Monday, February 28, 2022

நவ கைலாயங்கள்

 என்னுடைய  நவ கைலாயங்கள் - பயணக்கட்டுரை சொல்வனம் இதழ் 265ல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கோவில்களுக்கு குறைவில்லாத மாவட்டங்களில் திருநெல்வேலியும் தூத்துக்குடியும் அடங்கும். புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற நவ திருப்பதிகளும், நவ கைலாயங்களும் அமைந்துள்ளன. வைணவர்களுக்கு நவ திருப்பதிகள் எப்படியோ அப்படித்தான் சைவர்களுக்கு நவ கைலாய திருக்கோவில்கள். இந்தக் கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் உகந்த ஸ்தலமாக வழிபடப்படுகிறது. நவ திருப்பதி கோவில்களில் வெவ்வேறு நாமங்களில் பெருமாள் எழுந்தருளியிருப்பது போல, நவ கைலாயங்களில் வெவ்வேறு பெயர்களுடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பாபநாசம், சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேந்தபூமங்கலம் எனும் ஒன்பது ஊர்களில் கைலாய கோவில்கள் உள்ளன.

மதுரையிலிருந்து அதிகாலை கிளம்பும் பொழுது விடிய மறுத்து கருமேகப் போர்வைக்குள் வானம் கட்டுண்டு கிடந்தது. 'கஜா' புயலின் பேயாட்டத்தில் தென் தமிழகம் கலங்கி இருந்த நேரம். செல்லும் வழியெங்கும் குளிர்த்தென்றலும் கதிரவன் பவனி வராத கார் மேகக்கூட்டங்களுமாய் 'குளுகுளு'வென இதமான காலைப் பயணம். மாநிலத்தில் பல பகுதிகளிலும் சாலைகளை விரிவுப்படுத்துகிறேன் என்று சாலையோர பெரு மரங்களை வெட்டி எறிந்திருந்த காட்சியைக் கண்டிருந்த எனக்கு, பாபநாசம் செல்லும் வழியில் சாலைகளை அலங்கரித்து தோரணங்களாக நிற்கும் மரங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக நிறைவைத் தந்தது. நவ திருப்பதிகளின் தரிசனத்தின் பொழுது நீர்நிலைகள் வறண்டு இருந்த நிலை மாறி இந்த முறை குளங்கள் நிறைந்து அல்லி மலர்கள் பூத்திருக்கும் அழகைக் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கவே, சில பல படங்களைக் 'க்ளிக்' செய்து கொண்டேன்.

வழியெங்கும் புற்றீசல் போல பல உணவகங்கள்! நல்ல கூட்டமும் இருக்கிறது! காலை உணவைத் திருப்தியாக ஹோட்டல் ஆர்யாஸில் உண்டோம். உணவின் சுவையும் தரமானதாக இருக்கிறது. பாபநாசம் செல்லும் வழியில் "காட்டுப்புலி" சுவரொட்டிகளைப் பார்த்தவுடன் தேக்கடி சென்று வந்த ஞாபகம் நினைவிற்கு வந்தது. வழியெங்கும் பச்சைப் பசேலென விளைநிலங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக மதுரையில் காண கிடைக்காத அழகுக் காட்சி! பள்ளிப்பேருந்துகள், கூட்டமாக மூன்று சக்கர வாகனங்கள், புழுதியைக் கிளப்பிக் கொண்டு அதிக டெசிபலில் 'ஹார்ன்' அடித்துக் கொண்டே செல்லும் லாரிகள், பொதிமூட்டைப் பேருந்துகள், 'விர்ர்விர்ர்'ரென பறக்கும் இரு சக்கர வாகனங்கள், சாலையோரக் கடைகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், யாரையும் பொருட்படுத்தாது கால் போன போக்கில் மனிதர்களோடு மனிதர்களாக கால்நடைகள் என காலை நேரத்து காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

'சிலுசிலு' காற்று, சிறு தூறலுடன் பாபநாசத்தை நெருங்க, தொலைவில் ஒரே பனிமூட்டம்! குளிர் அவ்வளவாக இல்லாவிட்டாலும் மக்கள் பலரும் போர்த்திக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தார்கள்! பள்ளி வயதில் குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற பொழுது இக்கோவிலுக்கு வந்திருக்கிறேன். அதற்குப் பிறகு இப்பொழுது தான் வர முடிந்திருக்கிறது!

