சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை.
நியூயார்க் நகரில் அரசியல் பரிணாமமா? – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூலை 2025
அதிக மக்கள்தொகையும் பன்முகத்தன்மையும் கொண்ட பெருநகரங்களில் அழகான நியூயார்க் நகரமும் ஒன்று. 180க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நகரத்தில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மேயர் தேர்தல் தான் தற்போதைய பேச்சுக்களமாக மாறியுள்ளது. இதில் 33 வயது இந்திய வம்சாவளி, “ஜனநாயக சோஷியலிஸ்ட்” ஜோரான் மம்தானி என்ற புதிய முன்னணி வேட்பாளர் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். உகாண்டாவில் பிறந்து தென்னாப்பிரிக்காவில் சில வருடங்கள் இருந்தபின் அவருடைய எட்டாவது வயதில் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். இவருடைய தாய் பிரபலமான திரைப்பட இயக்குனர் மீரா நாயர். தந்தை, புகழ்பெற்ற கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.

2014-ஆம் ஆண்டு ‘மெயின்’ மாநிலத்தில் உள்ள போடென் கல்லூரியில் ‘African Studies’ல் பட்டம் பெற்றுள்ளார் ஜோரான் மம்தானி. கல்லூரியில் ‘Students for Justice in Palestine (SJP)’ன் கிளையை நிறுவியதன் மூலம் மாணவர்களிடையே அரசியல் ஆர்வத்தை வளர்த்துள்ளார். SJP என்பது பாலஸ்தீன மனித உரிமைகளுக்கான ஆதரவை அளிக்க 1993 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்ளீ பல்கலையில் நிறுவப்பட்ட தேசிய அளவிலான மாணவர் இயக்கமாகும். மேலும், இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடை, அழுத்தங்களை ஊக்குவிக்கும் BDS இயக்கத்திற்கும் (Boycott, Divestment, and Sanctions) இந்த இயக்கம் ஆதரவளிக்கிறது. கல்லூரி மையங்களில் விரிவுரைகள், கண்டன நிகழ்ச்சிகளை நடத்தவும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான/இஸ்ரேல் ஆதரவு நிலைகொண்ட நிறுவனங்களுடனான பல்கலைக்கழகத் தொடர்புகளை எதிர்த்து நிற்பதும் இந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளாகும். போடென் கல்லூரியில் மாணவர்களிடையே பாலஸ்தீன வரலாற்றைக் கற்பித்துப் போராட்டங்கள் நடத்துதல், பேச்சாளார்கள், திரைப்படங்கள் மூலமாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒன்றிணைப்பதைக் கொள்கைகளாகச் செயல்படுத்தினார் மம்தானி.
உரையாடல்களின் மூலம் சமுதாயத்தை இணைக்க முடியும் என்ற அனுபவமே அவரின் அரசியல் விழிப்புணர்வாக மாறியுள்ளது. பின் குயின்சில் வீடு பாதுகாப்பு ஆலோசகராக ஒரு சமூக அமைப்பில் பணியாற்றியுள்ளார். குறைந்த வருமானம் கொண்டவர்கள் வீடுகளை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும் விதமாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், சட்ட ஆலோசனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அங்கே கண்ட காட்சிகள் மூலம் சமூக நீதி, வீட்டு உரிமை போன்ற பொதுமக்கள் பிரச்சினைகளில் ஆர்வம் காட்ட, அதுவே அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுள்ளது. மேலும் பல முன்னேற்ற ஜனநாயக தேர்தல் பிரச்சாரங்களிலும் பங்கேற்றுள்ளார்.
“Mr.Cardamom” என்ற பெயரில் ஹிப்-ஹாப் பாடல்கள் மூலம் நியூயார்க் நகர தெற்காசிய சமூகத்தின் வாழ்வியல், அரசியல் நிலை, சமூக நீதியைப் பற்றியும் பாடியுள்ளார்.
2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஜூன் 2020ல் நியூயார்க் மாநில சட்டமன்றம் – 36வது மாவட்டம்(ஆசியர்கள் அதிகம் வசிக்கும் அஸ்டோரியா, குயின்ஸ் பகுதிகள்) சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, 5 முறை வெற்றிபெற்ற முன்னணி சட்டமன்ற உறுப்பினர் அரவேல்லா சிமோடாஸ் என்பவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மிகக் குறைந்த வாக்குகள் வேறுபாடு தான் ஆனால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய வெற்றி அது. நவம்பர் 3, 2020 பொதுத் தேர்தலில் எதிர்ப்பு இல்லாமல் (unopposed) வெற்றி பெற்றார் மம்தானி.
புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக, புதிய பணிக்கு அடித்தளமாக அமைந்தது இவருடைய அரசியல் பிரவேசம். ஒத்த கொள்கைகள் கொண்ட பெர்னி சாண்டர்ஸ், AOC (அலெக்சாண்ட்ரியா ஓகாசியோ கோர்டெஸ்), NYC-DSA போன்றவர்களின் ஆதரவும் மாற்றத்தை விரும்பிய சாதாரண மக்களின் ஆதரவுகளும் இவரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின.
நியூயார்க் சிட்டி DSA (NYC DSA) -நியூயார்க் நகரின் ‘டெமோகிராடிக் சோஷலிஸ்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பின் கிளை. மக்களால் நடத்தப்படும் லாப நோக்கமற்ற மிகப்பெரிய சோஷலிஸ்ட் அமைப்பாகும். பணமும் அதிகாரமும் சிலரிடம் மட்டும் நிலைநாட்டப்படாமல், எல்லா மக்களும் சமத்துவமாக வாழும் ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட் சமுதாயத்தை உருவாக்குவதே இதன் கொள்கையாகும்.
இதனால் 2022, 2024 சட்டமன்ற தேர்தல்களிலும் எதிர்ப்பு வேட்பாளர்களே இல்லாமல் மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பில் 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களைக் கொண்டுவந்தார். அதில் மூன்று மட்டுமே சட்டங்களாக வெளிவந்தன.
தீபாவளி பண்டிகையை நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறையாக அறிவித்தது இந்துக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிறையிலிருந்து வெளிவந்த குற்றவாளிகளின் தண்டனைகளைப் பொதுப்பார்வைக்கு கொண்டு வராமல் தானாக மூடப்படும் சட்டம் (auto-sealing of old convictions), அதாவது ஒருவர் குற்றம் செய்த பின், தண்டனை முடிந்து பல ஆண்டுகள் சீரான வாழ்க்கை நடத்தினால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொதுமக்களின் பார்வைக்கு வராத வகையில் மூடப்பட்டுவிடும். பொதுமக்கள், வீட்டு வாடகையாளர்கள், வேலை வழங்குநர்கள் அதைப் பார்க்க முடியாது. ஆனால் காவல்துறையும் நீதிமன்றமும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பார்த்துக் கொள்ளலாம். பழைய குற்றம் காரணமாக வேலை, வீடு, கல்வி வாய்ப்புகள் தடைபடுவதை இச்சட்டம் தவிர்க்கிறது. குற்றவாளிகளுக்கும் ஒரு புதிய வாழ்க்கைத் துவக்கத்தை அளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான நீதி என்பது பலத்த அரசியல் பின்னணி கொண்டதால் இச்சட்டம் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. வரவேற்கப்பட வேண்டிய சட்டம்.
மூன்றாவதாக, ஆசியர்களுக்கும் பசிஃபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கான ஆணையத்தை நிறுவும் சட்டம். நியூயார்க் நகரத்தில் (NYC) மிக வேகமாக வளர்ந்து வளரும் இனக்குழுக்களில் ஆசியர்களும் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த பூர்வக்குடிகளும் அடங்குவர். 50க்கும் மேற்பட்ட தனித்துவமான இனக்குழுக்கள் 100க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால் சமீப காலமாக அவர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறை தாக்குதல்கள், அரசியலிலும் நிர்வாகத்திலும் இருக்கும் குறைந்த பிரதிநிதித்துவம், மொழி தடைகள், குறைந்த வருமானம் இவற்றை கவனத்தில் கொண்டு, ஆசியர்களுக்கும் பசிஃபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கான ஆணையத்தை (NYS AAPI commission – New York State Asian American and Pacific Islander Commission) சட்டபூர்வமாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.
நகர கவுன்சிலராக, குறைந்த வருமான குடும்பங்களுக்கு வசதியான வீடு வழங்கவும் நகர விரிவாக்கத்தால் வீடுகளை இழக்கும் நிலையைத் தடுப்பதற்கும் சட்டமன்ற முயற்சிகளை எடுத்துள்ளார். காவல்துறை சீர்திருத்தம், சமூக பாதுகாப்பு, பசுமை சார்ந்த திட்டங்கள், அகதிகள்,குடிவரவு சமுதாயங்களுக்கான உதவிகள், குறைந்த சம்பள ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் இயக்கத்திற்கு ஆதரவு என்று சமூக நீதி, சமத்துவம், சமூக அதிகாரத்தை உயர்த்தும் நோக்கில் பணியாற்றியுள்ளார்.
