Monday, July 21, 2025

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை 

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூலை 2025

ஒரே ஒருமுறை மட்டுமே அதிபர் பதவி வகித்திருந்தாலும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கவனிக்கத்தக்க மனிதராக வலம் வந்தவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ‘ஜிம்மி கார்ட்டர்’. வேர்க்கடலை விவசாயி முதல் உலக அமைதி ஆர்வலர் வரை, கார்ட்டரின் செல்வாக்கு பரவலாகவும் நீண்ட காலமாகவும் இருந்தது. குறிப்பாக, அதிபராகவும் அதற்குப் பின்னரும் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரையில் மக்களிடையே பெரும் அபிமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜிம்மி கார்ட்டர்’ யார்?

1924ல் ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் ஜேம்ஸ் சீனியர், லில்லியன் கோர்டி கார்டரின் மகனாகப் பிறந்தவர் ‘ஜிம்மி கார்ட்டர்’. மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாத வேர்க்கடலை பண்ணையில் வளர்ந்தவர். அவரது குடும்பத்தில் இருந்து உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற முதல் உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர். அதிகமான கருப்பு அமெரிக்கர்கள் சூழ வாழ்ந்து அவர்களின் ஏழ்மை, அநீதிகளைக் கண்டு வளர்ந்ததால் மனித நேயத்துடனும் தான் சார்ந்த கிறிஸ்தவம் கற்றுத் தந்த நற்போதனைகள்படியும் வாழ்ந்த அரிய மனிதர்.

1946ஆம் ஆண்டு அனாபோலிஸ், மேரிலாண்ட்டில் உள்ள ‘அமெரிக்க கடற்படை அகாடமி’யில் அணு அறிவியலைப் படித்து சிறப்புப் பட்டம் பெறுவதற்கு முன்பு ‘ஜார்ஜியா சவுத்வெஸ்டர்ன் கல்லூரி’ மற்றும் ‘ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ ஆகியவற்றில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அதே வருடத்தில் ‘ரோசலின் ஸ்மித்’ என்ற இளம் பெண்ணை காதல் மணம் புரிந்துள்ளார். பின், அமெரிக்க கடற்படையில் ஏழு ஆண்டுகள் பணிபுரிகையில் ஐந்து ஆண்டுகள் நீர்மூழ்கிக் கப்பல் பணியில் இருந்துள்ளார். 1953ம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பின் நீர்மூழ்கிக் கப்பலில் பொறியியல் அதிகாரியாகும் வாய்ப்பைத் துறந்து குடும்ப வேர்க்கடலை பண்ணை நடவடிக்கைகளை நிர்வகிக்க ஜார்ஜியா திரும்பியுள்ளார்.

விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வெள்ளை மாளிகையின் அதிபரானது எப்படி?

உள்ளூர் கல்வி வாரியத்தில் பணியாற்றியதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் கார்ட்டர். பின், 1962ல் ஜார்ஜியா மாநில செனட்டிற்கு ஜனநாயக கட்சிக்காரராகத் தேர்தலில் வெற்றி பெற்று 1964 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1966ல் ஆளுநர் பதவிக்கான முயற்சியில் தோல்வியடைந்தார். இந்த அனுபவத்தால் மனச்சோர்வடைந்தவர் சுவிசேஷ கிறிஸ்தவத்தில் ஆறுதல் தேடி மீண்டும் ஞானஸ்நானம் பெற்றவரானார்.

1970ல் மீண்டும் ஆளுநராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது தொடக்க உரையில் “இன பாகுபாட்டிற்கான நேரம் முடிந்துவிட்டது” என்று அறிவித்து, ஜார்ஜியாவின் அரசாங்க அலுவலகங்களில் கறுப்பர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கி, ஆளுநராக, அன்றைய அரசு நிறுவனங்களை மறுசீரமைத்தார். அதே நேரத்தில், அவற்றுக்கான கடுமையான நிதி நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார். அவருடைய செயல்பாடுகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. நல்ல அரசாங்கம் மற்றும் “நியூ சவுத்” இரண்டின் அடையாளமாக ‘டைம்’ இதழின் அட்டைப்படத்தில் இடமும் பெற்றார். இங்கிருந்து தான் வெள்ளை மாளிகைக்குப் பயணமானார் கார்ட்டர்.

1974ஆம் ஆண்டில், ஆளுநராக அவரது பதவிக்காலம் முடிவடைவதற்குச் சற்று முன்பு, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தேசிய அரசியல் அடித்தளம், பலமான ஆதரவு இல்லாவிட்டாலும், முறையான பிரச்சாரத்தின் மூலம் நேர்மையான, எளிமையான தேசிய அரசியல் புதுமுகமாக மக்களின் செல்வாக்கைப் பெற்றார். அன்றைய அமெரிக்க அரசியல் வரலாற்றில் புயலை ஏற்படுத்திய அதிபர் நிக்ஸனின் ‘வாட்டர்கேட்’ ஊழலுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் அதிகாரம், நிர்வாகக் கிளையின் ஒருமைப்பாடு பற்றிய அச்சத்தை எழுப்பிய கார்ட்டர், வாஷிங்டன், டி.சி.க்கு தான் “வெளிநாட்டவர்” என்று தன்னை தகவமைத்துக் கொண்டார். நிக்ஸனின் ஊழலைக் கண்டு திகைத்திருந்த அமெரிக்கர்களுக்கு கார்ட்டரின் தார்மீக நிலைப்பாடு, நேர்மையான அணுகுமுறை, ஜார்ஜியா மாநில ஆளுநராக அவருடைய செயற்பாடுகள் கவர, பற்கள் தெரிய சிரிக்கும் அவருடைய வெள்ளந்தி முகமும் எளிய தோற்றமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

1976ல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராகப் போட்டியிட்டு குடியரசுக்கட்சியின் வேட்பாளரான ‘ஜெரால்ட் ஆர். ஃபோர்டை’ தோற்கடித்தார். 51 சதவிகித மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று 39வது அதிபராகப் பொறுப்பேற்றார்.



பதவியேற்க வாஷிங்டன் சென்ற பொழுது பென்சில்வேனியா அவென்யூவில் தனது காதல் மனைவி ரோசலினுடன் வண்டியிலிருந்து இறங்கி நடந்து மக்களை நோக்கி கையசைத்துக் கொண்டே அமெரிக்கப் பாராளுமன்றம் சென்றது அன்று பேசுபொருளானது.

அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்புகளை நிகழ்த்துவதும் எளிமையான உடை, பேச்சு பாணி என்று மற்ற அதிபர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். மக்களுக்கு நன்மை பயக்கும் சமூக, நிர்வாக, பொருளாதார சீர்திருத்தத்திற்கான லட்சிய திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தினார். பிரதிநிதிகள் சபை, செனட் இரண்டிலும் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் அவருடைய திட்டங்கள் பலவும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தன. (மக்களுக்கு நல்லது என்றால் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்குமா என்ன?)

“வாஷிங்டன் அரசியல்” அனுபவம் இல்லாததால் அவரது நற்திட்டங்கள் பலவும் ஒப்புதல் பெற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. அவரது இயலாமையால் அவரது ஆரம்ப புகழ் 1978 வாக்கில் மங்கத் தொடங்கியது.

அதுவும் தவிர, நண்பர், சகோதரன் மீதான இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளினால் அவரின் நம்பகத்தன்மையும் சந்தேகத்திற்கு இடமானது. 1977ல், மேலாண்மை மற்றும் நிதிநிலை அலுவலகத்தின் இயக்குநரும், கார்ட்டரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ‘பெர்ட் லான்ஸ்’, ஜார்ஜியா வங்கியாளராக நிதி முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். கார்ட்டர் லான்ஸுக்கு ஆதரவாக நின்றபோது பலர் அதிபரின் அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கினர். இறுதியில் நண்பர் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு அவரது இளைய சகோதரர் ‘பில்லி’, ‘முயம்மர் அல்-கடாபி’யின் லிபிய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துபவராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ‘செனட்’ புலனாய்வாளர்கள், பில்லி முறையற்ற விதத்தில் செயல்பட்டாலும், கார்ட்டரின் பங்கு எதுவுமில்லை என்று கண்டறிந்தனர். இவ்விரண்டு ஊழல் வழக்குகளிலும் கார்ட்டர் நேரிடையாக குற்றஞ்சாட்டப்படாதவர் என்றாலும் அவர் மீதிருந்த நம்பகத்தன்மை கேள்விக்குறியானதில் செல்வாக்கும் சரிய துவங்கியது.

ஆனால், வெளிநாட்டு விவகாரங்களில், சர்வதேச மனித உரிமைகளை நிலைநிறுத்தியதற்காக கார்ட்டர் பாராட்டுகளைப் பெற்றார். இருப்பினும், உலகத்தைப் பற்றிய அவரது பார்வை ‘அப்பாவி’யாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த இரு ஒப்பந்தங்கள் அவரின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளாக இன்றும் பேசப்படுகிறது.



1977ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் பனாமாவிற்கும் இடையில் கொண்டு வந்த ஒப்பந்தத்தினால் 1999ஆம் ஆண்டின் இறுதியில் பனாமா கால்வாய் பனாமாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1978ல் முன்னாள் எகிப்திய அதிபர் ‘அன்வர் சதாத்’ மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி ‘மெனஹம் பெகின்’ இருவரையும் மேரிலாந்தின் ‘கேம்ப் டேவிட்’டில் சமாதான பேச்சிற்கு அழைத்தார் கார்ட்டர். 1948ல் இஸ்ரேல் நிறுவப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த போர்நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் சமாதான உடன்படிக்கையும் ஏற்பட்டது. 13 நாட்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை கார்ட்டரின் உறுதியான தலையீட்டால் மட்டுமே முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த சினாய் தீபகற்பத்தை எகிப்துக்குத் திருப்பித் தர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முழு ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் இருநாடுகளுக்கிடையே ஏற்பட காரணமானார்.

1979ல் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உறவை மேம்படுத்தி தைவானுடனான அதிகாரப்பூர்வ உறவுகளை முறித்துக் கொண்டார். அதே ஆண்டில், வியன்னாவில், சோவியத் தலைவர் ‘லியோனிட் ப்ரெஷ்நேவ்’வுடன் ஒரு புதிய இருதரப்பு மூலோபாய ஆயுத வரம்பு ஒப்பந்தத்தில் (SALT II) கையெழுத்திட்டார். இது இரு வல்லரசுகளுக்கு இடையே போதுமான அளவு சரிபார்க்கக்கூடிய விதிமுறைகளின் அடிப்படையில் மூலோபாய அணு ஆயுத விநியோக அமைப்புகளில் சமநிலையை நிறுவும் நோக்கத்துடன் இருந்தது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு, செனட்டின் ஒப்புதலுடன் ஒப்பந்தத்தை நீக்கி சோவியத் யூனியனுக்கு அமெரிக்கத் தானியங்களை அனுப்புவதற்கும் தடை விதித்தார். ரஷ்யாவை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற இஸ்லாமிய அடிப்படை குழுக்களுக்கும் பாகிஸ்தானிற்கும் அதிகளவில் ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து தீவிரவாதம் தலைதூக்க காரணமாகவும் இருந்தார் என்ற வாதமும் உண்டு. அமைதியை நிலைநாட்ட அவர் செய்த செயல்கள் பாம்புக்குப் பால் வார்த்த கதையாகி இன்று வரை தொடர்வது தான் வேதனை.

