Friday, November 3, 2023

மணிமேகலை

பள்ளிப்படிப்பில் ஐம்பெருங்காப்பியங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி தான் அந்த ஐம்பெருங்காப்பியங்கள். தமிழ் வகுப்பில் இதைக் கேட்ட மாதிரி இருக்கிறதா? இதில் 'சிலப்பதிகார'த்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். கால் சிலம்பினால் ஏற்பட்ட குழப்பத்தில் கணவனை இழந்த கண்ணகி நீதி கேட்டு மன்னனிடம் விவாதிப்பாள். கோபத்தில் கண்ணகி மதுரையை எரித்த கதை. 'கோவலன் பொட்டல்' என்று பழங்காநத்தத்தில் ஒரு இடம் இருக்கிறது. அங்கே தான் கோவலனுக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கோவலன்-கண்ணகி தங்கியிருந்ததற்கான ஆதாரங்களை வரலாற்றறிஞர்கள் சிலர் திரட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோ அடிகளார்.

கோவலனின் ஆசை நாயகி கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி. அவளுடைய மகள் மணிமேகலை. துறவிக்கோலம் பூண்டு அமுதசுரபியுடன் வளைய வந்தவளைப் பற்றின கதை தான் 'மணிமேகலை'. இதனை எழுதியவர் சீத்தலைச் சாத்தனார். இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படும் இவ்விரண்டும் வாசிக்கத் தூண்டுபவை.

இதைத்தவிர மற்ற மூன்று காப்பியங்களில் இருந்து சில செய்யுள் பகுதிகளைப் படித்த மாதிரி ஞாபகம்! கோனார் நோட்ஸ் துணையுடன் வளர்ந்த தலைமுறை இந்தக் காவியங்களைக் கற்றுக் கொள்வதில் கொஞ்சம் சிரமம் தான். அதனைக் கருத்தில் கொண்டு எளிதாக வாசித்து மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கிழக்குப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஒன்று தான் நான் வாசித்த 'மணிமேகலை'. ஆசிரியர் என்.சொக்கன். தமிழில் செய்யுளைப் புரிந்து கொள்வது எத்தனை கடினம் என்று நமக்குத் தெரியும். ஆசிரியர் உரைநடை வடிவில் அழகிய நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். கண் முன்னே விரியும் காட்சிகளுடன் அழகான நடை.

கிண்டிலில் எதையோ தேடச் சென்று என்றோ வாங்கி வைத்த புத்தகம் கண்ணில் பட்டது. பிறகென்ன? உங்களுக்கும் காப்பியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் வாசியுங்கள். அமேசானில் கிடைக்கிறது.


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...