Wednesday, April 26, 2023

நட்சத்திரவாசிகள்

"இதைப் படிச்சுப் பாருங்க லதா. ரொம்ப நல்லா எழுதியிருக்கார்" என்று கவிஞர் பெருந்தேவி அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய புத்தகம் 'நட்சத்திரவாசிகள்'. கிண்டிலில் வேறு வழியின்றி வாசித்தாலும் கையில் புத்தகத்தை வாசிப்பது போல வேறு சுகமில்லை. தூங்குவதற்கு முன் படிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விடுவானேன் என்று உடனேயே படிக்க ஆரம்பித்து விட்டேன். 

நம்முடைய அப்பாக்கள் வியாபாரம், அரசு அல்லது உள்ளூர் தனியார் அலுவலகத்தில் வேலை என்றே பழக்கப்பட்டுப் பலரும் வளர்ந்தோம். அம்மாக்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்தார்கள். நம்முடைய தலைமுறையில் ஆண்களும் பெண்களும் அதிகளவில் படித்து அதுவும் தொழிநுட்ப புரட்சி ஏற்பட்ட காலத்தில் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்தோம். கணினியில் வேலை பார்ப்பதே கெளரவம் என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் மாறி விட்டது. அப்பாக்கள் ஒரு வருடத்தில் வாங்கிய சம்பளத்தை ஒரு மாதத்தில் வாங்கும் அளவிற்கு சக்தி படைத்த உலகமாக மாறி பலரையும் ஏங்க வைத்து கும்பல் கும்பலாக கணினி வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பிக்க, கல்லூரிகளும் கல்லா கட்டா ஆரம்பித்தது. 

இன்றைய இளைஞர் பட்டாளங்களும் 'பளபளா' கட்டடங்களில் சுத்தமாக உடையணிந்து வேலை செய்வதையும் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாட்டிற்குச் சென்று வருவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உண்மையாகவே இந்த கண்ணாடி அலுவலகங்களுக்குள் என்ன தான் நடக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன். 

ஒவ்வொரு வருடமும் சம்பள ஏற்றம் என்பது முந்தைய வருடத்தின் வேலையைப் பொறுத்தே அமைவதால் சதா 'வேலை வேலை' என்று அதற்கு அடிமையாகி வேலை செய்தாலும் பல நேரங்களில் நிர்வாகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம். பெண்களும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் சிலரது வீட்டில் ஏற்படும் பிணக்குகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். என்ன தான் பெண் என்பவள் நன்கு படித்து நல்ல வேலையில் திறமையுடன் பணியாற்றினாலும் வீட்டில் அவளுக்கிருக்கும் இடம் மனைவி, அம்மா என்று கூடுதல் சுமைகளில் பங்கு கொள்ளும் ஆண்கள் குறைவே. 

பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் தொழிநுட்பத்துறையால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி வருகிறது என்பதைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். நண்பர்கள் பலரும் வீட்டிற்கு வந்த பின்னும் லேப்டாப்பும் கையுமாகவே இருப்பார்கள். மனைவியும் வேலை செய்பவர் என்றால் கேட்கவே வேண்டாம். இது இந்தியாவில் அதிகம். நேரடியாக எனக்கு அந்த அனுபவம் இல்லை. அதுவுமில்லாமல் ஷிஃப்ட் முறையில் வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல், மன அழுத்தங்கள் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்று இத்துறையில் ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டு என்பதை 'ஐடி ஜாப்ஆ? என்ன கவலை?' என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்வது போல் கதையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இத்தொழிலில் இருக்கும் உழைப்புச் சுரண்டலை, மனிதர்களின் எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார். எளிதாக கதையோடு ஒன்றிச் செல்ல முடிவதால் வாசிக்க வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நல்ல படைப்பு.

ஆசிரியருக்கு வாழ்த்துகள்! 


Secrets of the Elephants

சிறுவயதிலிருந்தே யானை, குரங்கு, காகம், குருவி, கிளி, நாய், பூனை என்று மனிதர்களோடு பழகும் மிருகங்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும் எனக்கு. கோவில்களுக்குச் சென்றால் யானையைப் பார்க்காமல் ஆசீர்வாதம் வாங்காமல் வருவதில்லை. அதன் பெரிய கண்களும், தும்பிக்கையும், கால்களும் கம்பீரமாக நிற்கும் அதன் அழகும் பயத்துடன் அதனை நெருங்க வைக்கும். தெருக்களில் யானை வந்தால் குழந்தைப் பட்டாளங்களுக்கு ஒரே குஷி. யானை மீது ஏற ஆசை என்றாலும் அதன் முடி குத்துமே என்ற கவலை. சிறுவயதில் பீதியுடன் ஏறி அழுதுகொண்டே இறங்கியிருக்கிறேன். பாட்டி வீட்டிற்கு அருகில் தெற்கு கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த யானை தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே புல்லைச் சாப்பிடுவதும் அதனைக் குளிப்பாட்டும் நேரத்தில் தரையில் சாய்ந்து கொண்டும் இருக்கும். பல நேரங்களில் மெதுவாக கதவைத் திறந்து பார்த்து வருவதுண்டு. இப்பொழுது அங்கே யானை இல்லை😔 யானைப்பாகன்கள் சொல்வதை சிறுகுழந்தை போல் கேட்டுக் கொள்ளும். பாண்டிச்சேரியில் காலில் கொலுசு போட்டுக் கொண்டிருந்த யானை கொள்ளை அழகு.

இப்பொழுதெல்லாம் விலங்குகளைப் பற்றின அழகான ஆவணத்தொடர்கள் காண கிடைக்கிறது. தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் வண்ணம் கவிதை பேசும் காட்சிகளுடன் விலங்குகளை மிக அழகாக படமெடுத்துக் காட்டுகிறார்கள். அறிந்திராத புதிய தகவல்களும் நமக்கு கிடைக்கிறது. அப்படி ஒரு ஆவணத்தொடர் தான் நான்கு பாகங்களாக வெளிவந்திருக்கும் 'Secrets of the Elephants'. 'பூமி தின'த்தை முன்னிட்டு 'நேஷனல் ஜியாக்ராபி' தயாரித்து டிஸ்னி பிளஸ், டைரக்ட் டிவி, ஹுலுவில் வெளிவந்துள்ளது.

நடிகையும் விலங்கின ஆர்வலரும் ஆன நடாலி போர்ட்மென் பின்னணிக் குரலில் முதலில் ஆப்பிரிக்காவில் சவான்னா ஜிம்பாப்வேயில் புல்வெளிப்பகுதியில் வாழும் யானைகளைப் பற்றி ஆரம்பமாகிறது. எத்தனை பெரிய விலங்கினம்! 4 மாதக் குழந்தை அம்மாவின் காலடியில் நடந்து செல்லும் அழகுடன் தண்ணீரைத் தேடி கூட்டமாகச் செல்லும் 30 யானைகளுடன் காட்சி விரிகிறது. இருப்பதிலேயே வயதான பெண் யானை தான் அந்தக் கூட்டத்தை வழிநடத்திச் செல்கிறது. யானைகள் ஒரு முறை கடந்து வந்த பாதையை மறக்காமல் அதனை தலைமுறை தலைமுறையாக கடத்தி விடும் பண்பு கொண்டதாம். வழிகாட்டும் யானைக்கு எங்கு நீர் கிடைக்கும் என்று தெரிந்து வேகமாக அதனை நோக்கிச் செல்ல மற்ற யானைகள் அதனைப் பின்தொடர்ந்து செல்கிறது. வழியில் பெரிய பள்ளம். மணல்பாறை. இறங்குவது சிரமம் என்று தெரிந்தாலும் கொஞ்சம் யோசித்து வேறு வழியின்றி மிக கவனமாக தும்பிக்கையால் ஒவ்வொரு அடியையும் அளந்து இறங்க, மற்ற யானைகளும் இறங்குகிறது. அந்தக் குட்டி யானை தான் கொஞ்சம் சிரமப்படும். அதை முன்னும் பின்னும் அம்மாவும், அம்மாவின் உடன்பிறப்புகளும் கவனமாக வழிநடத்திச் செல்லும். அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டு தண்ணீரைக் கண்டவுடன் தும்பிக்கையைத் தூக்கிக் கொண்டாடும் சத்தமும் அழகு!

பிறகு தண்ணீர் அரிதான 'நம்பிப்' பாலைவனக்காடுகளில் வசிக்கும் யானைகளைப் பற்றியது. மனிதர்கள் வாழ்வதே கடினம்! பாவம் தண்ணீருக்கும் புல்லுக்கும் பல மைல் தூரம் நடந்து கொண்டே இருக்கிறது. இங்கு பிறக்கும் யானைகள் உயிரோடு தப்பித் பிழைப்பதே அரிது என்பதால் யானைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு குட்டியானை கடுமையான வெயிலையும் தாண்டி உயிர்பிழைத்திருக்கிறது. குட்டியானைக்குப் பால் கொடுக்க தாய் யானை அதிகளவில் உண்ணவும் தண்ணீரையும் குடிக்க வேண்டுமாம். தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணும் இலைகளில் இருந்து கிடைக்கும் நீரை வைத்துக் காலத்தை ஓட்டுகிறது இங்குள்ள யானைகள். தண்ணீர் கிடைக்கும் இடத்தையும் அறிந்து வைத்துள்ள யானைகள் ஒரே நேரத்தில் அதிகளவு தண்ணீரைக் குடிக்கும் உடலமைப்பையும் கொண்டுள்ளது! சுடுமணலில் நடந்து செல்ல அதன் கால்கள் பெரிய பாதங்களைக் கொண்டுள்ளது. சவான்னா யானைகளை விட மெலிதாகவும் இருக்கிறது. பெண் யானைகள் குழுவாக எப்பொழுதும் இருந்தாலும் குழந்தையாக இருந்த ஆண்யானைகள் 14 வயதிற்குப் பிறகு அந்தக் கூட்டத்தை விட்டுத் தனியே சென்று விடுகிறது. அவர்களுடைய வாழ்க்கை கொஞ்சம் கடினமானதாக இருக்கிறது. பாவம்!

