Saturday, October 30, 2021

பட்டாசு அரசியல்



தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதிலும் பல மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் பட்டாசினால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தமிழக அரசின் அறிக்கையில், " தீபாவளி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், மற்றும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்ய அல்லது வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது." என்று சொல்லபட்டிருக்கிறது.

காலம்காலமாக தமிழகத்தில் பட்டாசுக்கென்றே பெயர் போன 'சிவகாசி' நகரத்தில் பட்டாசு தொழிற்சாலைகளும் அதனை வாழ்வாதாரமாக நம்பி சுத்துப்பட்டு கிராமத்து ஆட்களும் இருக்கிறார்கள் என்பதை ஆளும் அரசு நன்கு அறியும். கோடிகளில் புரளும் வியாபாரத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரே இருக்கக்கூடும். அப்படி இருக்கையில் தீபாவளி நெருங்கும் வேளையில் மட்டும் ஏன் இந்த திடீர் அறிவிப்புகள்? தடைகள்? காற்று, ஒலி மாசுவிற்கு காரணமான பட்டாசுகளை உற்பத்தி செய்வதை ஏன் அரசு முதலிலேயே தடை செய்யவில்லை? தடை செய்திருந்தால் அதனை ஏன் தொழிற்சாலைகள் பின்பற்றவில்லை? அது என்ன? தீபாவளிக்கு மட்டும் தொடருகிறது இந்த கண்துடைப்பு நாடகம்?

உண்மையிலேயே அரசிற்கு மாசுக் கட்டுப்பாட்டில் அக்கறை உள்ள பட்சத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? மாசு உற்பத்தி செய்யும் பட்டாசுகளை உற்பத்தி செய்வதை முன்பே தடை செய்திருக்க வேண்டும். உள்ளூர் பட்டாசு விற்பனையைப் பெருக்க சீன தயாரிப்பு பட்டாசுகளைத் தடை செய்திருக்க வேண்டும். செய்தார்களா? தேர்தல் வெற்றி, தலைவர்களின் வருகை, ஆங்கில புது வருடத்தின் போது வெடிப்பதையும் தடை செய்யலாமே? ஏன் செய்வதில்லை?

தீபாவளி என்றாலே ஒரு வாரத்திற்கு முன் அங்கொன்று இங்கொன்றுமாக வெடிக்கும் ஓலை வெடிச்சத்தம் தரும் குதூகலம், தீபாவளி நெருங்க நெருங்க இரவுகளில் அதிகரிக்கும். தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி கடவுளை வணங்கி, நண்பர்கள், குடும்பத்தினருடன் நாள் முழுவதும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மரபு. ஆனால் சில வருடங்களாக குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் ஒரே நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க, எங்கும் புகை மண்டலம். இது தேவையா? அவரவர் வசதிக்கு நேரத்திற்கு வெடித்துக் கொண்டாடினால் தான் என்னவாம்? இந்த தடைகளால் உள்ளூர் பட்டாசு தொழிற்சாலைகளும் அதனை நம்பி இருக்கும் பல குடும்பங்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாதா இந்த அரசு? இதையும் தூத்துக்குடி தாமிர தொழிற்சாலையை இழுத்து மூடியது போல் மூட வைத்து அதிக விலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கிறார்களா?


நியூயார்க் மாநிலத்தில் அதிக அளவில் சுற்றுச்சூழலைப் பாதித்த வகையில் 'கோடக்' நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது அரசு. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஆற்றில் கழிவுகளைக் கொட்டியது நிரூபணமாகி அவர்களையே மாசுகளை அப்புறப்படுத்த ஆணையிட்டது நீதிமன்றம். மக்களின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு ஆலைக்கழிவுகளை முறையாக சுத்திகரிக்க ஆலைகளும், மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் செயல்பட வேண்டும். ஆனால் நாம் ஆலைகளை மூட வைத்து விட்டு பொருட்களை அதிக விலையில் இறக்குமதி செய்து மற்ற நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை செல்கிறோம். லாப நோக்கில் செயல்படும் பெருநிறுவனங்களும், தலைவிரித்தாடும் லஞ்சமும், அரசியல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கும், மக்களின் மெத்தனமும், அறியாமையும் தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மாசுக்களை காற்றில் கலக்கச் செய்து கொண்டிருக்கிறது.

சமீப காலமாக ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பெருகியுள்ளது என்பது உண்மை. ஆனால் தினந்தோறும் ரசாயன ஆலைகள், சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைக்கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், அசைவ உணவுக்கழிவுகள்,பெட்ரோல், டீசல் வண்டிகளின் புகைகள் வெளியிடும் மாசுகளைக் கட்டுப்படுத்தியுள்ளார்களா? அவற்றினால் மக்களுக்குப் பாதிப்புகள் இல்லையா? கட்டுப்படுத்த வேண்டிய இடங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கட்டுப்படுத்தாமல் மக்களின் சுகாதாரத்தில் விளையாடும் அரசும், நீதிமன்றமும் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாக கூற முடியுமா? இல்லையென்றால் அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

ஏன் ஒருநாள் கொண்டாப்படும் இந்துப்பண்டிகையின் போது மட்டும் இந்த பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள் என்பதில் இருக்கும் அரசியலில் தான் மக்களுக்கு ஐயமே!

தீப ஒளி ஏற்றி பட்டாசு வெடித்துக் குடும்பத்துடன் இனிதே கொண்டாடுவோம் நம் பண்டிகையை.

தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.🎆🎆🎆🎆🎆



Hometown Cha-Cha-Cha


தொடர்ந்து கொரியன் நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் பல நடிக , நடிகையர்களை இனம் கண்டு கொள்ள முடியும். ஆனாலும் பல புதுமுகங்கள் ஒவ்வொரு நாடகத்திலும் வருகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ்ல் டாப் 10ல் வலம் வந்து கொண்டிருந்தது Hometown Cha-Cha-Cha. கதாநாயகன் "Startup"ல் வந்த கன்னக்குழி அழகன்😍 அதில் இன்னும் இளமையாக தெரிந்ததாக ஞாபகம்! சிலரைப் பார்த்தவுடனே பிடித்து விடும். சிலரைப் பார்க்க பார்க்க பிடிக்கும். அந்த வரிசையில் கன்னக்குழி அழகி கதாநாயகி. இதழ்களுடன் கண்களும் சிரிக்கிறது. அழகு!

நகர வாழ்க்கையில் துவங்கி கடற்கரை கிராமத்தில் முடியும் அழகிய காதல் கதைத் தொடர். வேலை செய்யுமிடத்தில் அராஜகத்திற்குத் துணை போகாமல் வெளியேறும் தன்னம்பிக்கைப் பெண்ணாக கதாநாயகி. கால்போன போக்கில் வந்தடையும் கடற்கரையோர கிராமம் ஒன்றில் தங்க நேரிட, அம்மக்களுடன் வாழ பழகிக் கொள்கிறார். நன்றாக நீட்டி முழங்கி கத்திகத்திப் பேசுகிறார். இந்த கொரிய பெண்கள் கோபம் வந்தால் ஏகத்துக்கும் கத்திப் பேசுகிறார்கள். நாம் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விடுகிறார்கள்😉 பெருநகரத்திலிருந்து வந்த பெண்ணிடம் அதுவும் பல் மருத்துவரிடம் தயங்கித்தயங்கிப் பழகும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள். கிளைக்கதைகளையும் சுவாரசியமாக படைத்திருக்கிறார்கள். முக்கோண காதல் கதையில் நாயகி யாரிடம் மனதைப் பறிகொடுக்கிறாள், கதை சுபமா? பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூன்று பாட்டிகள், இளம் தம்பதியர், பிரிந்து மீண்டும் சேரும் கணவன்-மனைவி, இசைக்கலைஞன், கதாநாயகியின் தோழி என்று ஆளுக்கொரு கதை. வம்பு, வீம்பு, கோபம், அழுகை, சிரிப்பு, கொண்டாட்டம், காதல் என்று அழகாக அலையாடிச் செல்லும் கதையில் கதாநாயகன் 'Jack of all trades' என்பது போல் அனைத்து வேலைகளையும் செய்யத்தெரிந்தவன். அவனில்லாமல் அந்த கிராமமே தவித்து விடும். மோதலுடன் துவங்கி காதலில் முடியும் கதையில் நாயகிக்காக உருகும் ஒருவன். ஆனால் நாயகியோ உருகி உருகி காதலிப்பது வேறொருவனை. அழகாக கொண்டு செல்கிறார்கள். வழக்கம் போல் அதிக செண்டிமெண்ட் கொட்டாமல் கதையின் நீரோட்டத்தில் இறப்பையும் கொண்டாட்டமாக ஆனால் உணர்வுப்பூர்வமாக கொண்டு சென்றது சிறப்பு. ஹிந்திப் படங்களில் 'தாதி மா' பாத்திரத்திற்கு என்றே இரண்டு மூன்று பேர் காலம்காலமாக வந்து கொண்டிருந்தார்கள். அப்படித்தான் இத்தொடரிலும் ஒரு 'தாதி மா' பல தொடர்களில் பார்த்திருக்கிறேன். இயல்பாக நன்றாக நடிக்கிறார்.

சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த கதாநாயகன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். அவரும் இறந்து விட, ஊர் மக்கள் அவனை வளர்க்கிறார்கள். சிறு வயதில் தாயை இழந்த கதாநாயகி. இருவருக்குள்ளும் இருக்கும் வலிகளைப் புரிந்து கொள்ள முயன்று ஒருவருக்கொருவர் ஆதரவாக நெருங்கி, விலகி, நெருங்குகிறார்கள். தொடர் முழுவதும் சிறுசிறு கருத்துக்களை சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். ஏழையாக இருந்தாலும் பெற்றோருடன் இருப்பதே சிறப்பான வாழ்க்கை என தாயை இழந்த கதாநாயகி கண்கலங்கும் காட்சியில் சொல்லும் பொழுது உண்மைதானே என்று தோன்றும். பணமும் வெற்றியுமே மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்ச்சி, அன்பு, பாசம், உறவு என்று நம்மைச் சுற்றி உள்ளவர்களும் முக்கியம். நம்முடைய கருத்துகளை அவர்களின் மேல் திணிக்காமல் அவர்கள் போக்கில் வாழ விடுவது தான் அனைவருக்கும் நல்லது என்று கதாநாயகிக்கு நாயகன் சொல்வதைப் புரிந்து கொண்டு மாறுகிறாள்.

தொடரை மேலும் அழகூட்டியிருக்கிறது கிராமத்து வீடுகளும், கடலும், நீல வானமும், கலங்கரை விளக்கமும். அதுவும் அந்த அந்த குறுகிய தெருக்கள், கடல் நோக்கிய முற்றம் வைத்த வீடுகள், சூரியோதயம், சூரிய அஸ்தமனம், கடற்காட்சிகள் எல்லாம் கொள்ளை அழகு. 