கணிசமான வெளியுறவுக் கொள்கைகளில் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் ஈரான் விவகாரங்களில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடி மற்றும் உள்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான மக்களின் அதிருப்தி அவற்றை மறைந்துவிட்டன என்றே கூறலாம். நவம்பர் 4, 1979 அன்று, ஈரானிய மாணவர் கும்பல் ஒன்று டெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கி 50 ஊழியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ‘ஷா’வை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குள் அனுமதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் மதகுரு ‘அயதுல்லா ருஹோல்லா கொமேனி’ தலைமையிலான ஈரானின் புரட்சிகர அரசாங்கத்தால் தூதரக தாக்குதல் நடைபெற்றது.

இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் உருவானது. ஈரானிய அரசாங்கத்துடனான நேரடி மோதலைத் தவிர்த்து, பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்ற கார்ட்டரின் செயல் வெற்றி பெறவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக பணயக்கைதிகளாக இருந்த அமெரிக்கர்களை மீட்டு வருவது ஒரு முக்கிய அரசியல் கடமையாக மாறியது. 1980ல் பணயக்கைதிகளை மீட்பதற்கான ரகசிய அமெரிக்க ராணுவப் பணியின் தோல்வி (விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் பாலைவன விபத்து) கார்ட்டர் நிர்வாகத்தின் திறமையின்மை மற்றும் துரதிர்ஷ்டத்தைப் பிரதிபலித்தது. உலக அரங்கில் அங்கிள் சாமின் பிம்பம் சரியவும் காரணமானது. இது போதாதா எதிர்க்கட்சிகளுக்கு?



அதே நேரத்தில் உள்நாட்டில், கார்ட்டரின் பொருளாதார மேலாண்மை பரவலான கவலையைத் தூண்டியது. 1970களின் முற்பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் மீது நாடு அதிகமாகச் சார்ந்திருந்ததன் விளைவாக உருவான எரிசக்தி நெருக்கடியின் காரணமாகப் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. 1977ஆம் ஆண்டில், எண்ணெய் நிறுவனங்கள் மீதிருந்த அவநம்பிக்கை காரணமாக எண்ணெய் வரி, பாதுகாப்பு மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆற்றல் திட்டத்தை முன்மொழிந்தார் கார்ட்டர். ‘ஹவுஸ்’ திட்டத்தை ஆதரித்தாலும் ‘செனட்’ அதை ரத்து செய்தது. மேலும், மார்ச் 1979ல் பென்சில்வேனியாவின் ‘த்ரீ மைல் ஐலண்ட்’ல் உள்ள மைய உலையின் பேரழிவுகரமான நிகழ்விற்குப் பிறகு, மாற்று ஆதாரங்களில் ஒன்றான அணுசக்தி மிகவும் குறைவான சாத்தியமானதாகத் தோன்றியது.

அவர் பதவியிலிருந்த ஒவ்வொரு ஆண்டும் பணவீக்க விகிதம் அதிகமாக உயர்ந்தது. தொடர்ந்து வேலையின்மை 7.5 சதவிகிதமாக உயர, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிபரிடம் ஒத்திசைவான உத்திகள் எதுவுமில்லை என்று வணிகத் தலைவர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.

1980ல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் மாசசூசெட்ஸ் செனட்டர் ‘எட்வர்ட் கென்னடி’யைத் தோற்கடித்தாலும் அவரின் நிர்வாகத் திறன்களில் பொதுமக்களின் நம்பிக்கை மீள முடியாத அளவிற்குக் குறைந்துவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த விஷயத்திலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாதவராகக் காணப்பட்டார்.

அரசாங்கத்தின் மீதான அமெரிக்காவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, உலகளாவிய விவகாரங்களில் அமெரிக்காவின் முக்கிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்று கார்ட்டர் வெகுவாக நம்பினார். இரண்டு விஷயங்களிலும் அவர் பெரும் தோல்வியடைந்தார்.

அந்த வருட நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் நடிகரும் கலிபோர்னியாவின் ஆளுநருமான ரொனால்ட் டபிள்யூ. ரீகனால் தோற்கடிக்கப்பட்டார். ரீகன் மக்களிடம் கேட்ட, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நீங்கள் இப்பொழுது நன்றாக இருக்கிறீர்களா? அமெரிக்கா உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறதா?” என்ற இரு கேள்விகள் மட்டுமே கார்ட்டரின் தோல்விக்குப் போதுமானதாக இருந்தது.(எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதல்லவா? அன்று முதல் இன்றுவரை வார்த்தைகள் மாறவில்லை. அரசியல்ல இதெல்லாம்…) ரீகன் பதவியேற்ற மறுநாள் ஜனவரி 21,1981 அன்று ஜெர்மனியில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்!

தனது பதவிக்காலம் முடியும் தறுவாயில் ​​கைவிடப்பட்ட நச்சுக் கழிவுகளை சுத்தம் செய்ய பெரும் நிதியை ஒதுக்கவும் அலாஸ்காவில் சுமார் 100 மில்லியன் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும் வலுவான சட்டங்களை இயற்றி நிறைவேற்றினார். முதன்முதலாக அதிகளவில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை அமைச்சரவையில் சேர்த்த பெருமையும் இவருக்கு உண்டு.

பதவிக்காலம் முடிந்ததும், கார்ட்டர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். அதிபரின் ஆலோசகராகச் செயல்பட்டது மட்டுமின்றி அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் முதல் பெண்மணியாக இருந்த ரோசலின் கார்ட்டர், அட்லாண்டாவில் நூலகம், அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய ‘கார்ட்டர் பிரசிடென்சியல் மைய’த்தை நிறுவுவதில் கணவருடன் இணைந்து பணியாற்றினார்.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்ட நாடுகளில் தூதராக அமைதியை நிலைநாட்டும் பணியாற்றி நற்செயல்கள் பலவும் புரிந்தார் கார்ட்டர். ‘மிஸ்கிடோ’ இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதை ஊக்குவித்தது, பனாமாவில் நடந்த சட்டவிரோத வாக்களிப்பு நடைமுறைகளைக் கவனித்து அறிக்கை வெளியிட்டது, எத்தியோப்பியா நாட்டில் போராளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, 1994ல் அணு ஆயுத வளர்ச்சியை நிறுத்த வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, ‘ஹெய்ட்டி’யில் அமைதியான அதிகார பரிமாற்றம் நடைபெற வழிவகுத்தது, போஸ்னிய செர்பியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே குறுகிய கால போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியது என்று சர்வதேச அமைதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அதிக கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. மேலும், ‘மனித நேயத்திற்கான வாழ்வாதாரம்'(Habitat for Humanity) மூலம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதில் அவருடைய பங்களிப்பு அதிபராக இருந்த காலத்தை விட நற்பெயரைப் பெற்றுத் தந்து அமெரிக்க அதிபர்களில் சிறந்த மனிதராக அவரை உயர்த்தியது. பதவியை விட்டு வெளியேறிய பிறகு, பல்வேறு தலைப்புகளில் 32 புத்தகங்கள் எழுதி ஒரு சிறந்த எழுத்தாளராகவும் ஆனார்.

பல தசாப்தங்களாக சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், ஜனநாயகம்,மனித உரிமைகள், பொருளாதாரம், சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அயராது முயன்றதற்காக 2002ம் வருட அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு வழங்கப்பட்டது.

ஜூலை 7, 2023 அன்று தங்கள் 77வது ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடி, அமெரிக்க வரலாற்றில் “மிக நீண்ட திருமணமான அதிபர் ஜோடி” என்ற பெருமையையும் பெற்றனர் கார்ட்டர் தம்பதியினர். சில மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 19, 2023 அன்று 96வது வயதில் ரோசலின் இறந்தார்.

நூறு வயது வரை வாழ்ந்து ‘நீண்டகாலம் வாழ்ந்த அதிபர்’ என்ற பெருமையுடன் டிசம்பர் 29, 2024 அன்று உயிர்நீத்தவரின் உடல் அவர் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து அட்லாண்டா நோக்கி (ஜனவரி 4, 2025) சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

“அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன்னை நினைவு கூர்ந்தால் அதிகம் மகிழ்வேன்” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கார்ட்டர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் உலக அமைதிக்காகவும் நேர்மையாக, நம்பிக்கையுடன் உழைத்த சொல்லின் செயலருக்கு என்னுடைய பணிவான அஞ்சலிகள்.

“I have one life and one chance to make it count for something. I’m free to choose that something. That something—the something that I’ve chosen—is my faith. My faith demands that I do whatever I can, wherever I can, whenever I can, for as long as I can with whatever I have, to try to make a difference.”

-Jimmy Carter

வெளிவரும் ரகசியங்கள்: கென்னடியைக் கொன்றது யார்?

சொல்வனம் இதழ் 341ல் வெளியான கட்டுரை.

அமெரிக்காவின் 35வது அதிபராக இருந்தவர் ‘ஜே.எஃப்.கே’ என்று அழைக்கப்பட்ட ‘ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி’. ஜனவரி 20, 1961 முதல் நவம்பர் 22, 1963 அன்று அவர் படுகொலை செய்யப்படும் வரை அதிபராக பணியாற்றியவர். அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சமூக சுதந்திரம், சமத்துவத்திற்கான குடிமக்களின் உரிமைப் போராட்டங்கள், கம்யூனிச நாடுகளைச் சாதுரியமாக கையாண்ட முயற்சிகளுக்காக இன்றுவரையிலும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் போற்றப்படுபவர். வசீகரமானவர். ஊக்கமளிக்கும் உரைகள் ஆற்றுவதில் நிபுணர். விண்வெளி ஆய்வில் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம், ராணுவத்தில் பணியாற்றின அனுபவங்கள் உறுதுணையாக இருக்க, 1960ல் குடியரசுக் கட்சியின் வேட்பாளர், அன்றைய துணை அதிபர் நிக்சனை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற்றார்.

இளமையான, அமைதியான, நம்பிக்கையான தலைமையை வரவேற்ற சிறப்புமிக்க தேர்தலாக மட்டுமில்லாமல் வெள்ளைமாளிகைக்குச் சென்ற முதல் கத்தோலிக்க அதிபராகவும் வரலாற்றில் இடம்பெற்றார்.

கென்னடி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல திறமையான எழுத்தாளரும் கூட. செனட்டில் பணியாற்றும் பொழுது “Profiles in Courage” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். கொள்கைகளுக்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்த அமெரிக்க செனட்டர்களின் கதைகளை ஆராயும் இந்தப் புத்தகம், 1957ல் வாழ்க்கை வரலாற்றுக்கான ‘புலிட்சர்’ பரிசை வென்றது.

கலைகளின் தீவிர ஆதரவாளராகவும் இருந்ததால் அவரது ஆட்சிக்காலம் கலைகளுக்கான கலாச்சார மறுமலர்ச்சியாகக் கருதப்பட்டது.

உலக அரங்கிலும் துணிச்சல் மிக்க அதிபராக அறியப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் பெர்லின் சுவர் கட்டப்பட்ட பொழுது மேற்கு ஜெர்மனிக்கு ஆதரவாக அவர் ஆற்றிய புகழ்பெற்ற “இச் பின் ஐன் பெர்லினர்” உரை, ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த உரை ஜனநாயகத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான பனிப்போர் போராட்டத்தின் நீடித்த அடையாளமாகவும் மாறியது.

லத்தீன் அமெரிக்காவில் சோவியத் செல்வாக்கை எதிர்க்க, முன்னேற்றத்திற்கான கூட்டணியைத் தொடங்கினார் கென்னடி. பிராந்தியம் முழுவதும் நிலவிய வறுமையையும் சமத்துவமின்மையையும் நிவர்த்தி செய்ய பொருளாதார வளர்ச்சியையும் சீர்திருத்தத்தையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யூனிசத்தின் ஈர்ப்பை எதிர்த்துப் போராடும் திட்டத்தையும் வகுத்தார்.

