Sunday, February 27, 2022

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

அமெரிக்க அதிபர் பைடனின் ஒரு வருட ஆட்சியைப் பற்றின என் கட்டுரை சொல்வனம் இதழ் 264ல் வெளியானது. அதன் சுட்டி இங்கே 

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் முதல் நூறு நாட்களில் அவரால் சட்டபூர்வமாக்கப்படும் தேர்தல் வாக்குறுதி மசோதாக்கள் அதிக கவனம் பெறுகிறது. முதல் ஒரு வருடத்தில் ஆளும் அரசின் மீதான நம்பிக்கை, பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், பணவீக்கம் போன்றவை மிக முக்கிய காரணிகளாக இடைத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணத்தால் அதிபரின் நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக அரசியல் வல்லுநர்களாலும் மக்களாலும் கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் கொரோனா தொற்றுப்பரவலைக் கையாளும் விதமும் ஒரு முக்கிய காரணியாக அங்கம் வகிக்கிறது எனபதை மறுக்க முடியாது.

நவம்பர் 3, 2020 அன்று நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வெளிவராத நிலையில் குடியரசுக்கட்சியினரின் ஆதரவாளர்கள் குறிப்பாக, வெள்ளையர்கள் நடத்திய பாராளுமன்ற தாக்குதல், அரசியல் வரலாற்றில் கறைபடிந்த நிகழ்வாகி உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. நாடு பிளவுப்பட்டு நின்றிந்த நேரம். தொற்றுப்பரவலால் வேலையில்லா திண்டாட்டம், நிலைகுலைந்த பொருளாதாரம், மருந்து தட்டுப்பாடுகள், மக்களின் இறப்பு என இக்கட்டான சூழலில் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்று ஒரு வருடமும் முடிந்து விட்டது.

“தேசத்தின் ஜனநாயகத்தைக் காத்து பிளவுபட்டிருக்கும் நாட்டின் ஒற்றுமையை மீட்டெடுக்கவும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எதிர்கட்சியுடன் இணைந்து பணியாற்றி சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்துவோம்” என பதவியேற்பின் போது அதிபர் பைடன் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதனைத் தொடர்ந்து கோவிட் நிவாரணம், இருதரப்பு உள்கட்டமைப்பு சீரமைப்பு, ‘பில்ட் பேக் பெட்டர்’ (Build Back Better) மசோதாக்கள் பைடனால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவிட்-19 நிவாரண மசோதா

தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதே பைடன் அரசின் முதன்மையான சவாலாக இருந்தது. அவரது முதல் ஆண்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை விரிவுபடுத்தியதில் தற்போது 76% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸும் 64% பேர் முழுமையாக இரண்டு டோஸ்களும் போட்டுள்ளனர். மருந்து, மருத்துவ வசதிகள், செல்வாக்கு என வளர்ச்சி பெற்ற நாடாக இருந்தாலும் மற்ற நாடுகளை விட அதிகளவில் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு இதுவரையில் 800,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். இது கிட்டத்தட்ட 44% மதுரை மக்கள் தொகை அளவு! கடந்த 11 வாரங்களில் மட்டும் 100,000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததில் அதிக கொரோனா உயிரிழப்புகள் நடந்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. குடியரசுக்கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களிலும் தடுப்பூசியை எதிர்ப்பவர்களாலும் தான் இறப்பு எண்ணிக்கை அதிகமாவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அதிபராக பதவியேற்ற முதல் ஆறு மாதங்களில் சில எதிர்ப்புகளைச் சமாளித்து $1.9 ட்ரில்லியன் “கோவிட்-19 நிவாரண மசோதா”வை இருகட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றினார் அதிபர் பைடன். இதன் மூலம் நாடு முழுவதும் சமூக தடுப்பூசி தளங்களை அமைத்தல், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு, விநியோக பற்றாக்குறை சிக்கல்களை நீக்குதல், உயர்தர சிகிச்சைகளில் முதலீடு செய்தல், பரவலைக் கட்டுப்படுத்த ஊதியத்துடன் கூடிய நோய்வாய்ப்பட்ட விடுப்பு வழங்குதல், பெரும்பான்மையான K-8 பள்ளிகளை பாதுகாப்பாக திறக்க தேவையான முதலீடுகளைச் செய்தல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகங்களுக்கு ஆதரவு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களின் வேலைகளைப் பாதுகாத்தல், அமெரிக்கா முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு $1,400க்கான காசோலைகள், வேலையின்மை காப்பீட்டை நீட்டித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடியின் சுமையைத் தாங்கும் உழைக்கும் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா நுண்ணுயிரிலிருந்து மக்கள் தப்பித்து மரபணு பிறழ்வு கொண்ட வீரியமிக்க டெல்டா, ஓமிக்ரானுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் எண்பது மில்லியன் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டிலேயே விரைவான சோதனைகள் செய்யும் வகையில் அரசே இலவசமாக பரிசோதனைப் பொருட்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பள்ளிகளுக்கும் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் விரைவில் தடுப்பூசிகள் செலுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இருதரப்பு உள்கட்ட சீரமைப்பு மசோதா

