Wednesday, November 29, 2023

நகரமா? நரகமா?

சொல்வனம் இதழ் 306ல் வெளிவந்துள்ள கட்டுரை.நகரமா? நரகமா?



புலம்பெயர்தல் என்பது மனிதகுலம் தோன்றிய நாளில் இருந்தே உணவு, உறைவிடம், பணி நிமித்தமாக ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு இடம்பெயரும் தொடர் நிகழ்வு ஆகும். அந்த வகையில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இருவகையினர். கல்வி, பணி நிமித்தமாக முறையான ஆவணங்கள் பெற்று அயல்நாடுகளில் குடியேறுபவர்கள் ஒரு வகையினர். நாளடைவில் இவர்கள் நிரந்தர குடியுரிமை பெற்று நன்றாக வசதியுடன் வாழ்பவர்கள். உள்நாட்டுப் போர், இயற்கைப்பேரழிவுகள், அரசியல் மாற்றம், வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இரண்டாவது வகையினர். இவர்களில் சட்ட விரோதமாக, அகதிகளாக குடியேறுபவர்களைக் கையாள முடியாமல் தான் உலகநாடுகள் பலவும் தத்தளித்துக் கொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறது. தற்போது அமெரிக்காவும் இந்த குடியேற்றப் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாமல் தள்ளாடி வருகிறது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பின் ஐரோப்பியாவிலிருந்து வந்திறங்கிய கூட்டம் அமெரிக்காவின் பூர்வகுடிகளைக் கொன்று நிலத்தை ஆக்கிரமித்தது. ஸ்பெயின்,பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாண்ட்ஸ், இங்கிலாந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கிடையே நடந்த கடுமையான போரில் ஆங்கிலேயர்கள் வசம் தான் அமெரிக்கா இருந்தது. இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஐரோப்பியர்கள் தான் அதிகளவில் அமெரிக்காவிற்குக் குடியேறினர். 1882ல் முதல் “பொது குடியேற்றச்சட்டம்” இயற்றப்பட்டது. அதன் படி, அகதிகள் (அப்பொழுது கப்பலில் வந்து இறங்கியவர்கள்) ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். குற்றவாளிகள், சுயமாக வேலை செய்ய இயலாதவர்களை நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே முதலில் அனுமதி வழங்கப்பட்டது. 1870 ஆம் ஆண்டில் குடியுரிமைக்கான உரிமை ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கும் நீட்டிக்கப்பட்டது. 1875 முதல் ஆசியாவிலிருந்து அதிகளவில் மக்கள் புலம்பெயர்வதைத் தடுக்க முதலில் சீனர்களின் நிரந்தர குடியேற்றத்தையும் பின் வேறு ஆசிய நாட்டினரின் நிரந்தர குடியேற்றத்தையும் குறைக்க தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்ட குடியேற்றச் சட்டங்கள் அமலுக்கு வந்தன.

1900களின் முற்பகுதியில் நாட்டின் பிரதான குடியேற்றம் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்தது. இதனைத் தடுக்க 1924ல் மொத்த வருடாந்திர குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக, பிறந்த நாட்டின் அடிப்படையில் குடியேற்ற எண்ணிக்கை ஒதுக்கீடு விதிக்கும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.1952ஆம் ஆண்டில் மற்ற ஆசியர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விசாக்களை சட்டம் அனுமதித்தது. மேலும் விசாக்களைத் தடை செய்ய காரணமாக இருந்த இன பாகுபாடு முதன்முறையாக நீக்கப்பட்டது. பூர்வீக நாட்டின் அடிப்படையில் இருந்த ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஜனாதிபதி ஆணையம் பரிந்துரைத்த போதிலும் அன்றைய காங்கிரஸ் உடன்படவில்லை.

1965ம் ஆண்டில் அரசியல், சமூக, புவிசார் அரசியல் காரணிகளால் நாட்டின் அடிப்படையில் நடந்த ஒதுக்கீட்டைக் காட்டிலும் குடும்ப மறு ஒருங்கிணைப்பு, திறமையான புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் முதன்முதலாக தென் அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்பவர்களின் குடியேற்றத்திற்கு வரம்புகளை விதித்தது. அதற்கு முன், லத்தீன் அமெரிக்கர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1965ல் மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தால் ஐரோப்பாவை விட ஆசியா, லத்தீன் அமெரிக்காவில் பிறந்தவர்கள் அதிகளவில் குடியேறி வருகிறார்கள்.