இத்தொடர் பிரபலமானதில் அங்குள்ள வீடுகளைப் பார்க்கும் ஆவலில் தென் கொரியர்கள் இந்த கிராமத்திற்குப் படையெடுத்திருக்கிறார்கள். தொடரின் இயக்குனர் கிராமத்து மக்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அங்கு நிஜ மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று ஊடகங்களில் மக்களிடம் கேட்டுக் கொண்டதில் தெரிந்தது இத்தொடரின் வெற்றி. மற்றுமொரு அழகிய காதல் கதைக்களம்.

எப்படா சனிக்கிழமை வரும் என்று ஆவலைக் கூட்டிய தொடர்😉😉😉

'ஒப்பா' என்று அழைத்தால் முறைக்கிறார் என்னவர் 😊😊😊😊









Wednesday, October 27, 2021

நுரையீரல் ஆரோக்கிய தினம்

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஆஸ்துமா முதல் நிமோனியா வரை பல வகையான நுரையீரல் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதிக அளவு காற்று மாசுபாடு காரணமாக, காற்றுப்பாதைகள் வழியாக உடலுக்குள் செல்லும் நச்சுகளின் அளவுகள் நமது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல் நோய்கள் மற்றும் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதுபோன்ற நோய்களைத் தடுக்கலாம்.

அமெரிக்காவில் மக்களிடையே நுரையீரல் தொடர்பான நோய்களைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்த , 2003ல் 'அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் ரெஸ்பிரேட்டரி கேர்' (AARC) ஆல் அக்டோபர் மாதம் நான்காவது புதன்கிழமை 'நுரையீரல் ஆரோக்கிய தினமாக' அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்படுவதாகவும்,  புற்றுநோய்களின் பாதிப்பில் சுமார் 13 சதவிகிதம்  நுரையீரல் புற்றுநோயால் மட்டுமே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஒத்த பிற அமைப்புகள் நாள்பட்ட நுரையீரல் நோய்களின் விகிதம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளன. சிகரெட், வாப்பிங், காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். நீண்ட நாட்களாக மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இது புற்றுநோய் அல்லது பிற நோய்களுக்கு வழிவகுக்கிறது. வழக்கமான சோதனைகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

நுரையீரல் சரியாகச் செயல்படாமல், நம் வாழ்க்கையை சிறப்பாக நடத்த முடியாது. ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாசிப்பதில் சிரமம், நாள்பட்ட இருமல் அல்லது பிற அறிகுறிகளால் அவதிப்பட்டால், மருத்துவரைக் கலந்தாலோசிக்க 'நுரையீரல் ஆரோக்கிய தினம்' ஊக்குவிக்கிறது. ஆரம்பகால சோதனை பல சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.

மனித உடல், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் சில நிமிடங்களுக்கு மேல் வாழ முடியாது. நல்ல சுத்தமான காற்று அனைத்து உயிரினங்களின் அடிப்படை உரிமை. அதனை கிடைக்கச் செய்வது அரசின் கடமை.

நோய் வருவதற்கு முன் தடுப்பதே சிறந்தது. புகையிலை உட்கொள்வது, புகைப்பிடிக்கும் பழக்கங்களை விட்டொழித்தல் நுரையீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களும் புகைப்பிடிக்காதவர்கள் சிலரும் 'செகண்டரி ஸ்மோக்'கால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. செயற்கை நறுமணத்துடன் வரும் மெழுகுவர்த்திகள், நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தலாகாது. மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முடியும்.

அழகான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான நுரையீரல் அவசியம். வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துரைப்போம்.

Friday, October 22, 2021

வெர்மாண்ட் - இலையுதிர்காலம்




நியூயார்க் மாநிலத்தின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களில் அமெரிக்காவின் இரண்டாவது சிறிய மாநிலமான வெர்மாண்ட் மாநிலமும் ஒன்று. "க்ரீன் மௌண்டைன் ஸ்டேட்" என்று அழைக்கப்படும் இம்மாநிலம் அடர்ந்த காடுகள், மலைகள், ஏரிகள், குளங்கள் என்று இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான நில அமைப்பைக் கொண்டது. பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையோ வெறும் 626,230. இங்குள்ள மக்களில் பெரும்பாலோனோர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்கள். அதிபர் போட்டியில் இருமுறை கலந்து கொண்ட பெர்னி சாண்டர்ஸ் இம்மாநிலத்தின் செனட்டர் ஆவார்.

பெரிய வீடுகள், போக்குவரத்து வசதிகள், சாலைகள், குறைவான மாசு, இயற்கையுடனான வாழ்க்கை என்றிருந்த போதிலும் கடுமையான பனிக்காலம், குறைந்த வேலைவாய்ப்பு, அதிக வாடகை , வெள்ளையர்கள் அதிகம், நலிந்த பொருளாதாரம் போன்ற காரணங்களால் மக்கள் இங்கு அதிகமாக இடம் பெயர்வதில்லை. அம்மாநிலத்திற்கு குடிபெயரும் மக்களுக்கு $10,000 வழங்குவதாக அறிவிப்பும் செய்து பார்த்தது மாநில அரசு. ம்ஹூம்!
வருடம் முழுவதும் வெளிமாநில பயணிகள் வருகை தரும் மாநிலங்களில் வெர்மாண்ட்டும் ஒன்று. கோடைகாலத்தில் மலைகள் சூழ்ந்த ஏரி, ஆற்றுப்பகுதிகளிலும், மரங்கள் சூழ்ந்த வனங்களிலும் தங்கிச் செல்ல மக்கள் இங்கு வருவதுண்டு. பனிக்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட வெளிநாடுகளில் இருந்தும் பயணியர் வருகை அதிகரிக்கும்.

