Monday, July 4, 2022

சுதந்திர தினம்

கல்வி, வேலை என அமெரிக்காவிற்குள் காலடி வைக்கும் பலரும் தொடக்கத்தில் அந்நிய நாட்டிற்குள் தங்களுடைய வாழ்க்கை ஒரு சில வருடங்களுக்குத் தான். வேண்டிய வரையில் பணத்தை ஈட்டியவுடன் தாய் நாட்டிற்குத் திரும்பிவிடும் கனவுடனே வருகிறார்கள். மேற்படிப்பு முடித்தவர்கள் வேலை தேடி இந்நாட்டின் வேலைவாய்ப்புகளிலும் , வசதிகளிலும் ஒன்றிட , வேலை கிடைத்து வந்தவர்கள் இந்நாட்டின் வாழ்க்கைமுறையிலும் குழந்தைகளுக்கான வசதி, வாய்ப்புகள், வெளிப்படையான சுரண்டல்கள் இல்லாத அரசாங்க நடவடிக்கைகள் என்று பல விஷயங்களில் நாட்டம் கொண்டு இங்கேயே தங்கி விடுகிறார்கள். விசா காலம் முடிவதற்குள் நிறுவனங்கள் மூலமாக க்ரீன் கார்ட் வாங்கும் வரையில் இருக்கும் அச்சம், பதட்டம் எல்லாம் கைகளில் க்ரீன் கார்ட் கிடைத்தவுடன் பஞ்சாய் பறந்து விடுதலை பெற்ற உணர்வு கிடைத்து விடுகிறது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்நாட்டின் மைந்தர்களாக குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கவும் முடிகிறது.

நானும் க்ரீன் கார்ட் கிடைத்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு குடியுரிமைக்காக விண்ணப்பிக்க , ஈஷ்வரோ தயங்கினார். நம்முடைய இந்திய குடியுரிமையை இழந்து விடுவோமே என்று வருத்தம். அம்மா வீட்டை விட்டு திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டிற்கு வந்துவிட்டால் அம்மா வீடு இல்லை என்று ஆகிவிடுமா? அதெல்லாம் நாம் எப்பொழுதும் இந்தியர்கள் தான். அது இது என்று சமாதானப்படுத்தியும் ஒத்துக் கொள்ளவில்லை. 2008ல் பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டு வேலையிடத்தில் அமெரிக்க குடிமகன்/ள்களுக்கும், க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் தான் முன்னுரிமை என்ற பேச்சு அடிபட்டவுடன் 'நான் அப்ளை பண்ணப் போறேன். நீங்க யோசிச்சு முடிவெடுங்க' என்று விண்ணப்பித்து பணமும் கட்டி சில நாட்களில் தபாலில் கேள்வி-பதில் அடங்கிய புத்தகமும் , CD யும் வந்து சேர்ந்தது.
ஆஹா! இத வேற படிக்கணுமா? அமெரிக்காவைப் பற்றின அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டிருந்த அப்புத்தகத்தில் நாட்டின் வரலாறு, கொள்கைகள், தலைவர்கள் , தேசிய கீதம் என்று பலவும் இருந்தது. படிக்கவும் ஆர்வமாக இருந்தது. நண்பர்கள் பலரும் "நாங்க வெளியில போறப்ப வண்டியில CDய ஓட விட்டு படிச்சிட்டே போவோம்" என்று கூறியதைக் கேட்டவுடன் அப்படி ஒன்றும் கஷ்டமாக இல்லையே இதற்கு ஏன் இவ்வளவு ஸீன் போடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு கைரேகைகளை எடுக்க ஒரு நாள், நேர்முகத்தேர்வுக்கென ஒரு நாள் என்று அடிக்கடி வீட்டிற்கு அருகில் இருந்த Homeland Security அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. நேர்முகத்தேர்வு நாளன்று என்னைப் போல் சிலர் அங்கிருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரியுமா? புரியுமா? எப்படி இவர்களைத் தேர்வு செய்வார்கள் என்று மண்டைக்குள் வேண்டாத குடைச்சல்

என் பெயரை அழைத்தவுடன் சம்பிராதய கேள்விகள். புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே கேள்விகள் கேட்க ஆரம்பித்து ஐந்து கேள்விகளுக்கும் 'டான் டான் டான்' என்று பதில்கள் அளித்தவுடன் "உங்க ஆங்கிலம் தெளிவாக இருக்கிறது. நன்றாக பேசுகிறீர்கள்" என்றார் கேள்வி கேட்ட நக்கீரன்.
நாங்கல்லாம் யாரு தெரியும்ல? என்று நமக்கு நாமே ஒரு பாராட்டுப் பத்திரத்தை மனதுக்குள் வாசித்துக் கொண்டே கைகுலுக்கி விடைபெறும் பொழுது "Welcome to America." சிரித்துக் கொண்டே வழியனுப்பினார்.

அவ்வளவு தானா? இனி “அம்ரீக்கா எண்டே புகுந்த நாடு. ஆல்பனி எண்டே ஊரு” டமுக்கு டிப்பா ஹையாலோ ஏ சிங்கி ஏ சிங்கா என பாடிக் கொண்டே வீட்டுக்குள் வர, சுப்பிரமணிக்கு ஒரே ஜாலி. அம்மா நீயும் நானும் அமெரிக்கன்ஸ் என்று ஆனந்த கூத்தாடினான். எனக்கு அப்பாடா இனி வேலையிடத்தில் பிரச்னை இல்லை என்று நிம்மதியாக இருந்தது.