ஃபுளோரிடாவிலிருந்து 90 மைல் தொலைவில் இருக்கும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் கட்டப்படுவதை அமெரிக்க உளவு விமானங்கள் கண்டுபிடித்தபோது இருநாடுகளுக்கும் இடையே நெருக்கடி தொடங்கியது. கியூபாவைச் சுற்றி கடற்படை முற்றுகையை விதித்து,ஏவுகணைகளை அகற்றக் கோரினார். உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் தத்தளித்தது. 1962ல் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 13 நாட்கள் தொடர்ந்த பதட்டமான மோதலை தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டால் அமைதியாகத் தீர்த்து வைத்தன் மூலம் தேர்ந்த “ராஜதந்திரி” பாராட்டையும் பெற்றுச் சிறந்த தலைவரானார்.

இத்தனை சிறப்புமிக்க அதிபர் நவம்பர் 22, 1963 அன்று, டெக்சாஸின் டல்லாஸ் நகரில் மோட்டார் வாகன அணிவகுப்பில் சவாரி செய்து கொண்டிருந்தபோது ‘லீ ஹார்வி ஆஸ்வால்ட்’ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி தனியாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டாலும் வேறு சில சதிகாரர்கள் இருக்கலாம் என்ற பல சதி கோட்பாடுகள் இன்றுவரை உள்ளன. ஜே.எஃப்.கேவின் துயர மரணத்தால் நாடே அதிர்ச்சியடைந்தது.

அவருடைய படுகொலையை விசாரணை செய்த வாரன் கமிஷனின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘ஆஸ்வால்ட்’ மட்டுமே படுகொலையில் ஈடுபட்டார் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், பல தசாப்தங்களாக இந்த முடிவில் சந்தேகம் உள்ளது. ஏராளமான சதி கோட்பாடுகள், பிற தரப்பினரின் ஈடுபாடு குறித்த கேள்விகள், விசாரணையின் முழுமை குறித்த சந்தேகங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும் கூட, பொதுமக்களின் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

படுகொலை தொடர்பான அனைத்து கோப்புகளும் பொதுமக்களுக்கு கிடைக்கவும் பல வருட ரகசியத்தையும் ஊகங்களையும் முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்பதால் 1992ல் ‘ஜேஎஃப்கே பதிவுச் சட்ட’த்தை அமெரிக்க காங்கிரஸ் வடிவமைத்தது. கென்னடியின் படுகொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்த பல்வேறு ஆவணங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. CIA அறிக்கைகள், FBI கண்காணிப்பு கோப்புகள், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் இதில் அடங்கும். இருப்பினும், பல முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டன.

வெளியிடப்பட்ட கோப்புகள், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நகர்வுகளைக் கண்காணிப்பதில் CIA மற்றும் FBI ஆகியவற்றின் ஈடுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உதாரணமாக, படுகொலைக்குச் சற்று முன்பு ஆஸ்வால்ட் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றது குறித்து இரு நிறுவனங்களும் அறிந்திருந்ததாக ஆவணங்கள் உறுதிப்படுத்துகிறது. அங்கு அவர் சோவியத், கியூபா அதிகாரிகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளின் தன்மை இன்னும் தீவிரமான ஊகங்களுக்கு அடித்தளம் அமைத்தது.

2017 வருடம் நெருங்கிய பொழுதும் ​​பெரும்பாலான ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. சதி கோட்பாட்டாளர்களும் வரலாற்றாசிரியர்களும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ரகசியம் குறித்து கேள்விகளை எழுப்பியதால், மீதமுள்ள ஆவணங்கள் விவாதத்தின் மையமாக மாறியது.

வெளியிடப்பட்ட கோப்புகளில் மிகவும் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்று, ஆஸ்வால்ட்-ஐ ஓரளவு மர்மமான நபராகச் சித்தரிப்பது. அவர் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பு சோவியத் யூனியனில் வசித்து வந்தார். அங்கு காஸ்ட்ரோ ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இருப்பினும், படுகொலைக்கு முன்னர் ஆஸ்வால்டின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கு எவ்வளவு தெரியும் என்பது குறித்து இன்னும் கேள்விகள் உள்ளன. இந்தக் கோப்புகளை வெளியிடுவது, ஜே.எஃப்.கே கொலை செய்யப்படுவதற்கு முன்பு அமெரிக்க அரசாங்கம் ஆஸ்வால்டை நெருக்கமாகக் கண்காணித்து வந்ததா என்பது குறித்து தெளிவுபடுத்தும்.

படுகொலை தொடர்பான ஊகங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது ஆஸ்வால்ட் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல என்பதே! சிலர் மாஃபியா, சிஐஏ, அமெரிக்க ராணுவதுறையினர் கூட படுகொலையில் ஈடுபட்டதாக வாதிடுகின்றனர். இருப்பினும், இதுவரையில் வெளியிடப்பட்ட கோப்புகள் இந்தக் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளிக்கவில்லை. சில கோப்புகள் சில கட்டுக்கதைகளை அகற்ற உதவியிருந்தாலும், மற்றவை மர்மத்தை ஆழப்படுத்தியுள்ளன. வெளியிடப்பட்ட பல கோப்புகள் ஒரு மர்மமான “இரண்டாவது கொலையாளி” கோட்பாட்டைப் பற்றி விவாதிக்கின்றன, ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.

விசாரணையில் ஈடுபட்ட பல நபர்கள் அந்த நேரத்தில் உயிருடன் இருந்தனர் என்பதாலும், முழு வெளிப்பாடு தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடும் என்றும், உளவுத்துறை, பனிப்போர் கால நடவடிக்கைகள் பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தக்கூடும் என்றும் சில அரசு நிறுவனங்கள்(!) அஞ்சின என்பதாலும் ஆவணங்களை வெளியிடுவதில் மேலும் சிக்கலானது.

ஆனால் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் மீதமுள்ள ஜேஎஃப்கேயின் படுகொலை குறித்த கோப்புகளை வெளியிட நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுக்கு இப்போது ஏன் ட்ரம்ப் அரசு இந்தக் கோப்புகளில் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது? இதனால் அவருக்கு என்ன லாபம் இருக்கக்கூடும்?

படுகொலையைச் சுற்றியுள்ள வெளிப்படைத்தன்மைக்கான பொதுக் கோரிக்கை அதிகரித்து வருவது ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் சமூக ஊடக யுகத்தில், ‘ஜேஎஃப்கே’யின் மரணம் குறித்த சதி கோட்பாடுகள் தொடர்ந்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் அரசாங்கம் மக்களிடமிருந்து எதையோ மறைப்பது போன்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஜனரஞ்சகத் தலைவரான ட்ரம்ப், ஜனநாயக அரசின் ‘டீப் ஸ்டேட்’ அதிகார அமைப்புகள் எதிர்ப்பதை வெளியிடுவதன் மூலம் தான் யாருக்கும் அஞ்சாத ஒரு துணிச்சல் மிக்க அதிபர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கிறாரோ? அரசாங்க ரகசியத்தை சந்தேகிக்கும் பழமைவாத கட்சியினரையும் வாக்காளர்களையும் ஈர்க்கும் தந்திரமாக கூட இருக்கலாம்.

ட்ரம்பின் முந்தைய பதவிக் காலத்தில்(2017-2021) மத்திய புலனாய்வு துறை , கூட்டாட்சி புலனாய்வு அமைப்பு, பிற அமெரிக்க அரசு நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர். இருக்கின்றனர். இந்தக் கோப்புகளை வெளியிடுவதன் மூலம், தன்னுடைய அரசு வெளிப்படைத்தன்மையை விரும்பும் அரசு என்று காட்டிக் கொள்ள விழைகிறாரோ?

சில தகவல்கள், குறிப்பாக உளவுத்துறை நடவடிக்கைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடிய ஆவணங்களை, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக மறைத்து வைத்துள்ளதாக CIA மற்றும் FBI ஆகியவை குறிப்பிடுவது சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இப்பெயர்களை மக்கள் அறிந்து கொள்வதன் மூலம் ஜனநாயகக்கட்சியின் முகத்திரையைக் கிழிக்கலாம் என்று நினைக்கிறாரோ? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விட்டுவிடுவாரா என்ன?

ஒருவேளை முழு வெளிப்படைத்தன்மை இல்லாமல் வரலாற்று நீதியை அடைய முடியாது என்பதை ட்ரம்ப் அரசு உணர்ந்திருக்கலாம். கோப்புகளை வெளியிடுவதன் மூலம், ஒரு வரலாற்று காயத்தை நிவர்த்தி செய்வதற்கான பெரிய சமூக செயல்முறைக்கு தான் பங்களித்ததாக இனி தன்னுடைய வாக்காளர்களிடம் பெருமையுடன் முழக்கமிடலாம் என்று ட்ரம்ப் எண்ணுகிறாரோ?

2020 தேர்தல் முடிவுகளின் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்துவது முதல் “டீப் ஸ்டேட்” தனக்கு எதிராக செயல்படுகிறது என்ற கருத்தை ஊக்குவிப்பது வரை, தனது ஆதரவாளர்களை அணிதிரட்ட அவர் அடிக்கடி “சதி கோட்பாடுகள்” என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தி வருகிறார். இந்தப் போக்கு JFK படுகொலை குறித்த அவரது நிலைப்பாடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் வெளியிட தான் நிர்பந்திப்பதாக கட்சியினரிடம் தெளிவுபடுத்தினார். இதனால் அவரை வெளிப்படைத்தன்மையின் வீரராகவும் நீண்டகால அரசாங்க ரகசியங்களுக்குப் பின்னால் உள்ள “உண்மையை” அம்பலப்படுத்த விரும்புபவராகவும் அவருடைய வாக்காளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆவணங்களின் வெளியீடு அமெரிக்க வரலாற்றை நாம் புரிந்துகொள்ளும் விதத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். கென்னடி படுகொலை 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய தருணம். பலருக்கு, ஜே.எஃப்.கே கோப்புகளை வெளியிடுவது என்பது தேசிய சோகம் பற்றிய உண்மையை எதிர்கொள்வதும் தலைமுறைகளாக நிகழ்வை மூடிமறைத்துள்ள நீடித்த, நிச்சயமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்வதும் ஆகும்.

JFKன் படுகொலை, 9/11 தாக்குதல்கள், 2020 தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரிப்புகள் ஆழமான சந்தேகங்களையே வெளிப்படுத்துகிறது. JFK கோப்புகளின் வெளியீடு இந்த சந்தேகங்களுக்கு உறுதியான பதில்களை வழங்கத் தவறினால் பல்வேறு சதி கோட்பாடுகளைத் தூண்டிவிடும் அபாயமும் உள்ளது.

பொருளாதாரச் சரிவில் நாடு சிக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு இணங்க, மார்ச் 18,2025 அன்று ஜேஎஃப்கே, அவருடைய சகோதரர் ராபர்ட் எஃப் கென்னடி, சமூக உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்-ன் மரணங்கள் தொடர்பான வகைப்படுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

80,000 பக்கங்கள் கொண்ட பதிவுகளை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ததன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர, அரசியல் ஒழுங்கை சீர்குலைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

“உங்கள் நாடு உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள். உங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்” 1961ல் ‘ஜேஎஃப்கே’ ஆற்றிய தொடக்க உரை அன்று பலரையும் வசீகரித்தது. இரு வருடங்களுக்கும் குறைவாகவே அதிபராக நீடித்தாலும் அவரது கொள்கைகள் அரசியல் மாற்றத்திற்கான ஒரு உத்வேகத்தைத் தூண்டியுள்ளது. கென்னடி குடும்பமும் அவரது லட்சியங்களும் அமெரிக்க அரசியலில் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

ட்ரம்ப் நிர்வாகம் JFK தொடர்பான பல ஆவணங்களை வெளியிட நடவடிக்கை எடுத்தாலும், அரசாங்கம் இன்றுவரை சில கோப்புகளைத் தொடர்ந்து மறைத்து வருகிறது. இதனால் படுகொலைக்குப் பின்னால் உள்ள முழு கதையும் தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.

