Monday, July 21, 2025

Be Free Where You Are

சொல்வனம் இதழ் 346ல் வெளியான 'Be Free Where You Are" புத்தகத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை.


வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிலரும், குடும்பத்திற்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக என்று பலரும், எதற்கு என்று தெரியாமல் எல்லோரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் என்று கண் மண் தெரியாமல் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் ஓடவில்லையென்றால் ஒரு மணிநேரத்தைக் கூட கடக்க முடியாமல் தவிக்கும் நிலைமையில் தான் இன்று நம்மில் பலரும் இருக்கிறோம். அமைதியாக ஓரிடத்தில் அமரும் மனநிலையிலிருந்து வெகு தொலைவிற்கு வந்துவிட்டோம். இரைச்சல்களிலேயே இருந்து பழகி விட்ட மனதிற்கு அமைதியாக இருந்தால் ஏனோ பயம் தொற்றுக் கொள்கிறது.

பயத்தை நீக்க, அமைதியை நாடி எங்கெங்கோ அலைகிறார்கள். “எங்கும் அலைய வேண்டியதில்லை. அமைதி உங்களிடமே இருக்கிறது. திக்கின்றி அலையும் மனதைக் கட்டுப்படுத்தும் வித்தையும் எளிமையானது தான். பழக்கப்படுத்திக் கொண்டால் மனவிடுதலை நிச்சயம்” என்றுரைக்கிறது எழுபது பக்கங்கள் கொண்ட “Be Free Where You Are” என்ற புத்தகம். ஜென் குரு ‘திக் நாட் ஹான்’ அமெரிக்காவில் சிறைக்கைதிகளிடம் பேசிய உரையினை தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


நான்கு சுவருக்குள் முடங்கிக்கிடக்கும் சிறைக்கைதிக்குத் தெரியும், தான் இருக்கும் இடம் தப்பித்துச் செல்ல முடியாத சிறைச்சாலை என்று. ஆனால், அமைதியின்றி, தப்ப வழியின்றி தன்னைச் சுற்றி சுவரை எழுப்பிக் கொண்டு மனச்சிறைக்குள் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கும் மன அமைதி பெற இப்புத்தகத்தின் வாயிலாக ஜென் தத்துவத்தைப் போதிக்கிறார் குரு.

“சுதந்திரமாக, மன அமைதியுடன் இருக்க நம்மைச் சுற்றிப் பிணைந்திருக்கும் சூழ்நிலைகளிலிருந்து விடுபட வேண்டிய அவசியமில்லை” என்கிறார். இந்த முரண்பாடுதான் இப்புத்தகத்தின் ஆன்மா. ஹானின் கூற்றுப்படி, சுதந்திரம் என்பது வெளிப்புற நிலைமைகளின் விளைவால் கிடைப்பது அல்ல. அந்தந்த கணத்தில் “உண்மையாக வாழும் பொழுது” கிடைப்பது. ஆழமான பயிற்சி, விழிப்புணர்வின் மூலம் ஒவ்வொரு கணத்திலும் கிடைக்கும் அனுபவத்தை மனதிற்கு உணர வைத்து அதன் மூலம் விடுதலையும் அமைதியும் பெறலாம் என்கிறார்.

“வாழ்தல்” என்பதன் பொருளே அறிந்திராத பொழுது ஹான் சொல்வதைப் புரிந்து கொள்வது கடினம் தான். விடுதலை என்பது எதிர்காலத்தில் இருக்கிறது அல்லது தற்போதைய சூழ்நிலைக்கு வெளியே உள்ளது போன்ற மாயைகளை உடைக்கிறார். ஒருவர் இருக்குமிடம் சிறையாகவோ அல்லது மாட மாளிகையாகவோ இருந்தாலும், “உண்மையிலேயே அங்கே இருப்பதற்கான” திறனே விடுதலையின் வேர். வாழ்வது என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து வாசகர்கள் தங்கள் இருப்பை படிப்படியாக ஒவ்வொரு மூச்சின் வாயிலாக மீட்டெடுக்க வலியுறுத்துகிறார்.

சில மாதங்களுக்கு முன் கோவிலில் நடந்த பிரசங்க கூட்டத்தில் நண்பர் ஒருவர், “வாழ்வதன் குறிக்கோள் என்ன” என்று கேட்டார். பேசிய இந்துமத குருவும் “வாழ்வது தான்” என்று பளிச்சென்று சொல்லிவிட்டார். நமக்குப் பிரச்சினையே அது தானே? எதையோ குறிக்கோளாகக் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என்று பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். அந்தச் செயல்முறையில் எத்தனை எத்தனை சிறு இன்பங்களைக் கவனிக்கத் தவறுகிறோம். மகிழ்ச்சி என்பதைப் பொருட்களில், சாதனைகளில், எங்கோ தொலைதூரத்தில் இருக்கிறது என்ற மன பிம்பம் தான் நம்மை உண்மையாக அந்தந்த கணத்தில் வாழ விடாமல் தடுக்கிறது என்ற உண்மையை உணர வைக்கிறது இப்புத்தகம்.

