Saturday, July 22, 2023

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...


சில வருடங்களாகவே அரிசி தட்டுப்பாடு வரப்போகிறது என்று 'புலி வருது, புலி வருது' கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிஜமாகவே வந்து விட்டது போலிருக்கிறது. அதுவும், இந்தியர்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் அரிசிக்காக காத்திருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. அரிசி என்பது நம்முடைய அன்றாட உணவு. ஒருவேளை சோறு உண்ணவில்லை என்றால் அந்த நாளே திருப்தியாக கழியாது நமக்கு. அப்படித்தான் பழக்கப்பட்டு இருக்கிறோம். அது மட்டுமா? இட்லி, தோசை, அடை, பிரியாணி, விதவிதமான பொங்கல், சாம்பார், ரசம், தயிருடன் நித்தம் நித்தம் நெல்லுச் சோறு சாப்பிட்டுப் பழகின ஜென்மங்கள் ஆயிற்றே! இப்படி தட்டுப்பாடு, கட்டுப்பாடு என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்காதா?

முதலில் தோன்றும் எண்ணம் ஓடிப்போய் கடையிலிருந்து இரண்டு மூன்று இருபது பவுண்ட் அரிசி மூட்டைகளை வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் தோன்றுவது இயற்கை தான். இப்படித்தான் பருப்பு தட்டுப்பாடு என்று உளுந்து, துவரம் பருப்பு விலையை 'கிர்ர்ர்ர்ர்ர்ர்'ரென்று ஏற்றினார்கள். சில மாதங்களுக்கு முன் கோதுமை தட்டுப்பாடு! இப்பொழுது அரிசியும் சேர்ந்து கொண்டிருக்கிறது. இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தெற்காசிய மக்களையும் அதிகம் பாதிக்கும். 2024 வரை தொடரப்போகும் இந்தத் தட்டுப்பாட்டினால் உலகளவில் விலை ஏறப்போகிறது என்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது.

தெற்காசியாவிலிருந்து அதிகமாக அரிசி மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. தண்ணீர் பற்றாக்குறை, போதிய விளைச்சல், லாபம் இல்லாத தொழிலாக விவசாயம் மாறிவருவதால் விளைநிலங்களில் வீடுகளைக் கட்டிவருவது பல இடங்களில் நடக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை, வெள்ளம், நிலத்தில் இறங்கி விவசாய வேலைசெய்வோர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்து விட்டதும் தற்போதைய ரஷ்ய-உக்ரைன் போரும் சில காரணங்களாகக் கூறப்படுகிறது. இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்ய அதிக முதலீடு தேவைப்படுவதும் மற்றொரு காரணம்.

இதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது மேற்கத்திய நாடுகள் என்றாலும் தற்போது சிங்கி அடித்துக் கொண்டிருக்கும் இலங்கை, பாகிஸ்தான், சிரியா, துருக்கி, ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பவே பதுக்கல் ஆசாமிகள் மூட்டைகளைப் பதுக்க ஆரம்பித்து விட்டிருப்பார்கள்!

இதில் கலிஃபோர்னியாவில் சில இடங்களில் விளைவிக்கப்படும் அரிசியில் ஈயத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. அதைச் சாப்பிடக்கூடாது என்று சில வருடங்களுக்கு முன் செய்தியாக வெளிவந்தது. இப்படி சாப்பிடும் அரிசியில் கூட உயிரைக்கொல்லும் வேதியியல் பொருட்கள் கலந்து... என்னவோ போடா மாதவா!

இந்த தட்டுப்பாடுகளுக்கெல்லாம் முக்கிய காரணம் பெருகி வரும் மக்கள் தொகை தான். அதைக் கட்டுக்குள் கொண்டு வராத வரை எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு என்பதே கிடையாது. முன்பு சீனா செய்தது போல் இந்திய அரசாங்கம் முதலில் மக்கள் தொகையைக் குறைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் 'பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்' நிலைமை அதிகரிக்கும். வழக்கம் போல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பரிதாபமாகி விடும். இப்பொழுது நதிநீர் பங்கீட்டு அரசியல் நடப்பது போல் அரிசிக்காக சண்டைகள் நடக்க ஆரம்பித்தால் நினைக்கவே பதட்டமாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்காமல் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய. ஹ்ம்ம்ம்...

இந்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அரிசி ஏற்றுமதியைக் குறைத்துள்ளது.

