பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கொரியன் நாடகத்தொடர் பார்த்து முடித்தேன். துவக்கப் பாடலே கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்க, காட்சிகளும் கவிதையாக இருக்கவே எப்படியும் இந்தத் தொடர் பிடித்து விடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.
பொறுமை அதிகம் இருப்பவர்களுக்குத் தான் கொரியன் தொடர்களைப் பார்க்க முடியும். நடுநடுவே நல்ல தூக்கமும் வரும் என்பதால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இத்தொடர்களைப் பார்க்க முயற்சிக்கலாம்😂 மொழி புரியாததால் சப்டைட்டிலை படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் வேலைகளை முடித்து விட்டுப் பார்த்தால் சுகம்😎
என்ன அழகானஉரையாடல்கள்! நடுநடுவே வரும் பாடல்கள்! கதாநாயகி அழகி. அவர் அணிந்து வரும் ஒவ்வொரு உடையும் கண்களை உறுத்தாமல் 'சிக்'கென்று கவருகிறது. கவிதைகளாக ரசித்து ரசித்துக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவில் இவர்கள் கரைகண்டவர்கள் போல! ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கிறார்கள்!
“I always thought I was the one who should make an effort to live in harmony with others. Because in this world, there are a lot more people who can hear than those who can’t. But out of all those people, someone came to me and said hi first.” – Cha Jinwoo
கதாநாயகன், பேசாமலே பேசும் கதாபாத்திரம். அனாயாச நடிப்பால் அவரும் கவருகிறார். தொடரில் வரும் வீடுகளும் அத்தனை அருமையாக! ஒரு தொடர் முழுவதிலும் எந்தவித எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் எடுக்க முடியும் என்று ஒவ்வொரு தொடரிலும் நிரூபிக்கும் இந்த கே-டிராமா இயக்குநர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ் அழுவாச்சி சீரியல் இயக்குநர்களுக்கு என்று இந்த ஞானம் பிறக்குமோ அன்று தமிழகம் கையேந்தி காசு வாங்கி ஒட்டுப் போடாது.
நடுநடுவே வரும் கிளைக்கதைகளைக் கூட அருமையாக கோர்த்திருக்கிறார்கள். கதாநாயகி, நாயகனின் குழந்தைப்பருவம், குடும்பங்கள் இணையும் காட்சிகள், முக்கோண காதல், நண்பர்கள்... சொல்லிக்கொண்டே போகலாம்.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் காது கேளாத கதாநாயகன் வாழ்வில் வசந்தமாக வரும் கதாநாயகி. அவனுக்காக, அவளையும் அறியாமல் அத்தனை மெனக்கெடுகிறாள். உருகி உருகி காதலிக்கும் பொழுது காதலனின் இளவயது காதலியின் வருகை அவளுடைய காதலை ஆட்டம் காண வைக்கிறது. எத்தனை சமாதானம் செய்தாலும் செய்து கொண்டாலும் அவளால் முன்பு போல் அவனை காதலிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். காலம் அவர்களைச் சேர்க்கிறதா? சேர்கிறார்களா? இல்லை ஒருவரின் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா என்பது தான் கதை.
கல்லூரி ஆசிரியர் என்பதால் மாணவர்கள் வாழ்க்கையையும் அழகாக கதையில் கோர்த்திருக்கிறார்கள். என்ன தான் இத்தனை மென்மையாக ஆண் கதாபாத்திரங்கள் இருந்தாலும் உண்மையில் பெண்களை அடக்கியாள நினைக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள் தான் கொரியன் ஆண்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபலமான 'ஜெஜூ' தீவில் தொடங்கும் சந்திப்பு சியோலில் தொடர்கிறது. தொடர் முழுவதும் பயணிக்கும் இசை மென்மையோ மென்மை.
என்ன தான் முழுமையாக காதலிக்கிறேன் என்று 'ஜின் வூ' கெஞ்சி கதறினாலும் அவனிடத்திலிருந்து 'மோயூன்' விலகும் பொழுது பார்ப்பவர்களுக்கும் கஷ்டமாகத் தான் இருக்கும். இனி இருவரும் விலகி இருப்பதே நல்லது என்று ஜின் வூ சொல்லும் காட்சியும் அழுகையுடன் பிரிந்து செல்வதும் உண்மையான காதலின் வலி பிரிவதில் தான் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடைசிக்காட்சியிலும் மீண்டும் அதே இடம்!
“Can the fact that we’re so different can be the reason? I mean, no two people in the world are completely the same.”
– Jung Moeun
'பரபர'வென்று தொடர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. கதைக்கேற்றவாறு காட்சிகளும் மெதுவாக ஆனால் பார்க்கும்படி ரசிக்க வைத்திருக்கிறார்கள். காதல் என்ற ஒரு உணர்வை எப்படியெல்லாம் அழகாகக் கூறமுடியுமா அதில் பிஹெச்டி வாங்கிவிட்டிருக்கிறார்கள் கொரியன் இயக்குநர்கள். சபாஷ்! கதாபாத்திரங்கள் கத்திப் பேசி நடித்துப் பார்த்த நமக்கு தொடர் முழுவதும் சைகை மொழியிலேயே பேசும் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும்?
தொடர் முடியும் பொழுது நானே சில சொற்களுக்கு சைகை மொழியில் பேச கற்றுக்கொண்டேன் என்றால் பாருங்கள்! 16 பாகங்கள்! இந்தப் பெண்ணைப் பெற்ற கொரியன் பெற்றோர்கள் இந்திய பெற்றோர்களைப் போலவே இருப்பதும் பேசுவதும் கூட தொடர்களைப் பார்க்கத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன்.
வீட்டில் தலைக்கு மேல் வேலைகள் இருக்கும் பொழுது தான் இந்த மாதிரி தொடர்கள் கண்ணில் பட்டுத் தொலைக்கும். 'கிடுகிடு'வென்று வேலையை முடிப்பதற்கு முன், நடுவில், பின் என்று பார்ப்பதும் சுகம் தான்😋
“Only when you take a pause and gaze there’s a voice you can hear.” – Cha Jinwoo😍😍😍
எப்படியோ இந்த வருட பனிமழையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று நினைத்திருந்தேன். இந்தியாவிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் தான் ஊருக்குத் திரும்பிவந்தோம். பளீரென்று நீல நிற வானம் வரவேற்க, பனிக்கால ஜாக்கெட் கூட தேவையில்லாமல் இருந்தது நாங்கள் நியூயார்க்கில் வந்திறங்கிய பொழுது. பரவாயில்லையே! இனி மழைக்காலம் தான் என்று சந்தோசப்பட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் குளிர ஆரம்பித்து அதற்கு மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தில், என்னடா, மழை! அதுவும்... 'அடடா மழைடா ஐஸ் மழைடா'! என்று ஆச்சரியமாகி விட்டது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 'ஊமைக்கோட்டான்' போல இருந்து விட்டு மழைக்காலம் தொடங்கிய பிறகு இப்படி வந்து கொட்டிக் கொண்டிருக்கிறதே என்று கவலையாகிவிட்டது எனக்கு.
