Tuesday, December 24, 2024

மில்லியன் டாலர் கேள்வி!


இந்த மாத துவக்கத்தில் நியூயார்க் நகரில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்ப்ஸன் துப்பாக்கியால் குறிவைத்து சாலை நடைபாதையில் கொல்லப்பட்டார். அத்தனை பிசியாக இருக்கும் நகரம்! அதிகாலை நேரம் என்பதால் கூட்டம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரை சைலன்சர் வகை துப்பாக்கியால் கொன்றவன் அங்கிருந்து தப்பிவிட்டான். பின் எப்படியோ ஐந்து நாட்கள் அலசி ஆராய்ந்து அருகிலிருக்கும் பெனிசில்வேனியா மாநிலத்திலிருந்து கோழியை அமுக்குவது போல் அமுக்கி அவனை நியூயார்க்கிற்கு அழைத்து வந்திருக்கிறது காவல் துறை.

பலநாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை இது என்கிறது காவல் துறை. டிசம்பர் 4ந் தேதி யுனைடெட் ஹெல்த்கேரின் தாய் நிறுவனமான 'யுனைடெட் ஹெல்த் குரூப்' தனது வருடாந்திர முதலீட்டாளர் மாநாட்டை ஹில்டன் ஹோட்டலில் நடத்தும் விவரங்களை அறிந்து நவம்பர் 24ந்தேதியே நியூயார்க் வந்திறங்கி இருக்கிறான் 26 வயதான கொலையாளி 'லுய்ஜி மன்ஜோனே'.

அதிகாலையில் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்ப்ஸன்ஐ கொன்று விட்டு சர்வசாதாரணமாக அங்கிருந்து தப்பி விட்டிருக்கிறான். காவல்துறையும் ஒன்று விடாமல்அப்பகுதியில் இருந்த பாதுகாப்பு கேமராக்கள் மூலம் அவனைத் தொடர்ந்து சென்றிருக்கிறது.அங்கிருந்து அவன் தப்பி பாஸ்டன், நியூஜெர்ஸி, கனெக்டிகட், ஃபிலடெல்ஃபியா சென்றிருக்கலாம் என்று பின்தொடர்ந்து கடைசியாக, பெனிசில்வேனியா மாநிலத்தில் பிடித்து விட்டனர்.

ஃபெடரல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மன்ஜோனேக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். கொலை செய்ய துப்பாக்கியைப் பயன்படுத்தியதற்காக அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை. மாநிலம் விட்டு மாநிலம் வந்து செய்த கொலைக்காக அதிகபட்சமாக ஆயுள் தண்டனை. ஒரு வன்முறைக் குற்றத்தைச் செய்ய சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக 30 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஃபெடரல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

நியூயார்க் மாநில நீதிமன்றம் கொலையாளி மீது 11 வழக்குகளைப் பதிந்துள்ளது.

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக், தாம்சனின் மரணத்தை "அதிர்ச்சியையும், கவனத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்த நன்கு திட்டமிடப்பட்டு இலக்கு வைக்கப்பட்ட கொலை" என்று விவரித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு, நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் எட்வர்ட் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மன்ஜோனேனின் கருத்துக்களை நாடு முழுவதும் ஒளிபரப்புவதற்கான ஒரு தவறான முயற்சியில்" தாம்சனை கொன்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு, சம்பவ இடத்தில் கிடைத்த துப்பாக்கிக்குண்டு உறைகளில் 'Delay', 'Deny', 'Depose' என்று நிரந்தர மார்க்கரில் எழுதப்பட்ட வார்த்தைகளைப் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். காப்பீட்டுத் துறையினர் பயன்படுத்தும் சொற்றொடரை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. ஒருவர் மருத்துவ காப்பீடு கேட்டு விண்ணப்பித்தால் முடிந்தவரை தாமதப்படுத்துவது. இல்லையென்றால் கோரிய தொகையை மறுப்பது. அதுவும் முடியவில்லையா விண்ணப்பத்தை முற்றிலும் நிராகரித்து விடுவது. இப்படி செய்து கொண்டே இருந்தால் விண்ணப்பித்தவருக்கு மனஉளைச்சல் ஏற்படும். நாளடைவில் வேறு வழிகளை நாடிச் சென்றுவிடுவார்கள் என்பது காப்பீட்டுத்துறையினர் செய்வது வழக்கம். இதைத்தான் 'Rainmaker' படத்தில் அருமையாக காட்டியிருப்பார்கள்.

சுகாதார காப்பீட்டுத் துறை, குறிப்பாக பணக்கார நிர்வாகிகள் மீது விரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் கொலையாளி பல குறிப்புகளை எழுதி வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. நல்ல கல்லூரியில் படித்தவன் எப்படி கொலையாளி ஆனான்? இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவதற்கு ஒருவரைத் தூண்டும் பல காரணிகள் உள்ளன என்று வடகிழக்குப் பல்கலைக்கழக குற்றவியல் நிபுணர் ஜேம்ஸ் ஆலன் ஃபாக்ஸ் கூறியுள்ளார். அநீதிக்கு எதிரான மனநிலை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கலாம். யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் மன்ஜோனேனுக்கு தனிப்பட்ட முறையீடு இருந்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், காவல்துறையால் பெறப்பட்ட அவரது எழுத்துக்களின் அடிப்படையில், அவர் சுகாதாரத் துறை மீது கருத்தியல் வெறுப்பைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

அவரது பின்னணியைப் பொறுத்தவரை பணக்கார குடும்பம், ஐவி லீக் கல்வி என கொலை செய்யத் தூண்டும் முகாந்திரம் இல்லாது போனாலும் பலரை வஞ்சிக்கும் ஒரு அமைப்பின் மீதான கோபம் போல் தான் இந்த கொலைவழக்கில் தெரிகிறது. இவர்கள் தங்களை ஒரு ஹீரோவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பவர்களாக நினைத்துக் கொள்வதுண்டு. தற்பொழுது பலராலும் கொலையாளிக்கு ஆதரவு கிடைத்து வருகிறது." என்று ஃபாக்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சுகாதார காப்பீட்டுத் துறை மீது பல கண்டனங்களும் அதிருப்திகளும் பொதுமக்களுக்கு உண்டு. பெரு நிறுவன முதலைகள் மக்களின் பணத்தை உறிஞ்சி அவர்களுக்குத் தேவையான காப்பீடுகளை வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு என்றும் உண்டு. முதல்முறையாக இவ்வாறு ஒரு நிறுவன அதிகாரி கொல்லப்பட்டிருப்பதால் கடுமையான தண்டனை தருவதில் நீதிமன்றமும் முனைப்பாக உள்ளது.

ஆனால் கொலைக்கான மூல காரணத்தை யாராவது அலசி உபாயம் காண்பார்களா?

இல்லை என்பதே அதன் பதிலாக இருக்கும்.

சென்னை மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் அம்மாவிற்கு மருத்துவர் சரியான முறையில் மருத்துவம் அளிக்கவில்லை. தன்னையும் இழிவுபடுத்தினார் என்று ஒருவருக்கு கோபம் வந்து மருத்துவரைக் கத்தியால் குத்திய சம்பவம் தான் நினைவிற்கு வந்தது. அதை நியாயப்படுத்த முடியாது. அப்படியொரு நிலைக்குக் கொண்டுச் சென்றவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படிப் புரிய வைப்பது?

முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கொலையாளிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏன் தீவிரவாதியைப் போல நடத்த வேண்டும்? உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்? கொலைக்கான தண்டனையைக் கொடுக்காமல் ஏன் தீவிரமாக ராணுவ விசாரணை என்பதில் இருக்கிறது பெரு நிறுவன முதலாளிகளின் லாபி. இப்படி ஆளாளுக்கு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளைச் சுட ஆரம்பித்தால் என்னாவது? அவர்களுக்கும் பயம் வரத்தானே செய்யும்?

எங்கே, எதனால் இப்படியொரு நிலைமை என்று யார், யாருக்குப் புரியவைப்பது?

மில்லியன் டாலர் கேள்வி!

Monday, December 23, 2024

அங்கிள் சாமின் உண்மையான முகம்


சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்று பார்த்தால் நம்ம 'மேட் டேமன்'. இவர் நடித்த படங்கள் எல்லாமே பார்க்கிற வகையில் தான் இருக்கும். அவர் இளைஞனாக இருக்கின்ற பொழுது எடுத்த படமென்றால் தொண்ணூறுகளில் எடுத்த படம் என்று தெரிந்து விட்டது. இந்தப் படத்தை இதற்கு முன் பார்த்தது போலவே எங்கள் இருவருக்கும் தோன்றியது. அநேகமாகப் பார்க்க ஆரம்பித்து நடுவில் தூங்கி விட்டிருப்பேன். அதனால் சில காட்சிகள் பார்த்தது போலவே இருந்தது.

தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அமெரிக்காவில் தனியொருவனாக வாழும் ஏழை மாணவர்களின் நிலையை நன்கு பிரதிபலித்திருந்தார்கள். இந்தப்படத்தில் ஏழ்மை, பெருநிறுவன முதலைகள், நீதிமன்றம், குடும்ப வன்முறை என்று அமெரிக்காவின் மறுமுகத்தை நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

நமக்குத் தெரிந்த வாழ்க்கையெல்லாம் இந்திய மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சராசரி அமெரிக்கர்களை விட கூடுதல் வருமானம் ஈட்டும் இந்தியர்கள். கலர்கலராக 'இன்ஸ்டா'வில் போடும் படங்களை வைத்து அமெரிக்க வாழ்க்கை இப்படித்தான் என்று இன்ஸ்டா காலத்திற்கு முன்பு நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வறுமையின் நிறம் வெள்ளையும் கருப்புமாக இங்கும் இருக்கிறது என்று.

கல்லூரியில் படிப்பதென்பது பலருக்கும் இங்கு கனவாகவே இருந்தது. ஓரளவு வசதி இருந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்றிருந்த நிலை இப்பொழுது மெல்ல மாறிவருகிறது. மேற்படி சட்டம், மருத்துவம் பயில ஆண்டுகளும் செலவுகளும் அதிகம் என்பதால் ஏழை மாணவர்களின் பாடு திண்டாட்டம் தான். அரசு உதவி அளித்தாலும் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் கதாநாயகனுக்கு. வாடகை கொடுக்க முடியாமல் கதாநாயகன் காரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அங்கே, இங்கே ஏதோ கிடைக்கிற துக்கடா வேலைகளைப் பார்த்துக் கொண்டு சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். அதே நேரத்தில் பகுதி நேர வேலையின் மூலமாக மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றில் கட்சிக்காரர்களுக்கு உதவ தானாகவே சென்று ஆஜராகிறான். எப்படியாவது தன் கட்சிக்காரர் ஜெயித்து விட வேண்டும் என்று வெறிகொண்டு உழைக்கும் கதாபாத்திரம். நடுவே ஒரு குடும்ப வன்முறை வழக்கிற்கும் ஆஜராகிறான்.

மகனின் நோய்க்குச் சிகிச்சை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒத்துக்கொள்ள மறுத்து பெற்றோர் செலவழிக்க முடியாமல் மகன் இறந்து விடுகிறான். அவர்களுக்காக காப்பீட்டு நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்கிறான் கதாநாயகன். பெரிய நிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவ மாட்டார்களே தவிர, தங்களுக்காக வாதாட பெரிய தலைகள் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவைக் கொண்டு நேற்று பட்டம் வாங்கியவனைப் பந்தாடுவார்கள். கோடிக்கணக்கில் செலவிடுவார்கள்!

கதாநாயகன் எல்லா வழிகளிலும் முயன்று நிறுவன மேலதிகாரி வரை விசாரணை செய்து முடிவில் பணத்தைக் கொள்ளையடிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனம் செய்த தகிடுதத்தங்களை வெளிக்கொணர்வான். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் ஆணையிடும். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று நினைக்கும் நேரத்தில் அந்த நிறுவனம் 'திவால்' அறிக்கை அனுப்பி யாருக்கும் ஒரு பைசா கொடுக்காமல் தப்பி விடும். வாதாடிய வக்கீலுக்கோ மகனை இழந்த குடும்பத்திற்கோ எந்த நிவாரணமும் கிடைக்காது. இது தான் 'corporate greed' என்பது.

இப்படி மக்களின் பணத்தை 'காப்பீடு' என்ற பெயரில் வசூலித்தாலும் பெரும்பாலான அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி வேலைகள் செய்து வருவது கண்கூடு. மருத்துவர் கோரும் பணம் அதிகமா அல்லது நிறுவனங்கள் அவர்களுக்குப் பாதியைக் கொடுப்பது சரியா? தெரியவில்லை. 'ஒபாமாகேர்' வந்த பிறகு ஏமாந்த சோணகிரிகளிடம் அதிகமாக வசூலிக்கிறார்கள்.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன மேலதிகாரியை ஒருவன் சைலன்சர் துப்பாக்கியால் நியூயார்க் நகரத்தில் சுட்டுக் கொன்று விட்டான். தப்பியோடிய அவனைப் பிடித்தது மட்டுமில்லாமல் தீவிரவாதம் என்ற பெயரில் ராணுவ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகளில், பொது இடங்களில் சராமாரியாக துப்பாக்கியால் கொல்லும் பைத்தியங்களைக் கூட தீவிரவாதி என்று தண்டனை கொடுப்பதில்லை. கார்ப்பரேட்காரன் ஒருவனைக் கொன்றதற்கு எப்படியெல்லாம் துடிக்கிறது அமெரிக்கா! இது தான் அங்கிள் சாமின் உண்மையான முகம்😩

என்னவோ போடா மாதவா!


