Tuesday, November 28, 2023

இந்த நாள் இனிய நாள்


உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில்நடந்த விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்து கவலையாக இருந்தது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரலாறு காணாத அளவில் தொடர் மழையின் அட்டூழியம் அரங்கேறிக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் 'சார்தாம்' யாத்திரைக்காக உத்தரகாண்டில் இருந்தோம். அந்த இமயமலைப் பகுதி முழுவதும் பிரளயம் வந்துவிட்டால் சுக்கு நூறாக நொறுங்கிவிடும் அபாயத்தில் தான் இருக்கிறது. உள்ளூர்வாசிகளுக்குப் பழகிப் போன விஷயமாக இருந்தாலும் முதன்முதலில் சென்ற எங்களுக்கு கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. உத்தரகாசியில் கொட்டிய மழையில் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. யமுனோத்ரியிலிருந்து நாங்கள் திரும்பிய பிறகு கோவிலை மூன்று நாட்களுக்கு மூடி விட்டார்கள். யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் வழியெங்கும் மலைச்சரிவுகள்! சிறிதும் பெரிதுமாக பாறைகள் உருண்டு கிடந்தது. அதை அகற்றும் கருவிகளுடன் சாலைத்துறை அதிகாரிகள் போக்குவரத்தைச் சீர்படுத்திக் கொண்டிருந்தனர். சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் உள்ளூர்வாசிகள் அசரவில்லை. அவர்களுக்குப் பழகிப்போன விஷயமாக இருக்கிறது. மலையையும் மழையையும் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். புதிதாகச் சென்ற எங்களுக்குத் தான் ஒரே பதட்டமாக இருந்தது.

உத்தரகாசி பகுதியில் சுரங்கம் அமைப்பது என்பது உண்மையிலேயே இமாலய சாதனையாகத் தான் இருக்கும். துறை சார்ந்த வல்லுநர்கள் கவனமாக ஆய்வுகள் செய்த பின்னரே இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கும். ஆனாலும் மலைப்பகுதியில் போக்குவரத்தையே குறைக்க வேண்டும் என்று எண்ணிய எங்களுக்கு இந்த சுரங்க விபத்து மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. 

நல்லவேளையாக தொழிலாளர்களுக்கு வேண்டிய உணவும், ஆக்ஸிஜனும் தொடர்ந்து அனுப்பப்பட்டதில் கொஞ்சம் திருப்தி. அவர்களைப் படமெடுத்து அவர்கள் குடும்பத்தினருக்கும் காட்டியதில் அவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். 17 நாட்கள் என்பது அவர்களுக்கு வாழ்வா? சாவா? நிலை. ஆனாலும் நல்ல மனநிலையில் அவர்கள் இருந்தது ஆறுதல்.


முதலில் அமெரிக்க ட்ரில்லிங் இயந்திரம் கொண்டு துளையிட்டு இடிபாடுகளை அகற்ற முயற்சித்ததில் தோல்வி. பின் நாமக்கல்லைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியரிங் நிறுவனதினரின் தொடர் முயற்சியால் சிறு குழாய் வழியாக உணவு, அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளார்கள்.

ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்த செய்தியைப் படிக்கையில் மிகவும் வருத்தமாக இருக்கும். நாட்கள் கடந்து செல்லச்செல்ல பயம். கவலை. சுரங்கத்தில் இருந்தவர்களின் முகங்களை அடிக்கடி காண்பித்துக் கொண்டிருந்ததால் ஊடகங்களின் தவறான யூகங்களில் இருந்து தப்பித்தது. எத்தனை எத்தனை சவால்களைச் சந்தித்து கடைசியில் எலி வளைச் சுரங்க முறையில் இடிபாடுகளை அகற்றி சுரங்கத்திற்குச் செல்லும் பாதையை அமைத்துள்ளனர். கடினமான வேலை. மனந்தளராமால் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு, பகல் பாராது உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது.


ஒருநபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய பாதையை அமைத்து தொழிலாளர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். பாதுகாப்பான முறையல்ல என்றாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின் கைகொடுத்த கடைசி முயற்சியில் 41 தொழிலாளர்களையும் மீட்டது இன்றைய நாளின் நல்ல செய்தியாக, கோடிக்கணக்கான மக்களின் வேண்டுதல் நிறைவேறிய தினமாக அமைந்ததில் மகிழ்ச்சி.

நம்பிக்கை நாயகனாக ஆஸ்திரேலிய சுரங்க நிபுணர் 'ஆர்னால்ட் டிக்ஸ்', சுரங்க வாசலில் இருந்த கோவிலில் வழிபட்டு தன்னுடைய வேலையைத் தொடங்கியவுடன் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற அனைவரின் பிரார்த்தனையோடு திவ்யமாக இருந்த மனிதரிடம் தெரிந்த நம்பிக்கை பார்ப்பவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. எலி வளைச் சுரங்க முறையில் ஒருவர் பின் ஒருவராக வெளியே வரும் பொழுது தான் நாட்டில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு நிம்மதியாக இருந்தது.


அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் உரிய நேரத்தில் செய்து கொடுத்த மத்திய, மாநில அரசிற்கும் ஒற்றுமையுடன் நம்பிக்கையுடன் போராடிய மீட்புக்குழுவினருக்கும் பாராட்டுக்கள். உடல், மன நலம் தேறி தொழிலாளர்கள் விரைவில் வீடு திரும்பட்டும்.

வாழ்க வளமுடன்!






No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...