சென்ற வார நீயா நானாவில் "ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்" தலைப்பில் விவாதம் நடந்தது. அட! நமக்குப் பிடிச்ச ஏரியாவாச்சே என்று பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர் மக்களுக்கேற்றவாறு உணவுகள் இருக்கும். பலரும் பல உணவுகளைப் பட்டியலிட்டார்கள். மதுரை சார்பாக நன்றாக பேசக்கூடியவர் அங்கு இல்லையே என்ற குறையை எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் சிறிது போக்கினார். உணவு அதன் தொடர்பான வாழ்க்கை முறைகளைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார் என்று கோட் சூட் கோபி அண்ணன் கூறினார். இவராவது சொல்வாரா என்று காத்திருந்தேன். நல்ல வேளை! சொல்லி விட்டார். பின்ன? 'பைரி' எனும் கீரை வடையையும் கருப்பட்டி அப்பத்தையும் சிலாகித்துப் பேசினார். இரண்டும் சௌராஷ்டிரா ஸ்பெஷல் "ஸ்ட்ரீட் ஃபுட்" ஆச்சே!
நான் வளர்ந்தது மொத்தமும் எம்மக்கள் புடைசூழ இருந்த பகுதிகளில் தான். வேலைக்குச் சென்ற பின்னரே பிற மொழி பேசும் மக்கள் குடியிருப்பில் வாழ்ந்தேன். மதுரையில் தெருவோர கடைகளும், வீடு வீடாகச் சென்று விற்கும் பலகாரங்களும் என பலவும் உண்டு. அதுவும் காலை, மதியம், மாலை, இரவு என்று வகைவகையாக கிடைக்கும் உணவுகளும் அதிகம்.
காலை நேரத்தில் சௌராஷ்டிரா மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கிடைக்கும் கருப்பட்டி அப்பத்திற்கு இணையாக எதுவுமே இல்லை. காலை உணவிற்கு முன் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவைத்துச் சாப்பிடும் இனிப்பான சிற்றுண்டி. அது போலவே, "பிட்டுக்கு மண் சுமந்த லீலை" நடந்த நகரில் அதிகாலை பிட்டு சாப்பிடும் கூட்டமும் இன்று வரை இருக்கிறது. அதுவும் அரசமரம் பக்கம் தலைமுறை தலைமுறையாக இன்று வரை தொடருகிறது இந்தப் பழக்கம். அரிசி, கோதுமை, ரவையில் செய்த பிட்டுக்கள் பிரபலம். என்ன தான் காலம் மாறினாலும் வரிசையில் காத்திருந்து பேப்பரில் மடித்துத் தரும் பிட்டை வாங்கிச் செல்கிறார்கள். தேங்காய்ப்பூவும், வெல்லமும் கலந்த இனிப்பான காலை தொடக்கம். சிலருக்கு அதுவே காலை உணவாகவும், பலருக்கும் படம் வெளிவருவதற்கு முன் வரும் ட்ரைலர் போல காலை எழுந்தவுடன் உண்ணும் சிறு தீனியாகவும்😇 காலை வேளைகளில் "புவம் புவம்" என்று கூவிக்கொண்டு வருவார் வயதான பாட்டி ஒருவர். கருப்பட்டி சேர்த்து செய்த இனிப்பு இட்லி தான். மெத்துமெத்தென்று ஏலக்காய் சேர்த்து கமகமவென அத்தனை ருசியாக இருக்கும்.
இதைத்தவிர, காபிக்கடைகளுக்கு குறைவில்லாத மதுரையில் ஆறு மணியிலிருந்து சுடச்சுட உளுந்த வடை, பருப்பு வடை, மைதாமாவில் செய்த அப்பம். அதையும் விடுவானேன் என்று காபியுடன் சாப்பிடுகிறார்கள். தெருவோர இட்லிக்கடைகளில் ஆவி பறக்கும் இட்லியுடன், சாம்பார், வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, வடையும் கிடைக்கிறது. தெருவுக்குத்தெரு தள்ளுவண்டி இட்லிக்கடைகளும் ஏராளம்!