Sunday, December 15, 2024

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவதைப் போல பலரும் தங்களுடைய மனைவியிடம் கூட பேசுவதில்லை என்பதே உண்மை. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். குடும்பத்தில் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. அதனால் தான் நண்பர்களைச் சந்தித்துப் பேசுகிறோம் என்பது தான் பல ஆண்களின் வாதம்.

இவற்றையெல்லாம் கூட ஒப்புக்கொள்ளலாம். அது என்ன, நண்பர்களுடன் இருந்தால் 'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா? இது தான் அவர்களின் மனைவியரின் வாதம். சென்ற வார 'நீயா நானா' விவாதம் இதைப் பற்றியது தான்.

எனக்குத் தெரிந்து என் தந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையையும் அவர் நண்பர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு வருவார். இது வாடிக்கை. ஞாயிறுகளில் நாங்கள் பாட்டிவீட்டிற்குச் சென்று விடுவோம். அதனால் குடும்பத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை.

என் கணவரும் மதுரையில் நண்பர்களைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று அவர்களைச் சந்தித்துப் பேசி விட்டு வருவார். இது வாடிக்கையாகப் பலரது வீடுகளிலும் நடக்கின்ற கதை தான்.

ஆனால், கடந்த சில வருடங்களாக, நண்பர்கள் சந்தித்துக் கொண்டால், 'மச்சி, ஓபன் த பாட்டில்' என்று 'பார்ட்டி' வைத்துக் கொண்டாடுவது' வாடிக்கையாகி விட்டிருக்கிறது. எப்படி அப்படியொரு சந்தர்ப்பத்தை உண்டாக்கலாம் என்று நன்றாகவே திட்டமிடுகிறார்கள். அதற்குத் தான் பல குடும்பங்களில் பெண்கள் பொங்குகிறார்கள்.

"வாரம் முழுக்க வேலை. வீட்டிற்கு வேண்டிய அத்தனையையும் செய்து விடுகிறோம். எங்களுக்காக சில மணி நேரங்கள். மனைவியிடம் கூட பேச முடியாததை நண்பர்களுடன் பேசிக் கொள்கிறோம். பழைய பள்ளி, கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனந்தமாக, நண்பர்களுடன் ஒரு அரட்டை. அப்படியே கொஞ்சம் குடி. இது தப்பா?"

"அய்யோ பாவம்! அவர்களும் மனுஷங்க தானே? ஒரு 'கட்டிங்' அடிச்சா என்ன தப்பு? நண்பர்களுடன் இருக்கிறப்ப?" ஒன்றுமே தெரியாதது மாதிரி பெண்களிடம் கேள்விகள் கேட்கிறார் கோபிநாத்.

ஒரு 'கட்டிங்' என்று ஆரம்பித்து எல்லை மீறிச் சென்று விட்டால்? ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால்? அந்த நேரத்தைக் குடும்பத்துடன், குழந்தைகளுடன் செலவிடலாமே? ஏன் சிறையிலிருந்து தப்பித்துச் செல்வது போன்ற பாவனை? இப்படி பல கேள்விகளும் தங்களைத் தவிக்க விட்டு விட்டு இவர்கள் மட்டும் ஜாலியாக ஆட்டம் போடுகிறார்களே என்ற அங்கலாய்ப்புகளும் மனைவிகளிடமிருந்து.

படித்தவர்கள், பணியில் இருப்பவர்கள் மெல்ல மெல்ல தங்கள் கவலைகளை மறைக்க இப்படித்தான் ஒரு 'கட்டிங்'கில் ஆரம்பித்து பின் அது தினமும் தொடர்ந்து அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஏதும் தங்கள் வாழ்வில் நடந்து விடக்கூடாது என்பதில் பெண்களுக்குரிய அச்சம் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. நான் 'மொடாக்குடியன்' இல்லை. அப்படி எல்லாம் ஆகிவிடமாட்டேன் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து கொள்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் தான். குடிக்கு அடிமையாகி விட்டால் பணியிடத்தில் சுணக்கம், வீட்டில் கருத்து வேறுபாடு என்று சடுதியில் படுபாதாளத்திற்குள் தள்ளி விடும்.

இப்பொழுதெல்லாம் பணி நிமித்தமாக, நண்பர்களுடன், வெளியூர்களுக்குச் சென்றால் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் குடிப்பது அதிகரித்து விட்டது. அதுவும் தவிர, தட்டுப்பாடின்றி கிடைக்கும் மதுபானமும், 'குடி, குடி' என்று குடிமக்களைக் குடிகாரர்களாக்கி காசு பார்க்கும் கேவலமான அரசாங்கமும் இருக்கும் வரை பெண்கள் தவிப்புடனும் அச்சத்துடனும் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. இதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்?

மெல்ல, மெல்ல போதை மாநிலமாக நம் கண்முன்னே தமிழகம் மாறிவருவது வேதனையான நிலைமை. பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே குடிக்கு அடிமையாகி வரும் போக்கு பல பெற்றோர்களுக்கும் அச்சத்தைத் தருகிறது. முன்பு, பயந்து பயந்து குடித்தார்கள். இன்றோ, நண்பர்களின் "சந்திப்புகள்" என்றாலே பெரும்பாலான இடங்களில் குடி இல்லாமல் இல்லை என்றாகிவிட்டது.

கடவுளின் அருள் இருந்தாலோ அல்லது மிகக் கட்டுப்பாடு கொண்ட மனம் இருப்பவர்களால் மட்டுமே குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும் என்று நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் கூறியது தான் உண்மை.

குடும்பத்தின் நன்மை கருதி குடிக்கு அடிமையாகாமல் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடும் மக்களும் இருக்கும் நாட்டில் தான் இப்படிப்பட்ட குடிகாரர்களும் உருவாகுகிறார்கள் வெவ்வேறு காரணத்தை அவர்களாகவே கொடுத்துக் கொண்டு.

என்னவோ போடா மாதவா!














Tuesday, December 10, 2024

Multiple Facets of Madurai - யானைமலை


மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்த மலையைக் கண்டிப்பாகப் பார்த்திருப்பார்கள். வைகை ஆற்றைத் தாண்டி மேலூர் செல்லும் பாதையில் ஒரு யானை தும்பிக்கையை நீட்டி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கும். என் சிறுவயதில் அந்தப் பிரம்மாண்டமான மலையை ஆச்சரியத்துடன் பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது. மாடிவீடுகள் அதிகம் இல்லாத காலத்தில் எங்கள் வீட்டு மாடியிலிருந்து தெரியும். அம்மா தற்போது இருக்கும் வீட்டு மாடியிலிருந்து கூட தெரிகிறது.

தூரத்திலிருந்தே தெரிந்து பேருந்துடன் கூடவே பயணிப்பது போலத் தொடரும் மலையடிவாரத்தில் தான் நரசிங்கம்பட்டி என்னும் கிராமம் இருக்கிறது. அங்கே தான் பிரபலமான நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோவிலும் உள்ளது. மலையின் கீழே தாமரைப் பூத்துக் குலுங்கும் பெரிய குளம். மலை நிறைய மந்திகளின் அட்டகாசமும் அதிகமாக இருக்கும்.
 
என் சமூகத்து மக்கள் கோவிலில் திருநாட்களைக் கொண்டாட அடிக்கடி சென்று வரும் இடம். அங்கே சௌராஷ்டிரா சத்திரங்கள் இன்று வரையில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகில் உள்ள சிறு குன்றின்மீது முருகன் கோவில் இருக்கிறது. அதைப் பராமரிப்பவர்களும் எம் சமூகத்து மக்கள் தான். சிறிய கோவில் இன்று பெரிதாகக் கட்டப்பட்டுச் சிறப்பாக இருக்கிறது.

இளவயதில் கோடைவிடுமுறையில் பாட்டி அழைத்துச் செல்லும் இடங்களில் நரசிங்கம்பட்டியும் ஓன்று. மதுரையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது போன்ற பிரமை. இப்பொழுதெல்லாம் பைக்கில் கூட சென்று விட முடிகிறது. வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து விட்டால் போதும் தூங்குமூஞ்சி மரங்கள் சாலையின் இருபுறமும் அலங்கரிக்க, காவலர் குடியிருப்புகளைத் தாண்டினால், 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல' தான் 💕💕💕 அத்தனை பசுமையான விளைநிலங்கள் நிறைந்த இடமாக இருந்தது. இன்று நன்கு சுருங்கி ஏதோ சிறிது விளைநிலங்களை மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் சென்றால் கரும்புத்தோட்டங்களைப் பார்க்கலாம். வயல்வெளிகள் இன்றும் மனதை அள்ளுகிறது.

ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து குதிரை வண்டியில் ஏறி சத்திரத்திற்குச் செல்வோம். காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் கோழிகள், குஞ்சுகள், மாட்டுக்கொட்டகைகளைக் கடந்து சென்று, அங்குத் தங்கி கிராமத்து மண்வாசனையை நன்கு அனுபவித்திருக்கிறோம். இன்று அந்தக் கிராமத்தின் சுவடே காணவில்லை! ஓலைக்குடிசைகள் மறைந்து கல் கட்டடங்களாகி ஒத்தக்கடையா இது என்று மிரட்டுகிறது! மதுரையின் எல்லை விரிந்து கொண்டே செல்கிறது! ஆனாலும் அந்த பஜ்ஜி, வடை, காபிக்கடைகள் கொஞ்சம் நவநாகரீக ஸ்டைலில் இருக்கிறது😇😋 புழுதிபறக்க பேருந்துகள், காது வலிக்க ஒலிப்பானை அலற விட்டுச் செல்லும் லாரிகள், இரு சக்கர வண்டிகள் என்று போக்குவரத்து மிகவும் சவாலாக இருக்கிறது. எத்தனை அமைதியாக இருந்த ஊர் கால் நூற்றாண்டில் எப்படியெல்லாம் மாறிவிட்டிருக்கிறது! எங்கெங்கோ இருக்கும் பள்ளிகளின் வாகனங்கள் சீருடை அணிந்த குழந்தைகளை அழைத்துச் செல்ல மூலைமுடுக்குகள் வரை வருகிறது. தண்டாட்டி அணிந்த ரவிக்கை அணியாத பொக்கைவாய்ப் பாட்டிகளைக் காணவில்லை. கயிற்றுக்கட்டில், ஓலைவேய்ந்த குடிசைகள் எல்லாம் மாயமாய் மறைந்து கிராமங்கள் நகர வேடம் பூண்டு வலம் வருகிறது. நல்ல முன்னேற்றம் தான்!


ஒருகாலத்தில் சௌராஷ்டிரா மக்கள் பலரும் வயல்வெளிகள், தோப்புகள் என்று வாழ்ந்த இடம்! பாட்டிவீட்டு நிலங்கள் கூட அங்கே எங்கேயோ தான் இருந்தது. காலப்போக்கில் கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் அங்கிருந்தவர்களே குறைந்த விலைக்கு எடுத்துக் கொண்டார்கள்! அங்குச் சென்றால் இப்படி நினைவுகள் பல அலைமோதும்.

குளத்தின் உள்ளே சென்றால் தாமரைத்தண்டு காலை இழுத்து விட்டுவிடும் என்று பயந்து, பயந்து காலை உள்ளே விட்ட நாட்கள் எல்லாம் அத்தனை பசுமையாக நினைவில் ஆடியது. அருகிலே சுரங்க வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும். அந்த வயதில் 'போரடிக்கிறது' என்ற சொல்லே தெரியாது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டு குரங்கு, கோழிகளுடன் விளையாடி, குளத்தில் நீராடி, விளையாடி மகிழ்ந்த நாட்கள் எல்லாம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... காலை, மாலை கோவிலுக்குச் சென்றுவருவோம். மின்விளக்கு, விசிறிகள் கூட சத்திரத்தில் இருக்காது. பிறகு விளக்கு, தண்ணீர் வசதிகள் வந்தது. எப்படித்தான் அங்குத் தங்கியிருந்தோமா? பாட்டி சமைக்க வேறு செய்வார்😊 எளிமையான உணவு தான் என்றாலும் சுவையாக இருக்கும். சோற்றை உருட்டிக் கொடுத்து ஏதாவது புராணக் கதைகளைச் சொல்லி, விசிறி வீசி எங்களைத் தூங்க வைப்பார். ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் இங்குச் சென்று அன்றைய நாளை அசை போட்டுவிட்டு வருவேன். பாவம் ஈஷ்வர்! நான் சொல்ற கதைகளைக் கேட்பது போல் நன்றாகப் பாவனை செய்வார்😉 அத்தனை முறை சொல்லியாகிவிட்டது!

குளத்தின் எதிரே இருந்த பிள்ளையார் அன்று அரச மரத்தின் கீழ் வெயிலில் அமர்ந்திருந்தார். இப்பொழுது அவருக்கும் ஒரு வீடு கிடைத்திருக்கிறது. வெயில்படமால் சுகமாக உள்ளே அமர்ந்திருக்கிறார்.

அங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலுக்கும் சென்று வருவோம். இப்பொழுதும். பெரிய தடாகம். எதிரே யானைமலையின் அழகு தரிசனம். ஆகா! காண கண்கோடி வேண்டும். அந்தக்கோவிலும் அத்தனை அழகு. அதுவும் தாயாரின் அலங்காரம்💖 சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். சக்கரத்தாழ்வார் விசேஷம். சிறுகோவில் தான் என்றாலும் அழகான பெருமாள். அமைதியான கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

திரு.மனோகர் தேவதாஸ் அவருடைய பள்ளி வயதில் நண்பர் ஒருவருடன் யானை மலைமீதேறி சிறிது தூரம் வரை சென்று அங்கிருந்து அழகான பச்சைப்பசேல் வயல்வெளிகளையும் கிணற்றிலிருந்து நீரை எடுத்து வயலுக்குப் பாய்ச்சும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறார். மாடுகளைக் கொண்டு உழுவது தான் அன்றைய விவசாய நடைமுறை. நாங்களும் பார்த்திருக்கிறோம். இந்தத் தலைமுறையினர் அறிந்திராத பலவிஷயங்களில் இதுவும் ஒன்று. 1950களில் பார்த்ததை நினைவில் கொண்டு 1980களில் வரைந்திருக்கிறார். மீண்டும் அந்த உலகத்திற்கே கொண்டு சென்று விட்டது இந்தப்படம்.