வெர்மாண்ட்டின் இலையுதிர்காலம் மிகவும் பிரசித்திப் பெற்றது. வண்ணமயமான மரங்களுடன் சாலைகளும், மலைகளும் இயற்கை அன்னை தீட்டிய வண்ண ஓவியமாக வலம் வருவதைக் காண மக்கள் அம்மாநிலத்தை நோக்கிப் படையெடுக்கும் மாதம் இது. அக்டோபர் மாதத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் தன் சிறகை விரிக்கும் பருவத்தில் இலைகள் நிறம் மாறி பூக்களாக மரங்களில் பூத்திருக்கும் அழகில் வசீகரிக்கப்படாதவர்களே இருக்க முடியாது. மாநிலம் முழுவதும் எங்கு நோக்கிலும் பலவித வண்ணங்களைச் சுமந்த மரங்கள், எங்கோ காலண்டரில் கண்டதை நேரில் காணும் பரவசம்.. priceless!

வீட்டிலிருந்து இரண்டரை மணிநேர தொலைவில் இருக்கிறது கில்லிங்டன். வெர்மாண்ட்டின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இங்குள்ள மலைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனிச்சறுக்கு, ஸ்கேட்போர்டிங் விளையாடுவதைக் கண்டு ரசித்திருக்கிறோம். எப்படித்தான் இப்படியெல்லாம் பயமில்லாமல் மலை உச்சியிலிருந்து சிறு குழந்தைகளும் சறுக்கிக் கொண்டே வருகிறார்களோ என்று வியந்ததுண்டு. மகனும் பனிச்சறுக்கில் ஆர்வம் கொண்ட பிறகு கூடுதலாக பயமும் சேர்ந்துவிட்டது. பனிக்காலத்தில் வெண்போர்வை சுமக்கும் மலைகள் தான் இலையுதிர்காலத்தில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, சிகப்பு என்று வண்ணக்களஞ்சியமாக மனதை கொள்ளை கொள்ளும். இலைகளும் மலர்களாக கிளைகளில் பூத்து
நிற்கும் அழகைக் காண நாங்களும் வருடந்தவறாமல் இந்தப் பருவத்தில் செய்யும் யாத்திரை இங்கு சென்று வருவது.
இங்குள்ள கொண்டோலா சவாரியில் 1.25 மைல்கள் பயணித்து 4,241 அடி மலைஉச்சியை அடையலாம். கொண்டோலா சவாரி என்றாலே பழனி தான் நினைவுக்கு வரும். கொண்டோலாவை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தவர், "ஆடாம அசையாம உட்கார்ந்திருக்கணும்" என்று சொல்லும் பொழுதே பயமாக இருந்தது. குழந்தைகளுடன் ஏறி அது ஆட்டிய ஆட்டத்தில் உயிர் மேல் பயமே வந்துவிட்டது. பத்திரமாக கீழிறங்கி விட வேண்டும் என்று ஆண்டியப்பனை தரிசித்து வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாளே தொலைக்காட்சியில் பழனியில் கொண்டோலாவில் பயணித்த குடும்பம் விபத்து ஒன்றில் பலியான செய்தி ஒளிபரப்பானது கண்டு அதிர்ச்சியானோம். அதிலிருந்து எந்த கொண்டோலாவில் ஏறினாலும் இனம்புரியாத பயம். என்ன செய்வது இதைக் கண்டால் பயம், அதைக்கண்டால் பயம் என்று "தெனாலி" ஆகி விட்டிருக்கிறது நிலைமை!
ஆனால் இங்குள்ள மக்கள் சைக்கிளில் கீழே இறங்கி வர ஆவலாக காத்திருக்கிறார்கள். அதற்கென சிறப்பு இருசக்கர வாகனமும் உள்ளது. வாடகைக்கும் கிடைக்கிறது. மலை உச்சியிலிருந்து கீழிறங்கி வரும் பயிற்சி பெற்றவர்கள் ஆனந்தமாக இறங்கிச் செல்வதை பார்க்க நன்றாக இருக்கும்மலை உச்சி வரை நடந்து செல்ல/இறங்கி வர செப்பனிடப்பட்ட பாதையும் இருக்கிறது. கொண்டோலாவிலும் சென்று வரலாம்.

கொண்டோலாவிலிருந்து இறங்கியவுடன் மலை உச்சிக்குச் செல்ல சிறு பாதை உள்ளது. கரடுமுரடான பாதையில் மேலேறிச் சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மரங்கள் அடர்ந்த மலைகளும் மலைகள் சார்ந்த இடங்களும் தான். நிறம் மாறா மரங்களுடன் நிறம் மாறும் மரங்களும் சேர்ந்து ஓவியமாய் தொக்கி நிற்கும் அழகு காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒவ்வொருமுறை செல்லும் பொழுது ஒவ்வொருவிதமான பருவ நிலையை கண்டிருக்கிறோம். ஒரு முறை பனிப்பொழிவும் நிகழ்ந்திருந்தது. கடுமையான குளிர், இளங்குளிர், பலமான காற்று என்று ஒவ்வொரு இலையுதிர்கால வருகையும் மெய்சிலிர்க்கும் அனுபவமாகவே இருக்கும். இந்த முறை மலைமுகடுகளை முத்தமிடும் மூடுபனி அச்சூழலின் அழகை மெருகூட்டியது போல் இருந்தது. மூடுபனி விலகுவதும் வெளிச்சம் கூடுவதும் மீண்டும் இருள் கவிழ்வதுமாய் மேகங்களுடன் வானமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது கொள்ளை அழகு. கண்களும் குளிர்ச்சியாக, இயற்கையின் மகத்துவம் புரியும் இனிய தருணமது.

