அமெரிக்காவில் பன்முகத்தன்மை கொண்ட நகரங்களில் ஒன்று மட்டுமல்ல, ஹாலிவுட் கனவுகளுடன் வருபவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் தான் கடந்த மே மாதம் முதல் கலவரங்களால் பற்றிக் கொண்டு எரிந்து உலகத்தாரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இது ஒன்றும் தன்னிச்சையான சீற்றத்தின் வெளிப்பாடு அல்ல. பல தசாப்தங்களாக இனம், நிறபேதம், நீதி மீதான ஒடுக்குமுறையின் அடையாளமாக வெடித்த பூகம்பம். காவல்துறையினரின் அத்துமீறலைத் தொடர்ந்து நீதி கேட்டு முறையான மாற்றத்திற்கான அறைகூவல். 1992ல் இன ஒடுக்குமுறையையும் அதிகாரிகளின் விடுதலைக்கான எதிர்வினையையும் பிரதிபலித்த ‘ராட்னி கிங்’ கலவரத்தை “1992 LA Uprising” என்று அழைத்தனர். இத்தனை வருடங்களாகியும் பல்வேறு அரசுகள் மாறியும் அது தொடர்வது தான் வேதனை.
2025 போராட்டம் ஏன் துவங்கியது?
இந்த அழகிய நகரத்தில் பெரும்பான்மையினர் லத்தீன் அமெரிக்கர்கள்(49%). வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாக பெரும்பாலும் கறுப்பர்களும் லத்தீன் சமூகத்தினர்களுமே இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதிகளில் தான் போராட்டங்களும் கலவரங்களும் அடக்குமுறைகளும் அதிகளவில் நடக்கிறது.
கடந்த மே மாதம் 16, 2025 அன்று 17 வயதான ஜேலென் தாமஸ் என்ற கறுப்பின இளைஞனை தென் மத்திய நகர காவல்துறையினர் வழக்கமான போக்குவரத்து விசாரணை செய்ய தடுத்து நிறுத்தியுள்ளனர். நிராயுதபாணியாக இருந்தபோதிலும் வண்டியிலிருந்து அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக இறக்கி, தரையில் வீழ்த்தி, பலம் கொண்ட மட்டும் அழுத்திப் பிடித்திருக்கின்றனர். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விசாரணையை முழுவதும் காட்சிப்படுத்திய வழிப்போக்கரின் வைரல் வீடியோவால் காவல்துறையினரின் செயலைக் கண்ட மக்கள் கொந்தளிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். ஐந்து வருடங்களுக்கு முன் மின்னசோட்டா மாநிலத்தில் காவல்துறையினரின் அடாவடி நடவடிக்கையால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்ததை இன்னும் மக்கள் மறந்திருக்கவில்லை. அதற்குள் அதேபோலொரு சம்பவம். 48 மணிநேரத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை தலைமையகத்தில் நீதி கோரி கூடினர்.
சமூகத்தலைவர்கள் தலைமையில் காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து மே 17-20 நகரம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்தன. மே 21 முதல் பதட்டங்கள் அதிகரிக்க, ‘லீமெர்ட் பூங்கா’ அருகே காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை விலக்க முயற்சிக்க, அவர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதனால் நகரின் சில பகுதிகளில் கொள்ளை, தீ வைப்பு, சட்ட அமலாக்கத்துறையினருடன் மோதல்கள் நடந்தன. நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 48 மணிநேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நீதி கேட்டு உள்ளூர் போராட்டங்கள் கறுப்பர்கள் குடியிருப்புப் பகுதிகளில் நடந்தது.