பதினோரு மணி அளவில் பல மதுரைக்காரர்களுக்கு எதையாவது கொறித்தே ஆக வேண்டும். மசாலா பட்டாணி, பருப்பு வடை, கோஸ் (இது இனிப்பு ஐட்டம்). பெரிய டபராவில் எடுத்துக் கொண்டு வருபவரிடம் வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் அப்பொழுது. இன்றோ, தள்ளுவண்டிகளில் சுடச்சுட உளுந்த வடை, ஆம வடை, காராபூந்தி, அதிரசம், "செக்கர் வடோ" எனும் இனிப்பு வடை என அனைத்தும் கிடைக்கிறது. காபிக்கடைகளில் மதியம் "சொய்ங்ங்" என்று நீளமான வாழைக்காய் பஜ்ஜி. தொட்டுக் கொள்ள பாம்பே சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் விற்கிறார்கள். உளுந்த வடையும் தான் :)
பதினோரு மணி அளவில் பல மதுரைக்காரர்களுக்கு எதையாவது கொறித்தே ஆக வேண்டும். மசாலா பட்டாணி, பருப்பு வடை, கோஸ் (இது இனிப்பு ஐட்டம்). பெரிய டபராவில் எடுத்துக் கொண்டு வருபவரிடம் வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் அப்பொழுது. இன்றோ, தள்ளுவண்டிகளில் சுடச்சுட உளுந்த வடை, ஆம வடை, காராபூந்தி, அதிரசம், "செக்கர் வடோ" எனும் இனிப்பு வடை என அனைத்தும் கிடைக்கிறது. காபிக்கடைகளில் மதியம் "சொய்ங்ங்" என்று நீளமான வாழைக்காய் பஜ்ஜி. தொட்டுக் கொள்ள பாம்பே சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் விற்கிறார்கள். உளுந்த வடையும் தான் :)
மதியம் சோற்றுடன் இப்படி எதையாவது ஒன்றை சேர்த்தே சாப்பிட்டு வளர்ந்த தலைமுறை ஒன்று இருக்கிறது 😉
உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்று பகலில் தூங்கும் கூட்டம் மாலையில் காபியுடன் பலகாரம் சேர்த்தே ருசிக்கும். ஈவினிங் டிபன் என்றே பலகடைகளும் பிரபலம். இப்பொழுது தான் சதா சர்வ காலமும் தின்பதற்கு கிடைக்கிறதே!
உண்ட மயக்கம் தொண்டனுக்குச் சொந்தம் என்று பகலில் தூங்கும் கூட்டம் மாலையில் காபியுடன் பலகாரம் சேர்த்தே ருசிக்கும். ஈவினிங் டிபன் என்றே பலகடைகளும் பிரபலம். இப்பொழுது தான் சதா சர்வ காலமும் தின்பதற்கு கிடைக்கிறதே!
சாயங்கால பொழுதுகளில் சுடச்சுட வேகவைத்த கருப்பு உளுந்து. அதன் மேல் இட்லிப்பொடி தூவி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்துச் சாப்பிட... ஆஹா! பாட்டி பல நாட்கள் இரவு உணவாக சாப்பிடுவார். நாங்கள் படித்துக் கொண்டே அசை போட அம்மா வாங்கித் தருவார். வேகவைத்த கடலை, அன்னாசிப்பழம், தென்னங்குருத்து, மாங்காய், வெள்ளரிக்காய் , பஞ்சுமிட்டாய் என்று தள்ளுவண்டிகளில் பவனி வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, எம்மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் 'பங்கராபான் பைரி' (pangaraa paan bairi) , கீரை வடையைச் சுடச்சுட போட்டு விற்றுக் கொண்டு வருவார்கள். ஐயோ! ஒன்றா, இரண்டா சாப்பிட... சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். பிறகு, தேங்காய் சேர்த்து செய்த பைரி (nalar bairi) யையும் விற்பனை செய்தார்கள். தொட்டுக்கொள்ள கார இட்லிப்பொடி. எத்தனை சாப்பிட்டோம் என்று கணக்கு வழக்குத் தெரியாமல் சாப்பிட்ட காலங்களில் எடை ஏறியதே இல்லை 😞 தேங்காய் போளி, தேங்காய் சேர்க்காத போளி, சொஜ்ஜியப்பம் என்று அந்த தள்ளு வண்டியில் அனைத்தும் கிடைக்க... பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்த காலங்கள் எல்லாம்... இப்பொழுதும் அனைத்தும் கிடைக்கிறது. என்ன, ஊருக்குச் சென்று வந்தால் எடையும் பலமடங்கு கூடி விடுகிறது😞
விளக்குத்தூண் அருகே தள்ளு வண்டியில் கிளிமூக்கு மாங்காயை நீள வாக்கில் துண்டு போட்டு அதை கடுகுத்தூளுடன் உப்பு சேர்த்து சாப்பிட கொடுப்பார் பாண்டி அண்ணே. அவர் பெரியப்பா வீட்டில் தான் குடியிருந்தார். எங்கள் வீட்டைக் கடந்து போகும் போதே அவரிடம் தென்னங்குருத்து, மாங்காய் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறோம். பாட்டி வீடு விளக்குத்தூண் அருகே இருந்ததால் அங்கும் வாங்கிச் சாப்பிடுவோம். அழகாக வெள்ளரிக்காய்களை நறுக்கி வைத்திருப்பார். மிளகாய்ப்பொடி தூவிய மாங்காய், வெள்ளரியை இரவு நேரத்தில் சாப்பிட ஒரு கூட்டமே காத்திருக்கும்.