இனி ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வாளர்கள் வெளியிடப் போகும் தகவல்களுக்காக காத்திருக்கலாம். ஆவல் அதிகமுள்ளோர் அரசாங்க இணைய தளத்திற்குச் சென்று வாசிக்கலாம்.( https://www.whitehouse.gov/jfk-files/ )

மர்ம அரசியல் மரணங்களின் உண்மையை அறிந்தவர் தான் யாரோ?

Be Free Where You Are

சொல்வனம் இதழ் 346ல் வெளியான 'Be Free Where You Are" புத்தகத்தைப் பற்றின என்னுடைய கட்டுரை.


வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சிலரும், குடும்பத்திற்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக என்று பலரும், எதற்கு என்று தெரியாமல் எல்லோரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் என்று கண் மண் தெரியாமல் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் ஓடவில்லையென்றால் ஒரு மணிநேரத்தைக் கூட கடக்க முடியாமல் தவிக்கும் நிலைமையில் தான் இன்று நம்மில் பலரும் இருக்கிறோம். அமைதியாக ஓரிடத்தில் அமரும் மனநிலையிலிருந்து வெகு தொலைவிற்கு வந்துவிட்டோம். இரைச்சல்களிலேயே இருந்து பழகி விட்ட மனதிற்கு அமைதியாக இருந்தால் ஏனோ பயம் தொற்றுக் கொள்கிறது.

பயத்தை நீக்க, அமைதியை நாடி எங்கெங்கோ அலைகிறார்கள். “எங்கும் அலைய வேண்டியதில்லை. அமைதி உங்களிடமே இருக்கிறது. திக்கின்றி அலையும் மனதைக் கட்டுப்படுத்தும் வித்தையும் எளிமையானது தான். பழக்கப்படுத்திக் கொண்டால் மனவிடுதலை நிச்சயம்” என்றுரைக்கிறது எழுபது பக்கங்கள் கொண்ட “Be Free Where You Are” என்ற புத்தகம். ஜென் குரு ‘திக் நாட் ஹான்’ அமெரிக்காவில் சிறைக்கைதிகளிடம் பேசிய உரையினை தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


நான்கு சுவருக்குள் முடங்கிக்கிடக்கும் சிறைக்கைதிக்குத் தெரியும், தான் இருக்கும் இடம் தப்பித்துச் செல்ல முடியாத சிறைச்சாலை என்று. ஆனால், அமைதியின்றி, தப்ப வழியின்றி தன்னைச் சுற்றி சுவரை எழுப்பிக் கொண்டு மனச்சிறைக்குள் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கும் மன அமைதி பெற இப்புத்தகத்தின் வாயிலாக ஜென் தத்துவத்தைப் போதிக்கிறார் குரு.

“சுதந்திரமாக, மன அமைதியுடன் இருக்க நம்மைச் சுற்றிப் பிணைந்திருக்கும் சூழ்நிலைகளிலிருந்து விடுபட வேண்டிய அவசியமில்லை” என்கிறார். இந்த முரண்பாடுதான் இப்புத்தகத்தின் ஆன்மா. ஹானின் கூற்றுப்படி, சுதந்திரம் என்பது வெளிப்புற நிலைமைகளின் விளைவால் கிடைப்பது அல்ல. அந்தந்த கணத்தில் “உண்மையாக வாழும் பொழுது” கிடைப்பது. ஆழமான பயிற்சி, விழிப்புணர்வின் மூலம் ஒவ்வொரு கணத்திலும் கிடைக்கும் அனுபவத்தை மனதிற்கு உணர வைத்து அதன் மூலம் விடுதலையும் அமைதியும் பெறலாம் என்கிறார்.

“வாழ்தல்” என்பதன் பொருளே அறிந்திராத பொழுது ஹான் சொல்வதைப் புரிந்து கொள்வது கடினம் தான். விடுதலை என்பது எதிர்காலத்தில் இருக்கிறது அல்லது தற்போதைய சூழ்நிலைக்கு வெளியே உள்ளது போன்ற மாயைகளை உடைக்கிறார். ஒருவர் இருக்குமிடம் சிறையாகவோ அல்லது மாட மாளிகையாகவோ இருந்தாலும், “உண்மையிலேயே அங்கே இருப்பதற்கான” திறனே விடுதலையின் வேர். வாழ்வது என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து வாசகர்கள் தங்கள் இருப்பை படிப்படியாக ஒவ்வொரு மூச்சின் வாயிலாக மீட்டெடுக்க வலியுறுத்துகிறார்.

சில மாதங்களுக்கு முன் கோவிலில் நடந்த பிரசங்க கூட்டத்தில் நண்பர் ஒருவர், “வாழ்வதன் குறிக்கோள் என்ன” என்று கேட்டார். பேசிய இந்துமத குருவும் “வாழ்வது தான்” என்று பளிச்சென்று சொல்லிவிட்டார். நமக்குப் பிரச்சினையே அது தானே? எதையோ குறிக்கோளாகக் கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை என்று பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். அந்தச் செயல்முறையில் எத்தனை எத்தனை சிறு இன்பங்களைக் கவனிக்கத் தவறுகிறோம். மகிழ்ச்சி என்பதைப் பொருட்களில், சாதனைகளில், எங்கோ தொலைதூரத்தில் இருக்கிறது என்ற மன பிம்பம் தான் நம்மை உண்மையாக அந்தந்த கணத்தில் வாழ விடாமல் தடுக்கிறது என்ற உண்மையை உணர வைக்கிறது இப்புத்தகம்.

நாம் விடும் மூச்சிலிருந்து உண்ணும் உணவு, நடை என்று அனைத்திலும் கவனம் செலுத்தினால் அந்தந்த நொடியில் நடக்கும் நிகழ்வுகளை ஆழ்ந்து உற்று நோக்கினால், மனதை ஒருமுகப்படுத்தினால், மன விடுதலையைப் பெறலாம் என்கிறார் குரு.

நம் சுவாசத்தை தீவிரமாகக் கவனித்தால் உடலுக்குள் செல்லும் காற்றை உணர்ந்தால் அதுவே அந்த நொடியில் வாழ்வதாகும். சுதந்திரம் என்பது நாம் கோரும் ஒன்றல்ல. அதைப் பெற, விழிப்புணர்வுடன் நமது எண்ணங்கள், செயல்களை தற்போதைய தருணத்துடன் இணைக்க பயிற்சி செய்ய வேண்டும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது கிடைப்பது விடுதலை அல்ல. மாறாக நமது ஏக்கங்கள், அச்சங்கள், வருத்தங்களுக்கு அடிமையாக இருப்பதை நிறுத்தும்போது கிடைப்பதே உண்மையான விடுதலை என்பதை வலியுறுத்துகிறது இப்புத்தகம்.

ஓரிடத்தில் இருந்து கொண்டோ அல்லது ஒரு செயலை செய்துகொண்டோ மற்றொன்றை நினைத்துக் கொண்டால் கவனம் பிசகும் என்பதைப் பெரியவர்கள் வலியுறுத்தி இருந்தாலும் இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் நிர்ப்பந்தமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. முடிவில், எதையும் நேர்த்தியாகச் செய்யாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகி நிம்மதியின்றி மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

நம்மில் பலரும் கடந்த கால கோபம், வருத்தங்களையும் எதிர்கால பயத்தினையும் சுமந்து கொண்டு உளவியல் சிறைகளில் வாழ்கிறோம். 70 பக்கங்களே கொண்ட இந்தப் புத்தகத்தில் “நிகழ்கால தருணம் மட்டுமே நம்மிடம் உண்மையிலேயே இருக்கும் ஒரே தருணம். அமைதிக்கான வழி என்பது எதுவுமில்லை. அமைதி தான் வழி” என்பதை திக் நாட் ஹான் வலியுறுத்துகிறார்.

முழுமையாக வசிக்கும் ஒவ்வொரு கணமும் அமைதியை அனுபவிக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது என்பதோடு உயிரினங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் யாரும் தனிமையில் இருப்பதில்லை. நமது செயல்கள், எண்ணங்கள், இன்ப, துன்பங்கள் கூட வாழ்க்கையின் ஒரு பெரிய வலையமைப்பின் ஒரு அங்கம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதால் பிறரின் மீதான இரக்கம் மிகுந்து அன்பு பலப்படும். அதுவே சமூகம் தழைக்க உதவும் ஆணிவேர் என்பதால் மன அமைதியும் கிட்டும் என்று விவரிக்கிறார்.

அதே போல, தனக்கு நேர்ந்து விட்ட துன்பத்தை எண்ணிக் கலங்கிக் கொண்டிராது அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். உறுதியான மனமே துன்பத்திலிருந்து கற்ற பாடம் வாயிலாக அமைதிக்கு வழிவகுக்கும். “இந்தச் சிறைச்சாலையை நீங்கள் ஒரு மடமாக, அமைதிக்கான இடமாக மாற்ற முடியும்” என்று கைதிகளின் மன அமைதிக்கான வழிகளைப் போதிப்பதோடு மனச்சிக்கலில் சிறைபட்டவர்களுக்கும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது இப்புத்தகம்.

நம் முன்னோர்களும் இதையே பகவத் கீதை வாயிலாக எடுத்துரைத்தார்கள்:

வெற்றி தோல்வியின் மீது பற்று கொள்ளாமல் செய்யும் செயலில் முழு விழிப்புணர்வுடன் செயல்படுவதும், பாராட்டு/ விமர்சனம், ஆதாயம்/ இழப்பு, மகிழ்ச்சி/துக்கம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் அனைத்தையும் சமநிலையில் ஏற்றுக் கொள்ளும் மன உறுதியும், ஆசைகள், கவனச்சிதறல்கள், புலன் இன்பங்களால் வழிநடத்தப்படாமல், மனதை உள்நோக்கி ஆராயும் விழிப்புணர்வு, தியானம் போன்றவற்றால் மன அமைதியும் தெளிவும் கிடைக்கும் என்பதைத் தான் “Be Free Where You Are” புத்தகமும் விவரிக்கிறது.

Sunday, July 20, 2025

நியூயார்க் நகரில் அரசியல் பரிணாமமா?

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை. 

 நியூயார்க் நகரில் அரசியல் பரிணாமமா? – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூலை 2025

அதிக மக்கள்தொகையும் பன்முகத்தன்மையும் கொண்ட பெருநகரங்களில் அழகான நியூயார்க் நகரமும் ஒன்று. 180க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட நகரத்தில் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மேயர் தேர்தல் தான் தற்போதைய பேச்சுக்களமாக மாறியுள்ளது. இதில் 33 வயது இந்திய வம்சாவளி, “ஜனநாயக சோஷியலிஸ்ட்” ஜோரான் மம்தானி என்ற புதிய முன்னணி வேட்பாளர் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார். உகாண்டாவில் பிறந்து தென்னாப்பிரிக்காவில் சில வருடங்கள் இருந்தபின் அவருடைய எட்டாவது வயதில் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். இவருடைய தாய் பிரபலமான திரைப்பட இயக்குனர் மீரா நாயர். தந்தை, புகழ்பெற்ற கல்வியாளர் மஹ்மூத் மம்தானி. 

