Saturday, May 30, 2015

ரசம் - நேசம்- பாசம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் சூப் மாதிரி இருக்கே என்ன இது என்று கேட்டதற்கு, எலுமிச்சம்பழ ரசம், டேஸ்ட் பண்ணி பாருங்க என்றதும், அட, ஆமா, டேஸ்ட்டா இருக்கு! இஞ்சி வாசம் வருதே? ஆமா, இஞ்சி துருவி போட்ருக்கோம்ல என்றார்கள். வித்தியாசமான சுவையுடன் இருந்தது. அதையொட்டி சில தினங்களில், முகநூல் சாப்பாட்டு குரூப்பில் அந்த ரசத்தை ஒருவர் குறிப்பிட்டிருந்தார். விடுவேனா??? ரெசிபி ப்ளீஸ்! என்றவுடன் விரிவாக எழுதியிருந்தார்.

இந்த வாரம் ட்ரை பண்ணிட வேண்டியது தான் என்று அந்த வாரமே செய்து பார்த்ததில் மிகவும் திருப்தியாக வந்திருந்தது. கணவரும், 'ஆஹோ ஓஹோ' வென்று (வேற வழி !) மெச்சி சாப்பிட்டார். மிகவும் எளிதான குறிப்பு. கொஞ்ச நாளைக்கு இந்த ரசம் பண்ணிட வேண்டியது தான்.

மகனிடம், பருப்புக்கீரை தீர்ந்து விட்டது. ரசஞ்சோறு சாப்பிட சொன்னால், எனக்கு அது வேண்டாம்மா என்றான். ரசஞ்சோறு வேண்டாமா?? நானெல்லாம் அடிச்சு பிடிச்சு ரசிச்சு சாப்பிட்டதை இப்படி வேண்டாம் என்கிறானே என்ன பசங்க?

என் அம்மா ரசம் வைப்பதை வேடிக்கை பார்க்கவே நன்றாக இருக்கும். வீட்டில் பருப்புடன் கூடிய ரசம், பருப்பு இல்லாத ரசம் என்று இரு வகை ரசம் வைப்பார்கள். பருப்பு இல்லாத ரசம் ஈஸி ரசம். புளியை கரைத்து ஒரு கொதி வந்தவுடன், பூண்டு தட்டிப் போட்டு, ரசப்பவுடர் , உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி விடுவார்கள். அதில் தாளிப்பு தான் சுவையை கூட்டும். நெய்யில் கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை போட்டு, கரைத்து வைத்த பெருங்காயத் தண்ணீரை கொஞ்சம் சேர்த்தவுடன், 'சொய்ங்ங்ங்ங்' சத்தமும், பெருங்காய வாசமும், மேலே மிதக்கும் கொத்தமல்லி வாசமும் ...உறங்கிக் கொண்டிருக்கும் பசியை உறும வைத்து விடும்.

ரசம் சோற்றுக்கு சாதம் கொஞ்சம் குழைவா இருக்கணும். அதோடு  நல்லா ரசத்தை ஊத்தி ரசமும், சோறும் ஒண்ணு மண்ணா கலந்து அதோட எந்த காம்பினேஷன் நல்லா இருக்கும்னா ,
சுக்கா வறுவல் - ஐயோ! எவ்வளவு சோறு சாப்பிட்டோம்னே தெரியாது.
மீன் வறுவல் - ஆஹா!!
கருவாடு - வாரே வா!
உப்புக்கண்டம் - நோ சான்ஸ் !
தேங்காயும், மட்டனும், சின்ன வெங்காயமும் சேர்த்து வேக வைத்தது - அடடா!!
பருப்பு வடை - ம்ம்ம்ம்ம்
கொலுவிஞ்சிக்காய் ஊறுகாய் (இரவு நேர சாப்பாட்டிற்கு ஐடியல் )
பொரிச்ச அப்பளம் -ஓகே
உருளைக்கிழங்கு கார வறுவல் கூட நல்லா தான் இருக்கும்.
பட்டாணி மசால்
கருப்பு சுண்டல் மசால்
பட்டர்பீன்ஸ் மசால்
காராபூந்தி
எண்ணையில் வறுத்த கடலை
பக்கோடா
எல்லாமே அம்சமா தான் இருக்கும்.

இப்ப மைசூர் ரசம், மிளகு ரசம், மல்லி ரசம்,  பைன்-ஆப்பிள் ரசம்னு விதம்விதமா தசாவதாரம் எடுத்து வந்தாலும், இந்த காலத்துப் பசங்களுக்கு தெரியலையே இதோட அருமை.

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா அம்மா கையால பிசைஞ்ச சாதம் உருட்டி உருட்டி கொடுத்தா, வயிறு ரொம்பி கழுத்து வரைக்கும் வந்து முட்ற அளவுக்குத் திருப்தியா சாப்பிடறது தான்!

அந்த புளிப்பு ரசம் ...ம்ம்ம்ம்...இப்ப அப்படியே குடிப்பேனே ரேஞ்சில வந்து நிக்குது.




Sunday, May 10, 2015

மதுரை-இராமேஸ்வரம் 2

பல வருடங்களுக்கு முன் பாட்டியுடன் ஒரு முறையும், பள்ளிச்சுற்றுலாவாகவும் இராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் .  இந்த முறை நாங்கள் சென்ற நாளிலும் நல்ல கூட்டம்! பெயர் பெற்ற ஸ்தலம் அல்லவா?

ஊரிலிருந்து கிளம்பும் போதே தீர்த்தங்களில் மகளும், நானும் நீராடுவதில்லை. தலையில் மட்டும் தண்ணீர் தெளித்துக் கொள்வது என்று முடிவு செய்திருந்தோம். அன்று பார்த்து ஆடி அமாவாசையோ ஏதோ என்று சொல்லி எல்லா தீர்த்தக் கிணறுகளையும் மூடி விட்டதில் கணவருக்கு கொஞ்சம் வருத்தம்!


கடற்கரையோரம் மண்டபகங்களை  அழகாக கட்டி படிகள் சுத்தமாக இருந்தாலும், இல்லாத ஜலகண்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டு தண்ணீருக்குள் காலை விட பயமாகத் தான் இருந்தது. 'தளுக் தளுக்'  என்று கரையை தொட்டுச் செல்லும் அலைகள் பார்ப்பதற்கு இன்பம் தான். வெயிலில் கடல் நீர் மின்னியது வேறு மிகவும் நன்றாக இருந்தது. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று கடல் நீரில் காலை அலம்பி விட்டு வந்தோம்.

கோவிலுக்கெதிரில் இறந்தவர்களுக்கு திவசம் செய்வதை தடை செய்திருக்கிறார்கள். அதனால் துணி, மாலைகள் இன்ன பிற திவச பொருட்கள் நீரில் மிதக்காமல் இருந்தது.

கோவிலுக்குள் சென்றவுடன் அங்கிருந்த பட்டர் ஒருவர் சந்நிதி மூடப்பட்டுள்ளது என்றும், சுவாமியை பார்க்க வேண்டுமென்றால் ராமர் பாதம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னார். சரி,பிரகாரங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கோவில் முழுவதும் சிற்பங்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபங்களை வலம் வந்தோம். என்ன ஒரு நேர்த்தியான வேலைப்பாடு! பெரிய பிரகாரங்களும் கூட!

நாங்கள் சென்றிருந்த பொழுது சுற்றுப் பிரகாரங்களுக்கு வண்ணம் அடித்துக் கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள்ளும் சிறிது கூட்டம் இருந்தது. வட மாநிலத்து மக்கள் நிறைய தெரிந்தார்கள். கோவிலைச் சுற்றி வெளியூர்களில் இருந்து மக்கள் தங்கிச் செல்லும் வகையில் வட நாட்டவர் சத்திரங்கள் பல இருந்தது. ஹோட்டல் ஒன்றில் காபி என்று ஒன்றை குடித்து விட்டு அருகில் இருந்த கடைகளுக்குச் சென்றோம்.

செல்வி ஸ்படிகமணிமாலை வாங்க அதை தேடிக் கொண்டிருந்தார். சங்கு, பாசிமணிகள், வீட்டு அலங்காரப்பொருட்கள் என்று பலவும் விற்றுக் கொண்டிக்க, சங்குகளில் பெயர் எழுதியும் விற்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அனைவரும் எங்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய சங்குகளில் பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டோம். அதில் சில மணி நேரங்கள் கழிந்தது. அனைத்து அமெரிக்க நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த பரிசாக அமைந்து விட்டதில் எனக்குத் திருப்தியும் கூட!

பிறகு ராமர் பாதம் சென்றோம். அங்கு சுவாமியை தரிசிக்க வந்த கூட்டம் நிறைய இருந்தது. அழகிய பல்லக்கில் வீற்றிருந்த சுவாமியையும், தாயாரையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் கோவிலைச் சுற்றிப் பார்த்தோம். படிகளில் ஏறி அங்கிருந்து கடலை பார்க்க கொள்ளை அழகு.

தனுஷ்கோடி செல்ல அங்கிருந்து கிளம்பினோம். ஏற்கெனவே அங்கு சென்று வந்த அனுபவத்தை கணவர் கூறி இருந்ததால் குழந்தைகளும் ஆவலுடன் இருந்தார்கள். உறங்கிக் கொண்டிருந்த ஊரையே சூறாவளி  முழுங்கிக் கொண்டது என்று படித்திருந்ததால் வருத்தமாகவும், ஊரை பார்க்க ஆர்வமாகவும் இருந்தது. அங்கு செல்வதற்கு முறையான சாலைகள் இல்லை. ஓரிடத்தில் பஸ்களும், வேன்களும், கார்களும் நிறுத்தியிருந்தார்கள்.

அங்கிருந்து தனுஷ்கோடி செல்ல அதற்கென சில மீன்பாடி வண்டிகள் வைத்திருக்கிறார்கள். ரிஸ்க் எடுத்துக் கொண்டு சொந்த வண்டியில் கூட போகலாம். நடுவில் கடல் மண் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது என்று பீதியை கிளப்பி விட, அநியாய விலை கொடுத்து அந்த வண்டிக்குள் ஏறி விட்டோம். முருகனுக்கோ அதில் ஏற இஷ்டமே இல்லை. லாரி என்றால் கூட எங்களுக்கு ஓகே. எல்லாம் ஒரு அனுபவம் தான். நம்மை விட குழந்தைகள் நன்கு அனுபவிப்பார்கள். ஏறுங்கள் என்று சொல்லி ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து ஏற்றினோம். பயந்து கொண்டே தான் ஏறினார். பெண்கள் அனைவருக்கும் சீட் கிடைத்து விட்டது. என் கணவருக்கோ வண்டியின் பின்னால் நின்று கொண்டு வருவதில் அப்படி ஒரு ஆனந்தம்!

பாவம், ஒரு நடுத்தர வயதுள்ள அம்மாவால் ஏறக் கூட முடியவில்லை. படி போன்ற வசதிகளும் கிடையாது. இரண்டு பேர் சேர்ந்து அவரை தூக்கி விட்டார்கள்.

இப்படி ஒரு வண்டியில், அதுவும் சகதியில் மேலும் கீழும் தூக்கிப் போட்டுக் கொண்டே சென்றது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் தான். சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. நடுவில் ஓரிடத்தில் சேற்றில் சக்கரங்கள் மாட்டிக் கொண்டு விட்டது. இப்படியே புதைந்து விடுமோ என்ற பயம் கூட வந்து விட்டது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஊருக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சீக்கிரம் சுற்றிப் பார்த்து வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டார் டிரைவர்.

சிதிலமடைந்த கோவில், வீடுகள், தேவாலயம்...எத்தனை உயிர்கள் இழந்தனவோ அந்த சுனாமியால்?? எத்தகைய கொடூரமான ஒரு நிகழ்வு! அங்கு நின்றிருந்த அந்த நொடிப் பொழுதில்  இருண்ட இரவின் கொடூரத் தாண்டவத்தை கற்பனை செய்ய, மனம் கனத்தது.

தொலைவில் ஒரு பூசாரி சிவனை வைத்து பூஜை செய்து கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு பெண், பாசி மணி மாலைகள் விற்றுக் கொண்டிருந்தார். சிலர், திவச பூஜைகளும் செய்து கொண்டிருந்தார்கள்.

வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் இரு வேறு நிறத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றியது. சிறிது நேரம் அலைகளுடன் குழந்தைகள் நடந்து விளையாடினார்கள். சிலர் அந்தப் பக்கம் தான் ஸ்ரீலங்கா இருக்கு என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

எவ்வளவு அழகான கடல்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் கடல் மட்டுமே! ஆரவார அலைகளுக்குப் பின்னால் இருப்பது அமைதியா?? பேரழிவைச் சுமந்த உயிர்களா? எண்ணங்களா??அமைதியாக கிளம்பினோம்.

