மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு கிராமம் சந்தேஷ்காலி. அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜஹான் ஷேக். பல கோடி நியாயவிலைக்கடை விநியோக ஊழல் விசாரணைக்காக ஜனவரி 5, 2024 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜஹானின் வீட்டில் சோதனை நடத்த முயன்ற பொழுது உள்ளூர் ஷாஜகானின் ஆட்கள் அமலாக்க அதிகாரிகளை வீட்டிற்குள் நுழைவதைத் தடுத்தது மட்டுமல்லாமல் தாக்கியிமுள்ளனர். எங்கேயோ கேட்டது போல இருக்கிறதல்லவா?
ஆம். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்ததாக தற்போதைய முதல்வர் சுடாலினால் முன்பு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை செய்ய செந்தில் பாலாஜி வீட்டிற்குச் சென்ற அரசு அதிகாரிகளையும் அதிலும் ஒரு பெண் அதிகாரியை திமுக குண்டர்கள் தாக்கியது நினைவிற்கு வருகிறது தானே? மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா? எப்படியோ மத்திய அரசு அதிகாரிகள் குண்டர்களிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி சிறையிலிருந்தாலும் கரூரில் ஜோதிமணிக்காக பரிந்துரைத்தார் என்று செய்திகளில் உலா வந்ததே அது போலவே தலைமறைவாக இருந்தாலும் அங்கு நடக்கும் விஷயங்கள் ஷாஜகானின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குவதாக அவரது கூட்டாளிகள் கூறியுள்ளனர். அது வரையில் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதாவது மாநில காவல்துறைக்கு. இதுவும் செந்தில் பாலாஜி தம்பியை இன்று வரையில் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை கைகட்டி நிற்பது போலவே இருக்கிறதல்லவா? ஊழல் வழக்குத் தொடுத்த சுடாலினோ செந்தில் பாலாஜி பத்தரை மாத்துத்தங்கம் என்று வக்காலத்து வாங்குகிறார். எப்படி இருக்கிறது இவர்களின் இரட்டை வேடம்?
இச்சம்பவத்திற்குப் பிறகு ஏராளமான உள்ளூர் பெண்கள், ஷாஜஹானும் அவரது ஆட்களும் தங்கள் நிலத்தை இறால் வளர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக அபகரித்து, பல ஆண்டுகளாகச் சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷாஜகான் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் கூற முன்வந்துள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இளம்பெண்களைக் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததையும் பல நாட்கள் அவர்களைச் சிறைபிடித்து வைத்திருந்ததையும் கூறியிருக்கிறார்கள். ஷாஜகானை குற்றம் சாட்டுவது மட்டுமல்லாமல், அவரது நெருங்கிய கூட்டாளிகளும் மற்ற டிஎம்சி தலைவர்களும் உத்தம் சர்தார், ஷிபாபிரசாத் ஹஸ்ரா ஆகியோரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
கணவன், தமையன், தந்தை என்று ஆண்களால் தங்கள் பெண்களைக் காக்க முடியாமலும் குண்டர்களை எதிர்கொள்ள வழியில்லாமல் பலரும் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஷாஜஹான், ஷிபாபிரசாத் ஹஸ்ராவை உடனடியாகக் கைது செய்யக் கோரி பெண்கள் மூங்கில் குச்சிகள், துடைப்பம் ஏந்தி உள்ளூர் காவல் நிலையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் கிராம மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக அபகரித்த நிலத்தில் கட்டப்பட்ட மூன்று கோழிப்பண்ணைகளைப் போராட்டப் பெண்கள் தீ வைத்து எரித்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இவை ஹஸ்ராவுக்கு சொந்தமானது.
இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் பங்கு கொள்ள, ஆளும் கட்சிக்கு நிர்பந்தங்கள் கூடியது. பிஜேபி, சிபி(ஐஎம்), காங்கிரஸ் ஆகியவை "ஆளும் டிஎம்சி நிர்வாகம் ஷாஜகானுக்கும் அவரது ஆட்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருவதாக" குற்றம் சாட்டியது. அதே நேரத்தில் டிஎம்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஷாஜகானைத் தவறாகக் கட்டமைக்கப்பதாகக் கூறினர் வழக்கம் போல.
"அவ்வளவு நல்லவன் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும்?"
பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்துப் பேசிய மேற்கு வங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், "இந்தப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் அதிர்ச்சியைத் தருகிறது. பார்த்திருக்கக்கூடாத காட்சிகளையும் கேட்கவே கூடாத வருந்தத்தக்க பல விஷயங்களையும் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானதாகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல்கள் ஒரு சிவில் சமூகத்திற்கு அவமானம்" என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சகத்திற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், சந்தேஷ்காலியில் "ரவுடிஅமைப்புகளுடன்" கைகோர்த்து செயல்படுவதற்காக காவல் துறையைக் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விசாரிக்கச் சிறப்பு அதிரடிப் படை அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கேட்டுள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பிறகு தான் பிப்ரவரி 29 அன்று 55 நாட்கள் தலைமறைவு நாடகம் முடிந்து ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இதற்குக் காரணமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக" கூறியுள்ளார். அதுவும் ஆளுநர் சந்தேஷ்காலிக்கு சென்று அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்த நாளில் பானர்ஜியின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி மக்களிடம் இருந்து தங்களுக்கு நான்கு புகார்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், அவர்களில் யாரும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிடவில்லை என்றும் பாரிஷத் காவல்துறை கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் ஊருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஊருக்குள் செல்ல முயன்ற பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் சுகந்தா மஜும்தார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
மாநில மகளிர் ஆணையத்தின் குழு சந்தேஷ்காலிக்கு வந்து உள்ளூர் பெண்களிடம் பேசி முதல்வர் அலுவலகத்திற்கு (CMO) அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சந்தேஷ்காலி சம்பவங்கள் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் கீழ் 10 பேர் கொண்ட குழுவை மாநில நிர்வாகம் அமைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் எஸ்சி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையம் (NCSC) பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்றிருக்கிறது. குழுவின் தலைவர் அருண் ஹல்டர் தலைமையிலான குழுவினர் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபுர்பா சின்ஹா ரே, சந்தேஷ்காலியின் உள்ளூர் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பழங்குடியினரின் நிலம் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டார். ஷாஜஹான் ஷேக் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சந்தேஷ்காலி வழக்கில் நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 10 அன்று உத்தரவிட்டுள்ளது.
அதை எதிர்த்து மாநில அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் பிரமுகர் ஷாஜஹான் வழக்கில் “சில தனிநபரின் நலன்களைப் பாதுகாக்கும் மனுதாரராக மாநில அரசு ஏன் முன் வர வேண்டும்” என்று மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி அரசிடம் கேட்டுள்ளது. "மாநில அரசு முழு நடவடிக்கை எடுத்தும் மக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் உள்ளன. இது நியாயமற்றது" என்று மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கூறியுள்ளார். விவரங்கள் சேகரிக்க சில நாட்கள் அவகாசம் கேட்ட அரசு வழக்கறிஞருக்குச் சாதகமாக பெஞ்ச் விசாரணையை "விடுமுறை வரை" ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது நீதிமன்றம். ஜூலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காகக் குரல் கொடுப்போம் என்று வேஷம் போடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்பொழுது கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். அவர்களுக்கு மக்களின் நலன் முக்கியமல்ல. அரசியல் செய்வது ஒன்றே குறிக்கோள். அவர்கள் பின்னால் சென்று கோஷம் போடுபவர்களின் நிலைமை தான் பாவம். பாஜக ஆளும் 'மணிப்பூர்' என்றவுடன் கொந்தளித்த கனிமொழி, காந்தி வகையறாக்களும் திருமாவளவன் கும்பலும் இப்பொழுது வாய் பொத்தி நிற்பதன் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் 'இண்டி' கூட்டணியின் அராஜக அரசியல் விளங்கும்.
'Laapataa Ladies' என்றொரு இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. வெள்ளந்தி மனிதர்களை வைத்துப் பின்னப்பட்ட அழகான கதை. மேற்படிப்பு படிக்க ஆசைப்படும் பெண், கணவனுக்காக வாழ விரும்பும் படிக்காத பெண். இருவரும் ஓரிடத்தில் மாறி விட, தொலைந்த நாட்களில் தங்களது சுயத்தைக் கண்டடைவதை இத்தனை எளிமையாக, அழகாகச் சொல்லவும் முடியுமா?
வடமாநிலங்களில் அதுவும் போதிய பின்தங்கிய கிராமங்களில் இல்லாத இளவயது திருமணம் என்பது நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியபடி துவங்குகிறது படம். புது மனைவி மீது தீராக்காதலுடன் 'ஐ லவ் யூ' சொல்லி வெட்கப்படும் நாயகன் அனாயசமாக நடித்திருக்கிறார். அந்தச் சிறுபெண்ணும் வெள்ளந்தியாக பெண் என்பவள்திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்று வேலை செய்யவே படைக்கப்பட்டவள் போல அடுப்படி வேலைகள் அனைத்தையும் கற்று கணவன் பெயர் கூட சொல்ல வெட்கப்படுபவள். திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு கணவனுடன் ரயிலில் செல்கிறாள். அதே ரயிலில் அவர்களுடைய பெட்டியில் இன்னொரு மணமகனும் மணமகளும் இருக்கின்றனர்.
