Monday, July 21, 2025

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை 

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூலை 2025

ஒரே ஒருமுறை மட்டுமே அதிபர் பதவி வகித்திருந்தாலும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கவனிக்கத்தக்க மனிதராக வலம் வந்தவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ‘ஜிம்மி கார்ட்டர்’. வேர்க்கடலை விவசாயி முதல் உலக அமைதி ஆர்வலர் வரை, கார்ட்டரின் செல்வாக்கு பரவலாகவும் நீண்ட காலமாகவும் இருந்தது. குறிப்பாக, அதிபராகவும் அதற்குப் பின்னரும் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரையில் மக்களிடையே பெரும் அபிமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜிம்மி கார்ட்டர்’ யார்?

1924ல் ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் ஜேம்ஸ் சீனியர், லில்லியன் கோர்டி கார்டரின் மகனாகப் பிறந்தவர் ‘ஜிம்மி கார்ட்டர்’. மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாத வேர்க்கடலை பண்ணையில் வளர்ந்தவர். அவரது குடும்பத்தில் இருந்து உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற முதல் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர். அதிகமான கருப்பு அமெரிக்கர்கள் சூழ வாழ்ந்து அவர்களின் ஏழ்மை, அநீதிகளைக் கண்டு வளர்ந்ததால் மனித நேயத்துடனும் தான் சார்ந்த கிறிஸ்தவம் கற்றுத் தந்த நற்போதனைகள்படியும் வாழ்ந்த அரிய மனிதர்.

1946ஆம் ஆண்டு அனாபோலிஸ், மேரிலாண்ட்டில் உள்ள ‘அமெரிக்க கடற்படை அகாடமி’யில் அணு அறிவியலைப் படித்து சிறப்புப் பட்டம் பெறுவதற்கு முன்பு ‘ஜார்ஜியா சவுத்வெஸ்டர்ன் கல்லூரி’ மற்றும் ‘ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ ஆகியவற்றில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அதே வருடத்தில் ‘ரோசலின் ஸ்மித்’ என்ற இளம் பெண்ணை காதல் மணம் புரிந்துள்ளார். பின், அமெரிக்க கடற்படையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிகையில் ஐந்து ஆண்டுகள் நீர்மூழ்கிக் கப்பல் பணியில் இருந்துள்ளார். 1953ம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பின் நீர்மூழ்கிக் கப்பலில் பொறியியல் அதிகாரியாகும் வாய்ப்பைத் துறந்து குடும்ப வேர்க்கடலை பண்ணை நடவடிக்கைகளை நிர்வகிக்க ஜார்ஜியா திரும்பியுள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வெள்ளை மாளிகையின் அதிபரானது எப்படி?

உள்ளூர் கல்வி வாரியத்தில் பணியாற்றியதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் கார்ட்டர். பின், 1962ல் ஜார்ஜியா மாநில செனட்டிற்கு ஜனநாயக கட்சிக்காரராகத் தேர்தலில் வெற்றி பெற்று 1964 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1966ல் ஆளுநர் பதவிக்கான முயற்சியில் தோல்வியடைந்தார். இந்த அனுபவத்தால் மனச்சோர்வடைந்தவர் சுவிசேஷ கிறிஸ்தவத்தில் ஆறுதல் தேடி மீண்டும் ஞானஸ்நானம் பெற்றவரானார்.

1970ல் மீண்டும் ஆளுநராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது தொடக்க உரையில் “இன பாகுபாட்டிற்கான நேரம் முடிந்துவிட்டது” என்று அறிவித்து, ஜார்ஜியாவின் அரசாங்க அலுவலகங்களில் கறுப்பர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கி, ஆளுநராக, அன்றைய அரசு நிறுவனங்களை மறுசீரமைத்தார். அதே நேரத்தில், அவற்றுக்கான கடுமையான நிதி நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். அவருடைய செயல்பாடுகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. நல்ல அரசாங்கம் மற்றும் “நியூ சவுத்” இரண்டின் அடையாளமாக ‘டைம்’ இதழின் அட்டைப்படத்தில் இடமும் பெற்றார். இங்கிருந்து தான் வெள்ளை மாளிகைக்குப் பயணமானார் கார்ட்டர்.