நாட்டில் பொருளாதார நலிவு ஏற்படும் பொழுதெல்லாம் உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அமெரிக்க அரசின் வாடிக்கை. அவ்வழியில் பைடனின் “இருதரப்பு உள்கட்டமைப்புச் சட்டங்கள்”, பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கவும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், பல புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி பொருளாதாரத்தை முன்னேற்றவும் அமலாக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை உள்ளடக்கிய செலவுகளை பெருநிறுவனங்களின் மீதான வரிகளை உயர்த்துவதன் மூலம் செயல்படுத்த விரும்பும் பைடன் அரசின் முயற்சிக்கு குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு கட்சியின் ஆதரவுடன் செயல்படுத்த வேண்டிய திட்டம் என்பதில் பைடன் உறுதியாக இருந்ததால் துவக்கத்தில் $1.7 ட்ரில்லியன் திட்டமாக வரையறுக்கப்பட்டு பல இழுபறிகளுக்குப் பிறகு குடியரசுக்கட்சியினரின் ஒப்புதலுக்காக $500 பில்லியனைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இத்திட்டம். இதனால் அதிவேக இணையம், நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைத் திட்டங்களில் செலவழிக்க திட்டமிட்டிருந்த பணத்தின் அளவு குறையும். வயதான மற்றும் ஊனமுற்ற அமெரிக்கர்களுக்கான வீட்டுப் பராமரிப்பில் நீண்ட கால முதலீடு செய்தலிலும் குடியரசுக்கட்சியினர் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை மேலும் குறைத்தனர்.

நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரிக்கையில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பெரியவர்களுக்கு ஏற்படும் பல வித உடல், மன நோய்களில் இருந்து காக்க, உள்கட்டமைப்புச் சட்டத்தின் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் $55 பில்லியன் முதலீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பழங்குடிகள் மற்றும் பின்தங்கிய சமூகங்களில் இனி ஈய குழாய்கள் பயன்பாட்டில் இருக்காது.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிவேக இணைய வசதி கிடைக்கவும் இணையச் சேவைக்கான விலைகளைக் குறைக்கும் திட்ட மசோதாக்களும் இயற்றப்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வண்ணம் மின்னணு வண்டிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசு அதற்குத் தேவையான சார்ஜர்களை நெடுஞ்சாலைகளில், வேலை செய்யும் இடங்களில், மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிறுவ இந்தச் சட்டம் நிதியளிக்கும்.

எரிசக்தி துறையின் கூற்றுப்படி, மின் தடைகளால் அமெரிக்க பொருளாதாரம் ஆண்டுதோறும் எழுபது பில்லியன் டாலர்கள் வரை இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இச்சட்டத்தின் மூலம் $65 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு, அதிநவீன சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்களின் மேம்பாடு, செயலாக்கதிற்காகப் பயன்படுத்தப்படும்.

வறட்சி, வெப்பம், வெள்ளம், காட்டுத்தீ, பனிப்பொழிவு என தீவிர வானிலை மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள், இணையத் தாக்குதல்களின் பேராபத்திலிருந்து மக்களைக் காக்கவும், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான செயல்படாத தொழில்துறை, சுரங்க நிலங்கள்,எண்ணெய் கிணறுகளை மீட்டெடுத்துச் சுற்றுப்புறச்சூலை மேம்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கியுள்ள உள்கட்ட சீரமைப்பு மசோதாவிற்கு இருகட்சிகளும் ஆதரவு தெரிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 குடியரசுக்கட்சி செனட்டர்கள் அதுவும் எதிர்க்கட்சி செனட் தலைவர் மிட்ச் மெக்கன்னல்-ன் ஆதரவு கிடைத்தது அதிபருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