'கல்யாண மாப்பிள்ளை' என்றாலே கோட்டு சூட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. பொருந்தாத உடையை அணிந்து அதில் யார் துணி உசத்தி? வரதட்சணை எவ்வளவு? என்ன கொடுத்தார்கள் என்று கேட்பது இன்னும் பெண்களுக்கு விடியல் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் இயக்குனர் கிரண் ராவ். மாற்றார் முன்னிலையில் திருமணமான பெண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும் என்பதும் புழக்கத்தில் உள்ள வழக்கம். அதில் வரும் குழப்பத்தால் இறங்குமிடம் வந்ததும் தன் மனைவி என்று அதே பெட்டியில் பயணம் செய்த மணப்பெண்ணை இழுக்க கொண்டு இறங்கி விடுகிறான் அந்த இளைஞன்.
ஊருக்குச் சென்று ஆரத்தி எடுக்கும் பொழுது தான் தெரிகிறது அழைத்து வந்தது தன்னுடைய மனைவி அல்ல என்று. தன் மனைவியைத் தேட ஆரம்பிக்கிறான். பணத்தாசை பிடித்த உள்ளூர் காவல்நிலைய அதிகாரி வாயில் பீடாவை குதப்பிக்கொண்டே பேசி... உவ்வே... எங்களுடைய பீகார் பயணம் தான் நினைவிற்கு வந்தது. வெத்தலை போடுவதும் துப்புவதுமே முழுநேர வேலையாகச் செய்து எரிச்சலூட்டுகிறார்கள். கான்ஸ்டபிளாக வருபவர் இதற்கு முன்பு படத்திலோ நாடகத்திலோ பார்த்தாக நினைவு. இவர்கள் இருவரும் வரும் காட்சிகளின் வசனங்கள் 👌 மனைவியைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று பரிதாபமாக வந்து நிற்கும் இளைஞனைப் பார்த்து அவனிடமிருந்து பைசா தேறாது ஆனால் அவன் மனைவியாக வந்திருப்பவளிடமிருந்து கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போட்டு அவளைக் கண்காணிக்கும் காட்சிகளில் வரும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது.
யார் என்று தெரியாமலே மகன் தவறாக அழைத்து வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு அவள் கணவனைத் தேடுகிறார்கள்.மேற்படிப்பு படிக்க விரும்பும் சாதூரியமான பெண். தான் தங்கியிருந்த வீட்டில் மூத்த மருமகளின் திறமையைக் கண்டறிந்து அவளுக்கு உதவுகிறாள். திருமணமானாலே பெண்கள் தங்களுடைய ஆசைகளை மறந்து விட வேண்டும் என்பதை மாமியார் கதாபாத்திரத்தில் வருபவர் கூறும் பொழுது பல பெண்களும் அதை உணர முடியும். குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகளுக்காக வாழ்ந்து தங்களது ஆர்வத்தை, ஆசைகளைத் துறந்த பெண்கள் பலர். அதையும் அழகாகச் சுட்டிக்காட்டியது சிறப்பு.
ஆண் என்றாலே மனைவியை அடிக்கலாம். வரதட்சணையை வெட்கமின்றி கேட்டு வாங்கலாம். பெண்ணைப் பெற்றவர்களை அவமானப்படுத்தலாம். பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற அக்மார்க்தனமான அடாவடி ஆணிற்கு மனைவியாக நடித்திருந்த பெண்ணும் நடிப்பில் அசத்தியிருந்தார். பெண்ணிற்குத் திருமணம் தான் முக்கியம் அதுவும் அவளுடைய கனவுகள், ஆசைகளைக் கேட்ட பிறகும் வீட்டில் திணிக்கப்படும் வன்முறை நாடகம் என்று பெண்களின் அவதியை ஒன்று விடாமல் காட்டியுள்ளார்கள்.
கணவனைத் தொலைத்தபிறகு நடைமேடையில் அழுது கொண்டு ஊர் பெயரும் தெரியாமல் பயந்த விழிகளுடன் நடித்திருந்த பெண்ணும் அமர்க்களம். அவருக்கு உதவுபவர்கள், அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து அந்தப் பெண் கற்றுக்கொள்வது என்று காட்சிகள் அழகாக நகர்கிறது.
நடைபாதையில் கடை வைத்திருக்கும் பெண், தன் சம்பாத்தியத்தில் கணவரும், மகனும் வாழ்ந்ததால் அவர்களை விரட்டி விட்டு நிம்மதியாக இருப்பதாகக் கூறுவார். அப்பொழுது அந்த வெள்ளந்திப் பெண், தனியாக இருக்க பயமில்லையா என்று கேட்பாள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் யாரையும் அண்ட விடுவதில்லை என்று போகிற போக்கில் முகத்திலறையும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டே போவது போல காட்சிகள் மிகச்சிறப்பு.
எப்போதாவது இப்படியொரு படத்தை இந்தியிலும் கூட எடுத்து விடுகிறார்கள்.
தமிழ்த் திரையுலகம் தான் கதையும் இல்லாமல் அதிக செலவுகள் செய்து யார் யாரையோ திருப்திப்படுத்த அலங்கோலமாக படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்!
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 'Wordle' என்ற விளையாட்டை 2022ல் அறிமுகப்படுத்தி வார்த்தை விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களிடையே அது மிகவும் பிரபலமாகி வைரல் ஆனது. இந்த வருடம் 'Connections' என்றொரு புதிய விளையாட்டை அறிமுகப்படுத்தி அதுவும் பிரபலமாகி வருகிறது.
இதில் 16 வார்த்தைகள் 16 கட்டங்களில் இருக்கும். அதில் நான்கு வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்குள் அடங்கும். அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் அனைத்து வார்த்தைகளையும் கவனமாக பகுப்பாய்வு செய்து அதன் கருப்பொருளையும் கருத்தில் கொண்டு வார்த்தைகளைத் தேட வேண்டும். தவறுகளைத் திருத்திக்கொள்ள நான்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. ஒரே ஒரு முறை மட்டும் நான்கு தொடர்களையும் கண்டறிய முடிந்தது. பெரும்பாலும் ஒன்றோ இரண்டில் மாட்டிக் கொண்டு விடுகிறேன். நிறைய ஆங்கில வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் தெரிந்திருந்தால் விளையாடுவது எளிதாக இருந்தாலும் கருப்பொருள் தெரிந்து அதோடு தொடர்புபடுத்துவது தான் இந்த விளையாட்டின் மையக்கரு. விளையாடித்தான் பாருங்களேன்😎😎
தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்கள் தமிழ்நாட்டிலேயே அத்தனை இருக்கிறது! சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது தம்பி குடும்பத்தினருடன் 'ரங்கதஸ்தலம்' செல்லும் வாய்ப்பு கிட்டியது. பெங்களூரிலிருந்து 60கிமீ தொலைவில் உள்ள திப்பேனஹள்ளியில் பள்ளிகொண்ட அரங்கனின் 'ரங்கஸ்தலா கோவில்' இருக்கிறது.
நான்கரை அடியில் ஒரே சாளக்கிராம கல்லில் செய்த கன்னங்கரிய பெருமாள் வசீகரிக்கிறார். சுதந்திர தின விடுமுறை என்பதாலோ என்னவோ திவ்யமான அலங்காரம்! காண கண்கோடி வேண்டும்! ஓரளவிற்கு கூட்டமும் இருந்தது. 'சிறப்புத் தரிசனம், லொட்டு லொசுக்கு' என்று தமிழ்நாட்டுக் கோவில்களைப் போல பணத்தைப் பிடுங்கவில்லை. சுத்தமாக, பளிச்சென்று இருந்தது வளாகம். தூண்களில் செதுக்கியிருந்த சிற்பங்கள் எல்லாம் அத்தனை அழகு.
ஒருமுறை திருச்சி ஸ்ரீரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தோம். அப்பொழுது அவர்கள், ஒரே நாளில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஷிம்ஷா, ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கனை வழிபடுவது நல்லது என்று காலையில் கிளம்பி கர்நாடகாவில் இருக்கும் இரண்டு கோவில்களில் தரிசனத்தை முடித்து விட்டு அங்கே வந்திருந்தார்கள். அப்படியெல்லாம் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது!
ரங்கஸ்தலா கோவிலுக்குச் சென்று வந்த பிறகு தான் தெரிந்தது அந்த மூன்று கோவில்களுடன் நான்காவதாக ரங்கஸ்தலா கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு வந்தால் மோட்சம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அதனால் தான் ரங்கஸ்தலாவில் ‘மோக்ஷ ரங்கநாதர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் (கர்நாடகா) ஆதி ரங்கமாகவும், ஷிம்ஷாவில் (கர்நாடகா) மத்திய ரங்கமாகவும், ஸ்ரீரங்கத்தில் (தமிழ்நாடு) அந்திய ரங்கமாகவும் உள்ளது. இந்த மூன்று கோவில்களையும் ஒரே நாளில் விடியற்காலை முதல் சாயங்காலம் வரை தரிசனம் செய்வதை 'திரிரங்க தரிசனம்' என்கிறார்கள். ரங்கஸ்தலா ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவில் 'திரிரங்க' தரிசனத்தின் தொடர்ச்சியாகும்.