நாம் விடும் மூச்சிலிருந்து உண்ணும் உணவு, நடை என்று அனைத்திலும் கவனம் செலுத்தினால் அந்தந்த நொடியில் நடக்கும் நிகழ்வுகளை ஆழ்ந்து உற்று நோக்கினால், மனதை ஒருமுகப்படுத்தினால், மன விடுதலையைப் பெறலாம் என்கிறார் குரு.

நம் சுவாசத்தை தீவிரமாகக் கவனித்தால் உடலுக்குள் செல்லும் காற்றை உணர்ந்தால் அதுவே அந்த நொடியில் வாழ்வதாகும். சுதந்திரம் என்பது நாம் கோரும் ஒன்றல்ல. அதைப் பெற, விழிப்புணர்வுடன் நமது எண்ணங்கள், செயல்களை தற்போதைய தருணத்துடன் இணைக்க பயிற்சி செய்ய வேண்டும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கிடைப்பது விடுதலை அல்ல. மாறாக நமது ஏக்கங்கள், அச்சங்கள், வருத்தங்களுக்கு அடிமையாக இருப்பதை நிறுத்தும்போது கிடைப்பதே உண்மையான விடுதலை என்பதை வலியுறுத்துகிறது இப்புத்தகம்.

ஓரிடத்தில் இருந்து கொண்டோ அல்லது ஒரு செயலை செய்துகொண்டோ மற்றொன்றை நினைத்துக் கொண்டால் கவனம் பிசகும் என்பதைப் பெரியவர்கள் வலியுறுத்தி இருந்தாலும் இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. முடிவில், எதையும் நேர்த்தியாகச் செய்யாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகி நிம்மதியின்றி மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

நம்மில் பலரும் கடந்த கால கோபம், வருத்தங்களையும் எதிர்கால பயத்தினையும் சுமந்து கொண்டு உளவியல் சிறைகளில் வாழ்கிறோம். 70 பக்கங்களே கொண்ட இந்தப் புத்தகத்தில் “நிகழ்கால தருணம் மட்டுமே நம்மிடம் உண்மையிலேயே இருக்கும் ஒரே தருணம். அமைதிக்கான வழி என்பது எதுவுமில்லை. அமைதி தான் வழி” என்பதை திக் நாட் ஹான் வலியுறுத்துகிறார்.

முழுமையாக வசிக்கும் ஒவ்வொரு கணமும் அமைதியை அனுபவிக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது என்பதோடு உயிரினங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் யாரும் தனிமையில் இருப்பதில்லை. நமது செயல்கள், எண்ணங்கள், இன்ப, துன்பங்கள் கூட வாழ்க்கையின் ஒரு பெரிய வலையமைப்பின் ஒரு அங்கம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதால் பிறரின் மீதான இரக்கம் மிகுந்து அன்பு பலப்படும். அதுவே சமூகம் தழைக்க உதவும் ஆணிவேர் என்பதால் மன அமைதியும் கிட்டும் என்று விவரிக்கிறார்.

அதே போல, தனக்கு நேர்ந்து விட்ட துன்பத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிராது அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். உறுதியான மனமே துன்பத்திலிருந்து கற்ற பாடம் வாயிலாக அமைதிக்கு வழிவகுக்கும். “இந்தச் சிறைச்சாலையை நீங்கள் ஒரு மடமாக, அமைதிக்கான இடமாக மாற்ற முடியும்” என்று கைதிகளின் மன அமைதிக்கான வழிகளைப் போதிப்பதோடு மனச்சிக்கலில் சிறைபட்டவர்களுக்கும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது இப்புத்தகம்.

நம் முன்னோர்களும் இதையே பகவத் கீதை வாயிலாக எடுத்துரைத்தார்கள்:

வெற்றி தோல்வியின் மீது பற்று கொள்ளாமல் செய்யும் செயலில் முழு விழிப்புணர்வுடன் செயல்படுவதும், பாராட்டு/ விமர்சனம், ஆதாயம்/ இழப்பு, மகிழ்ச்சி/துக்கம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் அனைத்தையும் சமநிலையில் ஏற்றுக் கொள்ளும் மன உறுதியும், ஆசைகள், கவனச்சிதறல்கள், புலன் இன்பங்களால் வழிநடத்தப்படாமல், மனதை உள்நோக்கி ஆராயும் விழிப்புணர்வு, தியானம் போன்றவற்றால் மன அமைதியும் தெளிவும் கிடைக்கும் என்பதைத் தான் “Be Free Where You Are” புத்தகமும் விவரிக்கிறது.

No comments:

Post a Comment

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...