மூன்றாவது பாகத்தில் மழைக்காட்டு யானைகளைப் பற்றின குறிப்புகள். சிறிய காதுகளுடன் உருவத்திலும் கொஞ்சம் சிறியதாக மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் யானைகள். உணவுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தந்தத்திற்காக வேட்டையாடுபவர்களால் ஆபத்து அதிகம். ஆனா, பெண் யானைகளுக்குத் தந்தங்கள் இருக்கிறது.

நான்காவது பாகத்தில் ஆசிய நாடுகளில் வாழும் யானைகளைப் பற்றி ஆராய்கிறார்கள். உருவத்தில் சற்றே ஆப்பிரிக்கா யானைகளை விட வேறுபடுகிறது. அவர்கள் வாழ்ந்து வந்த காட்டுகளை அழித்து பனைமரங்களை வளர்த்து வருகிறார்கள் மலேசியாவில். அதனால் மனிதர்களோடு மனிதர்களாக வாழ கற்றுக் கொண்டிருக்கும் வித்தையைக் காண்பித்தார்கள். பனைமரங்களை வெட்டிபி போடும் சத்தம் கேட்டவுடன் கூட்டமாக வந்து சாப்பிட்டு விட்டுப் போகிறது. தாய்லாந்தில் லாரியில் கரும்பு எடுத்துச் செல்லும் நேரத்தில் சரியாக சாலையில் ஆஜராக, சில பல கரும்புகளை அதற்குப் போட்டுவிட்டுச் செல்கிறார் வண்டியோட்டுபவர். இந்தியாவிலும் இந்தக் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Dr.Paula Kahumbu, யானைகள் பேசிக்கொள்ளும் மொழியை ஆராய்ச்சி செய்யும்
Cynthia Moss பகிர்ந்து கொள்ளும் பல சுவாரசியமான தகவல்களுடன் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் வெளிவந்துள்ளது ஜேம்ஸ் காமெரூனின் இயக்கத்தில் 'Secrets of the Elephants'. கூட்டுக்குடும்பமாக வாழும் யானைகள் பலவும் மனிதனின் பேராசைக்காக உயிரிழக்கின்றன. அதன் குட்டிகளை வளர்த்துப் பராமரிக்கும் அன்பர்கள் அதனைத் தங்கள் குழந்தையாக பாவித்து வளர்க்கிறார்கள். பின்பு காட்டில் அதனை விட்டு விடுகிறார்கள்.ஆஸ்கார் விருது வாங்கிய "The Elephant Whisperers' குறும்படமும் அழகான படம்.



Monday, April 24, 2023

10. பத்ரிநாத் – ரிஷிகேஷ்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் பத்ரிநாத்-ரிஷிகேஷ்

பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம். சுடச்சுட இட்லி, உப்புமா, நூடுல்ஸ், ஆலு பரோட்டா, ஓட்ஸ், பிரட், பழரசம், காபி, டீ என்று காலை உணவு வகைகள் அனைத்தும் விடுதியில் கிடைத்தது. காசுக்கேற்ற கவனிப்பு. நன்றாக உபசரித்தார்கள். எட்டரை மணியளவில் விடுதியிலிருந்து ‘மனாவிற்குப் புறப்பட்டோம்.

மழையில் சாலைகள் சேதாரமாகி குண்டும் குழியுமான பாதையில் 15 நிமிடங்களுக்குள் கிராமத்தை அடைந்தோம். வழியெங்கும் நுரை ததும்ப பாய்ந்தோடும் சரஸ்வதி ஆறும் பரந்து விரிந்த இமயமலையின் அழகும் பனிச்சிகரங்களும் வசீகரிக்கிறது. பத்ரிநாத் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவரும் செல்லும் இடம் என்பதால் அந்தச் சாலையில் போக்குவரத்திற்கும் குறைவில்லை. அதிகளவில் சீக்கிய யாத்ரீகர்களையும் காண முடிந்தது. இந்தியாவில் சாலைகள் சீரமைப்பு நடந்திருப்பதால் பைக்குகளில் செல்லும் கூட்டமும் ‘சார்தாம்’ யாத்திரையில் அதிகரித்திருப்பது கண்கூடாகத் தெரிந்தது. “இந்த மலைப்பகுதிகளில் பைக்கில் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?” பயணம் முழுவதும் ஏக்கத்துடன் ஈஷ்வர் பெருமூச்சு விட்டுக் கொண்டே வந்தார். யமுனோத்ரி, கங்கோத்ரி பகுதிகளில் கரடு முரடாக அழகின்றி இருந்த இமயமலை திபெத்திய எல்லையை நெருங்குகையில் பசுமையைப் போர்த்தியபடி வலம் வந்தது கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

இந்திய-சீனா ஆக்கிரமிப்பு திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் ‘மனா’, சமோலி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் கடைசி குக்கிராமம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 3,200மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஊரின் உள்ளே நடந்து செல்லும் பாதைகள் மட்டுமே இருப்பதால் பயணிகளுடன் வரும் வண்டிகளை கிராமத்தின் வெளியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான மரபுகளுக்குப் பெயர் பெற்ற ‘போட்டியாஸ்’ (Bhotias) என்ற மலைவாழ் திபெத்திய வம்சாவளியினர் இங்கே வசிக்கிறார்கள். அவர்களுக்கென்ற மொழி, உணவு, உடை, கலாச்சாரம் உள்ளது. நெசவு நெய்தல் பாரம்பரிய தொழிலாக இருப்பதால் தரமான சால்வைகள், தரைவிரிப்புகள், கம்பளி உடைகளைத் தயாரித்து விற்கின்றனர். நாங்களும் சிலவற்றை வாங்கினோம். ஆடு, காட்டெருமைகளை வளர்ப்பதும் அரிசி, கிழங்கு, சோளம், சோயாபீன்ஸ் வகைகளைப் பயிரிடுவதும் தொழிலாக உள்ளது. வீடுகளின் பின்புறம் காய்கறித் தோட்டங்களை அமைத்திருந்தது சிறப்பு. குட்டையான மனிதர்கள். வீடுகளும் உயரம் குறைவாகச் சிறிதாக இருந்தது. சாலைகள் அற்ற கிராமம். குறுகிய தெருக்களில் கோவேறு கழுதைகள் மூலமாக அல்லது தங்கள் பொருட்களைத் தாங்களே சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் வண்டிகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து செங்கல், சிமெண்ட் மூட்டைகள், கட்டைகள் போன்றவற்றை முதுகில் சுமந்து செல்வதைப் பார்த்தோம். கடினமான வாழ்க்கை தான்! சுருக்கங்கள் நிறைந்த முகங்களுடன் பெண்கள் கம்பளி உடைகளை நெய்து கொண்டிருந்தார்கள். வயதான பாட்டிகளும் ‘துறுதுறு’வென்று வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அநேகமாக அந்த சின்னஞ்சிறிய ஊரில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வசதிகள் அதிகம் இல்லாத ஆனால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் ஒரு சமூகமாக ஜப்பானிய ‘இக்கிகை’ வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக வாழ்வது போல தெரிந்தது.

இந்த ‘மனா’ கிராமத்திற்கும் மகாபாரதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்குள்ள ‘வியாஸ் குஃபா’ என்னும் குகையில் தான் வியாச முனிவர் மகாபாரதத்தை இயற்றியதாக ஐதீகம். ‘மகாபாரத கிளைக்கதைகள்’ புத்தகத்தை எழுத நான் மகாபாரதம் வாசித்துக் கொண்டிருந்த நேரம். மானசீகமாக குருவிடம் ஆசியையும் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டேன்😔 அருகிலேயே விநாயகருக்கும் ‘கணேஷ் குஃபா’ கோவில் உள்ளது. அங்கே சென்னையிலிருந்து வந்திருந்த தமிழ் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேற்று மொழி பேசுமிடத்தில் தமிழ் மொழியில் பேசுபவர்களைப் பார்த்தவுடன் ஒரு சினேக புன்னகை. குசலம் விசாரிப்புகள் என்று சின்ன சின்ன சந்தோஷங்கள்! நாங்கள் பேசிய மக்கள் பலரும் “அமெரிக்காவிலிருந்து யாத்திரைக்கு இங்கே வந்திருக்கிறீர்கள் பரவாயில்லையே!” என்று ஆச்சரியப்பட்டதைத் தான் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

‘மனா’ கிராமத்தில் உயரமான செங்குத்தான படிகளில் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. எல்லா இடங்களுக்கும் மூச்சு வாங்க கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்த கூட்டத்தோடு நாங்களும் ஐக்கியமானோம். புராணத்தின் படி, குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களும் திரௌபதியும் தங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி இறுதி நாட்களில் இமயமலை வழியாக இந்த கிராமத்தைக் கடந்து சென்றதாக நம்பப்படுகிறது. திரௌபதி சரஸ்வதி நதியைக் கடக்க பீமனால் உருவாக்கப்பட்ட ‘பீம் புல்’, வேத வியாசரை வழிநடத்திய சரஸ்வதி தேவிக்கு ஒரு கோயிலும் இங்கு உள்ளது. சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக மரணித்த இடம் இந்த மலைப்பகுதியில் அரங்கேறியதாகவும் குறிப்பிட்ட தூரம் வரை மக்கள் அப்பகுதிகளுக்கும் சென்று வர முடிகிறது. சரஸ்வதி தேவி கோவிலில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் பாதை மூடப்பட்டிருந்தது. மக்கள் பக்திப்பரவசத்தோடு இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தேவபூமி’யில் நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் பரவசமாகத் தான் இருந்தது!