வசதிகள் இல்லாத பழங்காலத்தில் ஒரே நாளில் மூன்று கோவில்களுக்கும் சென்று வருவதென்பது நிச்சயம் சாத்தியப்பட்டிருக்காது. ஆனாலும் கோவில்களுக்குச் சென்று வருவதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதற்கு முன் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குள்ள தூண்கள் ஹொய்சால கட்டிடக்கலையைச் சார்ந்தவையாகவும் ரங்கஸ்தலத்தில் விஜயநகர கட்டிடக்கலையைச் சார்ந்தவையாகவும் இருக்கிறது.
பயணங்களில் நம்மை அறியாமலே சில இடங்கள் மிகவும் பிடித்து விடும். இந்தப் பயணத்தில் பார்க்கும் இடங்கள் எல்லாமே அப்படித்தான் இருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலத்திணைகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகாக பரந்து விரிந்து கிடக்கிறது. நாமே வண்டி ஓட்டிச் சுற்றிப்பார்க்கும் நாடுகளில் ‘யூகே’யும் ஒன்று. அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு நிலப்பரப்பும் எங்களை மிகவும் கவர்ந்தது. நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்திச் சுற்றிப்பார்த்துக் கொண்டே சென்றதில் பல விஷயங்களும் தெரிந்தது. பெருநகரங்களை விடுத்து உட்புற கிராமங்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே தென்பட்டனர். அமெரிக்காவைப் போல வீடுகளில் பெரிய வண்டிகள் நிறைந்து இல்லாமல் சிறிய வண்டிகள் இருந்ததும் மக்கள் போக்குவரத்திற்கு அதிகம் பேருந்துகளைப் பயன்படுத்துவதையும் பார்க்க ஆறுதலாக இருந்தது. மொத்தத்தில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் காடுகளும், நீர் நிலைகளும் பிழைத்துக் கிடக்கிறது. இப்படி பலவாறு பார்த்த விஷயங்களைப் பேசிக்கொண்டே ‘சௌத்போர்ட்’ டிலிருந்து ‘பிரிஸ்டல்’ நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.
சௌத்போர்ட்-ல் நாங்கள் தங்கியிருந்த ‘Arthur’s of churchtown’ விடுதியின் கீழே அழகான மதுக்கூடம். மாடியில் விசாலமான அறைகளுடன் தங்க வசதிகள் செய்திருந்தார்கள். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு விடுதியில் தங்கியதில் வெவ்வேறு அனுபவங்கள்! எனக்குத் தான் தெரியாத ஊரில் எங்கெங்கோ அறையைப் போட்டுத் தேடிப் போனதில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் இந்த அனாவசிய பயம் தேவையில்லை என்பதை அங்குச் சென்றவுடன் புரிந்து கொண்டேன். சாலையோர விடுதி. எதிரே துரித உணவுக்கடைகள். நல்ல வசதியாகத்தான் இருந்தது. காலையில் ஒரு பெரிய பைக்கர்ஸ் கூட்டம் பெரிய பெரிய பைக்குகளில் விடுதி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். பார்த்தவுடன் ஈஷ்வருக்கு ஒரே குஷி. அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களும் சினேகமாகப் பேசினார்கள். நான் பார்த்தவரையில் இந்த ‘பைக்கர்கள்’ பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் சக பைக்கர்களுடன் மிகவும் பாசத்துடன் இருக்கிறார்கள். உதவி என்றால் ஓடோடி வந்து கைகொடுக்கிறார்கள். ‘நீ நம் இனம்’ என்று ஒரு பாசம் இழையோடுகிறது!
அவர்களுக்கு ‘பை, பை’ சொல்லிவிட்டு, மெக்டொனால்ட்ஸில் காலை உணவை முடித்துக் கொண்டோம். அருகிலிருந்த கடையில் பழங்கள், ரொட்டிகள், நொறுக்குத்தீனிகளையும் வாங்கிக்கொண்டோம். கருமேகங்களும் பச்சைப்பசேல் மலைகளும் துணை வர, குறுகிய சாலைகளில் அன்றைய பயணம் தொடர்ந்தது. மழைக்கால மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்க, ‘வெல்ஷ்'(Welsh) கிராமப்புறப்பகுதிகள் இயற்கை அழகுடன் வசீகரிக்கிறது. அந்த மலர்களைப் பார்த்தவுடன் தன் ஆஸ்தான கவிஞனின் கவிதையை மீண்டும் கூறினார்.
வழியில் ஒரு சிறிய ஊர் தெரிய, யோசிக்காமல் ‘சடக்’கென்று ஈஷ்வர் வண்டியை உள்ளே ஓட்டிச் சென்று விட்டார்.
“நேரமானாலும் பரவாயில்லை. மெதுவாக நடந்து சுற்றிப்பார்த்து விட்டு வருவோம்.”
அவருக்கு தான் படித்த ஆங்கில நாவல்களில் வரும் கிராமங்களையும் தெருக்களையும் வீடுகளையும் பார்க்க வேண்டும் என்று ஆசை. வீடுகளில் ஆட்கள் இருக்கிறார்களா என்று சந்தேகப்படும்படியாக தெருக்கள் அமைதியாக இருந்தது! ஒரே ஒரு உணவகம். அங்கே மட்டுமே ஒரு சில மனிதர்களைப் பார்த்தோம். எத்தனை அமைதியாக, அழகாக, சுற்றிலும் மலையும் அருகே குளமும் மரங்கள், செடி, கொடிகளுடனும் அடடா! “இப்படிப்பட்ட ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” ஈஷ்வர் ஏக்கத்துடன்.
நன்றாகத் தான் இருக்கும். ஆனால், நமக்கு ‘பேசும் படம்’ போல. சரிப்பட்டு வராது😜
வழியில் ‘Stokesay Castle’ வழிகாட்டி கண்ணில்பட்டது. அழகிய மலைப்பகுதியில் அமைந்துள்ள 13ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்த கோட்டையை மிக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். உள்ளே சென்று பார்க்க இலவசம்! கசக்குமா? நுழைவாயிலில் கல்லறை! என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! ஐயோ யார் மீது நடந்து செல்கிறோமோ என்று பயந்து கொண்டே உள்ளே சென்றால் மஞ்சள் வண்ணத்தில் மரவேலைப்பாடுகளுடன் சிறிய கோட்டை! ‘Ludlow’வில் இருந்த செல்வந்தர் ஒருவரால் கட்டப்பட்டு பல போர்களில் இருந்து தப்பித்த கோட்டையின் கட்டடக்கலை ‘மெடீவல்’ காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. அங்கிருக்கும் ‘பிரதான மண்டபம்’ ஓடுகள் பதித்த மர கூரையுடன் உயர்ந்த ஜன்னல்களுடன் பிரம்மாண்டமாக இருந்தது. பிரபுக்களின் பெரிய விருந்துகள், கூட்டங்கள் அங்கு நடந்ததாகக் குறிப்பெழுதி வைத்திருக்கிறார்கள். உட்புறம் முழுவதும் உள்ள அறைகள், குறுகிய மாடிப்படிகள், இரும்புக்கதவுகளில் கைவினைத்திறனைப் பார்க்க வியப்பாக இருந்தது. கீழ்தளத்தில் மதுவைச் சேமித்து வைக்க தனியறை! பெண்கள் மாடியிலிருந்து பிரதான மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காண தனி இடம், தேவாலயம் என்று அந்தக் காலத்தில் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்! எங்களுடன் சேர்ந்து மொத்தமே ஆறேழு பேர் தான் அங்கே இருந்திருப்பார்கள்! வளைந்து வளைந்து கீழே குனிந்து நிமிர்ந்து என்று சென்று வர வேண்டியிருக்கிறது.
மழைத்தூறல் ஆரம்பிக்க, பறவைகள் கோட்டைக்குள் பதுங்க ஓடிவருவதைப் பார்க்க அழகு. ‘சிலுசிலு’ தென்றல், மழையில் நனையும் மலை, மரங்கள், கருமேகங்களை விலக்கி வெளிவர எத்தனிக்கும் சூரியன், மங்கிய மஞ்சள் வெயிலில் அசைந்தாடும் புற்கள் என்று கோட்டையிலிருந்து கண்ட காட்சிகள் அருமையாக இருந்தது! ‘Catherine Called Birdy’ என்ற ஆங்கிலப்படத்தை அங்கே எடுத்திருக்கிறார்கள் என்று அங்கே இருந்தவர்கள் கூறினார்கள். பிரபலமான கோட்டை என்றும் அறிந்து கொண்டோம்.
