Monday, November 20, 2023

எங்கே செல்லும் இந்தப் பாதை?



கடந்த சில மாதங்களாக எங்கு பார்த்தாலும் 'AI', "Artificial Intelligence ', 'OpenAI', 'ChatGPT', 'ChatBot' என்று மந்திர வார்த்தைகளைக் கூறி இணையமே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. இனி எதிர்காலம் இந்த செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தான் இயங்கப்போகிறது என்று ஊடகங்கள் தினம் ஒரு செய்திகளாகப் பரப்பிக் கொண்டு வருகிறது.

பிப்ரவரி மாதம் 2023ல் வெளிவந்த 'ChatGPT' மனிதர்கள் சொல்கிற எதையும் எழுத்து வடிவில் திறன்பட செய்யும் ஆற்றல் கொண்டது. காதல் கவிதை வேண்டுமா, கட்டுரை வேண்டுமா, பாடத்தில் சந்தேகமா, புது மொழியினை கற்றுக் கொள்ள வேண்டுமா, அழகான ஓவியத்தை வரைய வேண்டுமா... இப்படி எதுவேண்டுமானாலும் ஒருவர் கேட்க முடியும். மனிதர்களை விட மிக ஆழகாக கவிதை எழுதுகிறது. பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. சந்தேகங்களை நிவர்த்திச் செய்கிறது. படங்களை வரைந்து தள்ளுகிறது. ஆனால், இப்பொழுது, இந்த நொடியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றி அதாவது, பங்குச்சந்தை விபரங்கள், அரசியல், உலக நடப்புகள் போன்ற நாளுக்கு நாள், நொடிக்கு நொடி மாறும் சில விஷயங்களை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. விரைவில் அதுவும் முழுப்பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. 

உடனே, இந்த சாமர்த்தியமான தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைக் குறைத்து விடும். அதன் எல்லை எது வரை நீளும் என்று யாருக்கும் தெரியாது. சாதக, பாதகங்களை அலசிய பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பலரும் எதிர்ப்பும் குழப்பமாகவும் இருக்க, 'எலன் மஸ்க்'கும் போர்க்கொடி தூக்கினார். அமெரிக்க காங்கிரசில் முறையிட்டார். இவர்கள் அனைவரும் எதிர்க்கும்

''OpenAI' என்றால் என்ன? அது ஒரு அமெரிக்க 'ஸ்டார்ட் அப்' ஆராய்ச்சி நிறுவனம். பல துறைகளிலும் மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவை((Artificial Intelligence) உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பு. சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் பலர் இருந்தாலும் தற்போது பெரும்பாலான பங்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வசம் உள்ளது. டிசம்பர் 2015ல் சாம் ஆல்ட்மேன், இலியா சுட்ஸ்கேவர், கிரெக் ப்ரோக்மேன், ட்ரெவர் பிளாக்வெல், விக்கி சியுங், ஆண்ட்ரேஜ் கர்பதி, டர்க் கிங்மா, ஜெசிகா லிவிங்ஸ்டன், ஜான் ஷுல்மேன், பமீலா வகாடா மற்றும் வோஜ்சிச் சரெம்பா ஆகியோரால் நிறுவப்பட்டது. எலன் மஸ்க்கும் நிறுவன குழு உறுப்பினராக இருந்தவர். நிறுவனத் துவக்கத்தில் அதிக முதலீடு செய்தவர் பின்பு கருத்து மோதல் காரணமாக நிர்வாகத்தை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் ஆல்ட்மேன் நிறுவனத்தின் CEOவாக இருந்தார். ChatGPT உருவானதின் பின்புலத்தில் இருந்தவர்.

GPT (Generative Pre-trained Transformer) என்பது ஒரு வகையான 'பெரிய மொழி மாதிரி' (LLM- Large Language Model) நரம்பியல் வலையமைப்பு ஆகும். இதன் மூலம் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, உரையைச் சுருக்கமாகக் கூறுவது, செயலிகளை உருவாக்குவது போன்ற பல்வேறு இயற்கையான மொழி செயலாக்கப் பணிகளைச் செய்ய முடியும். மனிதன் கற்றுணர்ந்த இயற்கை நுட்பத்தைப் பயன்படுத்தி இத்தகைய 'பெரிய மொழி மாதிரி'கள் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்படுகிறது. இதற்காக உயர்படிப்பு படித்தவர்கள் பெருநிறுவனங்களில் இருந்து இந்நிறுவனத்திற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்கள். 2019ல் GPT2 வெளிவந்து பிரபலமானதைத் தொடர்ந்து 2023 பிப்ரவரியில் ChatGPTஐ வெளியிட, கூகுள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'Bard', மைக்ரோசாப்ட் 'Bing' என்னும் செயலிகளைக் கொண்டு வந்தது. இதே நேரத்தில் பணத்தைச் செலுத்திப் பயன்பெறும் நவீன செயலிகளை 'OpenAI' வெளியிட்டு வருகிறது.