இந்தப் போராட்டம் ஏதோ காவல்துறையினரின் ஒருமுறை அராஜகத்திற்காக நடந்தது அல்ல. தலைமுறை தலைமுறையாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் சமூகங்கள், சமத்துவமின்மை, மீறப்பட்ட வாக்குறுதிகள் காரணமாகவும் நடந்தன. கருப்பு, லத்தீன் சமூகங்களுக்கு எதிரான காவல்துறையினரின் வன்முறையின் நீண்ட நெடிய வரலாறும், அராஜக வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதும், பொருளாதார சமத்துவமின்மையும் நிற பேதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் நீதியும் தான் இன்று போராட்டமாக, மக்கள் தங்கள் குரலை அரசிற்கு உணர்த்த வேறுவழியில்லை என்று உணர்ந்ததால் வெடித்தது நகரம்.

கொரோனா தொற்றுப்பரவலின் பொழுது அதிக பாதிப்பிற்கு உள்ளான நகரங்களில் லாஸ் ஏஞ்சலஸ்ம் ஒன்று. அதுவும் சிறுபான்மையினர் வசித்து வந்த குடியிருப்புப் பகுதிகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்குப் பிறகு செல்வ சமத்துவமின்மையும் அதிகரித்தது. பல தொழிலாள வர்க்க குடும்பங்கள், குறிப்பாக, கருப்பு, லத்தீன், புலம்பெயர்ந்த சமூகங்களில் வேலை இழப்புகள், பணவீக்கம், வீட்டு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டன. அருகருகே வசித்து வரும் இந்தக் குழுக்கள் தான் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று காவல்துறையினரால் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், சட்ட விரோத குடியேற்ற வழக்குகளால் ஏற்பட்டிருக்கும் சமூக பதட்டமும் தொடர் போராட்டத்திற்குக் காரணமாகியுள்ளது.
ஆவணப்படுத்தப்படாத மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் தொகை இந்நகரத்தில் உள்ளது. இதனால் குறைந்த வீட்டுவசதிகளுடன் குறைந்த ஊதியம், அத்தியாவசிய வேலைகளில் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்கிறார்கள். ஆனால் ஜூன் 6,2025ல் குடியேற்ற அமலாக்கத்துறையினரால் லத்தீன் அமெரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட ICE சோதனைகள் நகரம் முழுவதும் அமைதியின்மையைத் தூண்டின. நூற்றுக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள், பல நீண்டகால குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் பிறந்த 14 வயது மெக்சிகன்-அமெரிக்க சிறுவன் ஒரு ஆவணமற்ற நபர் என்று தவறாகக் கருதப்பட்டு அவனது பள்ளியின் முன் கைது செய்யப்பட்டான்.
ஆவணமற்றவர்கள் மீதான நடவடிக்கை என்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த லத்தீன் இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என்று பலரையும் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து அவர்கள் இருக்குமிடத்தையும் குடும்பத்திற்குத் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். அதைத்தொடர்ந்து சாலைகளை ஆக்கிரமித்து ICE மற்றும் LAPD உடன் லத்தீன் சமூக மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு கட்சிகளிடமிருந்தும், குறிப்பாக பல ஆண்டுகளாக LA மற்றும் கலிஃபோர்னியாவை கட்டுப்படுத்திய ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மீதான கோபத்தால் ‘LA Uprising” என்ற எழுச்சிப் போராட்டமும் மீண்டும் துவங்கியது.
ஜூன் 10-11ல் மோதல்களும் ஊரடங்கு உத்தரவுகளும் தீவிரமாக, போராட்டங்களும் தொடர்ந்தன. ஒரே இரவில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜூன் 14 அன்று LAல் நடந்த “No Kings Day” உச்சக்கட்ட போராட்டம் நாட்டின் கவனத்தை ஈர்த்தது.