2014-ஆம் ஆண்டு ‘மெயின்’ மாநிலத்தில் உள்ள போடென் கல்லூரியில் ‘African Studies’ல் பட்டம் பெற்றுள்ளார் ஜோரான் மம்தானி. கல்லூரியில் ‘Students for Justice in Palestine (SJP)’ன் கிளையை நிறுவியதன் மூலம் மாணவர்களிடையே அரசியல் ஆர்வத்தை வளர்த்துள்ளார். SJP என்பது பாலஸ்தீன மனித உரிமைகளுக்கான ஆதரவை அளிக்க 1993 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்ளீ பல்கலையில் நிறுவப்பட்ட தேசிய அளவிலான மாணவர் இயக்கமாகும். மேலும், இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடை, அழுத்தங்களை ஊக்குவிக்கும் BDS இயக்கத்திற்கும் (Boycott, Divestment, and Sanctions) இந்த இயக்கம் ஆதரவளிக்கிறது. கல்லூரி மையங்களில் விரிவுரைகள், கண்டன நிகழ்ச்சிகளை நடத்தவும், பாலஸ்தீனர்களுக்கு எதிரான/இஸ்ரேல் ஆதரவு நிலைகொண்ட நிறுவனங்களுடனான பல்கலைக்கழகத் தொடர்புகளை எதிர்த்து நிற்பதும் இந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளாகும். போடென் கல்லூரியில் மாணவர்களிடையே பாலஸ்தீன வரலாற்றைக் கற்பித்துப் போராட்டங்கள் நடத்துதல், பேச்சாளார்கள், திரைப்படங்கள் மூலமாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒன்றிணைப்பதைக் கொள்கைகளாகச் செயல்படுத்தினார் மம்தானி.

உரையாடல்களின் மூலம் சமுதாயத்தை இணைக்க முடியும் என்ற அனுபவமே அவரின் அரசியல் விழிப்புணர்வாக மாறியுள்ளது. பின் குயின்சில் வீடு பாதுகாப்பு ஆலோசகராக ஒரு சமூக அமைப்பில் பணியாற்றியுள்ளார். குறைந்த வருமானம் கொண்டவர்கள் வீடுகளை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும் விதமாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், சட்ட ஆலோசனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அங்கே கண்ட காட்சிகள் மூலம் சமூக நீதி, வீட்டு உரிமை போன்ற பொதுமக்கள் பிரச்சினைகளில் ஆர்வம் காட்ட, அதுவே அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுள்ளது. மேலும் பல முன்னேற்ற ஜனநாயக தேர்தல் பிரச்சாரங்களிலும் பங்கேற்றுள்ளார்.

“Mr.Cardamom” என்ற பெயரில் ஹிப்-ஹாப் பாடல்கள் மூலம் நியூயார்க் நகர தெற்காசிய சமூகத்தின் வாழ்வியல், அரசியல் நிலை, சமூக நீதியைப் பற்றியும் பாடியுள்ளார்.

2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஜூன் 2020ல் நியூயார்க் மாநில சட்டமன்றம் – 36வது மாவட்டம்(ஆசியர்கள் அதிகம் வசிக்கும் அஸ்டோரியா, குயின்ஸ் பகுதிகள்) சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, 5 முறை வெற்றிபெற்ற முன்னணி சட்டமன்ற உறுப்பினர் அரவேல்லா சிமோடாஸ் என்பவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மிகக் குறைந்த வாக்குகள் வேறுபாடு தான் ஆனால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய வெற்றி அது. நவம்பர் 3, 2020 பொதுத் தேர்தலில் எதிர்ப்பு இல்லாமல் (unopposed) வெற்றி பெற்றார் மம்தானி.

புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக, புதிய பணிக்கு அடித்தளமாக அமைந்தது இவருடைய அரசியல் பிரவேசம். ஒத்த கொள்கைகள் கொண்ட பெர்னி சாண்டர்ஸ், AOC (அலெக்சாண்ட்ரியா ஓகாசியோ கோர்டெஸ்), NYC-DSA போன்றவர்களின் ஆதரவும் மாற்றத்தை விரும்பிய சாதாரண மக்களின் ஆதரவுகளும் இவரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின.

நியூயார்க் சிட்டி DSA (NYC DSA) -நியூயார்க் நகரின் ‘டெமோகிராடிக் சோஷலிஸ்ட் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பின் கிளை.  மக்களால் நடத்தப்படும் லாப நோக்கமற்ற மிகப்பெரிய சோஷலிஸ்ட் அமைப்பாகும். பணமும் அதிகாரமும் சிலரிடம் மட்டும் நிலைநாட்டப்படாமல், எல்லா மக்களும் சமத்துவமாக வாழும் ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட் சமுதாயத்தை உருவாக்குவதே இதன் கொள்கையாகும்.

இதனால் 2022, 2024 சட்டமன்ற தேர்தல்களிலும் எதிர்ப்பு வேட்பாளர்களே இல்லாமல் மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்பில் 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களைக் கொண்டுவந்தார். அதில் மூன்று மட்டுமே சட்டங்களாக வெளிவந்தன.

தீபாவளி பண்டிகையை நியூயார்க் நகரில் பள்ளி விடுமுறையாக அறிவித்தது இந்துக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிறையிலிருந்து வெளிவந்த குற்றவாளிகளின் தண்டனைகளைப் பொதுப்பார்வைக்கு கொண்டு வராமல் தானாக மூடப்படும் சட்டம் (auto-sealing of old convictions), அதாவது ஒருவர் குற்றம் செய்த பின், தண்டனை முடிந்து பல ஆண்டுகள் சீரான வாழ்க்கை நடத்தினால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொதுமக்களின் பார்வைக்கு வராத வகையில் மூடப்பட்டுவிடும். பொதுமக்கள், வீட்டு வாடகையாளர்கள், வேலை வழங்குநர்கள் அதைப் பார்க்க முடியாது. ஆனால் காவல்துறையும் நீதிமன்றமும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பார்த்துக் கொள்ளலாம். பழைய குற்றம் காரணமாக வேலை, வீடு, கல்வி வாய்ப்புகள் தடைபடுவதை இச்சட்டம் தவிர்க்கிறது. குற்றவாளிகளுக்கும் ஒரு புதிய வாழ்க்கைத் துவக்கத்தை அளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான நீதி என்பது பலத்த அரசியல் பின்னணி கொண்டதால் இச்சட்டம் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. வரவேற்கப்பட வேண்டிய சட்டம்.

மூன்றாவதாக, ஆசியர்களுக்கும் பசிஃபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கான ஆணையத்தை நிறுவும் சட்டம். நியூயார்க் நகரத்தில் (NYC) மிக வேகமாக வளர்ந்து வளரும் இனக்குழுக்களில் ஆசியர்களும் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த பூர்வக்குடிகளும் அடங்குவர். 50க்கும் மேற்பட்ட தனித்துவமான இனக்குழுக்கள் 100க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால் சமீப காலமாக அவர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறை தாக்குதல்கள், அரசியலிலும் நிர்வாகத்திலும் இருக்கும் குறைந்த பிரதிநிதித்துவம், மொழி தடைகள், குறைந்த வருமானம் இவற்றை கவனத்தில் கொண்டு, ஆசியர்களுக்கும் பசிஃபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கான ஆணையத்தை (NYS AAPI commission – New York State Asian American and Pacific Islander Commission) சட்டபூர்வமாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். 

நகர கவுன்சிலராக, குறைந்த வருமான குடும்பங்களுக்கு வசதியான வீடு வழங்கவும் நகர விரிவாக்கத்தால் வீடுகளை இழக்கும் நிலையைத் தடுப்பதற்கும் சட்டமன்ற முயற்சிகளை எடுத்துள்ளார். காவல்துறை சீர்திருத்தம், சமூக பாதுகாப்பு, பசுமை சார்ந்த திட்டங்கள், அகதிகள்,குடிவரவு சமுதாயங்களுக்கான உதவிகள், குறைந்த சம்பள ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் இயக்கத்திற்கு ஆதரவு என்று சமூக நீதி, சமத்துவம், சமூக அதிகாரத்தை உயர்த்தும் நோக்கில் பணியாற்றியுள்ளார்.

தற்பொழுது நியூயார்க் நகரை செல்வந்தர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த நியூயார்க் மேயர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறியுள்ளார். குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும் பெரும் ஆதரவாக இருக்கும் பின்வரும் தேர்தல் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நகரத்தில் வாழ்பவர்களின் வருமானத்தின் பெரும்பங்கு வீட்டு வாடகைக்கும் போக்குவரத்திற்கும் செலவிடப்படுவதால் இலவச பேருந்துப் பயணம், வீட்டு வாடகையை நிர்ணயித்து எளியவர்களின் வாடகைச்சுமையைக் குறைப்பது,

குழந்தை பராமரிப்பிற்கான செலவுகளைக் குறைக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பராமரிப்பு,

குறைந்த விலையில் உணவுப்பொருட்களை வழங்க அரசு நடத்தும் மளிகைக்கடைகள்,

குறைந்தபட்ச சம்பள உயர்வு, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர் சங்கங்களுக்கு ஆதரவு.

வாக்காளர்கள் மனதைக்கவரும் இந்தத் திட்டங்களை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா? அரசின் நிதிநிலைமை பெரும் தள்ளாட்டத்தில் இருக்கும் பொழுது அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை ஓட்டிற்காக மக்களை ஏமாற்றவே சொல்கிறார் என்று இவரை எதிர்ப்பவர்கள் கூறி வருகிறார்கள். பல திட்டங்களுக்கு நகர கவுன்சில், மாநில சட்டமன்ற ஒப்புதல்கள் தேவை. 

கட்டணமில்லாத பேருந்து பயணத்திற்கு மாநில ஆதரவு தேவை. மேயருக்கு நேரடி அதிகாரம் இல்லை. கூடுதலான செலவுகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு கவுன்சிலில் கூட ஆதரவு இல்லாத பொழுது இவருடைய திட்டங்கள் எப்படி சாத்தியப்படும்?

வாடகையை நிர்மாணிப்பது, வீடு வெளியேற்ற தடுப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது அத்தனை எளிதில் நடந்து விடுமா? வீடுகள் நகராட்சியின் அதிகாரத்தில் உள்ள விஷயம்.

இலவச குழந்தை பராமரிப்பிற்கு பில்லியன்கள் தேவை. நியூயார்க் நகர அரசின் தற்போதைய நிதிநிலைமை இதற்குப் போதாது. மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும். மாநிலத்தில் உள்ள மற்ற நகரங்களின் நிலைமை?

குறைந்த விலையில் பொருட்களை விற்கும் அரசு மளிகைக்கடைகள் தொடங்க புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். தனியார் மளிகை நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கும். இப்பொழுதே பலரும் மம்தானி வெற்றி பெற்றால் ஊரை விட்டுச் செல்லவேண்டியது தான் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவருடைய தேர்தல் திட்டங்கள் அனைத்தும் பெரிய அளவிலான திட்டங்கள் என்பதால் திட்டமிடல், ஊழியர் நியமனம், கண்காணிப்பு என்ற பல நிர்வாகப் பணிகள் தேவை. ஆனால் மந்தமான நிர்வாக நகரம் என்று பெயரெடுத்த நியூயார்க் நகரத்தில் இவையெல்லாம் எவ்வாறு சாத்தியப்படக்கூடும்?

காவல்துறைக்கு செலவிடப்படும் அதிக நிதி, பயனற்ற திட்டச்செலவுகளைக் குறைத்து சமூக நலத்திட்டங்களுக்கு மாற்றியமைப்பது என்பது ஒவ்வொரு நாளும் பெருகி வரும் அகதிகளின் எண்ணிக்கையும் குற்றங்கள் நிரம்பிவழியும் நகரத்தில் பயனளிக்குமா? நகர கவுன்சில் ஒப்புதல் அளிக்குமா?