'சொட்சொட்சொட்சொட்' என்று அன்று முழுவதும் ஐஸ் தரையில் விழ, மரங்கள், செடி, கொடிகள் எல்லாம் முழுவதுமாக ஐஸால் மூடப்பட்டு இரவு பனிமழையும் சேர்ந்து கொண்டு, தட்பவெப்பம் மைனஸ் நோக்கிச் செல்ல, நல்லவேளை! காலையில் அதிரடியாக எழுந்து வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நினைவே ஆசுவாசமாக இருந்தது.
மறுநாள் காலையில் நீலவானம் பஞ்சுப்பொதி மேகங்களுடன் வலம் வர, நேற்று பெய்த மழைக்கும் இன்றிருக்கும் வானத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல இயற்கை தான் எத்தனை மகத்தானது! மரங்களில் படிந்த ஐஸ்மழை இப்பொழுது 'குச்சி குச்சி ராக்கம்மா'வாக கிறிஸ்துமஸ் அலங்கார வெள்ளை விளக்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. பல வருடங்களுக்குப் பிறகு இத்தனை அழகான மழையும் பனியும் செய்த மாயம்!
"வீட்டில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கக் கூடாது. வழக்கமாகச் செல்லும் பூங்காவிற்குச் சென்று வருவோம்" என்று ஈஷ்வர் அழைக்க, கிளம்பினால்...
வழியெங்கும் வெண்ணிற ஆடை உடுத்தி கண்களைக் கூசச் செய்தாள் இயற்கை அன்னை! பூங்காவில் பத்து வண்டிகளாவது இருந்திருக்கும்! குழந்தைகளை அழைத்துக் கொண்டு குளத்தில் சுற்றும் வாத்துக்களைப்
பார்க்க வந்திருந்த குடும்பம், பெண் நண்பருடன் வந்திருந்தவர், மனைவியுடன் என்று சிலரை கடந்து சென்றோம். 'கனடா கீஸ்' என்றழைக்கப்படும் வாத்துகளும், 'மல்லார்ட்' வாத்துகளும் கத்திக்கொண்டு குளத்தை வலம் வந்து கொண்டிருந்தன.
முடிந்த அளவு படங்களை 'கிளிக்' செய்து கொண்டோம். ஓரிரு நாட்களில் கரைந்து விடும் அழகு தான். ஆனால் ஊரே இயற்கை சாண்ட்லியர் விளக்கில் அல்லவா ஜொலித்துக் கொண்டிருந்தது!
லண்டனில் ஆரம்பித்த எங்களது பயணம் இங்கிலாந்தைக் கடந்து ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதியை வலம் வந்து ஐந்தாவது நாளில் வடக்கே ‘இன்வெர்னஸ்’லிருந்து தெற்கு நோக்கி ‘கிளாஸ்கோ’ நகருக்குச் செல்ல, ஆவலுடன் துவங்கியது அன்றைய விடியல். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் விடுமுறையைக் கொண்டாட வந்திருந்த பலரும் இந்தியர்களாகத் தெரிந்தார்கள். சீனர்களும் இந்தியர்களும் தான் அதிகளவில் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது போல எனக்குத் தான் தோன்றுகிறதோ?அமெரிக்காவைப் போல அதிகமான சீனர்களை இங்குக் காணவில்லை. எடின்புரஃஹ் நகரில் தாய்லாந்து மக்களின் உணவகங்கள் தான் அதிகமாகத் தென்பட்டது. இப்படி பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டே அருமையான காலை உணவை உண்டு முடித்தோம். அங்கிருந்து அரைமணி நேரத்தொலைவில் இருக்கும் ‘லாக் நெஸ்’ (‘Loch Ness’)க்குப் புறப்பட்டோம். அங்கு தான் ‘Loch Monster’ மறைந்திருக்கிறது என்ற மர்மம் உலவுகிறது!
செல்லும் வழியெங்கும் துளிர் விடும் மரங்கள் அணிவகுத்து நிற்க, போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம் அழகு. உள்ளூர் மக்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள்! ஏற்ற இறக்கத்துடன் செல்லும் மலைவழிப்பயணத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் பலரும் 50 வயதிற்கு மேல் இருப்பார்கள்! உடலை நன்றாகப் பேணியிருந்தால் மட்டுமே இத்தகைய கடினமான பயணங்களை எளிதாக அவர்களால் செய்ய முடியும். ஏக்கப் பெருமூச்சுடன் அவர்களைக் கடந்தோம்! சிறிது நேரத்தில் நாங்கள் ஆவலுடன் காத்திருந்த ‘லாக் நெஸ்’ வந்தடைந்தோம். ‘loch’ என்பதை ஸ்காட்டிஷ் மொழியில் உச்சரிப்பதைக் கேட்கப் பயிற்சி செய்ய வேண்டும்😕
இருபுறமும் மலைகள் சூழ்ந்திருக்க, இன்வெர்னஸ்ன் தென்மேற்கே 37 கிலோமீட்டருக்கு விரிந்திருக்கும் அழகான நன்னீர் ஏரி ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸின் வசீகரமான ஏரியும் கூட. ‘நெஸ்’ ஆற்றின் பெயரைச் சுமந்த ‘Loch’ பார்வையாளர்களைக் கவருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வண்டியை நிறுத்தி சிறு மலை மீதிருந்து அழகான, அமைதியான ஏரியைப் பார்க்க கொள்ளை அழகு! எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்திருந்தோம் என்று தெரியவில்லை. அங்குச் சுற்றிக்கொண்டிருந்த பறவைகளைப் படம் பிடித்துக் கொண்டு மனமேயில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். எங்கும் இயற்கை. எதிலும் இயற்கை என்றிருந்தால் மிகவும் புகழ் பெற்ற ஸ்காட்டிஷ் கவிஞர் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ இயற்கையைப் பற்றி எழுதாமல் இருந்திருப்பாரா? ஆங்கிலக்கவிஞர்கள் அதுவும் ஈஷ்வருக்குப் பிடித்தவர்கள் என்றால் நேரம் செல்வது தெரியாமல் அவர்களுடைய கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்வது எங்கள் வாடிக்கை. ஈஷ்வர் கல்லூரி விரிவுரையாளராகி விடுவார். நான் மாணவியாகி விடுவேன்😎
அங்கிருந்து சிறிது தொலைவில் ‘The South Loch Ness Trail’ என்ற பிரபலமான இடத்தை வந்தடைந்தோம். வழியெங்கும் இயற்கைக்காட்சிகள் கண்களை நிறைக்க, காபிக்கடையைப் பார்த்ததும் சிறிது இளைப்பாறல். எதிரே மலைகள் சூழ ‘லாக் நெஸ்’. சிறிய காபிக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்கள் சிநேகப்புன்னகையுடன் பம்பரமாய்ச் சுழன்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சைக்கிளில் வந்திருந்த மகளிர் கூட்டம் சிரித்துப் பேசிக்கொண்டே சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்களுக்குப் பிடித்த உணவுகளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு ரம்மியமான சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தோம். உள்ளூர் மக்கள் தங்களுடைய சைக்கிள் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அமெரிக்காவில் ‘Appalachian Trail’ என்ற 2,190 மைல்களுக்கு நீண்ட மலைப்பயணம் வடகிழக்கே ‘மெயின்’ மாநிலத்தில் ஆரம்பித்து 14 மாநிலங்கள் வழியாக தெற்கே ‘ஜார்ஜியா’வில் முடிவடையும். என் நண்பர்கள் பலரும் அவர்களுடைய உறவினர்களும் வருடத்தில் சில நாட்கள் சில பகுதிகளுக்குச் சென்று மலையேறி வருவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் எப்படியாவது இந்த நீண்ட கடினமான மலைப்பயணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதைப் போலவே இங்குள்ள உள்ளூர் மக்களும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ல் சைக்கிளில் பயணிக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். சாகச மனிதர்கள்!