பொதிகை மலையிலிருந்து பொங்கி வரும் அருவி சமவெளியில் தாமிரபரணி நதியாக துள்ளி ஓடிக்கொண்டிருந்தது. 144 வருடங்களுக்குப் பிறகு 'மகா புஷ்கரணி' திருவிழா முடிந்திருந்தாலும் புண்ணிய நதியில் நீராட அன்றும் மக்கள் குவிந்திருந்தார்கள். கரையோரம் குப்பையும் அழுக்குமாக இருந்தாலும் ஆற்றின் நடுப்பகுதியில் தெளிவான நீரோட்டம். துணிச்சலுடன் சிலர் பொங்கி வரும் ஆற்றில் கற்களைத் தாண்டி நடுப்பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தார்கள். எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை! நடுநடுவே ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் தான்! 'சில்'லென்ற காற்றும் பாய்ந்தோடி வரும் அருவியின் இரைச்சலும் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும் மக்களுமாய் அந்த இடமே ஏகாந்தமாக இருந்தது. குளித்து விட்டு அங்கேயே திறந்த மண்டபத்தில் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார்கள். நீராட வேண்டும் என்ற ஆசையை ஒத்தி வைத்து விட்டு நதியை வணங்கி தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். குளித்து முடித்த பெண்கள் ஈரத்தலையுடன் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தார்கள். மனிதர்களிடமிருந்து உண்ண ஏதாவது கிடைக்குமா என்று மந்திகள் பரிதாபமாக காத்துக் கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலாக 'லாங்குர்' எனும் குரங்கினத்தைக் கண்டேன். சில படங்களை எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம்.

தாமிரபரணியில் நீராடி நவகோள் வரிசையில் சிவனை வணங்க முக்தி கிடைக்கும் என்று அகத்தியர் தன்னுடைய சீடர் உரோமச முனிவருக்கு அறிவுறுத்தி, சிவனை அர்ச்சித்த தாமரை மலர்கள் எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில்கள் எழும்பியது என்பது ஐதீகம். ஒவ்வொரு கோவிலுக்கும் சுவையான தல புராணங்கள், தல விருட்ஷம், புண்ணிய தீர்த்தம் உள்ளன.

எங்களுடைய நவ கைலாய கோவில்களின் தரிசனமும் பாபநாசத்தில் இருந்து தொடங்கியது. மரங்களும் மலைகளும் சூழ, நவக்கிரகங்களில் சூரியனுக்குப் பாத்திரமான பாபநாத ஸ்வாமி திருக்கோவில் அமைந்திருந்த சூழல் மிக ரம்மியமாக இருந்தது. கோவிலின் எதிரே தாமிரபரணி புண்ணிய தீர்த்தம். முகத்திலறையும் வண்ணங்கள் ஏதுமின்றி ஏழு நிலைகள் கொண்ட கோவில் கோபுரம். என் நினைவிலிருந்த இருண்ட கோவில் அன்றும் அப்படியே இருந்தது. அம்மையும் அப்பனும் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளித்த புண்ணியஸ்தலம் இது. பாபங்களைப் போக்கும் இக்கோவிலின் மூலவர் கைலாசநாதர். அம்பாள் லோகநாயகி. இங்கே அம்மை ஸ்ரீஉலகாம்பிகைக்கு செய்யும் மஞ்சள் அபிஷேகம் பிரசித்தி பெற்றது. அங்கேயே மஞ்சளை இடித்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் சந்நிதி. விநாயகர், கல்யாண சுந்தரர், வள்ளி தெய்வயானையுடன் முருகன், அகத்தியர், நவக்கிரக சந்நிதிகள் சுற்றுப்பிரகாரங்களில் உள்ளது. புனுகு சபாபதி கோவிலின் வெளியே பக்தர்கள் தங்க விடுதிகளும் உள்ளது. அமைதியான கோவில். நிதானமாக இவ்விடத்தில் தங்கி அகத்தியர் அருவி, பாண தீர்த்தம், வனவிலங்கு சரணாலயம் போன்ற இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அங்கிருந்து சந்திர தலமான சேரன்மகாதேவிக்குச் செல்லும் வழியெங்கும் அடர்ந்த வெளிர்நிற மரங்கள் சாலைகளை அலங்கரித்து அழகாக நின்று கொண்டிருந்த காட்சியை மறக்காமல் 'க்ளிக்' செய்து கொண்டேன். பசுமை நிலங்கள், பனை, தென்னை, வாழை மரங்கள், மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், விவசாயிகள் என கிராமத்துச் சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீஅம்மைநாதர் திருக்கோவில். ஐந்து நிலைகளைக் கொண்ட வண்ண கோபுரம். இக்கோவிலில் கோமதி அம்மன், ஆவுடையம்பாள் என்ற பெயரில் அழைக்கப்படும் அம்மன் சந்நிதி அம்மைநாதர் சந்நிதியின் வலப்பக்கத்தில் இருக்கிறது. நந்தியும் சுவாமி சந்நிதியிலிருந்து சற்றே விலகினார் போல் இருக்கிறார். திருநீறு அலங்காரத்துடன் வெண்பட்டு உடையில் திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தார் ஸ்ரீஅம்மைநாதர். சிறிய சுற்றுப்பிரகாரம் கொண்ட கோவிலில் யாக தீர்த்தம் ஒன்றும் இருக்கிறது. முருகன், விநாயகர், நடராஜர், பைரவர் சந்நிதிகள், கொடிமரம், பலிபீடம் உண்டு. நவக்கிரக சந்நிதி இக்கோவிலில் இல்லை.