1974ஆம் ஆண்டில், ஆளுநராக அவரது பதவிக்காலம் முடிவடைவதற்குச் சற்று முன்பு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தேசிய அரசியல் அடித்தளம், பலமான ஆதரவு இல்லாவிட்டாலும், முறையான பிரச்சாரத்தின் மூலம் நேர்மையான, எளிமையான தேசிய அரசியல் புதுமுகமாக மக்களின் செல்வாக்கைப் பெற்றார். அன்றைய அமெரிக்க அரசியல் வரலாற்றில் புயலை ஏற்படுத்திய அதிபர் நிக்ஸனின் ‘வாட்டர்கேட்’ ஊழலுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் அதிகாரம், நிர்வாகக் கிளையின் ஒருமைப்பாடு பற்றிய அச்சத்தை எழுப்பிய கார்ட்டர், வாஷிங்டன், டி.சி.க்கு தான் “வெளிநாட்டவர்” என்று தன்னை தகவமைத்துக் கொண்டார். நிக்ஸனின் ஊழலைக் கண்டு திகைத்திருந்த அமெரிக்கர்களுக்கு கார்ட்டரின் தார்மீக நிலைப்பாடு, நேர்மையான அணுகுமுறை, ஜார்ஜியா மாநில ஆளுநராக அவருடைய செயற்பாடுகள் கவர, பற்கள் தெரிய சிரிக்கும் அவருடைய வெள்ளந்தி முகமும் எளிய தோற்றமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

1976ல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராகப் போட்டியிட்டு குடியரசுக்கட்சியின் வேட்பாளரான ‘ஜெரால்ட் ஆர். ஃபோர்டை’ தோற்கடித்தார். 51 சதவிகித மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று 39வது அதிபராகப் பொறுப்பேற்றார்.



பதவியேற்க வாஷிங்டன் சென்ற பொழுது பென்சில்வேனியா அவென்யூவில் தனது காதல் மனைவி ரோசலினுடன் வண்டியிலிருந்து இறங்கி நடந்து மக்களை நோக்கி கையசைத்துக் கொண்டே அமெரிக்கப் பாராளுமன்றம் சென்றது அன்று பேசுபொருளானது.

அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்புகளை நிகழ்த்துவதும் எளிமையான உடை, பேச்சு பாணி என்று மற்ற அதிபர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். மக்களுக்கு நன்மை பயக்கும் சமூக, நிர்வாக, பொருளாதார சீர்திருத்தத்திற்கான லட்சிய திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினார். பிரதிநிதிகள் சபை, செனட் இரண்டிலும் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் அவருடைய திட்டங்கள் பலவும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தன. (மக்களுக்கு நல்லது என்றால் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்குமா என்ன?)

“வாஷிங்டன் அரசியல்” அனுபவம் இல்லாததால் அவரது நற்திட்டங்கள் பலவும் ஒப்புதல் பெற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. அவரது இயலாமையால் அவரது ஆரம்ப புகழ் 1978 வாக்கில் மங்கத் தொடங்கியது.