அங்கு வந்திருந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியதில் தெரிந்தது அச்சூழலின் இனிய தாக்கத்தை. கணவன்-மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள், காதலர்கள், வயதானவர்கள், வளர்ப்புப்பிராணிகள் என்று பலவகையான மனிதர்கள் பல ஊர்களில் இருந்து இங்கு வந்து வார விடுமுறையை இனிமையாக கொண்டாடும் பருவம் இலையுதிர்காலம்.

"In every walk with nature one receives far more than he seeks."
-John Muir

தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட ...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்🙂

நவராத்திரி என்றதும்  நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் வீட்டு கொலுவைப்  பார்த்து விட்டு மஞ்சள், குங்குமம் வாங்கிக் கொண்டு, சுவையான உணவும் உண்டு களித்து வருவதும், கோவிலில் தினம் ஒரு அலங்காரத்துடன் அம்மனின் திருக்கோலமும் நினைவில் வருவதோடு  குஜராத் மக்களின் க3ர்பாவிற்கான அழைப்பிதழும் தவறாமல் வர, கோலாகலமாக இருக்கும் வார இறுதி நாட்கள்.  

'தசரா', 'நவராத்திரி'  என்று வேற்று மாநில மக்களாலும் கொண்டாடப்படும் இந்த ஒன்பது நாட்களும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாமல் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜைகளுடன் இனிதாக நிறைவுறும். சரஸ்வதி பூஜையன்று பாடப்புத்தகங்களை வைத்து ஒரு நாள் படிக்காமல் டிமிக்கி கொடுக்கலாம் என்பதால் ஆர்வமாக எல்லா புத்தகங்களையும் வைத்து விடுவது வழக்கம். வீடு முழுவதும் சுத்தம் செய்து ஆயுத பூஜைக்குத் தயாராகும் பொழுதே முழு குடும்பமும் உற்சாகத்தில் இருக்கும். அதுவும் மதுரை அரசமரம் ஏரியாவில் வாழைக்கன்று, மாவிலை, பூஜைப்பொருட்கள், பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதும். பள்ளிகளும் தொடர்ச்சியாக விடுமுறை விட்டுவிடுவதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆயுத பூஜை  அன்று சாயப்பட்டறைக்கும் விடுமுறை. வேலையாட்கள் பூஜையில் கலந்து கொண்டு சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். ஆக, அனைவருக்கும் விடுமுறை நாள் கொண்டாட்டம்.

சென்ற வருடம் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக  நண்பர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. இந்த வருடம் கொலு ஊர்வலம் ஆரம்பித்தாகி விட்டது.  வழக்கமாக ஆல்பனி ஹிந்து கோவிலில் நடக்கும் கோலாட்டம் இந்த வருடமும் நடக்கவில்லை. அதே கொரோனா பயம் தான் 😔தனியார் இடங்களில் குஜராத்திகள் கொண்டாடும் டாண்டியா நடனம் விமரிசையாக நள்ளிரவு வரை கொண்டாடுகிறார்கள். வட இந்தியர்கள் பலரும் தென்னிந்தியர்கள் சிலரும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் அதிகம் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. அமெரிக்க மாணவ மாணவியர் சிலரும் உற்சாகத்துடன் ஆடி மகிழுகிறார்கள். 

எங்கள் சமூகத்தில் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மாமியார் வீட்டிலிருந்து சில பரிசுப்பொருட்களைப் பெட்டியில் வைத்து  மணமகளுக்கு கொடுப்பது வழக்கம். அதை 'சம்சுளா பெடி' என்பார்கள். அதில்  தவறாமல் வண்ணமயமான இரு கோலாட்ட குச்சிகள் இருக்கும். சௌராஷ்ட்ரா சமூகத்திலும் மங்கையர் ஆடும் கோலாட்ட நடனமுண்டு. தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தீபாவளிக்குப் பிறகு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் 'பொஸ்கண்ணோ' கோலாட்ட விழாவில் இளம்பெண்கள் பலரும் பெரியவர்கள் சிலரும் பங்கேற்றுச் சுழன்று சுழன்று ஆடுவார்கள்.

மதுரையில் குஜராத் சமாஜ் மக்கள் ஒன்று கூடும் தாண்டியா நடனத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நியூ சினிமா தியேட்டர் எதிர்ப்புறத்தில் YMCA வளாகத்தில் நடந்தது. பாட்டி வீட்டிற்கு அருகே இருந்த குஜராத்தி குடும்பதுடன் அங்கே சென்றிருந்தோம். இரவு ஒன்பது மணிக்கு மேல் இளம்பெண்கள் அனைவரும் வண்ண வண்ண உடையணிந்து கொண்டு கைநிறைய வளையல்களும் வாய் நிறைய சிரிப்புமாக வலம் வர, ஆண்களும் வடக்கிந்திய வண்ண உடைகளுடன் அழகுப் பெண்களை ஓரக்கண்ணால் ரசித்தபடி வந்து கொண்டிருந்தார்கள். அழகான ஆண்டிகளும், வயதான அங்கிள்களும் என்று அந்த இடமே கும்மாளமும் கொண்டாட்டமுமாய் பார்க்கிறவர்களின் மனதிலும் உற்சாகத்தை அள்ளித் தந்து கொண்டிருந்தது. 

நேரம் செல்ல செல்ல பாட்டும் ஆட்டமுமாய் ஆரம்பித்த கோலாட்டம் நள்ளிரவில் இளம்பெண்கள், காளையர்கள்  என்று வாலிபம் பீறிட பெரியவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்த... 