மூன்றாவது தலமான ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ள கோடகநல்லூர் செல்லும் வழியெங்கும் குண்டும் குழியுமாக மண்சாலைகள் தான். கால்நடைகளை மேய்த்துக் கொண்டுச் செல்பவர்கள், வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை பேசும் ஆண்கள், இரு சக்கர வாகனங்கள் அதிகம் தென்பட்டது. ஊரில் நுழையும் பொழுதே பல்லக்கில் வீதி உலா வரும் பெருமாள் தரிசனம் கிடைத்தது. சிறிய கிராமம் தான். கோவில் சுற்றுச்சுவர்களில் மராமத்து வேலை செய்து நடை பாதையைச் சீர்படுத்தியிருக்கிறார்கள். கோவிலின் அருகே வீட்டு வாசலில் உட்கார்ந்து அழகாக இரு ஆடுகள் அசை போட்டுக் கொண்டிருந்த காட்சி கொள்ளை அழகு! பரபரப்பான உலகிலிருந்து வெகு தொலைவில் இருப்பது போல் தோன்றியது. செவ்வாய் கிரகத்திற்கான இத்தலத்தில் உருவத்தில் பெரிய மூர்த்தியாக ஸ்ரீகைலாசநாதர். அழகாக குட்டி சிவகாமி அம்பாள். அலங்காரங்கள் எல்லாம் எளிமையாக மனதை கவரும் விதமாக இருந்தது சிறப்பு. நந்திக்கு விரலிமஞ்சள் மாலை அணிவித்து வேண்டுவது வழக்கமாக உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் அனந்த கௌரி அம்மனும் காட்சி தருகிறாள். திருமணத் தடைகள் நீங்க, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கான பரிகாரத்தலமாகவும் உள்ள இக்கோவில் அமைந்துள்ள ஊர் கார்கோடகன் எனும் சர்ப்பம் பாபங்கள் நீங்கி முக்தி பெற்றதால் கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. விநாயகர், முருகன் தவிர பிற மூர்த்திகள், கொடிமரம், பலிபீடம் இக்கோவிலில் இல்லை.

அங்கிருந்து சிறிது தொலைவு மரங்கள் அடர்ந்த பிராதன சாலைப்பயணம். பிறகு மீண்டும் குண்டுகுழி மண்சாலை வழியாக செங்காணி சிவன் கோவில் என்றழைக்கப்படும் ராகு பகவானுக்கான குன்றத்தூர் கோத பரமேசுவரர் திருக்கோவில். நுழைவு மண்டபத்தில் தெற்கு நோக்கி அழகான குட்டி சிவகாமி அம்மன். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். சிவன் சந்நிதி வாயிலில் விநாயகர், முருகன் மூர்த்திகளும் கோவிலின் வெளிப்புறத்தில் பைரவர், பன்னிரெண்டு கரங்களோடு ஆறுமுக நயினார் சந்நிதிகளும் உண்டு. இக்கோவிலின் தல விருட்சம் நாகலிங்க மரம் பூத்து இருந்தது அழகு. சர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்க இங்கு வழிபட்டுச் சென்றால் பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

