Tuesday, December 5, 2023

மகான்கள் அவதரித்த புண்ணிய தேசம்



இன்று ஸ்ரீஅரவிந்தர் மரணித்த நாள்.

பாரத தேசம் பல மகான்களைக் கண்ட தேசம். அந்தப் புண்ணிய பூமியில் பிறந்தவர்கள் நமக்கு கொடையாக வழங்கிய செல்வங்களைக் கற்று நற்சிந்தனைகளுடன் கூடிய எதிர்கால சந்ததியினரை வளர்த்தெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதுவும் வெறுப்பினால் மனிதர்களைக் கொல்லவும் துணிந்திருக்கும் கீழான சமூகத்தில் இத்தைகைய மகான்கள் நமக்கு கிடைத்த வரம். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றிருந்த பொழுது அந்த மகான் வசித்த அறையில் சிறிது நேரம் அமர்ந்து தியானிக்கும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஆரோவில்' அனுபவம் மறக்க முடியாத ஒன்று. இன்று நாங்கள் இருக்கும் நகரிலிருந்து ஒரு மணிநேரத் தொலைவில் அன்னையின் ஆசிரமம் உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது அங்கு அடிக்கடி சென்று வருவது உண்டு.
 
கலிஃபோர்னியாவில் 'லொடி' என்னும் ஊரில் அமைதியான இடத்தில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தர் சாதனா பீடத்திற்கு ஈஷ்வரின் அண்ணன் மகள் அழைத்துச் சென்றிருந்தாள். ஆல்பனி அருகே அன்னையின் ஆசிரமம் ஒன்று கேட்ஸ்கில் மலையில் இருக்கிறது. அடிக்கடி அங்கு சென்று வருவது உண்டு. ஆனால் கலிஃபோர்னியாவில் 'சாக்ரமெண்டோ' அருகில் இப்படி ஒரு ஆசிரமம் இருப்பது அன்று தான் தெரியும். வயல்வெளிகள் சூழ்ந்த புறநகர்ப்பகுதியைக் கடந்து வந்தால் ஒரு குட்டி நகரம்/கிராமம். அங்கு தான் இந்த ஆசிரமத்தைக் கட்டியுள்ளார்கள். நாங்கள் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தோம். நாய்கள் தான் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. மனிதர்களையே காணவில்லை. ஆசிரமத்து பைரவர் வாலாட்டிக் கொண்டே முகர்ந்து பார்த்துச் சென்று விட்டது. நமக்குத்தான் பயம்! பயப்படாதது போல தலையைத் தடவிக் கொடுக்க, அதுவும் தன்மையாக கூடவே நடந்து வந்தது.

 

மாடிப்படிகளில் ஏறி உள்ளே சென்றால் அமைதியான ஆசிரமம் வரவேற்கிறது. கதவுகளில் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களை மேற்கோள் காட்டியிருந்தார்கள். அன்னை, ஸ்ரீஅரவிந்தர் படங்கள் முன்பே பூக்களை வைத்து அலங்கரித்து இருந்தார்கள். அங்கே அமர்ந்து தியானம் செய்யும் வசதிகளும் இருந்தது. இரைச்சல்களில் இருந்து தப்பித்து அமைதியான இடத்திற்குள் நுழைந்தவுடன் துவக்கத்தில் இருக்கும் தடுமாற்றம் மெல்ல மறைந்து அமைதிக்குள் செல்ல எத்தனிக்கும். உடல் படபடப்பு குறைந்து சில்லிடுவதை உணர முடியும். கீழே பெரிய புத்தக அறை உள்ளது. அன்னை, ஸ்ரீஅரவிந்தர் எழுதிய அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கிறது. அங்கேயே தங்கி இளைப்பாற , மனம் அமைதி கொள்ள வார இறுதி நிகழ்ச்சிகள், தியானப்பயிற்சிகள், நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் வசதிகளும் இருக்கிறது. வெளியே அழகான காய்கறி, மலர்த்தோட்டங்கள். காயம் பட்ட மனதை மயிலிறகால் வருடுவது போல இருந்தது அங்கிருந்த ஒவ்வொரு நொடிகளும். அனுபவித்தே அறிய வேண்டிய தருணம். யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்.


ஈஷ்வர் தன்னுடைய ஆராய்ச்சிப்படிப்பிற்காக ஶ்ரீஅரவிந்தரின் “சாவித்ரி”யைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதற்கான முதற்கட்ட வேலைகளில் தீவிரமாக படித்து எழுதி வைத்திருந்ததெல்லாம்…


“All can be done if the god-touch is there.”
-Sri Aurobindo, Savitri: A Legend and a Symbol




No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...