Sunday, November 5, 2023

கல்வி அவசியம்



சென்ற வார 'நீயா நானா'வில் கல்வி அவசியமா? இல்லையா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் கல்வி தேவையில்லை என்று எப்படிப் பேசுகிறார்கள் என்று அதிசயிக்க வைத்தார்கள் ஒரு குழுவினர். பள்ளி வரையிலாவது அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை மறுப்பதற்கும் ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது என்பதே ஆச்சரியம் தான்.

"எனக்குப் படிப்பு வரலை." என்பவர்கள் அவர்களுக்குப் பிடித்த வேலை பார்ப்பது நல்லது. வேலைக்குச் சென்ற பிறகு அங்கிருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு மேன்மேலும் அந்த தொழிலைக் கற்றறிந்து முன்னேறுவது சிலருக்குச் சாத்தியமே. அவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த வாதம் பொருந்தும். ஆனால் கல்வி தேவையில்லை என்று பொதுமைப்படுத்துவது மிகவும் தவறான கண்ணோட்டம்.

இன்றைய உலகில் அடிப்படைக் கல்வி அவசியமாக உள்ளது. எதைப் படித்தாலும் திறமையும் உழைப்பும் இருந்தால் நிச்சயமாக முன்னேற முடியும். படிக்காதவர்கள் பலர் நன்றாக தொழில் செய்கிறார்களே என்றால் அது அவரவர் பொருளாதார வசதியைப் பொறுத்தது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை.

பொருளாதார வசதியும் கிடையாது. படிப்பும் வரவில்லை என்பவர்கள் மட்டும் வேலைக்குச் சென்று அனுபவத்தில் முன்னேற முயலலாம். படிப்பது வேலைக்குச் செல்ல மட்டுமல்ல. பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது கெட்டதுகளை மூளையைப் பயன்படுத்தி பிரித்துப் பார்க்கவும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக நாம் செய்ய வேண்டிய சமூக சிந்தனைகளை விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளவும் சமூகமாக உயர்ந்து நாட்டை உயர்த்தவும் தான். படித்தவர்கள் எல்லோரும் அப்படியான சிந்தனை கொண்டவர்களா என்று கேட்டால் அப்படியில்லை என்பது தான் வருத்தமான உண்மை. படித்தவர்கள் பலரும் முட்டாள்களாக இருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். இன்றைய கல்வி நமக்கு பட்டம் பெற்று வேலையில் சேரவே உதவுகிறது. படிப்பைத் தாண்டிய உலகத்தை அறிந்து கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

இன்று திறமை, அடிப்படைக்கல்வி, விடாமுயற்சி, துறை சார்ந்த அறிவு இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்தத்துறையிலும் முன்னேற முடியும் என்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். கற்றலுக்கும் கல்விக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. கல்வி கற்றால், வாழ்க்கைக்குப்  பொருந்தக்கூடிய மதிப்பைச் சேர்க்கும் புதிய ஒன்றை கற்றுக்கொண்டீர்கள் என்று அர்த்தம்.

நாம் பள்ளியில் கற்றுக்கொண்டாலும், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத சில விஷயங்கள் இருந்தாலும், கல்வி அர்த்தமற்றது என்று அர்த்தமல்ல. வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பள்ளியில் கற்பிக்கப்படுவதில்லை.


எங்கள் சமூகத்தில் நெசவு நெய்வது பலருக்கும் குலத்தொழிலாக இருந்தது. பஞ்சடித்தல், நூல் தயாரிப்பு, நூலைப் பதப்படுத்துதல், சாயம் போடுதல், நெசவிற்குத் தயார்படுத்துதல், கைத்தறியில் நெசவு நெய்தல் என்று பல காலங்களுக்கு பலருக்கும் குலத்தொழிலாக இருந்து வந்தது. அதனால் அப்பா, மகன் என்று வழிவழியாக ஒரே தொழிலைச் செய்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கல்வி கற்காதவர்கள். காலங்கள் செல்லச்செல்ல தங்கள் குழந்தைகளை ஓரளவு படிக்க வைத்தார்கள். விவரமானவர்கள் வேறு சில தொழில்களையும் கற்றுக் கொண்டார்கள். பருத்தி விலை உயர்வு, விசைத்தறிகளின் வரவிற்குப் பின் இம்மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வசதியானவர்கள், விசைத்தறியைக் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தொழிலைத் தொடர, பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள்.

பின், வேறு தொழில்களில் இறங்கி அவையும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வர, அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் பலரும் சொத்துக்களை இழந்தனர். இவர்களில் பலரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்தார்கள். சமூகப் பெரியவர்களும் அதையே வலியுறுத்தினர். பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பலரும் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். பெற்றோர்கள் படிக்கவில்லையென்றாலும் குழந்தைகள் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் என்று பல துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். எட்ட முடியாத உயரம் என்ற கனவைத் தகர்த்துக் கொண்டு வருகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறார்கள். அவர்களால் முடிந்தவரை சமூகத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுகிறார்கள். தங்களைப் போல் அவர்களையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. ஆண், பெண் இருபாலரும் இன்று கல்வி கற்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு படிக்கிறார்கள். பொருளாதார விடுதலை சுயமுன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதைப் பலரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் கல்வியால் மட்டுமே சாத்தியமாயிற்று.

அதனால் கல்வி அவசியம். அவசியம். அவசியம்.








No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...