நவீன வார்த்தைப் பிரயோகங்களைப் புரிந்து கொள்வதற்குள் வேறு ஏதாவது இந்த கணினி உலகில் உலா வர, சாதாரண மக்களோ பெரும் குழப்பத்தில். பெரும் கணினி நிறுவனங்களோ தங்கள் முதலீடுகளை இத்தகைய தொழில்நுட்பத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில்! ஆனால் இந்த ChatGPTயில் விளையாடிப் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. உடனே இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவும் பாடத்திட்டத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு மேற்படிப்பு படிக்க வந்திருக்கும் இந்திய மாணவர்கள் பலரிடமும் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால் ஒன்று 'டேட்டா சயின்ஸ்' என்கிறார்கள் இல்லையென்றால் 'ஏஐ' என்கிறார்கள். இன்னும் பல வருடங்களுக்கும் இந்தியர்கள் தான் இந்தத் தொழில்துறையில் கோலோச்சுவார்கள் போலிருக்கிறது!

இப்படியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென பெருங்குழப்பம். 'OpenAI' CEO சாம் ஆல்ட்மேனை நிர்வாக குழுவினர் பதவியிலிருந்தும் பணியிலிருந்தும் நீக்கி விட்டார்கள் என்ற செய்தி தான் அன்றைய தலைப்புச் செய்தியாக மாறிப்போனது. "நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. தங்களுடன் தகவல் தொடர்புகளில் நேர்மையாக இல்லை." என்று கூறி நவம்பர் 16ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நிர்வாகம் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியது. 

ஆப்பிளின் முன்னாள் வடிவமைப்புத் தலைவர் ஜோனி ஐவ் உடன் புதிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்குவது குறித்து ஆல்ட்மேன் நிர்வாகத்திற்குத் தெரியாமல்  விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்கும் புதிய முயற்சிக்கு நிதி திரட்ட முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திரைமறைவில் நடந்த இச்சம்பவங்கள் தான் அவருடைய பதவிப் பறிப்பிற்கும் பணி நீக்கத்திற்கும் காரணமாகக் கூறப்படுகிறது.

அவரை மீண்டும் பதவியில் நியமிக்கவில்லையென்றால் நாங்கள் எல்லோரும் நிறுவனத்திலிருந்து வெளியேறி விடுவோம் என்று அங்கு பணிபுரிபவர்கள் பலர் நிர்வாகத்திடம் கூற, மறுபரிசீலனை செய்தார்கள். ஆல்ட்மேனும், தான் திரும்பி வரவேண்டுமென்றால் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்க, அவரை 'OpenAI'  நிறுவனம் மீண்டும் சேர்த்துக் கொள்ளவில்லை.

அதிகளவில் இந்தப் புதிய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் அதுவும், மைக்ரோசாஃப்ட்-ன் பங்குகள் சரியப்போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தது. திடீரென திங்களன்று (11/20/2023), ஆல்ட்மேன் மற்றும் அவரது நெருங்கிய சகாவான முன்னாள் ஓபன்ஏஐ தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை ஒரு புதிய மேம்பட்ட AI ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக நியமித்ததாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது. இதைத்தொடர்ந்து 'OpenAI' நிறுவன வேலைகளிலும் மைக்ரோசாஃப்ட்ன் பங்கு தொடர்ந்து இருக்கும் என்று அதன் தலைவர் சத்யா நாடெல்லா கூறியுள்ளார். எலன் மஸ்க்கும் தன் பங்கிற்கு 'xAI' என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெளியிட உள்ளார்.

ஏற்கெனவே யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சமூக ஊடங்கங்களுக்கு அடிமையாகிப் போயிருக்கிறோம். இனி, நம்முடன் பேசுவது மனிதர்களா இயந்திரமா என்று தெரியாத அளவிற்கு தொழில்நுட்பம் சென்று கொண்டு இருக்கிறது. அது நல்லதா கெட்டதா, அதன் எல்லை எதுவரைக்கும் என்று இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை. நிச்சயமாக சாதகங்கள் இருக்கிறது. பாதகங்கள் என்னென்ன என்பது தான் புரியாத புதிர். மனிதர்களை விட மிக நன்றாக யோசிக்கத் தெரிந்து விட்டால் நாம் தான் கணினிகளுக்கு அடிமையாகிப் போவோம் என்பதில் சந்தேகமில்லை. எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தான் புரியவில்லை.

அதுவரையில் அரசியல், சினிமா, கிரிக்கெட் என்று பொழுதைப் போக்குவோம்.

என்னவோ போடா மாதவா!






No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...