Monday, May 6, 2024

சொந்த ஊர் சோகங்கள்

முன்பெல்லாம் தெரு முக்கில் யார் வீடு இருக்கிறதோ இல்லையோ மனசாட்சியே இல்லாமல் ஓரத்தில் குப்பையைக் கொட்டிவிட்டு நழுவிப் போவார்கள் மதுரை மக்கள். நாங்கள் இருந்த வீடுகளில் எங்களுக்கு இந்த அனுபவம் உண்டு. எத்தனை முறை சொல்லியும் கேட்க மாட்டார்கள். பன்றிகள் வேறு இரவானால் குடும்பங்களாக வந்து கடமையை ஆற்றி விட்டுப் போகும். மாநகராட்சி ஆட்களைக் கூப்பிட்டு குப்பையை எடுக்க வைப்போம். ஒரு தொட்டி வைத்தால் கூட, தூரத்திலிருந்து மூக்கைப் பொத்திக் கொண்டு வீசுவார்கள். சரியாக, தொட்டிக்கு வெளியில் தான் குப்பைகள் விழும். நாய்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அன்றிலிருந்து இன்று வரை மக்களோடு மக்களாக அவர்களும் குடியும் குடித்தனமுமாக பெருகிவிட்டிறுக்கிறார்கள்!

தெருக்களில் தங்கள் வீட்டு முன் இருக்கும் குப்பையைக் கூட்டி வாசல் தெளிப்பவர்கள், தெருவின் நடுவே எதிர்வீட்டிற்கும் அவர்கள் வீட்டிற்கும் இடையே எல்லை அமைத்து குப்பையைக் குவித்து வைத்து விடுகிறார்கள். சுற்று முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென்றால் தெருவையே மலஜலம் கழிக்கும் இடமாக சில குழந்தைகளும் அவர்களுக்குக் காவலாக அவர்களின் பெற்றோர்களும்😡

இப்பொழுது காலையில் 'குப்பை, குப்பை' என்று கத்திக் கொண்டு ஒருவர் கைவண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறார். குரலைக் கேட்டவுடன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்து குப்பையை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும்.

"இங்க வச்சுட்டுப் போகலாமேம்மா. எதுக்கு காத்துட்டு நிற்கறீங்க?"

"நான் எப்படா போவேன்னு அந்த மூன்று தெரு நாய்களும் காத்திட்டு இருக்கு. அப்புறம் தெரு முழுக்க குப்பைகளை இழுத்துப் போட்டுடும்." என்றேன்.
"அதெல்லாம் ஒன்னும் பண்ணாது" என்று அவர் கூறினாலும் அந்த மூன்று நாய்களும் என் கையிலிருக்கும் குப்பையை நோண்டும் ஆவலில் இருப்பதை அவர்களின் திருட்டு முழியே சொல்லிவிடும். நான் பார்க்காத போது என் கையிலிருக்கும் குப்பையைப் பார்க்கும். நான் அவர்களைப் பார்த்துவிட்டால் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு எப்படா நான் நகர்வேன் என்று காத்துக் கொண்டிருக்கும் இந்த நாய்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது😂

பொறுமையாக ஒவ்வொருவர் வீட்டு வாசலில் இருக்கும் குப்பைப் பையை எடுத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து எடுத்துக் கொண்டு போகிறார். முன்பு காக்கிச்சட்டை (அரைக்கால் சட்டை) போட்டுக் கொண்டு வருவார்கள். இப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. மனிதர் மிகவும் தன்மையாகப் பேசினார். ஆளும் நன்றாக உடை உடுத்திக் கொண்டு 'நீட்'டாக வருகிறார்.

"ஏன் நீங்க கையில கிளவுஸ் கூட போட்டுக்கல?"

"அத போட்டா வியர்த்து அரிப்பு வந்திடுதும்மா. அதுக்குப் போடாமலே இருக்கலாம்" என்றவரைப் பார்த்து கவலையாக இருந்தது.