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த குழு ஒன்று லண்டனிலிருந்து வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்திருப்பதாகக் கூறினார்கள். இதுவும் நல்ல யோசனை தான். வேன் நிறைய மக்கள். செலவும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் தனியாக வண்டி ஒட்டி வருவதில் கிடைக்கும் சில பல வசதிகள் கூட்டமாக வேனில் வரும் பொழுது கிடைக்காது. அவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே ‘Fall of Foyers’ என்ற அருவியைக் காண விரைந்தோம். அவர்கள் பார்க்கத்தான் வயதானவர்களாகத் தெரிந்தார்கள். வேகமாக நடக்க ஆரம்பிக்க, நான் மூச்சிரைக்க, ஐயோடா என்றிருந்தது. சுற்றுலா நிறுவனத்தினருடன் வந்தால் இப்படித்தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப வேண்டும் என்று கெடு வைப்பார்கள். நல்ல வேளை! எனக்கு அப்படியான நெருக்கடி ஏதுமில்லை என்று நிம்மதியாக இருந்தது.
140அடி ஆழ அருவியைக் காண கீழிறங்க, உயர்ந்த மரங்களூடே பயணம். வேர்களும் கற்களும் பரவியிருந்த இடத்தில் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. வேகமாக இறங்கும் பொழுதே ஏறும் பொழுது கடினமாக இருக்கப் போகிறது என்ற கவலை. அருவி தரும் உற்சாகம் மனதையும் தொற்றிக்கொள்ள விரைந்து சென்று பார்த்தால், தண்ணீர் அதிகமில்லாத அருவி கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. அருகில் கூட செல்ல முடியாது. இதற்கா இவ்வளவு மெனக்கெட்டோம்😌 செங்குத்தான பாதையில் மூச்சிரைக்க மேலேறி வந்த பிறகு தான் அப்பாடா! என்றிருந்தது. அங்கிருந்து கிளம்பி வழியில் பல இடங்களில் வண்டியை நிறுத்தி நாங்கள் இருவர் மட்டும் சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். மனிதர்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் அமைதி தவழ்கிறது.ஸ்காட்லாந்தின் வடக்கில் மட்டுமல்ல மேற்குப்பகுதியிலும் தொடருகிறது ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’. இருபுறமும் மலைகள். நடுவே சீரான சாலையில் வண்டியில் செல்வதே அத்தனை சுகம்! ஆங்காங்கே பயணிகள் நின்று கொண்டு காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சேர்ந்து கொண்டோம். எதிரில் தெரிந்த மலையில் சிறிது தூரம் ஏறிச்செல்ல, பானோரோமிக் காட்சியின் அழகு, சொல்ல வார்த்தைகளே இல்லை. ஸ்காட்லாந்தின் மற்றுமொரு அழகு ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ என்பதை அந்தச் சாலைகளில் பயணித்த ஒவ்வொரு நொடியும் உணர்ந்தோம்.
மலைகள், நீர்நிலைகள் சூழ்ந்த இடங்கள் அமெரிக்காவின் ‘மொண்டானா’ மாநிலத்தில் நாங்கள் பயணித்த இடங்களை நினைவூட்டியது. நியூயார்க்கின் ‘Lake Placid’ செல்லும் வழியைப் போலவே சாலை நெடுக ஒருபுறம் மலைகள் அரணாக, மறுபுறம் ஏரியும் மலைகளும் துணைக்கு வந்தது பேரழகு. கருமேகங்களும் மூடுபனியும் இயற்கையை இன்னும் செழுமையாக்க, பாவம் ஈஷ்வர்! முழுமையாக வேடிக்கைப் பார்க்க முடியாமல் ஓட்டுவதில் கவனமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். அவருக்கும் சேர்த்து நானே லைவ் கமெண்ட்ரி சொல்லிக் கொண்டு வந்தேன்😎 வழியில் செம்மறியாடுகளும் மாடுகளும் ‘ஹாயாக’ மேய்ந்து கொண்டிருந்த பண்ணைகள். நின்று படங்களை எடுத்துக் கொண்டோம். ‘கிளாஸ்கோ’ செல்லும் பயணம் இத்தனை சுகமான பயணமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
அடுத்து நாங்கள் நிறுத்திய இடம் ‘World War II Commando Memorial’. இரண்டாம் உலகப்போரின் பொழுது அந்தப் பகுதிகளில் தங்கி பயிற்சி அளித்த நேச நாட்டுப் படைவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அருகே போரில் இறந்த வீரர்களின் நினைவிடமும் இருந்தது. அங்கிருந்து பிரிட்டனின் உயரமான மலையான ‘Ben Nevis’ காட்சி தருகிறது. உச்சியில் பனிக்காலத்தின் அடையாளமாகச் சிறிது பனி. அந்த மலையில் ஏற குறைந்தது ஒன்பது மணிநேரங்கள் ஆகலாம். வேண்டாம். தூரத்திலிருந்து பார்க்க அழகாக இருக்கிறது. என்ன? ஒருகாலத்தில் எரிமலையாக இருந்த மலை. உச்சியில் அதன் அடையாளங்களைக் காண மக்கள் செல்வார்கள் என்று அங்கிருந்த பயணிகள் கூறினார்கள்.இங்கிலாந்து இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நடந்த உலகப்போரில் எண்ணற்ற இந்திய வீரர்கள் பங்கேற்று உயிரை இழந்துள்ளனர். அவர்களைப் பற்றின தகவல்களோ நினைவுச்சின்னங்களோ நம் நாட்டில் இல்லாததை நினைத்து வருத்தமாக இருந்தது. நம்மை ஆண்டவர்களுக்கு நம் உயிரின் மதிப்பு அவ்வளவுதான்! சசிதரூரின் புத்தகம் நினைவிற்கு வந்தது. மீண்டும் விட்ட இடத்திலிருந்து வாசிக்க வேண்டும். ம்ம்ம்ம்ம் ….
