Wednesday, August 20, 2014

கனா காணும் காலங்கள் - 2

காலையில் பள்ளிக்குச் செல்லவும், சாப்பிட்டு எடுத்துச் செல்ல உணவுகளை தயார் செய்யவுமே அம்மாவுக்குச்  சரியாக இருக்கும்.  அம்மா பொறுமையாக எங்களுக்குப் பின்னல் போட்டு முடித்து அன்றலர்ந்த மலர்களைச்  சூடி அழகு பார்ப்பார்.  பாட்டியும் அம்மாவிற்கு உதவியாக எங்களை பள்ளிக்கு அனுப்புவதில் மும்முரமாய் இருப்பார்!

பள்ளி விட்டு மாலை வீட்டுக்குப் போய் சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் வரை விளையாடலாம்.  ஐந்து மணிக்கு ரேடியோவில் வரும் பாடல்களையும் கேட்கத் தவறியதில்லை. ஆறு மணியானவுடன் முகம் கழுவி, சுவாமி கும்பிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். இது கல்லூரி முடியும் வரை தொடர்ந்தது!

ஆரம்ப பள்ளி நாட்களில் சிலேட்டில் நம்பர்களையும், அ, ஆ என்று பலமுறை எழுதி வரச் சொல்வார்கள். கடல் குச்சியை வைத்து எழுதினால் எழுத்துக்கள் அவ்வளவு அழகாக வரும். கணக்குப் பாடம் அம்மா வந்தவுடன் நானும், அக்காவும் பண்ண ஆரம்பிப்போம். அவள் வேகமாக போட்டு விடுவாள். அவள் சிலேட்டிலிருந்து நான் காப்பியடிக்க, அம்மா தலையில் குட்டு வைக்க...என்று பல மாலைகள்! சிலேட்டில் எழுதிய வீட்டுப் பாடங்களை அழியாமல் எடுத்துச் செல்வதே பெரிய விஷயமாக இருந்தது அந்நாட்களில்!

வீட்டுப் பாடம் முடித்தவுடன் மீண்டும் வெளியில் போய் விளையாடலாம். மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத சிறு தெருவில் அம்மாக்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் விளையாட என்று தெருவே ஆனந்தமயமாக இருக்கும். டிவிக்கு முன்பான பொற்காலம் அது !

பெண் குழந்தைகள் இரு குழுவாக, பூ பறிக்க வருகிறோம், பூ பறிக்க வருகிறோம் என்று ஒரு குழு அடுத்த குழுவைப் பார்த்துப் பாடிக் கொண்டே வர, அவர்களைத் தொடர்ந்து, அடுத்த குழுவும், எந்தப் பூவை பறிக்கிறோம், எந்தப் பூவை பறிக்கிறோம் என்று பாடிக் கொண்டே அவர்கள் முன்னே வர, ரோஜாப்பூவை பறிக்கிறோம், ரோஜாப்பூவை பறிக்கிறோம் என்று கத்திப் பாடிக்கொண்டே என்று சிறிது நேரம் விளையாடுவோம். சில நேரங்களில், ஒருவர், கலர் கலர் வாட் கலர் என்று கேட்க, வாயில் வந்த கலரைச் சொன்னவுடன் அந்த நிறத்தில் கண்ணில் பட்டதை ஓடிப் போய்த் தொட வேண்டும். இல்லையேல் அவுட்.

இதைத் தவிர சொட்டங்கல்லு, பம்பர ஆட்டம், கிட்டி புல்லு, தட்டாமாலை, சோழிகளை உருட்டி விளையாடும் தாயம், பரமபத விளையாட்டு, கபடி கபடி என்று மூச்சு விடாமல் நரம்பு புடைக்க விளையாடியது என்று ஓடியாடித் துள்ளித் திரிந்த காலம்! வயது, ஏழை, பணக்கார்கள் என எவ்வித வித்தியாசங்களும் தெரியாமல் நாங்கள் social skills வளர்த்தது அப்படித்தான்!

ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்குப் போன பின்பு, நாங்கள் தனியாக பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தோம். எங்களுடன் வந்த சீனியர் மாணவிகளும் மேல்நிலைப் பள்ளிக்குப் போய்விட்டார்கள். பள்ளிக்குப் போகும் வழியில் நாடார் பள்ளியின் எதிர்புறம் ஒரு கட்டை வண்டியில் வயதானவர் ஒருவர் ஜவ்வு கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பார். ஐந்து பைசாவிற்கு கேட்டால் அதை இழுத்து இழுத்து உடைத்து தருவார். அவ்வளவு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். பத்து பைசாவிற்கு, நெய்யில் தோய்த்து தருவார். அது இன்னும் சூப்பராக இருக்கும். அவர் அழுக்காக, பீடி குடித்துக் கொண்டே இருப்பார். மிட்டாய் மேலேயும் ஈ எனக்கென்ன என்று மொய்த்துக் கொண்டிருக்கும். அண்ணே, அஞ்சு காசுக்கு மிட்டாய் கொடுங்க என்று வாங்கிச் சாப்பிட்டதெல்லாம் தப்பாக தெரியவில்லை அப்போது!

அவரைத் தாண்டி போனால் ஒரு அம்மா சிறு, சிறு கூடைகளில் வேக வைத்த சோளக்கருது, ஆள்வள்ளிக்கிழங்கு, சர்க்கரை கிழங்கு, வேகவைத்த பலாக் கொட்டை, அடுப்பில் சுட்ட பலாக் கொட்டை, சிறு படிகளில் ஐந்து அல்லது பத்து பைசாவிற்கு கடுக்காய்ப் பழம், இலந்தைப் பழம், நவ்வாப்பழம், அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், கொடுக்காப்புளி, புளி உருண்டை(ம்ம் புளிப்ப்பாக இருக்கும்) வைத்து விற்றுக் கொண்டிருப்பார். சின்ன கரியடுப்பில் சோளக்கருது வாட்டிக் கொண்டிருப்பார். வீட்டில் தினமும் வாங்கிச் சாப்பிட என்று கொடுக்கும் காசில் பள்ளி முடித்து விட்டு வரும் பொழுது சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டே போனதும்...

அது ஒரு கனாக்காலம்!

திங்கட்கிழமைகளில் வெள்ளைச் சீருடையும், மற்ற நாட்களில் வெள்ளை மற்றும் நீலச்சீருடையும் கண்டிப்பாக அணிய வேண்டும். நன்றாக தலையில் எண்ணை வைத்து நீலநிற ரிப்பன் கட்டி பின்னல் போட்டு, ரோஜா/பெங்களூர் பூ/ டிசம்பரில் வயலெட் நிறப் பூ என்று பூச்சூடி பள்ளிக்கு அனுப்புவார் அம்மா. மீ பர்ஸ்ட், மீ செகண்ட் என்று நாங்கள் மூவரும் தலைப்பின்னலுக்குச் சண்டை போட்டு காத்திருப்போம். அம்மா தலை வார வார தூக்கம் சொக்கும் அந்த காலை வேளையிலும்! அவர் இறுக்கமாக போட்ட பின்னல் பள்ளி விட்டு வந்த போதிலும் கலையாமல் இருக்கும்!

நேரமாகிவிட்டது என்று பள்ளிக்கு ஓட்டம். இல்லையென்றால், சுடுமணலில் முட்டி போட வைத்து விடுவார்கள்! அபராதமும் உண்டு. பள்ளி மணியடிப்பதற்கு முன்பே சென்று விடுவதால் அடி வாங்கிய அனுபவம் இல்லை. காலையில் சீக்கிரமே போய் வேப்பங்கொட்டையை பொறுக்கி ஒரு கூடையிலும், நெட்டிலிங்கம் மரத்திலிருந்து கருப்பு நிறத்தில் விழும் கொட்டைகளைப் பொறுக்கி இன்னொரு கூடையிலும் போட வேண்டும். தினமும் கடமையாக சர்ச்சுக்குப் போய் உள்ளே நுழைந்தவுடன் மனம் முருகனையே நினைக்கும். சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்து விட்டு ஒரு மூலையில் சுவற்றிலே சங்கு வைத்து அதில் இருக்கும் நீரை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பயபக்தியுடன் வகுப்புக்களுக்குச் செல்வோம்.

தினமும் காலையில் பிரேயர் நடக்கும். வரிசையாக எல்லா வகுப்பினரும், அவர்களின் ஆசிரியைகளும் நிற்க, மேடையில் ஒரு மாணவி பிரேயர் சொல்ல, நாங்கள் அதைத் திரும்பச் சொல்ல முடிந்தவுடன் ஏசப்பர் பாடலை ஒலிபரப்ப, மாணவிகள் தத்தம் வகுப்பிற்குத் திரும்பிக் கொண்டிருப்பார்கள்.


இடைவேளையின் போது பள்ளியிலேயே நொறுக்குத் தீனிகள் விற்பார்கள். முறுக்கு, மாங்கா சீசனில் வட்டமாக நறுக்கிய மாங்காயை உப்பு மற்றும் சிவப்பு மிளகாய்தூளில் ஊற வைத்தது, கடலை மிட்டாய், ஜீரா ஊறிய தேன் மிட்டாய், கமர்கட், நெல்லிக்காய், அரை நெல்லிக்காய் என்று வாயில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரங்கள்.

பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் வழியில் பள்ளி வாசலில் பலவிதமான நொறுக்குத் தீனிகள் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும்! தள்ளு வண்டியில் ஒருவர் ஐஸ்கட்டியை துருவி, அதன் மேல் கலர் கலராக சர்க்கரைத் தண்ணீரை ஊற்றித் தருவார். ஒரு உறிஞ்சலில் கலர் போய் விடும். அதையும் விடுவதில்லை. அடுத்த நாளே, தொண்டை கட்டிக் கொள்ளும் இல்லையென்றால் இருமல் வந்து விடும். ஆனாலும், ஆசை யாரை விட்டது?