மழை நின்ற பிறகு அழகிய ஊரின் வழியே வீடுகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குறுகிய தெருக்கள்! ஆங்கிலப் புத்தகங்களில் வருவது போன்ற நெருக்கமான கல் வீடுகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு! பெரும்பாலும் செங்கல் பதித்த முகப்புடன் அபார்ட்மெண்ட்கள். நடுநடுவே சிறிய கடைகள். ஏதோ ஒருவித நேர்த்தி! குப்பைகளே இல்லாத உலகம்! முகத்திலறைவது போல வண்ணங்கள் அடிக்காத வீடுகள்! வார்த்தைகளில் விவரிக்க இயலாத பேரழகு கொட்டிக்கிடக்கிறது! தெருக்களில் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. ‘Ludlow’ ஊர் கொள்ளை அழகு. மழைக்கால கொண்டாட்டத்திற்காக மக்கள் ஓரிடத்தில் குழுமியிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இளைப்பாறினோம். Ludlow Castle’ மாலை வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை. பார்வையாளர் நேரம் முடிந்து விட்டிருந்தது. மிஸ் பண்ணிட்டோமே😞
ஷ்ராப்க்ஷயரில் 15ம் நூற்றாண்டு ‘Ludford Bridge’ மூன்று வளைவுகளுடன் அழகாக இருந்தது. வழியில் ‘சார்ல்ஸ் டார்வின்’ பிறந்த ‘ஷ்ரூஸ்பரி ‘ ஊரைப் பார்த்தவுடன் அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும் முன் திட்டமிடல் இல்லாததால் சாத்தியப்படவில்லை. இருட்டுவதற்குள் ‘Clifton Suspension Bridge’ பார்த்து விட வேண்டும் என்று பிரிஸ்டல் நகரை நோக்கி விரைந்தோம்.
வழியெங்கும் பண்ணைகளில் ஹாயாக புற்களை மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகள். நன்றாக ‘கொழுகொழு’வென்று இருந்தது! இரட்டை வானவில் கண்முன்னே பவனி வர, ‘Hampton Castle’ஐ ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது வானம். இதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய கோட்டை தான். மன்னராட்சியில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவற்றைச் சீராகப் பராமரித்து வருவது தான் சிறப்பு. இங்கும் பார்வையாளர் நேரம் முடிந்து விட்டிருந்தது. இத்தனை சீக்கிரமாகவா மூடுவார்கள்? ஒருவேளை கோடையில் நீண்ட நேரத்திற்குப் பார்வையாளர்களை அனுமதிப்பார்களோ என்னவோ? உள்ளே முடிந்தவரை நடந்து சுற்றிப்பார்த்தோம். திருமண நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது போல. வண்டிகள் வரிசையாக வர, பெட்டிகளுடன் பெரும்கூட்டம் உள்ளே சென்று கொண்டிருந்தது. பார்ப்பதற்குத் தமிழ் மக்கள் போல தெரிந்தாலும் ஒருவேளை இலங்கைத்தமிழர்களாக இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டோம். வெள்ளையர்கள் சிலரும் சென்று கொண்டிருந்தார்கள். அரண்மனையில் திருமணம்! பெரிய ஆளுங்க தான் போல! ம்ம்ம்ம்ம்…
மீண்டும் நீண்ட அழகான சாலைகளில் பயணம். மழை துரத்த ஆரம்பித்து விட்டது. கருமேகங்கள் கூடுவதும் கலைவதுமாய் வானில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட, நாங்களும் இப்பொழுது இங்கிலாந்தின் ‘திடீர்’ மழைக்குப் பழகியிருந்தோம். மழை நின்றவுடன் இந்த உலகமே புத்துணர்ச்சி பெற்றது போன்ற அழகுடன் சொக்கி நிற்பதைப் பார்க்க அதுவும் ஈர சாலைகள், நீர் சொட்டும் மரங்கள் மனதிற்கு இதமாக இருக்க, ‘மாலையில் யாரோ மனதோடு பேசினார் …’ ஸ்வர்ணலதா😍
ஏழரை மணிபோல ‘ஏவான்’ ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பிரிஸ்டல் நகரதிற்கு வந்து சேர்ந்து விட்டோம். கலாச்சார பன்முகத்தன்மை, வரலாற்று முக்கியத்துவம், வளமான கடல்சார் பாரம்பரியத்திலிருந்து பரபரப்பான நகர வாழ்க்கை என்று பிரபலமாக இருக்கிறது இந்நகரம். இதன் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றான ‘கிளிஃப்டன் தொங்கு பாலம்’, நகரின் பொறியியல் திறமைக்குச் சான்றாக நிற்கிறது. ‘இஸம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்’ வடிவமைத்து 1864ல் கட்டி முடிக்கப்பட்ட கம்பீரமான பாலம் இரண்டு கற்கோபுரங்களுக்கு இடையே தடிமனான இரும்புச் சங்கிலிகளால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ளது. ஏவான் ஆற்றின் குறுக்கே பாலத்தின் மீது கடந்து செல்லும் பொழுது பயம் வரத்தானே செய்யும்? உண்மையாகவே ‘Engineering marvel’ தான்.
கடந்து செல்லும் வண்டிகள் கப்பம் கட்டிவிட்டுத் தான் நகர முடியும். வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு ஆற்றையும் கரையோரத்தில் இருந்த கோட்டை, மதுபானவிடுதிகளையும் அங்கிருந்து வந்த ஜாஸ் இசையையும் கேட்டுக் கொண்டிருந்தோம். மாலைச்சூரியன் இரவுப்போர்வைக்குள் நுழைய காத்திருந்தான். அதற்குப் பிறகு தான் பாலம் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும் என்றார்கள். பாலத்தைச் சுற்றி நடந்து செல்ல பாதை இருக்கிறது. நடந்து அருகிலிருந்த பூங்காவிற்கும் சென்றோம். சூரியன் அஸ்தமனமாக, பாலத்தில் விளக்குகள் போடப்பட்டு ஜொலித்தது. பிரிஸ்டல் நகரின் சிறிய தெருக்களையும் அழகிய கட்டடங்களையும் வரிசையாக நிறுத்த வைக்கப்பட்டிருந்த சிறிய வண்டிகளையும் அமைதியான தெருக்களையும் கடந்து,
நாங்கள் முன்பதிவு செய்திருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து பெட்டிகளை எடுத்துச் சென்றார்கள். நுழையும் பொழுது ஒரு குட்டி ‘ஸ்னாக்’ என்ன? வரவேற்பு எல்லாம் பலமாக…ம்ம்ம்ம்ம். கொடுக்கிற பணத்துக்கு நல்ல மரியாதை தான். வெளியே திருமண நிகழ்ச்சி பார்ட்டி ஒன்று படுஜோராக நடந்து கொண்டிருந்தது. அருமையான இடத்தில் இருந்த விடுதியில் காலை உணவின் விலையைக் கேட்டால்😮
சௌத்போர்ட்டிலிருந்து பிரிஸ்டல் வந்து சேர மூன்றரை மணிநேரம் தான் என்றாலும் வழியில் ஏகப்பட்ட மண்டகப்படிகள் ஏறி இறங்கியதில் ஒருநாள் சென்றதே தெரியவில்லை! நாளைய பயணம் முற்றிலும் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆவலுடன் உறங்கச் சென்றோம்.
மறுநாள் காலையில் ‘சாவகாசமாக எழுந்திருந்து பாத்’ நகருக்கு கிளம்பினோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து முக்கால் மணி நேரப்பயணம் மட்டுமே. சிறு ஊர்களின் வழியே சென்றதால் பல இடங்களில் எதிரே வரும் வண்டிகளுக்காக காத்திருந்து வழி விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அத்தனை குறுகிய சாலைகள். வீடுகளின் வெளிசுற்றுச்சுவருக்குப் பதிலாக நெருக்கமாகச் செடிகளை வளர்த்து அழகாக வெட்டியிருந்தார்கள். சில வீடுகளில் அயர்லாந்தைப் போல கற்களாலேயே சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்கள்.எங்கே கார் அவற்றை உரசிக்கொண்டு சென்று விடுமோ என்ற அளவுக்குப் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் கண்களை இறுக மூடிக்கொண்டேன். ‘பாத்’ நகரை நெருங்கும் பொழுது தெரிந்த வீடுகள் எல்லாம் குட்டியாக அழகாக இருந்தது. நெருக்கமாக பெரிய அடுக்குமாடி வீடுகள். கட்டணம் கட்டி வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி பார்க்க வேண்டிய இடங்களுக்கு கால்நடையாகச் சென்று விடலாம் என்று திட்டம். பார்க்கிங் கிடைப்பது தான் கடினமாக இருந்தது. கோடைகாலத்தில், விடுமுறை நாட்களில் இதுதான் பிரச்சினையாக இருக்கும் போல! ரயில், பேருந்து வசதிகள் இருப்பதால் பெரும்பாலான மக்கள் அதில் பயணிக்கின்றனர்.
சரியாக மதிய நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். அது ஒரு தனி உலகம் போல மாறுபட்ட கட்டடங்களுடன் மிக மிக அழகாக இருந்தது. உள்ளே பல இடங்களில் வண்டிகள் செல்ல முடியாது. எங்குப் பார்த்தாலும் உணவு, உடை, விதவிதமான பொருட்களை விற்கும் கடைகள்.ஏதோ கோட்டைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு.