விரைவிலேயே அரசாங்க முறைப்படி நீதிபதியின் முன் அமெரிக்க குடியுரிமைப் பிரமாணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள். அந்த நாளும் வந்தே விட்டது. அன்று பார்த்து சுப்பிரமணிக்கு வாந்தி, காய்ச்சல் என்று படுத்த நான் மட்டும் தனியாக போக வேண்டிய நிலை. ஆரம்பித்திலேயே ஈஷ்வர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இப்பொழுது நல்ல சாக்கு கிடைத்து விட்டது. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று நானும் கிளம்பி விட்டேன்.

அன்று பார்த்தா பேய் மழை கொட்ட வேண்டும்? எனக்குப் பழக்கமில்லாத ஊர் மற்றும் தெருக்கள். புது ஊர் என்றாலே வரும் பதட்டமும் சேர்ந்து கொள்ள, எங்கு வண்டியை நிறுத்துவது என்று ஒரே குழப்பம். சுற்றிச்சுற்றி வந்தாலும் வண்டியை நிறுத்த இடமில்லை. பல தெருக்கள் தாண்டி நிறுத்தி விட்டு நான் வரும் வரையில் வண்டி பத்திரமாக இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது.

அந்த ஹாலுக்குள் நுழையும் பொழுது நன்கு நனைந்திருந்தேன். நல்ல கூட்டம். இத்தனை மக்கள் இன்று குடியுரிமை பெறுகிறார்களா! இது எப்பொழுது முடிய? கவலையும் சேர்ந்து கொண்டது.

ஸ்மார்ட்ஃபோன் பிரபலமாகாத காலம். ஈஷ்வரிடம் நான் வந்து சேர்ந்து விட்ட தகவலைச் சொல்லி விட்டு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன். தூரத்தில் நண்பர் குடும்பம் ஒன்றைக் கண்டதும் சிறிது ஆறுதல். பல நாட்டு மக்கள், பல மொழிகளை பேசிக் கொண்டு முகத்தில் புன்னகையுடன்! இந்தியர், பாகிஸ்தானியர், எந்த நாடு என அறிய முடியாத வகையில் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு மனிதர்கள் கூட்டம், வெள்ளை,கருப்பு, சிகப்பு, பழுப்பு, பிரவுன் என பல நிறங்களில்! குழந்தைகளுடன், பெற்றோர்களுடன் , உறவினர்களுடன், நண்பர்களுடன் வந்து அன்றைய நாளை கோலாகலமாக கொண்டாடிக்கொண்டிருக்க, நான் மட்டும் அனாதையாக இருப்பது போல் தோன்றியது. வாழ்க்கையின் பல காலகட்டங்களில் நான் தனித்தே இருந்திருக்கிறேன். அந்த நினைவுகளும் வந்து செல்கையில் தலையெழுத்தை எண்ணி கண்கள் வியர்க்கத்தான் செய்தது நம்மை அனாதையாக எண்ணிக் கொண்டால் இந்த துயரம் பனி போல் விலகிவிடும் என்று தெரியும். அப்படித்தான் நினைத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் அந்நகர மேயரும், தலைமை நீதிபதியும், கவுன்சிலரும் மேடையேற, அருகில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர் தோன்றி அன்று குடியுரிமை பெரும் மக்களுக்கு
வாழ்த்துகள் சொல்லி வரவேற்றுப் பேசினார். பிறகு ஒவ்வொருவராக தேசியக் கொடியைச் சாட்சியாக வைத்து பிரமாணம் செய்து கொண்டோம். ஒரு சான்றிதழ் அதற்குச் சாட்சி. மகிழ்ச்சியாக இருந்தது. கடந்து வந்த கடினமான பாதைகள் அப்படி. இன்று வரையில் இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ்கிறேன். இனியும் வாழ்வேன்.

குழந்தைகள் இந்நாட்டின் மைந்தர்களாக வளர, வளர எங்களுக்கும் இந்நாட்டின் மீதான பற்றும் கூடிக்கொண்டு வருகிறது. இன்றைய நாளில் பெருமையுடன் தேசியக்கொடியை வீடுகளில் ஏற்றி தாய்நாட்டின் சுதந்திரத்தைக் கட்சி பேதமின்றி கொண்டாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றால் கட்சி, இனம், நிற பேதமின்றி ஒற்றுமையாக குரல் கொடுத்து எதிரியை வீழ்த்த நினைக்கும் அங்கிள் சாமிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில நல்ல விஷயங்களும் உள்ளது.

எல்லோரும் கொண்டாடுவோம்ம்ம்ம்...

O say does that star-spangled banner yet wave
O'er the land of the free and the home of the brave?

Happy 4th of July!


1 comment:

  1. அருமை...பின்னணி நிறம் கண்களை உறுத்துகிறது. முடிந்தால் இலகு வண்ணங்களுக்கு ஏதாவது ஒன்றுக்கு மாற்றுங்களேன்.

    ReplyDelete

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...