ஆரவாரத்துடன் பாய்ந்தோடும் சரஸ்வதி நதி, பசுமையான காடுகள் மற்றும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த கிராமம் மலையேற்றத்திற்குப் புகழ் பெற்றது என அறிந்து கொண்டோம். அதற்கு வசதியாக மலைகளில் கூடாரங்கள் அமைத்திருந்தார்கள். திபெத்திய எல்லை வரை சென்று வர முடிகிறது. சூடான சமோசா, பிரட் பஜ்ஜி, நூடுல்ஸ், மோமோஸ், டம்ப்ளிங்ஸ் விற்றுக் கொண்டிருக்கும் கடையில் மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அருகே இருந்த மற்றொரு கடையில் டீ அருந்தினோம். சில ஹிமாலய பறவைகள் அங்குமிங்கும் பறந்தோடிக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. ஊரின் நடுவே பழமையான ‘கண்டகர்ணா’ கோவில் இருந்தது. நாங்கள் சென்றிருந்த நேரம் மூடியிருந்ததால் அக்கோவிலைப் பற்றின வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உள்ளூர்ப் பெண் ஒருவர் தங்களுடைய ‘இஷ்ட தேவதா’ என்று கூறினார். அந்தக் காலை வேளையில் ஊர் முழுவதும் பயணிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது!

மலைப்பகுதிகளில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உச்சந்தலையில் ‘பொடேர்’ என்று சாத்துகிறது. கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம்! ஒரு பக்க மலைகள் பசுமையாக. மற்றொரு பக்கம் கரடுமுரடாக. நடுவில் ஆறு. ஆற்றின் கரையில் குறுகிய பாதையில் வீடுகளையும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டே வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இப்படி ஒரு பாரம்பரிய மிக்க குட்டி ஊரைப் பார்த்த திருப்தியுடன் ‘பஞ்ச பிரயாகை’ தரிசனத்திற்காக ஆவலுடன் தொடர்ந்தது எங்கள் பயணம். வழியில் ‘Valley of Flowers’ பதாகையைப் பார்த்ததும் கோடையில் மலர்களுடன் மலைகள் சூழ்ந்த பரந்த சமவெளி வண்ணமயமாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் மிகவும் பிரபலமான, அதிக பயணிகள் சென்று வரும் இடம். இப்படி உத்தரகாண்ட் முழுவதும் இயற்கை எழிலுடன் இமயம் விரவிக் கிடக்கிறது. பார்க்கத்தான் நமக்கு நேரமில்லை.

முதன் முதலில் எட்மண்ட் ஹில்லரியின் ‘From the Ocean to the Sky’ புத்தகத்தை வாசிக்கும் பொழுதே ‘பஞ்ச பிரயாகை’யை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. ‘ருத்ர பிரயாகை’க்குப் பிறகு அவர்களால் படகுகளில் மேலேறிச் செல்ல முடியாது. அந்த அளவிற்கு நதியின் வேகம் இருக்கும். அங்கிருந்த கோவில், மக்களைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை அழகாக விவரித்திருப்பார் எட்மண்ட் ஹில்லரி. வாசிக்கையிலே அத்தனை வசீகரமாக இருக்கும்! இரு வேறு வண்ணங்களுடன் நதிகள் கலக்குமிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ‘பஞ்ச பிரயாக்’ம் எங்கள் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டது.

நதிகள் கூடுமிடம் ‘பிரயாகை’ என்று அழைக்கப்படுகிறது. ‘சார்தாம்’ செல்லும் வழியில் தேவ பிரயாகை, விஷ்ணு பிரயாகை, கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை என அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் உள்ளன. இமயத்தில் உற்பத்தியாகும் கங்கையின் இரு கிளைநதிகளில் ஒன்றான ‘அலக்நந்தா’ அலக்புரியிலிருந்து ஓடோடி வந்து சரஸ்வதி நதியுடன் கலக்கும் இடத்தில் ‘கேஷவ் பிரயாக்’ என்றும் பத்ரிநாத்தில் ‘விஷ்ணு கங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. பத்ரிநாத்திற்கும் ஜோஷிமத்திற்கும் இடையில், மழை நீரை அடித்துக் கொண்டு மண்ணின் நிறத்தோடு ‘அலக்நந்தா’வும் வெளிர் நீல வண்ணத்தில் ‘தெளலி கங்கா’ ஆறும் சங்கமிக்கும் இடம் ‘விஷ்ணு பிரயாகை’ ஆகும். இங்கு நாரதர் விஷ்ணுவை வழிபட்டதால் இந்த காரணப்பெயர் என்று தெரிந்து கொண்டோம். நிறைய படிகளில் இறங்கி ஏறும் பொழுது தான் தெரிந்தது எத்தனை செங்குத்தாக இருக்கிறது என்று! முழங்கால் பத்திரம் என்று எனக்குள் நானே எச்சரித்துக் கொண்டேன்😉

அங்கிருந்து ‘அலக்நந்தா’வும் நந்தா மலைச்சிகரத்தில் உற்பத்தி ஆகும் நந்தாகினி ஆறும் சங்கமிக்கும் ‘நந்த பிரயாகை’ யை அடைந்தோம். கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள இடத்தில் யாதவ குல மன்னன் கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தையான நந்தனின் நினைவாக கோவில் ஒன்றும் உள்ளது. இரு வேறு திசைகளில் இருந்து பலத்த ஓசையுடன் துள்ளி ஓடிவரும் ஆற்றின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. நீண்ட தூரம் நடந்து சென்று வந்தோம். ஈஷ்வருக்குப் பசியோ என்னவோ முகம் வாடிப் போயிருந்தது. வழியில் இனிப்புக்கடையில் எனக்குப் பிடித்த இனிப்புகளையும் சமோசாவையும் சாப்பிட்டு ‘சாய்’ குடித்த பிறகு கொஞ்சம் தெம்பாக இருந்தது. சிறிது நேரம் அங்கிருக்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்து விட்டு ‘கர்ண பிரயாகை’க்கு கிளம்பினோம்.

வழியில் வரும் பாலத்தின் ஓரத்திலேயே வண்டியை நிறுத்தி அங்கிருந்து கீழிறங்கிச் சென்று பார்த்து விட்டு வருமாறு டிரைவர்ஜி சொல்ல, அலக்நந்தாவும் பிண்டர் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றோம். இன்னொரு குடும்பமும் அவர்களின் குழந்தைகளும் கரையில் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு வண்ண நதிகள் ஒன்றோடு ஒன்று இனைந்து இரண்டற கலந்து ஓடும் அழகே தனி! மிக அருகில் நின்று பார்க்கும் பொழுது தான் அதன் ஓட்டமும் பாய்ச்சலும் தெரிகிறது. மனதிற்குள் பயமும் எழுகிறது! இங்கு பார்வதி தேவிக்கும் கர்ணனுக்கும் கோவில்கள் உள்ளன. சுவாமி விவேகானந்தர் 18 நாட்கள் தவம் செய்த இடம். கர்ணன் தவம் புரிந்து கவச குண்டலத்தைப் பெற்றதால் ‘கர்ண பிரயாகை’ என்று அழைக்கப்படுகிறது. போக்குவரத்துடன் பரபரப்பாக இருந்த சாலையைக் கடந்து ‘ருத்ர பிரயாகை’யில் நாங்கள் தங்கவிருக்கும் ‘சாம்ராட் ரிசார்ட்’டுக்குச் சென்று கொண்டிருந்தோம்.

மாலை நான்கு மணி. வழியில் சாலையோர உணவகத்தில் மீண்டும் ஒரு ‘சாய்’. ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த உணவகங்களில் பூனைக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் காண அழகாக இருந்தது. குழந்தைகள் என்றாலே அழகு தான்! வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே மிகப்பெரிய குருத்வாராவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க, “எந்நேரம் சென்றாலும் அங்கு செல்பவருக்கு இலவச உணவு கிடைக்கும்” என்றார் டிரைவர்ஜி. அங்கு தங்கும் வசதிகளும் இருக்கிறது. ஒரு வழியாக, ஐந்து மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

பெட்டிகளை இறக்கிக் கொண்டிருக்கும் பொழுது செட்டியார் குடும்பங்களை மீண்டும் சந்தித்தோம். அங்கே தேநீர் அருந்துவதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் ஸ்ரீநகர் என்னுமிடத்தில் இரவு தங்கி மறுநாள் டேராடூன் சென்று சென்னைக்குத் திரும்புவதாகக் கூறினார்கள். எதிர்பாராமல் மீண்டும் அவர்களைச் சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்ததது. இரு வேன்களில் வந்திருந்த அனைவரும் அன்புடன் பேசி “குடும்ப உறுப்பினர்களைக் கண்டது போல் இருக்கிறது” என்று ‘டச்சிங் டச்சிங்’ ஆக பேசி உருக வைத்தார்கள். பெரும்பாலானவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் செட்டிலாகி இவர்களும் அடிக்கடி வந்து செல்கிறார்கள். உலகமே சுருங்கிவிட்டது!