இந்த குடியேற்ற எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேர்தலில் ஒரு முக்கிய அம்சமாக பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் என்ன பயன்? இரு கட்சிகளும் இணைந்து எடுக்க வேண்டிய முடிவுகளில் இணக்கம் இல்லாததால் கள்ளக்குடியேறிகளும் அகதிகளும் ஆயிரக்கணக்கில் தினமும் நாட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நகரங்களிலும் குறிப்பாக ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இன்று நியூயார்க் நகரம் நோக்கி வெனிசூலா, ஈக்வடார், ஆஃப்ரிக்காவிலிருந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து நெருக்கடியின் மையமாக மாறியுள்ளது. அதிக வேலை வாய்ப்புகள், பொது போக்குவரத்து அமைப்பு, வணிகம், கலாச்சாரம், பொழுதுபோக்கு என பல அம்சங்கள் இந்த நகரத்தை நோக்கிப் படையெடுக்க முக்கிய காரணிகளாக உள்ளன.

2022 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து 110,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நியூயார்க் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்களை எதிர்கொள்வதில் அல்லோலப்படுகிறது ‘பிக் ஆப்பிள்’ நகரம். தங்கும் இடமின்றி தவிப்பவர்களுக்கு அரசு இல்லங்களில் இரவு நேரத்தில் மட்டும் தங்கிச்செல்ல படுக்கைகளைக் கொடுக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை மாநில அரசிற்கு உள்ளது. ஆனால் அதிகளவில் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. இதனால் பெரும்பாலோனோர் சாலையோரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தனிமனிதர்கள், பெரும்பாலும் ஆண்கள் அட்டைப்பெட்டிகளைப் படுக்கையாகப் பயன்படுத்திக் கொண்டு நடைபாதைகளில் உறங்கி வரும் நிலையில் தற்பொழுது குழந்தைகளுடன் குடும்பங்களும் தெருவில் படுத்து உறங்கும் நிலை வந்துவிடப்போகிறது என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பனிக்காலத்தில் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் தீர்வு காண முடியாமல் நகராட்சி தவித்துக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர்ந்தோரின் ஆதரவிற்காக நியூயார்க் நகரத்திற்கு $140 மில்லியனுக்கும் அதிகமான கூட்டாட்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வாஷிங்டனில் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் அலெஜான்ட்ரோ மயோர்காஸை நியூயார்க் நகர மேயர் ஆடம்ஸ் மற்றும் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்தித்ததாக அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நெருக்கடியை மதிப்பிடுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS, டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி) குழு நியூயார்க் நகரில் ஆய்வு செய்து கொண்டு வருகிறது.

புகலிடம் தேடி வருபவர்கள் தங்குவதற்கு வசதியாக அரசுக்குச் சொந்தமான இடங்களை வழங்கியுள்ளது மாநில அரசு. வீட்டுவசதி, தேசிய காவலர் உதவி, புலம்பெயர்ந்தோருக்கான சட்ட சேவைகளுக்காக 1பில்லியன் டாலர்கள் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதிநிலையில் கூடுதலாக 1பில்லியன் டாலர்கள் வழங்குவது குறித்து மாநில சட்டமன்றத் தலைவர்களுடன் பேசி வருவதாக ஆளுநர் கேத்தி ஹோக்குல் கூறியுள்ளார். மேயர் ஆடம்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் புலம்பெயர்ந்தோரைச் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கும் வழிமுறைகளை வலியுறுத்துவதாகவும் “நகரத்திற்கு உதவ மாநில அரசும் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த இலையுதிர்காலத்தில் மட்டும் நியூயார்க் நகரத்தில் வீடற்ற மக்களின் தொகை அதிகரித்து சாதனை படைத்துள்ளது என்பது வருத்தமான விஷயம் மட்டுமல்ல அதிர்ச்சிகரமானதும் கூட! “இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. இதனால் நகரத்திற்குக் கூடுதலாக மூன்று ஆண்டுகளில் $12 பில்லியன் செலவாகும்.” என்று மேயரும் சமீபத்திய வாரங்களில் அகதிகள் தங்க அறைகளோ வசதிகளோ இல்லை என்று நகர அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

“இந்த நாட்டில் பல வருடங்களாக குடியேற்ற அமைப்புச்சட்டங்ளில் முறையான மாற்றங்கள் இன்றி சீர்குலைந்து போனதில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்று நியூயார்க் நகரம் தள்ளப்பட்டுள்ளது. புகலிடம் தேடி வருபவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மன்ஹாட்டனில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலுக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது நிலவும் நெருக்கடி நியூயார்க் நகரத்தை அழித்துவிடும். போர்ட் அத்தாரிட்டிக்கு அதிகமான பேருந்துகளில் வருபவர்களின் எண்ணிக்கையால் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான வசதி வாய்ப்புகளுக்கான கூட்டாட்சி அரசின் ஆதரவு கிடைக்கவில்லை.” என்று வருத்தத்துடன் நகர நிலைமையை மக்களிடம் பகிர்ந்துள்ளார் மேயர் ஆடம்ஸ்.