மம்தானியின் திட்டமோ செல்வந்தர்கள், பெரும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பது. நியூயார்க் நகரம் தனியாக வரிகளை உயர்த்த முடியாது. மாநில சட்டமன்ற ஒப்புதல் தேவை. இதற்குப் பணக்காரர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். செல்வந்தர்களின் தயவில் ஆட்சி நடக்கும் அமெரிக்காவில் இது சாத்தியமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி! நகர கவுன்சிலும் மாநில சட்டமன்றமும் புரோகிரெஸ்ஸிவ் ஆக மாற வேண்டும். பொதுமக்கள் ஆதரவு பெரிதாக உருவாக வேண்டும்.

மம்தானியின் புரட்சிகரமான திட்டங்கள் மிகைப்படுத்தப்பட்ட மாதிரி இருந்தாலும் அதில் 50% நிறைவேறினால் கூட, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக அவர் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் வாக்களிக்கத் தான் போகிறார்கள்.

குடிவரவு சமூக இயக்கங்களும் (DRUMBeats, CAAAV Voice, NewYork Communities for Change) , தெற்காசிய முஸ்லீம் சமூகங்களும்(50,000+), பல தொழிற்சங்கங்களும், இளம் தொழிலாளர்களும் ஆதரவு அளித்து வெற்றி பெற உதவி வருகின்றனர். பெரும்நிதி ஆதரவும் இவருக்கு கிடைத்துள்ளது.

லிபரல் யூத- பாலஸ்தீன ஆதரவு கூட்டணி இவரது வெற்றியை உறுதிப்படுத்தி இருப்பதும் இவருடைய இஸ்லாமிய பின்புலமும் பலரின் அச்சத்திற்கும் காரணமாகியிருக்கிறது. இவர் தன்னை இஸ்லாமியனாக காட்டிக்கொள்ளா விட்டாலும் உலகெங்கும் பரவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதம் இவர் மூலம் நகருக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. இவர் பங்கேற்ற போராட்டங்களின் நிலைப்பாடுகள், SJP, BDS கொள்கைகள் நாட்டிற்கு எதிராக திரும்பிவிடுமோ? தற்பொழுது LGBTQவிற்கு ஆதரவாக இருப்பவர் வெற்றி பெற்ற பின் தான் சார்ந்த மதத்தினருக்கு ஆதரவாக மாறிவிடுவாரோ?

LGBTQ சமூகங்களுக்கு ஆதரவு கொடுப்பதால் அவர்களும் இவருக்குப் பேராதரவு அளித்துள்ளனர். அவர்களுடனான ஒரு கூட்டத்தில் இஸ்லாமியப் பெண்மணி ஒருவர், “நீ இஸ்லாமியன் தானா? குரான் படித்திருக்கிறாயா? படித்திருந்தால் இவர்களுக்கு ஆதரவாக எப்படி இருக்க முடியும்” என்று கத்திக் கூப்பாடு போடுகிறார். இது அரசியல் நாடகமா? ஒன்றும் புரியவில்லை?

இந்தியா, பிரதமர் மோடி, குஜராத்தில் வாழும் இஸ்லாமியர்களைப் பற்றி பொதுவில் பொய்களைத் தயங்காமல் அள்ளிவீசிய இவரை எந்த அளவில் நம்புவது? இஸ்ரேல் பிரதமர் நியூயார்க் நகரத்தில் கால் வைத்தால் சிறைபிடிப்பேன் என்று கொக்கரிக்கிறார். முதலில் நகர மேயருக்கு வெளிநாட்டுப் பிரதமரை கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது? யாரை ஏமாற்ற வெற்று வார்த்தைகளை வீசுகிறார்? 

இது தான், இவருடைய தீவிரமான கொள்கைகளே தான் இவர் மீது விமரிசனங்களையும் வைக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது யார் திட்டச்செலவுகளை ஏற்கப்போகிறார்கள் என்பதே பொதுவான மக்களின் கேள்வியாக உள்ளது. மம்தானி ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் நகர நிர்வாக அனுபவம் இல்லை. இதனால் இவருடைய பெரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. இவர் “டெமோகிராடிக் சோஷியலிஸ்ட்” என்பதால் நடுத்தர ஜனநாயகவாதிகளையும் நடுநிலைவாதிகளின் ஆதரவுகளையும் இழக்கிறார். இவருடைய தீவிர பாலஸ்தீன ஆதரவால் இஸ்ரேல் ஆதரவு கொண்ட குழுக்களில் விமரிசனங்கள் எழுந்துள்ளது. இவருடைய சமரசமற்ற போக்கினால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.

“நீங்கள் யார்? யாரை நேசிக்கிறீர்கள்? உங்கள் இனம், பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் இந்த நகரம் உங்கள் நகரமாக இருக்க வேண்டும்” என்று கூறிய மம்தானி மாற்றத்தை விரும்பும் வேட்பாளராக நம்பிக்கையின் புதிய குரலாக இருந்தாலும் பலருக்கு கேள்விக்குறியாகவும் நிரூபிக்கப்படாத கனவாகவும் இருக்கிறார் என்பதே உண்மை.

அவரது திட்டங்கள் நிறைவேறுமோ இல்லையோ மக்களின் பிரச்சினைகளைப் பேசி ஒதுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இவரை எதிர்த்து நிற்பவர்களுக்குச் சவாலாக, உடைந்த வாக்குறுதிகளால் சிதைந்த நகர அரசியலில் புதிய மாற்றத்திற்கான தடத்தைப் பதித்துள்ளார்.

வெற்றி பெற்றால் அனைத்து மக்களின் தலைவராக, அமெரிக்கராக, செயல் வீரராக இருப்பாரா?

Tuesday, July 15, 2025

போய் வா நதி அலையே ...


பழம்பெரும் நடிகைகளில் சாவித்திரிக்கு அடுத்தபடியாக  எனக்கு மிகவும் பிடித்தவர் சரோஜா தேவி. பாந்தமான தோற்றத்தில் சாவித்திரி என்றால் துடுக்குத்தனமான தோற்றத்தில் கன்னடத்துப் பைங்கிளி! அவர் பேசும் விதமும், மையிட்ட பெரிய விழிகளும், குமிழ் சிரிப்பும், வசீகரமான முகவெட்டுத்தோற்றமும் பலரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அந்தந்த கதாபாத்திரத்திக்கேற்ற நடிப்பில் முன்னணி நடிகர்களுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகையும் கூட!

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் நான் விரும்பிக்கேட்கும் பாடல்கள் பலவற்றிலும் அவர் முகம் வந்து போகிறது. ஒரு தலைமுறையின் நாயகி இன்று நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டிருந்தாலும் அவர் நடித்த படங்கள், பாடல்காட்சிகள் வாயிலாக என்றென்றும் நினைவில் இருப்பார். நேற்றிலிருந்து அவர் வாயசைத்த பாடல்கள், பி.சுசீலாவின் குரலில் கேட்க அத்தனை இனிமையாக இருக்கிறது. சிவாஜியுடன் இவர் நடித்த சில படங்களை பார்த்திருக்கிறேன்.பாகப்பிரிவினை படத்தில் ஏழை கிராமத்துப் பெண்ணாக உடல் ஊனமுற்ற ஒருவனுக்கு மனைவியாக "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ" என்று முதன்முதலாக மனதில் வந்து அமர்ந்தவர். "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாலும் பழமும் படத்தில் அவரைப் பார்க்க இன்னும் பிடித்துப் போயிற்று. "உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்" என்று ஈஸ்ட்மேன் கலர் திரையில் பளிச்சென்று சிகப்பு நிறச்சீலையில்...வாவ்! 

எம்ஜிஆர்-உடன்  நடித்த அன்பே வா, பறக்கும் பாவை, பெரிய இடத்துப் பெண் படங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. ஜெமினியுடன் "தனிமையிலே தனிமையிலே' என்று இனிமையாக. இவர் நடித்து நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனதில் நீங்கா இடம்பெற்ற நாயகிகளுள் ஒருவர்.

கலைஞர்களுக்கு இறப்பு என்பது இல்லை. 

பலரின் கனவுக்கன்னியாக வலம்வந்த கன்னடத்துப் பைங்கிளியின் ஆத்மா சாந்தி பெறட்டும்.



எழுச்சியா? கலகமா?

சொல்வனம் இதழ் 346ல் வெளிவந்த கட்டுரை எழுச்சியா? கலகமா? – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூலை 2025. கள்ளக்குடியேறிகள் அதுவும் குற்றங்களில் ஈடுபடுவோரையும் முறையான ஆவணங்கள் இல்லாதோரையும் நாடு கடத்துவேன் என்று கூறி தான் வெள்ளைமாளிகையில் குடியேறினார் அதிபர் ட்ரம்ப். அதைத்தான் செய்கிறார் என்றாலும் அரஜாகப்போக்கையும் கையாண்டு வருகிறார். இந்தக்கட்டுரை ஹாலிவுட் நகரில் நடந்து வரும் கலவரங்களைப் பற்றி பேசுகின்றது.

அமெரிக்காவில் பன்முகத்தன்மை கொண்ட நகரங்களில் ஒன்று மட்டுமல்ல, ஹாலிவுட் கனவுகளுடன் வருபவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் தான் கடந்த மே மாதம் முதல் கலவரங்களால் பற்றிக் கொண்டு எரிந்து உலகத்தாரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இது ஒன்றும் தன்னிச்சையான சீற்றத்தின் வெளிப்பாடு அல்ல. பல தசாப்தங்களாக இனம், நிறபேதம், நீதி மீதான ஒடுக்குமுறையின் அடையாளமாக வெடித்த பூகம்பம். காவல்துறையினரின் அத்துமீறலைத் தொடர்ந்து நீதி கேட்டு முறையான மாற்றத்திற்கான அறைகூவல். 1992ல் இன ஒடுக்குமுறையையும் அதிகாரிகளின் விடுதலைக்கான எதிர்வினையையும் பிரதிபலித்த ‘ராட்னி கிங்’ கலவரத்தை “1992 LA Uprising” என்று அழைத்தனர். இத்தனை வருடங்களாகியும் பல்வேறு அரசுகள் மாறியும் அது தொடர்வது தான் வேதனை.

2025 போராட்டம் ஏன் துவங்கியது?

இந்த அழகிய நகரத்தில் பெரும்பான்மையினர் லத்தீன் அமெரிக்கர்கள்(49%). வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாக பெரும்பாலும் கறுப்பர்களும் லத்தீன் சமூகத்தினர்களுமே இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதிகளில் தான் போராட்டங்களும் கலவரங்களும் அடக்குமுறைகளும் அதிகளவில் நடக்கிறது.

கடந்த மே மாதம் 16, 2025 அன்று 17 வயதான ஜேலென் தாமஸ் என்ற கறுப்பின இளைஞனை தென் மத்திய நகர காவல்துறையினர் வழக்கமான போக்குவரத்து விசாரணை செய்ய தடுத்து நிறுத்தியுள்ளனர். நிராயுதபாணியாக இருந்தபோதிலும் வண்டியிலிருந்து அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக இறக்கி, தரையில் வீழ்த்தி, பலம் கொண்ட மட்டும் அழுத்திப் பிடித்திருக்கின்றனர். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விசாரணையை முழுவதும் காட்சிப்படுத்திய வழிப்போக்கரின் வைரல் வீடியோவால் காவல்துறையினரின் செயலைக் கண்ட மக்கள் கொந்தளிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். ஐந்து வருடங்களுக்கு முன் மின்னசோட்டா மாநிலத்தில் காவல்துறையினரின் அடாவடி நடவடிக்கையால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்ததை இன்னும் மக்கள் மறந்திருக்கவில்லை. அதற்குள் அதேபோலொரு சம்பவம். 48 மணிநேரத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை தலைமையகத்தில் நீதி கோரி கூடினர்.