சிறுவயதில் பார்த்த யானைமலை கொஞ்சம் உருவத்தில் சுருங்கியது போலத் தெரிகிறது. அங்கிருந்த குன்றுகளைப் பாளம் போட்டுத் தகர்த்திருக்கிறார்கள்😞 மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் வரும் பல கிரானைட் குன்றுகள், மலைகளை இப்படித்தான் பாளம் பாளமாக வெட்டி சாலையோரம் வைத்திருந்தார்கள். சகாயம் ஐபிஎஸ்சின் சகாயத்தால் சிறிது நாட்கள் "கிரானைட் திருடர்கள்" வாலைச் சுருட்டிக்கொண்டிருந்தனர்.

 யோக நரசிங்கப்பெருமாள் கோவில் குளத்தை மொத்தமாக குத்தகைக்கு விட்டிருக்கிறது கோவில் நிர்வாகம். பூக்களைப் பறிக்க முடியாது. கடந்த மாதம் அங்குச் சென்று விட்டு வந்த ஈஷ்வர் குளத்தை நாசமாக்கி வைத்திருக்கிறார்கள். குப்பையும் கூளமுமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார்😌 நமக்கு எதன் அருமை தான் தெரிந்திருக்கிறது. அதுவும் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் தான் இத்தனை அலட்சியங்களுக்கும் காரணம். சொரணை கெட்டவர்களாகி விட்டோம் என்பது மட்டும் நன்கு புரிகிறது.

யானைமலைக்குச் சென்று அங்கிருக்கும் சமண சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து 'அரிட்டாபட்டி' சென்ற கதையும் உண்டு.
 

Saturday, December 7, 2024

Multiple Facets of Madurai


இந்த வருட ஆரம்பத்தில் மதுரையில் தங்கியிருந்த நாட்களில் பல புத்தகக்கடைகளில் தேடியும் கிடைக்காத புத்தகம் இது. திரு.மனோகர் தேவதாஸைப் பற்றி அறிந்து கொண்ட நாளில் இருந்து அவருடைய புத்தகங்களை வாங்க முயற்சித்து வருகிறேன். சில புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம் இது. நான் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றி ஒருவர் தீராக்காதலுடன் ஓவியங்களாக மையினால் தீட்டியிருக்கிறார். கூடவே, அதன் தொடர்புடைய விவரணைகளும் அழகு.

முதன்முதலில் இவரின் ஓவியங்களை நான் பார்த்தது மதுரையில் பிரபலமான 'ஜேஜே ரெசிடண்ஸி' தங்குமிடத்தில். உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் பெரிய பெரிய சட்டங்கள் போட்ட படங்கள் நம்மை வரவேற்கிறது. மதுரையைப் பற்றின அழகான புகைப்படங்கள் பல இருந்தாலும் அதன் அழகை ஓவியமாக இப்படித் தீட்டியவர் யாரோ என்று ஒவ்வொரு படங்களையும் பார்த்தேன்.
அதற்குப்பிறகு தான் அவரைப்பற்றின தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஆகா! புத்தகங்கள் எழுதியிருக்கிறாரே வாங்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இந்த முறை ஈஷ்வர் ஊருக்குச் சென்றிருந்த பொழுது பேராசிரியர் பிரேம்பாபுவின் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்கிறார்.
அடடா! நான் தேடிக்கொண்டிருக்கும் புத்தகமாச்சே என்று சொல்லியிருப்பார் போல. அவரும் அன்புப்பரிசாக கொடுத்துவிட்டார்.

நன்றிகள் பல பிரேம்பாபு சார்.

புத்தகத்தின் முதல் படமே அத்தனை தத்ரூபமாக இருக்கிறது. புதுமண்டபத்தில் இருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண வைபவ சிற்பத்தை தன்னுடைய மையினால் தீட்டியிருக்கிறார். இதே போன்ற அன்னையின் திருக்கல்யாண சிற்பம் அம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரர் சந்நிதியின் வெளிப்புறத்தில் காளிக்கு எதிரில் இருக்கும். அது தான் எனக்குத் தெரியும். புதுமண்டம் முழுவதும் கடைகள் இருந்ததால் இந்த அழகிய சிற்பத்தை நான் பார்க்கவில்லை போல. விரைவில் புதுமண்டபம் புதுப்பொலிவுடன் அருங்காட்சியமாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்.

மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே கண்பார்வை கோளாறு இருந்தும் அற்புதமான படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவரின் மனைவி மஹிமா மைக்கேலும் ஒரு ஓவியக்கலைஞர். இவரின் வெற்றியில் சமமான பங்கு அவருக்கும் உண்டு.

இன்று அந்த மாமனிதர் இறந்த நாள். இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்களில் ஒருவர்.




Monday, November 11, 2024

அமரன்


'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு அமெரிக்காவிலும் திரையிடப்பட்டு பெரும்பான்மை மக்கள் கண்டுகளித்த சில படங்களில் அதுவும் நல்ல இடத்தைப் பிடித்து விட்டது. நண்பர்களுடன் சேர்ந்து நானும் சென்று பார்த்தேன்.

'பயோபிக்' என்பதால் கதையில் சொதப்பல் இல்லை. என்ன அதிசயம்! ராணுவ காட்சிகளை மிகத் தத்ரூபமாக எடுத்திருந்தார்கள். 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்குப் பிறகு கண்கலங்க வைத்த படம்.

'மேஜர் முகுந்த் வரதராஜன்', ஒரு நல்ல மகன், காதலன், கணவன், மிக முக்கியமாக, படைத்தலைவன். தன் குழுவில் இருப்பவர்களின் உயிருக்காக எந்த எல்லை வரைக்கும் சென்ற மகத்தான மனிதன்! முப்பது வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த அற்புத மனிதன்.

உயிருக்கு உத்தரவாதமற்ற நாட்டுப்பணியில் சேர நம்மில் எத்தனை பேருக்குப் பிடிக்கும்? மனசு வரும்? அதுவும், சாதாரண அரசு சம்பளத்தில்! சுயநலம் பிடித்தவர்கள் நாம். வெகு சிலருக்கே, தன்னையும் தன் குடும்பத்தையும் மீறி, தான் பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கும் துணிவு இருக்கும். அது 'மேஜர் முகுந்த் வரதராஜனின்' வாழ்க்கையைப் பார்க்கும் போது எத்தனை கடினமான மனதையும் அசைத்து விடுகிறது.

முப்பது வயது மகனை இழந்த பெற்றோர்களின் வலி, கணவனுடன் முழுதாக வாழ்ந்த சில அரிய கணங்களைத் தவிர, அவன் நினைவிலே வாழ்ந்த அவனின் மனைவியின் ஆறாத வலி, தந்தைக்கு என்ன ஆனதே என்று தெரியாத ஒரு மகளின் பெரும்வலி. அது தான் இன்று பலரையும் அழ வைத்திருக்கிறது.

ஒரு நல்ல மகனாக, காதலனாக, கணவனாக, தன் படையினரைக் காக்க, எதிரிகளைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் படைத்தலைவனாக, தன் தேசத்தைக் காக்க, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 'மேஜர் முகுந்த் வரதராஜன்' ரியல் ஹீரோ! ராயல் சல்யூட்!

சிவகார்த்திகேயனின் படங்களிலேயே முத்தாய்ப்பாக அவருக்குக் கிடைத்த வாய்ப்பை மிக அருமையாகப் பயன்படுத்தி, நன்றாக நடித்து, தன்னை நிரூபித்திருந்தார். சாய் பல்லவி, ஆஸ்கார் விருதுக்குத் தகுதியானவராகத் தன்னை நிரூபித்து விட்டார். அருமையான நடிப்பு!

முகுந்தின் அம்மாவாக நடித்திருந்தவரின் கேலி வசனங்களுக்குப் பின்னால் இருக்கும் வலி, படைவீரர்களின் அம்மாக்களுக்கே உரித்த வலி. என்ன அதிசயம்! கமல் தயாரிப்பு, ரகுமானை/அனிருத்தை இசை அமைக்கக் கேட்காமல், ஜிவிபிரகாஷிடம் கேட்டிருக்கிறது. காது சவ்வு கிழியாமல் படத்தோடு ஒன்றிப் போன இசையை அளித்த ஜிவிபிரகாஷிற்கு ஒரு சபாஷ்! படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.

தான் செய்த பாவங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பரிகாரம் தேடிக்கொள்வது மனித இயல்பு. அப்படித்தான் கமலுக்கும் இந்தச் சந்தர்ப்பம். மற்றவர்களுக்கும்.

வட இந்தியர்கள் அளவிற்குத் தமிழ்நாட்டில் ராணுவத்தினைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் சற்றே குறைவாக இருந்தாலும் ஒரு திரைப்படமாகத் தமிழில் அழகான படத்தைக் கொடுத்திருப்பது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். ஹிந்தியில் ஏராளமான படங்கள் வந்துகொண்டிருக்கிறது.

நம்மிடையே 'முகுந்த் வரதராஜன்கள்' வாழ்ந்து வருவது நமக்குப் பெருமை. இந்தியர்கள் என்ற உணர்வு இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நெஞ்சைத் தொடும்.

ஜெய் ஹிந்த்!

ஜெய் பஜ்ரங்பலி!


படைவீரர்கள் தினம்


இன்று அமெரிக்காவில் 'படைவீரர்கள்' தினமாகும். ராணுவத்தில் பணியாற்றிய அனைவரையும் நினைவுகூரும் நாள். அதிகாரப்பூர்வமாக 1938ல் கூட்டாட்சி விடுமுறையாக (Federal Holiday) ஆக அங்கீகரிக்கப்பட்டு 1954ல் 'படைவீரர்கள் தின'மாக அறிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை நாள்.
 
படைவீரர்கள் 'நினைவு தினம்'(Memorial Day), மே மாத கடைசி திங்கட்கிழமை, தங்கள் உயிரைக் கொடுத்து நாட்டிற்காகச் சேவை செய்தவர்களை கௌரவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.

நவம்பரில் 'படைவீரர் தினம்', ராணுவத்தில் பணியாற்றிய அனைத்து வீரர்களையும் கெளரவிக்கிறது.

நாட்டுக்காக உழைத்த படைவீரர்களுக்கு இன்றைய தினத்தில் சில உணவகங்களில் உணவு இலவசம் என்று அறிவிப்பார்கள்.
 
படைவீரர்களை ஆல்பனி நகரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள்(சாரணர்கள், Scouts) ஊர்வலமாகச் சென்று மரியாதை செலுத்துவார்கள். குழந்தைகள் இருவரும் சாரணர் இயக்கத்தில் இருந்ததால் ஊர்வலத்திற்குச் சென்று வந்திருக்கிறோம்.
 
தேசியக்கொடியை எடுத்துக் கொண்டு, இசை முழங்க, மாணவர்கள் அணிவகுத்து வருவதைப் பார்க்க அழகாக இருக்கும். இந்த நாட்டுக்காகப் பணியாற்றியவர்களைக் கௌரவிக்கும் சிறு செயல் தான் என்றாலும் அவர்களுடைய மகத்தான பணியை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு.
 
தலைவர்கள் மலர்வளையங்கள் வைத்து நன்றியைத் தெரிவிப்பார்கள். விடுமுறையைக் கொண்டாடும் குழந்தைகளுக்கு இந்த நாளின் மகத்துவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் உண்டு.

God Bless America!

Monday, October 28, 2024

புத்தர் கோவில்

நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான 'ஆல்பனி' நகரிலிருந்து சில பல மைல்கள் தொலைவில் வெவ்வேறு நாட்டினரின் புத்த மடாலயங்கள் இருக்கின்றன. 'கேட்ஸ்கில்ஸ்' மலையில் ஆற்றை நோக்கியபடி 'kagyu' மரபைச் சார்ந்த 'Karma Triyana Dharmachakra' கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அமைதியான, அழகான, பிரபலமான 'Woodstock' ' ஊரில் அமைந்துள்ள அழகிய கோவில் இது. வட அமெரிக்காவின் தலைமையகமும் கூட. பிரம்மாண்ட புத்தரும் மற்ற தெய்வங்களும் இருக்கும் கோவிலின் உள்ளே அமைதி தவழ்ந்து கொண்டிருக்கும். நூலகமும் அங்கே இருக்கிறது. தங்கும் வசதிகளுடன் தியான வகுப்புகள், புத்தரின் போதனைகள் கற்பிக்கப்படுகிறது. நியூயார்க் நகரம் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து செல்லும் பிரபலமான கோவில். 'வுட்ஸ்டாக்' நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்று ஒரு அமெரிக்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட தலம். செல்லும் வழியில் அரவிந்தர் ஆசிரமம் இருப்பதை அறிந்து கொண்ட நாளிலிருந்து அடிக்கடி அங்குச் சென்று வருவதுண்டு.

Woodstock , NY  

'Mahayana buddhist temple ', அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள சீனர்களின் அழகான, பழமையான புத்தர் கோவில். 166.5 ஏக்கர் கொண்ட பெரிய வளாகத்தில் குட்டி குட்டி சந்நிதிகள் போன்று நிறைய சிறு கோவில்கள். அமர்ந்து தியானம் செய்யும் வசதிகளுடன் அழகுணர்ச்சியுடன் கட்டப்பட்டுள்ளது. போதனை வகுப்புகள் மூலம் இப்பிறவியிலும் அதற்குப் பின்னாலும் நல்வாழ்வைப் பெற விரும்புபவர்களுக்கு நல்வழியைக் காட்டுகிறார்கள்.