நாங்கள் காசிக்குச் செல்வதை அறிந்து செட்டியார்கள் சத்திரத்தில் இருப்பவரைத் தொடர்பு கொண்டு கோவிலுக்குச் செல்ல தொலைபேசி எண்களைக் கொடுத்து உதவினார்கள். யாரோ? எவரோ? கேதார்நாத்தில் சந்தித்து அறிமுகமாகி அவர்களில் ஒருவராக எங்களைக் கவனித்துக் கொண்டார்கள். பத்ரிநாத்தில் மீண்டும் சந்தித்த பொழுது அத்தனை சந்தோஷம். இப்பொழுது பிரியும் நேரத்தில் “சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்” என்று அவர்களும்”நியூயார்க் வந்தால் கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று நாங்களும் அன்புடன் பேசி வாட்ஸப் பரிமாற்றங்கள் செய்து கொண்டு விடைபெற்றோம். இந்த யாத்திரையில், “குழந்தைகளை விட்டுவிட்டு ஹனிமூன் வந்திருக்கிறீங்களா” என்று சிரித்த முகத்துடன் ஹரித்வாரில் கேட்ட தென்காசி வெள்ளந்தி மனிதர்கள், மலேசியா தமிழ் மக்கள், உத்தரகாசியில் தென்னாப்பிரிக்கா, மலேசியா, அட்லாண்டா, ராஜஸ்தாலிருந்து வந்திருந்தவர்கள், குப்தகாசியில் தெலுங்கு, மும்பைப்பெண், ரஷ்யர்கள் முதல் செட்டியார் குடும்பங்கள் வரை பலரைச் சந்தித்துப் பேசியது உற்சாகமாக இருந்தது. நாடு, இனம், மொழி கடந்து மனிதர்களுக்கிடையில் இருக்கும் வாஞ்சையும் அன்பும் தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த பொழுதில் இந்த யாத்திரையின் பலனை முழுமையாக அனுபவித்தோம்.

பெரிய விடுதியில் கூட்டம் இல்லை. முதன் முதலில் உத்தரகாசியில் சந்தித்த ராஜஸ்தானி குடும்பமும் அங்கே தான் தங்கியிருந்தார்கள். “நீங்களும் இங்கே தானா?” என்று சிறிது நேரம் அவர்களுடன் ‘கலகல’ பேச்சு. கணவரும் மகனும் ஆங்கிலத்தில் உரையாட, அந்தப் பெண்மணி ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தார். நாங்களும் “அச்சா”, “டீகே” என்று எங்களுக்குத் தெரிந்த “தோடா தோடா” ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவிற்கு ‘வெங்காய சாலட்’ கேட்டால் தட்டு நிறைய வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு வைத்தார்களே பார்க்கணும்! ஐயோ! “நான் சாலட் கேட்டேன்” என்று பிறகு பன்னீர் ஐட்டம் வாங்கிச் சாப்பிட்டேன். அங்கு வேலை செய்தவர்களுக்குச் சுட்டுப் போட்டால் கூட ஆங்கிலம் தெரியவில்லை. ‘பேசும் படம்’ கமல் மாதிரி வித்தையெல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டுச் சென்றால் அவர்களுக்குப் புரியுமோ என்னவோ? பல இடங்களில் மொழி மிகப்பிரச்னையாக இருந்தாலும் மனிதர்கள் தன்மையாக இருக்கிறார்கள். ஹிந்தி தெரியாதவர்களை அதிசயமாகப் பார்க்கிறார்கள்! நாங்களும் ஆங்கிலம் தெரியாதவர்களைக் கவலையுடன் பார்த்தோம்😟 விடுதியில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அதுவும் இளைஞர்கள் கணிசமாக இருக்கிறார்கள்! படித்தவர்கள் நகரங்களை நோக்கிச் சென்று விட, படிக்காதவர்கள் உள்ளூரில் தங்கி கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள் போல!

அன்றைய அழகான தினத்தின் அனுபவங்களை எண்ணியபடி தூங்கிப் போனோம். விடியலில் நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து தவழும் கருமேகங்களுடன் மலைகளும் ஓசையின்றி ஆற்று மணலை அள்ளிச் செல்லும் அலக்நந்தா ஆறும் மனதை கொள்ளை கொண்டது. ஃபேஸ்டைமில் வந்த மகனிடம் இடத்தைக் காண்பிக்க, “அழகாக இருக்கிறது. என்ஜாய்” என்றான். அவனிடம் பேசிமுடித்து விட்டு ரிஷிகேஷ் பயணத்திற்குத் தயாரானோம். அதற்குள் காலை உணவு தயாராக, அங்கே சென்றால் பூரி, ஆலு மசாலா, அவலில் செய்த உணவு, பிரட், இனிப்பு, சாய், காஃபி என்று குறைவில்லாமல் இருக்க, சமையற்காரர் சிரித்த முகத்துடன் பரிமாறினார். “அனைத்தும் சுவையாக இருக்கிறது” என்றவுடன் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். எங்கு சென்றாலும் உணவு நன்றாக இருந்தால் சமையற்காரரை அழைத்து “நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி” என்று சொல்வது எங்கள் வழக்கம். மேலாளர்களிடமும் சொல்லத் தவறுவதில்லை. அநேகமாக நாங்கள் தங்கியிருந்த அனைத்து விடுதிகளிலும் உணவு மிக நன்றாக இருந்தது மட்டுமில்லாமல் உபசரிப்பும் திருப்தியாக இருந்தது. அனைவரிடமும் விடைபெற்று அன்றைய பயணம் துவங்கியது.

ஒன்பது மணியளவில் காளியின் அம்சமான ‘தாரி தேவி’ கோவிலை வந்தடைந்தோம். ‘சார்தாம்’ கோவில்களைக் காக்கும் சக்தி வாய்ந்த எல்லை அம்மன். உள்ளூர் மக்களின் ஆஸ்தான கோவில். 2013ல் ‘அலக்நந்தா ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் பிளாண்ட்’ கட்டும் பொழுது இடைஞ்சலாக இருக்கிறது என்று அங்கிருந்த அம்மனை இடம்பெயர்த்திருக்கிறார்கள். அன்று தான் கேதார்நாத்தில் வரலாறு காணாத வெள்ளமும் மலைச்சரிவும் ஆயிரக்கணக்கில் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே இந்த திட்டத்தில் பணிபுரிந்த தலைமைப் பொறியாளர், திட்டத்திற்கு ஒத்துழைத்த அரசியல்வாதியின் இறப்புகளுக்குப் பிறகு காவல் தெய்வத்தை இடம் பெயர்த்ததால் தான் இந்த பேரழிவு நடந்திருக்கிறது என்று உள்ளூர் மக்கள்
தீவிரமாக நம்பி எதிர்ப்புகளைத் தெரிவிக்க, ஏப்ரல், 2022ல் அதே இடத்தில் ‘ஹைடெல் பவர் கம்பெனி’ புதுக்கோவிலைக் கட்டி அம்மனை மீண்டும் இடம்பெயர்த்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலின் முகப்பு இரு நிலைகளுடன் தென்னிந்திய கோபுரமாக இருந்ததைப் பார்த்து ஆச்சரியமானோம்! சாலையோரக் கடைகளில் அம்மனுக்கான பூஜைப்பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அலக்நந்தா ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல ‘கிடுகிடு’ வென்று படிகளில் இறங்கும் போதே, “அடடா! ஏறி வரும் பொழுது நமக்கு இருக்கு” என்று பயம் கலந்த திகைப்புடன் அம்மனைப் பார்க்கும் ஆவலுடன் வழியெங்கும் இருந்த கடைகள், ஜடாமுடி தரித்த துறவிகளைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் எங்கும் சிகப்புத்துணியினை முடிந்து வைத்திருந்தார்கள். நாங்கள் நவராத்திரி சமயத்தில் அங்கே சென்றிருந்ததால் நல்ல கூட்டம். வட இந்தியர்கள் தேவிக்குப் பூஜைகள் செய்ய தாராளமாகச் செலவுகள் செய்கிறார்கள். பலர் கோவிலுக்குள் மந்திரித்த தாயத்துகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் குங்கும அலங்காரத்துடன் தேவி அமர்க்களமாக இருந்தாள். ஆற்றில் வெள்ளம் வந்தால் கோவில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு இருக்கிறது. வெளியில் உணவகங்களில் சாப்பிடும் இடத்தில் குரங்குகளின் அட்டகாசத்தைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அங்கிருந்த தொங்கு பாலத்தில் நடந்து சென்று ஆற்றைப் பார்த்து விட்டு வந்தோம். அது ஏனோ சிலர் குதித்துக் கொண்டே இருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அழகான கோவில் தரிசனம் முடித்து வண்டியிலேறி காலை நேர பரபரப்புடன் இருந்த ஸ்ரீநகர் வழியே ‘ருத்ரபிரயாகை’யை மலையில் இருந்தே பார்த்துக் கொண்டோம். அழகான சங்கமம் அது. உச்சியிலிருந்து பல தெருக்களைக் கடந்து அங்கிருக்கும் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூட்டமாக மக்கள் சங்கமத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது. சங்கிலிகளைக் கட்டியிருந்தார்கள். பழுப்பு நிற அலக்நந்தாவும் கேதார்நாத்திலிருந்து பச்சைநிற மந்தாகினியும் இரண்டற கலந்தோடும் அழகு வசீகரிக்கிறது. இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாகவும் ருத்ர வீணையை மீட்டியதாலும் ‘ருத்ர பிரயாகை’ என்றழைக்கப்படுகிறது. ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் இருக்கிறது. பல தலபுராணங்களும் இக்கோவில்களுக்கு உள்ளது. மலையிலிருந்து வீடுகளும் கோவில்களும் மிக அழகாகத் தெரிய, அந்த வழியாகச் செல்லும் வண்டிகள் அனைத்தும் அங்கே நின்று பயணிகள் கண்டுகளிக்க அனுமதிக்கிறார்கள். யுடியூபர்களுக்கும் இன்ஸ்டா, ஃபேஸ்புக்வாசிகளுக்கும் மிகவும் பிடித்தமான இடம். வளைத்து வளைத்துப் படங்களும் பேசிக்கொண்டே காணொளிகளும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துப் பார்த்து இடத்தைத் தேர்வு செய்து செல்ஃபி எடுப்பவர்கள், முகத்தைக் கோணலாக்கி நாக்கைத் துருத்தி இரு விரல்களைக் காட்டிக் கொண்டு என்று பலவிதமான கோலங்களில் படங்களை எடுத்து அப்லோட் செய்து கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். அங்கிருந்து செல்ல மனமில்லாமல் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஒன்றரை மணிநேரத்தில் ‘தேவ பிரயாகை’ வந்தடைந்தோம். கங்கோத்ரியில் இருந்து பாய்ந்து வரும் பாகீரதியும் ருத்ர பிரயாகையில் இருந்து அலக்நந்தாவும் கலக்கும் இடமே ‘தேவ பிரயாகை’. ஓடோடி வரும் இரு கிளைநதிகளும் சங்கமித்து அமைதியான கங்கையாக உருவெடுப்பதால் ‘ஆதிகங்கை’ எனவும் அழைக்கப்படுகிறது. இங்கும் படிகளில் இறங்கி சங்கமத்தில் குளிக்க முடிகிறது. இந்த தெய்வீக சங்கமத்தில் கங்கை, ஹனுமன் சிலைகள் உள்ளது. ஐந்து பிரயாகைகளைத் தரிசித்த திருப்தியுடன் ரிஷிகேஷ் நோக்கி விரைந்தோம்.