ஸ்டேட் ஐஸின் பால் ஐஸ் பத்து பைசாவிற்கு கிடைக்கும். வாயில் வைத்தால் பால் மணத்துடன் இனிப்பான ஐஸ் தொண்டையில் கரையும். பெயர் தெரியாத ஐஸ் கம்பெனி வண்டிக்காரனிடமிருந்து ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ் கிடைக்கும். அந்த வயதில் எல்லாமே பிடித்திருந்தது. :)

வரும் வழியில் பாட்டி ஒருவர் குழிப்பணியாரம் சுட்டு விற்றுக் கொண்டிருப்பார். அதையும் விட்டு வைத்ததில்லை. இப்படி எதையாவது சாப்பிட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்வதுமாய் -


ம்ம்ம் ...அழியாத கோலங்களாய் அக்கால நினைவுகள் ...


(தொடரும்)












Saturday, August 2, 2014

யக்ஷகானா - ஒரு இனிய மாலை அனுபவம் ...

இன்று மாலை ஆல்பனி ஹிந்து கல்ச்சுரல் சென்டரில் யக்ஷகானா 'ஸ்ரீ கிருஷ்ணா பாரிஜாத நரகாசுர மோக்ஷா' நாட்டிய நாடகம் காணும் ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 

வார ஆரம்பத்தில் கோவிலிலிருந்து ஈமெயில் வந்த போதே இந்த நிகழ்ச்சியைத் தவற விடக் கூடாது என்று நினைத்திருந்தேன். 

இந்தக் குழுவை கன்னட மக்கள் சார்பில் அழைத்து வந்திருந்தார்கள். கன்னடம் புரியாதவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் ப்ரொஜெக்டரில் ஆங்கில மொழியாக்கத்தில் நாடகத்தின் கதாபாத்திரங்கள் பேசுவதின் சாராம்சத்தைப் போட்டது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் நாடகத்தை ரசிக்கவும் செய்ய வைத்தது நல்ல ஐடியா.

அரங்கில் நுழையும் பொழுதே கணீரென்ற குரலுடன் ஒருவர் பாடிக் கொண்டிருக்க சத்யபாமா தன் அந்தப்புரத்துத் தோழி ஒருவரிடம் கிருஷ்ணர் பாரிஜாதப் பூவை ருக்மிணிக்கு மட்டும் எப்படி கொடுத்தார்? என்னை மதிக்கவில்லை என்று புலம்புவதைப் போன்ற வசனங்களுடன் ஆடிக் கொண்டே பின்னணியில் மிருதங்கம், பாடல் என்று அரங்கத்தையே கட்டிப் போட்டிருந்தார்கள்.

அந்தபுரத்துத் தோழி பகவான் கிருஷ்ணனை சந்தித்து சத்யபாமாவின் நிலையை எடுத்துக் கூறி பாமாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூற வருமாறு அழைக்கும் காட்சியில் அவளும், கண்ணனும், அவளுடைய கணவனும் பேசுவது போல் அமைந்த காட்சிகள் மெதுவாக நாடகத்தின் மையப்பகுதியை நோக்கி அழகாக நகர்த்திச் சென்றார்கள்.

கிருஷ்ணன் தோழனிடம் பாமாவிற்கு என்னாயிற்று, என் மேல் அவளுக்கென்ன கோபம் என கேட்டுக் கொண்டே கதவைத் திறக்குமாறு பாமாவை கெஞ்சும் காட்சிகள் வேடிக்கையாகவும், பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க வகையிலும் அமைத்திருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நரகாசுரன் தேவலோகத்தை ஆட்கொள்ளுவதும் அவரிடமிருந்து தேவர்களை காத்துத் தருமாறு தேவேந்திரன் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டுவதும் பின் பாமாவும் கிருஷ்ணருடன் தேவலோகம் சென்று நரகாசுரனை கொன்று பாமாவிற்கு பாரிஜாத மரத்தையும் காண்பிப்பது போல் அமைத்திருந்த காட்சிகளில் ...

அவர்களின் முகபாவங்கள், கால் சலங்கையுடன் சுழன்று ஆடும் காட்சிகள்,  கைகளின் மூலம் அவர்கள் செய்த பாவங்கள், கணீர் வசனங்கள்-கன்னடத்தில் இருந்தாலும் ஆங்கில மொழியாக்கத்தின் உதவியுடன் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. பாமா மற்றும் அவர் தோழியின் உடை, நகை அலங்காரங்கள் , கதகளி ஸ்டைலில் கிருஷ்ணர், நரகாசுரன், இந்திரன் கதாப்பாத்திரங்களின் உடைகள், ஒலி ஒளியமைப்புகள், மிருதங்கம் மற்றும் பாகவதரின் குரலுடன் ஒரு அழகிய தெருக்கூத்தை கண்முன்னே கொண்டு வந்து அரங்கில் இருந்த அனைவரையும் ரசிக்க வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் அக்குழுவின் சார்பில் பேசியவர் இக்கலையை வரும் சந்ததியினர்களுக்காக பலருக்கும் கற்றுத் தருவதாகவும், அமெரிக்காவில் சின்மயா மிஷன் மூலம் பல குழந்தைகளும் கற்றுக் கொள்வதாகவும், நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறினார்.

குழுவிற்கு எங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வந்தோம். அக்குழுவின் அமைப்பாளர் சென்னையில் ஆறு வருடங்கள் மயிலாப்பூரில் இருந்ததாகவும் தமிழில் பேசத் தெரியும் என்று எப்படி கதக், கதகளி, மோகினியாட்டம் கலந்து தெருக்கூத்து ஸ்டைலில் விடிய விடிய நடக்கும் நாட்டிய நாடகங்களைப் பற்றி பேசியதும் நன்றாக இருந்தது.

கன்னட நண்பர்களுக்கு நாங்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்தது குறித்து மிக்க சந்தோஷம். அனைவரும் வந்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

ஒரு அழகான மாலைப்பொழுது இனிமையாக கழிந்ததில் மிகவும் மகிழ்ச்சி எனக்கும், கணவருக்கும். சப் டைட்டிலை படித்து கதையை ஓரளவுக்குப் புரிந்து கொண்ட மகனுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு புதிய அனுபவம்.

இந்திய கலாச்சாரத்தின் சாராம்சங்களை இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்வது அவ்வளவு எளிதன்று. அதுவும் இந்தியாவைத்  தவிர வெளியிடங்களில். ஆனால் தெருக்கூத்துக்களை பாதுக்காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட மக்கள் இருப்பதும் அமெரிக்காவிற்கு அவர்களை அழைத்து வந்து இந்நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்துவதும் மிகவும் பாராட்டுக்குரியது.

குத்தாட்டம், கொலைவெறி பிடித்த ஆடல், பாடல்கள் என்று சீரழிந்து கொண்டிருக்கும் காலத்தில் சிறுவயதில் பாட்டிகளுடன் கண்டுகளித்த வில்லுப்பாட்டு, சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சி மீண்டும் நினைவுறுத்தியது.

குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் அருமையான கருத்துக்களை தெருக்கூத்துக்களின் மூலம் கேட்ட காலங்கள் எல்லாம் ...ம்ம்ம்.

(படங்களை டபுள்-கிளிக் செய்து பார்க்கவும்)

படங்கள்: விஷ்வேஷ் ஒப்லா



Wednesday, July 23, 2014

இம்மையில் நன்மை தருவார் கோவில்

 இன்று கோவிலில் பிரதோஷ பூஜை நடப்பதை ஈமெயிலில் பார்த்தவுடன் அம்மாவுடன் கோவிலுக்குச் சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தன.


பிரதோஷத்திற்கு மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குள் முண்டியடித்து கூட்டத்துக்குள் சென்றாலும் சுவாமி அபிஷேகங்களை பார்க்க முடிவதில்லை. அவ்வளவு கூட்டம்! சரியென்று சன்னதி வெளியில் நின்று கண்ணாடி வழியே சிறிது நாட்கள் பார்த்து திருப்திபட்டுக் கொண்டோம். கூட்டம் அதிகமாக, நாங்கள் வரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அம்மாவும் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

மேலமாசி வீதியிலிருந்து சற்று உள்ளே இருக்கும் தெருவில் அப்பாவின் சித்தி வீட்டுக்குப் பல முறை இக்கோவிலைத் தாண்டி சென்றிருந்தாலும் முதன் முறை சென்ற பொழுது இவ்வளவு அமைதியான, அழகான பழைய கோவில், இங்கு இருப்பது எப்படி தெரியாமல் போனது என்று தான் தோன்றியது! முதன் முறை இங்கு சென்றது ஒரு பிரதோஷ நாளன்று தான்.

'கிணிங்கிணிங்' மணி சத்தத்துடன் சைக்கிள்களும், ஆட்டோ , பைக் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும், கடைகளுக்குச் செல்லும் கூட்டமும் 'ஜேஜே' என்று பரபரப்பான இரைச்சலான தெருவில் இருக்கிறது கோவில்.

விசாலமான கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே சுவாமி சன்னதி. நுழைவாயிலின் இடப்பக்கத்தில் கணபதிக்கு ஒரு சன்னதி. ருத்ரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அபிஷேகமும் சிறப்பாக நடக்க, முதன்முறையாக மிக அருகில் நின்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கண்டுகளித்த பூஜை நேரங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.

சுவாமியை வலம் வருகையில் அம்மன், பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் என்று பரந்த வெளியில். அரசமரமும், வில்வமரமும் பார்த்ததாக ஞாபகம். அன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனையும் செய்தோம். நல்லா கும்பிட்டுக்கோங்க. அப்பத்தான் நல்லா படிக்க முடியும்னு சொன்னவுடனே கண்ணை இறுக்க மூடிட்டு வேண்டியதும் ஞாபகமிருக்கிறது*:) happy 
 
பிரதோஷ நாட்களில் இக்கோவிலின் நினைவு மீண்டும் மதுரைக்கே அழைத்துச் சென்று விடுகிறது!



http://www.youtube.com/watch?v=ObmIP88GY_Q


Friday, July 18, 2014

கனா காணும் காலங்கள் - 1

இன்று ஃபேஸ்புக்கில் நான் படித்த மேல்நிலைப்பள்ளி அறுபதாவது ஆண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடுவதாக சுபா மேடம் செய்தி அனுப்பி இருந்தார்கள். அவரும் அப்பள்ளியில் படித்தவர்.