அதுவும் தவிர, நண்பர், சகோதரன் மீதான இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளினால் அவரின் நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்கு இடமானது. 1977ல், மேலாண்மை மற்றும் நிதிநிலை அலுவலகத்தின் இயக்குநரும், கார்ட்டரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ‘பெர்ட் லான்ஸ்’, ஜார்ஜியா வங்கியாளராக நிதி முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். கார்ட்டர் லான்ஸுக்கு ஆதரவாக நின்றபோது பலர் அதிபரின் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கினர். இறுதியில் நண்பர் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு அவரது இளைய சகோதரர் ‘பில்லி’, ‘முயம்மர் அல்-கடாபி’யின் லிபிய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துபவராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ‘செனட்’ புலனாய்வாளர்கள், பில்லி முறையற்ற விதத்தில் செயல்பட்டாலும், கார்ட்டரின் பங்கு எதுவுமில்லை என்று கண்டறிந்தனர். இவ்விரண்டு ஊழல் வழக்குகளிலும் கார்ட்டர் நேரிடையாக குற்றஞ்சாட்டப்படாதவர் என்றாலும் அவர் மீதிருந்த நம்பகத்தன்மை கேள்விக்குறியானதில் செல்வாக்கும் சரிய துவங்கியது.

ஆனால், வெளிநாட்டு விவகாரங்களில், சர்வதேச மனித உரிமைகளை நிலைநிறுத்தியதற்காக கார்ட்டர் பாராட்டுகளைப் பெற்றார். இருப்பினும், உலகத்தைப் பற்றிய அவரது பார்வை ‘அப்பாவி’யாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த இரு ஒப்பந்தங்கள் அவரின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளாக இன்றும் பேசப்படுகிறது.



1977ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் கொண்டு வந்த ஒப்பந்தத்தினால் 1999ஆம் ஆண்டின் இறுதியில் பனாமா கால்வாய் பனாமாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1978ல் முன்னாள் எகிப்திய அதிபர் ‘அன்வர் சதாத்’ மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி ‘மெனஹம் பெகின்’ இருவரையும் மேரிலாந்தின் ‘கேம்ப் டேவிட்’டில் சமாதான பேச்சிற்கு அழைத்தார் கார்ட்டர். 1948ல் இஸ்ரேல் நிறுவப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த போர்நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் சமாதான உடன்படிக்கையும் ஏற்பட்டது. 13 நாட்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை கார்ட்டரின் உறுதியான தலையீட்டால் மட்டுமே முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த சினாய் தீபகற்பத்தை எகிப்துக்குத் திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முழு ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் இருநாடுகளுக்கிடையே ஏற்பட காரணமானார்.

1979ல் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உறவை மேம்படுத்தி தைவானுடனான அதிகாரப்பூர்வ உறவுகளை முறித்துக் கொண்டார். அதே ஆண்டில், வியன்னாவில், சோவியத் தலைவர் ‘லியோனிட் ப்ரெஷ்நேவ்’வுடன் ஒரு புதிய இருதரப்பு மூலோபாய ஆயுத வரம்பு ஒப்பந்தத்தில் (SALT II) கையெழுத்திட்டார். இது இரு வல்லரசுகளுக்கு இடையே போதுமான அளவு சரிபார்க்கக்கூடிய விதிமுறைகளின் அடிப்படையில் மூலோபாய அணு ஆயுத விநியோக அமைப்புகளில் சமநிலையை நிறுவும் நோக்கத்துடன் இருந்தது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, செனட்டின் ஒப்புதலுடன் ஒப்பந்தத்தை நீக்கி சோவியத் யூனியனுக்கு அமெரிக்கத் தானியங்களை அனுப்புவதற்கும் தடை விதித்தார். ரஷ்யாவை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற இஸ்லாமிய அடிப்படை குழுக்களுக்கும் பாகிஸ்தானிற்கும் அதிகளவில் ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து தீவிரவாதம் தலைதூக்க காரணமாகவும் இருந்தார் என்ற வாதமும் உண்டு. அமைதியை நிலைநாட்ட அவர் செய்த செயல்கள் பாம்புக்குப் பால் வார்த்த கதையாகி இன்று வரை தொடர்வது தான் வேதனை.