காரில் ஏறி ராமநாதபுரத்தில் இரவு உணவவைச் சாப்பிடுவது என்று தீர்மானித்து கிளம்பி விட்டோம். போகும் வழியில் டிரைவர் இங்க ஒரு அருமையான பெருமாள் கோவில் இருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, பார்த்துட்டு போயிடுங்க என்றார். அப்போதே நேரம் எட்டு மணிக்கு மேல் இருக்கும். எப்படியும் போய்ச் சேர இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகி விடும். குழந்தைகளோ பசிக்குது பாட்டை அப்போதே பாட ஆரம்பித்திருந்தார்கள் வானம் வேறு சிணுங்கிக் கொண்டிருந்தது. சரி, கோவிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்து முருகனுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது.

திருப்புல்லாணியில் இருக்கும் ஆதி ஜகன்னாத பெருமாள் கோவில் மூடப்போகும் நேரத்திற்கு உள்ளே நுழைந்தோம். 108 திவ்யதேசங்களில் ஒன்று என்று பட்டர் கூற, அழகான கரிய பெருமாள், தாயார் லக்ஷ்மியை சேவித்து விட்டு வந்தோம். இரவில் சென்றதாலும், நேரமின்மையாலும் கோவிலை முழுமையாக சுற்றிப் பார்க்க முடியவில்லை. சாவகாசமாக ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பிரசாதமாக சுவையான காரமான புளியோதரையும் சிறிது கிடைத்தது. அது பசியை மேலும் கிளப்பி விட, ஹோட்டலுக்குச் சென்று திருப்தியாக சாப்பிட்டு வந்தோம். இவ்வளவு லேட்டாக வந்து இப்படி சாப்பிடுகிறார்களே என்று சர்வர் நினைத்திருப்பார்.

இரவு உணவு எதுவும் வேண்டாம் தூக்கம் வந்து விடும் என்று டிரைவர் வெறும் காபி மட்டுமே சாப்பிட்டார். வண்டியில் ஏறியவுடன் என்னைத் தவிர எல்லோரும் உறங்கி விட, தூக்க கலக்கத்துடன் இருந்த டிரைவர் தூங்காமல் ஓட்டுகிறாரா என்று நடுநடுவே அவரிடம் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டே வீடு  வந்து சேர்ந்தோம்.



படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா & முருகன்
















































Friday, April 10, 2015

மதுரை - இராமேஸ்வரம் 1

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் 

ஊருக்குச் சென்றிருந்த பொழுது குழந்தைகளுடன் இராமேஸ்வரத்திற்கும், தனுஷ்கோடிக்கும் செல்வது என்று முடிவு செய்து ஒரு நன்னாளில் அதிகாலையில் ஐந்து மணிக்கே காரையும் வரச் சொல்லி விட்டோம். காரும் 'டான்' என்று சொன்ன நேரத்திற்கு வந்து விட்டது. தூக்க கலக்கத்தில் இருந்த குழந்தைகளுடன் காரில் ஏறி நேராக மாரியம்மன் தெப்பக்குளத்திற்குச் சென்று விடியும் வரையில் காத்திருந்தோம். தண்ணீர் இல்லாவிட்டாலும் அங்கிருந்த அமைதியில் தெப்பக்குளம் அழகாகவே 'பளிச்'சென்றிருந்தது. சமீபத்தில் தான் வண்ணம் அடித்திருப்பார்கள் போல!

தெப்பத்திருவிழா, மாரியம்மன் கோவில், அருகிலேயே நான் படித்த பள்ளி பல நினைவுகள் என்னுள் ...

பல ஆண்கள் மற்றும் சில பெண்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி நடைப்பயிற்சியில் தீவிரமாக இருந்தார்கள். சிலர் கால்களில் செருப்பு கூட இல்லாமல் நடந்து கொண்டிருக்க, சிலர் 'ஹவாய்' சப்பலுடன்! ஒரிருவர் மட்டும் ஷூ போட்டுக் கொண்டு காதில் ஹெட்ஃபோனுடன் பாட்டுக் கேட்டுக் கொண்டே மெதுவாக நடக்க, கணவன் மனைவி மாதிரி தெரிந்தவர்கள்,சக நண்பர்களுடன் வந்தவர்கள் மட்டும் பேசிக் கொண்டேநடக்க, தனியாக ஏதோவொரு யோசனையில் சிலர் நடந்து கொண்டு என்று மக்கள் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அனைவருமே குண்டாக இருப்பது போல் எனக்குத் தோன்றியது :)  விடிந்தவுடன் கிரிக்கெட் விளையாட கையில் பேட்டுடன் இளைஞர்கள் பட்டாளம் வந்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

ரம்மியமான காலைப் பொழுதில் சூரியன் எழும் வரை அமைதியாக இருந்த சாலை சிறிது நேரத்தில் லாரி, கல்லூரி, பள்ளி பேருந்துகளின் வரவால் தன்  இயல்புக்கு திரும்ப, நாங்களும் கோவிலைப் பார்த்து கும்பிட்டு விட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். குழந்தைகள் இருவரும் உறக்கத்தில்!

ஒருகாலத்தில் அகலமாக தோன்றிய சாலைகள் எல்லாம் குறுகி விட்டது போல் ஓர் பிரமை. வெற்றிடமாக இருந்த வீடுகளில் மச்சி, குச்சி வீடுகள்! தெப்பக்குளத்திலிருந்து திருப்புவனம் செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புகள் அலங்கரித்த காலத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். தண்ணீரை காணாமல் வறண்டு கிடக்கும் வைகை ஆற்றில் மணலை அள்ளி மேடும் பள்ளமுமாக இருப்பதை பார்க்கவே வருத்தமாக இருந்தது. செங்கல் சூளைகள் அதிகமிருந்த பகுதியில் இன்று ஒரு சில சூளைகள் மட்டுமே தெரிந்தது! மாட்டு வண்டிகளும், லாரிகளும் செங்கற்களுடன் சாலையை வலம் வந்தால், வீடுகளின் ஆக்கிரமிப்போ வழியெங்கும்!

சாலையின் ஓரத்தில் அசை போட்டுக் கொண்டு மாடுகளும், நடந்து கொண்டும், உட்கார்ந்தபடி நாய்களும், சிறு வாலைச் சுருட்டியபடி குடும்பம்குடும்பமாக பன்றிகளும், சுவர்களில் கவர்ச்சிகரமான சினிமா போஸ்டர்களும், குப்பை மேடுகளும் என்று மதுரைக்கே உரிய 'அழகுடன்' இருப்பதில் காலங்கள் கடந்தும் வளர்ச்சி அடையாத மதுரை, வருத்தமாகத் தான் இருந்தது.

விரகனூர் கடந்து திருப்புவனம் செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புகள் இருந்த இடங்கள் உருமாறி வண்ண வண்ண விளம்பரங்களுடன் வீட்டு மனைகளாக கூறு போடப்பட்டிருந்தது. அதற்காகவே பிரயேத்தியமாக தார் சாலைகள் போட்டிருந்தார்கள். வழியெங்கும் கூடவே வந்த வைகையில் ஓரிடத்தில் கூட தண்ணீர் கண்ணில் படவே இல்லை.

பரமக்குடி வந்தவுடன் அக்மார்க் காலை பரபரப்புடன் இருந்த சாலை ஓரத்து காபி கடை முன்னே பூ விற்பவரை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். மணக்க மணக்க மல்லிகைப் பூ :) தூங்கிக் கொண்டிருந்த கணவரும் காபி சாப்பிட இறங்க, குழந்தைகள் இருவரும் இன்னும் தூக்கத்தில்.

காபிக்கடையின் முன்னே பெரிய எண்ணைச்சட்டியில் 'சொய்ங் சொய்ங்' என்று வடை மாவை போட்டெடுக்கும் வாசம் மூக்கைத்துளைக்க, சாப்பிட வேண்டும் போல் ஆசை இருந்தாலும்...ஏனோ சாப்பிடவில்லை. ஏழு மணிக்குள் உளுந்த வடை, பருப்பு வடை, அப்பம் எல்லாம் போட்டு ரெடியாக! கடைக்கு வருபவர்களும் காபியோ, டீயோ சொல்லி விட்டு வடையை எடுத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே ஊர்க்கதையை பேசுவதை பார்க்க ஆனந்தமாக இருந்தது. சாலைகளில் புழுதி பறக்கச் செல்லும் வாகனங்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பஸ்களும் இஷ்டத்திற்கு வழியில் நிறுத்திக் கொண்டிருந்தார்கள். ஹார்ன் அடித்துக் கொண்டே செல்லும் ஆட்டோக்கள், பைக்கில் வலம் வரும் இளைஞர்கள், சைக்கிள் கூட்டங்கள், காய்கறிகளை ஏற்றிக் கொண்டுச் செல்லும் டெம்போ லாரிகள், ஸ்கூல் பஸ் என்று பார்க்க ஒரே கலவரமாக இருந்தது. மக்கள் தத்தம் வேலையை பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்!
தேவிப்பட்டினம் 

ஒரு வழியாக ராமநாதபுரம் வந்து சேரும் பொழுது பசியில் குழந்தைகள் எங்கே இருக்கிறோம். ஆர் வீ தேர் எட்? என்ற வழக்கமான கேள்வியுடன் எழுந்திருக்க, அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டோம். உணவும் நன்றாகவே இருந்தது. காலை ஒன்பது மணி தான் என்றாலும் அதிக வெயிலுடன் 'கசகச'வென்றிருந்தது.

அந்த சுனாமி பிளேஸ் வந்துருச்சா?? என்று தனுஷ்கோடியை பார்க்கும் ஆர்வத்தில் குழந்தைகள். இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு, தூங்காம வேடிக்கை பார்த்துட்டே வாங்க, சொல்லிவிட்டு நான் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டேன். நண்பர் முருகனும் குடும்பத்துடன் தேவிப்பட்டினத்தில் சேர்ந்து கொள்வதாகச் சொன்னவுடன் அங்கு சென்று விட்டோம்.

பளீரென்ற வெளிச்சத்தில் கடல் கண்களை கூச செய்தது. அன்று முஹூர்த்த நாள் போல. கோவிலிலும், தோஷ நிவர்த்திக்கு வந்த கூட்டமும் என்று அந்த இடம் 'கலகல'வென்றிருந்தது. பெற்றோர்களுடன் பெண்களும், ஆண்களும் பரிகாரம் செய்து கொண்டிருந்தார்கள். கடலில் நவக்கிரகங்களை அன்று தான் பார்த்தேன். அர்ச்சகர்கள் மந்திரங்களைஓதிக் கொண்டு பூஜை செய்து கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாக, சுற்றி வர நடைபாதை கட்டி இருந்தார்கள். சிறிது நேரம் அங்கு நின்று அமைதியான கடலை ரசித்துக் கொண்டிருந்தோம். பரிகாரம் முடித்தவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த இடம் இன்னும் கொஞ்சம் கூட சுத்தமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது!

மேள தாளங்கள் முழங்க, சீர் வரிசையுடன் ஒரு சிறு கூட்டம். குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்தவோ என்னவோ. கிராமத்து விழா மாதிரி இருந்தது. அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில் செல்வி, முருகன் குடும்பமும் வர, இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டோம்.

இராமேஸ்வரத்தை நெருங்கும் வழியெங்கும் கடலும் பயணித்தது குதூகலமாக இருந்தது.  வழியில் சில உப்பளங்கள். மண்டபம் அருகே Glass boatல் போகலாம் என்ற போர்டை பார்த்தவுடன் ஏதோ ஒரு ஆசையில் காசை கொடுத்து விட்டு எங்கள் இரு குடும்பத்தையும் ஏற்றிச் செல்ல வந்த அந்த படகைப் பார்த்தவுடன் பயம் வந்து விட்டது. லைஃப் ஜாக்கெட் எல்லாம் கிடையாது. அதுபாட்டிற்கு அலையில் ஆடிக் கொண்டே இருக்க, உயிரை கையில் பிடித்துக் கொண்டு கடலில் சிறிது தூரம் வரை பயந்து கொண்டே சவாரி செய்தோம். கடற்பாசிக்காக பல இடங்களில் வலைகள் விரித்து வைத்திருந்தார்கள்.  கடற்பாசியையும் எடுத்து காண்பித்தார்.  அங்கிருந்து தெரிந்த நீண்ட பாலம் மலைக்க வைத்தது!