பள்ளி நாட்களில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் துள்ளித் திரிந்த காலங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்!

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த பொழுது நான் படித்த பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 'பல வருடங்களுக்கு' முன் பள்ளி சென்ற நினைவுகள் மீண்டும் மனதில் எழ ...!

அது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம். கூரை வேய்ந்த இடத்தில் நடந்த வகுப்புகள் நாங்கள் படிக்கும் காலத்திலேயே கட்டிடமாக உருவெடுத்தது. வெளி நாட்டினரின் பணஉதவியால் மதிய உணவு சில குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.பெரியபெரிய வேப்பிலை, நெட்டிலிங்கம் மரங்களும், பெரணிச் செடிகளும், பல வகையான குரோட்டன்ஸ் செடிகளும், அரைநெல்லிக்காய், முருங்கை மரங்களும் ஒரு பெரிய நாவல் மரமும் புடை சூழ இருந்த பள்ளி வளாகம் அது.

பள்ளியிலேயே கன்னியாஸ்திரீகள் தங்கும் மடமும் அவர்களுக்காக சமையல் கூடமும், மாடுகள் கட்டி வைத்த தொழுவமும், ஒரு தேவாலயமும் இருந்தது. அழகிய ரோஜா தோட்டத்தையும் நன்கு பராமரித்து வைத்திருப்பார்கள். நடுவே நீல வண்ண உடையில் மாதா கையில் ஏசுவுடன் இருக்கும் ஒரு சிலையும் அங்கே இருந்தது.

பள்ளிகளுக்கே உரிய பெரிய நீல வண்ணம் அடித்த கேட். அங்கு தாமதமாக வரும் மாணவியரை பிடித்து தண்டனை கொடுக்க கையில் பிரம்புடன் வெள்ளை உடையணிந்த கண்ணாடி போட்ட வயதான ஒரு கன்னியாஸ்திரீ! பார்த்தாலே பயமாக இருக்கும் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கத்தில் இருக்கும் அறைவாசலில் ஒரு சின்ன மணி. பக்கத்தில் ஒரு கரும்பலகை. அந்த ரூமைத் தாண்டிப் போனால் அரை கிளாஸ் மாணவியருக்கான இடம். ஆங்கில மீடியம் வகுப்புகளில் கலர் கலராக பூ, பழம், காய்கறிகள் படங்கள் சுவர் முழுவதும் தொங்கி கொண்டிருக்கும். தமிழ் மீடியத்தில் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வலது கையால் அசிர்வதிக்கிற ஏசுவின் படம் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் இருக்கும். அதன் பின்னால் சாக்பீஸ் வைத்திருப்பார்கள். அதன் பால் போன்ற நிறமும், கரும்பலகையில் ஆசிரியைகள் எழுதும் பொழுது மாவுமாவாக கீழே விழும் துருவலும், முதல் வரிசையில் உட்கார்ந்தால் தலை மேல் விழுந்து வெள்ளை முடியாக இருப்பதை பார்த்து ஒருவொருக்கொருவர் சிரித்துக் கொண்டதும்...


ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


நானும் என் அக்காவும் சிறு வயதிலிருந்தே ஒரே வகுப்பில் படித்தோம். அக்கா தனியாக போக பிடிக்காமல் அடம் பிடித்ததாகவும், நான் வீட்டில் அதிக சேட்டை பண்ணிக் கொண்டிருந்ததால்!!!! அவளுக்குத் துணையாக அனுப்பியதாகவும், பிறகு அவளுடனே தொடர்ந்து பள்ளிப் போக ஆரம்பிக்க, ஆசிரியைகளும் என்னை பள்ளியில் சேர்த்து விடலாம் என்று சொல்ல, இப்படியாகத்தான் என் ஆரம்ப பள்ளிக்காலம் ஆரம்பித்திருக்கிறது. என் தங்கையும் அங்கு தான் படித்தாள்.

எங்கள் தெருவில் இருந்த சீனியர் மாணவிகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வோம். நடந்து போனால் பள்ளிக்குப் போக குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களாவது ஆகும். தெருவே அடைத்துக் கொள்கிற மாதிரி மாணவிகள் எல்லோரும் சேர்ந்து போக, வழியில் மற்ற மாணவிகளும் சேர்ந்து கொள்வார்கள். மங்களேஸ்வரி அம்மன் கோவிலில் ஒரு கும்பிடும் உண்டு.

பழையகுயவர்பாளையத்தில் ஆண்கள் நாடார் பள்ளியைத் தாண்டி ரோட்டோரமாக நடந்து போவோம். அப்போது தெரு மிகவும் அகலமாக இருந்தது. பெரிய பெரிய மரங்களும் இருந்தன. இன்றிருப்பது போல் அவ்வளவு ஜன நடமாட்டமும் வண்டிகளும் கிடையாது. இப்போது தெரு குறுகியது போல் உள்ளது. வழி நெடுக சிறிய, பெரிய, பல குடியிருப்புகளைக் கொண்ட வீடுகள். குச்சி, மச்சி வீடுகள். குழாயடியில் நன்கு துலக்கிய பளபளக்கும் பித்தளை, அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்கள். பிறகு, பளிச் என்ற நிறத்துடன் பிளாஸ்டிக் குடங்கள் என உருமாறி விட்டது

பட்டுநூல்காரர், செட்டியார், நாடார், கிறிஸ்தவர், அத்து பல்கார் என்று சௌராஷ்ட்ரமும், தமிழும் கலந்து பேசும் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என்று ஒரு கதம்பமாக குடும்பங்கள் இருக்கும் தெருக்களை கடந்து போவோம்.

நாடார் பள்ளிக்கு எதிரில் வீட்டின் மாடியில், சேமியா காயப் போட்டிருப்பார்கள். பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பாயசம் தவிர வேறு எதற்கும் சேமியா சேர்க்காத காலம்! நெசவு நெய்பவர்கள் வெளியில் நூலைப் போட்டு சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வாசலில் வத்தல், அரிசி, வடாகம், அப்பளம் என்று எதையாவதைப் போட்டு காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தலை முடியை காய வைத்துக் கொண்டோ, பின்னலைப் போட்டுக் கொண்டோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் ஒண்ணுக்குப் போய்க் கொண்டிருக்கும். தெரு நாய்கள் இங்கேயும் அங்கேயும் சுற்றிக் கொண்டிருக்கும்-இப்படி பல காட்சிகளை தினமும் கடந்து சென்றிருக்கிறோம்.

எங்கள் பள்ளிக்கு பாலரெங்கபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ராம் தியேட்டர் பக்கத்திலிருந்தெல்லாம் படிக்க வந்தார்கள். மதிய நேரத்தில் சுடச்சுட அம்மா கொண்டு வந்து சாதத்தை கையில் உருட்டி கொடுக்க, நாங்களும் எங்கள் தெரு மாணவிகளும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவோம். மோதிர அப்பளத்தை விரலில் மாட்டிக் கொண்டு, ஒவ்வொரு கவளமாக சாப்பிட்டு முடிக்க, மதிய வகுப்புகள் ஆரம்பமாகும். அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவெடுத்துக் கொண்டு வருவார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை. பெற்றோருக்கும் நேரமில்லை! பள்ளிகளும் அனுமதிப்பதில்லை. சாப்பிட்டு முடித்த பின் மீதமிருக்கும் தண்ணீரை மணலில் கொட்டி அது காணாமல் போவதை பார்த்து ஆனந்தப்பட்டதெல்லாம்...




ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


Thursday, July 17, 2014

லதா புராணம் 176-185

- என் முகநூல் பக்கங்களில் இருந்து....

காலையில் ஆர்ப்பாட்டத்துடன் முதல்வர் பதவி 

ஏற்க வந்த AAP AK போல் 

ஒளி வட்டத்துடன் உலா வந்தாய் !

மதியமே பனியாய் பொழிந்து 

தெருவில் போராட்டம் நடத்திய AAP AK போல் 

மக்களை அலைக்கழித்தாய்!

மாலைக் குளிரில்

பதவியைத் தூக்கி எறிந்து

மக்களின் நம்பிக்கைகளை

உறைய வைத்த AAP AK போல்

உறைபனியும் ஆனாய்!

போதும் உன் அரசியல் விளையாட்டு !

உன்னுடன் 'மோதி'ப் பார்க்க யாரால் இயலும்???



லதா புராணம் #176



நதிகளும் 

பெண் பெயர்களை

சுமப்பதாலோ என்னவோ

கயமைப் பேய்கள்

அதையும்

விட்டு வைப்பதில்லை !

லதா புராணம் #177



சூடான தோசைக் கல்லுல 

பொடிசா நறுக்குன வெங்காயத்தைத் தூவி

அதுக்கு மேலே ரவா தோசை மாவை தெளிச்சு விட்டு

ஒரு சுத்து எண்ணைய ஊத்தி 

அது 'ஜிவுஜிவு'ன்னு மாவோட சேர்ந்து வெந்ததும் 

அப்பிடியே ஒரு பாதியா மடிச்சு

இலைத்தட்டு மேலே வச்சு

ஓரத்தில மொருமொருன்னு இருக்கிற தோசைய கிள்ளி

தேங்காய் சட்னியில பொரட்டி

சாம்பார்ல தோச்சு

அப்பிடியே சாப்பிடுவேனே!!!! 

லதா புராணம் #178



இனிப்பைக் கண்டவுடன் 

மான் போல் துள்ளும் 

உள்ளம். 

