கணவன்-மனைவி உறவில் உள்ள சிக்கல்களை உளவியலாளர்/மனோதத்துவ நிபுணர் வாயிலாக பேசுவதைப் போல இதுவரையில் தமிழில் இதற்கு முன் படங்கள் வந்த மாதிரி தெரியவில்லை. அந்த வகையில் 'இறுகப்பற்று' படத்தைப் பாராட்டலாம். இருப்பதிலேயே மிகவும் சிக்கலான உறவு என்றால் அது தம்பதியருக்குள்ளே இருக்கும், அந்த நாலு சுவற்றுக்கு மட்டுமே தெரிந்த உறவு. கணவனைப் புரிந்து கொள்ளாத மனைவியும் மனைவியைப் புரிந்து கொள்ளாத கணவனும் இருக்கும் குடும்பத்தில் தினம் ஒரு சண்டை தான். இருவரின் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், உட்கார்ந்து மனம்திறந்து பேசுவதற்கு அங்கே 'ஈகோ' இடம் கொடுப்பதில்லை.
அம்மா-அப்பா வாழ்ந்த காலங்களைப் போல இல்லையே என்று ஆண்கள் பலரும் ஏங்குகிறார்கள். காலம் மாறிவிட்டது. அம்மாக்களைப் போல இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்திருக்கும் காலத்தில் புது பிரச்சினைகள் முளைக்கிறது. அதனைக் கையாளத் தெரியாமல் சின்ன சின்ன சண்டையில் ஆரம்பித்து, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருகட்டத்தில் விலகிச் செல்வதே நல்லது என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதிப்பு இருவருக்கும் தான் என்றாலும் பெண்களுக்குத் தான் துயரம் அதிகம். ஒரு சில இடங்களில் மட்டும் ஆண்களும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
மாறிவரும் காலத்தில் எதிர்பார்ப்புகள் கூடி வருவது இயற்கை என்றாலும் குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிறதென்றால் எதிர்பார்ப்புகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் தானே? செய்கிறோமோ? இல்லையே?
படத்தில் ஒரு தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினை மிகவும் சாதாரணமான ஒன்று. திருமணத்திற்கு முன் உலக அழகி ஐஸ்வர்யாராயாகவே இருந்தாலும் குழந்தைப் பிறப்பிற்குப் பின் உடல் எடை கூடுவது பெண்ணின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான மாறுதல். அந்த பத்து மாதங்கள் அவள் கடந்து வரும் மிகக்கடினமான பயணம். அதனால் ஏற்படும் உடல், மனச்சோர்வு. அவளுக்கு வேண்டிய ஆறுதலையும் தூக்கத்தையும் கொடுத்து அவளுடைய உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கும் உண்டு. மனைவி குண்டானால் விவாகரத்து கேட்பேன் என்றால் பெண் கிடைக்காமல் அலையும் மில்லினியல்கள் 'டர்ர்ர்ர்ர்ர்'ராகி விடுவார்கள்.
வேலையிடத்து நிர்பந்தங்கள், சுற்றத்தின் அழுத்தத்தால் வீடு, நகை இத்யாதிகள் வாங்க, பிடிக்காத வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் மன அழுத்தம் வீட்டில் வெடிக்க, பிரச்சினை முளைக்கத்தான் செய்யும். நமக்கு என்ன வேண்டும் என்பதில் இருக்கிறது நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியும். அடுத்தவருக்காக வாழும் வாழ்க்கையில் தன்னைத் தொலைத்து அவதிப்படுவதில் தொடங்குகிறது ஒருவரின் குழப்பங்கள். தீர்வு காண முடியாமல் விஸ்வரூபமெடுக்கிறது அதிருப்திகள். முடிவில், ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீச, அமைதியற்ற மனது. நிம்மதியற்ற குடும்பம் உருவாகிறது.
இன்னொரு தம்பதியரின் பிரச்னை. காதலியாக இருக்கும் வரை இனித்தவள், மனைவியான பின் கசக்க ஆரம்பித்து விடுகிறாள். காரணத்தை ஆராய்ந்தால் அவளைப் பற்றி முழுமையாக உணரும் பொழுது தான் தன்னை விட பல மடங்கு திறமைசாலியாக இருப்பது பொறுக்காமல் எடுத்ததற்கெல்லாம் சண்டை. பெண்களும் சளைத்தவர்கள் அல்ல. டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் போட்டது போட்டபடி, தொலைபேசியை நோண்டிக்கொண்டே அலுவலக வேலையைப் பார்ப்பது, என் சம்பாத்தியத்தில் வெளியில் உணவை வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று ஆரம்பித்து ஆளை விடுடா சாமி என்று அம்மா வீட்டிற்குள் பத்திரமாகப் போய் விடுகிறார்கள். தன் பிழையை உணருபவர்கள் மிகவும் அரிது. உணர்ந்து மன்னிப்பு கேட்டுச் சேர்ந்து வாழ நினைப்பவர்களைப் புரிந்து கொள்பவர்கள் அரிதினும் அரிது.
இவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்க்கும் அந்த உளவியலாளருக்கே சிக்கல் வந்தால், அதுதான் 'இறுகப்பற்று' படத்தின் கதை.
