Friday, October 22, 2021

வெர்மாண்ட் - இலையுதிர்காலம்




நியூயார்க் மாநிலத்தின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களில் அமெரிக்காவின் இரண்டாவது சிறிய மாநிலமான வெர்மாண்ட் மாநிலமும் ஒன்று. "க்ரீன் மௌண்டைன் ஸ்டேட்" என்று அழைக்கப்படும் இம்மாநிலம் அடர்ந்த காடுகள், மலைகள், ஏரிகள், குளங்கள் என்று இயற்கை எழில் கொஞ்சும் மிக அழகான நில அமைப்பைக் கொண்டது. பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் தொகையோ வெறும் 626,230. இங்குள்ள மக்களில் பெரும்பாலோனோர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்கள். அதிபர் போட்டியில் இருமுறை கலந்து கொண்ட பெர்னி சாண்டர்ஸ் இம்மாநிலத்தின் செனட்டர் ஆவார்.

பெரிய வீடுகள், போக்குவரத்து வசதிகள், சாலைகள், குறைவான மாசு, இயற்கையுடனான வாழ்க்கை என்றிருந்த போதிலும் கடுமையான பனிக்காலம், குறைந்த வேலைவாய்ப்பு, அதிக வாடகை , வெள்ளையர்கள் அதிகம், நலிந்த பொருளாதாரம் போன்ற காரணங்களால் மக்கள் இங்கு அதிகமாக இடம் பெயர்வதில்லை. அம்மாநிலத்திற்கு குடிபெயரும் மக்களுக்கு $10,000 வழங்குவதாக அறிவிப்பும் செய்து பார்த்தது மாநில அரசு. ம்ஹூம்!
வருடம் முழுவதும் வெளிமாநில பயணிகள் வருகை தரும் மாநிலங்களில் வெர்மாண்ட்டும் ஒன்று. கோடைகாலத்தில் மலைகள் சூழ்ந்த ஏரி, ஆற்றுப்பகுதிகளிலும், மரங்கள் சூழ்ந்த வனங்களிலும் தங்கிச் செல்ல மக்கள் இங்கு வருவதுண்டு. பனிக்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட வெளிநாடுகளில் இருந்தும் பயணியர் வருகை அதிகரிக்கும்.

வெர்மாண்ட்டின் இலையுதிர்காலம் மிகவும் பிரசித்திப் பெற்றது. வண்ணமயமான மரங்களுடன் சாலைகளும், மலைகளும் இயற்கை அன்னை தீட்டிய வண்ண ஓவியமாக வலம் வருவதைக் காண மக்கள் அம்மாநிலத்தை நோக்கிப் படையெடுக்கும் மாதம் இது. அக்டோபர் மாதத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் தன் சிறகை விரிக்கும் பருவத்தில் இலைகள் நிறம் மாறி பூக்களாக மரங்களில் பூத்திருக்கும் அழகில் வசீகரிக்கப்படாதவர்களே இருக்க முடியாது. மாநிலம் முழுவதும் எங்கு நோக்கிலும் பலவித வண்ணங்களைச் சுமந்த மரங்கள், எங்கோ காலண்டரில் கண்டதை நேரில் காணும் பரவசம்.. priceless!