கிளாஸ் போட்னு சொன்னாங்களே என்றவுடன், ஓட்டிக் கொண்டு வந்தவரும் உங்க காலை கொஞ்சம் நகர்த்தி பாருங்க, கிளாஸ் இருக்கும். கடல் தண்ணி தெரியுதா?ன்னு கேட்கவும்... அடி ஆத்தீ, இதுக்குப் பேர் தான் கண்ணாடி படகா? :)'தளக் தளக்' என்று அலைகளுடன் ஆடிக் கொண்டே சென்ற படகு, ஒரு சுற்று சுற்றி விட்டு கரையில் எங்களை கொண்டு வந்து சேர்த்து விட்டவுடன் தான் எனக்கெல்லாம் பயம் விட்டது. உச்சி வெயிலில் ஒரு வயதான மீனவர் படகில் வருவதை பார்க்க அவர்கள் வாழ்க்கையை நினைத்தாலே கவலையாக இருந்தது. வெயிலில் உழைக்கும் அவரின் உடம்பும், துடுப்பு போடும் வலுவான கரங்களும்  சொல்லாமல் சொல்லிற்று ஆயிரம் உணர்வுகளை!

மீண்டும் காரில் பயணம் தொடர, கம்பீரமான பாலத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ரயில் கடந்து செல்லும் பாலத்தை பார்க்க பிரமிப்பாக இருந்தது. பெரிய படகு செல்ல வழிவிடும் வகையில் கட்டி இருந்த பாலம் ஒரு இன்ஜினியரிங் மார்வெல் தான்!

நீல நிறத்தில் வானமும். நீலமும் , பச்சையுமாக கடலும், அழகாக அணிவகுத்து நின்றிருந்த மீன்பிடி படகுகளும், அலைகளும் மனதை கொள்ளை கொண்டது. நல்ல வெயில்! உப்புக் காற்று! இரண்டு டால்பின்கள் துள்ளிக் குதித்து கடலில் செல்வதை குழந்தைகளும் ரசித்துப் பார்த்தார்கள். Seaworldல் பார்த்ததற்கும் சுதந்திரமாக அதன் உலகில் உலா வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அழகான மீன்கள்!

படங்கள் எடுத்து முடித்து விட்டு, ராம ஈஸ்வரத்தை பற்றி எங்களுக்குத் தெரிந்த தகவல்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டே ஒரு வழியாக கோவிலை வந்தடைந்தோம்.



படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா

































































Sunday, March 29, 2015

இணைய வேதாளம்

முதன் முதலில் இணையம் மூலம் நண்பர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் தொடர்பு கொண்ட பொழுது தகவல்தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. உலகம் சுருங்கி விட்டது என்று நகரம் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டாடித் தீர்த்தது.

அப்போதே அப்படி என்றால் இப்போது சொல்லவா வேண்டும்? பேஸ்புக் , ட்விட்டர், ஃபேஸ்டைம், கூகிள் டாக், வாட்ஸ்ஆப்,  இன்ஸ்டக்ரம் ...என்று வளர்ந்து வரும் சமூக வலைதளங்கள் உள்ளங்கையில் உலகம் என்று நம் வாழ்க்கையை கணினிக்கும், கைப்பேசிக்கும் அடிமையாக்கி விட்டது.

வீட்டை விட்டுத் தொலைவில் இருக்கும் குடும்பங்கள் ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ள கடிதம் எழுதிய பழக்கமெல்லாம் மறைந்து ஈமெயில் என்றாகி, முகம் பார்த்துப் பேச வேண்டுமா - ஸ்கைப் , ஃபேஸ்டைம் என்று நித்தமும் பேசி சிரிக்க என்று ஆனந்தமாக போகிறது  பெற்றவர்களுக்கும், நண்பர்களுக்கும்!

குழந்தை பிறப்பு முதல் பெரியவர் இறப்பு வரை வீடியோவில் நேரடியாகவே ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள்!

இப்போதுள்ள சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்திருப்பது பேஸ்புக். இதன் மூலம் பல வருடங்களாகப் பார்த்துப் பேசியிராத நண்பர்கள் முதல் சொந்தங்கள் வரை கூடிப் பேச முடிகிறது. ஒரு நல்ல நாளா, ஊரில் விசேஷமா, ஒரு அவசர உதவியா உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சிலர் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் ஒரு மேடையாகவும் கூட இருக்கிறது. தனக்குத் தெரிந்த நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நண்பர்கள் வட்டம் விரியத் தொடங்குகிறது. அரசியல், இசை, மொழி, ஜாதி, மதம், கட்சி, பிடித்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொழுதுபோக்குகள் ... என்று பல்வேறு குழுமங்கள். தன் ரசனையை ஒத்தவர்களுடன் சேர்ந்து  அறிவை வளர்க்கவும், விவாதம் செய்யவும்,  நேரத்தை ஓட்டுபவர்களும் அதிகம்.

ஒத்து வரதாவர்களுடன் கண்ணியமாக ஒதுங்கிப் போவதும், கடுகு விஷயத்தை மலை போல் பெரிதாக்கி 'நீயா நானா' மோதி பார்க்கிறேன் பேர்வழி என்று தரக்குறைவாக பேசி டாஸ்மாக்கில் இருந்து வந்தவன் போல பிதற்றுவதும் அதைக் கண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூட்டம் சிதறுண்டு ஓடுவதும் பல குழுமங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலரும் அடிக்கடி வெளிநடப்பு செய்வதும் நடக்கிறது!

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால், கருத்தை விட்டுவிட்டுச் சொல்பவருடைய ஆதிமூலத்தை ஆராய்ந்து அதை வைத்து நடக்கும் இணையச் சண்டைகள் மிகப் பிரபலம்.  சொன்ன கருத்துகளை புரிந்து கொள்பவர்களை விட அவர்களாகவே புரிந்து கொண்ட கருத்துகளை வைத்து நடக்கும் சண்டைகள்  அதிகம். கருத்து வேறுபாடுகள் வரும் போதெல்லாம் சேற்றை வாரி தூற்றிக் கொள்வதில் நம்மை அடித்துக் கொள்ளவே முடியாது என்று நித்தம் நிரூபிக்கும் கூட்டங்களும் உண்டு.

இங்கும் வந்து நான் வயதில் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்பவர்களும், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கோமாளித்தனம் செய்பவர்களும் உண்டு.

சில பதிவுகள் நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது. சில சிந்திக்க வைக்கிறது. சில கோபமூட்டுகிறது, சில பொறாமைப்பட வைக்கிறது என்று தினமும் ஏதாவது ஒரு வகையில் பொழுது போகிறது.

பலவகையான குழுமங்கள் - சமூகநலனைக் கருதிச் செயல்படுபவைகள், பெண்களுக்காக, குழந்தைகளுக்காக, கல்லூரியில் படிப்பவர்களுக்காக, இயற்கை மருத்துவம், ஆரோக்கியம்,விவசாயம், படிப்பை சார்ந்து, பிறந்த மண்ணைச் சார்ந்து, தாங்கள் படித்ததை பிறருக்கும் பயனுள்ள வகையில் தங்கள் பக்கங்களில் போட்டு அதை மற்றவர்கள் படித்துப்  பயன் பெறுவதும்(!) ... இப்படி பல ஆயிரக்கணக்கான குழுமங்கள் சண்டை சச்சரவுடனும், பயனுள்ள கருத்துக்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.

இதில் தற்காப்புக்காக முகமூடி அணிந்து கொண்டு பலரும், தன்னை வெளிப்படுத்த தைரியம் இல்லமால் பலரும்,  நடிகர் நடிகை படங்களுடன் வலம் வருபவர்கள் என்று பன்முகங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நன்கு தெரிந்தவர்களைத் தவிர ஆணுடன் பேசுகிறோமா, பெண்ணிடம் பேசுகிறோமா என்று தெரியாமல், ஆண்களின் பெயரில் பெண்களும் பெண்களின் பெயரில் ஆண்களும் என்று இது ஒரு மாயாவி உலகம்.

எனக்கு எவ்வளவு லைக்ஸ் கிடைத்திருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களும், ஈகோ இல்லை என்று மார் தட்டிக் கொண்டு ஈகோவுடன் அலைபவர்களும், நல்லவன் வேடம் போட்டு ஆஸ்கார் அவார்ட் வாங்கத் துடிக்கும் உத்தம வில்லன்கள் அதிகம் வலம் வருவதையும் காண முடியும்.

சிலரைப் பற்றி அவர்கள் பக்கத்தில் ஆஹோ, ஓஹோ என்று புகழ்ந்து எழுதியவர்களே ப்ரைவேட் மெசேஜில் அவர்களைப் பற்றி பிற நண்பர்களுடன் அவதூறாக பேசி தங்களின் மூளை வளர்ச்சியை தாமாகவே பதிவு செய்து விடுகிறார்கள். பெரும்பாலும் மெத்த படித்த மேதாவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களே மட்டமான இச்செயல்களில் ஈடுபட்டு அவர்கள் மனவிகாரங்களை கொட்டவும் செய்கிறார்கள்!

இணையதளம் நல்லது என்று சொல்லும் அதே நேரத்தில் இணையம் என்ற மாய உலகில் அதை கையாளத் தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! தவறாக பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும் பாதிப்பு எனும் பொழுது வேதனைப்படுபவர்கள் அதிகம். படிக்கும் வயதில் சிலர் தடம் புரள இதுவும் காரணமாவது தான் வேதனை தரும் விஷயம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொண்டால் சரி.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் வாழும் இணைய வாழ்க்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து பல குடும்பங்களும் அவதிப்படுகின்றன.
பள்ளிகளும், பெற்றோர்களும் இவ்விஷயத்தில் மிக்க கவனம் கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
அரசாங்கமும் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவசர உதவி என்று வரும் பொழுது இந்த தகவல் தொழில் நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. தெரியாத பயனுள்ள தகவல்களை கேட்டறியவும் முடிகிறது. பலருக்கும் இது ஒரு பொழுதுபோக்கவும்,  சொந்த பந்தங்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசவும், வெளியிடங்களில் நடக்கும் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவும் என்று... லிஸ்ட் நீண்டு கொண்டே போனாலும்...

நாணயத்தின் இருபக்கம் போல் இதனால் நன்மைகளும், தீமைகளும் - எல்லாம் அவரவர் பார்வையில்.




Sunday, March 22, 2015

நீ எப்பம்மா வருவே???

காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு காலங்கள் ஓடினாலும் இந்நாள் மட்டும் நினைவுகளை பின்னோக்கிச் செல்ல வைத்து விடுகிறது. என்றாவது ஒருநாள் இறக்கத் தான் போகிறோம் என்று தெரிந்திருந்தாலும் அந்த இழப்பு நம்மைத் தாக்கும் பொழுது தான் அதன் பாதிப்பு அதிகம் தெரிகிறது.

வைத்தியம் செய்ய வசதியில்லாமல் இறப்பது, பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் இறப்பது, முதுமையின் காரணமாக இறப்பது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனம், 'திடீர்' இழப்பை ஏற்றுக் கொள்ளத்  தடுமாறுகிறது. அதுவும் குடும்பத்தில் உள்ளவரின் இறப்பு எனும் போது அதன் பாதிப்பிலிருந்து மீள்வதும் கடினமாக இருக்கிறது.

ஐந்து வருடத்திற்கு முன்பு இதே நாளில் அன்று தொலைபேசியில் அடுத்தடுத்துஅழைப்புகள் வந்திருந்ததைப் பார்த்தவுடனே ஒரு நெருடல். எடுத்து பேசும் பொழுது தம்பி கவலையுடன் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். மதியம் திடீரென்று நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது என்றார். அந்த நேரம் வரை அவருக்கு ஒன்றும் சீரியஸாக இருக்காது என்ற நம்பிக்கையில் அவனும் இருந்தான்.

எந்த ஆஸ்பத்திரியில் ?

தெற்குவாசல் வடமலையானில்.

டாக்டர்கள் இருக்கிறார்களா?

பெரிய டாக்டருக்குத் தகவல் சொல்லியாயிற்று. அவர் எப்போது வருவார் என்று தான் தெரியவில்லை. அப்பாவை அவசரப்பிரிவில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் யாரும் அருகில் இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டான்.

ஒன்றும் ஆகாது. கவலைப்படாதே. என்ன நடக்கிறது என்று தெரியப்படுத்து என்று ஃபோனை வைத்து விட்டாலும் மனசு அடித்துக் கொண்டு தான் இருந்தது. வாழ்க்கை நிம்மதியாக போகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு செய்தியா??

அடுத்து என்ன செய்தி வருமோ என்று காத்திருந்த நேரத்தில் மூத்தவனிடம் இருந்து ஃபோன். ஐயோ! இவன் என்ன சொல்ல போகிறானோ என்று படபடப்புடன் எடுத்தால்...

அப்பா உயிருடன் இல்லை என்று தேம்பி தேம்பி சிறு குழந்தையைப் போல் அழுது கொண்டே சொல்லவும் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. கம்பெனியில் மூத்த பதவியில் இருப்பவன், குடும்பத்தில் எனக்கு இளையவன் என்றாலும் மூத்தவனாக பொறுப்புகளைச் சுமப்பவன் வாய் விட்டு அழும் பொழுது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்க... வந்த அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒரு மகனாக உன் கடமையை அவருக்குப் பிடித்த மாதிரி செய்திருக்கிறாய். போன மாதம் கூட உன் வீட்டில் இருக்கும் வரை அவரை நன்றாகவே கவனித்திருக்கிறாய். வேறு என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு நிலைமை வரும் என்று தெரியுமா என்ன? வருத்தப்படாமல் போய் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடி. அழாதே. எதுவும் நம் கையில் இல்லை.