இன்னும் நான் கடைக்குப் போகாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனி கடைக்குப் போனால் அரிசி கிடைக்குமோ இல்லையோ?

நித்தம் நித்தம் நெல்லுச்சோறுன்னு இனி பாட முடியாதா கோபால்?



Monday, July 17, 2023

நியூட்டன்



உலகிலேயே மக்கள்தொகை அதிகமுள்ள நாடு இந்தியா. அங்கு தேர்தல் எப்படி நடக்கிறது என்பதே அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஆச்சரியமான விஷயம்! தொழிநுட்பத்தில் சிறந்த நாடுகளே தேர்தலை நடத்தவும் ஓட்டுக்களை எண்ணவும் திணறும் காலத்தில் எப்படி இந்தியாவில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் மூலம் தேர்தலை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் என்று வியக்கிறார்கள்! அதற்கான காரணம் நாட்டின் மீது தீவிர பற்றுக் கொண்ட அறவழியில் நடக்கும் சில அதிகாரிகளும் மக்களும் ராணுவமும் என்பதைத் தான் இந்தப்படம் புரிய வைக்கிறது. அழகான கதையை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

76 ஓட்டுக்களுக்காக சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாடும் பகுதிக்குச் செல்ல அச்சப்படும் தேர்தல் அதிகாரிகள் அனுபவமே இல்லாத இளைஞன் ஒருவனை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அங்கு அவன் எதிர்கொள்ளும் அனுபவமே படமாக விரிகிறது. தேர்தல் நடப்பதை அறிந்தாலும் தேர்தல் வேட்பாளர்களை அறியாத மக்கள். அவர்களால் தங்களுக்கு என்ன ஆதாயம்? என்று கேட்கும் நிலைமையில் சில பகுதிகள் அதுவும் மலைப்பகுதிகளில் ஆதிவாசிகள் குடியிருப்புகளில் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழும் சமூகம் அது. உயிரைப் பணயம் வைத்து அங்கு செல்ல அரசியவாதிகள் துணிவதில்லை. அப்படி துணிபவர்களை தீவிரவாதிகள் கொன்று விடுவது போல இப்படத்தில் காட்டியிருந்தார்கள்.

தீக்கு இரையான வீடுகள், பள்ளிக்கூடத்தைக் கண்டவுடன் நாயகன் அதிர்கிறான். அவனுடன் இருக்கும் மற்ற அதிகாரிகள் 'இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா' ரேஞ்சில் காதைக் குடைந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வரும் ஆதிவாசிப் பெண் மட்டும் நாயகனின் நேர்மையைப் புரிந்து உதவ முன்வருகிறாள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேர்தலை முடிக்க எத்தனிக்கும் ராணுவ அதிகாரி, வெளிநாட்டு ஊடகத்தின் முன் தேர்தல் நடைபெறுவதாக காட்ட ஊருக்குள் சென்று மக்களைக் கூட்டி வந்து மிரட்டுவது, ஓட்டளிக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் போதிய கல்வியறிவு இல்லாத வாக்காளர்கள் தவிப்பது, தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறவர்களோ என்று அந்த மக்களைச் சந்தேகித்து அராஜகம் செய்வது என்று ஒரு சில மணிநேரங்களில் நடப்பதாக சொல்லப்பட்டிருக்கும் கதையை அழகாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் அமித்.

அரசு வேலை என்பது பலருக்கும் இன்று வரையில் கனவாக இருக்கிறது. நல்ல வேலையில் இருந்தால் உடனே திருமணம் அதுவும் வசதியான வாழ்க்கைக்காக என்று பெற்றோர்கள் போடும் திட்டம், படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் கூட்டம் என்று காலத்தின் கொடுமையை காட்டுகிறது இப்படம்.

தன் கடமையை நேர்மையாக முடிக்க நினைக்கும் இளைஞனுக்கும் சமூகத்திற்குமிடையே நடக்கும் போராட்டம் தான் படம். கதாநாயகனாக ராஜ்குமார் ராவ். நன்றாக நடித்திருக்கிறார். இந்திப்படங்கள் கூட அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களை எடுக்கும் அளவிற்குத் திருந்தி விட்டது.