நவ கைலாயங்களில் ஐந்தாவது தலமான குரு ஸ்தலம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் முறப்பநாட்டில் உள்ளது. சாலை வழியாக நீண்ட பயணம். இந்த நடுக்கயிலாயத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை 'தக்ஷிண கங்கை' என்றழைக்கிறார்கள். கங்கையில் குளித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்கு செல்லும் பொழுது நண்பகல் 12 மணியை நெருங்கி விட்டது. தமிழக கோவில்கள் நடை சாத்தும் நேரம் நெருங்கி விட்டதோ என்று பதட்டத்துடன் அங்கே சென்றோம். வாயிலில் கோவில் ஒரு மணி வரை திறந்திருக்கும் என்று பலகையில் எழுதியிருப்பதைக் கண்டவுடன் அப்பாடா என்றிருந்தது. உள்ளே சென்றால் கோவிலை மூடி விட்டு அர்ச்சகர் வீட்டுக்குச் சென்று விட்டார். அந்த வழியாகச் சென்ற பெண்மணியிடம் கேட்ட பொழுது இப்பொழுது தான் அவர் சென்றார். வீடு அருகே தான் இருக்கிறது என்று ஆளை விட்டு அழைத்து வரச் சொன்னார். அவர் அங்கு இல்லை என்ற பதில் ஏமாற்றமாக இருந்தது. ஒரு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று போர்டு மாட்டிவிட்டு இப்படிச் செய்தால் தூரத்தில் இருந்து வருபவர்களுக்குச் சிரமமாக இருக்காதா? கொடி மரம், பலி பீடம் கொண்ட சிறிய கோவில். குரு பகவான் ஸ்தலம் என்றாலே பரிகார ஸ்தலம். மக்கள் கூட்டமும் அதிகம் வரும். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே என்று வருத்தமாகவும் இருந்தது. கைலாசநாதர் சிவகாமியின் தரிசனம் கிடைக்காத ஏமாற்றம் இருந்தாலும் 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'என்று மனதை தேற்றி சுவாமியை வணங்கி வெளியில் இருந்த அரசமரத்தைச் சுற்றி விட்டு திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டோம்.

பசி வேறு. வழியில் ஸ்ரீ மதுரம் உணவகத்தில் அறுசுவை உண்ட பிறகு நவ திருப்பதிகளுள் ஒன்றான 'அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன்' திருக்கோவிலுக்கு வந்து சென்ற இனிய நினைவுகளுடன் தென்திருப்பேரையில் நவ கைலாய புதன் ஸ்தலத்தில் வண்டியில் காத்திருந்தோம். சிறு தூறலுடன் மழை அந்த இடத்தை ரம்மியாமாக்கியிருந்தது. சுற்றிலும் வயல்வெளிகள். வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பழக்கப்பட்ட மாடுகள் சிறிது நேரம் எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கடந்தது. அருகே அங்கன்வாடி அரசுப் பள்ளியில் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளந்தி குழந்தைகள் கூட்டமாகச் செல்லும் ஆடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தார்கள். மழையைக் கண்டதும் அகவும் மயில்கள் அந்த இடத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது. ஒரு பெண் மயிலின் கவனத்தைப் பெற இந்த ஆண் மயில்கள் தான் தோகைகளை விரித்து எத்தனை எத்தனை அழகு நடனங்களை ஆடிப்பாடுகின்றன? ஆனால் அவள் கண்டுகொள்ளவே இல்லை. தூரத்திலிருந்து அழகாகத் தெரியும் நீண்ட தோகையின் எடையுடன் மயில்கள் தாவ அதிக பிரயத்தனப்படுவது போல் தோன்றியது! மழையும் காதலும் என்றுமே அழகு தான்! கோவில் சுற்றுபுறச்சுவர் பொந்துகளில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த கிளிகள் பறப்பதும் காதலுடன் முத்தமிடுவதுமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை.

கோவில் எதிரே இருக்கும் புது மண்டபத்தில் சிலர் எங்களைப் போலவே காத்திருந்தார்கள். அழகான கோவில் பிரகாரம். அரசமர பிள்ளையார். நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அலங்கரிக்க பெரிய கோவில் மதிற்சுவர்கள். கோவில் திறந்தவுடன் உள்ளே சென்று விட்டோம். ஏழாவது கைலாய தலத்தில் தாமரை பீடத்தின் மேல் கைலாச நாதர். அம்மன் அழகிய பொன்னம்மை தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகங்கள், முருகன் சந்நிதிகளும், கொடி மரமும் பலி பீடமும் உண்டு. நவ கைலாயங்களில் இரண்டாவது பெரிய கோவில்.