தற்பொழுது நியூயார்க் நகரை செல்வந்தர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த நியூயார்க் மேயர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறியுள்ளார். குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும் பெரும் ஆதரவாக இருக்கும் பின்வரும் தேர்தல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நகரத்தில் வாழ்பவர்களின் வருமானத்தின் பெரும்பங்கு வீட்டு வாடகைக்கும் போக்குவரத்திற்கும் செலவிடப்படுவதால் இலவச பேருந்துப் பயணம், வீட்டு வாடகையை நிர்ணயித்து எளியவர்களின் வாடகைச்சுமையைக் குறைப்பது,
குழந்தை பராமரிப்பிற்கான செலவுகளைக் குறைக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பராமரிப்பு,
குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வழங்க அரசு நடத்தும் மளிகைக்கடைகள்,
குறைந்தபட்ச சம்பள உயர்வு, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர் சங்கங்களுக்கு ஆதரவு.
வாக்காளர்கள் மனதைக்கவரும் இந்தத் திட்டங்களை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா? அரசின் நிதிநிலைமை பெரும் தள்ளாட்டத்தில் இருக்கும் பொழுது அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை ஓட்டிற்காக மக்களை ஏமாற்றவே சொல்கிறார் என்று இவரை எதிர்ப்பவர்கள் கூறி வருகிறார்கள். பல திட்டங்களுக்கு நகர கவுன்சில், மாநில சட்டமன்ற ஒப்புதல்கள் தேவை.
கட்டணமில்லாத பேருந்து பயணத்திற்கு மாநில ஆதரவு தேவை. மேயருக்கு நேரடி அதிகாரம் இல்லை. கூடுதலான செலவுகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு கவுன்சிலில் கூட ஆதரவு இல்லாத பொழுது இவருடைய திட்டங்கள் எப்படி சாத்தியப்படும்?
வாடகையை நிர்மாணிப்பது, வீடு வெளியேற்ற தடுப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது அத்தனை எளிதில் நடந்து விடுமா? வீடுகள் நகராட்சியின் அதிகாரத்தில் உள்ள விஷயம்.
இலவச குழந்தை பராமரிப்பிற்கு பில்லியன்கள் தேவை. நியூயார்க் நகர அரசின் தற்போதைய நிதிநிலைமை இதற்குப் போதாது. மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும். மாநிலத்தில் உள்ள மற்ற நகரங்களின் நிலைமை?
குறைந்த விலையில் பொருட்களை விற்கும் அரசு மளிகைக்கடைகள் தொடங்க புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். தனியார் மளிகை நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கும். இப்பொழுதே பலரும் மம்தானி வெற்றி பெற்றால் ஊரை விட்டுச் செல்லவேண்டியது தான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவருடைய தேர்தல் திட்டங்கள் அனைத்தும் பெரிய அளவிலான திட்டங்கள் என்பதால் திட்டமிடல், ஊழியர் நியமனம், கண்காணிப்பு என்ற பல நிர்வாகப் பணிகள் தேவை. ஆனால் மந்தமான நிர்வாக நகரம் என்று பெயரெடுத்த நியூயார்க் நகரத்தில் இவையெல்லாம் எவ்வாறு சாத்தியப்படக்கூடும்?
காவல்துறைக்கு செலவிடப்படும் அதிக நிதி, பயனற்ற திட்டச்செலவுகளைக் குறைத்து சமூக நலத்திட்டங்களுக்கு மாற்றியமைப்பது என்பது ஒவ்வொரு நாளும் பெருகி வரும் அகதிகளின் எண்ணிக்கையும் குற்றங்கள் நிரம்பிவழியும் நகரத்தில் பயனளிக்குமா? நகர கவுன்சில் ஒப்புதல் அளிக்குமா?
மம்தானியின் திட்டமோ செல்வந்தர்கள், பெரும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பது. நியூயார்க் நகரம் தனியாக வரிகளை உயர்த்த முடியாது. மாநில சட்டமன்ற ஒப்புதல் தேவை. இதற்குப் பணக்காரர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். செல்வந்தர்களின் தயவில் ஆட்சி நடக்கும் அமெரிக்காவில் இது சாத்தியமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி! நகர கவுன்சிலும் மாநில சட்டமன்றமும் புரோகிரெஸ்ஸிவ் ஆக மாற வேண்டும். பொதுமக்கள் ஆதரவு பெரிதாக உருவாக வேண்டும்.
மம்தானியின் புரட்சிகரமான திட்டங்கள் மிகைப்படுத்தப்பட்ட மாதிரி இருந்தாலும் அதில் 50% நிறைவேறினால் கூட, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக அவர் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் வாக்களிக்கத் தான் போகிறார்கள்.