யோகாவிற்கும் இந்து மடங்களுக்கும் பெயர் பெற்ற ரிஷிகேஷ் என் கனவு நகரங்களில் ஒன்று. தூர்தர்ஷன் காலத்தில் இரவு பத்துமணிச் செய்திகளுக்குப் பிறகு இமயமலை, கங்கையில் சாகசப்பயணம் செல்லும் ஆவணப்படங்களைப் பார்த்து ரிஷிகேஷின் அழகில் மயங்கியிருக்கிறேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் அங்கு இருப்போம் என்ற நினைவே அத்தனை ஆனந்தமாக இருந்தது. வழியெங்கும் சாலை விரிவாக்கம், புதிய ரயில் திட்டத்திற்காக ஏகப்பட்ட சுரங்கப்பாதைகள், பாலங்கள் கட்டும் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இத்திட்டம் நிறைவேறினால் ரிஷிகேஷிலிருந்து கர்ணபிரயாக் வரை ரயிலில் பயணிக்கலாம். அங்கிருந்து ‘சார்தாம்’ செல்வது எளிதாக இருக்கும். சாலைவழிப் போக்குவரத்து சிறிது குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் ‘தடதட’ ரயிலின் ஆட்டத்தை இமயம் தாங்குமா? அப்பகுதிகளில் மலைநாட்களில் பயணித்த பத்து நாட்களில் கண்ட மலைச்சரிவுகளும் சாலைப்பிளவுகளும் தான் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஈஷ்வரா! ஆபத்தின்றி எல்லோரையும் காப்பாத்துப்பா! என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டிருக்கும் பொழுதே ‘ஹார்ன்’கள் எழுப்பும் ஒலியும், புழுதி பறக்கும் சாலையில் நடந்து செல்லும் கூட்டமும், வண்டிகளும், மடங்களும், தங்கும் விடுதிகளும், உணவகங்களும், சாலையோர கடைகளும் அதிர்ச்சியைத் தந்தது! சிவானந்த ஆசிரமத்தின் பெயர் பொறித்த சாலை வளைவு வழியே உள்ளே நுழையும் பொழுது என் கனவு நகரத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.

ரிஷிகேஷ் பற்றின முதல் அபிப்பிராயம் ஏமாற்றத்தில் முடிய, நாங்கள் தங்கவிருக்கும் விடுதியைத் தேடினால் வரைபடம் “போய்க்கிட்டே இரு” என்று காட்ட, வழியில் மிகப்பெரிய சந்தை, ஆற்றுப்பாலம், மூக்கைப்பொத்திக் கொண்டு துர்நாற்றப்பாதையைக் கடக்க, “என்னங்க, இந்த ஊர் இப்படி இருக்கு?” என்று ஈஷ்வரைப் பார்த்தால் அவர் எனக்கு மேல் அதிர்ச்சியில் இருந்தார். வழியில் சிலரிடம் முகவரியைக் காட்டி விடுதிக்குச் செல்லும் குறுகிய தெருவில் கஷ்டப்பட்டு வண்டியை நிறுத்தினார் டிரைவர்ஜி. “எத்தனை பெரிய விடுதிகள் நகருக்குள் நுழைந்தவுடன் இருக்க, இங்கே ஏன் தங்குகிறீர்கள்? இதுவரை நான் இந்தப்பக்கம் வந்ததே இல்லை.” என்று கடுவன் பூனை மாதிரி கோபத்துடன் கேட்டார். மனிதர் பசியில் வேறு இருந்திருப்பார் போல! அவர் வண்டி எடுக்கத் திரும்பக்கூட முடியாது. ரிவர்ஸில் தான் செல்ல வேண்டும். அதற்குள் ஒருவர் இந்த தெருவுக்குள் வெளி வண்டியெல்லாம் வரக்கூடாது என்று சொல்ல, விடுதியில் இருந்து இருவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டுச் செல்ல, “எங்கே போய் இந்த மனுஷன் இடத்த பிடிச்சிருக்காரு? வழியில எத்தனை நல்ல விடுதிகள் இருந்தது?” யோசித்துக் கொண்டே நடக்க, தெருவில் தூங்கிக் கொண்டிருந்த பைரவர்களும் கூடவே வர, டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக வந்தவர், “உனக்குப் பிடிக்கலைன்னா வேற இடத்துக்குப் போகலாம். நீ தானே கங்கைக்கரையோரம் தங்கணும்னு சொன்ன. அதான் இங்க போட்டேன். ஆனா இந்த சின்ன சந்துக்குள்ள இருக்கும்னு எனக்கும் தெரியாது. ரெவியூஸ் எல்லாம் நல்லா இருந்ததுன்னு தான் இங்க ரூம் போட்டேன்” என்று ஈஷ்வர் சமாதானம் செய்து கொண்டே வர, பசியின் போது ஏதாவது பேசினால் சண்டையில் முடியும். அதனால் முதலில் அறைக்குச் சென்று பெட்டிகளை வைத்து விட்டு மதிய உணவிற்குச் சொல்லி மாடியில் இருந்த வரவேற்பாளர் அறைக்கு வந்தால் வெளியே சில அடிகளில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் “மா கங்கா”.

“ஆஆஆ ! இங்க பாருங்க” என்றவுடன் தான் ஈஷ்வருக்கும் நிம்மதியாக இருந்தது. “அதான. நல்லா பார்த்து தான் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். இப்ப சந்தோஷமா? அதுக்குள்ள😌…” மேற்கொண்டு பேசுவதற்குள் சுடச்சுட உணவும் வந்து சேர, வெளியில் அமர்ந்து நிம்மதியாக சுவையான உணவை உண்டு முடித்தோம்.

ரிஷிகேஷுக்குள் நுழையும் பொழுது ஏற்பட்டிருந்த ஏமாற்றம் மெல்ல மெல்ல கங்கையின் ஓட்டத்தில் கரைந்து கொண்டிருக்க, இன்னும் இரு நாட்கள் இங்கு தங்கி இருக்கப் போகிறோம் என்ற நினைவே அத்தனை சுகமாக இருந்தது😍

9. குப்தகாசி – பத்ரிநாத்

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக  குப்தகாசி-பத்ரிநாத் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் குப்தகாசி – பத்ரிநாத்.

நதிகளும் மலைகளும் சூழ்ந்த இயற்கை அழகுடன் பனிச்சறுக்கு விளையாட்டு, மலையேற்றம், நடைபயணம், ஆயிரம் வருடங்களுக்கும் மேலான புராதன கோவில்கள் என்று அனைத்து வயதினரும் சென்று வர உகந்த மாநிலமாக இருக்கிறது உத்தரகாண்ட். நாங்கள் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவிலிருந்து சென்று வந்த கோவில்கள் வரை வாழ்க்கையில் மறக்க முடியாத இன்ப அனுபவமாக இருந்தது. கேதர்நாத்தின் ‘சில்ல்ல்ல்ல்’ அனுபவத்திற்குப் பிறகு ‘சார்தாம்’ யாத்திரையின் நான்காவது கோவிலான பத்ரிநாத்திற்குச் செல்ல ஆயத்தமானோம்.

அதிகாலையில் பறவைகளின் சங்கீதத்தில் விழித்து பனிபடர்ந்த மலைகளின் மீது சூரிய பகவான் உலாவரும் அழகுக்காட்சியுடன் அன்றைய விடியல் இனிதே ஆரம்பித்தது. விரைவில் நாங்கள் தயாராக, எங்களுக்கான காலை உணவும் (பிரட், பட்டர், ஜாம்) பொட்டலத்தில் காத்திருந்தது. சூடான தேநீரை அருந்தியபடி மலைகளுக்கிடையில் துள்ளி ஓடிவரும் மந்தாகினி ஆற்றையும் மலைகளையும் அழகான சிகப்பு குடியிருப்புக் கட்டடங்களையும் சூரிய ஒளியில் மின்னும் பனிபடர்ந்த கேதர்நாத் மலையை மீண்டும் ஒருமுறை கண்கள் நிறைய கண்டு திருப்தியுடன் மேனேஜர் கிருஷ்ணா மற்றும் பணியாளர்களிடம் இருந்து விடைபெற்று ஆறரை மணிக்குப் பயணமானோம். ‘பை பை குப்தகாசி’😊அன்று வருண பகவான் சற்றே இளைப்பாறும் நாளாக இருந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

வழியெங்கிலும் மந்தாகினியுடன் பயணம். ‘குளுகுளு’ மலைக்காற்று சாமரம் வீச, மலைகளில் ஏறுவதும் இறங்குவதுமாய் வளைந்து நெளிந்து நீண்டு கொண்டே சென்றது சாலை. ஒரு மணிநேரத்தில் ‘உக்கிமத்’ என்ற அழகான இயற்கை எழில் கொஞ்சும் நகரத்தில் வண்டியை நிறுத்தி கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்று இறக்கி விட்டார் டிரைவர்ஜி. எங்களுக்கு முன்பே பல வண்டிகள் அங்கு பயணிகளை இறக்கி விட்டுக் காத்திருந்தது. பனிசூழ்ந்த மலையடிவாரத்தில் மந்தாகினி, அலக்நந்தா நதிகள் சங்கமிக்கும் ஆற்றங்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1311 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உக்கிமத் நகரம் ஒரு புனித நகரமாகும். இங்குள்ள ‘ஓம்காரேஷ்வர்’ கோவிலுக்குச் செல்லும் வழியில் நான்கைந்து கடைகளில் அர்ச்சனைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு கடையில் தட்டில் மாலையுடன் அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களை வைத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டு ஏற்றத்தில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தோம்.