கணிசமான வெளியுறவுக் கொள்கைகளில் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் ஈரான் விவகாரங்களில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி மற்றும் உள்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான மக்களின் அதிருப்தி அவற்றை மறைந்துவிட்டன என்றே கூறலாம். நவம்பர் 4, 1979 அன்று, ஈரானிய மாணவர் கும்பல் ஒன்று டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கி 50 ஊழியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ‘ஷா’வை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குள் அனுமதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் மதகுரு ‘அயதுல்லா ருஹோல்லா கொமேனி’ தலைமையிலான ஈரானின் புரட்சிகர அரசாங்கத்தால் தூதரக தாக்குதல் நடைபெற்றது.

இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் உருவானது. ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது. உலக அரங்கில் அங்கிள் சாமின் பிம்பம் சரியவும் காரணமானது. இது போதாதா எதிர்க்கட்சிகளுக்கு?



அதே நேரத்தில் உள்நாட்டில், கார்ட்டரின் பொருளாதார மேலாண்மை பரவலான கவலையைத் தூண்டியது. 1970களின் முற்பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் மீது நாடு அதிகமாகச் சார்ந்திருந்ததன் விளைவாக உருவான எரிசக்தி நெருக்கடியின் காரணமாகப் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. 1977ஆம் ஆண்டில், எண்ணெய் நிறுவனங்கள் மீதிருந்த அவநம்பிக்கை காரணமாக எண்ணெய் வரி, பாதுகாப்பு மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆற்றல் திட்டத்தை முன்மொழிந்தார் கார்ட்டர். ‘ஹவுஸ்’ திட்டத்தை ஆதரித்தாலும் ‘செனட்’ அதை ரத்து செய்தது. மேலும், மார்ச் 1979ல் பென்சில்வேனியாவின் ‘த்ரீ மைல் ஐலண்ட்’ல் உள்ள மைய உலையின் பேரழிவுகரமான நிகழ்விற்குப் பிறகு, மாற்று ஆதாரங்களில் ஒன்றான அணுசக்தி மிகவும் குறைவான சாத்தியமானதாகத் தோன்றியது.

அவர் பதவியிலிருந்த ஒவ்வொரு ஆண்டும் பணவீக்க விகிதம் அதிகமாக உயர்ந்தது. தொடர்ந்து வேலையின்மை 7.5 சதவிகிதமாக உயர, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிபரிடம் ஒத்திசைவான உத்திகள் எதுவுமில்லை என்று வணிகத் தலைவர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.

1980ல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் மாசசூசெட்ஸ் செனட்டர் ‘எட்வர்ட் கென்னடி’யைத் தோற்கடித்தாலும் அவரின் நிர்வாகத் திறன்களில் பொதுமக்களின் நம்பிக்கை மீள முடியாத அளவிற்குக் குறைந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த விஷயத்திலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாதவராகக் காணப்பட்டார்.

அரசாங்கத்தின் மீதான அமெரிக்காவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் முக்கிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்று கார்ட்டர் வெகுவாக நம்பினார். இரண்டு விஷயங்களிலும் அவர் பெரும் தோல்வியடைந்தார்.

அந்த வருட நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் நடிகரும் கலிபோர்னியாவின் ஆளுநருமான ரொனால்ட் டபிள்யூ. ரீகனால் தோற்கடிக்கப்பட்டார். ரீகன் மக்களிடம் கேட்ட, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நீங்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறீர்களா? அமெரிக்கா உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறதா?” என்ற இரு கேள்விகள் மட்டுமே கார்ட்டரின் தோல்விக்குப் போதுமானதாக இருந்தது.(எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதல்லவா? அன்று முதல் இன்றுவரை வார்த்தைகள் மாறவில்லை. அரசியல்ல இதெல்லாம்…) ரீகன் பதவியேற்ற மறுநாள் ஜனவரி 21,1981 அன்று ஜெர்மனியில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்!