Friday, July 14, 2023

அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்

 கடந்த வாரம் சொல்வனத்தில் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்! பற்றின என்னுடைய கட்டுரை. இன்று பைடன் அரசின் மாணவர் கல்விக்கடன் தள்ளுபடி தற்போதைய அரசிற்குப் பின்னடைவாக இருக்குமோ?  பைடன் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதும் பல வழக்குகளைச் சந்தித்து வரும் முன்னாள் அதிபர் ட்ரம்ப்  எதிரணி வேட்பாளர்களில் இன்னும் முன்னணியில் இருப்பதும் எதிர்வரும் தேர்தலில் எப்படி எதிரொலிக்கப் போகிறதோ?

Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead)

அடுத்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஆரம்பகட்ட வேலைகள் இப்பொழுதே ஜரூராக நடக்க துவங்கிவிட்டது. ஜனநாயக கட்சி சார்பில் இந்த முறையும் போட்டியிடப் போவதாக அதிபர் பைடன் அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்க, குடியரசுக்கட்சி சார்பில் பலரும் வேட்பாளர் களத்தில் குதித்து ஊடகங்களைப் பரபரப்பாக வைத்துள்ளனர். இவர்களில் அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தற்போது வரையில் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் வகிப்பதால் அவர் மீதான தொடர் சட்டப்போராட்டங்களும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிபராக பதவி வகித்த காலத்திலேயே அவர் மீது பல வழக்குகளும் விசாரணைகளும் இருந்தது. அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு முறை ‘பதவி நீக்கம்’ செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தனது அரசியல் போட்டியாளரான ஜோ பைடனை விசாரிக்க உக்ரைன் நாட்டு அதிபரை நிர்பந்தித்த குற்றச்சாட்டில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் அவர் மீதான விசாரணையை நடக்க விடாமல் காங்கிரசை தடுத்ததற்காகவும் பிரதிநிதிகள் சபையால் 2019 டிசம்பரில் அதிபர் ட்ரம்ப் ‘பதவி நீக்கம்’ செய்யப்பட்டார். இங்கே ‘பதவி நீக்கம்’ என்பது அதிபரின் தவறான நடத்தைக்குக் குற்றம் சாட்டப்படும் செயல்முறை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பிரதிநிதிகள் சபையால் ‘பதவி நீக்கம்’ செய்யப்பட்டதால் வழக்கு விசாரணைக்காக செனட்டிற்குச் சென்றது. குடியரசுக்கட்சியினரின் செனட் பெரும்பான்மையால் மட்டுமே பிப்ரவரி 2020ல் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார். அதாவது, பிரதிநிதிகள் சபையின் பதவி நீக்க குற்றச்சாட்டுகளின் விளைவாக அவர் பதவியில் இருந்து நீக்கப்படாமல் அதிபராகத் தொடர முடிந்தது. ஜனவரி 2021ல் அமெரிக்காவின் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையில் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டிற்காக இரண்டாவது பதவி நீக்கம் நடந்தது. அந்த வழக்கிலிருந்தும் பிப்ரவரி 2021ல் செனட்டால் விடுவிக்கப்பட்டார்.

தற்போது நடந்து வரும் பல்வேறு வழக்குகளில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில் அதன் முடிவுகள் அவருடைய எதிர்கால அரசியலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்குகள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

2016ல் அதிபர் வேட்பாளராக ஹிலரி க்ளிண்டனை எதிர்த்துப் போட்டியிடும் நேரத்தில் தனது வரி அறிக்கையை வெளியிட மறுத்து அதிபர் வேட்பாளர்களின் பாரம்பரியத்தை உடைத்தார். ட்ரம்ப்பின் வணிக நடைமுறைகள், நிதி மோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றின் மீது விசாரணை நடத்த பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ஜூலை 2020ல் ட்ரம்ப் நிறுவனங்களின் நிதி ஆவணங்கள் குற்றவியல் விசாரணைக்காக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், வரி மற்றும் காப்பீடு மோசடி உள்ளிட்ட சாத்தியமான நிதிக் குற்றங்களை விசாரித்து வருகிறது. நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம், கடன்கள் மற்றும் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக ட்ரம்ப் நிறுவன சொத்துக்களின் மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டதா என்பது குறித்தும் சிவில் விசாரணையை நடத்தி வருகிறது.