பெண்கள் வளைந்து வளைந்து நடனமாட, ஆடைகள் வட்டமிட்டுச்  சுழல, லயத்துடன் கைகள் கோலாட்டம் ஆட, வேறு உலகத்தில் இருப்பது போன்ற பிரமை! வண்ண மயமான, கோலாகலமான நாளை கண்ட திருப்தி! எவ்வளவு அழகான பெண்கள்! பல நாட்களுக்கு அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். 

இன்றும், நாளையும் அடுத்த வார விடுமுறையிலும் இங்கு தாண்டியா நடனம் வெகு விமரிசையாக நடக்கும். அமெரிக்க கல்லூரிகளிலும் கொண்டாடி மகிழுகிறார்கள்! 

கொண்டாட்டங்களுக்காகவே திருவிழாக்கள்! நம்முடைய செக்கு மாட்டு வாழ்க்கையில் இத்தகைய திருவிழாக்கள் தரும் உற்சாகம் போல் வேறு எதுவுமில்லை. இது அத்தியாவசியமானதும் கூட! 

கொண்டாட்ட மனநிலையைத் தரும் எதுவும் எனக்குச் சம்மதமே!











Wednesday, October 20, 2021

It's okay to not be okay

விதவிதமான தென் கொரியன் தொடர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை தளத்தில். பெரும்பாலும் காதல் தொடர்கள். அதனை வெவ்வேறு விதத்தில் தொடராக அமைப்பதில் சரியான கில்லாடிகளாகத் தான் இருக்கிறார்கள் இந்த கொரியன் இயக்குனர்கள்! "It's okay to not be okay" தொடரும் மோதல், காதல், குடும்பம் என ஒரு கலவை தான்.

அழகான சைஸ் ஜீரோ கதாநாயகி. கவிஞர் பாடிய "ஆஹா ஓடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே..." சொந்தக்காரர் என்று சொல்வதும் மிகப்பொருத்தமாக இருக்கும். அலட்சியம், கோபம், காதல் என்று அம்மணி கலக்குகிறார். எல்லா உடைகளும் அவருக்குப் பொருந்திப் போகிறது😊நல்ல மேக்கப்புடன் அழகு அம்மணியாக 'ஏஏஏஏஏஏஏ' என்று நீட்டி முழக்கிப் பேசுகையில் அழகு😍

சாக்லேட் பாய் கதாநாயகன். கொரியன் கதாநாயகர்களுக்கு அவ்வளவு எளிதில் வயதாகிவிடாது போலிருக்கு! ஸ்வீட் சார்மிங் பாய்/மேன்😊 கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான அமைதியான முகம். அளவாக, அழகாக சிரிக்கிறார். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சகோதரனுக்காக அவர் படும் அல்லல்கள், கதாநாயகியின் வரவிற்குப் பின் வரும் மாற்றங்கள் என்று நன்கு நடித்திருக்கிறார்.

இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டதாக வரும் சகோதரன் கதாபாத்திரம் தான். மிகைநடிப்பு இல்லாமல் இயற்கையாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நமக்கே சந்தேகம் வந்து விடும் இவர் நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு ஆட்டிஸம் இருக்கிறதா என்று! இதே நம் தமிழ் படமோ/நாடகமோ என்றால் கோரமான உடல்மொழியுடன் பச்சாபத்தைத் தூண்டும் விதமாக அமைத்து நம்மை கொன்று போட்டிருப்பார்கள். நல்ல வேளை! கொரியன்கள் அப்படி எல்லாம் பயமுறுத்தவில்லை.

சிறுவயதில் நடக்கும் ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூவர் பெரியவர்களானதும் மீண்டும் சந்தித்துக் கொள்ள, உண்மைகளை அறிந்த பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை. சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத எழுத்தாளர். மனநலம் குன்றியவர்களைக் கவனித்துக் கொள்ளும் கதாநாயகன். காதலோடு ஆட்டிஸம், மனப்போராட்டங்கள் என்று அழகாக கொண்டு செல்கிறார்கள். பட்டாம்பூச்சியுடன்  வலம் வருகிறது கதையும்.  வழக்கம் போல முதல் இரண்டு பாகங்களைப் பொறுமையோடு பார்த்தால் தான் புரியும்.

 




Friday, October 8, 2021

மதுரை ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்

சென்ற வார நீயா நானாவில் "ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்" தலைப்பில் விவாதம் நடந்தது. அட! நமக்குப் பிடிச்ச ஏரியாவாச்சே என்று பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர் மக்களுக்கேற்றவாறு உணவுகள் இருக்கும். பலரும் பல உணவுகளைப் பட்டியலிட்டார்கள். மதுரை சார்பாக நன்றாக பேசக்கூடியவர் அங்கு இல்லையே என்ற குறையை எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் சிறிது போக்கினார். உணவு அதன் தொடர்பான வாழ்க்கை முறைகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார் என்று கோட் சூட் கோபி அண்ணன் கூறினார். இவராவது சொல்வாரா என்று காத்திருந்தேன். நல்ல வேளை! சொல்லி விட்டார். பின்ன? 'பைரி' எனும் கீரை வடையையும் கருப்பட்டி அப்பத்தையும் சிலாகித்துப் பேசினார். இரண்டும் சௌராஷ்டிரா ஸ்பெஷல் "ஸ்ட்ரீட் ஃபுட்" ஆச்சே!