தனது பதவிக்காலம் முடியும் தறுவாயில் ​​கைவிடப்பட்ட நச்சுக் கழிவுகளை சுத்தம் செய்ய பெரும் நிதியை ஒதுக்கவும் அலாஸ்காவில் சுமார் 100 மில்லியன் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும் வலுவான சட்டங்களை இயற்றி நிறைவேற்றினார். முதன்முதலாக அதிகளவில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை அமைச்சரவையில் சேர்த்த பெருமையும் இவருக்கு உண்டு.

பதவிக்காலம் முடிந்ததும், கார்ட்டர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். அதிபரின் ஆலோசகராகச் செயல்பட்டது மட்டுமின்றி அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் முதல் பெண்மணியாக இருந்த ரோசலின் கார்ட்டர், அட்லாண்டாவில் நூலகம், அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய ‘கார்ட்டர் பிரசிடென்சியல் மைய’த்தை நிறுவுவதில் கணவருடன் இணைந்து பணியாற்றினார்.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்ட நாடுகளில் தூதராக அமைதியை நிலைநாட்டும் பணியாற்றி நற்செயல்கள் பலவும் புரிந்தார் கார்ட்டர். ‘மிஸ்கிடோ’ இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதை ஊக்குவித்தது, பனாமாவில் நடந்த சட்டவிரோத வாக்களிப்பு நடைமுறைகளைக் கவனித்து அறிக்கை வெளியிட்டது, எத்தியோப்பியா நாட்டில் போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, 1994ல் அணு ஆயுத வளர்ச்சியை நிறுத்த வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, ‘ஹெய்ட்டி’யில் அமைதியான அதிகார பரிமாற்றம் நடைபெற வழிவகுத்தது, போஸ்னிய செர்பியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே குறுகிய கால போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியது என்று சர்வதேச அமைதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அதிக கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. மேலும், ‘மனித நேயத்திற்கான வாழ்வாதாரம்'(Habitat for Humanity) மூலம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதில் அவருடைய பங்களிப்பு அதிபராக இருந்த காலத்தை விட நற்பெயரைப் பெற்றுத் தந்து அமெரிக்க அதிபர்களில் சிறந்த மனிதராக அவரை உயர்த்தியது. பதவியை விட்டு வெளியேறிய பிறகு, பல்வேறு தலைப்புகளில் 32 புத்தகங்கள் எழுதி ஒரு சிறந்த எழுத்தாளராகவும் ஆனார்.

பல தசாப்தங்களாக சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், ஜனநாயகம்,மனித உரிமைகள், பொருளாதாரம், சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அயராது முயன்றதற்காக 2002ம் வருட அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு வழங்கப்பட்டது.

ஜூலை 7, 2023 அன்று தங்கள் 77வது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடி, அமெரிக்க வரலாற்றில் “மிக நீண்ட திருமணமான அதிபர் ஜோடி” என்ற பெருமையையும் பெற்றனர் கார்ட்டர் தம்பதியினர். சில மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 19, 2023 அன்று 96வது வயதில் ரோசலின் இறந்தார்.

நூறு வயது வரை வாழ்ந்து ‘நீண்டகாலம் வாழ்ந்த அதிபர்’ என்ற பெருமையுடன் டிசம்பர் 29, 2024 அன்று உயிர்நீத்தவரின் உடல் அவர் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து அட்லாண்டா நோக்கி (ஜனவரி 4, 2025) சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

“அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன்னை நினைவு கூர்ந்தால் அதிகம் மகிழ்வேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கார்ட்டர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் உலக அமைதிக்காகவும் நேர்மையாக, நம்பிக்கையுடன் உழைத்த சொல்லின் செயலருக்கு என்னுடைய பணிவான அஞ்சலிகள்.

“I have one life and one chance to make it count for something. I’m free to choose that something. That something—the something that I’ve chosen—is my faith. My faith demands that I do whatever I can, wherever I can, whenever I can, for as long as I can with whatever I have, to try to make a difference.”

-Jimmy Carter

No comments:

Post a Comment

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...