மஹாயான புத்தர் கோவில்

இந்த இரு கோவில்களைப் பற்றி ஏற்கெனவே விரிவாக எழுதி இருக்கிறேன்.


'Grafton Peace Pagoda', ஜப்பானிய புத்தாலாயம் 'Grafton' நகரில் உள்ளது. பெயருக்கேற்றார் போல, அமைதி விரும்பிகள். போர் வேண்டாம். மனிதர்களாக ஒருவருக்கொருவர் அன்புடனும், ஆதரவுடனும் இனைந்து இருப்போம் என்ற தத்துவத்தில் இயங்கும் கோவில். அழகான இயற்கைச் சூழலில் 'Grafton Lakes State Park' அருகே அமைந்துள்ளதால் அடிக்கடி சென்று வரும் இடமும் கூட. தாங்கள் இருக்குமிடம் பூர்வகுடிகளின் இடம் என்பதை அறிந்து அச்சமூகத்தினரிடமே திருப்பிக் கொடுத்து விட்ட அன்பர்கள். நுழைவாயிலில் கூட அதனைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். சிறிய கோவில் தான் என்றாலும் அழகான அமைதியான கோவில். சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் பல விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். பார்வையாளர்களுக்கு எளிதில் புத்தரைப் பற்றின தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் 'Peace Pagoda'வைச் சுற்றி புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நிகழ்வுகளைக் குறிப்பிடும் சித்திரங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். சிறப்பு நாட்களில் அமைதியாக அதை வலம் வருகிறார்கள்.


"இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானது. அன்புடன், அமைதியுடன் வாழு. வாழ விடு." 

நீயா நானா



தலை தீபாவளி கொண்டாடப் போகும் புதுமணத் தம்பதிகள், அவர்களின் மாமனார் மாமியார்கள் இடையே நடந்த விவாதம் தான் இந்த வார 'நீயா நானா'வில் ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தலைமுறை மாப்பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதில் ஒருவர் எனக்கு 300 வகையான இனிப்புகள் வேண்டும் என்றார். அவருக்கு இனிப்பு அதிகமாக பிடிக்குமாம். அதுக்கு? மாமனார் வீட்டில் உரிமையுடன் உண்பது வேறு. உங்கள் பெண்ணின் கணவன் என்று அதிகாரத்துடன் உண்பது வேறு. உரிமை இருக்குமிடத்தில் பாசம் இருக்கும். அதிகாரம் வெறுப்பைத் தான் சம்பாதித்துக் கொடுக்கும் என்ற அடிப்படை கூட தெரியாத கூமுட்டை தலைமுறையைச் சேர்ந்தவர் போலிருக்கு!பத்து இனிப்புகளின் பெயர்களைச் சொல்வதற்குள் நாக்கு தள்றவனுக்கு 300 இனிப்புகள் வேணும்ங்கிறதெல்லாம் என்ன மாதிரியான டிசைனோ!

கொடுமையிலும் கொடுமை! தலைதீபாவளிக்கு மாமனார் வீட்டில் தங்கத்தில் ஏதாவது மோதிரமோ, சங்கிலியோ போட வேண்டுமாம். மனசாட்சியே இல்லாமல் எப்படித் தான் கேட்க முடிகிறதோ இந்தச் சூடு, சொரணை, வெட்கம் கெட்ட ஜென்மங்களுக்கு. முதலில் திருமணத்திற்கே இவர்களுக்கு நகை போடுவது அதிகம் தான். சரி இருக்கிறவர்கள் போடுகிறார்கள் என்ற நிலை மாறி, பெண் வீட்டில் போட்டுத்தான் ஆக வேண்டும் என்று மாற்றி வைத்தார்கள். வேறு வழியின்றி வியர்வை சிந்தி சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் கொட்டி பெண்ணைத் திருமணம் செய்து வைத்தால் இந்த மூஞ்சிகளுக்கு தலைதீபாவளிக்கு தங்கத்தில் செய்து போடணுமாம். அதான் இப்ப பொண்ணு கிடைக்காம அலையுறாங்க.

ஒருத்தர் வண்டி வாங்கிக் கொடுக்கணும் என்றார். "ஏன்? அத நீயே வாங்க முடியாதா?"

"தலைதீபாவளிக்கு மட்டும் தான் நல்லா கவனிப்பாங்க. அதுக்கு அப்புறம் வர்ற தீபாவளிக்கெல்லாம் ஒன்னும் கிடைக்காது. அதான் எதிர்பார்க்கிறோம்" என்று சொல்கிறார்கள். மரியாதை என்பது நீ அவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது என்று இந்த மனிதர்களுக்குப் புரியுமோ? சை!

இன்னொரு கொடுமை என்னவென்றால் தீபாவளி அன்று தலையில் எண்ணெய் வைத்து நல்லா மசாஜ் செய்து விடணுமாம். என்ன கொடுமை மாதவா இது? ஏண்டா? ஒரு அளவு வேண்டாமா? அப்படிச் செய்யவும் சில மாமனார்கள் இருப்பார்கள் என்பது தான் கொடுமை. இவர்களின் அம்மா மருமகளுக்கு அப்படிச் செய்வாரா?

என்ன தான் படித்து பட்டம் பெற்று வேலைக்குச் சென்று பொருளாதாரத்தில் முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் பல பெண்களும் அப்பன் வீட்டில் இருந்து புடுங்கித் தின்ன ஆசைப்படுகிறார்களோ என்று தான் தோன்றியது!

இந்த 'so called' மாப்பிள்ளைகள் ஒரு மாறுதலுக்கு, தலைதீபாவளிக்கு, மாமனாருக்கு தங்கத்தில் ஏதாவது செய்து போடலாம். மாமனார் குடும்பத்திற்கு மூன்று நாட்கள் விருந்து வைக்கலாம். சீர்கள் செய்து அசத்தலாம்.

மாத்தி யோசிங்கடா!

Sunday, October 27, 2024

பஞ்சதந்திரக் கதைகள்


தமிழில் வெளிவந்துள்ள என்னுடைய நான்காவது புத்தகம். சுவாசம் பதிப்பக வெளியீடு. பஞ்ச தந்திரக்கதைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்து இன்புறலாம்.

முகநூலில் திரு.ஹரன் பிரசன்னா அவர்களின் புத்தக அறிமுகப் பதிவு.

பஞ்ச தந்திரக் கதைகள் (கருப்பு வெள்ளை படங்களுடன்)

இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன. அரசர்களை நல்வழிப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தக் கதைகளை அவர் பயன்படுத்தி இருந்தாலும், சிறுவர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கியப் படைப்பாகவும் அது அமைந்தது.

‘பஞ்சதந்திரக் கதைகள்’ ஐந்து பகுதிகளைக் கொண்டது. தாமரை மலரின் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் போல, ஒரு கதைக்குள் பல கதைகள் ஒளிந்திருப்பதே பஞ்சதந்திரக் கதைகளின் சிறப்பம்சம்.

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளில் பொதிந்துள்ள நீதி போதனைகளும் ராஜ தந்திர நுணுக்கங்களும் காலத்தைத் தாண்டி நிற்பவை. முன்னெப்போதோ இக்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கதைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன.

லதா குப்பாவின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடையில், ஓவியர் ஜீவாவின் ஓவியங்களுடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு, மிருகங்களின் மாய உலகிற்குள் நம்மைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை.

 
புத்தகங்களை வாங்க

Sunday, October 20, 2024

டிஜிட்டல் கொள்ளை


இன்றைய 'நீயாநானா'வில் வலைஉலக ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கி வாழ்க்கையையும் பணத்தையும் தொலைத்தவர்கள் பற்றின விவாதம் நடந்தது. ஏமாற்றுபவர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர,வளர அவர்களும் புதுப்புது வழிகளைக் கையாண்டு நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள்.

நாம் ஏன் ஏமாறுகிறோம்? போதுமான கல்வியறிவு இல்லை என்று சொல்லலாம் என்றால் நன்கு படித்து, பதவியில் இருப்பவர்கள் தான் அதிகம் ஏமாறுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

டிஜிட்டல் யுகத்திற்கு முன்புவரை வங்கி, அஞ்சல்துறையில் பணத்தைச் சேமித்து வைத்தார்கள். கூடுதல் வட்டிக்கு வைப்புச் சான்றிதழ் முறையில் பாதுகாப்பாக முதலீடு செய்தார்கள். விவரம் அறிந்தவர்கள், கையில் தாராளமாகக் காசு புழங்கும் வீட்டினர், பணத்தை நிலத்திலும் தங்கத்திலும் முதலீடு செய்தனர். அதற்கும் ஒரு படி மேலாக செல்வந்தர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்கள்.

காலம் மெல்ல மாறியது. படித்தவர்கள் அதிகமானார்கள். வேலை தேடி அலையும் கூட்டம் பெருகியது. வேலை வாங்கித்தருகிறேன் என்று பூஞ்சைகளாய் பூத்தது சிறு நிறுவனங்கள் பல. கஷ்டப்பட்டு அவர்கள் கேட்ட பணத்தைப் புரட்டிக் கொடுத்து வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருந்த பலரையும் மும்பை, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா என்று அழைத்துப்போய் பலரும் நரகத்தில் சிக்குண்டவர்களாகத் தப்பித்து வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஓடிவந்தது வரலாறு.

சீட்டு கட்டி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைக் கொடுத்து இரவோடு இரவாக நிறுவனங்கள் பூட்டைப்போட்டுத் தலைமறைவாகி அதில் பலர் பணத்தைத் தொலைத்தனர்.

அவ்வளவு ஏன் ? நடிகர்களை வைத்து 'ஈமு' கோழி நாடகம் நடந்ததை யாராலும் மறக்க முடியுமா? எத்தனை பேர் பணத்தை இழந்தார்கள்!

பெண்களிடம் தங்கத்தை மெருகேற்றுகிறேன் என்று ஆட்டையைப் போட்ட எத்தனை கதைகளைக் கேட்டிருப்போம்? ஒரு சவரன் கொடுத்தால் இரட்டிப்பாக்கிக் கொடுப்பேன் என்று முதலில் உண்மையாகவே இரட்டிப்பாக்கி ஆசையைத் தூண்டி விட, எத்தனை பெண்கள் கணவருக்குத் தெரியாமல் நகைகளை இழந்தார்கள்?

நெட்ஃப்ளிக்ஸ்ல் 'Jamtara:Sabka Number Ayega' என்ற தொடரில் படிப்பறிவு இல்லாத சைபர் குற்றவாளிகள் ஒரு குக்கிராமத்தில் இருந்து எப்படி நகர்வாழ் மக்களின் பணத்தைச் சுருட்டுகிறார்கள் என்று காட்டுகிறார்கள். நம்பவே முடியாது. ஆனால் உண்மையிலேயே அப்படி நடந்திருக்கிறது.

சமீபகாலமாக வேலைவாய்ப்புகள் பெருகியதில் குடிசைகள் ஓட்டுவீடுகளாகியது. கைகளில் பணம் புரளத்துவங்கியது பலரிடம். ஆனாலும் ,அவனை விட நான் பணக்காரனாக வேண்டுமென்ற ஆசை. பெண்பித்தர்கள் பலரும், குறுக்குவழியில்/ஓசியில் பணம் கிடைக்கும் என்பதை நம்பி ஏதோ ஒரு நப்பாசையில் பலரும் வீட்டில் பூச்சிகளாக சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய தொழிலை ஆரம்பிக்க வலைத்தளங்களில் எதையோ தேடிக்கொண்டிருந்தவரின் கண்ணில் பட்ட விளம்பரம் விபரீதத்தைக் கொண்டு வந்து அவர் மூன்று லட்சம் வரை இழந்திருக்கிறார். பாவம்! நேர்மையாகத் தொழில் செய்ய முயன்று ஏமாந்திருக்கிறார்!

குழந்தைக்கு டயபர் வாங்க இணையத்தில் தேடி புதுக்கடை, தள்ளுபடி என்று 3000 ரூபாய் வரையில் ஏமாந்திருப்பவர் படித்தவர் தான். இணையத்தை நம்பி இப்படி ஒரு இழப்பு!

போலி வர்த்தக கணக்கில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம். ஆசை! ஆசை! எல்லோரும் 'தருமி'யாக ஆசைப்பட்டு உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணாவாக.

இருப்பதிலேயே கொடூரம் இந்த கதை தான். வெளிநாட்டில் வேலை என்று அழைத்துப் போய் ஒரு ஆணை பெண்ணாக 'chat' செய்ய வைத்து அதில் ஏமாந்த 'பெண் பித்தர்களிடம்' இருந்து பல லட்சங்கள், கோடிகள் என்று சுருட்டி இருக்கிறார்கள். ஏமாந்தவர்கள் பலர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்திய அரசும் வெளிநாட்டுக்குச் சுற்றுலா விசாவில் ஊருக்குச் சென்றவர்கள் பற்றின தகவலை வைத்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது சிறப்பு. நிச்சயம் பாராட்டத்தக்க செயல். வேறு நாட்டினர் இன்னும் மாட்டிக் கொண்டுள்ள விஷயத்தில் இந்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வந்திருக்கிறது.