இனிப்பை உண்டவுடன் 

நாவில் தோன்றும் 

இன்பம்.

இனிப்பான செய்தியைக்

கேட்டவுடன்

உவகை கொள்ளும்

இந்நாள் ஓர் 'இனிய' நாள்!

லதா புராணம் #179




மதுரை வெயிலுக்கு 

ஹீட்டரை மாற்றிப் புலரும் காலை வேளையில்,

அந்தக் குளிரிலும் 'புஸ்சு புஸ்சு' வென்று ஓடிக்கொண்டு 

போகும் மக்களைப் பார்க்கும் பொழுது

வரும் உணர்ச்சி சொல்ல வைக்கும்

அட காட்டான்களா! இந்தக் குளிரிலும் ஓடணுமா என்று !!!!

லதா புராணம் #180



பனிமேகங்களிடம் 

சிக்கி

'பரிதி' 

பரிதவிப்பு 

லதா புராணம் #181



அடக் கடவுளே! 

மார்ச் மாதம் ஆரம்பிக்கப் போகிறது

இன்னும் ஜனவரி மாதிரி 

குளிரும், பனியும்! 

போலர் வோர்ட்டெக்ஸ்-அ நெனச்சா ...

போதும் போதும் -- இது மேற்கில் !

இன்னும் ஏப்ரல் கூட வரல

வெயில் காந்துது

அதுக்குள்ளே தண்ணீர் பிரச்னை வேற 

அக்னி நட்ச்சத்திரத்தை நெனச்சா ...

போதும் போதும் -- இது கிழக்கில் !

-இயற்கையின் திருவிளையாடல்கள் 

லதா புராணம் #182



உன்னைத் தொலைத்து 

விட்டதாக நினைத்து

உன் நினைவுகளில் 

வாழ்கின்ற எங்களை 

விட்டுச் செல்ல 

மனமில்லாமல்

மீண்டும் வந்தனையோ?

-Polar Vortex 

லதா புராணம் #183



நீல வானில் 

'தகதக'வென 

ஜொலிக்கும் 

கதிரவனின் 

திவ்ய தரிசனத்தில் 

குளிர்காலைப் பொழுது!

-வாழ்வு தொடங்குமிடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே ...

லதா புராணம் #184



தட்டில் சுவையான போளியல் 

தரையில் எடை பார்க்கும் எந்திரம் 

நடுவில் நான்!

இங்கி பிங்கி பாங்கி ...

லதா புராணம் #185


Saturday, July 12, 2014

911

 வட அமெரிக்காவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் தெரிந்து கொள்ளும் முதல் விஷயம் அவசர எண் 911 பற்றியதாகத் தான் இருக்கும். எந்த ஒரு தேவைக்கும்  இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் விரைவில் உதவிகள் கிடைக்கும்.

வீடு தீப்பற்றி எரிகிறதா, குழந்தையை யாரவது போட்டு அடிக்கிறார்களா, மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் அதிகம் தொந்தரவு செய்கிறார்களா, ரோட்டில் கார் பிரச்னையா, ஆக்சிடெண்டா இந்த நம்பர் அடித்தால் போதும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போலீஸ் கார்இருக்குமிடம் தேடி வந்து விடும் .

நாங்கள் யூட்டா மாநிலத்தில் இருக்கும் பொழுது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நண்பர் குடும்பத்துடன் மதிய உணவு முடித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.  திடீரென்று fire alarm அலற ஆரம்பிக்க, பயந்து கொண்டே மகளும், நண்பரின் மகனும் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

குடியிருந்தவர்கள் எங்கு தீப்பற்றி எரிகிறதோ புகை எங்காவது தெரிகிறதா என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டே இருக்க ...ஒரு சிலர் அவசரஅவசரமாக 911ஐ அழைக்க, சிறிது நேரத்தில் போலீஸ் கார்கள், தீயணைப்பு வண்டிகள் ஒன்றுக்கு இரண்டாக என்று அந்த இடமே பரபரப்பாக ... காது சவ்வு கிழியும் வகையில் அலாரம் அடிப்பது மட்டும் நிற்கவே இல்லை.

அன்று மார்மோன் கிறிஸ்தவர்கள் கடமை தவறாமல் சர்ச்சுக்குச் செல்லும் நாள். அபார்ட்மெண்ட் மேனஜேரும் சென்று விட்டிருந்தார்.

ஒரு வழியாக மேனஜரை கண்டுபிடித்து அவரிடமிருந்து சாவியை வாங்கி முதலில் அலாரம் ஆப் செய்யப்பட அப்பாடா என்றிருந்தது!

சிறிது நேரத்தில் போலீஸ் ஒருவர் வாசலில் வந்து உங்கள் அபார்ட்மென்ட்
முன்னாள் இருக்கும் அலாரம் தான் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா என்றவுடன் தான் பயந்து கொண்டே வீட்டுக்குள் ஓடிப் போன குழந்தைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள்.

அவர்களை அழைத்து அவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டிய பின் வாசலுக்கு வந்து பார்த்தால்,  குழந்தைகள் கூட அவசர நேரத்தில் எச்சரிக்கை செய்யும் வண்ணம் அலாரம் அவர்கள் உயரத்திற்கே வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்தில் அடித்துப் பார்த்து விட்டிருக்கிறார்கள் போலிருக்கு!

நியூயார்க் வந்த பிறகு ஒரு நாள் மகள் என் அம்மாவுடன் பேச இந்தியாவிற்கு டயல் செய்கிறேன் பேர்வழி என்று 011 போடுவதற்குப் பதிலாக 911 போட்டு விட மறுநொடியே யார், எங்கிருந்து பேசுகிறீர்கள், என்ன பிரச்னை என்றவுடன் பயத்தில் ஹலோ மட்டும் சொல்லி விட்டு எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று 'டக்'கென்று ஃபோனை வைத்திருக்கிறாள்.

ஒரு குழந்தை பேசி ஃபோனை வைத்தவுடன் அவர்களுக்கும் டவுட்டாகி விட்டது போல. அதற்குள் என் கணவரும் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஃபோன் அடிக்க, 911 ஆட்கள் வீட்டில் என்ன பிரச்னை, ஏன் ஒரு குழந்தை எங்களை கூப்பிட்டது?அந்த குழந்தை இருக்கிறதா? பேசச் சொல்லுங்கள் என்று சொல்ல,

எதற்கும் பயப்பட வேண்டாம், என்ன பிரச்னை என்றாலும் தயங்காமல் சொல்லலாம் என்று கூற மகளும் நான் தான் என் பாட்டியுடன் பேச நினைத்துத் தவறுதலாக இந்த எண்ணை அடித்து விட்டேன். வீட்டில் ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் திருப்தியில்லாமல் எங்கள் கடமையை நாங்கள் செய்தே ஆக வேண்டும். போலீஸ் வந்து சரிபார்த்து விட்டுச் சொல்லட்டும் என்று வைத்து விட்டார்கள் ஃபோனை.

என்ன காரியம் செய்திருக்கிறாய், இப்ப பார் போலீஸ் வரப் போகிறது என்று அவளை மேலும் மிரட்டிக் கொண்டிருக்கும் பொழுதே கதவு தட்டப்பட, வெளியில் போலீஸ்.

இந்த வீட்டிலிருந்து 911ஐ ஒரு குழந்தை அழைத்திருக்கிறது. அதற்காகத் தான் வந்தேன். யார், எதற்காகச் செய்தார்கள் என்று கேட்டு விட்டு சிறிது நேரம் எங்கே வேலை செய்கிறீர்கள், யார் யார் வீட்டில் இருக்கிறார்கள் என்று எங்களிடம் கேட்டு விட்டு, மகளிடம் உனக்கு ஏதாவது பிரச்னையா, யாரவது அடித்தார்களா என்று மிரண்டு போயிருந்தவளிடம் கேட்க, அவளும் பயந்து கொண்டே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்லவும் சமையல் அறை , பாத்ரூம், பெட்ரூம்கள் ஒன்று விடாமல் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்றார்.

ஒரு போலீஸ் வந்து வீட்டை சந்தேகத்துடன் பார்த்து விட்டுச் சென்றது கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.

இது நடந்த பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலையில் கடைக்குப் போய் விட்டு வரும் பொழுது 'விர் விர்'ரென்று லைட்டைச் சுழல விட்டுக் கொண்டே அதிவேகத்தில் ஒரு போலீஸ் கார் என்னைப் பின் தொடர, அட ராமா! யார் வீட்டில் என்ன பிரச்னையோ என்று ஒதுங்கி போலீஸ் கார் போகும் வரை காத்திருந்து பின் நானும் செல்ல..

(இந்த மாதிரி நேரங்களில் அனைவரும் ஒதுங்கி நின்று போலீஸ் , எமர்ஜென்சி  மருத்துவ வண்டி, தீயணைப்பு வண்டிகளுக்கு வழி கொடுக்க வேண்டும்)

நாங்கள் குடியிருந்த அபார்ட்மெண்ட்டுக்குள் கார் நுழைய, கடவுளே! குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று டென்ஷனாகி விட்டது எனக்கு. வீட்டில் பெரியம்மாவும் இருந்தார் அப்போது.

இந்த போலீஸ் கார் சொல்லி வைத்த மாதிரி என் முன்னாடியே போய்க் கொண்டிருந்தது வேறு என் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க, சரியாக எங்கள் அபார்ட்மெண்ட் பில்டிங் முன்னால் நிறுத்த, நானும் அவசர அவசராமாக இறங்கி, என்ன பிரச்னை?  நான் இங்கு தான் குடியிருக்கிறேன் என்று சொல்லவும்,

ஒன்றுமில்லை, 911 கால் வந்தது என்றவுடன் சரி எந்த அபார்ட்மெண்ட் என்று கேட்க, நான் குடியிருந்த அபார்ட்மெண்ட் நம்பர் என்றவுடன் எனக்கு ஒரே பயம். மகனுக்கு அப்போது ஒன்றரை வயது. இப்போது என்ன நடந்திருக்கும் என்று ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன் நானே பில்டிங் கதவை திறந்து வீட்டுக் கதவை திறந்தவுடன் ஓடி வந்த குழந்தைகள் என் பின்னே வந்த போலீசைக் கண்டவுடன் கொஞ்சம் மிரள...