போராட்டங்களின் விளைவாகப் பொதுச்சொத்திற்குச் சேதம் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அதிபர் ட்ரம்ப் 2000 தேசிய காவல்படை வீரர்களை மாநில ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பி வைத்தார். இதனை எதிர்த்த கலிஃபோர்னியா மாநில ஆளுநர் நியூசம்-மும் எல்ஏ நகர மேயர் பாஸ்-ம், “அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கை” என்று கண்டித்து ட்ரம்ப் அரசின் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தேசிய காவல்படை துருப்புகள் நகரில் மையம் கொள்ள, மெக்சிகன் கொடிகள் ஏந்திய போராட்டக்காரர்கள் சாலைகளில் பேரணியாகச் சென்று நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகளோடு மோதினர். உள்ளூர் ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை அமல்படுத்தப்பட்டது. போராட்டங்களை “சட்டவிரோதக் கூட்டங்கள்” என்று காவல்துறை அறிவித்தது. ஜூன் 9 அன்று கூடுதலாக 700 கடற்படையினரை ட்ரம்ப் அரசு அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது.
அரசின் குடியேற்ற நடவடிக்கைகளால் தங்களின் நீண்டகால போராட்டங்கள் கவனத்தைப் பெறவில்லையோ என்று சில கறுப்பின குடியிருப்பாளர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஆனால் இது ஒரு இனப்போர் அல்ல. நீதி பிரச்சினை. ஏழை கறுப்பின, லத்தீன், புலம்பெயர்ந்த சமூகங்கள் அனைத்தும் ஒரு அமைப்பால் ஒன்றாக ஒடுக்கப்படுகின்றன. அதனால் தான் பாதிக்கப்பட்ட லத்தீன் (குறிப்பாக, மெக்ஸிகன்-அமெரிக்க) சமூகங்கள் கறுப்பர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் “நாங்கள் இந்த இயக்கத்தை மாற்ற வரவில்லை. அதே வலியின் ஒரு அங்கமாக இருப்பதால் ஆதரவளிக்க இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்கிறோம்” என்று பங்குகொண்டார்கள். அதை சில பழமைவாத ஊடகங்கள் காவல்துறையின் அராஜகத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப மெக்சிகோ நாட்டின் கொடிகளை ஏந்தியவர்களையும் கலகக்காரர்களையும் முன்னிலைப்படுத்தி போராட்டம் குடியேற்றம், தேசியவாதம் பற்றியது என்று தவறாகக் குறிப்பிட்டன. இது போராட்டத்தை நியாயமற்றதாகவும் வெறுப்பைத் தூண்டவும் பயன்படுத்தப்படும் தந்திரமாகும்.
அமெரிக்கா குடியேறிகளின் நாடு. மில்லியன் கணக்கான மக்கள் தங்களை மெக்சிகன்-அமெரிக்கன், இந்தியன்- அமெரிக்கன், இத்தாலியன்-அமெரிக்கன் என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மெக்சிகோ நாட்டுக் கொடியைப் போராட்டத்தில் பயன்படுத்தியது அமெரிக்க அடையாளத்தை ரத்து செய்யாது. அது பாரம்பரியத்தையும் வேர்களையும் கொண்டாடுவதைக் குறிக்கிறது. “கருத்துச் சுதந்திரம்” என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு உரிமையாகும். முதல் திருத்தத்தின் கீழ், அமெரிக்க குடிமக்கள் கொடிகள் உட்பட கலாச்சார, அரசியல் மற்றும் குறியீடு கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் பெற்றுள்ளனர். ஆனால் தங்கள் நாட்டில் நடக்கும் போராட்டத்தின் பொழுது வேற்று நாட்டுக் கொடியைக் கண்டதும் இவர்கள் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இல்லை. ட்ரம்ப் செய்வதே சரி என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். இந்த கொடி விவகாரம் பிரச்சினையைத் திசைதிருப்புவது போல அமைந்து விட்டது.
