Friday, July 14, 2023

அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்

 கடந்த வாரம் சொல்வனத்தில் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்! பற்றின என்னுடைய கட்டுரை. இன்று பைடன் அரசின் மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி தற்போதைய அரசிற்குப் பின்னடைவாக இருக்குமோ?  பைடன் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதும் பல வழக்குகளைச் சந்தித்து வரும் முன்னாள் அதிபர் ட்ரம்ப்  எதிரணி வேட்பாளர்களில் இன்னும் முன்னணியில் இருப்பதும் எதிர்வரும் தேர்தலில் எப்படி எதிரொலிக்கப் போகிறதோ?

Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead)

அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஆரம்பகட்ட வேலைகள் இப்பொழுதே ஜரூராக நடக்க துவங்கிவிட்டது. ஜனநாயக கட்சி சார்பில் இந்த முறையும் போட்டியிடப் போவதாக அதிபர் பைடன் அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்க, குடியரசுக்கட்சி சார்பில் பலரும் வேட்பாளர் களத்தில் குதித்து ஊடகங்களைப் பரபரப்பாக வைத்துள்ளனர். இவர்களில் அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போது வரையில் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் வகிப்பதால் அவர் மீதான தொடர் சட்டப்போராட்டங்களும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிபராக பதவி வகித்த காலத்திலேயே அவர் மீது பல வழக்குகளும் விசாரணைகளும் இருந்தது. அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு முறை ‘பதவி நீக்கம்’ செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தனது அரசியல் போட்டியாளரான ஜோ பைடனை விசாரிக்க உக்ரைன் நாட்டு அதிபரை நிர்பந்தித்த குற்றச்சாட்டில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் அவர் மீதான விசாரணையை நடக்க விடாமல் காங்கிரசை தடுத்ததற்காகவும் பிரதிநிதிகள் சபையால் 2019 டிசம்பரில் அதிபர் ட்ரம்ப் ‘பதவி நீக்கம்’ செய்யப்பட்டார். இங்கே ‘பதவி நீக்கம்’ என்பது அதிபரின் தவறான நடத்தைக்குக் குற்றம் சாட்டப்படும் செயல்முறை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பிரதிநிதிகள் சபையால் ‘பதவி நீக்கம்’ செய்யப்பட்டதால் வழக்கு விசாரணைக்காக செனட்டிற்குச் சென்றது. குடியரசுக்கட்சியினரின் செனட் பெரும்பான்மையால் மட்டுமே பிப்ரவரி 2020ல் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார். அதாவது, பிரதிநிதிகள் சபையின் பதவி நீக்க குற்றச்சாட்டுகளின் விளைவாக அவர் பதவியில் இருந்து நீக்கப்படாமல் அதிபராகத் தொடர முடிந்தது. ஜனவரி 2021ல் அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டிற்காக இரண்டாவது பதவி நீக்கம் நடந்தது. அந்த வழக்கிலிருந்தும் பிப்ரவரி 2021ல் செனட்டால் விடுவிக்கப்பட்டார்.

தற்போது நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில் அதன் முடிவுகள் அவருடைய எதிர்கால அரசியலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்குகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

2016ல் அதிபர் வேட்பாளராக ஹிலரி க்ளிண்டனை எதிர்த்துப் போட்டியிடும் நேரத்தில் தனது வரி அறிக்கையை வெளியிட மறுத்து அதிபர் வேட்பாளர்களின் பாரம்பரியத்தை உடைத்தார். ட்ரம்ப்பின் வணிக நடைமுறைகள், நிதி மோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றின் மீது விசாரணை நடத்த பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஜூலை 2020ல் ட்ரம்ப் நிறுவனங்களின் நிதி ஆவணங்கள் குற்றவியல் விசாரணைக்காக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், வரி மற்றும் காப்பீடு மோசடி உள்ளிட்ட சாத்தியமான நிதிக் குற்றங்களை விசாரித்து வருகிறது. நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம், கடன்கள் மற்றும் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக ட்ரம்ப் நிறுவன சொத்துக்களின் மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டதா என்பது குறித்தும் சிவில் விசாரணையை நடத்தி வருகிறது.

