Tuesday, February 1, 2022

விடிவதற்கு முன் - அசோகமித்திரன்

எண்பதுகளில் தமிழகத்தில் வளர்ந்தவர்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்ன என்பது நன்கு தெரியும். அதுவும் கோடைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் குழாயடியில் வரிசையில் காத்திருக்கும் எவர்சில்வர், பித்தளை, பிளாஸ்டிக் என்று சிறிதும் பெரிதுமாக பானைகள், குடங்கள், வீட்டு வேலைகளை அவசர கதியில் முடித்து விட்டு ஓடி வரும் பெண்கள், தங்கள் பாத்திரங்களுக்கு காவலுக்காக காத்திருக்கும் குழந்தைகள், தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை எடுத்துச் செல்ல சில ஆண்கள் என்று பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டது இந்த கதை.

எங்கள் வீட்டில் சாயப்பட்டறைக்காக அதிக தண்ணீர் தேவைப்படும். அடிக்கடி மோட்டார் போட்டு கிணற்று நீரை எடுத்தால் மோட்டார் ரிப்பேர் ஆகி விடும். ஒரு மணி நேரம் ஓட விட்டு, இரண்டு மணி நேரம் இடைவேளை. இப்படித்தான் தண்ணீர் தொட்டியை நிரப்புவோம். அது போக, வீட்டில் தண்ணீர்க் குழாய் இருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரத்தில் இரண்டு நாட்கள் என்று பஞ்ச காலத்தில் அரசாங்கம் தண்ணீர் விடும் பொழுது அதையும் விடாமல் உறைகளில் சேர்த்து வைப்போம். நூல்களை அலச அத்தனை தண்ணீர் தேவைப்படும்!

வீட்டில் குழாய் இருக்கிறது என்று தெரிந்து எங்கெங்கிருந்தோ மக்கள் ஒரு பானை தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்க, அம்மாவும் அனுமதிப்பார். அங்கு சாதி, இனம், மதம் எல்லாம் இருக்காது. சக மனிதர்களின் வேதனைகளும் கஷ்டங்களும் தான் தெரியும். சில நேரங்களில் குழாயைத் திறந்தால் வரும் தண்ணீர், பல நேரங்களில் பம்ப் வைத்து அடித்தால் மட்டுமே வரும். வீட்டில் மோட்டர் வைத்து பலருக்கும் தண்ணீர் கொடுத்திருக்கோம். சட்டப்படி தவறு தான். ஆனால், வேறு வழியில்லை. எங்கள் தெருவில் இருந்த அந்தோணி என்பவர் வீட்டில் மோட்டர் வைத்து அவரும் அவர் பங்குக்கு தண்ணீர் கொடுப்பார்.

"தண்ணீர் தண்ணீர்" என்று பாலச்சந்தர் எடுத்திருந்த படத்தில் தமிழ்நாட்டின் பஞ்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அன்றிருந்த நிலை இன்று இல்லை. அந்த கொடுமையான பஞ்ச நாட்களில் இருந்து கற்றுக் கொண்ட மாதிரியும் தெரியவில்லை. ஆறு, ஏரி, குளங்களில் மணல் திருடு, நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டி மழைத்தண்ணீர்நிலத்தடியைச் சேரும் பாதையை அடைத்து விட்டு பாட்டில்களில் வரும் தண்ணீரையும் கேன் தண்ணீரையும் நம்பி மாடி வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏதோ சில நல்ல உள்ளங்கள் எதிர்கால சந்ததியினருக்காக குளங்களைத் தூர் வார, மதுரையில் தெப்பக்குளம், கண்மாய்கள், வைகை ஆறு தற்போது நிரம்புகிறது. மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வர வேண்டும். இன்று நினைத்துப் பார்த்தால் நிலத்தடி நீரை உறிஞ்சிய நாம் அதனைப் பெருக்கும் வழிகளை மறந்து விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. மழை நீர் நிலத்தில் சேர்ந்து நிலத்தடி நீரைப் பெருக்கும் வழிகளைக் கண்டறிந்து செயல்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அரசும் உணர வேண்டும். சென்னை வெள்ளம் நினைவுப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. நாம் தான் உணராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தன்னலமில்லாத மக்களுக்கான அரசும், பொறுப்பான மக்களால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இந்தியாவில் விரைவில் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பிபிசி தயாரித்த குறும்படத்தில் விளக்கியிருக்கிறார்கள். அது எத்தகைய கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைக்கவே கலக்கமாக இருக்கிறது.

அசோகமித்திரனின் இக்கதையில் தண்ணீருக்காக எளிய மக்கள் படும் அவலத்தைக் கண் முன்னே கொண்டுவந்திருக்கிறார். மக்களோடு கால்நடைகளும் தண்ணீருக்காக அலைகிறது. கதையின் முடிவில் தன்னுடைய கஷ்டத்திலும் கன்றுக்குட்டிக்குத் தண்ணீர் கொடுக்கும் பங்கஜம் போல பல மனிதர்கள் இருக்க இன்னும் மழை பொழிகிறது.

இதுதான் அசோகமித்திரன். தினம் தினம் நடக்கும் வாழ்க்கையைச் சொல்லி நம்முடைய அனுபவங்களையும் நினைவுகளையும் கிளறி விடுகிறார்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...