எப்படித்தான் இந்த மனுஷன் இப்படி குரல் கொடுத்திட்டுப் போறாரோன்னு நினைத்தேன். சில நாட்கள் வரவில்லை. அவருக்குப் பதிலாக வந்தவர் அமைதியாக இருக்கின்ற குப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். நானும் குப்பை அள்ளுபவர் குரலைக் கேட்காமல் வீட்டில் குப்பைகள் தேங்கி விட்டது. அந்தத் தெருவில் குப்பையைக் கொட்ட தொட்டிகள் ஏதுமில்லை. அப்படியே கொட்ட வேண்டுமென்றால் ஆறு தெருக்கள் கடந்து சென்று திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி இருக்கும் "மூத்திரக்கூட"த்தில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய தொட்டிகளில் போட்டு விட்டு வரவேண்டும். அங்கே ஐந்தாறு பெரிய குப்பைத்தொட்டிகளை வரிசையாக வைத்திருக்கிறார்கள். கழிவுகள் பொங்கி வழிகிறது. ஒருநேரத்தில் வந்து குப்பைகளை அள்ளிச்செல்கிறது மாநகராட்சி என்றாலும் மீண்டும் சேர்ந்து விடுகிறது பத்து தொட்டிகளுக்கான குப்பை. அதைத்தவிர, சுற்றிலும் நெகிழிக் குப்பைகள், மூத்திர வழிசல்கள். நாய், பன்றிக்கூட்டங்கள். ஈக்கள் இல்லாத மதுரையா? கொடுமைடா! மூக்கைப் பொத்திக் கொண்டு மகாலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவினர்! 'சை' என்றிருந்தது! நம்முடைய வரலாறும் நமக்குத் தெரியவில்லை. பாதுகாக்கப்படவேண்டிய அரிய பொக்கிஷங்களையும் காக்கத் தெரியவில்லை. என்ன மனிதர்களோ நாம்😖

சில நாட்கள் கழித்து மெதுவாக "குப்பை, குப்பை" என்று அவர் குரல் மீண்டும் கேட்க, "என்னாச்சுங்க? இரண்டு நாளா உங்களைக் காணல?"

"ஆமாம்மா! கத்தி கத்தி தொண்டை புண்ணாயிடுச்சு. அதான் வர முடியல. 52 வயசாகுது. 30 வருசமா இந்த குப்பை அள்ளுற வேலைய பண்றேன். முடியற வரைக்கும் பண்ணிட்டுப் போக வேண்டியது தான்"

அவருடைய குரலில் தெரிந்தது வலி. வருத்தமாக இருந்தது.

இந்த மாநகராட்சி இவர்களுக்கு முன்பதிவு செய்த ரெக்கார்டரும் சிறிய ஒலிபெருக்கியும் கொடுத்தால் அது 'குப்பை குப்பை' என்று தெரு முக்கில் வரும் பொழுது ஒலிக்கச் செய்யலாம். காய்கறி, பழங்கள் விற்பவர்கள் அப்படித்தான் வருகிறார்கள். இல்லையென்றால் மக்கள் தான் குப்பைகளை நேரத்திற்குக் கொண்டு வந்து வெளியில் வைக்க வேண்டும். ஆனால் நாய்களின் தொந்தரவு இருப்பதால் பலரும் குப்பைகளை வெளியில் வைக்கத் தயங்குகிறார்கள்.

தெருக்களைச் சுத்தம் செய்ய ஒரு பெண்மணியும் வந்து கொண்டிருந்தார். யார் வீட்டில் பணம் கொடுப்பார்களோ அவர்கள் வீட்டின் முன்னால் இருக்கும் குப்பையை மட்டுமே சுத்தம் செய்வார் என்ற குற்றச்சாட்டும் அவர் மேல் இருக்கிறது. அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். ஆனால் குப்பை அள்ளுபவர்கள், கூட்டுபவர்கள் என்றாலும் அவர்களின் உடைகளில் நல்ல மாற்றம் வந்திருக்கிறது. அவர்களும் அதை ஒரு தொழிலாகச் செய்து சமூகத்தில் கொஞ்சமே கொஞ்சம் முன்னேறியிருக்கிறது போலத் தெரிகிறது. இவர்கள் படிக்காத வரை, குடித்துச் சீரழியும் வரை இம்மக்களை இப்படியே தான் இந்தச் சமூகம் வைத்துக் கொள்ளும் என்பது மட்டும் தெளிவு. இவர்கள் மட்டும் தொடர்ந்தாற் போல் வேலைக்கு வரவில்லையென்றால் நாறிப்போகும் நாடு.

குப்பை அள்ளுவதைச் சீர்படுத்த வேண்டும். அதுவும் மகாலைச் சுற்றி! நாறிப்போய் கிடக்கிறது. இந்த அழகில் மகாலுக்குள்ளே பூங்கா ஒன்று கட்டுகிறோம் பேர்வழி என்று வேலை நடந்து கொண்டிருக்கிறது. வெளியே மொய்க்கும் ஈக்கள். குப்பைக்கூளங்கள்! உள்ளே பூங்காவா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? எது அவசியம் என்று புரியாதவரை இந்த நாடகங்கள் தொடரும். மக்களின் வரிப்பணமும் விரயமாகும்.

பெருகி வரும் மக்கள் எண்ணிக்கை, பன்றி, தெரு நாய்களைக் கட்டுக்குள் கொண்டு வராத வரை மதுரை நாறித்தான் கிடக்கும்.

என்னவோ போடா மாதவா😌




No comments:

Post a Comment

நந்தி மலை

பெங்களூரூலிருந்து ஒருநாள் பயணமாகச் சென்று வரும் இடங்களில் 'நந்தி ஹில்'சும் ஒன்று. மலையடிவாரத்தில் போகநந்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. ...