ரோமானியர்களின் நகரமாக இருந்து பல வருடங்கள் புறக்கணிக்கப்பட்ட நகரம் இன்று இங்கிலாந்தின் அழகிய நகரங்களில் ஒன்றாகி உலகெங்கிலும் இருந்து பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. அதன் அழகான ஹனிஸ்டோன் ஜார்ஜிய கட்டிடக்கலையும் புகழ்பெற்ற ரோமானிய குளியலும் இங்கு மிகவும் பிரபலம். இயற்கையான வெப்ப நீரூற்றுகளின் மருத்துவ குணங்களை அறிந்த ரோமானியர்கள் கிபி 70ல் இங்கே பல குளியல் இல்லங்களை நிறுவி ‘ஸ்பா'(Spa) நகரமாக உருவாக்கியுள்ளனர். செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் வந்து சென்று கொண்டிருந்த இடம், 18 ஆம் நூற்றாண்டில் ‘ஜான் வூட் தி எல்டர்’, ‘ஜான் வூட் தி யங்கர்’ கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பல நேர்த்தியான கட்டிடங்கள், தெருக்கள், பொது இடங்களால் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலையையும் அங்கீகரித்து உலக பாரம்பரிய தளமாக ‘யுனெஸ்கோ’ பட்டியலிட்டுள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும் ரோமன் குளியல், ராயல் கிரசண்ட், பாத் ஆபி, ஜேன் ஆஸ்டன் மையம் குறிப்பிடத்தக்கதாகும். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமானிய குளியல் மூலம் ‘பாத்’ நகரம் அதன் பெயரைப் பெற்றுள்ளது. நகரத்தின் அசல் பெயர் “அக்வே சுலிஸ்”.லத்தீன் மொழியில் “சுலிஸின் நீர்”. சுலிஸ் என்பது வெப்ப நீரூற்றுகளின் செல்டிக் தெய்வத்தின் பெயர். கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் பாத்திற்கு வந்த ரோமானிய குடியேற்றவாசிகள் அவளைத் தங்கள் சொந்த தெய்வமான மினெர்வாவுடன் அடையாளப்படுத்திக் கொண்டனர். இரு பெண் தெய்வங்களையும் போற்றும் வகையில் இந்த நகரத்திற்கு “அக்வே சுலிஸ் மினெர்வா” என்று பெயரிட்டுள்ளனர்.
இங்கிருக்கும் இயற்கை வெந்நீர் ஊற்றுகளை ஆங்கிலேயர்கள் “பாதன்” என்று அழைத்து காலப்போக்கில், ‘பாத்’ என்று பெயர் உருமாறியிருக்கிறது. ரோமானியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு ஆங்கிலோ-சாக்ஸன்ஸ் வசம் சென்ற நகரம், பின் வைகிங்ஸ் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேய மன்னர்கள் வசம் வந்துள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இழந்தது போக, எஞ்சியவற்றை மீட்டெடுத்து வைத்திருக்கிறார்கள். இன்றும், ‘பாத்’துக்கு வருபவர்கள், ரோமானிய குளியல் பகுதிகளையும், ரோமானிய கோவில், கோட்டை, நகரச் சுவர்களைக் காண முடிகிறது. முறையாக ஆவணப்படுத்தி பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒலி,ஒளிக்காட்சிகளாக வழங்கிவருவது சிறப்பு.
விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு அத்தனை கூட்டம். விடுமுறையில் கேட்கவா வேண்டும்? பல நாடுகளில் இருந்து பழமொழி பேசும் பலவிதமான மனிதர்கள்! பெண்கள் அழகாக உடைகளை அணிந்து ஹாலிவுட் தோற்றுப் போகும் அளவிற்கு மேக்கப் போட்டுக் கொண்டு… அப்படியே எதையாவது வாங்கி கொறித்துக் கொண்டே அவர்களை வேடிக்கை பார்க்கலாம் போல. சிறிது நேரம் அதையும் செய்து கொண்டிருந்தோம். அது வேறுலகம் தான்!
‘ரோமன் பாத்ஸ் ஆர்ச்வே’ என்று அழைக்கப்படும் ‘ஆர்ச்வே’, ‘பாத்’தின் மையத்தில் உள்ள யார்க் தெரு முழுவதும் பரவியுள்ளது. ஆர்ச்வேயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக அருகிலுள்ள ஸ்பாவிற்கு சூடான நீரை எடுத்துச் செல்ல 1889 இல் கட்டியுள்ளார்கள்! ‘ரோமன் பாத்’ கட்டடத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லும் படங்களும் ஆடியோக்களும் இருப்பதால் அறிந்து கொள்ள எளிதாக இருந்தது. அந்தக்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும் விதமாக ரோமானிய உடையணிந்தவர்கள் நாடகமாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே ரோமானிய அரசர்கள், தளபதிகளின் சிலைகளை வரிசையாக வைத்திருந்தார்கள். அங்கே நின்று விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டு படங்கள் எடுக்க கூட்டம்!பார்ப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ‘ரோமன் பாத்’ கட்டத்தைச் சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள். பணம் கட்டி செயற்கை ‘ரோமன் பாத்’தில் ஆனந்தக் குளியல் போடலாம். நம் நாட்டில் மூலிகைக்குளியல் போல 🙂
நகரின் நடுவே இருந்த காஃபி கடையில் வேண்டியதைச் சொல்லிவிட்டு நடைபாதையில் போட்டு வைத்திருந்த இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். நடந்து நடந்து கால்கள் சோர்வுற்றிருந்தன. அருகிலிருந்த ஸ்டைலிஷ் உள்ளூர்வாசி அம்மணி பேச்சுக்கொடுத்தார். அப்பொழுது தான் ‘ராயல் கிரசண்ட்’, ‘ஜேன் ஆஸ்டன் மையம்’, ஜேன் ஆஸ்டன் வாழ்ந்த வீடு மூன்றும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பக்கம் என்று தெரிந்து கொண்டோம். ஓய்வுபெற்ற பெண்மணி. ‘பாத்’ நகரில் பொழுதுபோக்க எங்காவது உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாலே போதும். வாசிப்பு பழக்கம் உள்ளவர் போல. ஆங்கில இலக்கியங்களைப் பற்றிப் பேசினார். எங்களை பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார். அந்த வயதில் உற்சாகமாக இருப்பவர்களைப் பார்த்தால் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது!
ஜேன் ஆஸ்டனின் பரம விசிறியான ஈஷ்வருக்கு ஒரே குஷி. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்க வேண்டும், மையத்திற்கும் செல்ல வேண்டும் என்று பரபரத்தார். இந்த ‘ஜேன் ஆஸ்டன்’ படுத்துற பாடு இருக்கே! ஐடியா கொடுத்த பெண்மணிக்கு நன்றி கூறி விட்டு ஏற்றமாக இருந்த தெருவில் ஜேன் ஆஸ்டன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து விட்டோம். தற்பொழுது பல் மருத்துவர் ஒருவர் அங்குத் தங்கி இருக்கிறார். ‘ஜேன் ஆஸ்டன்’ மைய நுழைவாயிலில் அவரைப் போன்ற ஒரு உருவச்சிலையை வைத்திருந்தார்கள். நின்று படமெடுத்துக் கொண்டார் ஈஷ்வர்! உள்ளே அவர் எழுதிய புத்தகங்கள், பரிசுப்பொருட்கள், அவரைப் பற்றின குறிப்புகள் என்று ஏராளமான விஷயங்கள். கடையில் வேலை செய்யும் பெண்களும் அவருடைய கதாபாத்திரங்களைப் போல உடையணிந்து கொண்டிருந்தார்கள். அழகிகள்!
இனிமையாகப் பேசுகிறார்கள். ‘Persuasion’ and ‘Northanger Abbey’ இரண்டிலும் பாத் நகரைத் தொடர்புபடுத்தியிருப்பார் என்று ஈஷ்வருக்கு அப்பொழுது தான் காரணம் புரிந்தது. வருடம் ஒரு முறை நடக்கும் ‘ஜேன் ஆஸ்டன் திருவிழா’வில் அவருடைய நாவலில் வரும் காதாப்பாத்திரங்களைப் போல உடையணிந்து ‘பாத்’ தெருக்களில் உலாவருவதைப் பார்க்க அவருடைய விசிறிகள் உலகெங்கிலும் இருந்து இந்நகரத்திற்கு வருகிறார்கள்! ஆகா! நினைத்தாலே இனிக்கிறதே!
அவருடைய மையத்திலிருந்து ஏற்றத்தில் நடந்து போனால் பிரபலமான ‘ராயல் கிரசண்ட்’ பிரமிக்க வைக்கிறது! ஒரே மாதிரி 30 மாடி வீடுகளை நெருக்கமாகக் கட்டி பிறை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். இதில் 114 தூண்கள் இருமாடி உயரத்தில் இருப்பது கவர்கிறது. ஜார்ஜிய கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதால் இதைக்காண மக்கள் வருகிறார்கள். நடுவே உயர்ந்த மரங்களை வைத்திருக்கிறார்கள். நாங்களும் ஆசை தீர, படங்கள், காணொளிகளை எடுத்துக் கொண்டோம்.