“பில்ட் பேக் பெட்டர்” மசோதா

அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகளும் சட்ட திட்டங்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகவும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவும் இருப்பதை மாற்றி அமைக்கும் விதமாக “பில்ட் பேக் பெட்டர்” மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தார் பைடன். தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் மசோதாவில் உள்ள திட்டங்கள் பின்வருமாறு:

1. குழந்தைப் பராமரிப்புத் திட்டம்

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் கணிசமான வருவாயைத் தங்கள் குழந்தைகளின் பராமரிப்பிற்காக செலவிட வேண்டியுள்ளதால் மூன்று மற்றும் நான்கு வயது குழந்தைகளுக்கான பள்ளி, குழந்தைப் பராமரிப்பிற்கான செலவுகளை அரசே ஏற்று பெற்றோர்களுக்கு உதவும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சிறப்பு.

2. வயதான அமெரிக்கர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் திட்டம்

தற்போது, ​​800,000க்கும் அதிகமான அமெரிக்கர்கள் வீட்டிலிருந்து பராமரிக்கும் மருத்துவச் சேவைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். அவர்களின் மருத்துவச் செலவுகளையும் அந்தந்த குடும்பங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைக் குறைக்க, “பில்ட் பேக் பெட்டர்” கட்டமைப்பில் அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை நிரந்தரமாக மேம்படுத்த அரசு முதலீட்டைச் செய்யவிருக்கிறது.

3. குழந்தை வரிவிலக்கு மாற்றத் திட்டம்

2021ல் குழந்தைகளுக்கான வரிவிலக்கு (தகுதி அடிப்படையில்) $2000 என இருந்தது. பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து குடும்பச் செலவுகளை ஈடு கட்ட உதவும் வகையில் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆறு வயதை எட்டாத ஒவ்வொரு தகுதியுள்ள குழந்தைக்கும் $3,600ம், ஆறு முதல் 17 வயது வரை தகுதிபெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் $3,000ம் என இத்திட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டம்

பைடன் அரசின் தேர்தல் அம்சங்களில் சுற்றுப்புறச்சூழல், பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் முக்கியமானது. அதன் தொடர்பில் அரசும் பல முயற்சிகளை செய்து வருகிறது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃகு மற்றும் பிற பொருட்களுடன் காற்றாலை, விசையாழி கத்திகள் முதல் சோலார் பேனல்கள், மின்சார கார்கள் வரை அமெரிக்காவிலேயே கட்டமைக்க, மானியங்கள், கடன்கள், வரிச்சலுகைகள் அளித்து சுற்றுபுறச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் ஆற்றலைத் தயாரிக்க முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் கட்டமைப்பை அதிகரித்து வேலைவாய்ப்பினையும் பெருக்குவதே இதன் முதன்மை குறிக்கோள். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துறைமுக மின்மயமாக்கலுக்கு நிதி, தூய்மையான போக்குவரத்து மானியங்கள் மூலம் , பேருந்துகள், டிரக்குகள் கட்டமைப்பில் மாற்றங்கள், பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்காக 40% முதலீட்டின் லாபங்கள் செலவிடும் திட்டங்கள் இதில் அடங்கும். கடலோர மறுசீரமைப்பு, வன மேலாண்மை மற்றும் மண் பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான பின்னடைவு மற்றும் இயற்கை தீர்வுகளை மேம்படுத்த உதவுகிறது இச்ச்சட்டம். இந்த கட்டமைப்பு விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் வன நில உரிமையாளர்களுக்கு லாபகரமானதாகவும் சுற்றுபுறச்சூழலைப் பாதிக்கும் உமிழ்வைக் குறைப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும்.

5. மலிவு விலை சுகாதார சேவை விரிவாக்க திட்டம்

இத்திட்டம் அமலாக்கப்பட்டால் இனி வரும் காலங்களில் மருந்துகளின் விற்பனை விலை நிர்ணயத்தில் அரசாங்க சுகாதார காப்பீட்டு நிறுவனத்தின் பங்கும் இருக்கும். இதுவரையில் மருந்து நிறுவனங்கள், சுகாதார காப்பீட்டுத் துறை, மருந்தகங்கள் மட்டுமே மருந்துகளின் விலையை நிர்ணயித்து வருகிறது. பணவீக்கத்தை விட மருந்துகளின் விலையை உயர்த்தினால் உற்பத்தியாளர்கள் வரி அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. இன்று மில்லியன் கணக்கான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆண்டுக்கு $6,000க்கு மேல் மருந்துகளுக்காக செலவு செய்வதைக் குறைக்க உறுதி செய்கிறது இத்திட்டம். இன்சுலின் விலையையும் குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மாதம் $35மட்டுமே செலுத்தி இன்சுலின் மருந்துகளை வாங்கவும் வழி செய்கிறது.

