கடந்த வார 'நீயா நானா'வில் 'கெத்து' காட்டி அலையும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் Vs அது தேவையில்லாத ஆணி என்று அனுபவமிக்க ஆட்கள் கொண்ட அணி என்று இருதரப்பினர் விவாதித்தனர். முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் மிகைப்படுத்திக் காண்பிக்கப்படும் 'வட சென்னை' ரௌடியிசம் பற்றி என்பது பிறகு தான் புரிந்தது. 'கெத்து' காண்பிக்கும் இளைஞர்கள் தலையில் ப்ரோக்கோலி கொத்தை வைத்தது போன்ற சிகையலங்காரம். பார்த்தால் மிகவும் அடித்தட்டு மக்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தங்களைப் பார்த்தால் மக்கள் ஒதுங்கிச் செல்ல வேண்டும், ஒருவிதமான பயம் இருக்க வேண்டும், மரியாதை தர வேண்டும், 'அடிதடி' என்றால் கூப்பிடும் அளவுக்குப் பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட 'வேண்டும்'கள். இவர்கள் தங்களின் முன்மாதிரியாகக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவர்கள் இருக்கும் பகுதியின் தாதாக்கள். எப்படி உருப்படுவார்கள்?
அதில் ஒருவர், தன் நண்பர்கள் முன் தந்தை அடித்ததால் திருப்பி அடித்தேன் என்பதைப் பெருமையாகக் கூறினார். காரணம், அவரைப் பள்ளிக்குப் போய் படிக்கச் சொன்னாராம் அப்பா. படிப்பு ஏறவில்லை. பிடிக்கவில்லை. அதனால் போகவில்லை என்கிறார். இன்னொருவர் வகுப்பில் உட்கார இடமில்லை. உட்கார்ந்திருந்தவனை இழுத்துப் போட்டு அடித்து உட்கார்ந்தேன். தெருவில் போகிறவர்களைக் கேலி செய்வோம், வம்புக்கு இழுப்போம். அதுதான் 'கெத்து' என்கிறார்கள். நண்பர்களுக்காக, குடும்பத்தினருக்காகச் சண்டை போடச் சென்று அப்படியே ரவுடி பட்டம் பெற்றவர்கள். இதையெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.
இந்த அடித்தட்டு மக்கள் மேல்தட்டு மக்களிடம் சென்றா தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காகப் போராடுகிறார்கள்? அவர்களைப் போல எளிய மக்களிடம் தான் இந்த வெட்டி 'கெத்து' காண்பித்துக் கொண்டு அலைகிறார்கள். இவர்களைத் தான் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரே ஒரு முறை இவர்கள் எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து இத்தனை சலுகைகளுக்குப் பிறகும் ஏன் தங்கள் வாழ்க்கை இன்னும் உயரவில்லை? யார் தடுக்கிறார்கள்? எது தடை போடுகிறது? என்று யோசித்திருந்தால் இன்று சமூகத்தில் 'கெத்து' காண்பிக்க, தங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியலைப் புரட்டிப் போட, பொருளாதாரத்தில் மேம்பட, கல்வி அவசியம் என்பதனை உணர்ந்திருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் குடியால் சீரழிந்து வேறொரு ரவுடியால் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். இதில் யாரும் பெண் தரவில்லை. ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வேன் என்று உருட்டு வேறு. இவர்களைக் கண்டால் யாரும் வேலை கூட கொடுக்க மாட்டார்கள். நிலைமை இப்படி இருக்க, என்று தான் உண்மையை உணருவார்கள்? இவர்களை இப்படியே வைத்திருந்தால் தான் அரசியலில் பிழைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களை ஒதுக்கி அவர்களின் முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பவர்களை இனம் காணுவார்கள்?
பள்ளிகளில் ஒழுக்கத்தைப் பற்றி வகுப்பெடுத்த காலங்கள் மலையேறிவிட்டது. ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையும் அவர்கள் மேல் இருந்த பயமும் இன்று இல்லை. சில ஆசிரியர்களின் தரமும் தாழ்ந்து போய்விட்டிருக்கிறது. உண்மை தான். அதற்கும் ஊழல் புரையோடிய சமூகம் தான் காரணம். தங்கள் குழந்தைகளைக் கண்டிக்க கூடாது என்று பெற்றோர்கள் ஒருபக்கம். அவர்களால் கூட கண்டிக்க முடியாமல் 'தறுதலை சமூகம்' ஒன்று உருவாகி வருகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் என்று ஆராய்ந்தால் உருட்டு, புரட்டு, திருட்டு கோஷ்டிகளாகத் தான் இருக்கும்.
இன்றைய 'கெத்து' காட்டும் இளைஞர்கள் சமூகத்தால் மேலும் புறக்கணிக்கப்படுவார்களே ஒழிய, அவர்களைக் கண்டு ஒதுங்கிச் செல்லும் மக்கள் அஞ்சுவதாக அவர்களே நினைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இத்தனை வருடங்களாக உருட்டிக் கொண்டிருக்கும் 'சமூக நீதி' நாடகம் எல்லாம் அரசியலுக்கு மட்டும் தான் என்று உணரும் பொழுது தான் உண்மையான விடியலே அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும்.
'வெட்டி கெத்து' தேவையா? யோசிக்கணும்.
ரொம்ப கஷ்டம்!
No comments:
Post a Comment