சரி, நீ எப்பொழுது வருவாய்???

எனக்காக காத்திருக்க வேண்டாம், சொல்லும் போதே உடைந்து போனேன்.

அதற்குள் மதுரையில் இருந்து தம்பி சின்னவனும், நீங்கள் எல்லோரும் வரும் வரை அப்பாவை வைத்திருக்கலாம் என்று ஐஸ்பாக்ஸ் சொல்லி இருக்கிறோம். வந்து விடு சீக்கிரம்.

நான் இன்று கிளம்புவது சாத்தியமில்லை. நாளை இரவு கிளம்பி வந்து சேருவதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஆகி விடும். எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம். காரியங்களை முடித்து விடுங்கள்.

பெற்றவன் முகத்தை பார்க்க கூட முடியாத தொலைதூரத்தில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும்? மெளனமாக அழுவதைத் தவிர!

சில நிமிடங்களுக்குள் மீண்டும் ஃபோன். அக்காவிடமிருந்து! நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நேற்று கூட பேசும் போது நல்லா தானே இருந்தார்? இவருக்கு என்ன குறை? பார்த்துக் கொள்ள ஆளில்லையா?? வசதி இல்லையா?? செக்-அப் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி இப்போது பார். போய் சேர்ந்துட்டார் மொத்தமாக! அவளும் அழுது கொண்டே பேச, நீ உன் உடம்பை பார்த்துக் கொள். உன் குரலை கேட்டால் BP ஏறிடும் போலிருக்கு என்றவுடன் கொஞ்சம் தணிந்தாள். நாங்கள் எல்லோரும் கிளம்பி விட்டோம். நீ எப்போது வருவாய்?

ம்ம்ம்...வருகிறேன். நீ போய் பார்த்துக் கொள்.

மனதும், உடலும் சோர்ந்து விட்டது. மனதுக்குள்ளே அழுதழுது தொண்டையும், தலையும் 'விண்விண்' என்று வலிக்க..

அதற்குள் கணவருக்கும் தகவல் தெரிந்து வருத்தப்பட்டார். இப்பொழுதுதான் உன் தம்பியுடன் பேசினேன். நன்றாகத் தானே இருந்தார்? ஷாக்கிங் ஆக இருக்கிறது.

அன்று காலையில் அப்பா கோவிலுக்குச் செல்வதை பார்த்ததாக அவர் நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். பெரியப்பா பையனோ சித்தப்பாவை அன்று மதியம் பார்த்துப் பேசி விட்டு வந்தேனே? என்னால் நம்பவே முடியவில்லை என்று கணவரிடம் சொல்லி இருக்கிறார்.

சரி, நான் பிறகு பேசுகிறேன். பேசுவதற்கு எனக்கும் தெம்பில்லை என்று வைத்து விட்டேன்.

தங்கையிடமிருந்து ஃபோன். மிகவும் நொறுங்கிப் போயிருந்தாள். அழுது கொண்டே இருந்தாள்.

அவர் விதி. நாம் என்ன செய்ய முடியும்? ஆஸ்பத்திரியில் பல நாட்கள் இருந்து அவரும் கஷ்டப்பட்டு அவரைச் சுற்றி இருப்பவர்களையும் கஷ்டப்படுத்தாமல் போனாரே என்று திருப்திபட்டுக்க வேண்டியது தான். ஒரு டாக்டராக உனக்குத் தெரியாததல்ல.  

அவள் ஏதேதோ பேச நினைத்தாள் போலும். அப்பா பெண்ணாயிற்றே! சிலருக்குப் பேசுவதற்கும், அழுவதற்கும் கூட உரிமைகள் மறுக்கப்படுகிறது. நாளை சிகாகோவிலிருந்து விசா வாங்கிக் கொண்டு நானும் மகளும் ஊருக்குச் செல்கிறோம். நீ எப்போது கிளம்புகிறாய்?

தெரியவில்லை.

சீக்கிரம் வந்து விடு. அழுது கொண்டே அவளும் வைத்து விட்டாள்.

மீண்டும் தம்பியிடமிருந்து ஃபோன். வீட்டுக்கு அப்பாவை அழைத்து வந்தாச்சு. மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா, நண்பர்கள் என்று அனைவரும் தகவல் தெரிந்து வந்திருந்தார்கள். எல்லோரும் பேசி முடித்து அம்மாவிடம் கொடுக்க... அழுது முடியட்டும் என்று காத்திருந்தேன். நல்லா தான் இருந்தார். இப்படி ஆகும்னு தெரியல. உன் கூட பேசணும்னு சொல்லிட்டே இருந்தார்... அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு!

அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தேன். என்ன பேசுவது?

ஐஸ் பாக்ஸில் தான் வைத்திருக்கிறோம். நீங்கள் எல்லோரும் வந்தவுடன் காரியங்களைச் செய்யலாம் என்று.

எனக்காக ஒன்றும் காத்திருக்க வேண்டாம். அக்கா வந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்களை செய்து விடுங்கள்.

அப்பா முகத்தை கடைசியாக பார்க்க வேண்டாமா??? நீ வாம்மா, சீக்கிரம்!

அந்த கொடுப்பினை தான் இல்லையே? அதற்கு மேல் பேச முடியவில்லை ...

என்ன செய்வது? முதலில் பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும். விசா வாங்கும் தொல்லை வேறு இருக்கே?

மாலையில் வீடு வந்தவுடன் கணவரும் இந்தியா போக டிக்கெட், விசா வாங்க போக வேண்டிய இடம், ட்ரைன் டிக்கெட் என்றிருக்க...

மகளும், நீ போம்மா, நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல். நான் பார்த்துக் கொள்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாதே. நீ ஊருக்குப் போய் பாட்டியுடன் இருந்து விட்டு வா என்றாள். 

மகனோ குழப்பத்துடன், எனக்கு அப்பாவின் அப்பா, அம்மாவை தெரியாது. தாத்தாவும் இப்பொழுது இல்லை. பாட்டியையாவது உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். நான் ஒழுங்காக ஸ்கூலுக்குப் போய் வருவேன். நீ கவலைப்படாமல் போய் விட்டு வாம்மா என்றான்.

உன் பேரக்குழந்தைகளுக்காவது நீ இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருக்கலாம்ப்பா...

இயந்திர கதியில் நானும் தயாரானேன்...

ஊருக்குச் செல்ல.


Friday, February 27, 2015

ஊரு விட்டு ஊரு வந்து ...

வாவ்!!! நாட்கள் மாதங்களாய், வருடங்களாய் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது! மதுரையை விட்டு வந்த இந்த பதினேழு வருடங்கள் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை! பல வருடங்களுக்கு முன் வாழ்வில் காணாத குளிரில் நடுங்கிக் கொண்டே டொரோண்டோவில் வந்திறங்கிய அந்நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது!

மதுரையில் பிறந்து வளர்ந்து என் வீடு, என் மக்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து வந்த எனக்கு எப்போது தான் மேற்குலகத்தை பார்ப்பது? படித்து மட்டுமே பார்த்த இடங்களை எப்போது கண்டுகளிப்பது ?? என்பது கனவாகவே இருந்து வந்தது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் மாண்ட்ரியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து அவர்களும் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்றவுடன் கைக்குழந்தையை  வைத்துக் கொண்டு முடியுமா, முடியாதா என்று அந்த ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. வேலை கிடைத்து கனடாவிற்கு போகப் போகிறோம் என்றவுடன் வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைவேறப்போகிறது என்ற நினைவே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்குப்பிறகு இரு மாதங்களில் மகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருச்சி பயணம் , கனடா செல்ல விசா வாங்க கோயம்புத்தூர் பயணம், அலுவலில் இருந்து ஐந்து வருட விடுமுறையில் செல்வதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி வாங்க சென்னை பயணம் எனஅலைந்த அலைச்சலில் வெளிநாடு செல்வதைப் பற்றிய எண்ணங்களோ அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களைப் பற்றியோ எதுவும் நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு வேலைகள் என்னை ஆக்கிரமித்திருந்தது.

மதுரையை விட்டு கிளம்பிய அவ்விரவில் தான் மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. கண்ணீருடன் வழியனுப்ப வந்த சொந்தங்களை விட்டுப் பிரிகிற உணர்வா? குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறோம் என்ற பயமா? வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற கலக்கமா? கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றின பயம் அன்று தான் தெரிந்தது. ஆனாலும் மனதில் கொஞ்சம் தைரியம். எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் திரும்பி வந்தால் வேலை இருக்கிறது என்ற நினைவே சிறிது ஆதரவாக இருந்தது. கணவரும் மகளும் அருகில் இருக்கும் போது எதற்கு மனதை குழப்பிக் கொள்ள வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும் தயக்கமும் கலக்கமும் கூடவே இருந்ததென்னவோ உண்மை.

விமான நிலையத்தில் அப்பா, அம்மா, தம்பிகள், தங்கை, அக்கா என்று அனைவரையும் பிரியும் பொழுது தப்பு செய்து விட்டோமோ என்று அழுத அழுகையில் குழந்தையும் மிரண்டு விட்டது. முதல் முறை விமானப்பயணம் வேறு மனதில் திகிலை கொடுக்க, குழந்தையும் மிரட்சியுடனே இருந்தாள். லண்டன் வரை ஒகே பயணம். அங்கிருந்து டொரோண்டோ எப்படா வரும் என்றாகி விட்டது. மகளுக்கோ பயணம் ஒத்துக் கொள்ளவில்லை. அவளுக்கும் தாத்தா, பாட்டியை பிரிந்த சோகம். சொல்ல தெரியவில்லை.

கையை பிசைந்து சாப்பிட்டுப் பழகி விட்டு ஃபோர்க், ஸ்பூன் பார்த்தவுடன் ஒரு அந்நியம். பிரட்,  இலை தழைகளைப் பார்த்தவுடன் வந்த பசியும் ஓடி விட்டது. காரசாரமாக உண்ட நாக்கிற்கு உப்பு மட்டும் போட்டு சுட்ட மீனை கண்டதும் வராத வாந்தியும் உவ்வே...என்னை பார்த்து மகளுக்கும், அவளைப் பார்த்து எனக்கும் என்று...

டொரோண்டோ வந்து விட்டது என்று பைலட் சொன்னவுடன் அப்பாடா என்றிருந்தது! வெளியில் வந்தவுடன் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் மனநிலையில் இருந்தேன் நான். இது ஒரு அந்நிய தேசம் என்ற நினைவு முதலில் உறுத்தியது. ஆங்கிலம் தான் பேசினார்கள் என்றாலும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. பிப்ரவரி 28 டொராண்டோவில் வந்திறங்கிய அந்த இரவில் பலவிதமான குழப்பமான எண்ணங்கள். கனவு நிறைவேறி விட்டது என்று ஆனந்தப்படுவதா, புது இடம் பிடிக்குமா, இந்த வாழ்க்கை முறை ஒத்து வருமா என்று புரிந்தும் புரியாமலும் குளிரில் நினைவுலகத்துக்கு வந்த போது வண்ண மயமாக இருந்த நகரம் ஆனந்தத்தை தந்தது. இரவில் விளக்கொளியில் மின்னிய நகரங்களைப் பார்த்த பொழுது கனவு மாதிரியே இருந்தது.

கணவரின் நண்பர் தினேஷ் எங்களுக்காக காத்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் அப்பாடா மதுரை நண்பர் இருக்கிறார் என்ற எண்ணமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. வானுயர்ந்த கட்டடங்கள், வண்ண விளக்குகளுடன் ஜொலித்த நகரம் அதுவரை நான் காணாத ஒன்று. டர்பன் போட்ட சீக்கிய டாக்ஸி டிரைவர்கள், பல தமிழ், இந்திய முகங்கள் அச்சம் மெல்ல மெல்ல என்னை விட்டுச் செல்வது போல் உணர்ந்தேன்.

தினேஷின் காரில் நான் குழந்தையுடன் ஏறிக் கொள்ள, பெட்டிகளுடன் கணவர் வாடகைக்காரில் தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம் GPS வசதிகளும் கிடையாது. அட்ரஸ் தெரியுமா என்று தினேஷ் கேட்டவுடன் தான் பிறந்த வீடு, புகுந்த வீடு , இப்பொழுது இந்த முகவரியையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணமும் வந்தது. அவருடன் தாய்மொழியில் பேசிக் கொண்டு அடிக்கடி கணவரின் காரும் பின்தொடர்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்து சேர்ந்தோம். முகவரி தேடி அங்குமிங்கும் சுற்றி அலைந்து பசி மற்றும் களைப்புடன் அபார்ட்மெண்ட் வந்து சேர , குழந்தையும் நன்கு விழித்திருந்தாள்.