மஞ்சனக்காரத்தெரு முக்கில் நாள் முழுவதும் "ஜில் ஜில் ஜிகர்தண்டா" கிடைக்கும். அதைச் சுவைக்காத மதுரைவாசிகள் குறைவாகவே இருப்பார்கள். பல அடிமைகளை உருவாக்கி விட்டவர்கள் அவர்கள் தான். இன்று ஐஸ்கிரீம் எல்லாம் சேர்த்து அவர்கள் குடுப்பதைச் சாப்பிட்டால் அந்த நாளில் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை😛 நகரில் பல ஜிகர்தண்டா கடைகள் முளைத்துள்ளது.
காலம் மாற, தள்ளுவண்டியில் அன்னாசி, பப்பாளி, ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து ஃப்ரூட் சாலட்", வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, தானியங்களை அதிலும் மிளகாய்ப்பொடியைத் தூவி விற்கிறார்கள்.
90களில் எண்ணையில் பொரித்த மீன் வண்டிகள் அதிகம் தென்பட்டது. காரசாரமாக குடிமகன்களுக்கு ஏற்ற சைட் டிஷ். கலர்ப்பொடி, மிளகாய்ப்பொடி என்றுபார்த்தாலே பேதி வருகிற மாதிரி தான் இருக்கும். தெருவுக்குத்தெரும் பரோட்டா, பிரியாணி கடைகள் என்று நகரம் மாறி வருகிறது. ரயில் நிலையம் அருகே மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் கடைகள் முளைத்து அதுவும் பரபரப்பாக விற்பனையானது.
வறுத்த கடலை, பருத்திப்பால், பீம புஷ்டி அல்வா வண்டிகள் கீழவாசலில் வரிசையாக...ஒரு மனுஷன் எதைச் சாப்பிடுவது எதை விடுப்பது என்று தெரியாமல் புரியாமல் தத்தளித்துப் போய்விடுவான் அத்தனை தெருவோர தின்பண்ட கடைகள் மதுரையில். இதைத்தவிர, நெல்லிக்காய், சோளக்கருது, இலந்தம்பழம், நவ்வாப்பழம், கடுக்காய்ப்பழம், இனிப்பு, கார பணியாரம் சுட்டு விற்கும் பாட்டிக் கடைகளும், தடுக்கி விழுந்தால் உணவகங்களும், பலகார கடைகளும் என்று தூங்கா நகரம் நிறைந்து கிடக்கிறது.
மதுரை உறங்கத் தயாராகும் பொழுது 'டிங்டிங்" என்ற மணியோசை கேட்டால் உதிரி உதிரி சோன்பப்டி மிட்டாய் அழகான குண்டு குடுவையில் பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தில் உலா வரும். அவரை வழியனுப்பி வைத்தால் குல்ஃபி ஐஸ். தொண்டையில் ஐஸ் இறங்கும் பொழுது தெய்வம் இருப்பது எங்கே பாட்டு காதுகளில் ஒலிக்கும் 😋
ஐயோ! லாங் வீக்கெண்ட் வேற வருது. இப்படி ஆசைய கிளப்பி விட்டானுங்களே!
என் செய்வேன்?
என் செய்வேன்?
Quite comprehensive... Gives a feeling of sumptuous Madurai street food...Well written! Madurai food Madurai food thaan....Please write more and more
ReplyDeleteThank you.
ReplyDelete