சமூகத்தலைவர்கள் தலைமையில் காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து மே 17-20 நகரம் முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்தன. மே 21 முதல் பதட்டங்கள் அதிகரிக்க, ‘லீமெர்ட் பூங்கா’ அருகே காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை விலக்க முயற்சிக்க, அவர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதனால் நகரின் சில பகுதிகளில் கொள்ளை, தீ வைப்பு, சட்ட அமலாக்கத்துறையினருடன் மோதல்கள் நடந்தன. நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 48 மணிநேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நீதி கேட்டு உள்ளூர் போராட்டங்கள் கறுப்பர்கள் குடியிருப்புப் பகுதிகளில் நடந்தது.

இந்தப் போராட்டம் ஏதோ காவல்துறையினரின் ஒருமுறை அராஜகத்திற்காக நடந்தது அல்ல. தலைமுறை தலைமுறையாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் சமூகங்கள், சமத்துவமின்மை, மீறப்பட்ட வாக்குறுதிகள் காரணமாகவும் நடந்தன. கருப்பு, லத்தீன் சமூகங்களுக்கு எதிரான காவல்துறையினரின் வன்முறையின் நீண்ட நெடிய வரலாறும், அராஜக வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதும், பொருளாதார சமத்துவமின்மையும் நிற பேதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் நீதியும் தான் இன்று போராட்டமாக, மக்கள் தங்கள் குரலை அரசிற்கு உணர்த்த வேறுவழியில்லை என்று உணர்ந்ததால் வெடித்தது நகரம்.

கொரோனா தொற்றுப்பரவலின் பொழுது அதிக பாதிப்பிற்கு உள்ளான நகரங்களில் லாஸ் ஏஞ்சலஸ்ம் ஒன்று. அதுவும் சிறுபான்மையினர் வசித்து வந்த குடியிருப்புப் பகுதிகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்குப் பிறகு செல்வ சமத்துவமின்மையும் அதிகரித்தது. பல தொழிலாள வர்க்க குடும்பங்கள், குறிப்பாக, கருப்பு, லத்தீன், புலம்பெயர்ந்த சமூகங்களில் வேலை இழப்புகள், பணவீக்கம், வீட்டு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டன. அருகருகே வசித்து வரும் இந்தக் குழுக்கள் தான் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று காவல்துறையினரால் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும், சட்ட விரோத குடியேற்ற வழக்குகளால் ஏற்பட்டிருக்கும் சமூக பதட்டமும் தொடர் போராட்டத்திற்குக் காரணமாகியுள்ளது.

ஆவணப்படுத்தப்படாத மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் தொகை இந்நகரத்தில் உள்ளது. இதனால் குறைந்த வீட்டுவசதிகளுடன் குறைந்த ஊதியம், அத்தியாவசிய வேலைகளில் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்கிறார்கள். ஆனால் ஜூன் 6,2025ல் குடியேற்ற அமலாக்கத்துறையினரால் லத்தீன் அமெரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட ICE சோதனைகள் நகரம் முழுவதும் அமைதியின்மையைத் தூண்டின. நூற்றுக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள், பல நீண்டகால குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் பிறந்த 14 வயது மெக்சிகன்-அமெரிக்க சிறுவன் ஒரு ஆவணமற்ற நபர் என்று தவறாகக் கருதப்பட்டு அவனது பள்ளியின் முன் கைது செய்யப்பட்டான்.

ஆவணமற்றவர்கள் மீதான நடவடிக்கை என்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த லத்தீன் இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என்று பலரையும் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து அவர்கள் இருக்குமிடத்தையும் குடும்பத்திற்குத் தெரிவிக்காமல் அலைக்கழித்தனர். அதைத்தொடர்ந்து சாலைகளை ஆக்கிரமித்து ICE மற்றும் LAPD உடன் லத்தீன் சமூக மக்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு கட்சிகளிடமிருந்தும், குறிப்பாக பல ஆண்டுகளாக LA மற்றும் கலிஃபோர்னியாவை கட்டுப்படுத்திய ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மீதான கோபத்தால் ‘LA Uprising” என்ற எழுச்சிப் போராட்டமும் மீண்டும் துவங்கியது.

ஜூன் 10-11ல் மோதல்களும் ஊரடங்கு உத்தரவுகளும் தீவிரமாக, போராட்டங்களும் தொடர்ந்தன. ஒரே இரவில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜூன் 14 அன்று LAல் நடந்த “No Kings Day” உச்சக்கட்ட போராட்டம் நாட்டின் கவனத்தை ஈர்த்தது.

போராட்டங்களின் விளைவாகப் பொதுச்சொத்திற்குச் சேதம் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அதிபர் ட்ரம்ப் 2000 தேசிய காவல்படை வீரர்களை மாநில ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பி வைத்தார். இதனை எதிர்த்த கலிஃபோர்னியா மாநில ஆளுநர் நியூசம்-மும் எல்ஏ நகர மேயர் பாஸ்-ம், “அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கை” என்று கண்டித்து ட்ரம்ப் அரசின் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தேசிய காவல்படை துருப்புகள் நகரில் மையம் கொள்ள, மெக்சிகன் கொடிகள் ஏந்திய போராட்டக்காரர்கள் சாலைகளில் பேரணியாகச் சென்று நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகளோடு மோதினர். உள்ளூர் ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை அமல்படுத்தப்பட்டது. போராட்டங்களை “சட்டவிரோதக் கூட்டங்கள்” என்று காவல்துறை அறிவித்தது. ஜூன் 9 அன்று கூடுதலாக 700 கடற்படையினரை ட்ரம்ப் அரசு அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தது.

அரசின் குடியேற்ற நடவடிக்கைகளால் தங்களின் நீண்டகால போராட்டங்கள் கவனத்தைப் பெறவில்லையோ என்று சில கறுப்பின குடியிருப்பாளர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். ஆனால் இது ஒரு இனப்போர் அல்ல. நீதி பிரச்சினை. ஏழை கறுப்பின, லத்தீன், புலம்பெயர்ந்த சமூகங்கள் அனைத்தும் ஒரு அமைப்பால் ஒன்றாக ஒடுக்கப்படுகின்றன. அதனால் தான் பாதிக்கப்பட்ட லத்தீன் (குறிப்பாக, மெக்ஸிகன்-அமெரிக்க) சமூகங்கள் கறுப்பர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் “நாங்கள் இந்த இயக்கத்தை மாற்ற வரவில்லை. அதே வலியின் ஒரு அங்கமாக இருப்பதால் ஆதரவளிக்க இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்கிறோம்” என்று பங்குகொண்டார்கள். அதை சில பழமைவாத ஊடகங்கள் காவல்துறையின் அராஜகத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப மெக்சிகோ நாட்டின் கொடிகளை ஏந்தியவர்களையும் கலகக்காரர்களையும் முன்னிலைப்படுத்தி போராட்டம் குடியேற்றம், தேசியவாதம் பற்றியது என்று தவறாகக் குறிப்பிட்டன. இது போராட்டத்தை நியாயமற்றதாகவும் வெறுப்பைத் தூண்டவும் பயன்படுத்தப்படும் தந்திரமாகும்.

அமெரிக்கா குடியேறிகளின் நாடு. மில்லியன் கணக்கான மக்கள் தங்களை மெக்சிகன்-அமெரிக்கன், இந்தியன்- அமெரிக்கன், இத்தாலியன்-அமெரிக்கன் என்று பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மெக்சிகோ நாட்டுக் கொடியைப் போராட்டத்தில் பயன்படுத்தியது அமெரிக்க அடையாளத்தை ரத்து செய்யாது. அது பாரம்பரியத்தையும் வேர்களையும் கொண்டாடுவதைக் குறிக்கிறது. “கருத்துச் சுதந்திரம்” என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு உரிமையாகும். முதல் திருத்தத்தின் கீழ், அமெரிக்க குடிமக்கள் கொடிகள் உட்பட கலாச்சார, அரசியல் மற்றும் குறியீடு கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் பெற்றுள்ளனர். ஆனால் தங்கள் நாட்டில் நடக்கும் போராட்டத்தின் பொழுது வேற்று நாட்டுக் கொடியைக் கண்டதும் இவர்கள் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இல்லை. ட்ரம்ப் செய்வதே சரி என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். இந்த கொடி விவகாரம் பிரச்சினையைத் திசைதிருப்புவது போல அமைந்து விட்டது.

போராட்டக்காரர்கள் வேண்டுவதெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடுத்து தண்டனை வழங்கல், காவல்துறையில் சீர்திருத்தம், கல்வி, வேலைவாய்ப்புகள், வீட்டுவசதிகளில் சிறுபான்மையினருக்கு அதிக நிதிகளை ஒதுக்கி சட்ட, அரசியல் அமைப்புகளில் இன சமத்துவம், குடியேற்ற சட்ட சீர்திருத்தம் என்பது தான். இன்று, மனித உரிமை மீறல்களை விட சொத்து சேதத்திற்கு முன்னுரிமை அளித்து ‘கலவரம்’ என்ற பெயரில் போராட்டக்காரர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் வேலையும் நடக்கிறது. கலகம் செய்பவர்களால் உண்மையான போராட்டம் கலவரத்தில் முடிய, மக்களின் எதிர்ப்பையும் ஒருகட்டத்தில் சம்பாதித்துக் கொள்கிறார்கள். குற்றவாளிகளாகிறார்கள்.

நாட்டின் இரு பெரிய கட்சிகளும் மாறிமாறி ஆட்சிசெய்தும் ஏன் இதுவரையில் மாற்றங்கள் நிகழவில்லை? குடியரசுக்கட்சியின் மேல் பழிபோடும் ஜனநாயக கட்சி என்ன செய்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.

குடியேற்றம், காவல்துறை, செல்வ மறுபகிர்வுகளில் தீவிர சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால் மிதவாதிகள், புறநகர்ப் பகுதி வாக்காளர்களிடமிருந்தும் எதிர்வினை ஏற்படும் என்ற அச்சம். அதனாலேயே ஜனநாயக கட்சித்தலைவர்களும் ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ல் பெரும்பாலும் இந்த நடவடிக்கைகளைத் தவிர்த்தனர். ஒபாமா, பைடன் ஆட்சிக்காலத்தில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை கொண்டிருந்தாலும் சீர்திருத்த மசோதாக்கள் செனட்டில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. டாக்கா(Deferred Action for Childhood Arrivals) போன்ற குடியேற்ற மாற்றங்கள் ஒருபோதும் சட்டமாக மாறவில்லை. சில தலைவர்கள் கடுமையாக உழைத்தாலும் வேரூன்றிய அதிகாரத்துவமும் அரசாங்கத்தின் மெதுவான செயல்முறையும் அவர்களுக்கு எதிராகவே இருந்தது. தொழிலாளர் சார்புடையவர்களாகவும், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவானவர்கள் என்று பெயர் பெற்றிருந்தாலும் பல ஜனநாயகக் கட்சியினரும் பெரு நிறுவன செல்வாக்கு உள்ளவர்களின் தயவில் தான் அதிகார பீடத்தில் இருக்கின்றனர். இந்த நன்கொடையாளர்கள் தான் ஜனநாயக கொள்கையின் எல்லைகளைத் தீர்மானிக்கின்றனர்.

உற்று நோக்கின், சமத்துவமின்மை அமைப்பில் தான் அமெரிக்க அரசியலே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அரசியல்வாதிகள் பெரும்பாலும் மூல காரணங்களைக் கருத்தில் கொண்டு சமூக முதலீட்டில் அக்கறை கொள்ளாமல் அடக்குமுறையையே கையாண்டு வருகிறார்கள். ‘1992 LA Riots’ க்குப் பிறகு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேலான நிவாரண உதவி உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மிகக்குறைவான உதவியே குடியிருப்பாளர்களைச் சென்றடைந்தது. சீர்திருத்தத் திட்டங்கள் பெரும்பாலும் “குற்றக் குறைப்பு, கும்பல் அடக்குமுறை” போன்றவற்றின் மீதே அதிக கவனம் செலுத்தி, இளைஞர் வழிகாட்டுதல், மனநலப் பராமரிப்பு, மலிவான வீடுகள், ஆவணமற்ற தொழிலாளர்களுக்கான வேலை உருவாக்கம் போன்ற நல்ல திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டாததும் இந்தப் போராட்டங்கள் இன்று வரை தொடருவதற்கு காரணமாகியிருக்கிறது.