கம்பெனியே ஒரு அபார்ட்மெண்ட் பார்த்து வீட்டில் சுவாமி படம், விளக்கு வைத்து கோலம் போட்டிருப்பதை கண்டவுடன் மனதில் ஒரு நிம்மதி. பிரிட்டிஷ் ஏர்லைனில் சென்னையிலிருந்து புறப்படும் போது நம்மூர் சாப்பாடு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கொடுத்த எதுவும் பிடிக்கவில்லை. மகளும் நானும் பசியில் துவண்டிருந்தோம்.

ராம், கோயம்புத்தூர்காரர். சாதம், பீன்ஸ், தயிர் எடுத்துக் கொண்டு வந்து குழந்தையுடன் வருகிறீர்கள் என்று சொன்னார்கள். அதான் சமைத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் பேசி விட்டுச் சென்றார்.  மதுரையிலிருந்து மதியும், முருகேசன் என்பவரும் அவருடன் தங்கியிருப்பதாக சொன்னவுடன் அப்பாடா, பேசுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைவே ஆறுதலாக இருந்தது. பசியுடன் இருந்த மகளுக்குத் தயிர் சாதம் கொடுத்தவுடன் அவளும் தூக்கத்திலிருந்து கொஞ்சம் தெளிவானாள். 

வீட்டைச் சுற்றிப் பார்த்து ...நான்கு பர்னர் கொண்ட ஸ்டவ், சுடு தண்ணீர், குளிர் தண்ணீர், பாத்ரூமில் டப், வெஸ்டெர்ன் டாய்லெட், பெரிய்ய  ஃபிரிட்ஜ் இத்யாதிகளைப் பார்த்து  வியப்பும் கலக்கமாகவே இருந்தது. பழக்கமே இல்லாத வெஸ்டர்ன் டாய்லெட்டை கண்டு மகள் மிரள...மெதுவே எனக்குள்ளும் மகளை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்ற பயம் வந்து விட்டது. சதாசர்வ காலமும் தாத்தா, பாட்டி பெரியம்மா, சித்தி, மாமாக்கள் என்று வளர்ந்து விட்டு அவளை நினைத்து தான் பெருங்கவலையாக இருந்தது. 

அந்த இரவில் இனி ஒளிரப் போகும் நாட்கள் எப்படி இருக்குமோ என்று ஒரு தயக்கத்துடன் நினைத்த மாதிரியே வந்து விட்டோம் என்று பெருமையாக இருந்தாலும் விடை தெரியாத பல கேள்விகள் மனதில்! அமைதியாக உறங்கிக்  கொண்டிருந்த நகரில் மூன்று உயிர்கள் எதிர்காலத்தை நினைத்து மனப்போராட்டத்துடன் விடியலுக்காக காத்திருந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் ...







Sunday, January 25, 2015

விமானத்தில் ஓர் நாள்...

பஸ், ரயில், விமான பயணங்கள் என்றுமே ஒரு அனுபவமாகவும், பல சுவாரசியங்களுடனும் இருக்கும். சமயங்களில் தொல்லையாகவும், எதிர்பாரா திருப்பங்களுடனும் இருந்தாலும் பயணத்தின் போது நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் நடை, உடை, பாவனை, சம்பிராதாய பேச்சுக்கள் ...இன்னும் இப்படி எவ்வளவோ மனதை ஈர்க்கும் விஷயங்கள்! அந்த வகையில் பயணங்களை நான் மிகவும் ரசிப்பதுண்டு.

விடுமுறை முடித்து கலிஃபோர்னியாவிலிருந்து இரவில் பதினொரு மணிக்கு சிகாகோ நோக்கி விமானம் கிளம்பியது. மூடிய விமானத்திற்குள் மூச்சு திணறுவது மாதிரி இருந்தாலும் நடு சீட்டில் உட்காரும் பொழுது உண்மையாகவே அப்படி தான் இருந்தது. சே! வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர கண்ணாடி சீட் கிடைக்கவில்லையே என்று ஒரு சின்ன எரிச்சல்! அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவன் கல்லூரி படிக்கும் மாணவன் போல் இருந்தான். ஒரு சிநேக புன்னகையுடன் ஹாய் என்றான். பதிலுக்கு நானும் ஒரு ஹாய் சொல்லிக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். கணவர், குழந்தைகள் அவரவர் இடங்களில். வலப்பக்கத்தில் வந்து அமர்ந்தவன் உட்கார்ந்த மறு நிமிடமே நித்யாதேவியின் அரவணைப்பில்!!! எப்படித்தான் இவர்களால் இப்படி தூங்க முடியுமோ??? கொடுத்து வைத்தவர்கள்!

சிறிது நேரத்தில் விமானமும் அன்ன நடையிட்டு ரன்வேயில் மற்ற விமானங்களைத் தொடர, என் அருகில் அமர்ந்திருந்தவன் சிறு குழந்தையின் உற்சாகத்துடன் தானாகப் பேசி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தான்! கடைசியில் சிக்னல் கிடைத்து விமானம் மேலெழும் பொழுது கண்களை இறுக மூடிக் கொண்டு எதையோ சொல்லிக் கொண்டே அடிக்கடி கைகளை கழுவுவது போல் ஏதோ ஒருவித டென்ஷனில் இருந்தான்! சடக்கென்று காலை கொஞ்சம் மேலே தூக்குற மாதிரி பண்ணுவான் பிறகு கீழே குனிந்து எதையோ தேடுவது போல் சிறிது நேரம். நான் பார்த்தால் ஒரு ஹி ஹி...

ஹார்ம்லெஸ் பட் நார்மலாக இல்லை என்று மட்டும் புரிந்தது. எனக்குன்னு எங்கிருந்து தான் வருவார்களோ! இனி தூங்கிய மாதிரி தான் என்று எண்ணிக் கொண்டேன்.

முன்வரிசையில் ஒரு கைக்குழந்தை திடீர் திடீரென அழுது மற்றவர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் தூங்குவோர் சங்கத்து ஆட்கள்' மட்டும் கண்களை இறுக்க மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்! நடுநடுவே குளிர்பானங்களும் வந்து போய்க் கொண்டிருந்தது. விமானம் ஆட்டம் காணும் போதெல்லாம் விமானியின் எச்சரிக்கை மணி ஒளிர, தூங்குற ஜனங்களுக்கு என்ன கவலை? என்னைய மாதிரி கோட்டான்கள் தான் எப்படா விடியும் என்று காத்திருந்தோம். அடிக்கடி என் குழந்தைகள் தூங்குகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக அதிகாலையில் ஐந்து மணிக்கு சிகாகோவில் தரையிறங்கும் பொழுது லேசான பனித்தூறல்! என் அருகில் அமர்ந்திருந்தவன் ஹை! ஸ்னோ ஸ்னோ என்று திரும்பி என்னை பார்த்தவன் சிரித்துக் கொண்டே ஹி ஹி! ஐ ஆம் ஃப்ரம் நியூ ஆர்லியென்ஸ். நெவர் சீன் ஸ்னோ பிஃபோர் என்று மீண்டும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். அப்பாடா ! எஸ்கேப் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே இறங்கும் பொழுது தூக்கத்திற்கு கண்கள் ஏங்கியது!

சிகாகோவில் குளிருக்கா பஞ்சம்?? செம குளிர்! விமான நிலையத்தில் நுழைந்தவுடன் அதிகாலை என்பதே மறந்து போய் விட்டது. அந்த நேரத்திற்கே கடைகள் திறக்கப்பட்டு, எண்ணையில் பொறியும் சிக்கன், பீப், பேக்கன் மற்றும் பீட்சா வாசனையில் தூங்கிக் கொண்டிருந்த வயிறும் முழித்துக் கொண்டது. மகன் விழித்துக் கொண்டே பிரகாசத்துடன் கடைகளை நோட்டமிட்டுக் கொண்டு வர, வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் ஒரு அரை மைல் தூரத்திற்கும் மேல்...அவ்வளவு பெரிய்ய்ய்யய விமான நிலையம்!!!

'மினுக்மினுக்' வண்ண ஒளியில் கண்களை கவரும் விதத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்! குழந்தைகள், வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கான வசதிகளுடன் கழிவறைகள், உட்காருவதற்கு வசதியான இருக்கைகள், பலவித உணவுக்கடைகள், தடுக்கி விழுந்தால் ஸ்டார்பக்ஸ் என்று விமான நிலையம் கலகலப்பாகவும், சுத்தமாகவும் இருந்தது. கலைநயத்துடன் கூடிய சிலைகள், ஓவியங்கள் என்று அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஏனோ, சென்னை விமான நிலையம் இப்படி இல்லையே என்ற ஏக்கம் வந்தது :(

நடந்த நடையில் தூக்கமும் பிரியாவிடை கொடுக்க...இனி மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவராக முகம் கழுவிக் கொண்டு வந்தாயிற்று. சுற்றிலும் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்! வாயை திறந்து போட்டபடி, முகத்தை புத்தகத்தால் மறைத்தபடி, ஒரு கையை முட்டுக் கொடுத்தபடி, காலை நீட்டிக் கொண்டு இப்ப சரிந்துடுவாரோ என்று பயமுறுத்தியபடி ...இப்படி பல கோணங்களில் பலரும் தூங்கியபடி இருக்க...தூங்க மறந்த குழந்தைகள் கைகளில் பொம்மைகளுடன் சுற்றிக் கொண்டிருக்க அவர்களுடன் அரைத்தூக்கத்தில் பாவப்பட்ட பெற்றோர்கள்!

அந்த அதிகாலை நேரத்திலும் 'டிப்டாப்'பாக உடையணிந்தவர்களும், பார்த்தவரை கவரும் வண்ணம் உதட்டுச்சாயத்துடன் 'பளிச்'சென்ற மேக்கப்புடன் வளைய வரும் பெண்களும், அழுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் இளைஞர்களும், காதில் ஹெட்ஃபோன், கையில் அலைபேசி, கணினியுடன் மற்றும் சிலரும் என்று வேடிக்கை பார்க்க அவ்வளவு மக்கள் கூட்டம்! பெண்கள் பலரும் 'UGG' பூட்ஸ் அணிந்திருந்தார்கள்!

என் தூக்கம் போயாச்சு! இனி என்ன செய்வது? அங்கிருக்கும் செல்ஃபோன் சார்ஜிங் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு சிறிது நேரம் நாட்டு நடப்பை பார்க்க வேண்டியது தான்! அதுவும் சிறிது நேரத்தில் போர் அடித்து விட்டது. இப்போது என்ன செய்வது? சுவர்களில் மாட்டி இருந்த படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அத்தனையும் குளோபல் வார்மிங் சம்பந்தமாக பெரிய பெரிய புகைப்பட வல்லுநர்களால் எடுக்கப்பட்ட அழகிய படங்கள். பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஐஸ்லேண்ட், அண்டார்டிகா , ஐரோப்பிய நாடுகளில் பனிமலைகள் உருகி நீர்மட்டம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் படிக்க படிக்க பதட்டம் !!! அப்படியே அங்கிருந்த படங்களை பார்த்தும் படித்தும் முடித்தாயிற்று. கிளைமேட் சேன்ஜ் தற்போதைய ஹாட் டாபிக். படித்தால் கவலை தான் மிஞ்சுகிறது! எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் ?? யோசித்துக் கொண்டே வந்தால் இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது அடுத்த ஃபிளைட்டுக்கு !

திடீரென ஒரு அறிவிப்பு- கேட் மாறி விட்டது என்று! பாம்பே விமான நிலையம் கண்முன் வந்து சென்றது. திட்டிக் கொண்டே மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு ஓட்டம்! அங்கு ஏற்கெனவே இருந்த கூட்டத்துடன் ஐக்கியாமாயச்சு!

சொன்ன நேரத்திற்கு விமானமும் வந்து, வரிசை எண் படி உட்கார்ந்து இப்பொழுது எனக்கு ஜன்னல் சீட்! ஹையா!!! ஜாலி ஜாலி! பக்கத்தில் நின்றிருந்த விமானத்தை நீரில் கழுவி விட்டு கொட்டும் பனி உறைந்து விடாமல் இருக்க ஆன்டி-ப்ரீசிங் கெமிக்கலை ஸ்ப்ரே செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் குளிரில் பனிமழையில் நனைந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்க்க கஷ்டமாக இருந்தது!