என் மகள் ஜெர்மனிக்குப் படிக்கச் சென்றிருந்த பொழுது கல்லூரியில் இருந்த ATMல் பணம் எடுத்திருக்கிறாள். அடுத்த முறை பணம் எடுக்கச் சென்றிருந்த பொழுது அவளுடைய வங்கிக்கணக்கில் இருந்த மொத்தபணமும் காலி என்று தெரிய வந்தது. அலறி அடித்துக் கொண்டு என்னிடம் கூற, நேரே வங்கிக்குச் சென்று தெரிவித்தேன். பொதுவாகவே ஐரோப்பா செல்பவர்களுக்கு இது நடக்கும் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருந்ததால் அவள் ஊருக்குச் செல்லும் முன் வங்கியில் அவளுடைய படிப்புக்காக ஜெர்மனி செல்வதும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் படியும் கூறி இருந்தேன். அவர்களும் தாய்லாந்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பணத்தை எடுத்திருக்கிறார்கள் என்று விசாரணை செய்து கண்டுபிடித்தார்கள். எங்கள் பணத்திற்கு எந்த பங்கமும் இல்லை. போன மொத்த பணத்தையும் கணக்கில் வரவு வைத்து புது கார்டையும் கொடுத்து விட்டார்கள்.

இப்படி உலகமெல்லாம் கிரெடிட் கார்டு, ஈமெயில் மூலம் திருட்டுத்தனங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது. அமெரிக்காவில் அதிகம். இந்த அழகில் 'சிப் ரீடர்'ஐ வைத்து பர்ஸிலிருக்கும் கடன் அட்டை மூலம் பணத்தை லவட்ட முடியும் என்பது திருடர்களுக்கு வசதியாகப் போய் விட்டது😖

ரயிலில் பயணம் செய்யும் பொழுது மகனின் பர்ஸை திருடிய அடுத்த கணமே அவன் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். நல்ல வேளை! வங்கி உடனே கைபேசியில் code அனுப்பியவுடன் இவனும் பர்ஸ் தொலைந்ததைச் சொல்லி அந்த பரிவர்த்தனையை நிறுத்தி விட்டான். அதனால் தப்பித்தான்.

இது ஏதோ இந்தியாவில் மட்டும் அதுவும் 'டிஜிட்டல் இந்தியா' ஆன பிறகு நடப்பது போலவும் கோட்டு சூட்டு கோபி சொல்லாமல் இருந்தால் தானே அதிசயம்? என்ன இருந்தாலும் திரா விட வளர்ப்பு அல்லவா?

வங்கிகள் மக்களின் பணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. யாருடைய கணக்கிலிருந்தோ பணம் செல்கிறது என்றால் உடனே கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி அவர் இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறாரா அல்லது code/OTP எண்ணை அனுப்பி உறுதி செய்துகொள்ளலாம்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை வங்கிகளுக்கு உண்டு. மக்களும் குறுகிய வழியில் பணம் கிடைக்கிறது என்று ஆசைப்படாமல் தெளிவாகக் கேட்டறிந்து கொள்வது நல்லது. மக்களும் விழிப்புணர்வுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவது நல்லது. கடமையும் கூட!

அவசியமான விவாதம்.




Tuesday, October 1, 2024

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் போட்டியைப் பற்றின கட்டுரை அடுத்த அமெரிக்க அதிபர் யார்?



இன்னும் இரு மாதங்களில் அமெரிக்காவின் 47வது அதிபர் யாராக இருக்கக்கூடும் என்பதில் உலகமே ஆவலோடு காத்திருக்கின்றது. யாருமே எதிர்பாராத அளவிற்குத் தேர்தல் களத்தில் மாற்றங்கள் சடுதியில் நிகழ்ந்து விட்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் கருத்துக்கணிப்புகள் மாறிக்கொண்டு வருகிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் அதிபர் வேட்பாளர்களாக குடியரசுக்கட்சியின் சார்பில் 78 வயதான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சியின் தற்போதைய அதிபர் 81 வயதான பைடனும் தான் களத்தில் இருந்தனர். ஜூன் 27, 2024 அன்று ‘சிஎன்என்’ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விவாதத்திற்குப் பிறகு பைடனின் வயோதிகமும் உடல்நலம் சார்ந்த கேள்விகளும் பெரிதாகப் பேசப்பட்டது. “நா குழறிப் பேசுவது புரியவில்லை. இத்தனை நடுக்கத்துடன் நடந்து வரவே தள்ளாடுகிறாரே இவரை நம்பியா இன்னும் நான்கு வருடங்களுக்குப் பொறுப்பை ஒப்படைப்பது? அப்படியென்றால் இப்பொழுது வெள்ளை மாளிகை யார் பொறுப்பில் இருக்கிறது? அடிக்கடி மருத்துவர்கள் வந்து செல்வது எதற்காக” என்றெல்லாம் கேள்விகள் வர ஆரம்பித்தது. விவாதத்தின் போது “பைடன் பேசியதில் பலவும் எனக்குப் புரியவில்லை. நேயர்களுக்கும் புரிந்திருக்காது. ஏன் அவருக்கே என்ன பேசுகிறோம் என்று புரிந்திருக்காது” வழக்கம் போல ட்ரம்ப் தன்னுடைய ஸ்டைலில் பேசியது மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றது.

அதற்குப்பிறகு ஜூன் 28 அன்று நார்த் கரோலினாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் தன்னுடைய மூப்பின் தடுமாற்றத்தை ஒத்துக் கொண்டார் அதிபர் பைடன். 29ந்தேதி அன்று நியூயார்க்கில் நிதி திரட்டும் கூட்டத்தில் அவரைப் போட்டியிலிருந்து விலகிச் செல்லுமாறு பதாகைகள் ஏந்திய வாக்காளர்கள் முற்றுகையிட்டனர். ஜூலை 2ம் தேதி அவர் கட்சியைச் சார்ந்த டெக்ஸாஸ் பிரதிநிதி லாயிட் டோகெட் போட்டியிலிருந்து வெளியேறுமாறு பகிரங்கமாகக் கூறிய முதல் ‘ஹவுஸ் டெமாக்ராட்’ ஆனார். அதற்குப்பின் அரிசோனா பிரதிநிதி ரவுல் கிரிஜால்வா, மாசசூசெட்ஸ் பிரதிநிதி சேத் மௌல்டன் ஆகியோரும் பைடனின் வெளியேற்றத்திற்கு அழைப்பு விடுக்க மற்ற கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர். ஜூலை 4 அன்று பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ‘ஸ்விங்’ மாநிலங்களைத் தளமாகக் கொண்ட இரண்டு வானொலி நிலையங்கள், ‘WURD’, ‘WAUK’ பைடனுடன் முன் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்களை ஒளிபரப்பின. முன்கூட்டியே வழங்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு நேர்காணல் நடத்தியாகப் பேட்டி கண்டவர்கள் உண்மையைச் சொல்ல நிலைமை தீவிரமாகியது. பைடன் மீதிருந்த அவநம்பிக்கை கூடியது. மருத்துவர்களை அழைத்து அவர் பதவியில் நீடிப்பது சரிதானா எனப் பரிசோதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.

நிலைமையைச் சரிசெய்ய ஜூலை 5ந்தேதி ‘ஏபிசிநியூஸ்’ செய்தி தொகுப்பாளர் ‘ஜார்ஜ் ஸ்டீஃபனோபுலோஸு’டன் ஒரு நேர்காணல் நடந்தது. அப்பொழுது பைடன் “ட்ரம்ப் தன்னை இடைமறித்ததால் சொல்ல வேண்டிய பதிலைச் சொல்ல முடியாமல் போயிற்று. கடவுள் வந்து கேட்டுக் கொண்டால் ஒழிய இந்தப் போட்டியிலிருந்து நான் விலக மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். பேட்டி எடுப்பவர் மீண்டும் மீண்டும் அவர் வயதும் தள்ளாமையும் இன்னும் நான்கு வருடங்கள் அவரை முழுமையாகச் செயல்பட வைக்குமா என்று சந்தேகத்துடன் கேட்டாலும் “தன்னால் முடியும். ட்ரம்ப்பைத் தோற்கடிக்க தன்னால் மட்டுமே முடியும்” என்று அதிபர் சொன்னதை நம்ப முடியாமல் தான் பார்த்துக்கொண்டிருந்தார் ஜார்ஜ். நேயர்களும் தான்.

அதற்கு மறுநாள் பேட்டி எடுத்த ஜார்ஜிடம் வழிப்போக்கர் ஒருவர் கேட்ட கேள்விக்கு “பைடன் சரியான வேட்பாளர் இல்லை” என்று தன்னுடைய கருத்தைக் கூற, அது வைரலானது. தொடர்ந்து பைடனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஹாலிவுட் ‘சால்ட்பெப்பர்’ நாயகன் ‘ஜார்ஜ் குளூனி’ வேறு கண்டிப்பாக பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று பேட்டி கொடுக்க, நிலைமை மிகவும் மோசமானது. இத்தனை நடந்த பிறகு ஒரு மூத்த அரசியல் தலைவரிடம் எப்படி போட்டியிலிருந்து விலகிச்செல்லச் சொல்வது என கட்சித்தலைமையும் நிலைமையை உணர்ந்து தவித்துக் கொண்டிருந்தது.

ஜூலை 1,2024 அன்று வெர்மான்ட்டின் பீட்டர் வெல்ச், பைடனை போட்டியிலிருந்து விலகுமாறு பகிரங்க அழைப்பு விடுத்த முதல் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஆனார். இவரையும் சேர்த்து 10 ஜனநாயகக் கட்சி காங்கிரஸார் போட்டியிலிருந்து விலக கோரிக்கை வைத்தனர். இந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஜூலை 11ல் வாஷிங்டனில் நடந்த ‘நேட்டோ’ உச்சிமாநாட்டில் உக்ரேனிய அதிபர் ‘வோலோடிமிர் ஜெலென்ஸ்கி’யை ‘அதிபர் புடின்’ என்று அறிமுகப்படுத்தி பேரதிர்ச்சியைத் தந்தார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹாரிஸை “துணை அதிபர் ட்ரம்ப்” என்று தவறாகக் குறிப்பிட்டார். மேலும் “நீங்கள் வெற்றி பெற வழி இல்லை என்று என்னுடைய தேர்தல் குழு கூறினால் மட்டுமே தான் போட்டியிலிருந்து வெளியேறுவேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் ட்ரம்ப் படுகொலை முயற்சி நடக்க, அந்த நேரத்திலும் காயமடைந்த ட்ரம்ப் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது முஷ்டியை உயர்த்தி, “ஃபைட் ஃபைட் ஃபைட்” என்று உரத்துக் கூற, கூட்டமும் அதை எதிரொலித்தது. ட்ரம்ப்பின் செல்வாக்கும் சற்றே அதிகரித்தது.

ஜூலை 16ல் பைடன் பேட்டியளித்த நேர்காணலில் “ஆட்சி செய்ய இயலாத உடல்நிலை காரணங்கள் ஏற்பட்டால் மட்டுமே போட்டியிலிருந்து விலகுவதைப் பற்றி பரிசீலனை செய்வேன்” என்று கூறினார்.

ஜூலை 17 அன்று பைடனுக்கு ‘கோவிட்’ என்று செய்திகள் வெளிவந்தன! அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கு முன்பே உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரான முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், ஹவுஸ் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் பைடனைச் சந்தித்து அவர் தேர்தலில் தொடர்ந்தால் நவம்பர் மாதத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தியதாக ‘பொலிட்டிக்கோ’ உள்ளிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 18, குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் தன்னுடைய கட்சி சார்பில் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கபட்டார். துணை அதிபர் வேட்பாளர் ஜேடி வின்சுடன் மேடையில் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

ஏற்கெனவே ஆளும் அரசின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையினால் கடுப்பிலிருந்த மில்லினியல்களுக்கு பைடன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து செல்வாக்கு அதிரடியாகச் சரிந்தது. அதுவரையில் பைடனை ஆதரித்து பணத்தைக் கொட்டியவர்கள் விவாதத்திற்குப் பின் ட்ரம்ப்பின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக மாறி வரும் நிலையைக் கண்டு அவசரகதியில் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளர் ஒருவர், பைடனின் மறுதேர்தல் முயற்சி யதார்த்தத்துடன் சற்றும் தொடர்பில்லாதது. ஹிலரி க்ளிண்டனின் 2016 பிரச்சாரத்தின் தவறுகளை மீண்டும் செய்யக்கூடும் என்றும் அஞ்சுவதாகக் கூறினார். விவாதத்திற்கு முன்பு வரை கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தவர்கள் கூட வெளிப்படையாகத் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது மட்டுமில்லாமல் உடனடியாக வேட்பாளர் பதவியிலிருந்து விலகி துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பைடனே எதிர்பாராத திருப்பம் அது. ஜனநாயகக் கட்சியும் கள்ள மெளனத்துடன் இதை ஆதரித்தது.

விவாதத்தின் பிறகு வந்த கருத்துக்கணிப்புகள், மக்களின் எண்ணங்களை அறிந்து அவரே கௌரவமாக விலகி இருந்திருக்க வேண்டும். அரை நூற்றாண்டுகளாக அரசியலில் கோலோச்சியவர். கடவுளே வந்து சொன்னால் ஒழிய தன் முடிவில் மாற்றம் கிடையாது என்று கூறியவரே வேறுவழியின்றி பெருந்தன்மையுடன் நாட்டின் நலத்தில் அக்கறை கொண்டு விலகுவதாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஜூலை 21 அன்று ஜனநாயகத்தைக் காக்க போட்டியிலிருந்து விலகுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக பைடன் அறிவித்து கட்சியின் வேட்பாளராக ஹாரிஸை முன்மொழிந்தார். தேர்தலுக்கு 100 நாட்களே இருந்த நிலையில் ஹாரிஸும் பெருமனதுடன் ஏற்றுக்கொண்டார். நாட்டுக்காக பைடன் செய்த மிகப்பெரிய தியாகம் என்று வானளாவ புகழ்ந்தார்.

