Monday, March 28, 2022

பவன்கிந்த் (Pawankhind)

மீண்டுமொரு அருமையான மராத்திப் படம் 'பவன்கிந்த்'. மராத்திய மன்னன் சிவாஜி, அவருடைய தாயார் ஜிஜாபாய் எத்தகைய வீர மகனை வளர்த்து இஸ்லாமிய கொடூரன்களை எதிர்த்துப் போராட வைத்திருக்கிறார் என்று வரலாற்றில் நாம் சிறிது படித்திருக்கிறோம். பாரத நாட்டில் பிறந்து நாட்டை  நேசிக்கும் அனைவருக்கும் வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்றுமே உத்வேகத்தை அளிக்கவல்லது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வில் ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க அவருடன் துணை நின்ற படைத்தளபதிகள், வீரர்கள்  அவர்களுடைய தியாகங்களை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்தப் படம். 

1660களில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் நகருக்கு அருகில், விஷால்காட் கோட்டைக்கு அருகில் உள்ள மலைப்பாதையில் மராட்டிய வீரர் பாஜி பிரபு தேஷ்பாண்டே, சம்பு சிங் ஜாதவ் மற்றும் சித்தி மசூத் ஆகியோருக்கு இடையே நடந்த போரில்  சிவாஜியை பாதுகாப்பாக வேறிடத்திற்கு அழைத்துச் செல்ல நடக்கும் யுத்தம், அதில் உயிரிழந்த வீரர்கள் பற்றின சம்பவத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 300 மராட்டிய வீரர்களுடன் மராட்டிய படைத்தளபதி பாஜி பிரபு தேஷ்பாண்டே,  12,000 பேரைக் கொண்ட சுல்தானின் படைத் தளபதி சித்தி மசூத்துடன் வீரத்துடன் போராடி  சிவாஜியையும் அவருடன் துணை சென்றவர்களையும் காக்க தன்னுயிர் இழக்கிறார்கள். பல மாந்தர்கள், குடும்பங்கள் செய்த தியாகம் தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பதை எக்காலத்திலும் மறக்க கூடாது என்று சிவாஜி அவர் மகனுக்கு படததில் எடுத்துரைப்பது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

மகன் எதிரிகளைப் பந்தாட, தாய்  ஜிஜாபாய் கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு கவலையுடன் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் நன்றியுடனும் கலந்து பேசி உரையாடுவதும் எதிரிகளை போர்முனையில் சந்திக்க ஆயத்தமாக இருக்கும் வீரப்பெண்மணியாக எப்படியெல்லாம் ஆங்கிலேயர், இஸ்லாமியர்களிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றியுள்ளார்கள் என்பது இந்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. 

படத்தின் பொருத்தமான கதை மாந்தர்கள், அவர்களின் மிகைப்படுத்தாத நடிப்பு, காட்சிகளோடு ஒன்றும் பாடல்கள், இறைபக்தி, போர் தாக்குதல்கள்  என்று அன்றைய ஹிந்து அரசர்களின் வாழ்வை அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை. 

பல உயிர்கள் தியாகம் செய்து தான் நம் நாட்டின் சுதந்திரமும் ஆங்கிலேய, இஸ்லாயமியர்களின் கொடூர ஆட்சியிலிருந்து தப்பிக்கவும் முடிந்திருக்கிறது. அதையெல்லாம் அறியாத சமூகம் ஒன்று வளர்ந்து வருவது மிக ஆபத்தானது. உண்மையான வரலாற்றை மறைத்து பொய்யைத் திணிக்கும் அரசு அமைப்புகளை எதிர்த்து இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் கர்மவீரர்கள் அனைவருக்கும் நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அமேசான் ப்ரைம்-ல் கண்டுகளிக்கலாம்.




Friday, March 25, 2022

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

இது வரையிலும் இந்திய வரலாற்றில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல கதை, கதாநாயக, நாயகிகள், பாடல்கள், வசனங்கள், காட்சிஅமைப்புகள் என்று பல காரணிகள் இருந்திருக்கிறது. முதல் முறையாக ஒரு வரலாற்றுப் பிழையை, அரசாங்கத்தின் அரஜாகப்போக்கை, ஒரு இனத்தை முற்றிலுமாக அவர்கள் இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நடந்த இனப்படுகொலையை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் படம் மட்டுமன்றி உண்மையை உலகுக்கும் உரைத்துச் சொன்ன, மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட படம் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்". இந்தப் படத்தைத் துணிச்சலுடன் எடுத்ததற்காகவே திரு.விவேக் அக்னிஹோத்ரி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

தங்களை அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு வெறிபிடித்துத் திரியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஈனமற்ற கொலைகளும் படுபாதக செயல்களும் இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டியது அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட.

