கொரியன் தொடர்களைப் பார்க்க முதலில் கதையின் நாயகன் நாயகிகளைப் பிடிக்க வேண்டும் பிறகு கதை. சில நேரங்களில் கதை நடக்கும் இடங்களும் கூட. "While you were sleeping" தொடரில் வரும் துடிப்பான நாயகி, 'உயர்ந்த' கதாநாயகன் ம்ம்ம்ம் எனக்குப் பிடித்த கொரியன் மாதவன் வேறு. இனி எண்டே நாடு சவுத் கொரியா எண்டே நாயகன் மாதவன்னு பார்க்க ஆரம்பித்தாயிற்று. என்னிடம் இருக்கும் நல்ல பழக்கமே ஒரு தொடரை ஆரம்பித்து விட்டால் அது முடியும் வரை வேறு வேளையில் கவனம் செல்லாது தொடரை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவேன். அப்படித்தான் இந்த நாடகமும் என்னை பைத்திக்காரியாக்கி விட்டது😍எப்படித்தான் இந்த மாதிரி கதைகள் எல்லாம் இந்த கொரிய நாடக கதாசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ? அழகான கதாபாத்திரங்கள். சிறுசிறு பூக்கள் போட்ட கண்களை உறுத்தாத உடைகள் இந்த கொரிய பெண்களுக்கு எத்தனை பாந்தமாக இருக்கிறது!
தன் கனவில் பார்க்கும் நிகழ்வுகள் நேரில் நடப்பதை பார்த்து பயந்து போயிருக்கும் நாயகி, தன்னைப் போலவே கனவு காணும் இரு இளைஞர்களையும் காண நேரிட்டு அவர்களுடன் பழகுகிறாள். மூவரும் சேர்ந்து பல நல்ல காரியங்களைச் சாதிக்கிறார்கள். பதினாறு பாகங்கள். ஒவ்வொன்றும் ஒரு கதையுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடன். பார்வையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் திறமை இந்த கதாசிரியர்களுக்கு இருக்கிறது. அழகான காதல், பொறாமை, ஆழமான நட்பு, குடும்பம் என்று அழகாக நகர்வது அருமை. காலை உணவை அவர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுவது பார்க்கவே நன்றாக இருக்கும்.
வெளிப்படையாக சொல்வது காதல் அல்ல. சிறு சிறு விஷயங்களில் காட்டும் தோழமையும் அன்பும் வேண்டிய நேரங்களில் ஆதரவும் என மென்காதல் 'ஊலலலா' ரகம். எனக்குப் பிடித்த உணவுக்காட்சிகளும் ஏராளம். கொரியன் உணவுகள் சாப்பிட பழக வேண்டும் 😋
தன் கனவில் தந்தை இறப்பது போல் வருவது உண்மையாக நடந்ததைப் போல, தான் இறப்பதாக வரும் கனவும், தன் காதலன், நண்பர்களுக்கு நடக்கவிருக்கும் துக்க சம்பவங்களால் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுவதும் அதைச் சாதூரியமாக மூவரும் சேர்ந்து முறியடிப்பதும் என்று ஒவ்வொரு பாகங்களும் 'அட' போட வைக்கிறது.
ஒவ்வொரு பாகத்தையும் ஒரு திரைப்படம் போல் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். வசனங்களும் அத்தனை அருமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தானோ என்னவோ கொரியன் தொடர்கள் மனத்தைக் கவர்கிறது! பல நாட்களுக்குப் பிறகு பார்க்க ஆரம்பித்து பிடித்தும் போன தொடர்.
"ஹுலு"(Hulu)வில் காண கிடைக்கிறது.
No comments:
Post a Comment