வண்ணச்சித்திரங்களுடன் மரவேலைப்பாடுகள் கோவில் முகப்பை அலங்கரிக்க, படியேறி உள்ளே சென்றால் பழமையான கோவில் கோபுரம் உயர்ந்து நிற்கிறது. ஒருவர் அழகாக மேளம் வாசித்துக் கொண்டிருந்தார். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. சிறியதும் பெரியதுமாக சந்நிதிகள் வண்ணமயமாக கண்களைக் கவர்ந்தது. பனிக்காலத்தில் கேதர்நாத், மத்யமஹேஷ்வர் ‘பஞ்ச கேதர்’ தலங்களிலிருந்து உற்சவ மூர்த்திகளை இந்தக் கோவிலில் வைத்து பூஜை செய்து வணங்குகிறார்கள்.பனிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் சிவலிங்கங்கள் அந்தந்த கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அங்கிருந்த அர்ச்சகர் கூறினார். இங்குள்ள கோவில்களில் தரைமட்டத்தில் தான் சிவலிங்கங்கள் இருக்கிறது. சின்னஞ்சிறிய கர்ப்பகிரகம். எதிரே நந்திக்கு ஒரு மண்டபம். கீழே அமர்ந்த படி கணீரென்ற குரலில் ருத்ரம் சொல்லிக் கொண்டே சிவ பூஜை செய்து கொண்டிருந்தார் அர்ச்சகர். நல்ல கூட்டம். ஆறு பேர் நின்றாலே நடுவிலிருந்த சிறிய மண்டபம் நிறைந்து விடுகிறது. பலரும் வீட்டிலிருந்து தண்ணீரும், பாலும் கொண்டு வந்திருந்தனர். நாங்களும் பூஜைப் பொருட்களைக் கொடுத்து திவ்வியமாகக் காட்சி தந்து கொண்டிருந்த சிவனை வழிபட்டு வெளியே வந்தோம். எதிரே இருந்த சந்நிதியில் தான் கேதர்நாத், மத்யமஹேஷ்வர் கோவில் உற்சவமூர்த்திகளை வைத்து வழிபடுகிறார்கள். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உயர்ந்த கோவில் கோபுரம். பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. பாண்டவர்கள் பஞ்ச கேதாரங்களின் சிவலிங்கங்களின் தரிசனம் பெற்றதால் இங்கே பஞ்ச கேதார லிங்கங்களின் தரிசனத்தையும் பெற முடிகிறது. வராஹி, சண்டி தேவி, பைரவர்களுக்கு சந்நிதிகள் இருக்கிறது.

இக்கோவிலைப் பற்றின பல சுவையான தகவல்களை அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த அயோத்தியா மன்னன் மாந்தாதா சிவனை நோக்கித் தவம் புரிய, ஓம்கார ரூபத்தில் சிவன் காட்சி அளித்ததால் ‘ஓம்காரேஷ்வர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலத்தில் தான் பாணாசுரனின் மகள் உஷைக்கும் கிருஷ்ணரின் பேரன் அநிருத்தனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது என்பது ஐதீகம். அமைதியான சுத்தமான கோவில். குப்தகாசிக்குச் செல்பவர்கள் மறக்காமல் இக்கோவிலுக்குச் சென்று வரவும்.

திருப்தியுடன் வெளியில் வந்தால் லஸ்ஸி பானை ‘வா வா அன்பே அன்பே’ என்று அழைத்தது. ஆசையிருந்தாலும் எதற்கு வம்பை விலைக்கு வாங்குவானேன். இன்னும் ஒரு கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதால் காசியில் குடித்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு லஸ்ஸி ஆசையை ஒத்தி வைத்துவிட்டேன். காலை எட்டு மணிக்குச் சீருடை அணிந்து முதுகில் புத்தகப்பையுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. மலைகள் மீதேறி வளைந்து வளைந்து சென்ற பாதை உச்சிக்குச் சென்றவுடன் இறங்கிச் செல்வதுமாய் மீண்டும் மலைகளூடே பயணம். இதமான வெயில். வழியில் மலையேற்ற பயிற்சிமுகாம்கள் பலவும் கூடாரங்களுடன் இருந்தன. அங்கிருந்து ‘சொப்தா’ நகருக்குச் சென்று துங்க்நாத்திற்கு மலையேறிச் செல்ல பெரும் கூட்டம் காத்திருந்தது. இதற்காக பல நிறுவனங்கள் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை வைத்து அது பெரும் லாபகரமான தொழிலாக மாறிவருகிறது என்பதைக் கண்கூடாகவே பார்த்தோம். இரவில் வழியில் தங்கிச் செல்லும் வசதிகள் எல்லாம் கூட இருக்கிறது! இதைப்பற்றி முன்பே தெரிந்திருந்தால் ஒருநாள் கூடாரத்தில் தங்கி துங்க்நாத்திற்கு மலையேறிச் செல்ல முயற்சித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டோம். ம்ம்ம்… எங்களுடன் தங்கியிருந்த மும்பை பெண் வித்யா தனியார் நிறுவன வழிகாட்டியின் துணையுடன் துங்க்நாத்திற்கு செல்ல சொப்தாவிற்குச் சென்றிருந்தார். இந்தியாவிலும் சில இடங்களுக்குப் பெண்கள் தனியாக பயணம் செல்ல முடிகிறது, செல்கிறார்கள் என்பதே என்னை பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் தான். ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பது தான் துயரம்😔

9.30 மணிக்கு மலைப்பிரதேச பகுதியில் சாலையோரத்தில் வரிசையாக நின்றிருந்த வண்டிகளுடன் எங்கள் வண்டியும் நின்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே  ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. சில பல படங்களை எடுத்துக் கொண்டோம். அனைவர் கைகளிலும் அலைபேசிகள். நேரில் இயற்கையை ரசிப்பதை விட காமெரா வழியாக தங்களைப் படமெடுத்துக் கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தது கூட்டம்😎

கடையில் தேநீர் அருந்தி விட்டு மலைப்பாதையில் அமர்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்த மாடுகளைக் கடந்து உயரமான தேவதாரு, ஓக் மற்றும் வேறு பல மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பயணம். அந்தப் பகுதி முழுவதும் ‘குளுகுளு’வென்றிருந்தது. ஆனால் ‘கொய்ங்ங்ங்ங்ங்’ என காதை அடைக்கும் பூச்சிகளின் வினோத சத்தம் தூரத்திலிருந்தே கேட்க ஆரம்பித்து விட்டது. ‘சிக்கடாஸ்’என்னும் பூச்சியினம் கோரஸ் பாடுவதைக் கேட்டுக் கொண்டே ஏராளமான மலைக்கிராமங்களைக் கடந்து வந்தோம். இம்மலைப்பிரதேசத்தின் காடுகளின் வளர்ச்சிக்கு இந்தப் பூச்சியினங்களின் பங்கு மிக அதிகம். மனித நடமாட்டமில்லாத பகுதிகளில் இயற்கை செழிப்பாக இருப்பதைக் கண்டதாலோ என்னவோ இயற்கையை அழிப்பதில் நாம் தான் இருப்பதிலேயே மோசமான மிருகங்களாக இருக்கிறோம் என்ற குற்ற உணர்வும் மேலோங்கியிருந்தது😔

சிறு சிறு மலைக்கிராமங்கள். தெருக்களில் அழகிய சிறு கோவில்கள். முதுகில் புல் மூட்டையைச் சுமந்து செல்லும் மனிதர்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், காதில் போனை வைத்துக் கொண்டு கழுத்தைச் சாய்த்துப் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் என ‘சமோலி’ மாவட்டத்தில் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. மலைகளில் ‘படி விவசாயம்’ செழிப்பாக நடக்கிறது. ஒரு வண்டி செல்லும் பாதை அளவில் குறுகிய சாலை. சில இடங்களில் சாலை விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருக்க, சிறு போக்குவரத்து நெரிசல்.

‘சமோலி’யில் உள்ள ‘நந்தா தேவி தேசிய பூங்கா’, பல அரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக விளங்குவதால் அதனைக் காக்கும் பொருட்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான நந்தா தேவி சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்த பூங்கா 630 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. அலக்நந்தா நதியின் ஆதாரமான நந்தா தேவி பனிப்பாறை உட்பட பல பனிப்பாறைகள் இந்த பூங்காவில் உள்ளன. அங்கெல்லாம் செல்ல வேண்டுமானால் தனியாகத் திட்டமிட்டு வந்திருக்க வேண்டும். பார்ப்பதற்கு அத்தனை அழகிய பொக்கிஷங்களைத் தன்னுள்ளே வைத்திருக்கிறது இந்த ‘சமோலி’ மாவட்டம்.

வழியில் பல சீக்கியர்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளிலும், கார்களிலும், பைக்குகளிலும் செல்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் ஏன் இந்தப் பக்கம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் சீக்கியர்களின் கோவிலானா ‘ஹேம்குந்த் சாஹிப்’ செல்லும் வழிகாட்டியைப் பார்த்தோம். பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்குக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் சீக்கியர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.