மீண்டும் வந்த வழியே இறங்கி தெருக்களில் சுற்றி ‘ரோமன் பாத்’ அருகே மீண்டும் வந்தோம்.
அப்பொழுது தான் ‘மதிய தேநீர் சடங்கை’ தவற விட்டுவிட்டோமே என்று ஈஷ்வருக்கு சின்ன வருத்தம். ஆங்கில நாவலில் வரும் காட்சியைப் போல ஒரு மாயத்தை ஏற்படுத்துவதற்கு மெனக்கெடுகிறார்கள். அதற்கு கொள்ளை காசு கொடுத்து வாயில் வைக்க முடியாத டீயை அலங்கரிக்கப்பட்ட மேஜைகள், இருக்கைகள், டீ தீர தீர கோப்பையை நிரப்பும் பணியாட்கள், தேநீருடன் சுவைக்க வகைவகையான இங்கிலிஷ் பிஸ்க்கோத்துகள், கூடவே இசை என்று பார்க்க, கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் வரிசையில் நிற்க வேண்டும். கட்டணம் வேறு! கேட்டால் வருடம் முழுவதும் தேநீர் குடிக்க பாக்கெட்டுகள் வாங்கி விடலாம் அவ்வளவு விலை! ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும் முயற்சி செய்து இருக்கலாம் என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார் மனுஷன்! மகளோ, லண்டனில் உயர்தர விடுதியில் தோழிகளுடன் அதே மாதிரி ‘டீ சடங்கு’ என்று பணம் கட்டி சென்று வந்த படத்தை அனுப்பி இருந்தாள். முடிந்தால் அங்கே போகலாம் என்று சமாதானம் கூறி அங்கிருந்து நகர்ந்தோம்.
வெளியில் ‘கிடார்’ வாசித்துக் கொண்டிருந்த இளைஞன் கடந்து சென்று கொண்டிருந்தவர்களை நிறுத்திக் கேட்க வைத்தான். குழந்தை ஒன்று அழகாக நடனம் ஆடி இளைஞனை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள். பியரும் திராட்சை ரசமும் அருந்திக் கொண்டே மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ரசித்துக்கேட்டு இளைஞனுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தோம். அந்த இடத்திலிருந்த கடைகளில் சில பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டேன்.
தெருக்களில் மேலும் கீழும் நடந்து கிங்ஸ் சர்க்கஸ், புல்ட்னி பாலம் பார்த்து முடித்து வண்டி நிற்கும் இடத்திற்கு வருவதற்குள் களைத்துப் போயிருந்தோம். இந்திய இளைஞர்கள் வைத்திருந்த கடைக்குச் சென்று மசாலா டீ, ‘சாட்’ ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம் காத்திருந்தோம் அத்தனை நேரம். சர்வீஸ் படுமோசம். வாடிக்கையாளர்களிடம் பேசக்கூடத் தெரியவில்லை. இதே மற்ற கடைகள் என்றால் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பார்கள். இது வேண்டுமா அது வேண்டுமா என்று இனிக்க இனிக்க பேசி சரிக்கட்டுவார்கள். இந்த முசுடர்கள் எப்படித்தான் வியாபாரம் செய்கிறார்களோ என்றிருந்தது. சாட் நன்றாகவே இல்லை. டீ ஓகே ராகம் தான். இன்றைய நல்ல அனுபவத்தை இவர்களை நினைத்துக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கிளம்பி வந்தோம்.
நாள் முழுவதும் நடக்கிறோம் பேர்வழி என்று வழியில் கண்டதையெல்லாம் தின்று கொண்டிருந்தோம். சந்தையில் பழங்கள் அத்தனை பிரெஷ்ஷாக இருந்தது. அதையும் விடவில்லை. வழியில் பசித்தால் எங்காவது நிறுத்திக் கொள்ளலாம். இரண்டரை மணிநேர பயணத்தில் லண்டன் போய் சேர்ந்து விடுவோம். அங்குச் சென்று கூட சாப்பிடலாம்” என்று மீண்டும் ஒரு நீண்ட சாலைப் பயணத்திற்குத் தயாரானோம்.
ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான ‘கிளாஸ்கோ’, வரலாறு, கலாச்சாரம், கலை ஆகியவற்றின் கலவையுடன் அதன் பரபரப்பான தெருக்களுக்குச் செல்லும் அனைவரையும் கவர்கிறது.
நகருக்குள் நுழைந்தவுடன் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது அங்கிருக்கும் பிரம்மாண்ட கட்டடங்கள் தான்! வரிசையாக இருக்கும் விக்டோரியன் மற்றும் எட்வர்டியன் கட்டிடங்கள் அந்நகரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. பார்ப்பதற்கு நிறைய அருங்காட்சியகங்கள் இருந்தாலும் ஜார்ஜ் சதுக்கத்திற்கும் பழமையான தேவாலயத்திற்கும் மட்டுமே செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். சிணுங்கலுடன் மழைத்தூறல் அன்றைய விடியலைத் துவக்க, காலை உணவை முடித்துக் கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த விடுதியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண்கள் குழுவினர் தத்தம் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுச் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே வண்டியில் எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்.
கிளம்பிய ஐந்தாறு நிமிடத்தில் ஒரு முச்சந்திப்பில் ‘படா’ரென்று சத்தம். வண்டிக்குள் மேக்கப் போட்டுக் கொண்டிருந்த எனக்கு என்ன நடந்ததென்று புரிய சில நிமிடங்கள் ஆனது😢 ஈஷ்வர் வலப்பக்கம் வண்டியைத் திருப்ப, இடப்பக்கத்திலிருந்து வந்த ஒரு வண்டி நான் அமர்ந்திருந்த பக்கம் மோதியிருக்கிறது. நல்ல வேளை! யாருக்கும் அடிபடவில்லை. வண்டியின் இடப்பக்கம் நல்ல அடி வாங்கியிருந்தது. வந்து இடித்த வண்டியும் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தது! வண்டியை ஓரங்கட்டி காவல்துறையினர் வரும் வரை காத்திருந்தோம். ஈஷ்வருக்குத் தான் ஒரே சங்கடமாகி விட்டது. யார் ஓட்டினாலும் விபத்து நடக்க வேண்டும் என்றால் நடந்து தான் தீரும் என்று அவரைச் சமாதானப்படுத்துவதே பெரும்பாடாயிற்று எனக்கு😨
வெளிநாட்டில் முதன்முறையாக நடந்த விபத்து. பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றம் கொண்ட ஆண், பெண் காவலர்கள் வந்து எப்படி நடந்தது என்று விசாரித்தனர். அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் ‘யுனைடெட் கிங்டம்’ல் வண்டி ஓட்டும் பொழுது வரும் சில குழப்பங்கள் தவிர்க்க முடியாதவை. ஏற்கெனவே அயர்லாந்தில் ஒட்டிய அனுபவம் இருந்தாலும் மழை, முச்சந்திப்பு என்று ஈஷ்வர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார் போலிருக்கிறது. “பயப்படாதீர்கள்! இந்த மாதிரி விபத்துகள் இங்கே நடப்பது சாதாரணமான ஒன்று. உங்கள் மீது தவறில்லை.” என்று காவல்துறையினர் எங்களைச் சமாதானப்படுத்தினர். மிகவும் அன்புடன் நடந்து கொண்டார்கள். வெளிநாடு என்பதால் ஃபைன் போடவில்லை. ஊர், காப்பீடு விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டனர். இடித்த வாடகைக்கார் வண்டிக்காரரோ தன் மீது எந்த தவறுமில்லை என்று சொன்னாலும் முச்சந்திப்பில் வேகமாக வந்ததால் தான் அத்தனை பெரிய அடி வண்டிக்கு ஏற்பட்டது. உடனே அவருடைய சங்கத்து ஆட்களைக் கூப்பிட்டு தன் மீது தவறில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருந்தார். பாவம்! அவருடைய வண்டி இடிபட்டு விட்டதே என்று வருத்தமாக இருந்தது. நாங்களும் அவருடைய தகவல்களை வாங்கிக் கொண்டு வண்டிகளைப் படமெடுத்து லண்டனில் இருக்கும் ‘ஈரோப்கார்’ அலுவலகத்திற்குத் தெரிவித்தோம்.