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ட்ரம்ப்புடன் முன்பு தனக்கு இருந்த தொடர்பைப் பற்றி 2016 தேர்தலில் பேசாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், ‘ஹஷ்’ பணம் செலுத்தி பிரச்சார நிதி மீறல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. இது ட்ரம்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்க வைக்கக்கூடும். ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த ‘அவதூறு’ வழக்கில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

2020 அதிபர் தேர்தல் முடிவுகள் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக இல்லாத நிலையில் ஜார்ஜியா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை ஃபுல்டன் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றவியல் துறை விசாரணை செய்து வருகிறது.

ஈ. ஜீன் கரோல் என்பவர் தாக்கல் செய்த ஒரு சிவில் வழக்கில் 1996ல் ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதை மறுத்து “அவள் தன்னுடைய வகை அல்ல என்று கூறி அவளது புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க கதையை உருவாக்கியிருக்கிறார்” என்று அவதூறாகப் பேசிய வழக்கில் கரோலுக்குச் சாதகமாக ஐந்து மில்லியன் டாலர்கள் தீர்ப்பை நடுவர் மன்றம்(ஜுரி) வழங்கியுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரம் ஏதுமில்லாததால் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நிராகரிக்கப்பட்டது. இந்த சிவில் தீர்ப்பின் விளைவாக அவர் எந்தச் சிறைத்தண்டனையையும் பெறவில்லை.

நாட்டின் வரலாற்றில் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ட்ரம்ப் அளவிற்குக் குற்றஞ்சாட்டப்படவில்லை அல்லது குற்றங்கள் செய்திருக்கவில்லை. வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டு புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக 37 குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகள் நடந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த வழக்கு தான் தற்போது அதிக பரபரப்பாக மக்களின் கவனத்தையும் அரசியல் வட்டாரத்தையும் ஈர்த்து கட்சிக்குள் பலவிதமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி பதிவுச்சட்டத்தின்படி பதவிக்காலம் முடிந்து வெளியேறும் அதிபர்கள் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை தேசிய ஆவண காப்பகம் மற்றும் பதிவு நிர்வாகத்திடம் (National Archives and Records Administration (NARA)) ஒப்படைக்க வேண்டும். அதிபர் ட்ரம்ப் ஜனவரி 20, 2021ல் வெள்ளை மாளிகையில் இருந்து ஃபுளோரிடாவில் உள்ள அவரது ‘மார்-எ-லாகோ’ இல்லத்திற்குப் பல ரகசிய அரசாங்க ஆவணங்களை எடுத்துச் சென்றது குறித்து நீதித்துறை விசாரணையைத் தொடங்கியது. மே 2021 முதல் NARA அதிகாரிகள் ட்ரம்ப்பிடம் எடுத்துச் சென்ற ஆவணங்களை ஒப்படைக்க பலமுறை கேட்டுக்கொண்டனர்.

சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் தலைமையிலான ஃபெடரல் வழக்கறிஞர்கள் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய போது மிகவும் முக்கியமான தேசிய பாதுகாப்பு ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அந்த ஆவணங்களை அவர் தனது ஃபுளோரிடா உல்லாசவிடுதியில் பதுக்கி வைத்திருந்தது மட்டுமில்லாமல் அவற்றை மீட்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுத்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்க அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய மிக ரகசிய கோப்புகளைப் பாதுகாப்பு அனுமதி இல்லாத நபர்களிடம் ட்ரம்ப் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த ரகசிய ஆவணங்களில் ஒன்று, வேறொரு நாட்டின் மீதான ‘தாக்குதல் திட்டம்’ என்பதால் ராணுவத்துறையும் கதிகலங்கி நிற்கிறது.

