Tuesday, November 21, 2023

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்


மதுரையில் மக்கள் காலாற நடந்து செல்வதற்கு ஆற, அமர பொழுதைப் போக்குவதற்குப் புதிதாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆம். மதுரை தெப்பக்குளம் தான். குளத்தைத் தூர்வாரிய பிறகு கண்கவரும் தெப்பக்குளத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. காலை,மாலை நடைக்குச் செல்பவர்களும் உண்டு.

விடியற்காலையில் சென்றால் சூப் வகையறாக்கள் கிடைக்கிறது. “ஹெல்தி” என்று வாங்கிக் குடிக்கிறார்கள்😳கொஞ்சம் தள்ளிச் சென்றால் “மதுரை ஸ்பெஷல்” எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் உளுந்த வடை, ஆமவடை, கோசு, காபி என்று கிடைக்கிறது🥰

மதுரைக்காரவுகளுக்கு நேரத்துக்கு ஒரு பண்டம் சாப்பிடணும்🤪 காலை, மதிய இடைவேளைகளில் விதவிதமாக பஜ்ஜி, தூள்பஜ்ஜி வேண்டும்.

காலம் மாறி விட்டிருக்கிறது. குளத்தைச்சுற்றி அதுவும் கோவிலுக்கு எதிரே நெருக்கமாக தள்ளுவண்டி உணவகங்கள். தெருமுக்கில் நின்று தொண்டை கிழிய பானிபூரிக்காரன் என்று சக இந்தியரைத் திட்டிக்கொண்டிருக்கும் கரைவேட்டிகள் கூட்டம் இப்பொழுது பானிபூரி, பேல்பூரி, மோமோஸ், பாவுபாஜி என்று முகத்தை மறைத்துக்கொண்டு தின்றுகொண்டிருக்கிறது😏

பழமைவாதிகளுக்கு தென்னங்குருத்து, பருத்திப்பால், மாங்காய், பழங்கள், இளநீர் கிடைக்கிறது. மதுரை மண்ணின் சுவையான பண்டமாக மாறியிருக்கும் சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் கீரைவடை, “நளறு பைரி”, சொஜ்ஜியப்பம், போளியல் கூட அங்கே கிடைக்கிறது.

ஆறு மணிக்கு மேல் வியாபாரம் சூடுபிடிக்கிறது. வழிப்போக்கர்கள், பொழுதைப் போக்க வந்தவர்கள், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அங்கே நின்று சாப்பிடுகிறார்கள். பள்ளி வயதுப் பெண்குழந்தைகளும் தோழிகளுடன் சாப்பிட்டு விட்டுச் செல்வதைப் பார்க்க நன்றாக இருந்தது.

நிறைய வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட இளைஞர்கள் கடைகளில். கணவன், மனைவி என்று குடும்பமாக சிலர் வியாபாரம் செய்கிறார்கள். மாலைநேரத்தில் நடக்கும் வியாபாரத்தால் பல குடும்பங்கள் வாழ்கிறது!

என்ன? குப்பைகளை அப்படியே லேசாக தூக்கிப்போட்டு விட்டுச் செல்கிறார்கள். அதைச்சாப்பிட மாடுகளும், சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கும் சிறிது கொடுத்து விட்டுச் சாப்பிட மாட்டார்களா என்று ஏக்கத்துடன் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு நாய்களும் மதுரைக்கே உரியது😑

மாரியம்மன் கோவில், அமைதி ததும்பும் அழகான முக்தீஸ்வரர் கோவில், ஸித்தாச்ரமம் என்று அப்பா, அம்மா, பாட்டியுடன் சென்று வந்த கோவில்களுக்குச் சென்று வருவது சுகமே🥰

ஆதவன் மறையும் நேரத்தில் வீடுதிரும்பும் பறவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே மின்னொளியில் ஜொலிக்கும் குளத்தின் அழகை ரசிக்கும் பொழுது சிறுவயதில் அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘புஸ்ஸ்ஸ்’ பஞ்சு மிட்டாயைச் சாப்பிட்டு வலம் வந்த இனிமையான நாட்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது.

கரையும் நாட்களில்
எஞ்சிநிற்பது
கரையாத நினைவுகள்
மட்டுமன்றோ🙂

(ஃபேஸ்புக்கில் திரு.தேவ் ராஜ் அவர்களின் பதிவிலிருந்து....
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்,
நாயக்கர் மஹால் கட்டுமானத்துக்காக மண் வெட்டிய இடம். மண் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியைத் தெப்பக்குளமாக மாற்றி, அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார் மன்னர் திருமலை நாயக்கர். தெப்பக் குளத்தின் சுற்றுச்சுவர் வெகு அழகான கல்காரம். )

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...