நவ திருப்பதிகளில் சூரிய ஸ்தலமான கள்ளபிரான் கோவிலும் நவ கைலாயங்களில் சனி ஸ்தலமான ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவிலும் அமையப் பெற்ற மகத்தான ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது. சுவாமி ஸ்ரீகைலாய நாதர். அம்மன் ஸ்ரீசிவகாமியம்மை. சந்தன சபாபதியாக நடராஜரும் அருள்பாலிக்கிறார். சனி பகவானுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் வந்து செல்லும் ஆறாவது நவ கைலாய ஸ்தலம். பைரவர், பூதநாதர், முருகன் சந்நிதிகள் உண்டு. யாளி, சிங்கமுக சிற்பங்களுடன் தூண்கள் மண்டபங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. சற்றே பெரிய கோவில். கோவிலைப் புனரமைக்கிறேன் என்று மண்டபங்களையும் தூண்களையும் sand blasting செய்து வைத்திருந்தார்கள்.

அங்கிருந்து புறப்பட்டு ராஜபதி எனுமிடத்தில் அமைந்துள்ள கேது தலமான எட்டாவது கைலாய கோவிலுக்குச் சென்றோம். வெள்ள பாதிப்பிற்குப் பின் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கோவில் இது. மூலவர் கைலாச நாதர். அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகி. கண்ணப்ப நாயனார், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, ஆதிகைலாசநாதர், விநாயகர்,லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியன், கால பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளது. வெளிச்சுற்றில் 63 நாயன்மார்கள், நந்தவனத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக் கோவில் 'தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பது லிங்கங்களுக்கும் நாமே பரிகார பூஜைகள் செய்யும் வசதியும் இங்குள்ளது சிறப்பு. வித்தியாசமான கோவில் அனுபவம். அந்தி சாய ஆரம்பித்து விட்டது.

சுக்கிர ஸ்தலமான ஒன்பதாவது கைலாயம் சேர்ந்த பூமங்கலத்தில் உள்ளது. ஊரின் பெயரே அழகாக இருக்கிறதல்லவா? பெரிய மதிற்சுவர்களுடன் மரங்கள் சூழ அமைதியான இடத்தில் அமைந்துள்ள பழமையான கோவில். இந்த ஊரின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லும் பொழுது நன்கு இருட்டி விட்டிருந்தது. சுற்றுப்பிரகாரத்தில் சமய குறவர் நால்வர், நாயன்மார்களின் சிலைகள் உள்ளது. கைலாசநாதர், அழகிய பொன்னம்மை, விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சி, சனீஸ்வரர், பைரவர் , முருகன், லிங்கோத்பவர், நவ லிங்கம், நவக்கிரக சந்நிதிகள் உண்டு. அழகிய வேலைப்பாடுகளுடன் கருவறை விமானங்களும் கொடிமரமும் உள்ளது. கருவறை விமானத்தில் தேவியருடன் குபேரர் காட்சி அளிக்கிறார்.

நவக்கிரகங்களின் அருள் வேண்டி மக்கள் இக்கோவில்களுக்குச் செல்கிறார்கள். நவ திருப்பதி கோவில்களில் இருக்கும் செல்வச் சிறப்பும் கோவில்களின் பராமரிப்பும் நவ கைலாய கோவில்களில் இல்லையோ என்று தோன்றியது. பல கைலாய கோவில்களும் சிறு கிராமங்களில் இருப்பதும் சிறிய கோவில்களாக இருப்பதும் கூட அப்படி நினைக்க காரணமாக இருக்கலாம். அனைத்துக் கோவில்களிலும் சுவாமி, குட்டி அம்மன் அலங்காரங்கள் திவ்வியமாக இருந்தது. இக்கோவில்களில் ஆருத்ரா தரிசனம், திருவாதிரை, சிவராத்திரி, கந்தசஷ்டி, பிரம்மோற்சவம், திருக்கல்யாணம், பிரதோஷம், விஷு, குரு, ராகு, கேது, சனிப்பெயர்ச்சி நாட்களில் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. முறையான திட்டமிடலில் ஒரே நாளில் ஒன்பது கோவில்களையும் தரிசித்து வர முடியும். நவ கைலாயங்கள் சென்று வந்த திருப்தியுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு மகிழ்வுடன் ஊருக்குத் திரும்பினோம்.

மகாசிவராத்திரி நாளில் விரதமிருந்து சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரங்களுடன் சிவனின் தரிசனம் வேண்டி மக்கள் கூட்டம் கோவில்களில் அலைமோதும். அனைவருக்கும் எனது மகாசிவராத்திரி வாழ்த்துகள்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!

படங்களுக்கு இங்கே சொடுக்கவும் நவ கைலாயங்கள் 











No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...