குடிவரவு சமூக இயக்கங்களும் (DRUMBeats, CAAAV Voice, NewYork Communities for Change) , தெற்காசிய முஸ்லீம் சமூகங்களும்(50,000+), பல தொழிற்சங்கங்களும், இளம் தொழிலாளர்களும் ஆதரவு அளித்து வெற்றி பெற உதவி வருகின்றனர். பெரும்நிதி ஆதரவும் இவருக்கு கிடைத்துள்ளது.
லிபரல் யூத- பாலஸ்தீன ஆதரவு கூட்டணி இவரது வெற்றியை உறுதிப்படுத்தி இருப்பதும் இவருடைய இஸ்லாமிய பின்புலமும் பலரின் அச்சத்திற்கும் காரணமாகியிருக்கிறது. இவர் தன்னை இஸ்லாமியனாக காட்டிக்கொள்ளா விட்டாலும் உலகெங்கும் பரவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதம் இவர் மூலம் நகருக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. இவர் பங்கேற்ற போராட்டங்களின் நிலைப்பாடுகள், SJP, BDS கொள்கைகள் நாட்டிற்கு எதிராக திரும்பிவிடுமோ? தற்பொழுது LGBTQவிற்கு ஆதரவாக இருப்பவர் வெற்றி பெற்ற பின் தான் சார்ந்த மதத்தினருக்கு ஆதரவாக மாறிவிடுவாரோ?
LGBTQ சமூகங்களுக்கு ஆதரவு கொடுப்பதால் அவர்களும் இவருக்குப் பேராதரவு அளித்துள்ளனர். அவர்களுடனான ஒரு கூட்டத்தில் இஸ்லாமியப் பெண்மணி ஒருவர், “நீ இஸ்லாமியன் தானா? குரான் படித்திருக்கிறாயா? படித்திருந்தால் இவர்களுக்கு ஆதரவாக எப்படி இருக்க முடியும்” என்று கத்திக் கூப்பாடு போடுகிறார். இது அரசியல் நாடகமா? ஒன்றும் புரியவில்லை?
இந்தியா, பிரதமர் மோடி, குஜராத்தில் வாழும் இஸ்லாமியர்களைப் பற்றி பொதுவில் பொய்களைத் தயங்காமல் அள்ளிவீசிய இவரை எந்த அளவில் நம்புவது? இஸ்ரேல் பிரதமர் நியூயார்க் நகரத்தில் கால் வைத்தால் சிறைபிடிப்பேன் என்று கொக்கரிக்கிறார். முதலில் நகர மேயருக்கு வெளிநாட்டுப் பிரதமரை கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது? யாரை ஏமாற்ற வெற்று வார்த்தைகளை வீசுகிறார்?
இது தான், இவருடைய தீவிரமான கொள்கைகளே தான் இவர் மீது விமரிசனங்களையும் வைக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது யார் திட்டச்செலவுகளை ஏற்கப்போகிறார்கள் என்பதே பொதுவான மக்களின் கேள்வியாக உள்ளது. மம்தானி ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் நகர நிர்வாக அனுபவம் இல்லை. இதனால் இவருடைய பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இவர் “டெமோகிராடிக் சோஷியலிஸ்ட்” என்பதால் நடுத்தர ஜனநாயகவாதிகளையும் நடுநிலைவாதிகளின் ஆதரவுகளையும் இழக்கிறார். இவருடைய தீவிர பாலஸ்தீன ஆதரவால் இஸ்ரேல் ஆதரவு கொண்ட குழுக்களில் விமரிசனங்கள் எழுந்துள்ளது. இவருடைய சமரசமற்ற போக்கினால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.
“நீங்கள் யார்? யாரை நேசிக்கிறீர்கள்? உங்கள் இனம், பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் இந்த நகரம் உங்கள் நகரமாக இருக்க வேண்டும்” என்று கூறிய மம்தானி மாற்றத்தை விரும்பும் வேட்பாளராக நம்பிக்கையின் புதிய குரலாக இருந்தாலும் பலருக்கு கேள்விக்குறியாகவும் நிரூபிக்கப்படாத கனவாகவும் இருக்கிறார் என்பதே உண்மை.
அவரது திட்டங்கள் நிறைவேறுமோ இல்லையோ மக்களின் பிரச்சினைகளைப் பேசி ஒதுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இவரை எதிர்த்து நிற்பவர்களுக்குச் சவாலாக, உடைந்த வாக்குறுதிகளால் சிதைந்த நகர அரசியலில் புதிய மாற்றத்திற்கான தடத்தைப் பதித்துள்ளார்.
வெற்றி பெற்றால் அனைத்து மக்களின் தலைவராக, அமெரிக்கராக, செயல் வீரராக இருப்பாரா?
No comments:
Post a Comment