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ட்ரம்ப்புடன் முன்பு தனக்கு இருந்த தொடர்பைப் பற்றி 2016 தேர்தலில் பேசாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், ‘ஹஷ்’ பணம் செலுத்தி பிரச்சார நிதி மீறல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. இது ட்ரம்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்க வைக்கக்கூடும். ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த ‘அவதூறு’ வழக்கில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

2020 அதிபர் தேர்தல் முடிவுகள் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக இல்லாத நிலையில் ஜார்ஜியா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை ஃபுல்டன் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றவியல் துறை விசாரணை செய்து வருகிறது.

ஈ. ஜீன் கரோல் என்பவர் தாக்கல் செய்த ஒரு சிவில் வழக்கில் 1996ல் ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதை மறுத்து “அவள் தன்னுடைய வகை அல்ல என்று கூறி அவளது புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க கதையை உருவாக்கியிருக்கிறார்” என்று அவதூறாகப் பேசிய வழக்கில் கரோலுக்குச் சாதகமாக ஐந்து மில்லியன் டாலர்கள் தீர்ப்பை நடுவர் மன்றம்(ஜுரி) வழங்கியுள்ளது. ஆனால் பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரம் ஏதுமில்லாததால் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு நிராகரிக்கப்பட்டது. இந்த சிவில் தீர்ப்பின் விளைவாக அவர் எந்தச் சிறைத்தண்டனையையும் பெறவில்லை.

நாட்டின் வரலாற்றில் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ட்ரம்ப் அளவிற்குக் குற்றஞ்சாட்டப்படவில்லை அல்லது குற்றங்கள் செய்திருக்கவில்லை. வகைப்படுத்தப்பட்ட ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டு புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக 37 குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகள் நடந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த வழக்கு தான் தற்போது அதிக பரபரப்பாக மக்களின் கவனத்தையும் அரசியல் வட்டாரத்தையும் ஈர்த்து கட்சிக்குள் பலவிதமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி பதிவுச்சட்டத்தின்படி பதவிக்காலம் முடிந்து வெளியேறும் அதிபர்கள் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை தேசிய ஆவண காப்பகம் மற்றும் பதிவு நிர்வாகத்திடம் (National Archives and Records Administration (NARA)) ஒப்படைக்க வேண்டும். அதிபர் ட்ரம்ப் ஜனவரி 20, 2021ல் வெள்ளை மாளிகையில் இருந்து ஃபுளோரிடாவில் உள்ள அவரது ‘மார்-எ-லாகோ’ இல்லத்திற்குப் பல ரகசிய அரசாங்க ஆவணங்களை எடுத்துச் சென்றது குறித்து நீதித்துறை விசாரணையைத் தொடங்கியது. மே 2021 முதல் NARA அதிகாரிகள் ட்ரம்ப்பிடம் எடுத்துச் சென்ற ஆவணங்களை ஒப்படைக்க பலமுறை கேட்டுக்கொண்டனர்.

சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் தலைமையிலான ஃபெடரல் வழக்கறிஞர்கள் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய போது மிகவும் முக்கியமான தேசிய பாதுகாப்பு ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அந்த ஆவணங்களை அவர் தனது ஃபுளோரிடா உல்லாசவிடுதியில் பதுக்கி வைத்திருந்தது மட்டுமில்லாமல் அவற்றை மீட்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைத் தடுத்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்க அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய மிக ரகசிய கோப்புகளைப் பாதுகாப்பு அனுமதி இல்லாத நபர்களிடம் ட்ரம்ப் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த ரகசிய ஆவணங்களில் ஒன்று, வேறொரு நாட்டின் மீதான ‘தாக்குதல் திட்டம்’ என்பதால் ராணுவத்துறையும் கதிகலங்கி நிற்கிறது.