என்றோ நடந்த அக்கிரமங்கள் அல்ல. நான் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அரங்கேறியிருக்கிறது இந்தக் கொடூரம்😑 இலங்கையில் தமிழர் போராட்டங்கள், டெல்லியில் சீக்கியர் கலவரம், பாபர் மசூதி இடிப்பு விவகாரம் என்று பல விஷயங்களைத் திரித்து மக்களை உணர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட வைத்த ஊடகங்கள் தான் இந்த இனப்படுகொலையை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் நம்மிடையே மறைத்திருக்கிறது. இதற்கான முழுப்பொறுப்பும் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸும், அவர்களுக்கு ஒத்து ஊதின ஊடகங்களும், தீவிரவாதத்திற்குத் துணை சென்ற நடுநிலைப்போராளி வேஷம் கட்டிய அனைத்துக் கயவர்களும் தான்.

இந்தியா சுதந்திரம் பெற்றாலும் காஷ்மீர் என்ற தலைவலியை விட்டு விட்டுச் சென்றது இந்தியாவைக் கொள்ளை அடித்த பிரிட்டிஷ் அரசு. ஜவஹர்லால் நேரு எரிகிற கொள்ளியில் மேலும் எண்ணையைச் சேர்த்து இத்தகைய படுப்பாதகச் செயலுக்கு அடிக்கல் நாட்டியது தான் இன்றைய காஷ்மீர் பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானது.

இப்படத்தைப் பார்க்க வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அருகருகே நண்பர்கள் போல காலம்காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் வாழ்ந்த பூமி தான் காஷ்மீர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை வளர்த்து விட்டு வேடிக்கைப் பார்த்த காங்கிரஸ், இந்துக்களைக் காக்க மறந்து தீவிரவாதிகளுக்குத் துணை சென்றதைத் தான் இந்தப்படம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்துப்பெண்களை விட்டு விட்டு ஆண்களை மட்டும் வெளியேறச் சொல்வதும், மதம் மாறாதவர்களைச் சுட்டுக் கொல்வதும் என இந்துக்களின் நிலம், பெண்களைச் சூறையாடிய கயவர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் தானே தோலுரித்துக் காட்டியுள்ளது இப்படம்? இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு என்று யோசிக்க வேண்டும். 

இதன் இயக்குனர் இப்படத்தைப் பற்றின தகவல்களை ட்விட்டர்-ல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், படக்குழுவினருக்கும் தீவிரவாதக் குழுக்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும், படம் வெளிவராமல் இருக்க ஏற்பட்ட தடைகளையும் மீறி இந்தப் படம் வெளிவந்திருக்கிறது என்றால் அதற்கான சாத்தியம் மத்தியில் ஆளும் பாஜகாவால் மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை காஷ்மீர் இந்துக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். இப்படத்தின் முகத்திலறையும் உண்மை, மனச்சாட்சியுடன் உள்ளவர்கள் அனைவரையுமே உலுக்கிப் போட்டிருக்கிறது.

மற்ற படங்களைப் போல் இதுவும் ஒரு திரைப்படம் என்று கடந்து போக முடியவில்லை. இந்துக்களுக்கு ஆதரவளித்த காஷ்மீர் முஸ்லீம்கள் சிலர் கூட இறந்திருக்கலாம். ஒரு இனப்படுகொலையை மக்களிடமிருந்து மறைத்த காங்கிரஸ் களவாணிகள் கூட்டம், நியாயப்படுத்தும் கம்யூனிச, நடுநிலைக் கூலிகளின் இந்திய எதிர்ப்புத் தீவிரவாதம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் மாநில கட்சிகள் மத்திய அரசிற்கு எதிராக தங்கள் அரசியல் லாபத்திற்காக உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு நிச்சயம் பாரட்டப் படவேண்டிய ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியாவிற்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக நடந்த, நடக்கும் அரஜாகங்களை மக்கள் உணர வேண்டும்.

அன்று காஷ்மீரில் நடந்த காட்சிகளைத் திரையில் கண்ட பலர் அதிர்ச்சியில் உறைந்து போனதும் அழுததும் இந்த வரலாற்றுப் பிழையை அறியாததற்காக வெட்கமும் வேதனையுடனும் படத்தைப் பார்த்து விட்டு வந்தோம்.