நல்ல பசி நேரம். ‘Glencoe’ ஊரை வந்தடைந்திருந்தோம். ஸ்காட்லாந்து மக்களின் புரட்சிப்படை இங்கிலாந்துடன் மோதியதில் பலரும் இங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஊர் என்று அறிந்து கொண்டோம். வரலாறு தான் எத்தனை கொடியது! போர்கள் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிகொண்டுள்ளது! இந்தியாவில் மட்டும் முறையாக ஆவணப்படுத்தியிருந்தால் அத்தனை அத்தனை மனதை உருக்கும் கதைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்திருக்கும்! இப்படி வரலாறு என்னவென்றே அறியாத தலைமுறை. எது உண்மை எது உருட்டு என்று குழம்பிப் போயிருக்காது!ஹ்ம்ம்ம்….
நிறையவும் யோசித்ததில் பசிக்க ஆரம்பித்து விட்டது. அருகிலிருந்த உணவகத்தில் சென்று ‘சிக்கன் சாண்ட்விச்’ சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். உணவகத்தின் பெண் உரிமையாளர் எங்களைப் பற்றி விசாரித்து விட்டு அவரே பரிமாறினார். அழகாக அலங்கரிக்கப்பட்ட மேஜைகள். இனி தான் மதிய உணவிற்கு கூட்டம் வரும் போலிருக்கிறது. மணி 12 அடிப்பதற்குள் நாங்கள் சென்று விட்டிருந்தோம். வெளியே சுற்றிப் பார்க்கையில் ‘ஸ்பைஸ் தந்தூரி’ என்று ஒரு உணவகம். அட! இந்த ஊரிலும் ஒரு இந்திய உணவகமா! ஆச்சரியத்துடன் கடந்தோம்.‘பச்சைப்பசேல்’ மலைகள் தொடர்ந்து வர , ‘க்ளென்க்கோ’ ஊரின் இயற்கைக்காட்சிகளைக் கண்களிலும் காமெராவிலும் படமெடுத்துக் கொண்டே வர, ஆறுகளில் உல்லாசப்படகுகளில் சவாரி செய்து கொண்டிருந்தார்கள் உள்ளூர் மக்கள். பைக்குகளில் செல்பவர்களைக் கண்டவுடன் ஈஷ்வர் கொஞ்சம் பொறாமையுடன் ‘இங்கு பைக்கில் தான் செல்ல வேண்டும்’ என்று ஏக்கப் பெருமூச்சு விட, ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்ன் பிரபலமான ‘தி த்ரீ சிஸ்டர்ஸ்’ மலைகள் இருக்குமிடமும் வந்துசேர்ந்தது. பரந்த இடம். வண்டிகள் நிறுத்த அவ்வளவாக வசதி இல்லை. நாங்களும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டுச் சுற்றிப்பார்த்தோம். ‘breathtaking view’ என்பார்களே அப்படி இருந்தது அந்த மூன்று மலைகளும் அதன் அருகே இருந்த நிலப்பரப்பும்! சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். அங்கு அந்த மலைகளைப் பற்றின தகவல்களை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
சாலையோரம் சலசலக்கும் ஓடையில் இளைப்பாறிக்கொண்டிருந்த பைக்கர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் ஈஷ்வர். வண்டி ஒட்டி வந்த களைப்பு தீர, சிறிது தூரம் நடந்து சென்று வந்தோம். ‘ஜூம் ஜூம் ஜூம்’என்று பைக்கர்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்றது அழகு! மீண்டும் தொடர்ந்த எங்கள் பயணத்தில் பார்ப்பதற்கு அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரு இடம் தெரிந்தால் போதும். வண்டியை நிறுத்தி இறங்கி சிறிது தூரம் நடந்து என்று இறுதியில் ‘Loch Lomond’ என்ற அழகிய நன்னீர் ஏரியை அடைந்தோம். ஒரு சில வண்டிகளே அங்கு இருந்தது.
அந்த அமைதியில் 'ஜென்' நிலைக்குச் சென்று விட்டார் ஈஷ்வர். நான் மெதுவாக கரையோரம் நடந்தபடி ஏரியைச் சுற்றிக் கொண்டிருந்தேன். நீலவானின் பிரதிபலிப்பில் ஏரி மின்னிக் கொண்டிருந்தது. எதிரே இளைஞ கோட்டை ஒன்றும் தெரிந்தது. பயணி செல்லும் படகுகள் மிதந்தபடி நின்று கொண்டிருந்தது அழகு. இரண்டு ஏரிகள் அவ்வழியே செல்கிறது. உள்ளூர் மக்கள் வந்து செல்லும் அழகிய இடம் என்று அறிந்து கொண்டோம். இப்படி நாடு முழுவதும் ஏரிகள், குளங்கள், ஆறுகள், சுற்றிலும் கடல் என்று இயற்கையோடு ஸ்காட்லாந்து மனதை கொள்ளை கொள்கிறது. இங்கிருந்து சில மணிநேர பயணத்தில் தான் 'கிளாஸ்கோ' நகரம்.
நாங்கள் இரவு தங்க முன்பதிவு செய்திருந்த விடுதி என்று போன இடத்தில், “நீங்கள் டௌன்டவுனில் இருக்கும் விடுதியில் பதிவு செய்திருக்கிறீர்கள். அங்கு தான் செல்ல வேண்டும்” என்று கூற, நல்லவேளையாக அங்கே வண்டி நிறுத்தும் வசதிகள் இருக்கிறது என்று தெரிந்ததும் பெரும் நிம்மதி.