சட்ட உதவி சங்கம் மற்றும் வீடற்றவர்களுக்கான கூட்டணி, “புதிய வருகைகள் நியூயார்க் நகரத்தை அழித்துவிடும்” என்ற மேயரின் “டிஸ்டோபியன் கருத்துகளை” பொறுப்பற்ற, பயனற்ற, மனிதாபிமானமற்ற, பயம் தூண்டும் விதத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் தங்கள் சொந்த நாடுகளில் கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருந்து தப்பியோடிய மக்களை எதிரிகளாக்குகின்றன. தங்கள் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கும் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கும் காத்திருக்கும் மக்களிடையே இந்த ஆபத்தான சொல்லாட்சியை வலதுசாரி அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஒரு நகரத்தின் மேயரிடமிருந்து அல்ல என்று இந்தக் கூட்டணியும் மேயரின் பயம் சரியே என்று பல உள்ளூர் மக்களும் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள்.

புகலிடம் மற்றும் பணி அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை தற்போதைய குடிவரவுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆவணங்களின்றி நாட்டில் குடியேறியவர்கள் பணி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க 150 நாட்கள் காத்திருக்க வேண்டும். ஒப்புதல் தகுதி பெறுவதற்கு கூடுதலாக 30 நாட்கள் தேவைப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பெரிய பின்னடைவு காரணமாக இந்த காத்திருத்தல் நாட்கள் இன்னும் கூடி உள்ளது. அதுவரையில் நகர அரசு தான் இவர்களைக் காக்க வேண்டும்.

மாநில கவர்னர் கேத்தி ஹோக்குல், அதிபர் ஜோ பைடனிடம் தற்போதைய நெருக்கடிக்கு உதவுமாறு நியூயார்க் நகர மேயர் கேட்டுள்ளார். நகரத்திற்கு வரும் அகதிகள் இரவோடு இரவாக மாநிலத்தின் மற்ற நகரங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். குற்றங்கள் கூடி உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதால் சில நகரங்கள் புலம்பெயர்வோரை அனுமதிப்பது இல்லை. இது நகர மேயருக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே கடும் பனிப்போரை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி, மருத்துவமனைகள், வீட்டுவசதி, பாதுகாப்பு என்று பல துறைகளில் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நகரங்கள் மாநில அரசை எதிர்நோக்க, ஆளுநர் கேத்தி, பைடன் அரசை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

வாஷிங்டன் டி.சி., சிகாகோ, ஃபிலடெல்ஃபியா, டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களும் புலம்பெயர்வோர் வருகையால் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களில் தான் ஆவணங்கள் இல்லாத குடியேற்றங்கள் அதிகளவில் நிகழ்கிறது. இந்த குடியேற்றப் பிரச்சினையை மையமாக வைத்து 2022 இடைத்தேர்தலில் புறநகர் ஜனநாயக கட்சியினரைத் தோற்கடித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றனர் குடியரசுக்கட்சியினர். அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் இதே உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்று விடுவார்களோ என்ற அச்சமும் பைடன் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டங்களை மாற்றி அமைக்க முடியாத நிலை தொடருவதும் ஆளும் அரசிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. “புலம்பெயர்வோரை அவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் வருமாறு அழைக்கும் சரணாலய நகர கொள்கையை ஆதரிக்கும் பைடன் அரசு, பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் ஊடுருவும் மக்கள் கூட்டத்தைத் தடுக்க இயலாமல் தடுமாறுகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார் குடியரசுக்கட்சியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதி மைக் லாலர். ஜனநாயக கட்சியில் பலரும் குடியேற்ற சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு பைடன் அரசை நிர்பந்தித்து வருகின்றனர். எல்லாம் தேர்தல் செய்யும் மாயம்!

குடியரசுக்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் இருந்து முறையற்ற குடியேறிகளை ஜனநாயக கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கு இரவோடு இரவாக பேருந்துகளில் ஏற்றி அனுப்பி விடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் எல்லையில் சுவர்கள் கட்ட மாட்டோம். புலம்பெயர்பவர்களை வரவேற்போம் என்று சொன்னவர்கள் இன்று அவர்களைக் காக்கவும் நிரந்தர குடியுரிமை வழங்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய குடியேற்றக் கொள்கை மனிதகுலத்தை மீட்டெடுக்கும் என்று தேர்தல் நேர வாக்குறுதி அளித்த பைடன் அரசு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் பின்பற்றிய கொள்கைகளையே தொடர்கிறது. இதனால் எண்ணற்ற மரணங்கள், பாதுகாப்பற்ற சூழல், தங்குமிடங்களில் குழப்பங்கள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகதிகள் சட்டத்திற்கு உட்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் எல்லையில் உள்ள சூழ்நிலையை எதிர்கொள்ள வேறு வழிகள் உள்ளன. “கூட்டாட்சி, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையே வலுவான தகவல்தொடர்பு மற்றும் திட்டமிடல், சமூக சட்ட சேவை வழங்குவதற்கான நிதி, புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, எல்லையில் வரவேற்பு மையங்களை உருவாக்கி நாட்டிற்குள் அனுமதிக்கு முன் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சட்டங்களை இயற்ற வேண்டும்.” என்று புலம்பெயர்வோருக்கான நீதி மையம் சில உபாயங்களை அறிவித்துள்ளது.