நாங்கள் இருந்த விமானத்திற்குள் இருவர் ஏறுவதும் இறங்குவதுமாய் எதை எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்! விமான பணிப்பெண்ணும் எங்கெங்கு எக்ஷிட் இருக்கிறது, தண்ணீரில் விமானம் இறங்கி விட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்று சொல்லும் பொழுது, தண்ணீரில் விழுந்தால் குளிரிலேயே மர்கயா தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை- ஃப்லோட்டிங் சீட் இருக்கிறதா என்று சரிபார்த்தாயிற்று! மதியத்திற்குள் ஊருக்குச் சென்று விடலாம்! போனவுடன் நானும் மகளும் மெக்சிக்கன் உணவு சாப்பிடுவது என்றெல்லாம் கனவு காண ஆரம்பித்து விட்டோம் !

திடீரென ஒரு பெண்மணி வந்து விமானத்தில் எடை அதிகமாக இருக்கிறது. இரண்டு பேர் இறங்கினால் ஆளுக்கு $500 டிஸ்கவுன்ட் என்று ஆசை காட்ட , இருவர் இறங்கியும் இன்னமும் கிளம்புவேனா என்று அடம் பிடித்து நின்று கொண்டிருக்க...சிறிது நேரம் கழித்து அதே பெண்மணி விமானத்தில் ஏதோ மெக்கானிக்கல் கோளாறு இறங்குங்கள் என்று சொல்லி எல்லோரையும் இறக்கி விட்டார்கள். சிலர் டென்ஷன் ஆனார்கள்! என்ன பயன்?? அந்தப் பெண்மணி யாருடனோ பேசுவது போல் எங்களை விவரமாக தவிர்த்தார்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்...ஓடியே போயிற்று. அதற்குள் பனிமழையும் தீவிரமாக , வெதர் காரணம் என்று மேலும் இரண்டு மணி நேரங்கள்! யாரும் குரலை உயர்த்தி 'காச்மூச்' என்று கத்தவில்லை. பொறுமையாக உட்கார்ந்திருந்தார்கள்!!

இப்படியே போனால் என்ன செய்வது? இரவிற்குள் வீடு போய் சேருவோமா என்ற கவலை வந்து விட்டது. இதற்கு முன்னும் நியூயார்க்கில் எட்டு பத்து மணிநேரங்கள் மாட்டிக் கொண்ட அவஸ்தையான அனுபவமுண்டு. நினைத்தாலே பயமாக இருந்தது!

வானிலிருந்து அழகாக அசைந்து அசைந்து கீழிறங்கி பூமியை அலங்கரிக்கும் பனிமழையை வேடிக்கை பார்ப்பது தவிர வேறென்ன செய்ய முடியும் ? சிறிது நேரத்தில் எங்கும் வெள்ளைவெளேர் என பனியின் ராஜ்ஜியம்! விமானங்கள் வருவதிலும், இறங்குவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டு சிறு கலவரம்!

மக்கள் தரையில் அமர்ந்து கொண்டு கணினி மற்றும் கைப்பேசியில் தொலைந்திருந்தார்கள். என் அருகில் இருந்தவரின் மனைவி கடைக்குச் சென்று கொழுப்பில்லாத பால், வாழைப்பழம், க்ளூட்டன் ஃப்ரீ கேக் என்று கணவருக்கு கொண்டு வந்து கொடுத்தார். கணவர்களின் உடல்நலத்தில் மனைவிகளுக்குத் தான் எவ்வளவு அக்கறை???

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிக்கிட்டும் , ஃபேஸ்புக்ல பொலம்பிக்கிட்டும், எப்பத்தான் ஃபிளைட் வரும் என்று மக்கள் டென்ஷன் ஆக, இந்தா அந்தா என்று வந்து சேர்ந்தது ஒரு விமானம். கடவுளே, இதாவது பத்திரமாக எங்களை ஊர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மாலை நேரமாகி விட்டது. கலிஃபோர்னியா நேரப்படி மாலை தான் என்றாலும், நியூயார்க் நேரப்படி இரவு மலர ஆரம்பிக்க...

வந்தவுடன் மெக்சிக்கன் உணவு சாப்பிட்டுத் தூங்கியவர்கள் தான்...







































Wednesday, January 7, 2015

அவள் எனக்கா மகளானாள்...

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல நெகிழ்ச்சியான தருணங்கள். மனம் அசை போட்டு பார்த்திட இன்பமான நிகழ்வுகள். அப்படியான ஒன்று- 'கங்கிராஜுலேஷன்ஸ், நீ அம்மாவாக போற' என்று மகப்பேறு மருத்துவர்((நாத்தனாரும் கூட) கூறிய அந்நாள், வாழ்வில் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நாள் என்று கூட சொல்லலாம்.

ஒரு உயிரை சுமக்கப் போகிறேன் என்ற நினைவே எனக்குள் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஒருங்கே ஏற்படுத்தி இன்பத்தையும், பயத்தையும் கொடுத்தது. செய்தி கேட்ட அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம். அதுவரை என் இஷ்டத்திற்கு இருந்த வாழ்க்கை அன்று முதல் நான் செய்யும் ஒவ்வொன்றையும் என்னுள் வளரும் கருவை முன்னிறுத்தியே மாறிப் போனது. தலைச்சுற்றல், வாந்தி என்ற பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டாலும் மனதளவில் ஒருவித மாறுதல்!

மெதுவா நட, பார்த்துப் போ, பைக்கில போகத்தான் வேணுமா ?? .. இப்படி பல கேள்விகளை பார்க்கிறவர்கள் என்னை பார்த்து கேட்ட பொழுது கூடுதல் கவனமும் பதட்டமும் என்னைத் தொற்றிக் கொள்ள...கை தானாகவே அடிவயிற்றை தொட்டுப் பார்த்து உனக்கு ஒன்றும் இல்லை. நான் கவனமாக இருப்பேன் என்று எனக்குள் நானே பலமுறை சொல்லிக் கொண்டேன்.

கணவரிடமும் இனிமேல் தடாலடியாக பைக்கை ஓட்ட வேண்டாம். இருவரும் பைக்கில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுரை கூற அவர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள...

தங்கையும் மகப்பேறு மருத்துவராக இருந்தது மிக்க பலமாக இருந்தது. நான்காவது மாதத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்று தெரிந்தவுடன் டாக்டரும் கண்டிப்பாக பல வாரங்களுக்கு ஒய்வு தேவை என்று சொல்லி, எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பயத்தில் கழிந்த நாட்கள் என்னை ஆயாசப்படுத்தினாலும் அம்மா வீட்டில் என்னை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அனைவருக்கும் கவலையை தந்த நாட்கள் அவை.

ஒன்றும் செய்யாமல் படுத்தே இருப்பது ஒரு கொடுமை என்றுணர்ந்த நாட்களும் கூட! நான் எழுந்திருந்து நடந்தால் மெதுவா, பார்த்து என்று என்னைச் சுற்றி என் குடும்பத்து ஆட்கள் பதட்டத்துடன் என ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகவே கழிந்தது. ஒரு வழியாக மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தான் நான் நானாகவே உணர்ந்தேன்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தையும் வளர, வயிறும் பெரிதாக, பார்த்தவர்களும் உனக்குப் பெண் குழந்தை தான் என்று சொல்லியே பூரிப்படைய வைத்தார்கள். ஏற்கெனவே செய்த ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கணவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அந்நொடியிலிருந்து என்ன பெயர் வைப்பது, எப்படி அழைப்பது என்ற கனவு தான். வீட்டிற்கு வந்தவுடன் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் கண்ணில் பட, பெயரும் அன்றே முடிவானது :)

நாட்கள் செல்ல செல்ல விருந்துகளும் அதிகமானது. நான் எதன் மேலாவது ஆசைப்பட்டு சாப்பிடாமல் போனால் குழந்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்??? (நல்ல காரணம் எனக்கு கிடைத்து விட்டது... ) அதான், பருத்திப்பால் , பால்கோவா, பெங்காலி ஸ்வீட்ஸ்,ரசமலாய், ஜிலேபி, போளியல் இத்யாதிகள் முதல் வகைவகையான பிரியாணி விடாமல் சாப்பிட்டு...

தாழம்பு, மனோரஞ்சிதம் , பிச்சி, கொடிப்பிச்சி, மல்லிகை, முல்லை என்று மலர்களையும் சூடிக் கொண்ட அந்த நாட்கள் ...மனம் விரும்புதே :)

வளைகாப்பு செய்து எங்களுக்குப் பழக்கமில்லை என்று புக்ககத்தில் சொன்னாலும் தன் ஆசைக்காக கைநிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து அழகு பார்த்தாள் அம்மா.

எட்டாம் மாதத்தில் இருந்தே பார்ப்பவர்கள் எல்லாம் எப்போ டெலிவரி என்று கேட்கும் அளவுக்கு நானும் மாறித் தான் போனேன்!

வேலை பார்த்த கல்லூரி மலை மேல் இருந்ததால் நடப்பதும் கடினமாகிப் போனது. கால் வீங்கினால் பார்லி தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் கரைத்த தண்ணீர், கால்சியம் மருந்துகள் , பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று எனக்குப் பழக்கமில்லாத, பிடித்த, பிடிக்காத அனைத்தையும் என் குழந்தைக்காக, அவளின் நலனுக்காக என்று சாப்பிட ஆரம்பித்தேன்.

டாக்டரும் சிறுசிறு வேலைகள், யோகா, உடற்பயிற்சிகள் செய்தால் நல்லது என்றவுடன் தினமும் வீட்டை துடைப்பது என ஆரம்பித்தேன். மனதில் ஓடிய ஒரே விஷயம், நார்மல் டெலிவரி ஆக வேண்டும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நிறையவே மெனக்கெட்டேன்.

கேட்கும் பாட்டிலிருந்து படிக்கும் புத்தகம் வரை என ஒவ்வொன்றிலும் கவனம். கணவரும் எனக்குப் பிடித்த, அவருக்குப் பிடித்த பாடல்களை கிடார், புல்லாங்குழல் கொண்டு இசைக்க, குழந்தையின் அசைவை கண்டு களித்த கணங்கள் எல்லாம்...இனிமையானவை!

சுடச்சுட சாப்பிட்டாலோ, குடித்தாலோ குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாதே என்ற கவலை வேறு! கணவரின் நண்பர்கள் சர்ப்ரைஸாக குடும்பங்களுடன் வந்து சுவையான மீன் குழம்பும், வறுவலும் செய்த அந்த நாட்கள் மறக்க முடியாததொன்று!

பிரசவ நேரம் நெருங்குகையில் சாப்பாடு, தூக்கம் குறைந்து களைப்புடன் எப்போது குழந்தை பிறக்கும் என்று நாட்களை எண்ண ஆரம்பிக்க...

ஜனவரி முதல் வாரத்தில் ஒரு வெள்ளிகிழமையன்று நடக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்த கல்லூரி முதல்வர் எப்போதிருந்து விடுமுறையில் போகிறாய் , நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று அன்புடன் சொல்ல... என்னை பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன்.

மாதம் ஒரு முறை டாக்டரைப் பார்க்க ஆரம்பித்து, நாட்கள் நெருங்க மாதம் இருமுறையானது. ஒன்பதாவது மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை சென்று பரிசோதித்துக் கொள்ள, டாக்டரும் குழந்தை நலமாக இருக்கிறாள், பயமே வேண்டாம் இன்னும் இரு வாரங்களில் உன் கைகளில் தவழுவாள் என்றவுடன் பயமும் பரவசமுமாய் வீடு வந்து சேர்ந்தோம்.

வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டே ராபியா பிரியாணியையும் ஒரு கட்டு கட்டி விட்டு அப்பாடா என்று நிமிர்ந்தால் ஒரு இனம் புரியாத வலி வயிற்றில். டாக்டரை பார்த்து விட்டு தானே வந்தோம். இது ஒரு வேளை, false pain போல என்று எனக்குள் நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

சில நிமிடங்களில் 'விசுக்விசுக்' என்று உயிர் போகும் வலி. நிச்சயமாக இருக்காது. டாக்டர் தான் குழந்தையின் தலை திரும்பவே இல்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறது என்று சொன்னாரே! ஒரே குழப்பத்துடன் இருப்பதை பார்த்து கணவரும் என்னாச்சு , ஏன் டல்லாயிட்டே? ஆர் யூ ஆல்ரைட்? என கேட்டவுடன், வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. false pain போல என்றவுடன் பிரசவத்தை பற்றின புத்தகத்தை புரட்ட, அதில் சொல்லப்பட்டிருந்த அனைத்தும் என்னுள் நடப்பதை உணர்ந்தேன்.

எப்படி சாத்தியமாகும் என்று நினைக்கும் போதே உயிர் போய் மீண்டது போல் ஒரு வலி. அப்போதே இரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது. காலை வரை தாக்குப்பிடிக்க முடியும் என்ற நினைப்பு சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது. கணவருக்குப் பதற்றமும் தொற்றிக் கொள்ள, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த துணிகளை பையில் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே தாங்க முடியாத வலியில் துடிப்பதை பார்த்த என் கணவரும் பக்கத்து வீடுகளின் கதவை தட்டிப் பார்த்தும் பலனில்லாமால், என்னை தனியே விட்டுச் செல்ல பயந்து என்ன செய்வது என்று தவித்த தவிப்பு...அவருக்குள்ளும் பயம் தொற்றிக் கொண்டது.