இறுதியாக, ஒரு வருடம் கழித்து அவருடைய பிரதிநிதிகள் 2022 ஜனவரியில் 15 பெட்டிகளை ஒப்படைத்தனர். அதில் 197 வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களில் 92 ஆவணங்கள் ‘ரகசியம்’ என்றும் 25 ‘பரம ரகசியமான ஆவணங்கள்’ என்ற அடையாளங்களுடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பிப்ரவரி 2022ல் வகைப்படுத்தப்பட்ட இந்த ஆவணங்கள் பிற கோப்புகளுடன் கலந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததை NARA அதிகாரிகள் நீதித்துறையிடம் எடுத்துரைத்தனர். மார்ச் 30, 2022 அன்று புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சாட்சியம் மற்றும் பிற ஆதாரங்களைப் பெற ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து மே 2022ல் ட்ரம்ப்பின் வசம் உள்ள மற்ற ஆவணங்களை நீதித்துறையிடம் ஒப்படைக்குமாறு கிராண்ட் ஜூரி ஆணையிட்டது. ஆனால் அவரோ விசாரணையைத் தடுத்து தன்வசம் இருந்த ரகசிய ஆவணங்களை மறைக்க முயன்றிருக்கிறார். புலனாய்வாளர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள அனைத்து ரகசியப் பதிவுகளையும் திருப்பிக் கொடுத்து விட்டதாக அவருடைய வழக்கறிஞரை நிர்பந்தித்து இறுதியில் தனது வழக்கறிஞர்களில் ஒருவரை ஆவணங்களைத் தேட அனுமதிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கறிஞர் மதிப்பாய்வைத் தொடங்குவதற்கு முன்பே தனது உதவியாளர் வால்ட் நௌட்டாவின் உதவியுடன் சேமிப்பு அறையில் இருந்து ஆவணப்பெட்டிகளைத் தனது இல்லத்திற்கு மாற்றியுள்ளார். தொடர் விசாரணையின் முடிவில் ஜூன் 3, 2022 அன்று ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் 38 கூடுதல் ரகசிய ஆவணங்களை நீதித்துறையிடம் ஒப்படைத்து ‘மார்-எ-லாகோ’வில் தீவிரமான தேடலுக்குப் பிறகு வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அந்தக் கூற்றில் உண்மை இல்லை என்பதை உணர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்’ ட்ரம்ப்பின் இருப்பிடத்தில் வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் 102 ஆவணங்களைக் கைப்பற்றியது. முன்னறிவிப்பின்றி முன்னாள் அதிபரின் வீட்டில் நடந்த இந்த அதிரடித்தேடல் பைடன் நிர்வாகத்தினரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்துள்ளது என்ற ட்ரம்ப்பின் குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அலுவலகம், பால் ரூம், குளியல், படுக்கைஅறைகள், சேமிப்புக்கிடங்கு மற்றும் நியூஜெர்சி பெட்மினிஸ்டரில் இருக்கும் அவருடைய வீட்டில்  அரசின் வகைப்படுத்தப்பட்ட ஆவணப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிர்ச்சியுடன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பல மாதங்களாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஃபெடரல் கிராண்ட் ஜூரி ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து சாட்சிகளையும் விசாரித்துக் கேட்டுக் கொண்டது. இதில் ட்ரம்ப்பின் ஆவணங்களைப் பற்றின பேட்டிகளும் அவருடைய வழக்கறிஞர்கள் சிலரின் சாட்சியங்களும் அடங்கும். இவற்றின் அடிப்படையில் அதிபராகப் பதவிக்காலம் முடிந்தபின்னும் தேசிய பாதுகாப்புத்தகவல்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டு உளவுச்சட்டத்தை மீறியதில் 31 குற்றங்களும் விசாரணையைத் தடைசெய்ய முயன்றதில் நான்கு குற்றங்களும் தவறான அறிக்கைகளுக்காக இரண்டு குற்றங்களும் என ட்ரம்ப் மீது மொத்தம் 37 குற்றங்களும் பாதுகாப்புத் தகவல்களை அப்புறப்படுத்தும் பணியில் அவரது நீண்டகால உதவியாளர் வால்ட் நௌட்டா மீது ஆறு குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளது. ஜூன் 13, 2023 அன்று மையாமியில் நடந்த விசாரணையில் டிரம்ப் தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் எதிர்கொள்ளும் சட்ட வழக்குகளின் முடிவில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் அரசுப்பதவியில் இருக்க தடை கூட விதிக்கப்படலாம். இந்த வழக்குகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தற்பொழுது உறுதியாகச் சொல்ல முடியாது. இருப்பினும், இந்தச் சவால்கள் ட்ரம்ப்பின் அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது தெளிவாகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த அவர் “உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்” என்று தனது வாக்காளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் உள்ள ஃபெடரல் கிராண்ட் ஜூரி ஜூன் 2023 அன்று ட்ரம்ப் மீது குற்றம்சாட்டியதில் வரலாற்றில் ஃபெடரல் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க அதிபராகவும் பெயரெடுத்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அதிபராக வெற்றிப்பெறுவதைத் தடுப்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நீதித்துறை மற்றும் புலனாய்வுத்துறையைக் கொண்டு பைடன் அரசு தன் மீது வழக்குகளைப் போட்டிருப்பதாக அவருடைய அனுதாபிகளிடம் கூறிக்கொண்டிருக்கிறார். ஹிலரி க்ளிண்டன் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களைக் கையாண்டதில் நீதித்துறை அவருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது என்று அவரது குடியரசுக்கட்சி ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது க்ளிண்டன் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஆண்டுகளில் ரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 30,000 மின்னஞ்சல்கள் அவரது நியூயார்க் வீட்டில் உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல் சர்வரில் கண்டறியப்பட்டது. அவர் தேர்தலில் தோற்க அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. “அவர் ரகசியத் தகவல்களை சட்டத்தை மீறி தவறான முறையில் யாரிடமும் பரிமாறிக் கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் கவனக்குறைவாக இருந்ததற்கான சான்றுகள் இருந்தது. புலனாய்வுத்துறையினரின் விசாரணைக்கு க்ளிண்டன் ஒத்துழைத்ததாகவும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை” என்று அன்றைய புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமி பரிந்துரைத்திருந்தார்.