இன்று, இந்தப் படம் ஏன் என்று பல நடுநிலைகள் கேட்கிறார்கள்? வரலாற்றை அறிந்து கொள்ள ஏன் மறுக்கிறர்கள்? தவறு செய்த தீவிரவாதம் தன்னைத் திருத்திக் கொள்ளுமா? 30 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? அதற்காகத்தானே திரு.வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்டிக்கிள் 370ஐ நீக்கியுள்ளது தற்போதைய இந்திய அரசு. இனியாவது காஷ்மீர் இந்துக்களுக்கு நீதி கிடைக்கட்டும்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை உலகிற்கு உணர்த்திய படம் "ஹோட்டல் ருவாண்டா" . இந்தியாவில் நடந்த இன ஒழிப்பே தெரிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவில் நடந்தது மட்டும் எப்படி தெரிந்திருக்கும்? அவ்வளவு ஏன். 1940களில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய இனப்படுகொலை உலகம் அறிந்ததே. அதற்காக அவர்கள் அதை மறந்து சென்று கொண்டிருக்கிறார்களா? இன்று வரையில் எத்தனை ஹாலிவுட் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? எதற்காக எடுக்கிறார்கள்? உலகமும் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு என்று தானே? ஜெர்மனியில் பல தலைமுறைகளாக வாழ்ந்த யூதர்களைப் பற்றின அருங்காட்சியகம் ஒன்று பெர்லின் நகரில் உள்ளது. அவர்களுக்கு நடந்த இனப்படுகொலை காட்சிகள் ஒவ்வொன்றையும் புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆவண திரைப்படமும் காண கிடைக்கிறது. உள்ளே சென்றால் சூழ்ந்திருக்கும் அமைதியும் வெறுமையும் அந்த மக்கள் அனுபவித்த துன்பங்கள் ரணமாக பலரும் கண்ணீருடன் தான் வெளியில் வருகிறார்கள். அப்படியான ஒரு தாக்கத்தைத் தான் " தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படமும் செய்திருக்கிறது. அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? இந்தப் படத்தை வெளியிட திரையரங்குகள் பலவும் மறுத்திருக்கிறது. படத்தைப் படமாக பாருங்கள் என்று கூவும் கூலிகளும் எதிர்க்கிறார்கள். பதைபதைக்கிறார்கள்.

யூதர்களைப் போலவே காஷ்மீர் பண்டிட்களும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இன்று வரையில் அதற்காக துப்பாக்கி தூக்கிக் கொண்டு யாரையும் பழி தீர்க்கவோ பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று புலம்பி அனுதாபத்தையோ தேடிக் கொள்ளவில்லை. அவர்கள் நிலம் அவர்களுக்கே. அதைத்தான் மோடி அரசு செய்ய முனைந்திருக்கிறது. இதை எதிர்க்கிறவர்கள் தான் இந்தப் படத்தின் முகத்திலறையும் உண்மையை எதிர்க்கிறார்கள். எங்கே மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்று அச்சப்படுகிறார்கள்.

இத்தனை அட்டூழியங்களையும் கொலைகளையும் செய்த காட்டுமிராண்டிகள் இன்று வரை பகிரங்க மன்னிப்போ தங்கள் தவறுகளை உணர்ந்ததாகவோ தெரியவில்லை.

இன்றும் அனைத்து மதத்தினரும் சேர்ந்து தான் வாழ்கிறோம். ஆனால் தங்களுக்கென ஒரு சட்டம், எல்லைகளை வகுத்துக் கொண்டு மதம் என்று வந்தால் எப்படி மதம் பிடித்துத் திரிவார்கள் அமைதி மார்க்கத்தினர் என்ற உண்மையை இனியாவது புரிந்து கொள்வார்களா இந்த நடுநிலை வேஷம் போடுபவர்கள்?

இவற்றையெல்லாம் மீறி மக்களின் பேராதரவால் வெற்றி பெற்றிருக்கிறது இப்படம். காஷ்மீர் பண்டிட்களின் வாழ்க்கையில் இனிமேலாவது வசந்தம் வீசட்டும்.