அறைக்குச் சென்றவுடன் பெட்டிகளைப் போட்டுவிட்டு அந்தி சாய்வதற்குள் ஊரைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினோம். பிரம்மாண்ட கல் கட்டடங்கள்! பழமையான தேவாலயங்கள். மற்ற ஸ்காட்லாந்து ஊர்களைப் போலன்றி மிகப்பெரிய நவநாகரீக நகரமாக இருந்தது. நாங்கள் மட்டுமே வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல துண்டாகத் தெரிந்தோம். மக்கள் சிநேகமாக இருந்தார்கள். வழி கேட்டால் பொறுமையாகப் பதிலளித்தார்கள். பயமில்லாமல் நடமாடலாம் என்று கூறினாலும் மதுரையின் வளர்ப்பும் அமெரிக்காவின் இருப்பும் இருட்டுவதற்குள் அறைக்குத் திரும்பிட வேண்டுமென்று ஆவல் கொண்டது மனம். வரலாற்றைப் பறைசாற்றும் அருங்காட்சியகங்கள் நிறைந்த ஊர். நீண்ட நாளின் களைப்பு ஆட்கொள்ள, விடியலில் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தூங்கச் சென்றோம்.
இனி ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ‘ராபர்ட் பர்ன்ஸ்’ எழுதிய கவிதை தான் நினைவிற்கு வரும்.
Farewell to the Highlands, farewell to the North, The birth-place of Valour, the country of Worth; Wherever I wander, wherever I rove, The hills of the Highlands for ever I love.
My heart’s in the Highlands, my heart is not here; My heart’s in the Highlands a-chasing the deer; A-chasing the wild-deer, and following the roe, My heart’s in the Highlands wherever I go.
Farewell to the mountains high covered with snow; Farewell to the straths and green valleys below; Farewell to the forests and wild-hanging woods; Farewell to the torrents and loud-pouring floods.
My heart’s in the Highlands, my heart is not here; My heart’s in the Highlands a-chasing the deer; A-chasing the wild-deer, and following the roe, My heart’s in the Highlands wherever I go.
நாங்கள் சென்ற வழித்தடத்தில் பல அழகிய இடங்கள் இருக்கிறது என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தோம். ஆவலுடன் முதலில் நாங்கள் சென்ற இடம் ‘Queen’s View’. நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே செல்லும் வழியெங்கும் வரிசையாக ஓங்கி உயர்ந்து அணிவகுத்து நின்றிருந்த மரங்களின் காட்சியே அத்தனை அழகாக இருந்தது. கலிஃபோர்னியாவில் மவுண்ட்சாஸ்தாவிற்குச் செல்லும் வழியைநினைவூட்டியது. ‘குயின்ஸ்வியூ’ இடத்தைப் பற்றின அறிமுகம் இல்லையென்பதால் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது. ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயர்மலைகளில்அமைந்துள்ள ‘குயின்ஸ்வியூ’, வருகை தரும் அனைவரின் இதயத்தையும் கவரும் ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம்.
ஸ்காட்லாந்தின் நிலப்பரப்புகளை ‘பானோராமிக்’ காட்சியாக, விவரிக்க இயலாத அழகுடன் அனைவரின் மனங்களையும் கவரும் இந்த இடத்தைப் பயணிகள் தவறவிடக்கூடாது.
‘Loch Tummel’ என்னும் நன்னீர் ஏரி , சுற்றியுள்ள மலைகள் என்று கண்கொள்ளாக் காட்சியாகப் பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை அழகு அங்கு குடிகொண்டிருக்கிறது. அங்கு வருபவர்கள் இயற்கைக் காட்சிகள் தந்த பிரமிப்புடன் அங்கிருந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்களும் சிறிது நேரம் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். மாலைச் சூரியன் கருமேகங்களின் பிடியிலிருந்து வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்தான். Loch Tummelன் மின்னும் நீர் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். வானத்தைப் பிரதிபலிக்க, பசுமையும் அமைதியும் எழிலும் சூழ்ந்த அந்த இடத்திலேயே தங்கிவிட வேண்டும் போல் இருந்தது.
ஸ்காட்லாந்து அரசி அங்கு வந்து அற்புதக் காட்சியை ரசித்துவிட்டுச் சென்றதால் “குயின்ஸ்வியூ” என்று பெயர் பெற்றிருக்கிறது. பெயர்க்காரணத்திற்கு வேறு பல கதைகளும் இருக்கிறது😃.
பல நூற்றாண்டுகளாக அரசகுடும்பத்தாரையும் சாமானியர்களையும் கவர்ந்த இடம். சிறிது நேரத்தில் அங்கே சிறு குழந்தைகளுடன் இரு குடும்பங்கள் சேர்ந்துகொண்டது. சரியான ‘ரெட்டை வால் ரெங்குடுகள்’. பாறையில் சறுக்கி விளையாடுவதும் கீழே விழுந்து புரள்வதும் என்று கலகலப்பாகஇருந்த குழந்தைகள் கொள்ளைஅழகு💖பெற்றோர்கள் கட்டியணைத்தபடி கைப்பேசியில் புகைப்படங்களை எடுப்பதில் மூழ்கியிருந்தார்கள். அந்தக் குழந்தைகளோ பாறைகளில் தாவுவதும் ஓடுவதுமாய் எனக்குத்தான் பயமாக இருந்தது. “இளங்கன்று பயமறியாது” என்பதை அவர்களிடத்தில் கண்டேன்.
மிடுக்கான பாரம்பரிய உடையில் வனக் காவலர் ஒருவருடன் இரு பயணியர் வர, பேச்சு களைகட்டியது. மலைகளில் மரங்களை வளர்த்து வெட்டி இங்கிலாந்திற்கு அனுப்புவதால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று கூறினார். அங்கிருந்து தெரியும் தீவுகளைப் பற்றியும் விரிவாகப் பேசினார். நிறைய தகவல்கள். வனக்காவலருக்கு நன்றி கூறி விட்டு மீண்டும் தொடர்ந்தது எங்கள் பயணம்.
“மலைகளில் எங்கு சென்றாலும், நாம் தேடுவதை விட நமக்கு அதிகமாகவே கிடைக்கும்.” இயற்கை ஆர்வலர் ஜான் முய்ர்-ன் கூற்று. மெய்ப்பித்துக் கொண்டே இருந்தது ஸ்காட்லாந்து.
தொடர்ந்த பயணத்தில் இப்பொழுது இருபுறமும் பரந்து விரிந்த மலைகள். நடுவே நீண்டசாலை. கலிஃபோர்னியாவின் ‘Death Valley National Park’ ஐ நினைத்துக் கொண்டோம். நிலப்பரப்பு மாறிக்கொண்டே வர, “Welcome to the Highlands” பலகை வரவேற்க, மூடுபனி தழுவிச் செல்லும் மலைமுகடுகள், மழையில் நனைந்த சாலைகள், மலையடிவாரத்தில் சீறிச் செல்லும் ரயில் என்று அழகுக்காட்சிகளுக்குக் குறைவில்லை.
ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைகாலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது. இங்கிலாந்து அரச குடும்பம் விடுமுறையில் வேட்டையாட, இயற்கையை ரசிக்க வந்து செல்லுமிடம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர்ந்த அழகுப் பயணத்தில் வண்டியைப் பல இடங்களில் நிறுத்தி இயற்கையை, மலைகளை ரசித்துப் படமெடுத்துக் கொண்டோம்.இயற்கையுடனே பயணிப்பதாலோ என்னவோ களைப்பே ஏற்படுவதில்லை. கூட்டம், போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம். இருட்டுவதற்குள் ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஒருவழியாக ‘இன்வெர்னஸ்’ நகரை வந்தடையும் பொழுது மணிஏழரை ஆகிவிட்டிருந்தது. நல்லவேளை இன்னும் இருட்டவில்லை.
நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதியில் சிறிது நேரம் ஓய்வுஎடுத்துக் கொண்டோம். நல்ல பெரிய விடுதி. அழகான ஆங்கிலத்தில் மிகவும் பணிவாக வரவேற்ற அலுவலர்கள் இனிமையாகப் பேசினார்கள். அங்கிருந்த வரவேற்பாளரிடம் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அரைமணி நேர தூரத்தில் உணவு விடுதிகளும் நகரின் மையப்பகுதியில் அழகான ஆறும் பழமையான கட்டடங்களும் இருப்பதைக் காண வாடகை வண்டியில் சென்றோம். ஈஷ்வருக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டுமே. அதுவுமில்லாமல் அவர் மட்டுமே வண்டியை ஓட்டுவதால் ‘ஸ்காட்டிஷ் விஸ்கி’யைச் சுவைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று வருத்தம்.
வாடகை வண்டியை ஓட்டி வந்தவர் ஒரு பஞ்சாபி. அட! இங்குமா? பதிமூன்றரை வருடங்களாக இங்கிலாந்திலும் கடந்த மூன்று வருடங்களாக ஸ்காட்லாந்தின் இயற்கையும் அமைதியும் தன்மையான மனிதர்களும் பிடித்துப்போய் ஸ்காட்லாந்தில் தங்கிவிட்டதாகக் கூறினார். அந்தப் பகுதியில் இருக்கும் சில இந்திய உணவகங்களையும் பரிந்துரைத்தார். தேவை என்றால் மறுநாளும் வருவதாகக் கூறி விடைபெற்றார்.
எங்கள் பயணத் திட்டத்தில் ‘இன்வெர்னஸ்’ என்ற இந்த ஊருக்கு முதலில் வருவதாக இல்லை. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று கூகிள் செய்து பார்த்தால் பழமையும்,புதுமையும் கலந்த இயற்கை எழில் சூழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்றுஅறிந்துகொண்டோம். அப்புறம் எப்படி விடமுடியும்? எங்கள் பாதையிலிருந்து சற்று விலகி வடக்கே கொஞ்சம் பயணிக்க வேண்டியிருந்தாலும் பார்த்து விடுவது என்று முடிவெடுத்துதான்அங்குச் சென்றோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை😇
ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸின் மையத்தில் அமைந்திருக்கும் இன்வெர்னஸ், செழுமையான வரலாறு, பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தைக் கொண்ட ஒருஅழகிய நகரமாக இருக்கிறது. “ஹைலேண்ட்ஸின் தலைநகரம்” என்று அழைக்கப்படும் இன்வெர்னஸ், ஹைலேண்ட் கவுன்சிலின் நிர்வாக மையமாகவும் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் அழகுக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.
ஸ்காட்லாந்தின் வடகிழக்கு கடற்கரையில் இயற்கைக் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இந்நகரத்தின் பெயர் கேலிக்மொழியில் “இன்பீர்நிஸ்”(அதாவது, ‘நெஸ் நதி’யின் முகத்துவாரம்) என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது. நெஸ் மற்றும் மோரேஃபிர்த் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கான மையமாகவும் விளங்கி வருகிறது. அயர்லாந்தைப் போலவே ஸ்காட்லாந்திலும் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடும் போர்களும் எழுச்சியும் நிகழ்ந்துள்ளன. 'ஜாகோபைட்' எழுச்சிகளின் போர்கள் முதல் சுதந்திரப் போர்கள் வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளில் இன்வெர்னஸ் முக்கிய பங்குவகித்துள்ளது.
இன்வெர்னெஸ்ஸில் உள்ள மிகவும் பிரபலமான வரலாற்றுத் தளங்களில் ஒன்று ‘இன்வெர்னஸ் கோட்டை’ ஆகும். ‘நெஸ்’ நதியை நோக்கி அமைந்துள்ள இந்தக் கோட்டை 19ஆம் நூற்றாண்டின் கட்டுமானமாக இருந்தாலும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இன்று, ‘இன்வெர்னஸ் ஷெரிஃப் நீதிமன்றமாக’ செயல்பட்டு வருகிறது. இந்தக் கோட்டையில் ‘மேக்பெத்’ கதாபாத்திரம் அரசரைக் கொல்வதாக ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகத்தில் இன்வெர்னெஸ்ஸைக் குறிப்பிட்டுள்ளார்.
நகரின் மையப் பகுதியில் ‘நெஸ்’ நதி செல்கிறது. கரையின் இருபுறமும் அழகான வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்கள் ,பார்வையாளர்களை ஈர்க்கும் விக்டோரியன் கட்டிடக் கலை, சிறு மலையின்மீது ‘இன்வெர்னஸ் கோட்டை’ என கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்றாக இணைத்து பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் எழில் மிகு நகரம். ஆற்றங்கரைகளில் அழகான கடைகள், கஃபேக்கள் மற்றும் பப்கள். நாங்கள் சென்ற வேளை மாலை நேரம் என்பதால் கற்கள் பதித்த தெருக்கள் அமைதியாக இருக்க, உணவு விடுதிகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் இசையை ரசித்துக் கொண்டே மதுபானங்களை அருந்தியபடி அமர்ந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் நாங்களும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்.
துள்ளலான இசையை தன்னுடைய வயலினில் அசாத்தியமாக இசைத்துக் கொண்டிருந்த கலைஞன் அங்கிருந்த ஆண்களையும் தன்னுடைய இசையால் வசீகரித்துக் கொண்டிருந்தார்😍.பாரம்பரிய உடையில் இருந்தவரின் வயலின் இசையுடன் கிட்டாரும் சேர்ந்து கொள்ள, கொண்டாட்டமாக இருந்தது. ரசனையுடன் இருக்கிறார்கள் மனிதர்கள்! ஐரிஷ் இசையைப் போலவே துள்ளலான இசை. கேட்பதற்கு இனிமை.