போராட்டக்காரர்கள் வேண்டுவதெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடுத்து தண்டனை வழங்கல், காவல்துறையில் சீர்திருத்தம், கல்வி, வேலைவாய்ப்புகள், வீட்டுவசதிகளில் சிறுபான்மையினருக்கு அதிக நிதிகளை ஒதுக்கி சட்ட, அரசியல் அமைப்புகளில் இன சமத்துவம், குடியேற்ற சட்ட சீர்திருத்தம் என்பது தான். இன்று, மனித உரிமை மீறல்களை விட சொத்து சேதத்திற்கு முன்னுரிமை அளித்து ‘கலவரம்’ என்ற பெயரில் போராட்டக்காரர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் வேலையும் நடக்கிறது. கலகம் செய்பவர்களால் உண்மையான போராட்டம் கலவரத்தில் முடிய, மக்களின் எதிர்ப்பையும் ஒருகட்டத்தில் சம்பாதித்துக் கொள்கிறார்கள். குற்றவாளிகளாகிறார்கள்.
நாட்டின் இரு பெரிய கட்சிகளும் மாறிமாறி ஆட்சிசெய்தும் ஏன் இதுவரையில் மாற்றங்கள் நிகழவில்லை? குடியரசுக்கட்சியின் மேல் பழிபோடும் ஜனநாயக கட்சி என்ன செய்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.
குடியேற்றம், காவல்துறை, செல்வ மறுபகிர்வுகளில் தீவிர சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால் மிதவாதிகள், புறநகர்ப் பகுதி வாக்காளர்களிடமிருந்தும் எதிர்வினை ஏற்படும் என்ற அச்சம். அதனாலேயே ஜனநாயக கட்சித்தலைவர்களும் ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ல் பெரும்பாலும் இந்த நடவடிக்கைகளைத் தவிர்த்தனர். ஒபாமா, பைடன் ஆட்சிக்காலத்தில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை கொண்டிருந்தாலும் சீர்திருத்த மசோதாக்கள் செனட்டில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. டாக்கா(Deferred Action for Childhood Arrivals) போன்ற குடியேற்ற மாற்றங்கள் ஒருபோதும் சட்டமாக மாறவில்லை. சில தலைவர்கள் கடுமையாக உழைத்தாலும் வேரூன்றிய அதிகாரத்துவமும் அரசாங்கத்தின் மெதுவான செயல்முறையும் அவர்களுக்கு எதிராகவே இருந்தது. தொழிலாளர் சார்புடையவர்களாகவும், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவானவர்கள் என்று பெயர் பெற்றிருந்தாலும் பல ஜனநாயகக் கட்சியினரும் பெரு நிறுவன செல்வாக்கு உள்ளவர்களின் தயவில் தான் அதிகார பீடத்தில் இருக்கின்றனர். இந்த நன்கொடையாளர்கள் தான் ஜனநாயக கொள்கையின் எல்லைகளைத் தீர்மானிக்கின்றனர்.
உற்று நோக்கின், சமத்துவமின்மை அமைப்பில் தான் அமெரிக்க அரசியலே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அரசியல்வாதிகள் பெரும்பாலும் மூல காரணங்களைக் கருத்தில் கொண்டு சமூக முதலீட்டில் அக்கறை கொள்ளாமல் அடக்குமுறையையே கையாண்டு வருகிறார்கள். ‘1992 LA Riots’ க்குப் பிறகு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேலான நிவாரண உதவி உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மிகக்குறைவான உதவியே குடியிருப்பாளர்களைச் சென்றடைந்தது. சீர்திருத்தத் திட்டங்கள் பெரும்பாலும் “குற்றக் குறைப்பு, கும்பல் அடக்குமுறை” போன்றவற்றின் மீதே அதிக கவனம் செலுத்தி, இளைஞர் வழிகாட்டுதல், மனநலப் பராமரிப்பு, மலிவான வீடுகள், ஆவணமற்ற தொழிலாளர்களுக்கான வேலை உருவாக்கம் போன்ற நல்ல திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டாததும் இந்தப் போராட்டங்கள் இன்று வரை தொடருவதற்கு காரணமாகியிருக்கிறது.