Thursday, March 24, 2022

WORDLE

சமீப நாட்களாக பிரபலமாகி வரும் எளிமையான அதே நேரத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வார்த்தை விளையாட்டு "வேர்டில்"(Wordle). நியூயார்க் டைம்ஸ் ஆன்லைன் வலைதளத்தில் இந்த விளையாட்டை விளையாடலாம். தினமும் ஒரு வார்த்தை மட்டுமே விளையாட முடியும். ஐந்து எழுத்துகள் கொண்ட சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்க ஆறு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
முதலில் ஐந்தெழுத்துக் கொண்ட ஏதாவதொரு வார்த்தையை நாம் டைப் செய்ய வேண்டும். சரியான இடத்தில் சரியான எழுத்து இருந்தால் அது பச்சை நிறத்தில் காட்டப்படும். தவறான இடத்தில் சரியான எழுத்து இருந்தால் மஞ்சள் நிறத்தைக் காட்டும். அன்றைய வார்த்தைக்குச் சம்பந்தம் இல்லாத எழுத்து பழுப்பு நிறத்தில் காட்டப்படும். இது தான் விளையாட்டின் சூட்சுமம். பழுப்பு நிற எழுத்துக்களைத் தவிர்த்து மீதமுள்ள எழுத்துக்களைக் கொண்டு அன்றைய ஐந்தெழுத்து வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு முறை விளையாடி விட்டால் மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டுகிறது. ஏற்கெனவே வார்த்தை விளையாட்டில் ஈடுபாடு கொண்ட என்னைப் போன்றோரைப் பைத்தியமாக்குகிறது. காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிப்பது போல சரியான வார்த்தைத் தெரியும் வரை மண்டையைப் பிச்சுக்கலாம் போல ஆகிவிட்டது நிலைமை😄
இந்த விளையாட்டைப் போலவே இதன் பின்னணியும் மிகவும் சுவாரசியமானது. இதைக் கண்டுபிடித்தவர் புரூக்ளினில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான ஜாஷ் வார்டில். அவருடைய பார்ட்னர் பலக் ஷா,  வார்த்தை விளையாட்டுகளை விரும்புவதை அறிந்து இந்த விளையாட்டை அவருக்காக உருவாக்கியிருக்கிறார்💖💗💞 அவர்கள் இருவரும் பல மாதங்களாக விளையாடிய பிறகு அவரது குடும்பத்தினரின் வாட்ஸ்அப் குழுவில் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தியவுடன் நல்ல வரவேற்பு கிடைக்க, 2021 அக்டோபரில் அதை உலகம் முழுவதும் வெளியிட்டார். நவ.1ல், 90 பேர் விளையாடினர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 300,000 க்கும் அதிகமான மக்கள் விளையாடினர். ஒரு நாளுக்கு ஒருமுறை நடக்கும் ஐந்தெழுத்து வார்த்தை விளையாட்டுக்கு அதிகபட்சமாக மக்கள் விளையாடியது இந்த விளையாட்டாகத் தான் இருக்க வேண்டும்.

இதில் விளம்பரங்கள், தகவல்களைத் திருடுவது போன்ற தில்லாலங்கடி வேலைகள் ஏதும் கிடையாது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஆன்லைனில் மக்கள் விளையாட ஏதுவாக இந்த விளையாட்டை ஜாஷ் வார்டிலிடமிருந்து வாங்கி விட்டது. இன்று ஏராளமானோர் நள்ளிரவு 12 மணிக்கு காத்திருந்து புதிய நாளின் புதிய வார்த்தையைக் கண்டுபிடிக்க துடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டிருக்கிறது.

காதல் பல வகை அதில் இதுவும் ஒரு வகை💖💖💖 

வாழ்க ஜாஷ் வார்டில்& பலக் ஷா!






Thursday, March 17, 2022

The Power of the Dog


தாமஸ் சாவேஜின் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தின் பெயரும் 'தி பவர் ஆஃப் தி டாக்'. பண்ணை வைத்திருக்கும் இரு சகோதரர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மொண்டானா மாநிலத்தில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தாலும் திரைப்படத்தை நியூஜிலாந்தில்எடுத்துள்ளார்கள். பிரம்மாண்ட மலைக்காட்சிகள், சமவெளிப்பரப்புகள் என்று திரை முழுவதும் பரவி நிற்கும் அழகுக்கே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கதாநாயகன், 'தி கொரியர்' பட நாயகன். பார்வையிலேயே கோபம், தாபம், அதிகாரம் என மிரட்டலாக நடித்திருக்கிறார். 1920களில் மொண்டானாவில், சகோதரர்கள் ஃபில் மற்றும் ஜார்ஜ் பர்பேங்க் (பெனடிக்ட் கம்பெர்பாட்ச் மற்றும் ஜெஸ்ஸி பிளெமன்ஸ்) பணக்கார பண்ணை உரிமையாளர்களின் கதையில் ரோஸ் என்ற கணவனை இழந்த பெண்மணியும் அவளுடைய மகனும் வருகிறார்கள். ஒருவிதமான மூடுமந்திரமாகவே படம் செல்கிறது. ரோஸை திருமணம் செய்து ஜார்ஜ் வீட்டிற்கு அழைத்து வந்ததை விரும்பாத ஃபில் பார்வையாலேயே அவளையும் அவள் மகனையும் அச்சமூட்டுகிறார்.

