Friday, February 4, 2022

Mad for each other

அப்பாஆஆஆ! என்னா கத்தல் என்னா கத்தல்! பார்க்கிற நமக்கே பீதியாகி விடுகிற அளவுக்கு முதல் இரண்டு மூன்று பாகங்கள் ஒரே கோபம், காட்டுக்கத்தல். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு பார்த்தால், சமூகத்தால் பாதிக்கப்பட்ட இருவர் முட்டல் மோதலில் துவங்கி தம்மைச் சுற்றியுள்ளவர்கள் தான் பைத்தியங்கள் என்று உணரும் வேளையில் இருவரும் உள்ளத்தளவில் நெருங்கியிருப்பார்கள். கிளைக்கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது.

இதைக் கண்டால் பயம், அதைக் கண்டால் பயம் எனும் 'தெனாலி' பெண் கதாபாத்திரம். திருமணமான ஆணைக் காதலித்த குற்றத்திற்கு அவன் மனைவியிடம் அவமானப்படுகையில் தான் அவளுக்கு உண்மை தெரிகிறது எப்படிப்பட்ட மூடனை காதலித்தோம் என்று! அவனோ சைக்கோ பேர்வழி. அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க, தன்னை யாரோ தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பயத்துடனே வாழும் சிறிது மனம்பிறழ்ந்த கதாநாயகி. வேலையிடத்தில் ஏற்பட்ட பிரச்னையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு மனசிகிச்சைப் பெற்று வரும் கதாநாயகன்.

அமெரிக்காவில் ஒருவர் மன பாதிப்புக்கு உள்ளானால் மனநல சிகிச்சைப் பெறுவது சர்வ சாதாரண விஷயம். அதுவும் இந்த கொரோனா காலத்தில் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் மன உளவியலார்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவர்களுடைய வேலையே நோயாளிகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதும் தகுந்த கேள்விகளைக் கேட்டு நோயாளிகளின் சிந்தனைப் போக்கை மாற்றுவதும் தான். அதைச் சரியாக பிரதிபலித்திருக்கும் அந்த கதாபாத்திரம். தொடரின் துவக்கமே அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.

குடும்ப வன்முறை எத்தகைய மனச்சோர்வையும் பயத்தையும் பாதிப்புகளையும் தரவல்லது என்பதை மிக அழகாக இத்தொடரில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வருவது அத்தனை எளிதல்ல. அதனை நன்கு புரிந்து கொண்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க முடியும். கதாநாயகன், நாயகியின் வலியைப் புரிந்து கொண்டு அவளின் காயத்திற்கு மருந்தாக இருப்பதும் எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் தவிர்த்துக் கொண்டிருந்தவர்கள், ஒருவருக்கொருவர் இல்லாத நிலையாக காதல் அரும்பும் நேரம், இருவருக்குள்ளும் மாறுதல்கள் துவங்குகிறது.

"If you can't avoid it, fight it.
If you can't avoid it, enjoy it." என கூறும் மனநல சிகிச்சையாளருக்கு
"I am now at a point where I enjoy fighting it." என பதில் கூறுவதில் அவனுக்குள் மாற்றம்.

பெற்றோர்களின் மனநிலையையும் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் கூட நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நம்மூரில் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு கிரக நிலையின் சாதக பாதகங்களை அறிந்து கொள்வது போலவே கொரியர்கள் 'shaman'களிடம் தஞ்சம் புகுகிறார்கள்.

குறையற்ற மனிதர்கள் என்று இவ்வுலகில் எவருமில்லை. அதையும் மீறி ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் வலியும் வேதனைகளும் மற்றவரைப் புரிந்து கொண்டு அன்பாக இருக்க முடியும் என்பதை அவர்கள் பாணியில் சொல்லியிருக்கிறார்கள். சாய்ந்து கொள்ள தோளும், காது கொடுத்து கேட்கும் நம்பிக்கையான மனிதர்கள் மட்டும் கிடைத்து விட்டால் வாழ்க்கையில் இழந்த இன்பங்களைப் பெறலாம். எதுவும் சாத்தியம். ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அவரை எடைபோடும் சமூகத்தில் பயத்தைத் துணிவாக எதிர்கொள்வது எப்படி, மூன்றாம் பாலினத்தவர் என்று பலவற்றையும் தொட்டுச் செல்கிறது. கண்டதும் காதல் கதை கிடையாது. பல நாட்கள், பல சண்டைகள், சில புரிதல்கள் என்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் எதார்த்த காதல். 

ஆடம்பரமான அலங்காரங்கள், உடைகள், கவர்ச்சிகரமான நாயக, நாயகிகள் இல்லையென்றாலும் சமூக பிரச்னைகளை வெளிக்கொணர்ந்து பார்க்க வைத்து விட்ட தொடர்.

இப்படியெல்லாம் ஒன்றை தமிழில் எதிர்பார்க்க முடியுமா😒😒😒 

























No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...