‘கோபேஷ்வர்’ ஊரை நெருங்க, சிற்றருவிகள், இயற்கைக்காட்சிகள் என குறைவில்லாத மலைப்பயணத்தில் அலுப்பே ஏற்படவில்லை. அடுக்கடுக்காக வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள் என நாங்கள் கடந்து வந்ததில் சற்றே பெரிய ஊர் இது தான். மதியம் 1.50க்கு ‘ஜோஷிமத்’ ஊரின் நடுவிலிருக்கும் நரசிங்கப் பெருமாள் கோவிலை வந்தடைந்தோம். வழக்கம் போல் தெருவில் எங்களை இறக்கி விட்டுப் போய் விட்டார் டிரைவர்ஜி. கோவில் வாசலில் அர்ச்சனைப் பொருட்கள், பிரசாதங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். இங்குள்ள நரசிங்கப் பெருமாளைத் தரிசித்து விட்டு பத்ரிநாத்தில் இருக்கும் ஸ்ரீபத்ரிவிஷால் தெய்வத்தை வழிபடவேண்டும் என்பது ஐதீகம். பனிக்காலத்தில் பத்ரிநாத் கோவிலில் இருக்கும் உற்சவ மூர்த்திகள் இக்கோவிலில் வைத்து வழிபடப்படுவதால் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கிறது. ஆதி சங்கராச்சாரியார் வேதாந்த கொள்கையினைப் பரப்ப உருவாக்கிய நான்கு மடங்களில் இதுவும் ஒன்று. அவர் ஐந்து வருடங்கள் இங்கு தங்கி உருவாக்கிய கோவில். ‘ஜ்யோதிர்மட்’ என்று அவர் பெயரிட்ட இடமே இன்று ‘ஜோஷிமத்’ என மருவி உள்ளது. இங்கிருந்து 41கிமீ தொலைவில் பத்ரிநாத் அமைந்துள்ளது.

ஜோஷிமத் கோவிலின் கட்டிடக்கலை குறிப்பிடத்தக்கது. இது நகரா என்னும் வட இந்திய கோபுர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு பெரிய மைய குவிமாடம், பல சிறிய குவிமாடங்கள் மற்றும் கோபுரங்கள் உள்ளன. பிரதான கோவில் சாம்பல் நிற கிரானைட்டால் கட்டப்பட்டுள்ளது. மண்டபம் மற்றும் கர்ப்பகிரகமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. விஷ்ணு, பிரம்மா, விநாயகர், ஹனுமான், துர்கா போன்ற பல்வேறு இந்துக் கடவுள்களுக்கு சந்நிதிகளும் கோவில் வளாகத்தில் உள்ளன. பண்டைய இந்திய கட்டிடக்கலையின் அழகையும் மகத்துவத்தையும் கண்டுகளிக்க இது ஒரு சிறந்த இடமாகும். இந்தியாவின் ஆன்மீக வரலாற்றின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இந்தக் கோவிலை பத்ரிநாத்/கேதார்நாத்/குப்தகாசி செல்பவர்கள் தவறாமல் சென்று பாருங்கள்.

மலைகள் சூழ, நெருக்கமான குடியிருப்புகளுக்கிடையே பரந்து விரிந்திருக்கும் கோவிலில் மன அமைதிக்கும் குறைவில்லை. நீண்ட நேரம் கோவில் வளாகத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ் நின்று அமைதியை ரசித்துக் கொண்டிருந்தோம். தங்கள் வேண்டுதல் நிறைவேற மரத்தில் சிகப்புத் துணியில் முடிந்து வைத்திருந்தார்கள் பக்தர்கள். வெண்மேகம் மலையை முத்தமிட்டுச் செல்லும் அழகை ரசித்துக் கொண்டே கோவிலை விட்டு வெளியில் வந்தோம். கோவிலைச் சுற்றி வசிப்பிடங்கள் தாழ்வான, உயரமான பகுதிகளில் என்று எங்கும் வியாபித்திருக்கிறது. பார்க்க கொஞ்சம் அச்சமாகவும் எப்படி பனிக்காலத்தைச் சமாளிக்கிறார்களோ என்று வியப்பாகவும் இருந்தது! அங்கிருந்து தொலைதூர நெடுஞ்சாலையைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது!

அரைமணி நேரத்தொலைவில் ‘விஷ்ணுபிரயாக் ஹைட்ரோ’ தனியார் நீர் மின் திட்டம் என்று பச்சை வண்ணத்தில் பெரிய அறிவிப்புப் பலகை ஒன்றைப் பார்த்தோம். இது காங்கிரஸ் கூட்டணி காலத்திலேயே உருவாக்கப்பட்டு விட்டது. உத்தரகாண்டின் வருமானம் அதிகளவில் இந்த நீர் மின் திட்டத்தின் மூலம் கிடைப்பதாக கங்கோத்ரிக்குச் செல்ல காத்திருந்த வேளையில் உள்ளூர் ஓட்டுநர் கூறியிருந்தார். “அதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும் அதிகம். ஆனால் பணம் நிறைய கிடைக்கிறது என்று சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள்” என்று வருந்தியதும் நினைவிற்கு வந்தது. நாங்கள் பார்த்த வரையில் ஒரு பெருமழைக்கே மலைச்சரிவுகளும் சாலைகள் துண்டிக்கப்படும் நிலையில் தான் அந்த பிரதேசமே உள்ளது. மலைகளும் எளிதில் நொறுங்கி விடும் தன்மையுடன் தான் இருக்கிறது. இத்தகைய இடத்தில் தான் அதிகளவில் தனியார் நீர் மின்திட்ட ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பலனைத்தான் தற்போது ‘ஜோஷிமத்’ அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் பல குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் குடும்பங்கள் இடம்பெயருகின்றன. பூகம்ப பாதையில் அமைந்துள்ள இந்த இடத்தில் அதிக எண்ணிக்கைகளில் இத்தகைய மின் ஆலைகள் அமைப்பதை அரசு யோசிக்க வேண்டும். இயற்கையை துஷ்பிரயோகம் செய்வதில் மனிதர்களை மிஞ்ச முடிவதில்லை😔

யோசனையுடன் 3.30 மணியளவில் ‘யோகபத்ரி’ கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். நுழைவாயிலிருந்து குடியிருப்புகளின் வழியே ஒரு கிமீ தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அடுக்கடுக்காக திண்ணை வீடுகள். படிகளில் இறங்கி கோவிலுக்குச் செல்ல வேண்டும். ஜோஷிமத்திலிருந்து 18கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களின் தந்தை பாண்டு மகாராஜா, முனிவரைக் கொன்ற பாவம் தீர தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய இறுதிக்காலத்தில் குந்தி மற்றும் மாத்ரியுடன் யோகபத்ரியை நிர்மாணித்து வழிபட்டதால் பாண்டுகேஷ்வர் கோவில் என்றும்  வனவாசத்தின்போது பாண்டவர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து தங்கள் தந்தைக்குத் திதி கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருக்கும் ‘சப்த பத்ரி’ கோவில்களில் இதுவும் ஒன்று என்று அறிந்த பிறகு மற்ற கோவில்களையும் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. இப்படி ஏகப்பட்ட புராதன கோவில்கள் அருகருகே இருப்பதை இனி அங்கு செல்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுச் சென்றால் ‘தேவ பூமி’யை  முழுவதும் அனுபவிக்கலாம்.

நுழைவாயில் மண்டபத்துடன் யோகபத்ரி கோவில் கோபுரம் ‘ஷிகாரா’ எனப்படும் உருளை வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் இருக்கும் வாசுதேவ கோவிலைப் பாண்டவர்கள் எழுப்பியுள்ளார்கள். அதன் கோபுரம் வட இந்திய கோவில் கோபுர வடிவில் இருந்தது. ஜோஷிமத்திற்கும் பத்ரிநாத்திற்கும் இடையில் அமைந்துள்ள இக்கோவிலில் யோகபத்ரியும், லக்ஷ்மிநாராயணரும் இருக்கிறார்கள். சந்நிதிக்கு வெளியே வலப்புறத்தில் மகாலக்ஷ்மி சந்நிதி இருக்கிறது. இடப்புறத்தில் வாசுதேவர் சந்நிதி இருக்கிறது. மாத்ரி விக்கிரகமும் உள்ளது. நாங்கள் சென்றிருந்த பொழுது அர்ச்சகர் தீபாராதனை காட்டி விளக்கினார். அங்கிருந்த பெண் அதிகாரி எங்கிருந்து வருகிறோம் என்ற தகவல்களைக் கேட்டு ஒரு நோட்டில் பதிவு செய்து கொண்டார். பயணியர்கள் அதிகம் வந்து செல்லும் அழகான அமைதியான கோவிலில் அன்று நாங்கள் மட்டுமே அந்த நேரத்தில் இருந்தோம். கோவிலின் பின்புறம் வெண்ணிற நுரை பொங்க அலகானந்தா ஆறு மலையில் இருந்து ஓடோடி வரும் அழகும் உயர்ந்த இமய மலையும் ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே. இமய மலையின் அழகைக் காண…’ பாடல் மனதில் ஒலிக்க, அங்கிருந்து வீடுகளைக் கடந்து பத்ரிநாத் நோக்கிப் பயணமானோம்.

