Tuesday, July 19, 2022

அழியாத கோலங்கள்

ஜூன் மாதம் ஆல்பனி ஹிந்து கோவிலின் ஆண்டு விழாவை ஒட்டி கோலமிடுவது என்று முடிவானது. கோவில் வாசலில் இரண்டு பெரிய கோலங்களுடன் ஆரம்பித்து கோவிலைச் சுற்றி கோலங்கள் இட நண்பர்கள் பலரும் வண்ணம் தீட்ட விருப்பம் தெரிவித்தார்கள். மாலையில் துவங்கி இரவு பத்து மணி வரை சிரித்துப் பேசி குழுவாக வேலை பார்த்த பொழுது தாய்நாட்டில் இருப்பது போல் இருக்கிறது என்று நண்பர்கள் பலரும் ஆனந்தமாக இருந்தது சிறப்பு. கோலம் போடும் பெண்களுக்கு ஈஷ்வரும் நண்பர்களும் சுவையான காஃபி, ஐஸ்கிரீம் என்று கூடவே உதவியாக இருந்தார்கள். குழந்தைகளும் வண்ணம் பூச உதவி மகிழ்ந்தார்கள். சனிக்கிழமைகளில் காலை 7-10.30 மணி வரை கோலமிட்டது புது அனுபவம். சிலுசிலு காற்றில் இளம்வெயிலில் எம் எஸ் சுப்புலட்சுமியுடன் பாடிக் கொண்டே கேட்டுக் கொண்டே செய்த இந்த மாபெரும் கோல வேலை மறக்க முடியாத அனுபவத்துடன் இனிதே நிறைவடைந்தது. மனதுக்குப் பிடித்த செயலைச் செய்த திருப்தியுடன் குடும்பங்களுடன் கொண்டாடியும்  மகிழ்ந்தோம்.

கோவிலில் சந்திக்கும் பலரும் கோலங்கள் தங்கள் அம்மாவை, இளமைப்பருவத்தை, வீட்டு விசேஷங்களை, ஊரை ஞாபகப்படுத்துவதாகஅழகிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்கள். 

"இப்பொழுது தான் கோவில் வாசல் அழகாக இருக்கிறது" என்று சிலரும்,

 "தென்னிந்திய கோவில்களுக்குச் செல்வது போல இருக்கிறது" என்று வட இந்தியர்களும் 

"நாங்கள் அன்று நினைத்தை இன்று நீங்கள் செய்து விட்டீர்கள்" என்று ஐம்பது வருடங்களுக்கு முன் கோவிலை நிர்மாணிக்க உதவிய பெரியவர்களும் மனந்திறந்து பாராட்டினார்கள். 

எல்லோரும் பாராட்டி விட்டால் அந்த செயல் முற்றுப்பெற்றதாகி விடுமா என்ன😁 வேலையில் பங்கெடுத்துக்கொள்ளா விட்டாலும் இலவச அறிவுரை கொடுக்க நம் மக்களுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்? ஆனால் நல்ல நண்பர்கள் துணையோடு எடுத்த வேலையை திருப்தியுடன் முடித்துக் கொடுத்தோம். அழகான கோலங்களைப் பார்த்துக் கொண்டே அவரவர் இஷ்ட தெய்வத் திருநாமங்களை மனதில் சொல்லிக்கொண்டு ஆறு முறை கோவிலை வலம் வந்தால் ஒரு மைல் தொலைவு நடந்திருப்போம். மனதில் அமைதியும் குடிகொண்டிருக்கும்.

ஒரு மழைநாளில் அழியாத கோலங்களை அழகாக ஒளிப்பதிவு செய்து கொடுத்தார் என்னவர்😎🙏🙏🙏🙏👇👇👇

கோவில் கோலங்கள்

எதிர்பாராத இந்த இனிய அனுபவம் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்!

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா🙏🙏🙏


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...