இரு கட்சியும் தங்கள் அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவே ஒரு ‘மினி தேர்தல்’ எல்லா மாநிலங்களிலும் நடக்கும். போட்டியாளர்களும் தீவிரமாக மக்களின் ஆதரவைக் கோரி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருப்பார்கள். யாருக்கு மக்கள் அதிகம் வாக்களிக்கிறார்களோ அவர்களையே கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களாக கட்சி மாநாட்டில் அறிவிக்கும். ஜனநாயக கட்சியின் சார்பில் மார்ச் 2024ல் கலிஃபோர்னியா ஆளுநர் ‘கேவின் நியூசம்’, மிச்சிகன் ஆளுநர் ‘க்ரெட்ச்சென் விட்மர்’ வேட்பாளர்களாக ஆர்வம் காட்டிய போதும் பைடனின் அறிவிப்பிற்குப் பின் இருவரும் விலகி விட்டனர். அப்படி ஒன்று நடந்திருந்தால் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் வேட்பாளர் தேர்தலில் பங்கு பெறாமல் இருந்த ஹாரிஸிற்கு அடித்தது பம்பர் லாட்டரி.  அவரைவிடத் தகுதியான வேட்பாளர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அனைவரும் பைடனுக்காக ஒதுங்கி இருந்தார்கள். ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் அதிபருக்குப் பின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒரே தகுதியும் ட்ரம்ப்பை எதிர்க்கச் சரியான போட்டியாளராகவும் அவரை விட்டால் தற்போது கட்சியில் தகுந்த வேட்பாளர் வேறு யாரும் இல்லை என்ற நிலையில் இப்பொழுது களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் தேர்வுப் போட்டியில் நீடிக்க முக்கிய அம்சமாக இருப்பது அவர்கள் பெரும் நன்கொடைகள் தான். நன்கொடைகள் குறைய ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரையின் மீது தானே பணத்தைக் கட்டுவார்கள்? அப்படித்தான் தொடக்கத்தில் பைடனை ஆதரித்தவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு ஏராளமான நிதியை வழங்கினார்கள். ஆனால் அதை விடவும் அதிகமாக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ட்ரம்ப்பிற்கு நிதியை அள்ளிக் கொடுத்தார்கள். அதுவும் அவர் மீது வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே பலத்த ஆதரவை வழங்கினார்கள். இதுவும் ஜனநாயகக் கட்சிக்கு ஆச்சரியமாகவும் பைடன் மீதான நம்பிக்கை குறையவும் காரணமாக இருந்தது. பைடன் விலகிய பிறகு அவர் வசூலித்திருந்த அத்தனை நிதியும் ஹாரிஸின் தேர்தல் நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. போட்டியில் ஹாரிஸ் களமிறங்கிய பிறகு உற்சாகம் பெற்ற கட்சியினர் தாராளமாக நிதி உதவிகள் செய்ய இன்று ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டார். தேர்தல் நிதியைக் கொண்டு தான் தேர்தல் செலவுகளைக் கையாள முடியும். இதை வைத்து ஹாரிஸ் வெற்றி பெறுவது திண்ணம் என்று கூற முடியுமா?

2016ல் ஹிலரி 623மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி (ட்ரம்ப் $335மில்லியன்) முன்னிலையில் இருந்தார் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
A graph showing a line graph

Description automatically generated

ஆகஸ்ட் 17,2024 அன்று ஜனநாயக கட்சியினர் நடத்திய மாநாட்டில் கமலா ஹாரிஸை ஆதரித்து அனைவரும் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஒபாமா, க்ளிண்டங்களுடன் சேர்ந்து கோரிக்கையும் விடுத்தார் பைடன். ஆக, ஜனநாயகத்தைக் காப்போம் என்று கூறுபவர்கள் தான் அதை மீறி ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!

மாநாட்டில் பேசிய அனைவரும் ட்ரம்ப்பைத் தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஹாரிஸிற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஏற்கெனவே மக்களிடையே குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்திய ட்ரம்ப்பின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டாம். அது இன்னும் மோசமாகவே இருக்கும். தற்போது அமெரிக்கா புதியதொரு அத்தியாயத்திற்குத் தயாராக உள்ளது. ஹாரிஸிற்கு வாக்களிப்போம். அனைவரும் தேர்தலில் வாக்களியுங்கள்” என்று பேசியது ஆதரவாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுவரையில் வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்துக் கொண்டிருந்த குடியரசுக்கட்சியினரின் சுருதி கமலா ஹாரிஸின் வருகைக்குப் பிறகு சற்றே குறைந்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படித்தான் 2016லும் ட்ரம்ப்பிற்கு எதிராக ஊடகங்கள் இருந்தன என்று குடியரசுக்கட்சியினர் புறந்தள்ளுகிறார்கள். இரு அதிபர் வேட்பாளர்களும் தங்கள் துணை அதிபர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இருவருமே அத்தனை பிரபலமானவர்கள் இல்லை.

ட்ரம்ப் துணை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ள 39 வயதுள்ள ஒஹையோ செனட்டர் ‘ஜேடி வேன்ஸ்’ முன்பு தீவிரமாக ட்ரம்ப்பை எதிர்த்தவர். இன்று தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். எழுத்தாளர். யேல் பல்கலையில் சட்டம் பயின்றவர். கடற்படையில் பணியாற்றியவர். தற்போது செனட்டராக இளம் அரசியல்வாதி என்று பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய ‘Hillbilly Elegy’ புத்தகம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ஏழ்மையையும் சமூக அவலத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தன்னுடைய அனுபவங்கள் வாயிலாக மிக அழகாக எழுதிப் பிரபலமானார். அது படமாகவும் இயக்கப்பட்டு நெட்ஃபிளிக்ஸ்ல் வெளிவந்தது. “பொருளாதாரத்தில் சிக்கி இருக்கும் அமெரிக்காவிற்கு ட்ரம்ப் அதிபராவது அவசியம்” என்று குடியரசுக்கட்சி மாநாட்டில் பேசியுள்ளார். இந்திய வம்சாவளியான சட்டம் பயின்ற ‘உஷா சிலுக்குரி’ இவரது மனைவி ஆவார்.

கமலா ஹாரிஸ் தனது துணை அதிபராக மினசோட்டா ஆளுநர் ‘டிம் வால்ஸ்’ஐ தேர்ந்தெடுத்துள்ளார். இவர் பள்ளி ஆசிரியராக, கால்பந்து பயிற்சியாளராகப் பணிபுரிந்தவர். அமெரிக்க இராணுவ தேசிய காவலில் 24 ஆண்டுகள் பணியாற்றி சார்ஜென்ட் மேஜர் பதவிக்கு உயர்ந்து அதிலிருந்து ஓய்வு பெற்றவர். 2006 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிப் பதவியிலிருந்த ஒருவரைத் தோற்கடித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2018ல் மினசோட்டா ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022ல் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மினியாபோலிஸ்-செயின்ட் பால்-ல் உள்ள ‘WCCO’ வானொலியின் அரசியல் ஆய்வாளரான ப்ளோயிஸ் ஓல்சன் , “அமெரிக்காவின் உட்புற கிராமங்களில் குடியரசுக்கட்சி வாக்காளர்கள் அதிகம். அதனால் அவர்களே தொடர்ந்து வென்று வருகிறார்கள். அங்கு இவரை அனுப்பினால் ‘சிகப்பு’ ‘நீல’மாக மாறும். அதற்கான அனுபவம் அவருக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

துணை அதிபர்கள் யாராக இருந்தாலும் வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்த கட்சி, அதிபர் வேட்பாளர், தேர்தல் கொள்கைகளைக் கவனத்தில் கொண்டு தான் வாக்களிக்கிறார்கள்.

வேட்பாளர்களின் இனம், பாலினம் என்ற வகையில் ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். அதிக எண்ணிக்கையில் ஆண்களின் ஆதரவு ட்ரம்ப்பிற்கும் பெண்களின் ஆதரவு ஹாரிஸுக்கும் இருப்பதாக ‘சிபிஎஸ்’ கருத்துக்கணிப்பு இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே கணிசமான பாலினப் பிளவு உருவாகி வருவதைக் காட்டுகிறது. ட்ரம்ப்பின் முக்கிய ஆதரவாளர்கள் ஆண் வாக்காளர்களாகவும், 45-64 வயதுக்குட்பட்டவர்களாகவும், கல்லூரிக் கல்வி இல்லாத வெள்ளை வாக்காளர்களாகவும் உள்ளனர். இளம் வாக்காளர்கள், பெண்கள், கறுப்பினத்தவர்கள் ஹாரிஸிற்கு ஆதரவாக உள்ளனர்.

சமீபத்திய தேசிய கருத்துக் கணிப்புகளின் சராசரியில் ட்ரம்ப்பை விட ஹாரிஸ் 3.4 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். இருப்பினும் அதிபர் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஸ்விங்’ மாநிலங்களில் போட்டி மிக நெருக்கமாக, தீர்மானிக்க முடியாதபடி தான் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளது. அவரவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இருவரும் மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றிருந்தாலும் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கப் போவது ‘போர்க்கள’ மாநிலங்களான(battleground states) அரிசோனா, ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் வாக்குகள் தான். மற்ற குடியரசுக்கட்சி மாநிலங்கள் பெரும்பாலும் அந்தக் கட்சி அதிபர் வேட்பாளருக்கும் ஜனநாயக கட்சி மாநிலங்கள் அக்கட்சியின் அதிபர் வேட்பாளருக்கும் வாக்களித்து விடும். ஆனால் விதிவிலக்காக சில மாநிலங்கள் மட்டும் ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் வேறுபடும். அதைத்தான் ‘போர்க்கள மாநிலங்கள்’/’ஸ்விங் ஸ்டேட்ஸ்’ என்றழைக்கிறார்கள்.

A map of the united states

Description automatically generated

ஏழு மாநிலங்களில் ஆறில் ஹாரிஸ் முன்னணியில் இருப்பதாகவும் நெவேடாவில் ட்ரம்ப் வலுவாக இருப்பதாகவும் ‘குக் அரசியல் அறிக்கை’ காட்டுகிறது. 2020ல் பைடன் வெறும் 0.4 சதவீதம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரிசோனாவில் ஹாரிஸின் வலுவான முன்னிலை, தன்னுடைய முன்னோடியான பைடனின் பின்தங்கியிருந்த வாக்குவங்கியில் இருந்து முன்னேறியுள்ளதும் ட்ரம்ப்பிற்குச் சவாலாக இருப்பதையும் குறிப்பிடுகிறது. ஆயினும்கூட, ஆகஸ்ட் 2 வரை நடத்தப்பட்ட சிபிஎஸ் கருத்துக்கணிப்பு எந்த ஒரு போராட்ட களத்திலும் எந்த வேட்பாளரும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னிலை பெறவில்லை என்றே தெரிவிக்கிறது.

இப்போது ​​ஒரு வகையான போர்க்களமாக மாறியிருப்பது நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள இரண்டாவது மற்றும் முதல்-வளைய புறநகர்ப் பகுதிகள் ஆகும். அவை குடியரசுக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. இன்றைய வாக்காளர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஜனநாயகக் கட்சியினருக்குச் சாதகமாக மாறி வருகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் போட்டி வெறும் ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ தீர்மானிக்கும் என்பதை விட ‘ஸ்விங் கவுன்டிஸ்’ஐ சார்ந்திருக்கும். இந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் 5% வாக்காளர்கள் இந்த ஆண்டு போட்டியின் முடிவைத் தீர்மானிக்க முடியும். அதிகபட்சம் 150,000 வாக்காளர்கள் அதிபரின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறார்கள் என்று தேர்தல் வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். அதிபர் தேர்தலின் முடிவிற்கு ‘ஸ்விங்’ மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் இரு கட்சிகளும் அதிகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பணத்தையும் நேரத்தையும் அங்கே செலவிடுகின்றன. மற்ற மாநிலங்களில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்த விஷயம் என்பதால் நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் தேர்தல் களேபரங்களைக் காண்பது அரிது. ஆனால் டெக்சாஸ், ஃப்ளோரிடா போன்ற சிகப்பு மாநிலங்களை நீலமாக மாற்ற ஜனநாயக கட்சியினர் முயன்று வருகிறார்கள்.

