரே இயக்கியிருக்கிறார். லண்டன் ட்ரினிடி கல்லூரியில் படங்களை இயக்குவது பற்றின அடிப்படை கல்வியையும் கற்றிருக்கிறார் இந்த மருத்துவர். கிட்டாரும் வாசிப்பாராம். சூப்பர் மருத்துவர்.
அமெரிக்காவில் இந்தியர்கள் அனைவரும் நன்கு படித்து சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். பல தொண்டு நிறுவனங்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் மற்ற நாட்டினரை விட குறைந்த அளவில் தான் உறுப்பு தான பதிவு செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். அதற்காக நாட்டில் பல இடங்களுக்குச் சென்று திரையிடுவதாகக் கூறினார். அதற்கு குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் அவரவர் குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
இந்தியாவில் சென்னையில் MOHAN Foundation ( https://www.mohanfoundation.org) என்ற லாப நோக்கற்ற அமைப்பின் அமெரிக்க அமைப்பு தான் ttps://mohanusa.org/about-us/. அதற்காக தன்னாலான உதவிகளைச் செய்து வரும் ஆர்வலர்களில் ஒருவர் தான் நியூயார்க்கைச் சேர்ந்த மருத்துவரும் 'Aye Zindagi' படத்தின் இயக்குநருமான அனிர்பன் போஸ்.
நியூயார்க்கின் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் சமூக சேவை நிபுணர் மிஸ்.லோராவும் அமெரிக்காவில் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போர் பட்டியலில் அதிகம் பேர் குழந்தைகள் என்றும் ஒவ்வொரு நாளும் மாற்று உறுப்புகள் கிடைக்காமல் பலரும் இறந்து போகிறார்கள். இதில் சில மரணங்களையாவது நிச்சயம் நம்மால் தடுக்க முடியும். நாம் மனது வைத்தால் முடியும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.
காலத்தின் கட்டாயம் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.
படம் பார்த்தவர்கள் பலரும் கேள்விகள் கேட்டனர். நானும் தமிழ்நாட்டில் மருத்துவ தாய், தந்தையர், விபத்தில் இறந்த தங்கள் மகனின் உறுப்புகளைத் தானம் செய்ததைச் செய்திகளில் படித்ததையும் மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனையின் விழிப்புணர்வு பிரச்சாரத்தால் என் தந்தை, தெரிந்த உறவினர்கள் பலரும் இறந்த பிறகு கண் தானம் செய்ததைக் கூறினேன். மேலும், நாங்கள் இறந்த பிறகு எங்களுடைய உறுப்புகளைத் தானம் செய்வது குறித்தும் உயிலில் எழுதி வைத்திருக்கிறோம் என்றேன். அப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று அங்கிருந்தவர்கள் கேட்க, முடியும் என்று இயக்குநரும் அவருடைய நண்பரும் விளக்கமளித்தார்கள்.
அமெரிக்காவில் வாகன ஓட்டும் உரிமம் பெறும் விண்ணப்பத்தில், "விபத்தில் உயிரிழந்தால் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதமா" என்று கேட்டிருப்பார்கள். இல்லையென்றால் உயிலில் தானம் செய்வதைக் குறிப்பிட்டு குடும்பத்தினரிடம் தெரிவித்து விடலாம்.
ஒரு நல்லவர் இருந்தால் பத்து தீயவர்கள் கைகோர்த்துக் கொண்டு தீய செயல்கள் செய்யாமல் இருப்பார்களா? சில கெட்ட நிகழ்வுகளும் 'organ harvesting' கொடுமைகளும் நடக்கத் தான் செய்கிறது. அதை தற்பொழுது புறக்கணிப்போம் என்று இயக்குனர் கூறி உறுப்புகளைத் தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமெரிக்கர் ஒருவருக்கு இந்தியாவில் இந்தியரின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில், இந்தியர் ஒருவருக்கு அமெரிக்கரின் இதயம் பொருத்தப்பட்டு இன்று இருவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்று அவர்கள் படத்தையும் முடிவில் காண்பித்தார்கள்.
இறந்த பிறகும் பிறருக்கு உதவ முடியும் என்றால் நல்லது தானே?
Subscribe to:
Post Comments (Atom)
Mulitple Facets of Madurai - 2
நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
-
ரயில் பயணங்கள் என்றுமே சுவாரசியமானவை என்றாலும், குழந்தைகள், கணவர், அப்பா, அம்மா, தம்பியுடன் பலமுறை சென்னை-மதுரை பயணம் செய்திருந்தால...
No comments:
Post a Comment