அவர்களும் மாற்று வண்டி தேவைப்படுமா என்று கேட்டார்கள். இல்லையென்றவுடன் லண்டனில் வரும் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று விபத்துகளைக் கவனித்துக் கொள்ளும் அலுவலக தொலைபேசி எண்ணைக் கொடுத்துப் பேசுமாறு கூறிவிட்டார்கள். நல்ல வேளை! நாங்கள் வைத்திருந்த கிரெடிட் கார்டில் காப்பீடு இருந்ததால் தப்பித்தோம். வெளிநாட்டில் வண்டி ஒட்டிப் பயணம் செல்லும் பொழுது இந்த காப்பீடு தகவல்களை அறிந்து கொண்டு செல்லுதல் நல்லது. ஈஷ்வரை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியிலேயே இருந்தார். என்ன? எனக்குத் தான் அருகே வண்டிகள் வரும்போதெல்லாம் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது. இன்னும் கூட அந்த பயம் இருக்கிறது😓. நான் ஓட்டினால் மட்டுமே பயம் வருவதில்லை😔 ம்ம்ம்ம்ம்…
அங்கிருந்து கிளாஸ்கோவின் பரபரப்பான தெருக்களுக்கு மத்தியில் பெருமையுடன் நிற்கும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கிளாஸ்கோ கதீட்ரல்’க்கு வந்து சேர்ந்தோம். ‘ஹை கிர்க் ஆஃப் கிளாஸ்கோ’ அல்லது ‘செயின்ட் முங்கோஸ் கதீட்ரல்’ என்றும் இந்த தேவாலயம் அழைக்கப்படுகிறது. கிளாஸ்கோவின் துறவியான செயின்ட் முங்கோ 6ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை இப்பகுதிக்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவர். அதனால் இந்த தேவாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டிடக்கலை, ஸ்காட்டிஷ் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பாவின் புராதன தேவாலயங்களின் கட்டடக்கலையும் உள்ளே இருக்கும் இசைக்கருவிகளும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இருக்கும். இந்த தேவாலயமும் உயர்ந்த கோபுரங்களுடனும் வண்ணங்களுடன் கூடிய கண்ணாடி ஜன்னல்களுடனும் வளைவு அமைப்புகளுடன் கவர்ந்தது. அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் தேவாலயத்தைப் பற்றின தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். கதீட்ரலின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் (Gothic) ‘காதிக்’ கட்டிடக்கலை ஆகும். இது மெடீவல் காலத்தின் ஆடம்பரத்தையும் கைவினைத்திறனையும் பிரதிபலிக்கிறது. பிரம்மாண்டமான கட்டிடத்தைக் கட்டிய கைவினைஞர்களின் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாக கம்பீரமான கருங்கல், நுணுக்கமான கல் வேலைப்பாடுகள் மற்றும் உயரமான வளைவுகள் கொண்ட தேவாலயம் கிளாஸ்கோவின் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு வழிபாடுகளும் நடக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான தேவாலயமாக விளங்குகிறது. பலரும் அங்கு அமைதியாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து நாங்கள் பார்க்க விரும்பிய இடம் ‘ஜார்ஜ் சதுக்கம்’. கம்பீரமான விக்டோரியா கால கட்டிடங்களால் சூழப்பட்ட ஜார்ஜ் சதுக்கம் பல்வேறு சின்னங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் பக்கவாட்டில், கிளாஸ்கோவின் கடந்த காலத்தைச் சேர்ந்த ‘சர் வால்டர் ஸ்காட்’, ‘ராபர்ட் பர்ன்ஸ்’ மற்றும் ‘ஜேம்ஸ் வாட்’ உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள், நகரத்தின் வளமான இலக்கிய, கலை மற்றும் அறிவியல் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இருந்தது. அப்படித்தான் நாட்டிற்குப் பெருமை சேர்த்த மனிதர்களைக் கொண்டாட வேண்டும். இதெல்லாம் திராவிட மாடலில் வராதோ😠 அந்த மழையிலும் கணிசமான பார்வையாளர்கள் அங்கு குவிந்திருந்தார்கள். காற்றோட்டமான இடத்தில் புல்தரையில் அமர்ந்து சூழலை ஏகாந்தமாக அனுபவிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். கோடைகாலத்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்!
கருமேகங்கள் துணை வர மீண்டும் தொடர்ந்தது சாலைப் பயணம். மழைத்தூறலில் பசுமை போர்த்திய மலைகள் நெஞ்சை அள்ள, ஒருமணி நேரத்தில் மழை நின்று நீல வானம் பளிச்சிட்டது. நாங்கள் செல்ல வேண்டிய ‘Gretna Green ‘ என்னும் காதல் கோட்டைக்கு வந்து சேர்ந்தோம். பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியங்களில் மூழ்கியிருக்கும் ஒரு வினோதமான கிராமம் இது. சமூக விதிமுறைகளை மீறி எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகத் திருமணத்தில் ஒன்றுபட விரும்பிய காதலர்களுக்கு நீண்ட காலமாக ஒரு சரணாலயமாக இருந்திருக்கிறது.
‘கிரெட்னா கிரீன்’ என்பது ஸ்காட்டிஷ் எல்லையில் உள்ள ஒரு கிராமமாகும். 1754ல் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான திருமணச் சட்டத்தைத் தொடர்ந்து இது இளம் காதலர்களுக்கான புகலிடமாக மாறியது. காதலர்கள் 21 வயதிற்குட்பட்டவராக இருந்தால், பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எல்லைக்கு அப்பால், ஸ்காட்லாந்து அதிக தாராளவாத திருமணச் சட்டங்களைக் கொண்டிருந்தது அவர்களுக்கு வசதியாயிற்று. பெற்றோரின் அனுமதி கிடைக்காதவர்கள் இந்த சட்ட முரண்பாட்டை மீற , ஸ்காட்லாந்தின் ‘கிரெட்னா க்ரீனில்’ அடைக்கலம் தேடி திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இங்கிலாந்து காதலர்களை இணைத்த ஊர் என்பதால் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.
கிரெட்னா க்ரீனில் உள்ள புகழ்பெற்ற ‘பிளாக்ஸ்மித் ஷாப்’ ரகசிய திருமணங்களின் மையப் புள்ளியாக விளங்கியது என்ற கதை உலவுகிறது. அங்கிருந்த கொல்லன், மதகுருவாக, ஸ்காட்டிஷ் சட்டத்தின் கீழ் திருமணங்களை நடத்தி உலோகத்தை மட்டுமல்ல, சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய அன்பின் பிணைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இன்றும் உருவாக்குகிறார்.
பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் ‘கிரெட்னா கிரீன்’ ஒரு தனித்துவமான, மறக்கமுடியாத திருமண அனுபவத்தை விரும்பும் காதலர்களுக்கான முதன்மையான இடமாகத் தொடர்கிறது. நாங்கள் சென்றிருந்த பொழுது பல காதலர்கள் தங்கள் திருமண வைபவத்தைத் தனியாகவும் குடும்பங்களுடனும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். காதலுக்கு வயது ஏது😍
கிரெட்னா க்ரீனுக்கு ஓடிப்போகும் பாரம்பரியம் எப்போதும் போல் வசீகரமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள தம்பதிகள் அதன் காதல் வசீகரத்திற்கு ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு இன்றும் அங்கு நடைபெறும் திருமணங்களே சாட்சி. இருவரின் அந்தரங்க விழாவாக இருந்தாலும் சரி அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடனான பிரமாண்டமான கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, கிரெட்னா கிரீன் ஒவ்வொரு ஜோடியின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு திருமண ‘பேக்கேஜ்களை’ வழங்குகிறது. பாரம்பரியமான ஸ்காட்டிஷ் திருமணங்கள் முதல் நவீன கொண்டாட்டங்கள் வரை அங்கு நடத்தப்படுகிறது. எல்லாம் காசு…பணம்…துட்டு…மணி…மணி. காதலுக்கு அத்தனை ஈர்ப்பு!
கண்டிப்பான சட்டங்கள், சமூக விதிமுறைகளைக் காதலர்கள் மீறிய வரலாற்றுச் சான்றாக ‘கிரெட்னா கிரீன்’ இன்றளவும் பார்வையாளர்களைக் கவருகிறது. காதலைப் ‘பூட்டி பூட்டி’ வைத்து விட்டுச் சென்றிருந்தார்கள்! வேடிக்கை மனிதர்கள்!
இதைத்தவிர, அதன் சுற்றுச்சூழலின் அழகு வசீகரிக்கிறது. அழகிய வினோதமான குடிசை வீடுகள் உள்ள கிராமத்துத் தெருக்கள், 12 ஆம் நூற்றாண்டின் பழைய பாரிஷ் தேவாலயத்தின் இடிபாடுகளை அழகாகப் பராமரித்து வருகிறார்கள்.
ஆங்கில இலக்கியத்திலும் ‘கிரெட்னா கிரீன்’ இடம் பிடித்துள்ளது.பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டனின் “ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்” நாவலில் வரும் லிடியா பென்னட் கதாபாத்திரம் விக்ஹாமுடன் ஓடிப்போய் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்வது இங்கு தான். ஜேன் ஆஸ்டன் நாவலில் வரும் காதல் வசனங்களை அங்கே மேற்கோள் காட்டியிருந்தது சிறப்பு.
நாங்களும் ‘காதல் கோட்டை’யில் விதவிதமாக படங்களை எடுத்துக் கொண்டோம்😇 ‘Courtship Maze’ என்ற இடத்தில் உள்ளே சென்று சிறிது நேரம் தொலைந்து போகலாம். தொலைந்தும் போனோம். ஆசை தீர ஸ்காட்லாந்தைப் பார்த்து விட்டோம்.