ஆசை யாரை விட்டது? ஈஷ்வருக்கும் ஸ்காட்டிஷ் விஸ்கியை சுவைக்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. விடுவாரா மனிதர்? இரவு உணவை முடித்து விட்டு அங்கிருந்த கடையில் சில பழங்களை வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்ப வாடகை வண்டிக்காகக் காத்திருந்தோம்.
அந்தக் கடை வாசலில் போதைக்கு அடிமையான பெண்ணை வயதான இன்னொரு போதை ஆசாமி ஆசை வார்த்தைகள் கூறி அழைக்க, அந்தப் பெண்ணும் அவருடன் சேர்ந்து செல்ல கிளம்புகையில் அவளுடைய நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ வேகமாக வந்து அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். போதை மருந்து ஸ்காட்லாந்தையும் விட்டு வைக்கவில்லை! அந்தப் பெண்ணை நினைத்து வருந்தியபடி விடுதி வந்து சேர்ந்தோம்.
விடுதியில் சந்தித்த நபர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் மேலும் சில விஷயங்களை அறிந்து கொண்டோம். உள்ளூர் நிகழ்வுகள் அனைத்தும் ஹைலேண்ட் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ‘கேலிக்’ மரபுகளை கொண்டாடுகின்றன. நட்புக்குப் பெயர் பெற்ற இன்வெர்னெஸ் மக்கள், பார்வையாளர்களை இருகரங்களுடன் வரவேற்கிறார்கள். மெல்லிசையும், இயற்கை அழகும், நெஸ்நதியும், பொலிவுடன் நிமிர்ந்து நிற்கும் கட்டடங்களும் மனதை நிறைக்க, நகரின் பெயரைப் போலவே அன்றைய அனுபவமும் புதுமையாகஇருந்தது.
நகரின் தெற்கே இருக்கும் ‘Loch Ness’ நதியில் ‘மான்ஸ்டர்’ ஒன்று மறைந்துள்ளதாக மர்மகதை ஒன்று அங்கே நிலவுகிறது. சரியான ‘புரூடா பார்ட்டிகள்’ போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன். படங்களில் குட்டி டைனோசர் போன்ற உருவத்தை வரைந்திருக்கிறார்கள். செல்லமாக ‘நெஸ்ஸி’ என்றும் அழைப்பார்களாம். என்னவோ போடா மாதவா😐இந்தக் கதை உனக்குத் தெரியாதா? ஸ்காட்டிஷ் மக்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர் வேறு கூற, காலையில் எழுந்தவுடன் முதலில் அங்குதான் செல்கிறோம். நெஸ்ஸியைப் பார்க்கிறோம் என்று அடுத்த நாள் பயணத்திற்கான திட்டத்தைக் குறித்துக் கொண்டோம்.
மேற்கிலும் ‘ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்’ தொடரும் என்று அப்பொழுது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆரம்பத்தில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் படத்தைப் பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர். சபாஷ். ஒரு நல்ல படத்திற்கு குத்தாட்டமும் பெரிய நடிகர் பட்டாளங்களும் தேவையில்லை. அதுவும் மலையாளப் படங்களில் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமும் இல்லை. ஏனென்றால் அவர்களிடம் நல்ல கதை இருக்கிறது.தமிழ் திரைத்துறை உலகமோ கோடிகளில் பெரிய நடிகர்களுக்கு கொட்டிக் கொடுத்து கதையில்லாமல் தலையில்லாத கோழிகள் போல திசை அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் இது நல்ல படம். போகிற போக்கில் இளைஞர்களின் அதீத ஆர்வம், குடியால் ஏற்படும் இன்னல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
ஊரில் சிறு வேலைகளைச் செய்யும் சாமானிய நண்பர்கள் குழாம் ஓணம் பண்டிகை விடுமுறையின் போது எங்குச் செல்வது என்று தீர்மானித்து கொடைக்கானல் செல்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே 'குணா' படப்பாடலான 'கண்மணி அன்போடு ,...நான் ... நான் எழுதும் கடிதம்...' என்று கேட்டவுடன் மதுரையில் 'வெற்றி' திரையரங்கத்தில் ஒரே ஆராவாரம்! எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படிப்பட்ட ரசிகர் பட்டாளங்களுடன் படத்தைப் பார்த்து! இதே திரையரங்கில் தான் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் படத்தை விட குழந்தைகள், பெரியவர்களின் எதிர்வினைகள் தான் ரசிக்கும் படி இருந்தது. இந்தப்படத்திற்கு அதிகம் இளம்பெண்களும், ஆண்களும் வந்திருந்தார்கள்.
எங்கள் அருகில் தாயுடன் வந்திருந்த சிறுவன் ஒருவன் என்ன நடக்கிறது என்று சதா அவன் அம்மாவைப் போட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான். அவரும் பொறுமையாகக் காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். மலையாளப் படம். 'சப் டைட்டில்' ஆங்கிலத்தில் வருகிறது. தமிழில் வந்திருந்தால் சிறுவர்களும் ரசித்துப் பார்த்திருப்பார்கள். திரையரங்கில் முக்கால் சதவிகிதம் நிறைந்து விட்டிருந்தது. மக்களின் மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. நல்ல படம் எந்த மொழியில் இருந்தாலும் வெளிமாநிலங்களில் கூட வெற்றி பெறுகிறது.
இப்பொழுது இந்தப் படம் இன்னும் அதிக கவனம் பெறும். திரு.ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய பாணியில் இந்தப் படத்தை விமரிசித்திருக்கிறார். மலையாளிகளை "குடிகார பொறுக்கிகள்" என்று காறி உமிழ்ந்திருக்கிறார். என்னவோ தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் குடிப்பக்கம் தலையே வைக்காதவர்கள் போல. தமிழர்களையும் இதே போல வசைபாடுவாரா? பொது இடங்களில் இந்த குடிகாரர்கள் செய்து கொண்டிருக்கும் அநாகரீக செயல்களைக் கண்டிப்பாரா? அழகான மலைப்பிரதேசங்களில் பாட்டில் குப்பைகள். அதுவும் உடைந்த நிலையில். அங்குச் செல்லும் மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில்.
இன்றைய நாளில் கொண்டாட்டம் என்றால் குடி, ஆட்டம், பிரியாணி என்றாகிவிட்டிருக்கிறது. பாவம்! வாழ்க்கை என்றால் இதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது பகுத்தறிவில்லாத சமூகம். இப்பொழுது போதை மருந்துகளும் சேர்ந்து விட்டிருக்கிறது.