"சாப்பாட்டு நகரம்" என்று கூட மதுரையை அழைக்கலாம். அததனை விஷயங்கள் இருக்கிறது மதுரையில். மக்களும் சளைத்தவர்கள் அல்ல. ஒரு கடையைக் கூட விடாமல் அடிச்சு ஆடுவார்கள் சாப்பிடும் விஷயத்தில். நொறுக்குவார்கள், திராவிட கட்சியினர். அது வேறு அரசியல். நாம் மதுரையின் உணவு அரசியலை மட்டும் இங்கே பார்ப்போம்.

நான் வளர்ந்தது மொத்தமும் எம்மக்கள் புடைசூழ இருந்த பகுதிகளில் தான். வேலைக்குச் சென்ற பின்னரே பிற மொழி பேசும் மக்கள் குடியிருப்பில் வாழ்ந்தேன். மதுரையில் தெருவோர கடைகளும், வீடு வீடாகச் சென்று விற்கும் பலகாரங்களும் என பலவும் உண்டு. அதுவும் காலை, மதியம், மாலை, இரவு என்று வகைவகையாக கிடைக்கும் உணவுகளும் அதிகம்.
 
காலை நேரத்தில் சௌராஷ்டிரா மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கிடைக்கும் கருப்பட்டி அப்பத்திற்கு இணையாக எதுவுமே இல்லை. காலை உணவிற்கு முன் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்துச் சாப்பிடும் இனிப்பான சிற்றுண்டி. அது போலவே, "பிட்டுக்கு மண் சுமந்த லீலை" நடந்த நகரில் அதிகாலை பிட்டு சாப்பிடும் கூட்டமும் இன்று வரை இருக்கிறது. அதுவும் அரசமரம் பக்கம் தலைமுறை தலைமுறையாக இன்று வரை தொடருகிறது இந்தப் பழக்கம். அரிசி, கோதுமை, ரவையில் செய்த பிட்டுக்கள் பிரபலம். என்ன தான் காலம் மாறினாலும் வரிசையில் காத்திருந்து பேப்பரில் மடித்துத் தரும் பிட்டை வாங்கிச் செல்கிறார்கள். தேங்காய்ப்பூவும், வெல்லமும் கலந்த இனிப்பான காலை தொடக்கம். சிலருக்கு அதுவே காலை உணவாகவும், பலருக்கும் படம் வெளிவருவதற்கு முன் வரும் ட்ரைலர் போல காலை எழுந்தவுடன் உண்ணும் சிறு தீனியாகவும்😇 காலை வேளைகளில் "புவம் புவம்" என்று கூவிக்கொண்டு வருவார் வயதான பாட்டி ஒருவர். கருப்பட்டி சேர்த்து செய்த இனிப்பு இட்லி தான். மெத்துமெத்தென்று ஏலக்காய் சேர்த்து கமகமவென அத்தனை ருசியாக இருக்கும்.

இதைத்தவிர, காபிக்கடைகளுக்கு குறைவில்லாத மதுரையில் ஆறு மணியிலிருந்து சுடச்சுட உளுந்த வடை, பருப்பு வடை, மைதாமாவில் செய்த அப்பம். அதையும் விடுவானேன் என்று காபியுடன் சாப்பிடுகிறார்கள். தெருவோர இட்லிக்கடைகளில் ஆவி பறக்கும் இட்லியுடன், சாம்பார், வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, வடையும் கிடைக்கிறது. தெருவுக்குத்தெரு தள்ளுவண்டி இட்லிக்கடைகளும் ஏராளம்!

பதினோரு மணி அளவில் பல மதுரைக்காரர்களுக்கு எதையாவது கொறித்தே ஆக வேண்டும். மசாலா பட்டாணி, பருப்பு வடை, கோஸ் (இது இனிப்பு ஐட்டம்). பெரிய டபராவில் எடுத்துக் கொண்டு வருபவரிடம் வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் அப்பொழுது. இன்றோ, தள்ளுவண்டிகளில் சுடச்சுட உளுந்த வடை, ஆம வடை, காராபூந்தி, அதிரசம், "செக்கர் வடோ" எனும் இனிப்பு வடை என அனைத்தும் கிடைக்கிறது. காபிக்கடைகளில் மதியம் "சொய்ங்ங்" என்று நீளமான வாழைக்காய் பஜ்ஜி. தொட்டுக் கொள்ள பாம்பே சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் விற்கிறார்கள். உளுந்த வடையும் தான் :)

மதியம் சோற்றுடன் இப்படி எதையாவது ஒன்றை சேர்த்தே சாப்பிட்டு வளர்ந்த தலைமுறை ஒன்று இருக்கிறது 😉

உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்று பகலில் தூங்கும் கூட்டம் மாலையில் காபியுடன் பலகாரம் சேர்த்தே ருசிக்கும். ஈவினிங் டிபன் என்றே பலகடைகளும் பிரபலம். இப்பொழுது தான் சதா சர்வ காலமும் தின்பதற்கு கிடைக்கிறதே!

கல்லூரி விட்டு பசியோடு வீட்டிற்குத் திரும்புகையில் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி அருகே வாழைக்காய் பஜ்ஜி, தூள்பஜ்ஜி வாசம் பசியை அதிகமாக்க அங்கேயோ ஈ மொய்க்க, பறந்து செல்லும் புழுதியுடன்  பேப்பரில் வைத்துச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். சூடாக காபி வேறு. ம்ம்ம்...