இத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இத்தனை தூரம் நடக்க வேண்டும். இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் நொடிக்கொரு தடவை தொலைபேசியைப் பார்த்துச் செய்யுமளவிற்கு மூளை அடிமைப்பட்டுப் போயிருக்கிறது. கணவன்/மனைவி உறவில் விரிசல்கள் இல்லாமல் இருக்க, அதற்கும் ஒரு ஆப் வந்தாலும் வந்து விடும். இந்தப்படத்தில் வருகிறது. இருவரும் அவரவர் தனித்தன்மையுடன் அடுத்தவரை மதித்து நடக்கத் தெரிந்தாலே போதும். அங்கு தான் தவறுகிறோம். கோபத்தை மனதில் போட்டு வைத்துக் கொண்டால் ஒருநாள் வெடித்துச் சிதறும். குடும்பமும் கலைந்து விடும்.
இன்று திருமணமானவர்கள் 'கவுன்சிலிங்' செல்வது அதிகரித்து விட்டது. ஒன்று, குடும்பப் பெரியவர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லை. இந்தப் படத்தில் கூட பெரியவர்கள் அறிவுரை கூறுவது போல எந்தக் காட்சிகளும் இல்லை. முதல் காட்சியிலேயே பெற்றோர்களால் தான் பல மறைமுகப் பிரச்சினைகள் என்று கூறுவதும் சில பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது.
இரண்டாவதாக, 'ஈகோ' பிடித்துக்கொண்டு அலையும் கூட்டம் அதிகமாகி விட்டது.
இந்தப் படத்திற்குப் பிறகு பெண் உளவியலாளர் என்றால் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் தயங்குவார்கள். அத்தனை டார்ச்சர் செய்கிறாள் அந்தப் பெண்😖
முடிவில், 'பரஸ்பர புரிதல்' தான் உறவின் அடிப்படை.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியும். ஏமாற்றம் கோபமாக மாறும். கோபம் வந்தால் கண்ணெதிரே இருக்கும் நல்லது கூட காணாமல் போய்விடும். இதைத்தான் எதிர்பார்க்காதே. ஏமாறாதே! என்பார்கள். ஆனால், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே? எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போவதே வேலையாக வைத்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து புத்தி மட்டையாகி தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.
கணவன் மனைவி இருவரும் தனித்தனி மனிதர்கள். வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள் சேர்ந்து வாழ்வதென்பது அத்தனை எளிதல்ல. புரிந்துகொள்ளலும், விட்டுக்கொடுத்தலும், பொறுமையும் இருந்தால் மட்டுமே இல்லறம் இனிதாகும். நல்ல தாம்பத்தியத்திற்கு இருவரும் மனம் ஒத்து இருக்க வேண்டும். சில உறவுகள் பிரிவதே நல்லது. அங்கு உடல், மன ரீதியான வன்முறையால் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். ஊருக்காக வேஷம் போட்டுக் கொண்டு இயல்பைத் தொலைத்து விட்டு செயற்கையாக வாழ்வதில் ஒன்றும் சாதிக்க முடியாது.
மனிதர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதன் அளவுகோல்கள் வேண்டுமானால் மாறலாம். அதனால் நமக்கு மட்டும் தான் கவலைகள், துன்பங்கள் என்று புலம்புவதை விட வேண்டும். மனிதர்களைப் புரிந்து கொண்ட, வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரிந்த வெகுசிலரே அமைதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
உறவுகளுக்குள் தேவையற்ற பிரிவுகளைத் தடுக்க, மனந்திறந்து பேச, பெற்றோர்களின் முறையான வழிகாட்டல் இல்லையென்றால் 'திருமண ஆலோசனை' நல்லது. உடல்நலத்தைப் பேணுவது போல மனநலத்தைப் பேணுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
காலத்திற்கேற்ற படம். எதற்காக இத்தனை மெதுவாக காட்சிகள் நகருகிறது? எத்தனை பாட்டுகள்! பொறுமையாகப் பார்க்க வேண்டும்.
சமீபகாலமாகத் தமிழில் வெளிவரும் வெட்டு, குத்து, ரத்தக்களறி, இரைச்சல் படங்களை விட நல்ல படம். இயக்குனருக்குப் பாராட்டுகள்!
உறவுகளுக்குள் தேவையற்ற பிரிவுகளைத் தடுக்க, மனந்திறந்து பேச, பெற்றோர்களின் முறையான வழிகாட்டல் இல்லையென்றால் 'திருமண ஆலோசனை' நல்லது. உடல்நலத்தைப் பேணுவது போல மனநலத்தைப் பேணுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
காலத்திற்கேற்ற படம். எதற்காக இத்தனை மெதுவாக காட்சிகள் நகருகிறது? எத்தனை பாட்டுகள்! பொறுமையாகப் பார்க்க வேண்டும்.
சமீபகாலமாகத் தமிழில் வெளிவரும் வெட்டு, குத்து, ரத்தக்களறி, இரைச்சல் படங்களை விட நல்ல படம். இயக்குனருக்குப் பாராட்டுகள்!
No comments:
Post a Comment