"தந்தையின் இறப்பிற்குப் பிறகு தாயின் மகிழ்ச்சியே தனக்கு முக்கியம். அதற்காக அவளுக்கு உதவிகள் செய்வேன்" என்று மகன் துவக்க காட்சியில் கூறுவது தான் ஒன்லைனர் என்று நினைக்கிறேன். ஃபில்லின் கடந்த கால வாழ்க்கையை ரோஸின் மகனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமாக பழகுவதைப் பார்த்து தவிக்கும் ரோஸிற்கு குடிப்பழக்கமும் தொடர்கிறது. வெளியில் முரட்டுத்தனமாக இருந்தாலும் ரோஸின் மகனைத் தைரியசாலியாக தனக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுத் தருகிறான் ஃபில். முடிவை பார்வையாளர்களுக்கே விட்டு விட்டார்கள்😎

ஒவ்வொரு காட்சியமைப்பும் வசனங்களும் செதுக்கியதைப் போல அருமை.

மெதுவாக சென்றாலும் ஆழமான படம். நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.

Monday, March 14, 2022

The Bombardment


போர்க்காலங்களில் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். அதிலும் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் என்பதை உலகப்போர்கள் தொடங்கி நேற்றைய ஸ்ரீலங்கா முதல் இன்றைய உக்ரைன் போர் வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். "The Bombardment" திரைப்படம் உலகப்போரின் போது நடந்த ஒரு அசம்பாவிதத்தால் பள்ளியில் குண்டு போடப்பட்டு குழந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் இறந்த நிகழ்வைப் பற்றின உண்மைச்சம்பவம்.

ஒரு தவறுதலான குண்டு வீச்சில் மூன்று இளம்பெண்களும் வண்டியோட்டியும் பலியாகிறதில் ஆரம்பமாகிறது படம். அதனைப் பார்த்து அதிர்ச்சியாகும் சிறுவன் ஒருவன் பட இறுதியில் அதன் பாதிப்பிலிருந்து வெளிவருவது போல அமைத்திருந்தார்கள். குதூகலமாக பள்ளிச் செல்லும் குழந்தைகள், அந்த வயதில் இருக்கும் கற்பனைக்கதைகள், பேச்சும் ஆட்டமும் என்று கோபென்ஹெகென் நகரில் நடக்கிறது விரிகிறது படக்காட்சிகள். 

ஹிட்லரின் ஆட்சியில் இருக்கும் சுவீடனை மீட்க பிரிட்டிஷ் அரசாங்கம் குண்டுகள் வீசி ஹிட்லரின் அதிகாரிகளைக் கொல்ல  திட்டம் தீட்டுகிறார்கள். பள்ளியில் பணிபுரியும் கன்னியாஸ்திரி ஒருவர் யூதர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் ஏன் இத்தனை துன்பப்பட வேண்டும் என்று யேசுவிடம் கேட்க தன்னைத்தானே வருத்திக் கொள்கிறாள். ஒரு ஹிட்லர் ஆதரவாளனை மனம் திருத்துகிறாள். இப்படித்தான் போகிறது கதை.

முதலில் இந்தப்படத்தை அதன் கதை தொடர்பான காலத்தோடு அழகாக எடுத்திருந்தார்கள். போர் என்று வரும் பொழுது மனிதம் தொலைந்து போகும் என்பதை சில காட்சிகள் தெளிவாகச் சொல்கிறது. இன்றைய போர் சூழ் உலகில் ஒருவரை ஒருவர் ஆள வேண்டும் என்ற வெறியில் மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்கிறது இத்தகைய படங்கள்.

யூதர்களைப் பற்றின தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே நன்கு பரப்பி இருந்திருக்கிறது கொடுங்கோலன் ஹிட்லர் அரசாங்கம். மக்களும் அதை நம்பியிருந்திருக்கிறர்கள்.  சமூக வலைதள காலத்திலேயே எத்தனை தில்லாலங்கடி வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது! கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தையும் எப்படியெல்லாம் மடை திருப்புகிறார்கள் கேவலமான அரசியல்வாதிகள்? சமீபத்தில் வெளிவந்திருக்கும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தின் விமரிசனங்களும் அதைத்தான் சொல்கின்றது.

மனிதத்துடன் வாழ்வது அத்தனை கடினமா?