தற்பொழுது பள்ளிகள், மருத்துவமனைகள், பணியிடங்களைக் குறி வைக்கும் குடியேற்றத்துறை, காவல்துறையின் வன்முறை, குடும்பங்களைப் பிரிக்கும் நாடுகடத்தல் பற்றி உள்ளூர் ஆர்வலர் குழுக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. தீவிரமானவை என்று முத்திரை குத்தப்படுகிறது. அமெரிக்காவின் கார்ப்பரேட் நலன் சார்ந்த சித்தாந்தங்கள் சமூகங்களை விட அதிக சக்தியைக் கொண்டுள்ளதும் மற்றொரு காரணமாகும்.
ஜனநாயகக் கட்சிக்குள் முற்போக்குவாதிகள், மிதவாதிகள் உட்சண்டைகளால் முக்கிய சீர்திருத்தங்களில் பின்னடைவு ஏற்படவும் காரணமாகிறது.
“சரணாலய அரசு” என்ற முத்திரை கலிபோர்னியா அரசிற்கு இருந்தபோதிலும், உள்ளூர் அதிகாரிகளின் அமைதியான ஒருங்கிணைப்புடன் தான் ICE சோதனைகள் பெரும்பாலும் நடக்கின்றன. அதனால் தாங்கள் நம்பியிருந்த அரசு துரோகம் இழைத்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர்.
2025 LA எழுச்சிக்கு ஜனநாயக கட்சி நேரடிக் காரணம் அல்ல என்றாலும் அது ஆதரிப்பதாகக் கூறும் சமூகங்களில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைப் புறக்கணித்த நீண்ட வரலாற்றின் காரணமாக அது ஓரளவுக்குப் பொறுப்பாகும். அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷமான குடியேற்ற கொள்கைகள் 2025 LA எழுச்சியைத் தூண்டுவதில் பெரும்பங்கு வகித்துள்ளது.
எனவே, ‘2025 LA எழுச்சி’ என்பது ஒரு இளைஞனையோ அல்லது ஒரு தாக்குதலையோ பற்றியது மட்டுமல்ல. 50+ ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகள், தோல்வியுற்ற சீர்திருத்தங்கள், அடக்குமுறைகளின் விளைவாகும்.
உலகம் அறிந்த லாஸ்ஏஞ்சலஸ் நகரின் ஹாலிவுட் அடையாளத்திற்குப் பின்னால் உள்ள சமத்துவமின்மை, வலி, எதிர்ப்பு, ஏழ்மையின் நினைவூட்டலே 2025 கலவரங்கள். ‘LA Uprising’ என்று போராட்டக்காரர்களும் ‘LA Riots’ என்று அரசு சார்பு ஊடகங்களும், ஆளும் அரசும் விளித்தாலும் இது காலம்காலமாக ஒதுக்கப்பட்ட சமூகங்களின் மீது அரங்கேறி வரும் அநீதிக்கு எதிரான ‘எழுச்சி’ப் போராட்டமே.
உடைந்த ஜன்னல்களும் எரிந்த கட்டிடங்களும் போராட்டத்தின் விளைவால் ஏற்பட்டது. அதைவிட மக்களின் நம்பிக்கைக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான சேதத்திற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? நகரம் தன் ஆன்மாவை சரிசெய்து கொள்ளுமா அல்லது வரலாற்றை மீண்டும் தொடருமா என்பது அடுத்த நிகழ்வுகளில் தெரியும். நகரில் உள்ள சுவர் சித்திரத்தில் “நாங்கள் பழிவாங்க விரும்பவில்லை. எங்களுக்கு எதிர்காலம் வேண்டும்” என்ற வாசகத்தின் பின்னே இருக்கும் வலியை இனியாவது அரசு உணர்ந்து நடந்து கொள்ளுமா?
“தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி”. அரசு பொறுப்பேற்றுத் தன்னைத் திருத்திக்கொள்ளாவிடில் மக்களும் நகரமும் வெகுண்டெழும் என்பதே இந்தப் போராட்டங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை.
No comments:
Post a Comment