ஒபாமாகேர் பராமரிப்புச் சட்டத்தின் மூலம் காப்பீடு வாங்கும் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கான பிரீமியத்தை குறைக்கவும் , காப்பீடு இல்லாத மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல்நலக் காப்பீட்டை இத்திட்டத்தின் மூலம் பெறுவார்கள் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இருகட்சியினரின் ஆதரவும் இத்திட்டத்திற்கு கிடைக்குமா என தெரியவில்லை.

6. நடுத்தர மற்றும் பின்தங்கிய வர்க்கத்தை வலுப்படுத்தும் திட்டம்

உயர்நிலைப்பள்ளி வரை அனைவருக்கும் கிடைக்கும் இலவச கல்வி, கல்லூரியில் பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் இன்றைய நிலையை “பில்ட் பேக் பெட்டர்” கட்டமைப்பு மாற்றியமைக்க உதவுகிறது. சிறுபான்மையினருக்கான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சேவை நிறுவனங்களில் மாணவர்கள் கல்வி கற்கும் திறனை உருவாக்க, ஆராய்ச்சி உள்கட்டமைப்பை நவீனமயமாக்க , குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கவும், அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்கான பயிற்சி அளிக்கவும், துறை சார்ந்த பயிற்சி வாய்ப்பை உருவாக்கவும் பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யவும் இத்திட்டம் உதவும்.

சுமார் 17 மில்லியன் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க, ஈட்டப்பட்ட வருமான வரிச்சலுகை வரம்புகள் (EITC) நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய கிராமப்புற கூட்டாண்மை திட்டத்தின் மூலம் பூர்வகுடிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படும்.

பல மில்லியன் அமெரிக்க குழந்தைகளுக்கு இலவச பள்ளி உணவை விரிவுபடுத்தி ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும் திட்டமும் இதில் அடங்கும்.

நாட்டின் மிகப் பெரிய பிரச்சனைகளுள் ஒன்றான குறைந்த விலையில் வீட்டு வசதி என்பது ஏழைகளுக்கு கனவாகவே இருந்து வருகிறது. சமத்துவமான சமூகங்களை நிர்மாணிக்க அரசாங்கமே ஒரு மில்லியன் வீடுகளை கட்ட உதவி செய்வதன் மூலம் வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான விலை அழுத்தங்களைக் குறைக்கும். அமெரிக்கா முழுவதிலும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் உள்ள பொது வீட்டுவசதிப் பங்குகளின் மூலதன தேவைகளையும் நிவர்த்தி செய்யும்.

குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரித்து மனிதாபிமானமற்ற முறையில் ட்ரம்ப் அரசு எல்லையில் மேற்கொண்ட குடியேற்ற நிகழ்வுகளை யாரும் மறந்திருக்க முடியாது. குடியேற்ற பின்னடைவுகளைக் குறைக்க சட்டப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துதல், புகலிட அமைப்பு மற்றும் எல்லைச் செயலாக்கத்தைத் திறமையானதாகவும் மனிதாபிமானதாகவும் மாற்றுவதற்கான குடியேற்ற சீர்திருத்தத்தில் $100 பில்லியன் முதலீடு செய்வது இந்த கட்டமைப்பில் அடங்கும்.

