Wednesday, December 20, 2023

திருவரமங்கை திருக்கோவில்


நம்மாழ்வாரால் மங்களாசாசனம்(பாடல்) பெற்ற மற்றுமொரு திவ்யதேசம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் தெற்கே அமைந்துள்ள திருவரமங்கை திருக்கோவில். நாங்குநேரி, வானமாமலை, தோத்தாத்திரி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயாருடன் வீற்றிருக்கிறார். தினமும் பெருமாளுக்கு தைல அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த எண்ணெயை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர்.

வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது. கோவில் கருவறையில் ஆதிசேஷன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும் ஐதீகம்.

பழமையான இத்திருக்கோவிலில் நீண்ட பிரகாரங்களுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் மண்டபங்கள் இருக்கிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவினை ஒட்டி பகல் பத்து, ராப்பத்துநாட்களில் இம்மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பகல் பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் அறையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருமொழி பாசுரங்களையும், ராப்பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் திருவாய் மொழி பாசுரங்களையும் பாடி பெருமாளை பரவசப்படுத்துகிறார்கள்.

அழகான மற்றுமொரு திவ்யதேச தரிசனம் 🙂

திருவரமங்கை திருக்கோவில்

No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...