காலையிலிருந்து நாங்கள் சென்று வந்த மூன்று கோவில்களும் மனதிற்கு நிறைவைத் தருவதாக இருந்தது. 1000 வருடங்களுக்கும் பழமையான கோவில்கள் இன்றும் அதன் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன. ‘புண்ணிய பூமி’ என்று சும்மாவா சொல்கிறார்கள் என்று மனம் குதூகலித்துக் கொண்டிருக்கும் வேளையில் வண்டி ‘டம்டம்’ என்று மேலும் கீழும் குலுங்கி மழையில் தொலைந்த சாலையில் பயணித்து நினைவுலகத்திற்கு என்னை மீட்டு வந்தது. சாலையோர அருவிகளில் உண்மையாகவே ‘மினரல் வாட்டர்’ ஓடிக்கொண்டிருந்தது😋 நான்கரை மணியளவில் ‘ஹனுமன் சட்டி’ எனும் சாலையோர ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். தூரத்திலிருந்தே காவி வண்ண கோபுரமும் கொடிகளும் தெரிகிறது. வரிசையில் நின்று மக்கள் வணங்கிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே பூஜைப் பொருட்களை விற்கும் சிறு கடைகள். எங்கும் எதிலும் காவி மையமாக இருந்தது. ஏராளமான பேருந்துகளும் வண்டிகளும் நின்று கொண்டிருந்தது. அநேகமாக அனைவரும் பத்ரிநாத் செல்பவர்களாக இருந்திருக்கலாம். இங்கே ஆரஞ்சு நிறத்தில் ஆஞ்சநேயர் ராமரை தியானித்துப் பஜனை பாடுவது போன்ற உருவத்தில் அழகாக காட்சியளிக்கிறார்.

 ‘ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர
ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா…’

என்று எம்எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா உருகிப் பாடுவது காதில் ஒலிக்க,
‘ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா…’ என்று ராமபக்தனை வணங்கி விட்டு வந்தோம். மஹாபாரதத்தில் பீமனும் ஆஞ்சநேயரும் சந்திக்கும் காட்சி ஒன்று வரும். அது இங்கு நடந்தது என்பது ஐதீகம்.

வழியில் சீக்கிய யாத்திரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று எங்கள் டிரைவர் ஹார்ன் அடித்தும் முன்னோக்கி வர, வந்ததே கோபம் இவருக்கு. “நீ பஸ்ச பின்னாடி எடு. உன்னைய யாரு முன்னாடி வரச்சொன்னா” என்று அப்படியே நடுவழியில் வண்டியை நிறுத்தி விட்டார். இவர் பின்னாடி சென்றால் இப்ப என்ன குறைந்தா போய்விடுவார்? ஆனால் , நமக்குத் தான் வண்டிவண்டியாய் ஈகோ இருக்கிறதே!. சரி. வேடிக்கை பார்க்கலாம் என்று நாங்களும் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் வண்டிக்குப் பின்னாலும் அந்தப் பேருந்திற்குப் பின்னாலும் வண்டிகள் சேர ஆரம்பித்து, பொறுமையிழந்தவர்கள் ஹாரன் அடிக்க…ம்ஹூம் ! டிரைவர் அசையவே இல்லையே! அதற்குள் இரண்டு சீக்கியர்கள் கீழிறங்கி வந்து இவரிடம் எங்கள் டிரைவர் செய்தது தவறு தான். எங்களுக்காக மன்னித்து வழியை விடுங்கள் ப்ளீஸ்! என்று கெஞ்சிக் கூத்தாடிய பிறகு முணுமுணுத்துக் கொண்டே வண்டியை ரிவர்ஸில் எடுத்தார். தன்மையான மனிதர்களும் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சரியான முரட்டு ஆசாமியா இருப்பார் போலிருக்கிறது எங்கள் டிரைவர்ஜி! “அது என் தப்பில்லையே” என்றார் திரும்பவும். “அதான் அவங்க மன்னிப்பு கேட்டுட்டாங்கல்ல” என்றேன். ஒருவழியாக அந்த இடத்திலிருந்து கிளம்பினோம்.

ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியெங்கும் இயற்கையென்னும் இளைய கன்னி கூடவே வளைய வருகிறாள். தொடர்ந்து சென்று கொண்டிருந்த எங்கள் பயணத்தை ஆட்டுமந்தை கூட்டம் ஒன்று நிறுத்தி விட்டது. ஏதோ அவர்கள் மனது வைத்துப் போனால் போகிறதென்று எங்களுக்கு வழிவிட, தப்பித்துச் சென்றோம்😊 பிரதமரின் வருகையையொட்டி சாலை விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது. அதனால் வண்டிகள் குதித்து குதித்து செல்ல ஒரே களேபரம் தான்! வெகு அருகில் சீன ஆக்கிரமிப்பு திபெத் எல்லை இருப்பதால் தீவிர ராணுவப்படையினர் கண்காணிப்பும் இந்தப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.

வானில் கருமேகங்கள் ஊர்வலம் வர ஆரம்பிக்க, மாலை ஆறு மணியளவில் பத்ரிநாத் வந்து சேர்ந்து விட்டோம். எங்களுடைய ‘சார்தாம்’ யாத்திரையின் கடைசி தலம். நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அம்ரிதரா’ விடுதிக்குப் புதிய சாலை போடும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. உயர்தர நட்சத்திர விடுதி. மாடியிலிருந்து எதிரே கருமேகங்கள் சூழ்ந்த பனிபடர்ந்த மலையும், பத்ரிநாத் கோவில் கோபுரமும் ஊரும் தெரிய, “நாராயணா! உன்னிடம் வந்து சேர்ந்து விட்டோம்” என்று மகிழ்ச்சியாக இருந்தது.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவதற்குள் வெளிச்சம் விலகி இருள் கவிழ, குளிரும் மெல்ல தழுவ, கருமேகங்கள் மிரட்டிக் கொண்டிருந்த வேளையில் கோவிலுக்குச் சென்று வந்துவிடலாம் என்று கிளம்பி விட்டோம். இலவச உணவு, தங்கும் வசதிகளுடன் வெவ்வேறு மடங்களைச் சேர்ந்த தர்ம சத்திரங்கள். பயணிகள் தங்க விடுதிகள், உணவகங்கள், கடைகள் என்று ‘ஜேஜே’ என்று இருக்கிறது ஊர். கோவிலில் இருந்து ஒரு கிமீ தொலைவில் எங்களை இறக்கி விட்டு அங்கேயே வண்டியில் காத்திருப்பதாக டிரைவர்ஜி சொல்லி விட, நாங்களும் பஜாரைப் பார்த்துக் கொண்டே செல்லலாம் என்று இறங்கி விட்டோம். சனிக்கிழமை வேறு. சரியான கூட்டம். ஆயுர்வேத மூலிகை கடைகளில் இருந்து மணிமாலைகள், பரிசுப்பொருட்கள், துணிக்கடைகள், உணவகங்கள் என்று அனைத்துவித கடைகளும் கோவிலுக்குச் செல்லும் பாதையில் மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. கேதர்நாத்தில் சந்தித்த செட்டியார் குடும்பங்களை மீண்டும் சந்தித்துப் பேசினோம். மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கூறி மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றுச் சென்றார்கள்.

அலக்நந்தா ஆறு பெரும் பாய்ச்சலுடன் ஓடிக் கொண்டிருக்க, பாலத்தின் மேல் ஏறி ஆற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் ‘தப்தகுண்டம்’ புண்ணிய தீர்த்த தொட்டி வருகிறது. பலரும் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்கென தனி தீர்த்த குண்டம் இருந்தது. சூடான தண்ணீரில் ஆனந்தமாக குளித்து அருகிலேயே உடைமாற்றிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது. குளிர்ப்பிரதேசத்தில் இப்படியொரு சுடுநீர் சுனை! தொட்டிகளைத் தவிர,யாத்ரீகர்கள் வசதிக்காக வரிசையாக குழாய்களில் தீர்த்தம் வரும் படி செய்திருந்தார்கள். நாங்கள் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோம். செருப்புகளை ஓரிடத்தில் வைத்து விட்டு படிகளில் ஏறி பார்த்தால் மலையடிவாரத்தில் வண்ண மயமான முகப்பில் சங்கு, சக்கரம் நடுவில் ஓம் சின்னத்துடன் கோவில் கோபுரம் பார்ப்பதற்கு திபெத்தியர் கோவில் போல இருந்தது. படிகளில் நல்ல கூட்டம். மெல்ல நகரும் மக்கள் வெள்ளத்தில் நாங்களும் ஐக்கியமானோம். இந்தக் கோவிலுக்கும் நிறைய புராணக்கதைகள் உண்டு.

108 திவ்யதேசங்களில் 99வது திவ்ய தேசம் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட இந்த விஷ்ணு கோவில். லக்ஷ்மிக்கு மறுபெயர் பத்ரி. அவளின் நாதன் குடியிருக்கும் ஊர் என்பதால் பத்ரிநாத் என்ற பெயர்க்காரணம். உயரமான கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றவுடன் சந்நிதி தெரிகிறது. சாளக்கிராமத்தினால் ஆன மூலவர் பத்ரிவிஷால், லட்சுமி, விநாயகர், நர நாராயணன், கருடன், குபேரனுடன் திவ்ய அலங்காரங்களுடன் காட்சி தந்து கொண்டிருந்தார். அந்த மண்டபம் முழுவதும் மக்கள் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார்கள். நம் பாவங்களைப் போக்கும் அவன் தாள் வணங்கி நின்றோம். அத்தனை அழகு! தெய்வீகம்! வெளியில் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு சந்நிதியும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சபா மண்டபத்தில் ஒருவர் பஜனைப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். மழையைப் பொருட்படுத்தாது மக்கள் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நவதுர்கா, கருடன், லட்சுமி நரசிம்மர் சந்நிதிகளும் உண்டு. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜர், வேதாந்த தேசிகர் சந்நிதிகளில் அனைவரையும் வணங்கி மகிழ்வுடன் கிளம்பினோம்.

வரும் வழியில் சில நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி விடுதிக்குத் திரும்பினோம். சுவையான இரவு உணவை உண்ட திருப்தியுடன் ‘சார்தாம்’ யாத்திரையை பரிபூரணமாக அனுபவித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பழமையான பல்வேறு கோவில்களுக்குச் சென்று வந்த மனதிருப்தியுடனும் அடுத்த நாள் பயணத்தைப் பற்றின எதிர்பார்ப்புடனும் உறங்கச் சென்றோம்.

ஜெய் ஸ்ரீபத்ரி விஷால்!

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...