இதற்கிடையே முன்னாள் ஜனநாயகவாதி தற்போதைய சுயேச்சை வேட்பாளர் ‘ராபர்ட் எஃப் கென்னடி(ஆர்எஃப்கே) ஜூனியர்’ ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ களில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்து வந்தார். பைடன்/ட்ரம்ப்பை பிடிக்காதவர்களின் ஆதரவு இவருக்கு கணிசமாக கிடைத்திருந்தது. ஹாரிஸ் ஆட்டத்திற்குள் நுழைந்தவுடன் இவருக்கு ஆதரவு அளித்தவர்கள் மாறியுள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது. ஜனநாயக கட்சி ஆர்வம் காட்டாத நிலையில் தேர்தல் நிதியும் செல்வாக்கும் குறைய, தனது ஆலோசகர்களிடம் அதிபர் ட்ரம்ப் ஆட்டிசம் போன்ற சிறுவயது நாள்பட்ட நோய்களில் கவனம் செலுத்துவதிலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் தீவிரமாக இருப்பதை உணர்ந்ததாகக் கூறினார். தனது பிரச்சாரத்தை ஆகஸ்ட் 23 அன்று நிறுத்தி, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரித்து ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’களில் அதிபர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். என்ன தான் கென்னடியின் ஆதரவு ட்ரம்ப்பிற்கு உத்வேகத்தைக் கொடுத்தாலும் சுயேச்சை வாக்காளர்கள் உண்மையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் ஆதரவை மாற்றிக் கொள்வதால் இவர்களின் வாக்குகளே அதிபரின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனால் அவர்களின் ஆதரவைப் பெற இரு கட்சி வேட்பாளர்களும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், தேசிய மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்கா அதிபர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. 270 எலக்டோரல் வாக்குகள் பெறுபவரே அதிபராக முடியும். உண்மையில் தேசிய அளவில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தாலும் அல்கோர் புஷ்ஷிடமும்(2000) ஹிலரி ட்ரம்ப்பிடமும்(2016) தோற்றது வரலாறு. தற்போதைய ‘பைவ்தர்ட்டிஎயிட்’ கருத்துக்கணிப்புகளில் ஹாரிஸ் 281ம் ட்ரம்ப் 257 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் பிரபல வாக்குகள் அதிகம் பெறப்போவதில் 51.6% சதவீதம் பெற்று ஹாரிஸ் முன்னிலையிலும் ட்ரம்ப் 48.4% பெற்று இரண்டாமிடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2016, 2020ல் ஏற்பட்ட கருத்துக்கணிப்பு குழப்பங்கள் இந்த வருடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனங்கள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், பொருளாதாரம், பணவீக்கம், வேலைகள், குற்ற நடவடிக்கைகள் போன்ற முக்கிய கொள்கைச் சிக்கல்களைக் கையாளுவதற்கு வாக்காளர்கள் குடியரசுக் கட்சியைத் தான் இன்னும் அதிகமாக நம்புகிறார்கள் என்பதை ‘சவண்டா’ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரத்தியேக கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளக்குடியேற்றமும் நசிந்து வரும் பொருளாதாரமும் குடியரசுக்கட்சியின் முக்கிய கொள்கைகளாக மக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது. ஜனநாயக கட்சியினர் பெண்களின் கருக்கலைப்பு உரிமைச்சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

வெற்றி யாருக்கு என்பதை அக்டோபருக்குள் கணித்து விடுவார்களா? அக்டோபர் மாதம் என்றுமே வேட்பாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும். 2016 தேர்தலில் விக்கி லீக்ஸ் தொடர்ந்து வெளியிட்ட ஹிலரியின் ஈமெயில் குளறுபடிகள் “பாப்புலர்” ஓட்டில் ஜெயிக்க வைத்து எலக்டோரல் வாக்குகளில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக மாறியது வரலாறு. இந்த அக்டோபர் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்பது புதிராகவே இருக்கிறது.

2016ல் நடந்த தேர்தலில் ஹிலரி 65,844,610 வாக்குகளையும் ட்ரம்ப் 62,979,636 வாக்குகளையும் பெற்று 2.9மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலரி ஜெயித்து முன்னிலையில் இருந்தாலும் எலக்டோரல் வாக்குகள் ட்ரம்பிற்குத் தான் சாதகமாக இருந்தது. 270 எலக்டோரல் வாக்குகள் வெற்றியை நிர்ணயித்தாலும் 304 வாக்குகள் பெற்று அதிபரானார் ட்ரம்ப். ஹிலரி 227 வாக்குகள் பெற்றுத் தோற்றுப் போனார். ரஷ்யாவின் தலையீடு , அக்டோபர் மாதத்தில் வெளியான விக்கிலீக்ஸ் தகவல்கள், தேர்தலுக்கு முன்பான எஃப்.பி.ஐ விசாரணை, முக்கியமாக “பெண் வெறுப்பு”. ஒரு பெண் அதிபராவதை இன்னும் பல அமெரிக்க ஆண்களாலும் சில பெண்களாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று ஹிலரியின் தோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்டது இனியும் தொடருமா?

2016 தேர்தலில் புடினின் தலையீட்டில் ட்ரம்ப் ஜெயித்ததாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினர் . ‘காம்ரேட் கமலா’ என்று ட்ரம்ப் இந்தத் தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறிவருகின்றார்.

செப்டம்பர் 10அன்று ட்ரம்ப்பிற்கும் ஹாரிஸிற்கும் இடையே முதல் விவாதத்தை ‘ஏபிசி தொலைக்காட்சி’ நிறுவனம் நடத்தவிருக்கிறது. தங்களுடைய தேர்தல் கொள்கைகளை இருவரும் மக்களிடையே கொண்டு சென்று நடுநிலை வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நிகழ்வாகவும் அமையலாம் என்பதால் மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்த இரு வேட்பாளர்களும் கடுமையாகப் பயிற்சி எடுப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

அதிபர் வேட்பாளர்களின் நிறை,குறைகள் மட்டுமன்றி அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளும் கொள்கைகளும் தான் ‘ஸ்விங் வோட்டர்’ஸின் ஆதரவைப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது.

யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்று அறிய உங்களுடன் சேர்ந்து நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..

Tuesday, September 24, 2024

இதோ இதோ என் பல்லவி

வருடந்தோறும் ‘Aim For Seva’ அமைப்பினர் நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இயல், இசை, நாடகக் குழுக்களில் ஒன்றை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த முறை ‘ஹே கோவிந்த்’ என்று பல்வேறு இசை வடிவங்களில் கிருஷ்ணனை வாழ்த்திப் பாடும் குழுவினரின் இன்னிசை விருந்து. கிருஷ்ணன் என்றதும் புல்லாங்குழல் தான் நினைவிற்கு வரும். வாய்ப்பாட்டுக்கு இணையாக புல்லாங்குழலின் இசை! கண்களை மூடிக் கேட்க, எங்கோ ஆற்றங்கரையில் பறவைகளின் இன்னிசையோடு கலந்த பாடல் கோபியர் கொஞ்சும் கிருஷ்ணனை கண்முன் கொண்டு வந்தது. இனிமையான பாடல்களைப் பாடியவரோ வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்று விட்டார்.


இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் தேனாய் பாடல்களாய் கேட்டதென்றால் மூச்சை இழுத்து அடக்கி மதுர இசையாக, வாய்ப்பாட்டு பாடுபவருக்குப் போட்டியாக புல்லாங்குழல் வாசித்தவரோ “சபாஷ்” போட வைத்துக் கொண்டே இருந்தார். வெவ்வேறு அளவுகளில் நான்கு புல்லாங்குழல்கள். அதில் இதுவரை நான் பார்த்திராத புதுவகை புல்லாங்குழல் ஒன்று. அவரே வடிவமைத்ததாம். அவர் மூச்சு விட்டாலே இசையாகத்தான் கேட்குமோ? மனிதர் அபார மூச்சு கட்டுப்பாட்டுடன் அங்கிருந்தவர்களைத் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு விட்டார். அந்த இசைக்கு ஏற்றாற்போல் அழகிய கண்கவர் ஓவியங்கள் பின்னால் காட்சியாக!
 
ஹரே கிருஷ்ணா! யமுனா நதிக்கே அழைத்துச் சென்று விட்டார்கள்!



புல்லாங்குழலில் இசையை வரவழைக்க எத்தனை கஷ்டம் என்று தெரியும். வீட்டில் ஈஷ்வரும் சுப்பிரமணியும் புல்லாங்குழல் வாசிப்பதால் அதைப்பற்றின கொஞ்சூண்டு அறிவுண்டு.
 
தப்லா வாசித்த இளைஞனோ கைவிரல்களால் கூட இத்தனை அழகான தேனிசையைக் கொண்டு வரமுடியுமா என்று ஆச்சரியப்படுத்தினான். ஜதி்்வேறு பாடி அசத்தினானே பார்க்கணும். வாவ்!

நான் மட்டும் என்ன இளப்பமா என்று பக்கவாத்தியம் வாசித்தவர் “அடடா” என்று அசத்தி விட்டார். அவருக்கும் தப்லா இளைஞனுக்கும் நடந்த போட்டி அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

ஆர்மோனியம் இல்லாமல் வாய்ப்பாட்டா? அவர் தானே முதலில் எடுத்துக் கொடுக்கிறார். கூடவே சுருதிப்பெட்டி.
 
தாள வாத்தியம் வாசித்த மனிதர் சகலகலா வல்லவர். குயில் கூவுவது்போல, பறவைகள் ‘சடசட’வென பறப்பது போல கரையும் காற்றாக இசையோடு கலந்த அவரின் வாத்தியங்கள் ஜஸ்ட் லவ்லி!

இசைக்கருவிகள் ஒரு பாடலுக்கு எத்தனை உயிரோட்டமாக இருக்கிறது என்பதை நேரில் பார்த்து அனுபவிப்பது இன்னும் ஏகாந்தம்.
கைகள் விரித்துப் பக்தியுடன் கிருஷ்ணா, ராமா, விட்டலா என்று பாடியதைக் கேட்பவர்களை அந்தப் பரப்பிரம்மனிடமே சரணடைய வைத்துக் கொண்டிருந்தது அம்மனிதரின் பாடல்கள்.
 
மனம் லயித்துப் பக்தியுடன் பாடுகையில் மனதை வருடி உயிரில் கலக்கும் இசைக்கு மொழியேது?
 
மொத்தத்தில் அருமையான இன்னிசை விருந்து. அமெரிக்காவில் உங்கள் ஊருக்கருகில் வந்தால் தவறாமல் சென்று கேளுங்கள்.

இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் எனக்கே சிலிர்ப்பைத் தந்த அனுபவம் என்றால் இசை தெரிந்தவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்.
இசையால் வசமாகா இதயம் எது?

“Aim For Seva” அமைப்பு வசதிகளற்ற மலைவாழ் மற்றும் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்க்கு இலவச உண்டு உறைவிட பள்ளிகள் மூலம் கல்வியை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வரும் அருந்தொண்டினை செய்து வருகிறது. புஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இன்று இந்தியாவில் பல இடங்களில் அவர்கள் பலரது வாழ்விலும் ஒளியேற்றி வருவது சிறப்பு. அப்பள்ளியில் படித்து இன்று மருத்துவம் பயிலும் மாணவன் தன் கிராமத்து மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து சேவை செய்வேன் என்று கூறியதைக் கேட்கையில் மகழ்ச்சியாக இருந்தது.

உலகமெங்கிலும் இருக்கும் நன்கொடையாளர்களின் உதவியால் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வரும் பள்ளிகள் மூலம் கல்வி கற்க வசதியில்லாத குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார் சுவாமி அவர்கள்.

கொடுக்கும் பணத்தில் 1 ரூபாய்க்கு 92 பைசாக்கள் மாணவர்களின் கல்விக்காகச் செலவு செய்யப்படுகிறது.


தாராளமாக உதவுங்கள்.
 
“Give the world the best you have and the best will come back to you."
-Sri Dayananda Saraswati Swamy

பிகு: செவிக்கு மட்டுமா இன்பம்? இந்தா சாப்பிடு என்று உணவுப்பொட்டலம் வேறு. ஆஆஆஆ! லதா ஹேப்பி அண்ணாச்சி. மனம் மகிழ்ந்திருக்கும் வேளையில் ஞாயிறு கரைந்து விட்டிருந்தது. திங்கள் உதயமாக…

இதோ இதோ என் பல்லவி


Tuesday, September 17, 2024

கலப்படம்


கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற்கும் துணிந்து விட்டார்கள்.  அப்படிப்பட்ட பாவச்
செயல்களில் ஒன்று தான் செயற்கை முறையில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பது, மசாலா பொருட்களில் கண்டதையும்  'கலப்படம்' செய்து விற்பது. இதனால் அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. தனக்கு லாபம் வேண்டும் என்ற பேராசையில் தான் இன்றைய உலகம் இயங்குகிறது. நாமும் அதில் மாட்டிக் கொண்டுள்ளோம்.

என்று மசாலாப் பொருட்களில் கலப்படம் என்று அறிந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை முடிந்த வரையில் வீட்டிலேயே மிளகாய், மிளகு, மசாலாப்பொருட்களைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். மொரோக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த மஞ்சள் தூள் அத்தனை வாசமாக 'கொரகொர'வென்று பார்த்தாலே தரமாக இருந்தது. நம்மூர் மஞ்சள்தூள் பச்சரிசி மாவில் மஞ்சள் நிறமியைச் சேர்த்தது போல அத்தனை நைசாக இருக்கும். வீட்டிலேயே அரைத்த மிளகாய்த்தூள் என்றுமே கடை மிளகாய்த்தூள் நிறத்திற்கு வந்ததே கிடையாது. அத்தனை சிவப்பாக இருக்கிறது கடைகளில். மிளகுத்தூளும் அப்படியே. மசாலாப் பொருட்கள் தேவைப்படும் பொழுது உடனுக்குடன் வேண்டிய அளவிற்குச் செய்து கொள்வது நல்லது.

வாயில் நுழையாதப்  பெயர்களில் புதுப்புது நோய்கள் வரும் காலத்தில் நாம் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

ஸ்வராஜ்யாவில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புரியும். வியாபாரிகள் தெரிந்து கலப்படம் செய்கிறார்கள் என்றால் தாவரங்களில் சில பூஞ்சைகளால் ஆபத்து. அதை நம்மால் இனம் காண முடியாது. முறையாக கண்காணித்து வந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடக்கும் நிலையில் நுகர்வோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். 

Sunday, September 15, 2024

கணவன் அமைவதெல்லாம்...


"படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் Vs வீட்டில் இருக்கும் பெண்கள்" - இன்றைய நீயாநானாவின் விவாதம். முதலில் இந்த விவாதம் சரிதானா? இது அவரவர் விருப்பம் சார்ந்தது. படிப்பதற்கு அறிவை வளர்த்துக் கொள்ளவே என்று ஒருசாராரும் இல்லை படித்ததைக் கொண்டு அத்துறையில் சிறப்புற பணியாற்றவே என்று விவாதம் வைத்துக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் நியாயம் இருந்திருக்கும். அப்படியென்றால் பலரின் வாதம் விமரிசனத்திற்குள்ளாகியிருக்கும் என்பது வேறு விஷயம்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் அனைவரும் தங்களின் மனத்திருப்திக்காக, அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார்கள். அது சரி. குடும்ப நலனுக்காக, குழந்தைகள் வளர்ப்பிற்காக என்று கூறும் பொழுது தான்வேலைக்குச் செல்லும் பெண்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை போன்றதொரு பிம்பம் ஏற்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்குக் கூடுதல் பணிச்சுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் பலருக்கும் உண்டு. அதுவும் நேரம், காலம் தெரியாமல் வேலை பார்க்க வேண்டிய சூழலில் குடும்பத்தையும் பணியையும் நிர்வகிக்க வேண்டுமென்றால் அலாதியான திறமை வேண்டும். இல்லையென்றால் அமைதியான குடும்பத்தில் பூகம்பம் தான் வெடிக்கும்.

இந்த விவாதத்தில் பேசிய பெண்கள் பலரும் குழந்தைகள் வளர்ப்பிற்காக, உறவுகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக, கணவனின் முன்னேற்றத்தில் உதவியாக என்று அடுக்கினார்கள். பலரும் வேலைக்குச்சென்று திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பிறந்த பின்னால் வேலையை விட்டிருக்கிறார்கள். நாம் அருகிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது தான். இவர்கள் எல்லோருக்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. பேசிய பெண்கள் நல்ல பொருளாதார வசதிகளுடன் இருப்பதைப் போலத்தான் தெரிந்தது. அது அவர்களின் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அவர்கள் விருப்பம் வீட்டில் இருப்பது என்பதில் அவர்கள் கணவருக்கும் உடன்பாடு இருப்பதால் எந்தப் பிரச்சினையுமில்லை. இவர்கள் எல்லோரும் 'விடிந்தாலே கனவு நனவாகுமே' சன்ரைஸ் காபியுடன் கணவனை எழுப்புபவர்கள். அவர்களும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸப் குழுமங்களில் அரட்டை அடித்துக் கொண்டே ஆனந்தமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

ஆனால் உண்மையில் இப்பெண்களில் பலரும் கறிக்கடை, சந்தை, பலசரக்கு கடைகளுக்குச் செல்ல ஏகமாக அவர்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் "இங்க நான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அலையறேன்" என்ற வசனங்கள் எல்லாம் கேட்கும். எல்லார் வீடுகளில் இல்லையென்றாலும் "நான் வீட்டில எவ்வளவு வேலைகளைச் செய்றேன் தெரியுமா" என்ற புலம்பலும் தொடரும். "வேலைக்குப் போற திமிரு", "கையில பணம் இருக்குன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கறா" என்று எதிர் தரப்பினரைப் பார்த்துப் புழுங்கி அவனைத் துவைத்து வேலைக்குச் செல்லும் பெண்களை விடவும் செலவுகள் அதிகமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். மறுக்க முடியாது.

படித்து முடித்த ஒரு பெண் வேலைக்குச் செல்ல பல காரணிகள்: குடும்பப் பொருளாதாரம், தான் கற்ற கல்வியைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு, தன் கல்வி அறிவை மேம்படுத்த, ஒரு பெண்ணால் குடும்பத்தையும் பணியையும் சிறப்புற நிர்வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை... என்று சொல்லிக் கொண்டே சொல்லலாம். இல்லையென்றால் பெண்கள் பலதுறைகளிலும் சாதிக்க முடியுமா? நிலவிற்கு விண்கலம் அனுப்பிச் சாதனை செய்த பெண்களுக்குப் பின்னால் நிச்சயமாக அவர்களுடைய கணவர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும் என்ற மிகப்பெரிய பலம் இருக்கிறது.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் பலரும் முன் திட்டமிடுதலுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். என்ன? பணிக்குச் செல்வதால் 8-10 மணிநேரங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுப்பில்லாதவர்கள், குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர்கள் என்றாகி விடுமா?

ஒரு பெண் வேலைக்குச் செல்வதால் அவளுடைய குழந்தைகளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வளரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. அந்தக் குழந்தைகள் யாரையும் எதிர்பார்க்காமல் வளர கற்றுக் கொள்கிறது. வீட்டில் அம்மா இருந்து வளரும் குழந்தைகள் மனநிலையும் அதை ஒத்து தான் இருக்கும். "வீட்ல சும்மா தான இருக்கிற" என்று கணவரும் இருப்பார். அதுவே 24 மணிநேர வேலை என்று புரிந்து கொள்ளாமல்.

இன்றைய கால கட்டத்தில் கணவன்-மனைவி இருவர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் பல துறைகளிலும் சாதிக்க பெண்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளும் தான் தூண்டுகோலாக இருக்கிறது. குடும்பத்தைப் பெண் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்ற சூழல் மாறி வருகிறது. கணவன்-மனைவி இருவருமே குடும்பப்பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டால் மன அழுத்தங்களுக்கு வாய்ப்பே இல்லை. இல்லையென்றாகும் பொழுது தான் வாய்ச்சண்டையில் தொடங்கி மனம் வெறுத்து விவாகரத்து வரை நீள்கிறது.

படித்த பெண்கள் வாழ்வில் மட்டுமா விவாகரத்துகள் நடக்கிறது?

குடும்பம் என்ற அமைப்பில் எல்லாமே சாத்தியம். வீட்டில் இருப்பதால் பொறுப்பானவர்கள் என்றோ வேலைக்குச் செல்வதால் சாதிப்பவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. தன் குழந்தைகள், குடும்பத்திற்கு, தனக்கு எது நல்லதோ அதைச் செய்ய வேண்டும்.

இன்று பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி என்ற இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்க முடிந்ததென்றால் பணத்தேவைக்குத் தந்தையும் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட தாயும் தான் காரணம். அன்று பெரும்பாலான அம்மாக்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை வளர்த்தார்கள். உண்மை தான். இப்பொழுது கல்வி அனைவருக்கும் கிடைக்க, படித்து முடித்த பின் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது யாரையும் சார்ந்திராமல் இருக்கவும் முடியுமென்றால் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை.

ஆனால் இரண்டு பக்கத்திலும் ஒரு ஆணின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை. குடும்பம் என்பது இருவரின் பொறுப்புகள் சார்ந்த விஷயம். ஒருவரே ஒரு பொறுப்பைச் சுமக்கும் பொழுது வெறுமையோ வெறுப்போ வரும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்பொழுது இன்னொருவர் தங்களுடைய பங்கை மாற்றிக்கொள்ளும் வசதிகள் இருக்க வேண்டும். இந்த விவாதத்தில் கூறியபடி, குழந்தைகள் வளர்ந்து கல்வி முடித்து வீட்டை விட்டுச் சென்ற பின் யாரும் தன்னைச் சார்ந்திருக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் பொழுது அதுவரை குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண் தன் மதிப்பை இழந்தவள் போல் உணருவாள் என்றால் அப்பொழுது வேலைக்குச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் குடும்பம், பணியிடத்துச் சுமைகளைக் கையாண்டாலும் வீட்டில் கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டே இருக்கும் கணவர்கள் வாய்த்தவர்கள் தான் பாவம். இன்னும் ஒரு தலைமுறை வரை இது தொடரும்.

இப்பொழுது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆண்கள் பலரும் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தான் விரும்புகிறார்கள். பெண்கள் தான் யோசிக்கிறார்கள். சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் ஆண்கள். 

ஆக, கணவன் அமைவதெல்லாம்...













Monday, September 9, 2024

நீயா நானா

நேற்றைய 'நீயா நானா'வில் அப்பா- மகன் உறவைப் பற்றின விவாதம் நடந்தது. இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று. 

அதில் ஒரு மகனார் தன்னுடைய சிறுவயதில் தனக்கு விருப்பமான ஆடையை தந்தை வாங்கித் தரவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் இப்பொழுது தான் ஒரு தந்தையாக இருக்கும் பொழுது அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினார். 

இது அனைவருக்கும் பொருந்தும். குழந்தைப் பருவத்தில் புரியாத , புரிந்திராத பல விஷயங்களும் நாம் பெற்றோர்களாக உருவெடுக்கையில் புலப்படும். நம் பெற்றோர்களின் அருமையும் புரியும். 

இன்னொருவர் தன்னுடைய பெற்றோரின் காதலைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.  

"அம்மா காலையில் காபி போட்டு எடுத்துட்டு வந்து அப்பாவுடன் குறைந்தது 45 நிமிடங்களாவது பேசிக்கொண்டிருப்பார். இளைஞனான எனக்கு அன்று அவர்களின் காதல் மீது பொறாமை கூட இருந்தது" என்றார். 

இன்று காலையில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் வேலைக்குச் செல்லவும் ஓடும் நிலையில் காதலாவது கத்திரிக்காயாவது என்றாகி விட்டிருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் ஃபோனை நோண்டி சமூக வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறோம். என்னத்த சொல்ல? 

"ஒருமுறை எனக்குச் சிறிது பணம் தேவைப்பட்டது. அப்பாவிடம் கேட்டேன். மறுத்து விட்டார். அப்பொழுது அவர் மீது கோபம் இருந்தது. இப்ப்பொழுது இல்லை."

"ஏன் சார்? பையன் ஒரு அவசரத்துக்குப் பணம் கேட்டா கொடுத்திருக்கலாமே" என்று கோபிநாத் கேட்க,

"என் காலத்திற்குப் பிறகு மனைவிக்காக சேர்த்து வைத்த பணம்.சமீபத்தில் அவள் இறந்து விட்டாள். அதற்குப் பிறகு மகனிடம் அந்தப்பணத்தை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டேன்" என்றார் அந்த அப்பா. 

இப்படித்தான் மனைவிக்காக பல கணவர்கள் சொத்துக்களை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், "பாவம் பெத்த மனம் பித்து பிள்ளைகள் மனம் கல்லு" என்பது போல அப்பா போனவுடன் அம்மாவிடம் நயவஞ்சகமாகப் பேசி பணத்தை லபக்கி அவளைப் புலம்ப வைக்கிறவர்களும் உண்டு. 

இன்னொருவர் தன் தந்தை கால் மீது போட்டு அமருவதில்லை என்றார். "வயதில் குறைந்தவர்கள் கூட அவர் முன் கால் மீது கால் போட்டு உட்காருகிறார்கள். நானும் அப்படித்தான் உட்காருவேன். இவர் மட்டும் அப்படி உட்காருவதில்லை." அவருடைய அப்பாவும் அது அடுத்தவரை அவமதிப்பதாகத் தோன்றியதால் அந்தப் பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டார். 

ஒரே ஒரு தந்தை மட்டும் கல்வி, கல்யாணம் வரையில் செலவு செய்தும் தன் அன்னைக்கு அந்த மகனார் இது வரை ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன தான் குறைவாக சம்பளம் வாங்கினாலும் ஆசையாக மகன் எதை வாங்கிக் கொடுத்தாலும் பெருமை பட்டுக்கொள்வாள் அம்மா. அங்கே இங்கே சில பேராசை பிடித்த அம்மாக்கள் குறைசொல்வதும் நடக்கிறது. அந்த அப்பா பேசியதிலிருந்து அது சிறு மனக்குறைவாகவே இருப்பது போல தெரிந்தது. அத்தனைக்கும் ஒரு பைசா மகனிடம் வாங்காமல் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். தனிக்குடித்தனம் போல. ஆக, மகனார் கையில் எதுவும் இல்லை. 

"இப்பொழுது நல்ல வேலை கிடைத்து இருக்கிறது. இனி அம்மாவிற்குச் செய்வேன்" என்று அவரும் இயலாமையுடன் பேசியதைக் கேட்க அவருக்கு என்ன கஷ்டமோ ?

உண்மையாகவே முடியாத நிலைமையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தனக்காக, தன் மனைவி, குழந்தைகளுக்காகச் செலவுகள் செய்யத் தயங்காதவர்கள், கணக்கு பார்க்காதவர்கள் பெற்றவர்களுக்காகச் செய்யும் பொழுது மட்டும் கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

"இப்ப இது உனக்கெதுக்கு? ரொம்ப அவசியமா? எதெது கேட்குறதுன்னு வரைமுறை இல்லையா?" என்று வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்கவே அத்தனை செலவழிக்க வேண்டிய காலத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தானே தங்களுடைய திருமணச் செலவைச் செய்து கொள்ள வேண்டும்? அது என்ன? வெட்கமே இல்லாமல் பெற்றோர் பணத்தில் திருமணம் செய்து கொள்வது?

இந்த மதி கெட்ட பெற்றோர்களும் நாங்கள் செலவு செய்தோம் என்று சொல்வது எதற்காக? வெட்டி பெருமைக்காகவா? பெற்றோர்கள் அப்படி இருந்தால் இப்படித்தான் பிறந்தவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் எதையும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

பெற்றோர்கள் தங்களுக்கென்று கடைசி வரை உயிர் வாழ சிறிது சேமிப்பை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களை நம்பி வாழ்வது எத்தனை கொடுமை?

அப்பா-மகன் உறவு என்பது புரிந்து கொள்ள முடியாத ஆனால் புரிய வைக்கும் உறவு. அப்பாவிடம் பேசத் தயங்கி அம்மாவைத் தூது விட்டு அவரை ஒரு தூரத்திலேயே வைத்து விடுகிறோம். அவரும் நெருங்கி வருவதில்லை. வயதில் அப்பாவை எதிர்த்தவனுக்கும் அவன் தவறுகளை உணரும் சந்தர்ப்பம் கிடைக்கும். உணர்ந்தவன் அப்பாவின் அருமையைப் போற்றுகிறான். உணராதவன் புலம்பியபடியே திரிகிறான்.

மகன்களை அப்பாக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு மகன்கள் அப்பாக்களைப் புரிந்து கொள்கிறார்களா?

அவ்வளவு தான்.

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...