சமூக சட்ட சேவை வழங்குவதற்கான நிதியை எப்படி, எங்கிருந்து கொடுப்பது என்பதில் தான் இருகட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் தொடருகிறது. மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்காக, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்க பயன்படுத்தாமல் அகதிகளுக்காகவும் முறையான ஆவணங்கள் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வதை பெரும்பாலான மக்களே விரும்பாத சூழ்நிலை நிலவி வருகிறது. அதுவே குடியரசுக்கட்சியினருக்கும் சாதகமாக இருக்கிறது. நாட்டில் வெள்ளையரல்லாதவர் எண்ணிக்கை கூடி வருவதை விரும்பாத சமூகம் மறைமுக தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் இனி மேலும் அதிகரிக்கும் என்பதும் அச்சத்தைத் தருகிறது. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இருக்கும் யதார்த்த சிக்கல்களை மறந்து வாய்வீச்சு தேர்தல் வாக்குறுதிகளில் தற்போதைய அரசு மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறது. உறுதியான குடியேற்ற சட்ட மாறுதல்களால் மட்டுமே இது சாத்தியப்படும். செய்வார்களா?

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு, உக்ரேனி அகதிகளை வரவேற்க ஆதரவும் அரசியல் விருப்பமும் பெருகின. படையெடுப்பைத் தொடர்ந்து ஐந்து மாதத்திற்குள் அமெரிக்கா 100,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்களை நாட்டிற்குள் அனுமதித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்ட வெகுஜன வெளியேற்றக் கொள்கை மற்றும் ஒரு நபரின் நுழைவு முறையின் அடிப்படையில் பாதுகாப்பை மறுக்கும் புகலிடத் தடைகள் அகதிகளின் குடியேற்றச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது. அதையே பைடன் அரசும் தொடர்ந்து கொண்டு வருவது தான் வேதனை. இதில் உள்நாட்டில் தொடரும் பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பின்மையை கவனத்தில் கொள்ளாமல் வெளிநாட்டுப்போர்களிலும் அகதிகளுக்காக நிதிகளை ஒதுக்குவதிலும் இந்த அரசு காட்டும் தீவிரம், 2024 தேர்தலில் எதிரொலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது.

தற்பொழுது கொலம்பியாவில் இருந்து புலம்பெயர்ந்திருக்கும் 100,000 மேலானோருக்கு 18 மாதங்கள் தற்காலிகமாக தங்கி பணிசெய்யும் இடைக்கால நிவாரண சட்டம் ஒன்றை பைடன் அரசு அறிவித்துள்ளது சற்று ஆறுதலான விஷயம். இதனை நியூயார்க் மாநில ஆளுநரும் நகர மேயரும் வரவேற்றிருக்கிறார்கள். நடைமுறை சாத்தியங்களில் இருக்கும் குளறுபடிகளை எங்ஙனம் களையப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓட்டுக்காக பைடன் அரசு செய்யும் அரசியல் தந்திரம் என்று குடியரசுக்கட்சியினர் கூறிவருவதும் முறையான ஆவணங்கள் பெற்றவர்கள் பலரும் வருடக்கணக்கில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் எத்தனை காலங்கள் தான் இந்த கண்துடைப்பு நாடகம்?

அமெரிக்க தேசமே மண்ணின் பூர்வகுடிகளை தந்திரமாக வீழ்த்தி புலம்பெயர்ந்த வெள்ளையர்களால் உருவானது. முறையான ஆவணங்களுடன் வருபவர்களை விட அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாக நாட்டிற்குள் வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருவது கண்கூடாகத் தெரிகிறது. முன்னாள் அதிபர் ஒபாமா கூறியது போல் “We were once strangers, too.” புகலிடம் தேடி பெருகி வரும் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வர அண்டைநாடுகளுடன் பேச்சுவார்த்தையும் குடியேற்ற சட்ட திட்டங்களில் மாறுதலும் விரைவில் கொண்டு வருவது ஒன்றே தீர்வாக இருக்கும்.

ஆனால் அரசியலில் அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...