வீட்டிலிருந்து இரண்டரை மணிநேர தொலைவில் இருக்கிறது கில்லிங்டன். வெர்மாண்ட்டின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இங்குள்ள மலைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனிச்சறுக்கு, ஸ்கேட்போர்டிங் விளையாடுவதைக் கண்டு ரசித்திருக்கிறோம். எப்படித்தான் இப்படியெல்லாம் பயமில்லாமல் மலை உச்சியிலிருந்து சிறு குழந்தைகளும் சறுக்கிக் கொண்டே வருகிறார்களோ என்று வியந்ததுண்டு. மகனும் பனிச்சறுக்கில் ஆர்வம் கொண்ட பிறகு கூடுதலாக பயமும் சேர்ந்துவிட்டது. பனிக்காலத்தில் வெண்போர்வை சுமக்கும் மலைகள் தான் இலையுதிர்காலத்தில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிகப்பு, சிகப்பு என்று வண்ணக்களஞ்சியமாக மனதை கொள்ளை கொள்ளும். இலைகளும் மலர்களாக கிளைகளில் பூத்து
நிற்கும் அழகைக் காண நாங்களும் வருடந்தவறாமல் இந்தப் பருவத்தில் செய்யும் யாத்திரை இங்கு சென்று வருவது.
இங்குள்ள கொண்டோலா சவாரியில் 1.25 மைல்கள் பயணித்து 4,241 அடி மலைஉச்சியை அடையலாம். கொண்டோலா சவாரி என்றாலே பழனி தான் நினைவுக்கு வரும். கொண்டோலாவை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தவர், "ஆடாம அசையாம உட்கார்ந்திருக்கணும்" என்று சொல்லும் பொழுதே பயமாக இருந்தது. குழந்தைகளுடன் ஏறி அது ஆட்டிய ஆட்டத்தில் உயிர் மேல் பயமே வந்துவிட்டது. பத்திரமாக கீழிறங்கி விட வேண்டும் என்று ஆண்டியப்பனை தரிசித்து வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாளே தொலைக்காட்சியில் பழனியில் கொண்டோலாவில் பயணித்த குடும்பம் விபத்து ஒன்றில் பலியான செய்தி ஒளிபரப்பானது கண்டு அதிர்ச்சியானோம். அதிலிருந்து எந்த கொண்டோலாவில் ஏறினாலும் இனம்புரியாத பயம். என்ன செய்வது இதைக் கண்டால் பயம், அதைக்கண்டால் பயம் என்று "தெனாலி" ஆகி விட்டிருக்கிறது நிலைமை!
ஆனால் இங்குள்ள மக்கள் சைக்கிளில் கீழே இறங்கி வர ஆவலாக காத்திருக்கிறார்கள். அதற்கென சிறப்பு இருசக்கர வாகனமும் உள்ளது. வாடகைக்கும் கிடைக்கிறது. மலை உச்சியிலிருந்து கீழிறங்கி வரும் பயிற்சி பெற்றவர்கள் ஆனந்தமாக இறங்கிச் செல்வதை பார்க்க நன்றாக இருக்கும்மலை உச்சி வரை நடந்து செல்ல/இறங்கி வர செப்பனிடப்பட்ட பாதையும் இருக்கிறது. கொண்டோலாவிலும் சென்று வரலாம்.

கொண்டோலாவிலிருந்து இறங்கியவுடன் மலை உச்சிக்குச் செல்ல சிறு பாதை உள்ளது. கரடுமுரடான பாதையில் மேலேறிச் சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மரங்கள் அடர்ந்த மலைகளும் மலைகள் சார்ந்த இடங்களும் தான். நிறம் மாறா மரங்களுடன் நிறம் மாறும் மரங்களும் சேர்ந்து ஓவியமாய் தொக்கி நிற்கும் அழகு காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒவ்வொருமுறை செல்லும் பொழுது ஒவ்வொருவிதமான பருவ நிலையை கண்டிருக்கிறோம். ஒரு முறை பனிப்பொழிவும் நிகழ்ந்திருந்தது. கடுமையான குளிர், இளங்குளிர், பலமான காற்று என்று ஒவ்வொரு இலையுதிர்கால வருகையும் மெய்சிலிர்க்கும் அனுபவமாகவே இருக்கும். இந்த முறை மலைமுகடுகளை முத்தமிடும் மூடுபனி அச்சூழலின் அழகை மெருகூட்டியது போல் இருந்தது. மூடுபனி விலகுவதும் வெளிச்சம் கூடுவதும் மீண்டும் இருள் கவிழ்வதுமாய் மேகங்களுடன் வானமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது கொள்ளை அழகு. கண்களும் குளிர்ச்சியாக, இயற்கையின் மகத்துவம் புரியும் இனிய தருணமது.

அங்கு வந்திருந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியதில் தெரிந்தது அச்சூழலின் இனிய தாக்கத்தை. கணவன்-மனைவி, குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள், காதலர்கள், வயதானவர்கள், வளர்ப்புப்பிராணிகள் என்று பலவகையான மனிதர்கள் பல ஊர்களில் இருந்து இங்கு வந்து வார விடுமுறையை இனிமையாக கொண்டாடும் பருவம் இலையுதிர்காலம்.

"In every walk with nature one receives far more than he seeks."
-John Muir

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...