தற்பொழுது பள்ளிகள், மருத்துவமனைகள், பணியிடங்களைக் குறி வைக்கும் குடியேற்றத்துறை, காவல்துறையின் வன்முறை, குடும்பங்களைப் பிரிக்கும் நாடுகடத்தல் பற்றி உள்ளூர் ஆர்வலர் குழுக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. தீவிரமானவை என்று முத்திரை குத்தப்படுகிறது. அமெரிக்காவின் கார்ப்பரேட் நலன் சார்ந்த சித்தாந்தங்கள் சமூகங்களை விட அதிக சக்தியைக் கொண்டுள்ளதும் மற்றொரு காரணமாகும்.

ஜனநாயகக் கட்சிக்குள் முற்போக்குவாதிகள், மிதவாதிகள் உட்சண்டைகளால் முக்கிய சீர்திருத்தங்களில் பின்னடைவு ஏற்படவும் காரணமாகிறது.

“சரணாலய அரசு” என்ற முத்திரை கலிபோர்னியா அரசிற்கு இருந்தபோதிலும், உள்ளூர் அதிகாரிகளின் அமைதியான ஒருங்கிணைப்புடன் தான் ICE சோதனைகள் பெரும்பாலும் நடக்கின்றன. அதனால் தாங்கள் நம்பியிருந்த அரசு துரோகம் இழைத்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்தனர்.

2025 LA எழுச்சிக்கு ஜனநாயக கட்சி நேரடிக் காரணம் அல்ல என்றாலும் அது ஆதரிப்பதாகக் கூறும் சமூகங்களில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைப் புறக்கணித்த நீண்ட வரலாற்றின் காரணமாக அது ஓரளவுக்குப் பொறுப்பாகும். அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷமான குடியேற்ற கொள்கைகள் 2025 LA எழுச்சியைத் தூண்டுவதில் பெரும்பங்கு வகித்துள்ளது.

எனவே, ‘2025 LA எழுச்சி’ என்பது ஒரு இளைஞனையோ அல்லது ஒரு தாக்குதலையோ பற்றியது மட்டுமல்ல. 50+ ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கைகள், தோல்வியுற்ற சீர்திருத்தங்கள், அடக்குமுறைகளின் விளைவாகும்.

உலகம் அறிந்த  லாஸ்ஏஞ்சலஸ் நகரின் ஹாலிவுட் அடையாளத்திற்குப் பின்னால் உள்ள சமத்துவமின்மை, வலி, எதிர்ப்பு, ஏழ்மையின் நினைவூட்டலே 2025 கலவரங்கள்.  ‘LA Uprising’ என்று போராட்டக்காரர்களும் ‘LA Riots’ என்று அரசு சார்பு ஊடகங்களும், ஆளும் அரசும் விளித்தாலும் இது காலம்காலமாக ஒதுக்கப்பட்ட சமூகங்களின் மீது அரங்கேறி வரும் அநீதிக்கு எதிரான ‘எழுச்சி’ப் போராட்டமே.

உடைந்த ஜன்னல்களும் எரிந்த கட்டிடங்களும் போராட்டத்தின் விளைவால் ஏற்பட்டது. அதைவிட மக்களின் நம்பிக்கைக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான சேதத்திற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? நகரம் தன் ஆன்மாவை சரிசெய்து கொள்ளுமா அல்லது வரலாற்றை மீண்டும் தொடருமா என்பது அடுத்த நிகழ்வுகளில் தெரியும். நகரில் உள்ள சுவர் சித்திரத்தில் “நாங்கள் பழிவாங்க விரும்பவில்லை. எங்களுக்கு எதிர்காலம் வேண்டும்” என்ற வாசகத்தின் பின்னே இருக்கும் வலியை இனியாவது அரசு உணர்ந்து நடந்து கொள்ளுமா?

“தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி”. அரசு பொறுப்பேற்றுத் தன்னைத் திருத்திக்கொள்ளாவிடில் மக்களும் நகரமும் வெகுண்டெழும் என்பதே இந்தப் போராட்டங்கள் நமக்கு உணர்த்தும் உண்மை.

Saturday, July 5, 2025

ஸ்குயிட் கேம்

உலகம் கொரோனா அரக்கனின் பிடியிலிருந்து மெல்ல தப்பித்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் 2021ல் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான கொரியன் நாடகத்தொடர் 'ஸ்குயிட் கேம்'. பார்த்தவர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் குழந்தைகள் விளையாட்டுகளை வைத்து "மரண பயத்த காமிச்சிட்டான் பரமா" என்று சொல்ல வைத்தது.


 பணப்பிரச்சினைகளில் தவிப்பவர்களைக் குறிவைத்து ஆசையைத் தூண்டுகிறது ஒரு கூட்டம். மாட்டிக் கொண்ட ஆட்களைப் பிடித்து ஒரு தீவினுள் அடைத்து உயிரைக் கொல்லும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள். ஒவ்வொரு விளையாட்டின் முடிவில் இறந்தவர்களின் பணத்தைச் சேர்த்துக் கொண்டே செல்கிறார்கள். கண்முன்னே குவிந்து கொண்டே செல்கிறது பணம். இறுதியில் வென்றவருக்கு அனைத்துப் பணமும் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்குகிறது கூட்டம். "பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்". இதைத்தான் விதவிதமான விளையாட்டுகளின் மூலம் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து வெற்றிப்பணத்திற்காக மனித மனம் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் மாறுவான் என்பதை விறுவிறுப்பான தொடராக எடுத்திருந்தார்கள். அதில் வரும் பொம்மை "ரெட் லைட் க்ரீன் லைட்" என்று கண்ணை உருட்டும் போதெல்லாம் நமக்குப் பதறுகிறது.

மனித நேயமுள்ள கதாநாயகன், நண்பனாக இருந்தவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதிரியாக மாறுவான் என்று சில கதாபாத்திரங்கள். ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகள், சில நேரங்களில் அடுத்தவரைக் கொல்கிறது. சில நேரங்களில் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற பணத்தாசை அதிகரிக்க அங்கே மனிதம் தோற்றுப் போவதைத் தான் அழகான ஆனால் வன்முறை நிறைந்த காட்சிகளுடன் எடுத்திருந்தார்கள்.

இரண்டாவது பாகமாக வெளிவந்த தொடரில் வெற்றி பெற்ற கதாநாயகன் உயிர்களைக் கொல்லும் இந்த விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க காரணமானவர்களைக் கொல்ல வெறிகொண்டு அலைவான். முன்பு வெற்றி பெற்ற ஒருவனே இந்தத் தொடரில் விளையாட்டை நடத்தும் மர்ம மனிதனாக வலம் வருவான். இதற்கிடையில் காவல்துறையும் இந்த அரக்கர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். உள்ளிருக்கும் மனிதர்கள் உயிர் விளையாட்டை ஆடுபவர்களோடு சண்டையிட்டுப் போராடுவார்கள். முடிவில் தோற்றுப்போகிறார்கள்.

ஒரு செயல்முறையை மாற்ற அதனோடு வாழ்ந்து போரிட வேண்டும் என்பதை உணருகிறான் கதாநாயகன்.

இந்த வருட இறுதியில் வெளிவருவதாக இருந்த மூன்றாவது பாகம் திடீரென ஜூன் மாதமே வெளிவந்து விட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. சிரமேற்கொண்டு பார்த்து முடித்தேன்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா! வன்முறையோ வன்முறை. கடைசி பாகம் என்பதாலோ?

இதிலும் பணத்திற்காகவும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஒருவரை ஒருவர் மட்டுமன்றி அங்குப் பிறந்த குழந்தையையும் கொல்ல மனிதர்கள் செல்வார்கள் என்பதையும் பெற்ற மகனை விட ஒரு இளம் தாயைக் காப்பாற்ற ஒரு தாய் எந்த தியாகத்தையும் செய்வாள் என்று மனித நேயத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் காட்சிகளுடன் விறுவிறுப்பாகவே செல்கிறது இந்தத் தொடரும்.

இறுதியில் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறான் கதாநாயகன். முகமூடி அணிந்திருந்தாலும் நெஞ்சில் ஈரம் கொண்டவனாக குழந்தையைக் காப்பாற்றும் முன்னாள் வெற்றியாளன் இந்நாள் வில்லன்.

இந்த குரூர விளையாட்டை ரசிக்கும் பணம்படைத்த செல்வந்தர்கள் ஏழ்மையோடு விளையாடுவதையும் அவர்கள் அல்லாடுவதையும் ரசிக்கும் மனப்பாங்கை விவரிக்கிறது தொடர். இறுதியில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தெருவில் ஏழைகளைக் குறிவைக்கும் கூட்டம் இன்னும் இந்த கொடிய விளையாட்டை கொரியா தாண்டி நடத்திக் கொண்டிருக்கிறது என்று முடித்திருக்கிறார்கள். அதாவது, உலகெங்கிலும் செல்வந்தர்களின் ஆதிக்கம் என்பது ஏழ்மையை எவ்வாறெல்லாம் தங்களுடைய விளையாட்டிற்காக/ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும்/கொல்லும் என்பதை சொல்லாமல் சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு.

வலிமையுள்ளவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் வலிமையற்றவர்களின் நிலையைத்தான் பறைசாற்றுகிறது இந்தத் தொடர்கள். கொடிய உலகில் மனித நேயத்தைக் காப்பாற்றுபவர்கள் சிறந்த மனிதர்களாகிறார்கள் இந்தத் தொடரின் நாயகனைப் போல!

"ஸ்குயிட் கேம்" சமூகத்தைப் பறைசாற்றுகிறது.

ஒருவரின் செயலை வைத்து அவரை எடை போடுவதை விட அவரின் நிலையிலிருந்து உணர வேண்டும். நெருக்கடிக்கு உள்ளாகும் பொழுது மனித மனம் எந்த எல்லைக்கும் செல்லும் என்று ஒருவரை ஒருவர் வெறிகொண்டு தாக்கும் பொழுது புரிய வைக்கிறது. கொடிய உலகில் கருணையுடன் நடந்து கொள்வது பலவீனம் அல்ல. பலம் தான் என்ற உண்மையை உணர வைக்கிறது.

ஒவ்வொரு பாகமும் புதிய வீரர்கள், புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினாலும் கொடிய விளையாட்டுகளும் முடிவுகளும் மாறவில்லை. இந்த விளையாட்டுகள் உலகின் உண்மையான போராட்டங்களை பிரதிபலிக்கின்றன. அமைப்புகளை மாற்றாவிட்டால், தலைமுறை மாறினாலும் வலி மட்டும் தொடர்ந்திருக்கும் என்பதை உணர்த்துகிறார் இயக்குநர்.

இறுதியில் நல்ல தலைவன் என்பவன் பரிசைப் பற்றிக் கவலைப்படாமல் நீதிக்காகப் போராடுபவனாக, மற்றவர்களைக் காப்பாற்றுபவனாக இருப்பான். நம்மை அழிக்க வடிவு செய்யப்பட்ட உலகில், மனித நேயத்துடன் இருப்பதே சக்திவாய்ந்த எதிர்ப்பு என்ற போதனையைக் கற்றுக் கொடுக்கிறது இறுதித்தொடர்.




ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...