Tuesday, March 8, 2022

சர்வதேச மகளிர் தினம் - 2022


பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் விதமாக "சர்வதேச மகளிர் தினம்" ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும்கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது.

1900 களின் முற்பகுதியில் தொழில்மயமான நாடுகளில் பெண்கள் உரிமைகள் இயக்கத்தில் இருந்து இந்த நாள் பிறந்தது. அமெரிக்காவின் சோஷியலிஸ்ட் கட்சி 1909 ஆம் ஆண்டு தேசிய மகளிர் தினத்தை முதன்முதலில் அறிவித்தது. 1910 ஆம் ஆண்டில் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடினர். 'சர்வதேச மகளிர் தினம்' என்ற யோசனை முன்மொழியப்பட்டு முதல் முறையாக மார்ச் 19, 1911 அன்று பல ஐரோப்பிய நாடுகளில் அனுசரிக்கப்பட்டது. பெண்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் பாலின பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் இந்த கொண்டாட்டங்களில் அடங்கும். 1914 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்திற்கான நிலையான தேதியாக இருந்து வருகிறது.

சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட பல்வேறு வழிகள் உள்ளன. அனைத்து வகையான அரசு, அரசு சாரா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் திருவிழாக்கள், கலைக் கண்காட்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் மற்றும் நேரில் சமூகக் கூட்டங்களில் பங்கேற்பதைக் கடைப்பிடிப்பதும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளைக் கொண்டு இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. பணியிடத்திலும், பள்ளியிலும், வீட்டிலும் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான நிகழ்வுகளை வெளிக்கொணரும் விதமாக இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "#BreakTheBias".

பன்முகத்தன்மை கொண்ட பாலின சமத்துவமான உலகில் மட்டுமே பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை உடைத்தெறிய முடியும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அனைவரும் முன் வர வேண்டும். முக்கியமாக ஆண்கள். பெண்கள் பல தடைகளைத் தாண்டி கல்வி, அறிவியல், அரசியல், தொழிற்துறை என்றுஅனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஆனாலும் பாலின பாகுபாடுகள் முற்றிலும் களையப்படவில்லை. அதனைத் தகர்க்கும் பொருட்டே இந்த வருடத்திற்கான கருப்பொருள் "#BreakTheBias".

தேசிய விடுதலைக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் போராடிய திருமதி சரோஜினி நாயுடுவின் நினைவாக இந்தியாவில்  பிப்ரவரி 13 அன்று "தேசிய மகளிர் தினமாக" கொண்டாடப்பட்டு வருகிறது.

நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். அதுவரை தொடரட்டும் நமது போராட்டம்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! "

பாரதியார் கண்ட கனவினை நனவாற்றும் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.




Monday, March 7, 2022

Picasso


அமேசான் ப்ரைமில் எதையோ தேடிக் கொண்டிருந்தததில் மீண்டுமொரு மராத்திப் படம் கண்ணில் பட்டது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்க பார்க்க ஆரம்பித்தோம். ஒரு படம் நம்மை பார்க்க வைக்க வேண்டுமெனில் கதை, படமாக்கப்பட்ட விதம், இசை, பாடல்கள், நடிக, நடிகையர்கள் இப்படி ஏதாவது ஒன்று பிடித்தால் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இப்படத்தில் எல்லாமே மிக நன்றாக பொருந்தி இருந்தது சிறப்பு.

மழையுடன் துவங்கும் முதல் காட்சியிலேயே மனதைக் கவர்ந்து விட்டது இப்படம். மழையில் குளிர்த்த 'பச்சைப்பசேல்' மரங்கள், செடிகள், மனிதர்களோடு படம் பார்ப்பவர்களையும் நனைய வைக்கிறது. படம் நெடுக வஞ்சகமில்லாமல் மழையும் பயணிப்பது கொள்ளை அழகு. அதுவும் அந்தச் சிறுவன் படகில் பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் முத்துமுத்தாய் இருந்தது.

மாநில அளவில் படம் வரையும் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்த பள்ளி மாணவன் தேசிய அளவில் பங்கு பெற பணம் கட்ட வேண்டிய சூழல். தந்தை ஒரு சிற்பி. மேடை நாடக நடிகரும் கூட. நோயாளி அம்மா. வறுமையான சூழல். ஒரு தந்தையாக, கணவனாக போராடும் தந்தையின் மிகையில்லா நடிப்பும் அந்தச் சிறுவனின் ஏக்கம், ஏமாற்றம், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் கண்களும் இப்படத்தைப் பேச வைக்கிறது அழகான கதையின் வழியாக.