குழந்தைகளைப் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அதற்குள் கணவரும் வந்து விட அப்பாடா என்றிருந்தது. போலீசும் உள்ளே வந்து வீட்டை நோட்டமிட்டார். என் பெரியம்மாவைப் பார்த்தவுடன் யார் இவர்கள் என்று அவருடைய பாஸ்போர்ட் இத்யாதிகளை சரிபார்த்து என்ன நடந்தது என்று கேட்க, அக்காவைப் போல வீடியோ கேம் விளையாடுவதாக நினைத்து மகன் ஃபோனில் இரண்டு விரல்களில் நம்பர்களை அழுத்த எப்படியோ 911 வந்திருக்கிறது. அது புரியாமல் அதை  தொடர்ந்து வந்த ஃபோனுக்கும் அவனே மழலையில் எங்களுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியதில் பிரச்னை.




வாயில் pacifier வைத்துக் கொண்டு மகனும் போலீசிடம் போய் அவர் வைத்திருந்த துப்பாக்கியை கேட்க, நீ தானா அந்த வாண்டு? என்னிடமே துப்பாக்கி கேட்கிறாயே நிச்சயம் நீ தான் இந்த சேட்டையை செய்திருக்க வேண்டும் என்று சொல்லி சிறிது நேரம் அவனிடம் பேசி விட்டு, துப்பாக்கியையும் காட்டி விட்டு சிரித்து பேசி விட்டுச் சென்றார்.

இதோடு இரண்டாவது 911 அழைப்பு இந்த வீட்டில் இருந்து வந்திருக்கிறது. இது ஒரு அவசர எண். இதே நேரத்தில் வேறு ஒரு குடும்பத்திற்கு உண்மையிலேயே உதவி தேவையாக இருக்கலாம். இனிமேல் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று எங்களுக்கும் அறிவுரை சொல்லி விட்டு அடுத்த முறை இப்படி ஒரு fake கால் வந்தால் உங்களுக்கு ஃபைன் போடுவோம் என்று மிரட்டி! விட்டு அவர் போகும் வரை ஒரே ...


திக்... திக்... திக்... தான்!










Monday, June 2, 2014

இது ஒரு பூரியின் கதை ...

பூரி கிழங்கு மசால், பூரி தால், பூரி சன்னா மசாலா இதனுடன் தயிர் வெங்காயம் சாப்பிட்டிருக்கிறேன். புதிதாக தேங்காய் சட்னியும் கொடுத்தார்கள் மதுரையில்! இப்படி பூரி கண்ட இடமே சொர்க்கம் என்றிருந்த எனக்கு நண்பர் அனுப்பிய ஒரு பதிவில் பூரியுடன் பாஸந்தி காம்பினேஷன் மட்டும் ட்ரை செய்யவில்லை என்று தோன்றுகிறது. பாஸந்தி எனக்குப் பிடித்த இனிப்பும் கூட! (எனக்குப் பிடிக்காத இனிப்பு எது-ன்னு யோசிக்கணும் )
எதற்கும் மதுரை டெல்லிவாலாவில் கிடைக்கிறதா என்று கேட்டுக்க வேண்டியது தான் *:) happy

சிறுவயதில் அம்மா சுவையான வெண்பொங்கல், அரிசி கஞ்சி (கென்னி பேஸ் ) பண்ணும் போதெல்லாம் எனக்கு பிடிக்கலை, வாந்தி வருது என்று அடம் பிடித்து உட்லண்ட்ஸ் ஹோட்டல் பூரி மசால் தான் வேணும் என கேட்டு சுவைத்து சாப்பிட்டிருக்கிறேன்.

தெற்குமாசி வீதி, மேலமாசிவீதி ஆரியபவன் போனால் எப்படா உப்பிய மொறுமொறு கோதுமை பூரி இத்தூனுண்டு கப்பில் தயிர் வெங்காயம் வரும் என்று ஆவலுடன் காத்திருந்து அவர்கள் கொடுக்கும் மல்லி, மிளகாய்த்தூள், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து செய்த புளிப்பான மசாலா குழம்புடன் பூரி சாப்பிட ...ம்ம்ம். திவ்யம் திவ்யம்!!! சாப்பிட்டு முடித்த பிறகும் அந்த மாசலா வாசத்துடன் கை மணக்கும்  *:) happy

வீட்டில் அம்மா பூரி செய்ய ஆரம்பித்தால் நான் உருண்டை பிடிப்பேன், நான் தான் தட்டுவேன் என்று வட்ட வடிவம் தவிர உலக வரைபடங்கள் அனைத்தும் வரும் எங்களுக்கு. அம்மாவோ லாவகமாக கையால் அப்படி இப்படி செய்து தட்டி விடுவார்.

அம்மா, அப்பா, பாட்டி, அக்கா , தங்கை, தம்பிகள் ஐவரும் சேர்ந்து பாசிப்பருப்பு தாலுடன் பூரியை உண்ட நாட்கள் எல்லாம் ...இனி ஒரு காலம் வர வேண்டும்! மீந்த பூரியை அடுத்த நாள் ஜீனி தொட்டுச் சாப்பிட எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடக்கும்.

திருமணத்திற்குப் பிறகு நானும், கணவரும் சேர்ந்து பேசிக்கொண்டே உருளைக்கிழங்கு மசாலுடன் அனைத்து பூரியும் தீரும் வரை சாப்பிட்ட ஞாயிறுக்கிழமை காலைகள் ...

மதுரையில் கணேஷ் பவனில் உருளைக்கிழங்கு மசாலாவிற்காகவே பல நாட்கள் அங்கு இரவுச் சாப்பாடாக ...

இன்றும் நியூஜெர்சி , கனடா சரவண பவனில் அதே அதே!





சென்ற முறை சென்னை சரவணபவனில் ஆரம்பித்து, கும்பகோணம், மதுரை என்று போன இடங்களில் எல்லாம் தவறாமல் சுவைத்த பூரியின் சுவை இன்னும் ....

ம்ம்ம்ம்ம் !!!

காலங்கள் மாறினாலும் பூரியின் சுவை மட்டும் மாறவே இல்லை. பூரியின் மீதான ஆசையும் குறையவில்லை!!!

இந்த பூரி பதிவிற்கு காரணமான லிங்க் படித்து இன்புறுங்கள் *:) happy


http://writersamas.blogspot.in/2013/04/blog-post.html





















































Monday, May 19, 2014

80s சித்திரைப் பொருட்காட்சி...

மதுரையில் சித்திரைத்திருவிழா நடக்கும் அதே நேரத்தில் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சிக்கான வேலைகளும் மும்முரமாக நடக்க ஆரம்பிக்கும். கோடை விடுமுறையில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குஇது ஒர் இனிய வரப்பிரசாதம். பாவம் பெரியவர்களுக்குத் தான் செலவை நினைத்துக் கவலையாக இருக்கும்.

வைகையில் அழகரை தரிசித்து விட்டு அவரை ஊருக்கு அனுப்பிய பின் அடுத்த இலக்கு இந்த மைதானம் தான். எப்ப போறோம், எப்ப போறோம் என்ற நச்சரிப்பு தாங்காமல் நாங்கள் வாங்கி கொடுத்ததை தான் வாங்கிக் கொள்ள வேண்டும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது என்ற விதிகளுக்கெல்லாம் கட்டுப்பட்டு ஒரு நாள் மாலை குடும்பத்துடன் கிளம்பிவிடுவோம். அப்போது பார்க்க வேண்டுமே எங்களை! நாங்கள் பொருட்காட்சிக்குப் போகிறோம் என்று மைக் வைத்துச் சொல்லாத குறையாக தெருவெல்லாம் சொல்லிவிட்டு பெருமையுடன் கிளம்புவோம்.

அப்பா, அம்மா கைப்பிடித்துக் கொண்டு போகும் சுகமே அலாதி தான். அதற்கும் எங்களுக்குள் போட்டி இருக்கும்.

பொருட்காட்சிக்குப் போகும் குழந்தைகளின் கண்களில் தெரியும் குதூகலம் கும்பல் கும்பலாக மக்கள் கூட்டம் என்று அந்த இடமே 'கலகல'வென்றிருக்கும்.

தமுக்கம் மைதானத்தின் முன் இருக்கும் தமிழ் அன்னை ஆரம்பித்து மைதானம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் 'மினுக்மினுக்' என்று ஜொலிக்க, கவுண்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போனவுடன் முதலில் போய் நிற்கும் இடம் போக்குவரத்துத்துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி. சிறிய வடிவில் அமைக்கப்பட்ட அழகான ஊர். அதைச் சுற்றி சுற்றி வரும் மினியேச்சர் கார்கள், பஸ்கள், ரயில் பாதைகள், ரயில்கள். வீடுகள், மரங்கள், விளையாட்டு மைதானம், மக்கள், குழந்தைகள் என்று பார்க்க பிரமிக்கும் வகையில் செய்திகளுடன் படங்களும் என்று அந்த கண்காட்சி நன்றாகவே இருக்கும். அவ்வளவாக கூட்டம் இருக்காது


அன்றைய துறை அமைச்சர் வணக்கம் சொல்வது போன்ற போஸ்டர், முதலமைச்சர் போஸ்டர்களை தாண்டி வெளியே வந்தால், மைதானத்திற்குள் குழந்தைகளுக்கான ரயிலில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் குழந்தைகளாய் கையசைத்துக் கொண்டே போவதைப் பார்த்து விட்டு,

எதிர்த்தாற் போல் நீண்ட கிருதா, பெல்பாட்டம் என்று அமிதாப், தர்மேந்திரா , ராஜேஷ் கண்ணா, சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு ஸ்டைலாக ரஜினி, ஸ்டெப் கட்டிங் சொக்கும் பார்வையுடன் கமல், தாஜ்மஹால், கோவில் என்று பல வண்ண உருவ அட்டைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியும் என்று கடைக்காரர் கூவிக் கொண்டிருக்க, யாருடன் எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டே தாஜ்மஹால் முன்பு நாங்கள் அமர்ந்து கொண்டு படம் எடுத்துக் கொள்ள எடுத்தவரும் ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள் என்று சொல்லும் பொழுது ஏதோ நிஜ தாஜ்மஹாலுக்கே போய் எடுத்து விட்ட சந்தோஷத்தில் படம் எப்படி வந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டே அடுத்த கடைக்கு விஜயம்.

பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களிலிருந்து விதவிதமான சேலைகள், கைவினைப் பொருட்கள் என்று எதையாவது ஒன்றை வாங்கத் தூண்டும் விதத்தில் பரப்பி வைத்திருப்பார்கள். திரும்பி அம்மாவை பார்க்கும் போதே எல்லாம் வீட்டுக்கு போகும் போது பார்த்துக்கலாம் என்று நாங்கள் ஏதாவது கேட்கும் முன்னே அப்பாவோ அம்மாவோ சொல்ல அடுத்து என்னாவாக இருக்கும் என்ற ஆவலுடன் ஓடிப் போய்க் கொண்டிருப்போம்.

சும்மா சும்மா ஓடிப்போய்க்கிட்டிருந்தே யாராவது தூக்கிட்டுப் போயிருவாங்க. எல்லாரும் சேர்ந்தே வாங்க என்று அப்ப அப்ப கட்டளைகள் வந்து கொண்டே இருக்க, காதுல கையில போடுறதுன்னு அன்றைய நதியா, குஷ்பூ மாடல்கள் கண்களில் மின்னலடிக்கும்.கேட்க நினைக்கும் மனதை அடக்கிக் கொண்டே, இல்லேன்னா திட்டு கிடைக்கும். வீட்டுக்குப் போனா அடியும் கிடைக்கும்!

அனைத்துக் கடைகளிலும் பெண்கள் கூட்டம் அலை மோதும். பேரம் பேசி சாமான்களை வாங்கி கொண்டிருப்பார்கள். சிறு குழந்தைகளுக்கான பொம்மைகள் பலூன்கள், விளையாட்டு சாமான்கள் என்றிருக்கும் கடைகள் முன் தொண்டை கிழிய கத்தி ஆர்ப்பரிக்கும் குழந்தைகளை பார்க்கவே பாவமாக இருக்கும்.

ஒரு கடையில் ஒருவர் சரசரவென்று பஜ்ஜிக்கு வாழைக்காய், கிழங்கு என்று சீவி பொரித்தெடுப்பதை பார்த்து நாமும் வாங்கினால் அப்படியே செய்யலாம் என்று நினைத்து வாங்குபவர்கள் பலர். அதே போல் முறுக்கு பிழிவதைக் கூட அனாயசமாக பண்ணுவதைப் பார்த்து வாங்கி ஏமாந்தவரும் பலர். இதற்குள் கொஞ்சம் களைத்திருப்போம். அங்கு நடக்கும் நாடகத்தையோ, நாட்டிய நிகழ்ச்சியையோ சிறிது நேரம் பார்த்து விட்டு(சொற்ப கூட்டமே அந்த இடத்தில் இருக்கும்)

பெல்பாட்டம் ஸ்டெப் கட்டிங் மன்மத குஞ்சுகள் சிங்கிளாக வராமல் கூட்டமாக வந்து கூட்டத்தில் இளம்பெண்களை நோட்டம் விடுவதும், சில்லறை கமெண்ட்களை இளித்துக் கொண்டே சொல்வதும், பெண்களை பின்தொடருவதும் போன்ற கூத்துக்களும் நடந்து கொண்டிருக்கும்.

பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்குத் தான் எத்தனை கவலைகள்?

ஏதாவது குடிக்க வேண்டும் என்றவுடன் அப்பாவும் என்ன வேணும் என்று கேட்க,  குடித்தவுடன் 'சுர்'ரென்று உச்சி மண்டையில் ஏதோ பண்ணுமே, லிம்கா குடிக்கலாமா ? இனிப்பும் புளிப்புமா டொரினோ, ஃபேன்ட்டாவா? வழுக்கையுடன் இனிப்பான இளநீரா, இல்லை இனிக்க இனிக்க தொண்டையில் கரையும் ஐஸ்கிரீம் , திகர்தண்டாவா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு கேட்டதை வாங்கிக் கொடுப்பார்.

சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் குடும்பங்களும், ஐஸ்கிரீமை கைகளில் வழிய விட்டு அதையும் நக்கிக் கொண்டே அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதற்குள் தெரிந்தவர்களைப் பார்த்து விட்டால் அவர்கள் என்ன சாமான்கள் வாங்கினார்கள் என்றதிலிருந்து என்ன என்ன கண்காட்சிகளைப் பார்த்தார்கள் என்று கேட்டுத் தெரிந்து விட்டு...


ஏரோப்ளேன் , கப் அண்ட் சாசர் என்று பலவிதமான ராட்டினங்களில் ஏறி கடைசியில் ராட்சத ராட்டினம் ஏற வரிசையில் காத்திருப்போம். ஒன்றும் பயமில்லையே என்று அப்பா,அம்மா கேட்க, பயமிருந்தாலும் ஏற வேண்டும் என்ற ஆசையில் இல்லை என்று தலையாட்டி விட்டு ரெண்டு ரெண்டு பேரா ஏறிக்குங்க என்றவுடன் ஆடும் இருக்கையில் அமரும் போதே முகத்தில் கலவரம் தொற்றிக் கொள்ளும்.

மெதுவாக ராட்டினம் மேலே போக அடி வயிற்றில் கலக்கமும், மேலே போக போக தலை சுற்றுவது போலவும் கீழே பார்த்தால் அந்தரங்கத்தில் தொங்குவது போலவும் இருக்கும். இருக்கையின் முன் கம்பியை இறுக்கப் பிடித்துக் கொண்டுஉச்சியிலிருந்து பார்த்தால் தமுக்கம் மைதானம் முழுவதும் சிறு சிறு உருவ மனிதர்களுடன் விளக்கொளியில் பார்க்க அருமையாக இருந்தாலும் பயத்தில் அதை அனுபவிக்க முடியாமல் போவது தான் கொடுமை!

ஒரு சில விடலைகள் அங்கிருக்கும் பெண்களை கவருவதற்கு இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு தனக்கு பயமே இல்லை இதெல்லாம் ஜுஜுபி என்று ஆர்ப்பரிக்க, சிலர் வாந்தி எடுக்க என்று எப்படா இது முடியும் என்ற மனநிலைக்கு வரும் பொழுது இறங்குங்கள் என்றவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வருவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தவறாமல் ஏறி விடுவோம். அப்பத்தானே, நான் ஜயன்ட் வீலில் ஏறினேனே என்று சொல்லிப் பீத்திக்கலாம் :)

அடுத்து எங்கே போகலாம் என்று அப்பா கேட்டவுடன் மரணக்கிணறு என்று கோரசாக சொல்ல டிக்கெட்டை கொடுத்து விட்டு அந்த மரப்பலகையின் வழியாக உள்ளே போக கீழே உள்ள நுழைவாயிலின் வழியே 'டபடப'வென்ற சத்தத்துடன் ஒரு பைக்கில் இளைஞன் மெதுவாக உள்ளே வர, அந்த இடம் முழுவதுமே அதிரும். மெதுவாக மேலே வர,வர சத்தமும், அதிர்வும் அதிகமாக கூட்டம் ஆர்ப்பரிக்க அவர் அந்த பலகை கிணற்றில் 'விர்விர்'ரென்று சுற்றி வர, பார்ப்பவர்களுக்குத் தான் எப்படி இவரால் முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.

வெளியே வந்தால் வைக்கோல் வாசனை, சாணி  என்ற கலவையான இடத்தில் தேமே என்று ஆடு, கோழி, மயில் பன்றி, கரடி சிங்கம், புலி என்று பார்க்க பாவமாய் இருக்கும். ஆனால் பயமாகவும் இருக்கும். அந்த கூடாரத்தையும் தவறாமல் பார்த்து விட்டு வந்து விடுவோம்.

ஒரு வழியாக எல்லாம் பார்த்த திருப்தியில் சாப்பிட போககையில் லாவகமாக திருப்பி திருப்பி போடும் சோளா பட்டுரா என்று உப்பிய பூரியும், காரமான சன்னா மசாலாவும் வாங்கி சாப்பிட்டு விட்டு, வரும் வழியில் மறக்காமல் கறுப்பு/வெள்ளை தாஜ்மஹால் போட்டோவையும் வாங்கிக் கொண்டு வீடும் வந்து சேரும் பொழுது நடந்த களைப்பும் போய் விட்டு வந்த திருப்தியும் சேர தூக்கமும் சொக்க...

கோடை விடுமுறையின் மகத்தானஅந்நாள் இனிமையான நன்னாள்

Saturday, May 3, 2014

சித்திரைத் திருவிழா

மதுரையில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா ஆரம்பமாகி தினம் ஒரு வாகனத்தில் அன்னையும், சுந்தரேஸ்வரரும் வீதிகளில் உலா வரத் தொடங்கி விட்டார்கள். மீனாக்ஷி கல்யாணம் அன்று இரவு பூப்பல்லக்கு மறுநாள் காலை நகரில் தேர் உலா என்று 'கலகல'ப்பிற்கும் குறைவிருக்காது!