சாயங்கால பொழுதுகளில் சுடச்சுட வேகவைத்த கருப்பு உளுந்து. அதன் மேல் இட்லிப்பொடி தூவி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்துச் சாப்பிட... ஆஹா! பாட்டி பல நாட்கள் இரவு உணவாக சாப்பிடுவார். நாங்கள் படித்துக் கொண்டே அசை போட அம்மா வாங்கித் தருவார். வேகவைத்த கடலை, அன்னாசிப்பழம், தென்னங்குருத்து, மாங்காய், வெள்ளரிக்காய் , பஞ்சுமிட்டாய் என்று தள்ளுவண்டிகளில் பவனி வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, எம்மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் 'பங்கராபான் பைரி' (pangaraa paan bairi) , கீரை வடையைச் சுடச்சுட போட்டு விற்றுக் கொண்டு வருவார்கள். ஐயோ! ஒன்றா, இரண்டா சாப்பிட... சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். பிறகு, தேங்காய் சேர்த்து செய்த பைரி (nalar bairi) யையும் விற்பனை செய்தார்கள். தொட்டுக்கொள்ள கார இட்லிப்பொடி. எத்தனை சாப்பிட்டோம் என்று கணக்கு வழக்குத் தெரியாமல் சாப்பிட்ட காலங்களில் எடை ஏறியதே இல்லை 😞 தேங்காய் போளி, தேங்காய் சேர்க்காத போளி, சொஜ்ஜியப்பம் என்று அந்த தள்ளு வண்டியில் அனைத்தும் கிடைக்க... பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்த காலங்கள் எல்லாம்... இப்பொழுதும் அனைத்தும் கிடைக்கிறது. என்ன, ஊருக்குச் சென்று வந்தால் எடையும் பலமடங்கு கூடி விடுகிறது😞

விளக்குத்தூண் அருகே தள்ளு வண்டியில் கிளிமூக்கு மாங்காயை நீள வாக்கில் துண்டு போட்டு அதை கடுகுத்தூளுடன் உப்பு சேர்த்து சாப்பிட கொடுப்பார் பாண்டி அண்ணே. அவர் பெரியப்பா வீட்டில் தான் குடியிருந்தார். எங்கள் வீட்டைக் கடந்து போகும் போதே அவரிடம் தென்னங்குருத்து, மாங்காய் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறோம். பாட்டி வீடு விளக்குத்தூண் அருகே இருந்ததால் அங்கும் வாங்கிச் சாப்பிடுவோம். அழகாக வெள்ளரிக்காய்களை நறுக்கி வைத்திருப்பார். மிளகாய்ப்பொடி தூவிய மாங்காய், வெள்ளரியை இரவு நேரத்தில் சாப்பிட ஒரு கூட்டமே காத்திருக்கும்.


மஞ்சனக்காரத்தெரு முக்கில் நாள் முழுவதும் "ஜில் ஜில் ஜிகர்தண்டா" கிடைக்கும். அதைச் சுவைக்காத மதுரைவாசிகள் குறைவாகவே இருப்பார்கள். பல அடிமைகளை உருவாக்கி விட்டவர்கள் அவர்கள் தான். இன்று ஐஸ்கிரீம் எல்லாம் சேர்த்து அவர்கள் குடுப்பதைச் சாப்பிட்டால் அந்த நாளில் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை😛 நகரில் பல ஜிகர்தண்டா கடைகள் முளைத்துள்ளது.

காலம் மாற, தள்ளுவண்டியில் அன்னாசி, பப்பாளி, ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து ஃப்ரூட் சாலட்", வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, தானியங்களை  அதிலும் மிளகாய்ப்பொடியைத் தூவி விற்கிறார்கள்.

 90களில் எண்ணையில் பொரித்த மீன் வண்டிகள் அதிகம் தென்பட்டது. காரசாரமாக குடிமகன்களுக்கு ஏற்ற சைட் டிஷ். கலர்ப்பொடி, மிளகாய்ப்பொடி என்றுபார்த்தாலே பேதி வருகிற மாதிரி தான் இருக்கும். தெருவுக்குத்தெரும் பரோட்டா, பிரியாணி கடைகள் என்று நகரம் மாறி வருகிறது. ரயில் நிலையம் அருகே மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் கடைகள் முளைத்து அதுவும் பரபரப்பாக விற்பனையானது.

வறுத்த கடலை, பருத்திப்பால், பீம புஷ்டி அல்வா வண்டிகள் கீழவாசலில் வரிசையாக...ஒரு மனுஷன் எதைச் சாப்பிடுவது எதை விடுப்பது என்று தெரியாமல் புரியாமல் தத்தளித்துப் போய்விடுவான் அத்தனை தெருவோர தின்பண்ட கடைகள் மதுரையில். இதைத்தவிர, நெல்லிக்காய், சோளக்கருது, இலந்தம்பழம், நவ்வாப்பழம், கடுக்காய்ப்பழம், இனிப்பு, கார பணியாரம் சுட்டு விற்கும் பாட்டிக் கடைகளும், தடுக்கி விழுந்தால் உணவகங்களும், பலகார கடைகளும் என்று தூங்கா நகரம் நிறைந்து கிடக்கிறது.

மதுரை உறங்கத் தயாராகும் பொழுது 'டிங்டிங்" என்ற மணியோசை கேட்டால் உதிரி உதிரி சோன்பப்டி மிட்டாய் அழகான குண்டு குடுவையில் பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தில் உலா வரும். அவரை வழியனுப்பி வைத்தால் குல்ஃபி ஐஸ். தொண்டையில் ஐஸ் இறங்கும் பொழுது தெய்வம் இருப்பது எங்கே பாட்டு காதுகளில் ஒலிக்கும் 😋

ஐயோ! லாங் வீக்கெண்ட் வேற வருது. இப்படி ஆசைய கிளப்பி விட்டானுங்களே!

என் செய்வேன்?





















Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...