மக்களுக்கான இத்திட்டங்களில் சிலவற்றை குடியரசுக்கட்சியினரும் பைடன் அரசின் கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக, ஜோ மன்ச்சின்(வெஸ்ட் வெர்ஜினியா செனட்டர்), கிரிஸ்டன் சினேமா (அரிசோனா செனட்டர்)வின் எதிர்ப்பால் மெஜாரிட்டி ஒப்புதலைப் பெற அதிபர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. “பில்ட் பேக் பெட்டர்” திட்டத்திற்கான $5ட்ரில்லியன் பணத்தை எங்கிருந்து எப்படி பெறுவது என்பதில் தான் சிக்கலே. இத்திட்டங்கள் முழுவதுமாக செயல்பட, செல்வந்தர்கள், முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள் மீது வரி உயர்வுகள் விதிக்கப்பட்டால் நுகர்வோர் மற்றும் தொழிலாளர்கள் மீது தான் அதன் தாக்கம் எதிரொலிக்கும். விலையேற்றம், குறைவான தயாரிப்பு, சேவைத் தரம், பணிநீக்கங்கள் போன்றவை இன்னும் அதிகமாக நிகழும். “பில்ட் பேக் பெட்டர் திட்டங்கள் 125,000க்கும் குறைவான முழுநேர வேலைகளை மட்டுமே உருவாக்கும். நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.48 சதவீதம் இழப்பு ஏற்படும்” என்றும் வரி அறக்கட்டளை மதிப்பிடுகிறது. பத்து வருடங்களுக்கான இத்திட்டங்களுக்கு காங்கிரஸ் கிட்டத்தட்ட மூன்று ட்ரில்லியன் டாலர் கூடுதல் வரிகளைச் சுமத்தினால், அதன் விளைவாக GDP மற்றும் வேலை இழப்புகள் இன்னும் வியத்தகு அளவில் இருக்கும். அதற்காக பணத்தை அச்சிடுவது பொருளாதாரத்திற்கு அதிக பேரழிவையே ஏற்படுத்தும். கோவிட்-19 லாக்டவுன்கள், மீட்பு தொடர்பான அரசாங்க செலவினங்கள், பணத்தை அச்சிடுதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பணவீக்க நெருக்கடியையே சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் இத்திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு மேலும் கூடுதலான சுமையாகவே இருக்கும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். இத்திட்ட ஒப்புதல் பெற, ஜனநாயக கட்சியின் முக்கிய தேர்தல் அம்ச திட்டங்கள் சிலவற்றை சமரசம் செய்ய வேண்டியுள்ளதால் இந்த மசோதா தோல்வியடைந்ததாகவே கருதப்படுகிறது.

இதைத்தவிர, வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஜனநாயக கட்சியினர் தவற விட்டாலும் குடியரசுக்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் சட்டத்தில் பல மாறுதல்களைத் தங்களுக்குச் சாதகமாக கொண்டு வந்துள்ளது ஆளும் கட்சிக்குப் பின்னடைவே. செனட்டில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பைடன் அரசின் ஜோ மன்ச்சின் எதிர்ப்பே காரணமாகி விட்டது.

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மாணவர் கடனை ரத்து செய்யத் தவறியதும் குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற முதல் ஆண்டு முடிவதற்குள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பயனளிக்கும் கோவிட் நிவாரணம், இருதரப்பு உள்கட்டமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியதில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதனால் பதவியேற்பு நாளில் 9 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் 3.9 சதவீதமாகக் குறைந்தது. துவக்கத்தில் அதிபருடைய செயல்திறனுக்கு 56 சதவிகித மக்கள் ஆதரவளித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகளை அவசர கதியில் வெளியேற்றி தாலிபான்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது, கொரோனா கட்டுப்படுத்தலில் நடந்த சில குழப்பங்கள் என மக்களுக்கு அவர் மீதிருந்த நம்பிக்கை பொய்த்து முதல் வருடத்திலேயே அவருடைய செயல்திறனுக்கு 42 சதவிகிதமாக ஆதரவு குறைந்து விட்டது. இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில் ஜனநாயக கட்சிக்கு இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறம், தேசிய பணவீக்கம் நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் எரிவாயு, உணவு, வீடு போன்ற அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து நடுத்தர மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது சீனா, ரஷ்யாவுடன் தொடரும் மோதல் போக்கும், எல்லையில் குடியேற்ற சீர்திருத்தங்களில் மாற்றங்கள் ஏதுமின்றி ட்ரம்ப் அரசின் கொள்கைகளே தொடருவதும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

அரசியலில் இருகட்சியினருடன் இணைந்து பணியாற்றும் சாதுரியம் தனக்கு உள்ளது என்று பதவியேற்பின் போது கூறியவர் “பில்ட் பேக் பெட்டர்’ மசோதா விஷயத்தில் தன்னுடைய கட்சியில் உள்ளவர்களிடம் கூட பெரும்பான்மை பெற முடியாமல் தத்தளிப்பது அவரது நிர்வாகத் திறமையின்மையாக பொலிட்டிகோ நடத்திய கருத்துக்கணிப்பில் 49% வாக்காளர்கள் சந்தேகித்துள்ளனர்.

குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக ஜனவரி 19 கூட்டத்தில் அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை. மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...