மக்களுக்கும் திருவிழா, விருந்து என்று நாட்கள் ஓடிப் போவதே தெரியாது. விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கும் நித்தம் சுவாமியை பார்ப்பது, தனக்குப் பிடித்த மிட்டாய்களை வாங்கித்தின்பது என குதூகலமாக பொழுதும் போய் விடும் .

இத்தோடு முடிந்ததா திருவிழா?

அங்கயற்கண்ணியின் திருமணத்திற்காக அழகர் மலையிலிருந்து புறப்படும் பெருமாள் மதுரை வரும்வழியில் அவரை எதிர்கொள்ளும் மக்களுக்கும் அருள் புரிந்து விட்டு அடுத்த நாள் அதிகாலையில் வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் இறங்கும் அழகைக் காண மதுரை சுத்துப்பட்டு கிராமத்தில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு திரண்டு வரும் மக்கள் கூட்டத்தை பார்க்க வேண்டுமே!

அன்று எங்கள் வீட்டில் காலையில் இருந்தே ஒரே தடபுடலாக இருக்கும். நன்கு துலக்கி பட்டை நாமம் போட்ட ஒரு சொம்பில் நாட்டுச்சக்கரை, ஏலக்காய் பொடித்துப் போட்டு வாழை இலையால் மூடி கதம்ப பூக்களால் அலங்கரித்து தங்கக்குதிரை வாகனத்தில் வரும் கள்ளழகரை பார்ப்பதற்கு எல்லோரும் காத்திருப்போம்.

தெருவில் போகும் கோமாளிகளையும், அனுமன், கருடன் வேஷத்தில் ஆடிக் கொண்டே காசு வாங்கிச் செல்லும் கூட்டங்களையும் பார்த்துக் கொண்டு மேம்பாலம் அருகில் மக்களை இறக்கி விட்டுச் செல்லும் ரிக்க்ஷா, ஆட்டோக்களையும் கடந்து மூங்கில் கடைகளையும் தாண்டி தூரத்தில் தெரியும் அழகரை பார்த்துக் கொண்டே அவரை நோக்கி கூட்டத்துடன் கூட்டமாக ஓடியது ஒரு காலம்!

ஒரு மண்டபத்துக்கருகில் அழகருக்காக காத்திருந்து அவரைப் பார்த்ததும் சொம்பின் மேல் சூடம் வைத்து கும்பிட்டு விட்டு வந்தமர்ந்த பிறகும் கேட்கும் கோவிந்தா கோஷம்...ம்ம்ம். தீபாராதனை காட்டிய பிறகு சர்க்கரையை அங்கிருப்பவர்களுக்கும் கொடுத்து விட்டு உண்டியலிலும் தாரளமாக காணிக்கை போடுவார்கள்.


இந்த வருடம் அழகர் என்ன பட்டு(வெண் பட்டு, பச்சைப் பட்டு) உடுத்திக் கொண்டு வருவார் என்று ஆருடம் பார்ப்பவர்களும் ஆர்வமாக காத்திருப்பார்கள். ஜொலிக்கும் குதிரை வாகனமும், அழகான பெருமாளும், பெரிய நாமம் போட்ட விசிறிகளும், ஆற்றில் கூட்டமும், குளிர்நீரால் பெருமாளை வரவேற்கும் கோமாளிகளின் கூட்டமும் சொல்லாமல் சொல்லி விடும் அழகர் இருக்கும் இடத்தை. போலீஸ்காரர்களும் கூட்டத்தை கண்காணித்துக் கொண்டே அழுகின்ற குழந்தைகளைப் பற்றி அறிவிப்பதும் என்று திருவிழாக் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

கோமாளிகளும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளைச் சுற்றி நின்று கொண்டு தண்ணீரால் பீய்ச்சி அவரை வரவேற்பார்கள். அவர்கள் ஜல்ஜல் என்று சலங்கையை கட்டி சந்தனம் பூசி மலர்மாலைகளை போட்டுக் கொண்டு கையில் சுருட்டு மாதிரி ஒரு பெரிய தீவட்டியை வைத்திருப்பார்கள்... அவர்களைச் சுற்றி குழந்தைகள் பட்டாளாம் என்று அந்த இடத்தைப் பார்க்கவே 'கலகல'வென்றிருக்கும்.

சுவாமி எழுந்தருளும் மண்டபங்களில் அனைவருக்கும் சூடாக தொன்னையில் சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு நாமம் போட்ட ஓசி விசிறியையும் வாங்கிக் கொண்டு வரும் வழியில் பால் ஐஸ் வாங்கி வெயிலில் உருகி ஓடுவதற்குள் கையில் வழிவதையும் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டே (!) வர, இளநீரைப் பார்த்ததும் மீண்டும் அப்பாவை பார்க்க, இது வேண்டுமா திகர்தெண்டா வேண்டுமா என்று கேட்டு ஏதாவது ஒன்றை குடித்து விட்டு மறக்காமால் ஆப்பிள் பலூனையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேர, தெருவில் குழந்தைகள் கையில் திருவிழாவில் வாங்கின ஏதாவது ஒரு பொருள் இருக்கும் :)

அந்த வெயிலிலும் மக்கள் கூட்டத்தில் மதுரையே கலகலக்கும்!

முன்பெல்லாம் கள்ளழகரைப் பார்த்தவுடன் சூடம் ஏற்றிய நாமம் போட்ட சர்க்கரை சொம்புகள் தான் தெரியும். இப்போது என்னவென்றால் கைப்பேசிகளும், படம் பிடிக்கும் கேமராக்களும் தான் பெருமாளைச் சுற்றி! மக்கள் கைகளைத் தூக்கி கோவிந்தா சொல்கிறார்களோ இல்லையோ, கைப்பேசியை வைத்துக் கொண்டு படமெடுப்பதில் தான் மிக்க ஆர்வம் இருப்பதாக தெரிகிறது!

பாட்டியுடன் வண்டியூர் போய் இரவு முழுவதும் நடக்கும் தசாவதார நிகழ்ச்சிகளையும் விடிய விடிய பார்த்து விட்டு வந்திருக்கிறோம்.

மாமா ஒருவர் அண்ணா நகர் போன பிறகு அவர் இருந்த குடியிருப்பில் இருக்கும் பந்தலில் சுவாமி வர, அவரும் சொந்தங்களை அழைத்து விருந்து வைத்து சொந்தங்களுடன் சுவாமி பார்ப்பது என்று குதூகலமான நாட்கள்...!

கள்ளழகர் ஊர் திரும்பும் நாளன்று பிரத்யேமாக மிஷன் ஆஸ்பத்திரியில் இருந்து பஸ் விடுவார்கள். மக்கள் குடும்பங்களுடன் புளியோதரை, இட்லி, தயிர் சாதம், சுண்டல், முறுக்கு இத்யாதிகள் எடுத்துக் கொண்டு பாண்டியன் ஹோட்டல் முதல் கலெக்டர் பங்களா, மும்மாவடி வரை பல பந்தல்களிலும், நிழல்களிலும் அமர்ந்து கள்ளழகரை சேவித்து வழியனுப்பியும் வைக்க திருவிழா இனிதே முடியும்.

வேகவைத்த கடலை, ஆள்வள்ளிக்கிழங்கு, உளுந்து, தாடிக்கிழங்கு (பனங்கிழங்கு), முறுக்கு, அதிரசம், ஐஸ், பஞ்சு மிட்டாய், சர்பத் என்று உடல் எடை பற்றிய எந்த வித கவலையும் இல்லாமல் எதை தின்றாலும் செரிந்த வயது அது.

ம்ம்ம்ம். ஞாபகம் வருதே , ஞாபகம் வருதே ...

எதிர்சேவை செய்து வரவேற்றது போய்

ஆற்றில் இறங்கி வணங்கியது போய்

வண்டியூரில் கண்டுகளித்த தசாவதார தரிசனமும் போய்

கணினி வழியே பார்க்கும் நிலைமை இன்று.

மக்களின் உள்ளத்தில் உவகை தரும் சித்திரைத் திருவிழா மதுரை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!



Friday, April 25, 2014

பொக்கிஷம்...

குழந்தைகள் பிறந்து நோய் நொடியில்லாமால் வளரும் வரை பெற்றோர்களுக்குத் தினம் தினம் சவாலான நாட்கள் தான்!

என் மகள் பிறந்து மூன்று வயது வரை மதுரை வாசம். பாட்டி வீட்டிலேயே சீராட்டி பாராட்டி வளர்ந்த செல்லக் குழந்தை அவள். எப்போதாவது வாந்தி, பேதி, காய்ச்சல் என்று வரும். அமெரிக்கா வந்து டே கேர் செல்ல ஆரம்பித்த பிறகு தான் காது, தொண்டை வலி, காய்ச்சல் அதிகமாகியது. ஆனாலும் அவள் ஆரோக்கியமாகத் தான் இருந்தாள்.

மகன் பிறந்த மூன்று மாதங்களில் உறவினர் ஒருவர் குழந்தையின் தலையில் ஏதோ சின்ன கட்டி மாதிரி இருக்கிறது என்று சொல்ல நாங்களும் தடவிப் பார்த்ததில் ஆமா, மெத்து மெத்துன்னு இருக்கே என்னவோ ஏதோ என்று அடுத்த நாளே மருத்தவரிடம் அழைத்துச் செல்ல அவரும் மூளை அறுவை சிகிச்சை நிபுணர்களை போய் பார்க்குமாறு சொல்லி வயிற்றில் புளியை கரைத்தார்.

முதலில் ஒரு மருத்துவரைப் பார்க்க அவரும் தலையை தடவிப் பார்த்து விட்டு இந்த மாதிரி இருக்கும் சில குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை பலனளிக்கலாம் பலனளிக்காமல் போகவும் செய்யலாம் 50-50 சான்ஸ் தான். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் குழந்தைக்கு எதுவும் ஆகிடக் கூடாதே என்ற பதைபதைப்பு இருந்தாலும் அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று எங்களை  நாங்களே சமாதனப்படுத்திக் கொண்டோம் !

