ஒரு வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து சம காலத்தில் நடக்கும் வேறு பல பிரச்சினைகளுடன் அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். குறட்டை ஒலிக்காத வீடுகள் அருகி வரும் காலத்தில் இப்படியொரு படம் தேவை தான். பொதுவாகவே, குறட்டை விடுபவர்கள் ஒன்று தாங்கள் குறட்டை விடுவதே இல்லை என்று சாதிப்பார்கள் இல்லையென்றால் அவ்வளவு மோசமில்லை என்று வாதிடுவார்கள். எல்லாரும் தான் குறட்டை விடுகிறார்கள் என்று கூட நான்கு பேரை அழைத்துக் கொள்வார்கள்.
அமெரிக்காவில் சில விவாகரத்து வழக்குகளுக்கு காரணமே கணவரின் தாங்க முடியாத குறட்டையால் சரியாக தூங்க முடியாமல் உடல்நலன் கெட்டது போன்றவை. இதில் உண்மையும் இருக்கிறது. பலரும் இன்று ஆளுக்கொரு அறையில் தூங்கி தப்பித்துக் கொள்கிறார்கள். அது தான் ஒரே வழி? ஒரு அறையில் குடித்தனம் பண்ண வேண்டியவர்கள் நிலைமையோ பரிதாபம் தான்.
இந்தப்படத்தில் வரும் கதாநாயகன் வேலைக்குச் செல்லும் வழியில் தூங்கி குறட்டை விட்டு காதலியை இழக்கிறான். அவனைப் பற்றித் தெரியாத பெண்ணை மணந்து அவதிப்பட்டு இறுதியில் சமரசம் ஆகிறார்கள் கணவனும் மனைவியும். வேறு வழி? அந்தப் பெண்ணும் தியாகியாகி... என்னவோ போடா மாதவா...😕 இந்தப் படத்தின் அழகே நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் தான். ஏதோ பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல எளிதில் கதையுடன் ஒன்ற அவர்கள் பெரிதளவில் உதவுகிறார்கள்.
அலுவலகங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள், திருமணமான பெண்ணிற்கு குழந்தை இல்லை என்றால் எப்படியெல்லாம் சமூகம் ஒருவரை சித்திரவதைக்குள்ளாக்கும், வீட்டிற்கு வேலை செய்ய வருபவர்களை வேலைக்காரர்களாக நடத்தாமல் மனிதாபிமானத்துடன் நடத்துவது என்று அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
குறட்டை விடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியங்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 'ஸ்லீப் ஆப்னியா' என்ற பெயருடன் வலம் வரும் இந்தப் பிரச்னைக்கு 'ஸ்கூபா டைவிங்' செய்வது போல சில முகமூடிகள் போன்ற உபகரணங்களை அணிந்து தூங்கச் சொல்கிறார்கள். சரியாக தூங்கவில்லையென்றால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் என்று ஒவ்வொன்றாக கிளம்பி விடும் என பயந்து பலரும் முயற்சிக்கின்றனர்.
இப்படத்தில் வரும் 'மோட்டார்' மோகனைப் பல பல மோகன்கள் உலகில் இருக்கிறார்கள். இது சர்வதேச பிரச்னையாக்கும்😔ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் உண்டு. உடல் பருமன் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் குறட்டை விடும் நபருக்கு மூக்கெலும்பில், மூச்சுக்குழாயில் பிரச்னை இருக்கலாம். அதனால் மருத்துவரை அணுகி தெளிவு பெறலாம். இல்லையென்றால் பொறுமைசாலி குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியுடன் இருக்கலாம்.
சென்னை-மதுரை செல்லும் ரயிலில் சிலபல டெசிபல்களில் மக்கள் விதவிதமாக ஸ்வரங்கள் வாசித்துக் கொண்டிருந்த அந்த இரவைத் தான் மறக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் பிரயாணங்களில் குறட்டை விடாதவர்கள் பக்கத்து இருக்கையில் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது.
குறட்டைச் சத்தம் கேட்காத வீடுகளே இல்லை. குறட்டை விடாத கணவனோ/மனைவியோ வேண்டாம் என்றால் இன்று பலரும் சிங்கிளாகத் தான் திரிந்து கொண்டிருப்பார்கள். நமக்கெல்லாம் 'பேசும் படம்' கமல் மாதிரி😝
கொடுமையான உலகமப்பா😴😴😴😴😴
No comments:
Post a Comment