தொலைப்பேசி, கைப்பேசியின் உதவியின்றி தொடர்பு கொள்வது எவ்வளவு சிரமம் என்று இன்று நினைத்தால் புரிகிறது!

ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில்! சரி, அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போகலாம், பைக்கில் தான் போக வேண்டும் என்று கணவர் பயத்துடன் சொன்னாலும், அதெல்லாம் ஒன்னும் ஆகாது அம்மா வீட்டிற்கே போய் விடலாம். அங்கு தங்கை இருக்கிற தைரியத்தில் என்ன நடந்தாலும் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் நடுஜாமத்தில் பைக்கில் மெதுவாக இப்ப எப்படி இருக்கு, இன்னும் கொஞ்ச தூரம் தான், வலி வந்தா சொல்லு என்று அவர் பேசிக் கொண்டே சென்றாலும் வலியின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே போவதை பல்லை கடித்துக் கொண்டு... வீடு போய் சேர்ந்தால் போதும் என்ற கவலையிலும் பயத்திலும் நான் அமைதியாகவே இருந்தேன்.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்தவுடன் சிரமப்பட்டு மாடியேறி ...அதற்குள் பதட்டத்துடன் குடும்பமே அல்லோலகப்பட, கீழ் வீட்டிலிருந்து வந்தவர்கள் விபூதி பூசி விட, அம்மா சீரகத்தண்ணீர் கொடுக்க, தங்கை ஊசி போட்டு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று சொல்ல, வாடகைக்கார் பிடிக்க திருப்பரங்குன்றத்திற்கு கணவரும் தம்பிகளும் ஓட,  டிராபிக் இல்லாத கீழவாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தோம்.

அப்பாவுக்குத் தான் என் மேல் கோபம். வரும் வழியில் பைக்கில் ஏதாவது ஆகி இருந்தால் என்று அந்த நேரத்திலும் என்னை கடிந்து கொண்டார் :(

பல வருடங்களாக பிரசவங்களைப் பார்த்து அனுபவமிக்க தாதி ஒருவர் தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்து விட்டு டாக்டருக்கு உறவினர்கள் என்று தெரிந்தபடியால் டாக்டருக்கும் சேதி சொல்லி விட்டார். அதற்குள் பெரியப்பா, பெரியம்மாவிற்கும் தகவல் சொல்லி அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். கணவரும், தம்பியும் டாக்டர் வீட்டுக்கே சென்று விட்டார்கள். மணி இரண்டு, மூன்று என்று கரைய வலியின் தீவிரமும் கூடிக் கொண்டே வர, பெற்றவர்களுக்குத் தான் பொறுக்குமா? அவர்களுக்குத் தான் மகளின் வலியும், பிறக்கப் போகும் குழந்தையை பற்றின பயமும், எல்லாம் நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையும்.

டாக்டர்களுக்கு இதெல்லாம் பழகிப் போன ஒன்று தான். அவரும் தங்கையிடம் பேசி உடனே வருவதாக கூறி, எல்லாவற்றையும் தயராக வைத்திருக்குமாறு நர்சிடம் சொல்லி விட்டார்.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திருக்கு மாற்றி விட்டார்கள். டாக்டரும் வந்து விட்டார். பிரசவ வலியின் உச்சத்தில் எனக்கு சிசெரியன் பண்ணி விடுங்கள் என்று அழுத அழுகையில், டாக்டர் சிரித்துக் கொண்டே நார்மல் டெலிவரி தான் பண்ண வேண்டும் என்று சொன்ன நீயா இப்படி எல்லாம் பேசுகிறாய், பயப்படாதே, உன் தங்கையும் இருக்கிறாள். நான் இருக்கிறேன், எல்லாம் நலமாக முடியும், நீ ஒத்துழைத்தால் என்று பேசிக் கொண்டே ஏதேதோ ஊசிகள் போட்டு, ஒரு பெண்ணின் 'வலி'மை என்ன என்று உணர வைத்து...மயங்கும் வேளையில்...இதோ உன் குழந்தை என்று கைகளில் கொடுக்க,

புஷ்டி கன்னங்களுடன் அழுது கொண்டே ஒரு புதிய ஜனனம்...இனம் புரியாத ஒரு உணர்வுடன் கைகளில் தவழ்ந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கணவரும் வந்து சேர, அம்மாவும் சுடச்சுட காபி தர, அப்பாடி ஒரு பெரிய சுமையை இறக்கிய திருப்தியில் நான். தம்பிகளும், தங்கையும், அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா என்று மாறிமாறி குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சிய அந்த நாளிலிருந்து இன்று வரை பாட்டி வீட்டுச் செல்லம்  எனக்கு என்றுமே குழந்தையாகத் தான் தெரிகிறாள்.

வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் அவள் மூலம் நான் கற்ற பாடங்கள் பல!

பல நேரங்களிலும் 'அவள் எனக்கா மகளானாள்...நான் அவளுக்கு மகளானேன்' என்று எண்ண வைத்து விடுகிறாள்!









Thursday, December 4, 2014

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...

ஒவ்வொரு வருடமும் பெரிய கார்த்திகை அன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவிலும், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோபுரமும் அதிக அளவில் மனதில் வலம் வரும்.

தீபாவளிக்குப் பிறகு வரும் கார்த்திகை மாதம் தீபஒளியுடன் வலம் வருவது மட்டுமில்லாமல் முருகன், ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து பயபக்தியுடன் விரதம் ஆரம்பிக்கும் இனிய காலமும், எங்கும் பக்திப் பாடல்கள் ஒலிக்க மனதை மயக்கும் தெய்வீகமான காலைப் பொழுதுகளும் கூட!

இம்மாத திங்கட்கிழமைகளில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது போல் முருகன் இருக்கும் கோவில்கள் எல்லாம் முருக பக்தர்களால் நிரம்பி வழியும். திருப்பரங்குன்றம், அழகர் கோவில், மேலமாசிவீதி முருகன் கோவில்களுக்கு குடும்பம் குடும்பமாக தூக்குச்சட்டிகளில் பால் எடுத்துக் கொண்டுச் செல்லும் பக்தர்களையும் காண முடியும்.

கார்த்திகை மாத திங்கட்கிழமை மாலை நேரங்களில் வாசல் தெளித்து கோலமிட்டு, மண்விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டு வாசலை அலங்கரித்து விளக்கேற்றும் வைபவம் பலருக்கும் இனிமையான ஒன்றாக இருந்திருக்கும். தீபஒளியில் ஜொலிக்கும் வீடுகள் தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டு யார் வீட்டில் அதிக விளக்குகள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து எந்த வீட்டில் அழகான டிசைனில் வைத்திருக்கிறார்கள் என்று வரை பார்க்க ஆவலாய் இருக்கும்.

பாட்டியுடன் அடிக்கடி சென்ற கோவில்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. படித்த கல்லூரியும், வேலை பார்த்த இடமும், சில வருடங்கள் வாழ்ந்த வீடும் கோவிலின் அருகில் இருந்ததால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட!

இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல் அப்போது இல்லா விட்டாலும் சிறு வயதில் திருப்பரங்குன்றம் செல்வது ஏதோ மதுரையிலிருந்து வெகு தொலைவிற்குப் பயணம் செய்வது போல் இருந்தது.

மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கூட்டத்துடன் வரும் பேருந்துகளைத் தவிர்த்து கூட்டம் அதிகமில்லாத பஸ்சில் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டே குடும்பத்துடன் சென்ற காலங்கள் எல்லாம் இனியவை!

வழியில் கண்டிப்பாகத் தெரிந்தவர் குடும்பம் ஒன்றாவது ஏறிக் கொள்ள பேச்சுத் துணையுடன் பிஸியாக இருக்கும் தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலைய நிறுத்தங்களில் ஏறும் கூட்டத்தினரையும் சுமந்து கொண்டு போகும் பஸ்சில் பயணிப்பதே சுகமாக இருக்கும். அன்று குடியிருப்புகள் குறைவான மீனாக்ஷி மில், ஆண்டாள்புரம், பைக்காரா தாண்டியவுடன் மரங்களுடன் கூடிய பசுமலை ஏரியா, தியாகராஜர் காலனி, கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை நிலங்கள், தியாகராஜர் பொறியியல் கல்லூரி என்று ஒரு வழியாக கோவிலை வந்தடையும் பொழுது நிறுத்தத்தின் எதிரே அழகே உருவாய் மலைக்கு அடியில் நிற்கும் வேலைச் சுமந்த கோபுரம் மனதை கொள்ளை கொள்ளும்!

வெங்காயத்தாமரை நிறைந்த குளம், வெயிலுக்குகந்த அம்மன் கோவில், போலீஸ் ஸ்டேஷன், அதைச் சுற்றியிருக்கும் குடிசை வீடுகள், ரோட்டில் திரியும் ஆடு, மாடு, எருமை, கோழிகள், ஜட்டியுடன் மூக்கு ஒழுகிக் கொண்டே திரியும் குழந்தைகள், குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே சாவகாசமாக நடந்து செல்லும் பெண்கள், பீடி குடித்துக் கொண்டே நடு ரோட்டில் நின்று உரக்க பேசிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்று கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் ரசிக்கத்தக்க காட்சிகள் ஏராளம்!

இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும் வெட்டிவேர், கதிர்பச்சையின் மணம் கோவிலுக்குள் நுழையும் பொழுதே தெய்வீகமாக இருக்கும். பெண்கள் தவறாமல் வாங்கித் தலையில் சூடிக் கொள்வார்கள். முருக பக்தர்களோடு ஐயப்ப பக்தர்களும் சேர்ந்து கோவில்களில் 'ஜேஜே' என்று கூட்டமாக இருக்கும்.

பஸ் நிறுத்தத்திலிருந்து கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் அபிஷேகத்திற்குப் பால், அர்ச்சனைக்குத் தேங்காய், பழத்தட்டு, பூக்கள், பூமாலைகள் விற்றுக் கொண்டு கடைகள் பரபர' வென்றிருக்கும். அர்ச்சனைத் தட்டு வாங்கி அங்கேயே செருப்பும் போட்டு விட்டு படியேறும் போதே யாரவது ஒருவர் 'நங்'கென்று சிதறு தேங்காய் உடைக்க, அதைப் பொறுக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைத் தாண்டி உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் கருப்பண்ணசாமியை தரிசித்துவிட்டுத் திரும்பினால் வெண்ணை உருண்டைகளை விற்பவர், காளிக்கு வெண்ணை சாத்துங்க, வேண்டியதெல்லாம் நடக்கும், குறைகள் நீங்கும் என்று சொல்லியே விற்றுக் கொண்டிருப்பார். அதை வாங்கி பயபக்தியுடன் சாத்திவிட்டு (இப்பொழுது விடுவதில்லை என்று நினைக்கிறேன்) கோவிலுக்குள் போகுமுன் விநாயகர், துர்க்கை அம்மனையும் வணங்கி விட்டு, வழியில் இருக்கும் எலுமிச்சம் பழ விளக்குகளை கவனமாக கடந்து ஜொலிக்கும் கோவில் கடைகளை பார்த்துக் கொண்டே அர்ச்சனை சீட்டையும் வாங்கிக் கொண்டு தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே, பைசா வருமா, பழம் வருமா என்று திருநாமம் பூசிக்கொண்டு பக்தர்களை பார்த்துக் கொண்டே இருக்கும் யானையையும், குரங்குகள் கூட்டத்தையும் கடந்து சில படிகள் ஏறி கோவில் குளத்திற்குப் போகும் கூட்டம்.

வழியில் குருகுலத்தில் வருங்காலப் பட்டர்கள் கோரஸாக சுலோகங்களை மனனம் செய்து கொண்டிருப்பார்கள். கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். பெரிய மரம் ஒன்றின் நிழலில் நடந்து கொண்டே அந்த மலைக்கோவிலின் குளத்திற்குப் போய் மீன்களுக்குப் பொரி வாங்கித் தூவி விட, மீன் கூட்டம் துள்ளிக் குதித்து கொண்டு அதைச் சாப்பிட, சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பதும் எனக்குப் பிடித்தமான ஒன்று!