குழந்தையை கையில் கொடுத்து பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அவன் ஏன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று பித்துப் பிடித்த நிலையில் வேறு மருத்துவரையும் கலந்தாலோசித்து பார்க்கலாம் என்று அந்த நாளும் வந்தது.

அவர் மிகப் பொறுமையாக குழந்தையை டெஸ்ட் செய்தார். ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று ஒரு நாளும் குறித்தாயிற்று! அதற்குள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தலையில் கட்டியும் வளரத் தொடங்கி டேபிள் டென்னிஸ் பந்து அளவிற்கு அவன் தலையாட்டும் பொழுதெல்லாம் அதுவும் சேர்ந்து ஆடி எங்கே அவனுக்கு வலிக்குமோ என்று தூக்கத்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் இருக்கணுமே என்று அவனுக்காக வாங்கிய தொட்டிலையும் மறந்து என்னருகிலேயே வைத்துக் கொண்டு தூக்கத்தையும் தொலைத்தேன்.

ஒன்றும் அறியாத குழந்தையும் முகம் பார்த்து சிரிக்க அதை பார்த்து நாங்கள் அழ, இந்தச்  சிரிப்பும் குழந்தையும் நிரந்தரமா இல்லையா என்று நொடி நொடியாக அனுபவித்த ரணங்கள் வாழ்க்கையில் நான் அதுவரை சந்தித்த ரணங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது! இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கும் சொல்ல தெரியாத மன வேதனை.

ஸ்கேன் சென்டரில் இருந்து நாளும் நேரமும் சொல்லி குழந்தை அசையாமல் இருக்க மயக்க மருந்தையும் கொடுத்து அவன் மயக்கமான பிறகு மூன்று மாத குழந்தையை மெஷினில் படுக்க வைத்து இருபக்கமும் முட்டு கொடுத்து மெதுவாக உள்ளே செல்ல பல கோணங்களிலும் மூளையை படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, மனம் முழுவதும் அவனுக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது. அசையாமல் படுத்திருந்த அந்த நிலையில் குழந்தையைப் பார்க்க பார்க்க சத்தம் போட்டு அழவும் முடியாமல் மனதிற்குள்ளே புழுங்கத் தான் முடிந்தது.

ஒரு வழியாக மயக்கம் தெளியும் வரை குழந்தையை வைத்திருந்து அவன் எழுந்து பசி அடங்கிய பிறகு வீட்டிற்கு அனுப்பினார்கள். சிரித்துக் கொண்டே அங்கிருந்தவர்களையும் கவர்ந்த அதே நேரத்தில் கவலைப்படாதீர்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும் என்று  அவர்கள் நம்பிக்கையாகச்  சொன்னது பலிக்க வேண்டுமே என்று வேண்டாத கணங்கள் இல்லை, கடவுள்கள் இல்லை.

டாக்டரிடம் இருந்து எப்படா நல்ல செய்தி வரும்  மனம் தத்தளிக்க ஆரம்பித்து விட்டது. மகளை கவனித்துக் கொள்ள அம்மா இருந்ததால் என் உலகம் இவனை மட்டுமே சுற்றிக் கொண்டு இருந்தது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அழகு குழந்தை என்றவர்கள் தலையில் கட்டியை பார்த்து ஐயோ பாவம் என்று எங்களைப் பார்த்த பரிதாபப் பார்வையில் தினம் தினம் தொடர்ந்த மன உளைச்சல்கள் உடலையும் மனதையும் சோர்வடையச் செய்தன. குழந்தையை பார்க்கும் போதெல்லாம் என் மகன் என்னுடன் இருப்பானா என்ற கவலையில் அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுது அரற்ற தான் முடிந்தது!

ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டரும் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடலாம். மூளையுடன் சம்பந்தமில்லை போலத் தான் தெரிகிறது. சிகிச்சையின் போது இன்னும் தெளிவாகத் தெரியலாம் பயப்படாதீர்கள் என்று ஆறதலாக கூறினார்.

நாளும் குறிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்க வேண்டும். அதனால் முதல் நாள் மாலையில் இருந்து அவனுக்கு பால் கொடுக்க கூடாது. நடு இரவிற்குப் பிறகு தண்ணீரும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். இவனுக்கோ பசி அதிகம். அதுவரை நன்றாக பால் கொடுத்து விட்டு திடீரென்று நிறுத்தி தண்ணீர் கொடுத்தால் பசிக்கு அழும் குழந்தையின் குரலை கேட்க முடியவில்லை. சமாதானப்படுத்தவும் தெரியாமல் இரவு முழுவதும் அவனை நானும் கணவரும் மாற்றி மாற்றி தோளில் போட்டு தூங்க வைக்க முயற்சி செய்தோம். அழுது அழுதே களைத்துப் போய் தூங்கியவன் மீண்டும் நடு இரவில் வீவீவீவீவீல் என்று ஆரம்பித்து எப்பொழுது விடியும் என்று காத்திருந்த ஒவ்வொரு நொடியும் உயிர் போன நொடிகள் தான்!

ஆறரை மணிக்குத் தயராகி குழந்தை உயிருடன் ஒரு குறையில்லாமால் திரும்பி வர வேண்டும் என்று கடவுளையும் வேண்டிக் கொண்டு மருத்துவர்களின் கையில் கொடுக்கும் பொழுது என் உயிர் என்னிடம் இல்லை. அவர்கள் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைக்குத் தயாராக்க, காத்திருந்த நொடிகளில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல் எப்பொழுது எல்லாம் முடிந்து சுபச் செய்தியுடன் டாக்டர் வருவார் என்ற நொடிப் பொழுது அவஸ்தைகள்...

ஒவ்வொரு நொடியும் யுகங்களாக கரைய, இரண்டு மணி நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவரும் கவலை வேண்டாம், கட்டியை எடுத்து விட்டோம், நல்ல வேளை மூளை வரை செல்லாததால் பாதிப்பு இல்லை. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். பதினைந்து தையல்கள் போட்டு வலி தெரியாமல் இருக்க மருந்தும் கொடுத்திருக்கிறோம். மூன்று நாட்கள் கழித்து அழைத்து வாருங்கள் என்று சொல்லி கை குலுக்கி விட்டுப் போய் விட்டார். அன்று என் மகனை மீட்டுக் கொடுத்த அவர் தான் எனக்கு கடவுளாகத் தெரிந்தார்.

மனம் கொஞ்சம் தெளிவாக அங்கிருப்பவர்களை அப்போது தான் பார்த்தேன். உள்ளே அவர்களின் சொந்தங்களுக்கும் சிகிச்சை நடக்கிறது போல. சில நொடிகள் முன்பு வரை நான் இருந்த மன நிலையில் தான் அவர்களும் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ஸ்ட்ரெட்சரில் என் குழந்தை தலையில் பெரிய கட்டுடன் பெத்த மனம் பித்தாயிற்றே. அந்த நிலையில் அவனைக் கண்டதும் ....

ஒரு வழியாக அவன் முனகி மெதுவாக கண் விழித்து இரண்டு மணி நேரம் போல் அங்கிருந்தோம். எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

பசி அடங்கி அவனுலகத்தில் ஆனந்தமாக இருந்தான் என் செல்லம். காலை, மாலை, இரவு என்று அவன் பக்கத்திலேயே தவம் கிடந்தோம். தன் தலையில் ஏதோ ஒன்று பாரமாக இருப்பதை குழந்தை அறிந்திருக்க வேண்டும். தலையை திருப்பி திருப்பி பார்த்தும் ஒன்று தெரியவில்லை அவனுக்கு. தையல் காய்ந்து அரிக்க செய்ததோ என்னவோ மெதுவாக தலையை தடவப் போனவனை அவசர அவசரமாக தடுத்து கண்ணாடியில் அவன் முகத்தை காட்டி ...ம்ம்ம்... மெல்ல மெல்ல மனம் அமைதியானது!

மூன்றாம் நாள் கட்டுக்களை களைந்து தையலையும் பிரித்து விட்டார்கள். சமர்த்தாக அழாமல் இருந்தான். பேஸ்பால் மாதிரி வடுக்களுடன் இருந்த தலையை அப்பொழுது தான் பார்த்தேன்!!! அங்கு மட்டும் முடி வளராது என்று டாக்டர் சொன்னார்.

முடி வளரும் வரை உறுத்திக் கொண்டே இருந்த அந்த வடு காலம் செல்ல செல்ல பார்வையில் இருந்து மறைந்தாலும் மனதில் ஆறாத ரணங்களாகவே இருந்தது பல வருடத்திற்கும். எப்பொழுதும் ஒரு சந்தேகப் பார்வையில் உடலில் வேறு எங்கும் கட்டிகள் இல்லையே என்று சஞ்சலமாகவே இருந்தது!

எப்படியெல்லாம் என்னை வதைத்தாயடா என்று இன்றும் அவனிடம் சொல்லி புலம்பி கொண்டிருப்பேன்.

பால் இருந்தும் குடிக்க முடியாமல் அழுத குழந்தையை நினைக்கும் போதெல்லாம் பாலுக்கு கூட வழியில்லாமல் அழும் குழந்தைகளின் பசிக் கொடுமையையும், அந்த அவலத்தைக் காண நேரிடும் தாயின் மனவலியையும் என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை வளர்க்க தூக்கம், பசி, அபிலாஷைகள் என்று பலவற்றையும் தியாகம் செய்து விட்டுத் தான் இருப்பாள், இருக்கிறாள். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குப் போகவிருந்த இருபத்தியோரு வயது மகனை தொலைத்த எதிர் வீட்டு ரெனியின் அம்மா, தன் மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா தெரியவில்லை என்று அழும் ஒவ்வொரு நொடியும் எத்தகைய கொடிய ரணகணங்கள் ஒரு தாய்க்கு என்று என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிகிறது.

காலம் தான் பதில் சொல்லும்!




வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...