என் சிறுவயதில் தெருக்கூத்துகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரிகள் என்று பலவித பொழுது போக்கு அம்சங்கள் தமிழ்நாட்டிலும் இருந்தன. இன்று வீண் கொள்கைகளைப் பேசி பல நாட்டுப்புறக் கலைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அற்புத நாட்டுப்புறக்கலைகளை அறியாத தலைமுறை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தான் நஷ்டம் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளாக ஒரு காட்டுமிராண்டி சமூகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் காசு கொடுத்து ஒட்டு வாங்கும் கூட்டங்கள்.

இப்படத்தில் கோவிலில் நடைபெறும் கூத்து/மேடை நாடகத்தை மக்கள் இரவெல்லாம் விழித்திருந்து காண்பார்கள். பொதுவாகவே இத்தகைய நாடகங்கள் புராண கதைகளை மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆடல், பாடல்களுடன் அரங்கேறும். கதாபாத்திரங்களின் உடைகள், மிரட்டலான நடிப்பு, வசனங்கள் மக்களை ஈர்ப்பதால் கூட்டமும் வரும். அப்பாவிடம் தான் வாங்கிய மெடலைக் காண்பித்து பணத்தைக் கேட்க வரும் மகன், தந்தையின் நடிப்பையும், உடையையும், ஊரார் மெச்சி அளித்த பண பரிசையும் விடிய விடிய கண்டு களிக்கிறான்.

சுப முடிவு.

திரைப்படம் என்பது நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தமிழ் இயக்குனர்களின், மக்களின் ரசனை மாற வேண்டும். மாறினால் மட்டுமே நமக்கு இத்தகைய படங்கள் கிட்டும். இல்லையென்றால்...😭😭😭😭😭



Friday, March 4, 2022

Cycle

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கொரியன் தொடர்கள், திரைப்படங்கள் என்று சென்று கொண்டிருந்ததில் அவ்வப்போது மராத்தி படங்களையும்   ஒரு மாறுதலுக்குப் பார்ப்பதுண்டு. அந்த வரிசையில்  'சைக்கிள்' திரைப்படத்தைக் காண நேர்ந்தது. 

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நகரத்தில் உழல்பவர்களை விட வெள்ளந்தியானவர்கள். அவர்களிடம் இருக்கும் சக நட்பு, பரிவு, பாசம் எல்லாம் நகரத்தில் எதிர்பார்க்கவும் முடியாது. படத்தின் இயக்குனர் அப்படியான கால கட்டத்தில் இருப்பது போல் இந்தக்  கதை நடப்பதாக துவக்கத்திலேயே சொல்லி விடுகிறார். 

ஜாதகம் பார்க்கும் எளிமையான  ஜோதிடர் குடும்பம். அக்கம் பக்கத்து ஊர் மக்கள் வந்து அவரிடம் பணிவுடன் ஜாதகப்பலன்களை கேட்டுச் செல்ல வருகிறார்கள். சுட்டிப் பெண் குழந்தை. ஜோதிடரின் சைக்கிளுக்கென்று ஒரு கதை இருக்கிறது. அவர் அதைப் பொத்திப்  பொத்தி பாதுகாத்து ஓட்டி வருவார். திடீரென காணாமல் போகும் அந்த சைக்கிளால் ஜோதிடர்,  திருடர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அனாவசிய மிகை உணர்வுகள் இன்றி வெள்ளந்தி மனிதர்களின் பார்வையில் சுவையாக திரைப்படமாக்கியிருக்கிறார்கள். 

பச்சைப்பசேலென கிராமத்துச் சூழல். சூரியோதயம், அஸ்தமன அழகிய கடற்கரை என கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி அமைப்புகள் மனதைக் கவருகிறது. மராத்தி மொழி வார்த்தைகள் பலவும்  என் தாய்மொழியில் பேசுகிறோம்  என தெரிந்தது. மாலை, இரவு நேரங்களில் கதாகலாட்சேபம், புராண நாடகங்கள் என்று தெருக்களில் குடும்பங்களுடன் கண்டு களித்திருந்த காலமும் உண்டு என்பதை தொலைக்காட்சி, வீடியோ கேம்களில் தொலைந்திருக்கும் இந்த தலைமுறையினருக்குப் புரியுமா?