பதவிக்காலம் முடிந்தபின்னும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ஆவணங்களை ஒப்படைக்காமல் அதனை மறைக்க ட்ரம்ப் சதி செய்ததும் நீதித்துறையின் தேடுதல் விசாரணை வழக்கிற்கு ஒத்துழைக்காததும் தான் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கியுள்ளது. இனி அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஃபுளோரிடா ஆளுநர் ரான் சென்டிசுடனான மோதல் எப்படி இருக்கப் போகிறது? யாரை குடியரசுக்கட்சி தங்களுடைய அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தும்? கட்சி தன்னை முன்னிறுத்தாத பட்சத்தில் தனித்துப் போட்டியிடுவாரா ட்ரம்ப் என்று பல கேள்விகள் உலவிவருகிறது. ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை வரவேற்கும் அதே நேரத்தில் அவர் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்களும் அவர் தான் அதிபர் வேட்பாளராக இருக்கவேண்டும் என ஆதரவாளர்களுமாய் குடியரசுக்கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது.  

“நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமான தகவல்களைப் பாதுகாக்கும் சட்டங்களை மீறுவது நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும். எந்தவொரு பிரதிவாதியையும் போலவே குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை ட்ரம்ப் நிரபராதியாக கருதப்பட வேண்டும். நடுவர் மன்றத்தின் முன் விரைவான விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று இந்த வழக்கை வழிநடத்தும் அமெரிக்க சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளால் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதையும் வெற்றி பெற்றால் பதவியேற்பதையும் சட்டத்தால் தடுக்க முடியாது. அவர் கிரிமினல் விளைவுகளைச் சந்திப்பாரா என்பதை ஃபுளோரிடா நடுவர் மன்றம் முடிவு செய்யும். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் விசாரணைகள் சட்டம் ஒரு இருட்டறையா? என்பதை உணர்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...