'குணா' குகைக்குச் சென்ற பலரும் இந்தப்படத்தைப் பார்த்தவுடன் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்திருப்பார்கள். உணராதவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. அடிபட்டுத் தான் திருந்துவார்கள்.
கர்னாடக சங்கீத உலகில் மும்மூர்த்திகள் யார் என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆவர். இவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ தியாகராஜர். அவர் பாடிய கீர்த்தனைகள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவருடைய பிரதம சீடரும் குருவிற்கு நெருக்கமானவருமான ஸ்ரீவேங்கடரமண பாகவதர் ஆவார்.
சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த இவர், பாடிக் கொண்டே செல்லும் தன் குருவைத் தொடர்ந்து சென்று பாடல்களைக் கேட்டு ஓலைச்சுவடியில் குறித்து வைத்துச் சென்றதைத் தான் இன்று மக்கள் கற்றறிந்து பாடி மகிழ்கின்றனர். மகிழ்விக்கின்றனர். இவர் மட்டும் இல்லையென்றால் நமக்குச் சுவாமிகளின் கீர்த்தனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது. எத்தகைய பேரிழப்பிலிருந்து அவர் நம்மைக் காப்பாற்றி உள்ளார்!
அவருடைய ஜன்ம நட்சத்திரம் மூல நன்னாளான இன்று (மார்ச் 3)ல் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் அவருடைய சன்னிதியின் முன்பு வீணை இசைக்கலைஞர்கள் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி வாசித்ததைக் கேட்க அருமை. சௌராஷ்டிரா சமூகத்தின் மும்மூர்த்திகளான ஸ்ரீவேங்கடரமண பாகவதர், ஸ்ரீவெங்கடசூரி, ஸ்ரீநடனகோபால சுவாமிகள் மூவருக்கும் சிறப்புப் பூஜைகளும் அலங்காரங்கரங்களும் நடைபெற்றது.
வீணை இசைக்குழு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறது.
கோவிலில் வீணை வாசிப்பைக் கேட்க அத்தனை அருமை. தெய்வீக வாத்தியம். ராகம். இசை என்று இந்த நாள் இனிய நாளாக அமைந்து விட்டது.
சமீபத்தில் ஆசையுடன் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்திருந்த தம்பதியர் இருவர் வடமாநிலத்தில் துன்பகரமான நிகழ்வை எதிர்கொண்டுள்ளனர். கணவரை அடித்துப் போட்டு மனைவியை ஏழு பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். நேபாளுக்குச் செல்லும் வழியில் ஜார்கண்ட் மாநிலத்தில் 'டும்கா' என்னும் ஊரில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் டெண்ட் போட்டு இரவு தங்கியிருக்கிறார்கள். ஏழு இளைஞர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கு தான் அந்தப் பெண்ணுக்கு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தியா வெட்கி தலைகுனிந்து நிற்கிறது.
செய்தியைப் படித்ததும் அந்த வெளிநாட்டுப் பயணிகளுக்காக மனம் வருந்தியது. அதுவும் அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் வேறு யாருக்கும் வரக்கூடாது. வெளிநாட்டினர் அதுவும் பெண்கள் தனியாகப் பயணிப்பது அவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது. அங்கு தனியாகச் சுற்றுவது போல் இங்கும் சுற்ற ஆசைப்பட்டு வருகிறார்கள். பலருக்கும் நம் நாட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த மாதிரி தாக்குதல்களுக்கு அஞ்சுகிறார்கள். உள்ளூரில் பிறந்து வளர்ந்த நாமே பெண் குழந்தைகளைத் தனியாக அனுப்ப இன்று வரை பயந்து கொண்டு இருக்கிறோம். அப்படியிருக்க, இவர்கள் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். கொஞ்சம் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். எத்தனை ஆசையுடன் கனவுகளுடன் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்திருப்பார்கள். இனி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வடுக்களுடன் வாழ வேண்டும். பெண்கள் இந்தியாவிற்கு வரவே அச்சப்படுவார்கள்.
இந்தக் கொடிய குற்றங்களைச் செய்த கழிசடைகளை ஈவு இரக்கமின்றி தண்டிக்க வேண்டும். கொடுக்கும் தண்டனை இனி எவரும் இத்தகைய கொடிய செயலை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது. ஆனால், நமக்கு வாய்த்த கனிமொழிகள் கொடுங்கோலர்களுக்குத் துணையாக மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தையல் மெஷின் கொடுத்து வெளியில் உலவ விடுகிறார்கள். முதலில் இந்த அரசியல்வியாதிகளைத் தான் நாம் புறந்தள்ள வேண்டும். இவர்கள் தான் நாட்டுக்குப் பிடித்த கேடு.
நம்முடைய 200ரூபாய் கொத்தடிமைகள் வழக்கம் போல பாரதப் பிரதமரை தீராவிட பாணியில் இகழ்ந்து பதிவுகளைப் போட்டிருந்தார்கள். அந்த மாநிலத்தின் ஆளும்கட்சி இண்டி காங்கிரஸ் என்றவுடன் வாலைச் சுருட்டிக் கொண்டு மாற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
தவறு எவர் செய்தாலும் தவறு தான். இந்த விஷயத்தில் அரசியலைப் புகுத்த நினைத்து வழக்கம் போல் சூடு போட்டுக் கொண்டது திராவிட பைத்தியங்கள். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் பொழுது வெட்கப்படவேண்டியது ஆணினமே.
என்று பெண்கள் தனியாகப் பயமின்றி இரவில் வெளியே செல்ல முடிகிறதோ அன்று தான் உண்மையான விடுதலை. அதுவரையில் கழிசடைகளை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் பெண்கள்.
குடிக்கும் போதைக்கும் அடிமையான சமூகம் அச்சத்தைத் தருகிறது. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் போதைமருந்து கலாச்சாரம். கண்டுகொள்ளாத திராவிடக்கட்சிகள். விழித்துக் கொள்ள வேண்டியது மக்களே!
மேற்கு வங்காளத்தில் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு நடந்த அநீதியை இன்னும் ஜீரணக்கவே முடியவில்லை. மணிப்பூருக்குப் பறந்து சென்ற கனிமொழி வகையறாக்கள், ராஹுல், பிரியங்கா காந்திகள் இன்று வரையில் மௌனம் காக்கிறார்கள். இது தான் இவர்களின் உண்மையான முகம்.
இலவசத்திற்கும் டாஸ்மாக்கிற்கும் போதைக்கும் அடிமையான சமூகம் என்று தெளியுமோ?