மூல சன்னிதானத்திற்குப் போக படிகளில் ஏறி முருகனின் சந்நிதியின் இடப்பக்கம் காத்திருக்க வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து முருகனை விரைவாகவோ காத்திருந்தோ பார்க்கலாம். அதிகக் கூட்ட நேரங்களில் மக்கள் வியர்க்க  விறுவிறுக்க முண்டியடித்துக் கொண்டு அச்சிறிய இடத்தில் நீ முந்தி நான் முந்தி என்று இடித்துக் கொண்டு செல்வதும் உண்டு! இந்தக் கோவில் மலையை குடைந்து கட்டியிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. முருகனின் வேலை மட்டும் எடுத்து அபிஷேகம் செய்வார்கள். எல்லோருடைய அபிஷேகப்பாலையும் கலந்து அரோகரா கோஷத்துடன் அபிஷேகம் செய்ய, மலையில் குடைந்த சந்நிதானம் தீப ஒளியில் அழகாக ஜொலிக்க பக்தர்களும் மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். அபிஷேகப் பால் சந்தனம், விபூதி வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அலங்காரத்துடன் வீற்றிருக்கும் துர்கை, விநாயகர், பெருமாள், சத்யக்ரீஸ்வரரையும் வணங்கி விட்டுப் படிகளில் இறங்கும் வழியில் தேவி அன்னபூரணியின் தரிசனமும் உண்டு. தனியாக அம்பாளுக்கு இருக்கும் சந்நிதானத்தில் தரிசனம் செய்து விட்டு, மீண்டும் படிகளில் ஏறி அங்கிருக்கும் நடராஜர், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஆசியுடன் படிகளில் இறங்க, உற்சவ மூர்த்தி வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் மண்டபம்.

நவக்கிரகங்களும், தனியாளாக அமர்ந்திருக்கும் சனி பகவானையும் தரிசித்து விட்டுத் திரும்புகையில் மயிலிறகால் ஒரு வயதானவர் சாமரம் வீச சுகமாக இருக்கும். அவருக்கு கொஞ்சம் காணிக்கையும் கொடுத்து விட்டு அகத்தியர், தன்வந்திரி, மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் முருகனையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் ஆற அமர உட்காருவோம்.

பிறந்த குழந்தையை முதன் முதலில் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்பவர்களும், நேர்த்திக்கடனை முடிப்பவர்களும் என பலரும் மாவிளக்கு பூஜை செய்து கொண்டிருப்பார்கள். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு மாவிளக்கு மாவு, தேங்காய், பழம் கொடுப்பார்கள். நெய்யில் ஊறிய பச்சரிசி மாவு, வெல்லத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு, அபிஷேகப் பாலை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து முடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறிது பாலை எடுத்துக் கொண்டு, கோவில் ஸ்டாலில் விற்கும் அப்பம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே அப்பா, அம்மா, பாட்டி கைப்பிடித்து மீண்டும் வீடு வந்து சேர, அன்றைய நாள் இனிதான ஒன்றாக இருக்கும் !


சிறு வயதில் குடுகுடுவென ஏறிய கோவில் இன்றோ கொஞ்சம் மூச்சு வாங்குகிறது!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

ஆல்பனி மலை மீது எதிரொலிக்கும்...






































































.

Sunday, November 30, 2014

அன்புள்ள அப்பா...

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும் அதே குழப்பம் எனக்கும். புகுந்த வீட்டில் மாமியார் கிடையாது. மாமனாரை எப்படி அழைப்பது? சரி, சம்பிரதாயப்படி மாமா அல்லது பாவா என கூப்பிடுவது என்று நினைத்திருந்தேன்.

கணவரின் அண்ணிகள் மாமனாரை அப்பா என்று அழைப்பதை பார்த்து எனக்கு ஒரே கவலை. என் அப்பாவை விட 20 வயது மூத்தவர். அவ்வளவு வயதான மனிதரைப் போல் எங்கள் குடும்பத்தில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. எனக்கு தாத்தா மாதிரி இருக்கிறார். இவரைப் போய் எப்படி அப்பா என்று அழைப்பது? அதுவுமில்லாமால் என் அப்பாவைத் தவிர யாரையும் அப்பா என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

ஆனா, என்ன பண்றது?

அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னம்மா, எப்படி இருக்கே? வேலை எல்லாம் எப்படிபோகுது? உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்கும் பொழுது பதில் சரியாகச் சொல்லி முடிக்க ஒரு குழப்பத்துடன் மாமா, பாவா... கடைசியில் மைண்ட் வாய்சில் அப்பா என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.

இதில் கணவருக்கு மிக்க வருத்தம். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகள்கள் அப்பா என்று கூப்பிடுவது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அண்ணிகளும் அப்படித் தானே கூப்பிடுகிறார்கள்? நீயும் அப்படியே கூப்பிட்டால் நன்றாக இருக்கும். அண்ணிகள் என் அம்மாவையும் அம்மா என்று தான் அழைத்தார்கள் என்றார்.

நானும், என் அப்பாவைத் தவிர யாரையும் என்னால் மனதார அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது. உதட்டளவில் அப்பா  என கூப்பிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நீங்கள் என் அப்பாவை என்ன அப்பா என்றா கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு விட்டு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். well, எனக்கு என் நியாயம்!

திருமணம் முடிந்த நான்கைந்து மாதங்களில் எங்களுடன் வந்து தங்க மாமனாரை மச்சினர் வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தோம். மச்சினர் வீட்டின் மாடியில் ஆபிஸ் இருந்ததால் அங்கு வேலை செய்ய வருபவர்கள், பிசினஸ் ஆட்கள் என்று பலருடனும் பேசி நன்கு நேரத்தைப் போக்கியவர். மாலையில் வாக்கிங் சென்று ஒரு பேக்கரி கடையில் அவர் வயதையொத்த நண்பர்களுடன் பேசி விட்டு அவருக்குப் பிடித்த சமோசா , கேக் என்று மாலைப் பொழுதுகளை போக்கி விட்டு இருந்தவருக்கு எங்கள் வீட்டில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

நான் என்ன செய்ய முடியும்? பார்க்க எனக்குத் தான் வருத்தமாக இருந்தது.

என் ஆரம்ப கால சமையல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் வேறு அவருக்கு :(`

அரசியல் என்று பேச்சு வந்தால் காங்கிரஸ் தான் என்று மாமனார் ஆரம்பிக்க, உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்தியா உருப்படற மாதிரி தான் என்று அரிவாள் சுத்தியல் எடுக்காத குறையாக மகனுக்கும் அவருக்கும் வாக்குவாதம். குடும்ப பிசினஸ் பற்றி பேச்சு வந்தால் அதற்கும் ஒரே கலவரம். சரி, நீங்க வேலைக்கு கிளம்புங்க . காலணா பெறாத விஷயத்துக்கெல்லாம் இப்பிடியா? எப்ப பாரு வெட்டி பேச்சு பேசிக்கிட்டு என்று கணவரை அவசரஅவசரமாக வெளியில் அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

இவன் இப்படித்தாம்மா! ஆ ஊன்னா கோபம் வந்துடும்(ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்ங்கறது இது தான் போல ... ) நீ தான் நல்ல வார்த்தை சொல்லி அவன் கோபத்தை குறைக்கணும். (ம்ம்ம். அதுக்கு நான் தான் உங்களுக்கு கெடைச்சேனா ??)

ஓரிரு நாட்கள் அப்பாவிடம் பாராமுகம் தொடரும். அச்சமயங்களில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மகள் என்று ஒருத்தி இருந்திருந்தால் அவர் நிலைமை இப்படி இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி டீ போட்டு வைப்பது, கீரை வாங்குவது , வீட்டு வேலைக்காரம்மா வந்தால் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைப்பது என்று வேலைகளை அவர் செய்த போது எனக்குப் பதறி விட்டது. என் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவு தான்! நீங்கள் செய்யாதீர்கள் .....அப்பா(மைண்ட் வாய்சில்) என்று சொன்னாலும் காலையில் எழுந்திருக்க என்னால் முடியவில்லை. கருவுற்றிருந்த நேரம். மார்னிங் சிக்னஸ் :(

அவரோ, நீ சின்ன பொண்ணு. உன் உடம்பை பார்த்துக்க என்று சொல்லி மேலும் கில்ட்டியாக்க...எனக்கு மேலும் தர்ம சங்கடம். நீங்க சீக்கிரம் எந்திரிக்கணும், உங்க அப்பா பாவம்! எல்லா வேலையையும் செய்றது எனக்கு கஷ்டமா இருக்கு என்றவுடன் இவர் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டார்.

ஒரு வழியாக காலையில் நான் எழ ஆரம்பித்ததும் பால்காரர், அப்பா இல்லியாம்மா? அவர் தான கொஞ்ச நாளா வந்தாரு? ஊருக்குப் போய் விட்டாரா என்று கேட்க, வேலைக்கார அம்மாவோ, அப்பாருட்ட நான் சொல்லி இருந்தேனே என்று சொல்லும் பொழுது அவர் என் மாமனார் என்று சொன்னால் இவர்கள் என்னை தப்பாக நினைத்து விடுவார்கள் போலிருக்கே! என சிறிது அச்சம். பின்னே, எந்த வீட்டில் மாமனார் வேலை செய்வார்?
எனக்குத் தெரிந்து இல்லை. மெதுவாக அவர் மேல் எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மாலையில் வாக்கிங் முடிந்து வரும் போது எனக்கும்சேர்த்து சமோசா, கேக் கொண்டு வந்து கொடுக்க .. என் அப்பா மாதிரி அவரும் என்னை மகள் போல் நடத்த...என்னைச் சுற்றி இருந்த ஒருவித இறுக்கம் மெல்ல தளர்ந்து நானும் சகஜமாக இருக்க ஆரம்பித்தேன். அவருடைய பழங்கதைகளைச் சொல்லுங்கள் என்று அவருடைய தனிமையை என்னால் முடிந்த வரையில் கலகலப்பாக்க முயற்சித்தேன்.

அவர் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்ல, கெட்ட விஷயங்கள் என்று அவரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். மதுரையில் அவர்கள் வீட்டுச் சொத்து எங்கெல்லாம் எவ்வளவு இருந்தது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இப்பொழுது உங்களிடம் என்ன இருக்கிறது? போன கதைகளை ஏன் பேசி வெறுப்பேற்றுகிறீர்கள் என்று நெற்றிக்கண் திறக்க கோபக்கனலுடன் அப்பாவுக்கு எதிராக மகன் நிற்கும் போதெல்லாம், நான் தானே அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்? உங்களுக்கென்ன வேலை? அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினால் அவருக்கும் நன்றாக இருக்கும் என்று கணவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறேன்.

பழைய நினைவுகள் தரும் சுகத்தைப் போல் வேறு எதுவுமில்லை என்று தினமும் மாலையில் அவருடன் பேசுவது , டிவி பார்ப்பது என்று எனக்கும் பொழுது போனது.

குடும்பத்தில் நடந்த பல விஷயங்களைக் கூறினார். கணவரிடம் இப்படி எல்லாம் நடந்ததா என்று கேட்கும் பொழுது அவர் பதறிக் கொண்டே உனக்கு எப்படித் தெரியும் என கேட்க . ம்ம்ம். ஓப்லா வீட்டு ரகசியம் இப்ப எனக்கும் தெரியுமே என்று அவரை கலவரப்படுத்த எனக்கும் அவையெல்லாம் தோதாக இருந்தது.

மனைவியை இழந்த துயரம், அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இன்று வரை மகன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் என அவர் கலங்கியபடி சொல்லும் பொழுது எனக்கும் வேதனையாகி விட்டது.

மூத்த மகனை இழந்த சோகம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு மனதுக்கு விரும்பாத நிகழ்வுகள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் அதனால் உடல்பாதிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் என்னிடம் கூறுங்கள் என்று சொல்லும் பொழுது கூட, நீயோ இன்னும் சிறிது நாளில் கைக்குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்கள் அனைவரும் வேலை செய்கிறீர்கள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைம்மா என்று சொல்லும் பொழுது உண்மையாகவே என் கண்கள் கலங்கி விட்டது.

மனைவியை இழந்த கணவரின் நிலைமை மிகவும் கொடுமையானது போல!

என் குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை அவருக்கு என்று பேசும் பொழுது புரிந்து கொண்டேன். தம்பிகள், அப்பா, அம்மா வரும் பொழுது அன்பாக பேசுவார்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் மகாராணி என்று அழைத்து தன் மகன் ஒருவழியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான் என்ற மனநிறைவுடன் அவரின் விருப்பபடி யாருக்கும் தொந்தரவு தராமல் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

அன்பு தாத்தாவின் அறிமுகம் என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் என்றுமே எனக்கு உண்டு. அட்லீஸ்ட் மகளுடன் இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றாவது இருக்கிறது. மகனின் பல குணங்கள் தன் அப்பாவை நினைவுறுத்துகிறது என்று கணவர் கூறும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்.

யாருக்கும் தீங்கு நினைக்காத, பணத்தின் மேல் பற்றில்லாத, தனக்கு தீங்கிளைத்தவர்களையும் மன்னிக்கும் நல்ல பண்பான அமைதியான மனிதர்.

பழகிய சிறிது நாட்களில் என்னையும் அறியாமல் 'அப்பா' என்று சொல்ல வைத்த பெருமையுடன் அவரின் சகாப்தமும் முடிந்தது !






வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...