பை,பை ஸ்காட்லாண்ட்😍
இரண்டு மைல் தொலைவில் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைந்து விட்டோம். இருவழிச்சாலையின் இருபுறமும் மரங்கள் வேலிகளாக நிற்க, மேடும் பள்ளமுமாய் நீண்ட சாலைகள்! திடீர் திடீரென்று மஞ்சள் நிறப்பூக்களுடன் மலைப்பகுதிகள், பண்ணைகள் காட்சி தந்தது அழகு! திருத்தமாக வெட்டிய நெருக்கமான செடிகளைக் கொண்டு வேலிகள் அமைத்திருந்தார்கள். சமவெளியிலும் மலையிலுமாய் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். தொலைவில் பச்சை ஆடை உடுத்திய மலைராணி! வேல்ஸ்ன் அழகு ராணி! 45 நிமிடத்தில் ஆவலுடன் காத்திருந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம். ஈஷ்வரின் கனவுகளில் மற்றொன்றும் நனவாகும் நேரம் வந்துவிட்டது. ஆம்! அவருடைய ஆஸ்தான ஆங்கிலக்கவிஞர் ‘வேர்ட்ஸ்வொர்த்’ பிறந்து வளர்ந்து நடந்து வாழ்ந்த இடங்களைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு. வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு பரவசமாக நடந்து சென்ற ஈஷ்வருடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
இங்கிலாந்தின் ‘கம்ப்ரியா’வில் உள்ள ‘காக்கர்மவுத்’ என்ற அழகான நகரத்தில் அமைந்துள்ள ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ் & கார்டன்’, ஆங்கில இலக்கிய உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்திற்கு அஞ்சலி செலுத்துகிறது. வேர்ட்ஸ்வொர்த் பிறந்து தனது ஆரம்பக் காலங்களை கழித்த இந்த வரலாற்று இல்லம், 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்று புகழ்பெற்ற காதல் கவிஞரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு அருங்காட்சியகம் மட்டுமல்ல. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் உண்மையான பிறந்த இடமும் வளர்ந்த வீடும் கூட. அதன் பிரம்மாண்டம் அவருடைய செல்வச்சிறப்பையும் பறைசாற்றுகிறது.
வேர்ட்ஸ்வொர்த்தின் இயற்கை மீதான கவிதைகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களைக் கவர்ந்துள்ளது. காக்கர்மவுத் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைக்கு முடிவில்லாத உத்வேகத்தை அளித்துள்ளன. இயற்கையுடனே வாழ்ந்திருக்கிறார் மனிதர் என்பதை அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நொடியிலும் உணர்ந்தோம். ‘வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தவிர, அவரது சகோதரி ‘டோரதி’யும் ஒரு திறமையான எழுத்தாளரும் நாட்குறிப்பாளரும் ஆவார். வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸில் டோரதியின் ‘கிராஸ்மியர் ஜர்னல்’ உள்ளது. இது ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ல் அவர்களின் தினசரி வாழ்க்கையை, உடன்பிறப்புகளின் நெருங்கிய உறவை விவரிக்கிறது. ‘வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ்’ சுற்றிலும் சுவர் எழுப்பிய அழகிய தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தோட்டத்தின் பாதைகளின் தளம் வழியாக அலைந்து திரிந்து, மலர்க்காட்சிகள், வேர்ட்ஸ்வொர்த் குடும்பத்திற்கு நன்கு தெரிந்த மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களைக் கண்டறியலாம். விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு வேண்டிய தகவல்களை மிக அழகாகத் தொகுத்து வழங்குகிறார்கள்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் கூட!
அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ வந்து சேர்ந்தோம். இங்கிலாந்தின் வடமேற்கு மூலையில் நிகரற்ற அழகுடன் இருக்கும் ஏரி மாவட்டம். அதன் பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள் மற்றும் அழகிய பள்ளத்தாக்குகள், வளமான, கலாச்சார பாரம்பரிய நிலப்பரப்புகள் பார்வையாளர்களைக் கவர்கிறது. 2017 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்ட ‘லேக் டிஸ்ட்ரிக்ட்’ அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் புகழ்பெற்றது. இப்பகுதியின் மையத்தில் வின்டர்மியர், டெர்வென்ட்வாட்டர் மற்றும் உல்ஸ்வாட்டர் போன்ற நீர்நிலைகள் உட்பட அதன் பெயரிடப்பட்ட ஏரிகள் பலவும் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரமான ‘ஸ்காஃபெல் பைக்’ உட்பட ஏரி மாவட்டத்தின் மலைகளின் கரடுமுரடான சிகரங்கள் ஏரிகளுக்கு மேலே கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. மலையேறுபவர்களுக்கும் நடைப்பயணம் செல்பவர்களுக்கும் இயற்கையை அனுபவிப்பதற்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது.
நீண்ட காலமாக எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து வருகிறது ஏரி மாவட்டம். வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் மற்றும் பீட்ரிக்ஸ் பாட்டர் உள்ளிட்ட காதல் கவிஞர்கள், இப்பகுதியின் இயற்கை அழகில் மயங்கி அதன் நிலப்பரப்புகளையும் புனைவுகளையும் தங்கள் இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகளில் இழைத்துள்ளனர். லேக் மாவட்டத்திற்கு வருபவர்கள், வேர்ட்ஸ்வொர்த்தின் ‘டவ் காட்டேஜ்’ முதல் பீட்ரிக்ஸ் பாட்டரின் ‘ஹில் டாப் ஃபார்ம்’ வரையிலான இலக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் கண்டு ரசிக்கலாம். மிக அழகான அமைதியான கிராமம்! சுத்தமாக இருந்தது!
‘டவ் காட்டேஜ்’ முன் நின்ற பொழுது ஈஷ்வரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்! சுவற்றின் ஒவ்வொரு கற்களையும் தொட்டு வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் நின்று தனது ஆதர்ச கவிஞரை முழுமையாக தன்னுள் உணர்ந்து கொண்டிருந்தார். அங்கு வந்திருந்த பார்வையாளர்களும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர் அமர்ந்து எழுதிய மேஜை, உண்டு உறங்கிய இடம் என்று வீட்டைச் சுற்றிக் காண்பித்து ஒளிப்படம் வாயிலாக கவிஞரின் வாழ்க்கையை விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தக்காலத்தில் கழிவறை என்பது வீட்டில் இல்லை. ஆற்றுப்பக்கம் தான் ஒதுங்கியிருக்கிறார்கள்! வீட்டைச் சுற்றிலும் அழகிய பசுந்தோட்டம்! ஆங்காங்கே மேற்கோள்கள் எழுதப்பட்ட பலகைகள்!
I wandered lonely as a cloud That floats on high o’er vales and hills, When all at once I saw a crowd, A host, of golden daffodils; Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze.
-‘I wandered lonely as a cloud’
ஆசை தீர வீட்டைச்சுற்றி வந்தோம். அருகிலிருந்த ஏரிக்குச் சென்று படகில் பயணித்தோம். அங்கிருந்து தெரிந்த மலைகள், இயற்கைக்காட்சிகள் மனதை கொள்ளை கொள்ள, கவிஞரின் வரிகளை ஈஷ்வர் நினைவூட்ட,
And the round ocean and the living air, And the blue sky, and in the mind of man; A motion and a spirit, that impels All thinking things, all objects of all thought, And rolls through all things. Therefore am I still A lover of the meadows and the woods, And mountains; and of all that we behold From this green earth; of all the mighty world Of eye, and ear,—both what they half create, And what perceive; well pleased to recognise In nature and the language of the sense, The anchor of my purest thoughts, the nurse, The guide, the guardian of my heart, and soul Of all my moral being.
-Tintern Abbey
அந்த அற்புத மனிதரின் இயற்கையுடனான இனிமையான வாழ்க்கை கண்முன்னே வந்து சென்றது, கவிதைகளாக! வாழ்க்கையின் மறக்க முடியாத நாள். அங்கேயே ஓரிரவு தங்கி விடலாமா என்று கூட பயணத்திட்டத்தை மாற்ற நினைத்தோம்.முடிந்தால், மீண்டும் வர வேண்டிய இடம் என்று தோன்றியதால் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் அழகிய வெல்ஷ் மலைகளைக் கடந்தவாறே பயணத்தைத் தொடர்ந்தோம். லிவர்பூலில் இரவு தங்குவதற்கு முன் ‘சாய் சுரபி’ என்ற இந்தியன் உணவகத்தில் சுவையான உணவை உண்டோம். அப்பளத்தை ‘appetizer’ ஆக நொறுக்குகிறார்கள். என்னவோ போடா மாதவா! அங்கே தான் ‘மட்டன் கராஹி’ முதன்முதலாகச் சுவைத்தேன். அருமையாக இருந்தது.
மனமும் வயிறும் நிறைய அற்புதமான நாள் இனிதே நிறைவடைந்தது. நாளைய நீண்ட பயணத்தை எண்ணி ஆவலுடன் உறங்கச் சென்றோம்.