Friday, December 22, 2023

கீதா ஜெயந்தி


இன்று "கீதா ஜெயந்தி". பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதை உரைத்த நன்னாள். குருஷேத்திரத்தில் போர் நடக்கவிருந்த சூழலில் எதிர்க்களத்தில் நிற்பவர்களைப் பார்த்து கண்கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்கு வாழ்வின் தத்துவத்தை, ஆழமான ஞானத்தை போதனைகளின் வாயிலாக கிருஷ்ணர்  எடுத்துரைத்தது தான் நமக்கு கிடைத்த பொக்கிஷமான "பகவத் கீதை". இன்று கோவில்களில் பகவத் கீதை பாராயணம் செய்வார்கள்.

என் கணவர் கீழ்கண்ட சுட்டியை அனுப்பியிருந்தார். அதில் மகாகவி பாரதியாரர் 'கீதை முன்னுரை'யில் பகவத் கீதையைப் பற்றி மிக அழகாக எழுதியுள்ளார். கீதையின் சாராம்சத்தை அவருடைய பாணியில் விளக்கியுள்ளது சிறப்பு. கீதையை நிந்திப்பவர்கள் எத்தகைய மூடர்கள் என்று பாரதியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார். இதை வாசித்தால் நமக்குள் ஓராயிரம் கேள்விகள் எழலாம். அதுவே தொடக்கம்.

பாரதியின் கீதை முன்னுரை | சங்கதம் (sangatham.com)  இந்தச் சுட்டியில் விரிவாக வாசிக்கலாம். அதிலிருந்து சில துளிகள்:

1. ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறார் :- ‘அந்த அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா’ என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாகும். நீ ஒன்றும் செய்யாதே மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும், உனக்குப் புத்தி தெளிந்து விட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப் படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.’

ஆதலால், கடவுள் சொல்லுகிறார்:- ‘கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி, அவனே யோகி’ என்று.

2. நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

எல்லாத் துயரங்களும் எல்லா அச்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்தபோதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. ‘கடவுளுடைய செய்கை’ என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்.

3. எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்துவிட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே.

4. எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? ‘ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்’, இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத்தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி.

5. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி – இதுதான் முக்கியமான பாடம்.

“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும். இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

6. ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன் வடிவமாக உடையவன், எனினும், மனித விதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டும், என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகின்றான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்டமேனும் நஷ்டமேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்த பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்துகொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.

“ஞானக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே” – ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்தவேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின். அவனன்றி ஓரணுவுமசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.

“கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” – இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாம் தானேயாகி நிற்பான். அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படாதிருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல். “ஸம்சயாத்மா விநச்யதி” ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.

7. குளிர் – வெம்மை, இன்பம் துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப்படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைக் கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.

8. துரியோதனாதிகள் காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

க்ஷத்திரிய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலின் விசேஷ நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ, அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

9. ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

10. ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத்தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத்தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.

11 . ‘அஞ்ஞானமும் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்?’ என்று கேட்டால் -நீ ‘எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்’ என்பதை உண்மயாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனக்கு அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய இன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியதும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப்படாதே.

12. எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார். எந்த ஜீவனையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருததத் தகார். மாமிச போஜனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டு மிருப்போமாயின் – அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் – நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.

13. உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் – கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது. 

தன்னுடைய பங்காளிகளையும், குருக்களையும், சகோதரர்களையும் உறவுகளையும் போர்க்களத்தில் எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அர்ஜுனன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளைக் கேட்டுத் தெளிவுற்றான். ஐயம் நீங்கியவன் போருக்குத் தயாரானான். நம் ஐயங்களைப் போக்கி நல்வாழ்வை அருளும் கீதையை அனைவரும் படித்துத் தெளிவு பெறுவோம். 

இனி ஒவ்வொரு சுலோகங்களையும் விரிவாக கற்றுக் கொள்ள வேண்டும்.



No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...