பொருட்களின் மேல் பற்று வைக்காதே என்று படத்தின் துவக்கத்தில் ஒருவருக்கு அறிவுரை சொல்வார் ஜோதிடர். அந்த மனிதரின் ஜாதகம் படு மோசமாக இருக்கும். தன்னால் முடிந்த உதவியைச் செய்து நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வுடன் செல்வார் அந்த மனிதரும். தன் மிதிவண்டி தொலைந்தவுடன் தான் அவருக்கு அதன் மேல் இருந்த பற்று புரியும். இப்படி அவர் அடுத்தவருக்குச் சொன்னதைப் புரிந்து கொள்ளும் பல காட்சி அமைப்புகள். 

திருடர்களுக்கோ அந்த மிதிவண்டியின் வாயிலாக ஒரு  மனிதரை எப்படியெல்லாம் மக்கள் கொண்டாடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட நல்ல மனிதரிடம் திருடி விட்டோமே என்று மனம் வருந்தி திருந்துவதாக சிறு சிறு காட்சிகளின் மூலம் அவர்கள் உணரும் வண்ணம் அமைத்திருந்தது சிறப்பு.

வெற்றுக் கூச்சல் வசனங்கள், ரௌடிகளைக் கொண்டாடும் கதைகள், அரைகுறை நிர்வாண ஆபாச நடனங்கள், சாதி சமூகப் படங்கள் போர்வையில் மிகை நடிப்பும் முட்டாள்தனமான செண்டிமெண்ட் படங்களுக்கு இடையில் இதமான படம் இது. 

 நெட்ஃப்ளிக்ஸ்ல் கண்டு மகிழுங்கள்.

Thursday, March 3, 2022

The Courier

இரு நாடுகளுக்கிடையே சுமுகமான உறவு இல்லாத நிலையில் உளவு பார்ப்பது என்பது தொன்றுதட்டு இருந்து வரும் ஒரு வழக்கம். அதுவும் தற்போதைய தகவல் தொழிநுட்பத்துறை விஞ்ஞான வளர்ச்சியற்ற காலங்களில் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் பலர். அதனால் பல இன்னல்களையும் அனுபவித்தவர்கள். அப்படி ஒருவரின் கதை தான் இது.

வியாபார நிமித்தம் அடிக்கடி ரஷ்யா செல்லும் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஒருவரை வளைத்து உளவு பார்க்க சம்மதிக்க வைக்கிறது அமெரிக்காவும் பிரிட்டிஷ் உளவுத்துறையும். கம்யூனிச நாடுகளுக்கு எதிராக என்றுமே மேற்குலகம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச உலகில் ரஷ்யா என்றாலே போருக்கு அஞ்சாதவர்கள், அமெரிக்காவுக்கு இணையான அணு ஆயுதபலத்தைக் கொண்டு மிரட்டுபவர்கள் என்பதெல்லாம் உண்மை. அதுவும் அமெரிக்காவின் எதிரி நாடான கியூபாவிற்கு உதவிகள் வழங்குவதைத் தெரிந்தால் சும்மா விடுவார்களா? 'The Courier' படத்தின் கதைக்கரு இதுதான் .

ரஷிய அரசுக்கு எதிராக அமைதியை விரும்பும் அந்நாட்டு அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்பவர் தான் இத்திரைப்படத்தின் கதாநாயகன். ரஷிய உளவுப்படை கேஜிபியின் பலத்த கண்காணிப்பையும் மீறி எவ்வாறு தொடர்புகள் நடக்கிறது, பிடிபட்டுவிடுவார்களோ என்று நம்மையும் அச்சத்துடன் பார்க்க வைக்கிறது இந்தப்படம். கதாநாயகனாக நடித்திருக்கும் பெனெடிக்ட் கும்பேர்பேட்ச்சின் பயந்த முகபாவமும் அழுத்தமான நடிப்பும் அற்புதம். தொடக்கத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக தான் தன்னை உளவுத்துறை அணுகியிருக்கிறது என்று நம்புபவர் பின்னால் தான் எத்தகைய சிக்கலில் மாட்டியிருக்கிறோம் என்று உணர்கிறார். அதனால் குடும்பத்தை இழக்கும் நிலைக்கும் செல்கிறார். ஆனால் தன்னால் மிகப்பெரிய சீரழிவுத் தடுக்கப்படுவதை அறிந்த பின்பு தெரிந்தே அபாயகரமான களத்தில் இறங்குகிறார். அதன் பலனாக பல சித்திரவதைகளையும் அனுபவிக்கிறார்.

அவருக்கும் ரஷ்ய அதிகாரிக்கும் இடையே நல்ல நட்பும் தொடர்கிறது. கடைசி வரை அவரைக் காட்டிக் கொடுக்காமலேயே ரஷிய சிறையிலிருந்து வெளிவருகிறார்.

அமேசான் ப்ரைமில் கண்டு களிக்கலாம்.



Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...