இறுதியாக, ஒரு வருடம் கழித்து அவருடைய பிரதிநிதிகள் 2022 ஜனவரியில் 15 பெட்டிகளை ஒப்படைத்தனர். அதில் 197 வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களில் 92 ஆவணங்கள் ‘ரகசியம்’ என்றும் 25 ‘பரம ரகசியமான ஆவணங்கள்’ என்ற அடையாளங்களுடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பிப்ரவரி 2022ல் வகைப்படுத்தப்பட்ட இந்த ஆவணங்கள் பிற கோப்புகளுடன் கலந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததை NARA அதிகாரிகள் நீதித்துறையிடம் எடுத்துரைத்தனர். மார்ச் 30, 2022 அன்று புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சாட்சியம் மற்றும் பிற ஆதாரங்களைப் பெற ஒரு கூட்டாட்சி கிராண்ட் ஜூரி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து மே 2022ல் ட்ரம்ப்பின் வசம் உள்ள மற்ற ஆவணங்களை நீதித்துறையிடம் ஒப்படைக்குமாறு கிராண்ட் ஜூரி ஆணையிட்டது. ஆனால் அவரோ விசாரணையைத் தடுத்து தன்வசம் இருந்த ரகசிய ஆவணங்களை மறைக்க முயன்றிருக்கிறார். புலனாய்வாளர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள அனைத்து ரகசியப் பதிவுகளையும் திருப்பிக் கொடுத்து விட்டதாக அவருடைய வழக்கறிஞரை நிர்பந்தித்து இறுதியில் தனது வழக்கறிஞர்களில் ஒருவரை ஆவணங்களைத் தேட அனுமதிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கறிஞர் மதிப்பாய்வைத் தொடங்குவதற்கு முன்பே தனது உதவியாளர் வால்ட் நௌட்டாவின் உதவியுடன் சேமிப்பு அறையில் இருந்து ஆவணப்பெட்டிகளைத் தனது இல்லத்திற்கு மாற்றியுள்ளார். தொடர் விசாரணையின் முடிவில் ஜூன் 3, 2022 அன்று ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் 38 கூடுதல் ரகசிய ஆவணங்களை நீதித்துறையிடம் ஒப்படைத்து ‘மார்-எ-லாகோ’வில் தீவிரமான தேடலுக்குப் பிறகு வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அந்தக் கூற்றில் உண்மை இல்லை என்பதை உணர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ‘ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்’ ட்ரம்ப்பின் இருப்பிடத்தில் வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் 102 ஆவணங்களைக் கைப்பற்றியது. முன்னறிவிப்பின்றி முன்னாள் அதிபரின் வீட்டில் நடந்த இந்த அதிரடித்தேடல் பைடன் நிர்வாகத்தினரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்துள்ளது என்ற ட்ரம்ப்பின் குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அலுவலகம், பால் ரூம், குளியல், படுக்கைஅறைகள், சேமிப்புக்கிடங்கு மற்றும் நியூஜெர்சி பெட்மினிஸ்டரில் இருக்கும் அவருடைய வீட்டில்  அரசின் வகைப்படுத்தப்பட்ட ஆவணப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிர்ச்சியுடன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பல மாதங்களாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஃபெடரல் கிராண்ட் ஜூரி ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து சாட்சிகளையும் விசாரித்துக் கேட்டுக் கொண்டது. இதில் ட்ரம்ப்பின் ஆவணங்களைப் பற்றின பேட்டிகளும் அவருடைய வழக்கறிஞர்கள் சிலரின் சாட்சியங்களும் அடங்கும். இவற்றின் அடிப்படையில் அதிபராகப் பதவிக்காலம் முடிந்தபின்னும் தேசிய பாதுகாப்புத்தகவல்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டு உளவுச்சட்டத்தை மீறியதில் 31 குற்றங்களும் விசாரணையைத் தடைசெய்ய முயன்றதில் நான்கு குற்றங்களும் தவறான அறிக்கைகளுக்காக இரண்டு குற்றங்களும் என ட்ரம்ப் மீது மொத்தம் 37 குற்றங்களும் பாதுகாப்புத் தகவல்களை அப்புறப்படுத்தும் பணியில் அவரது நீண்டகால உதவியாளர் வால்ட் நௌட்டா மீது ஆறு குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளது. ஜூன் 13, 2023 அன்று மையாமியில் நடந்த விசாரணையில் டிரம்ப் தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் எதிர்கொள்ளும் சட்ட வழக்குகளின் முடிவில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் அரசுப்பதவியில் இருக்க தடை கூட விதிக்கப்படலாம். இந்த வழக்குகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தற்பொழுது உறுதியாகச் சொல்ல முடியாது. இருப்பினும், இந்தச் சவால்கள் ட்ரம்ப்பின் அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது தெளிவாகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த அவர் “உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன்” என்று தனது வாக்காளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் உள்ள ஃபெடரல் கிராண்ட் ஜூரி ஜூன் 2023 அன்று ட்ரம்ப் மீது குற்றம்சாட்டியதில் வரலாற்றில் ஃபெடரல் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அமெரிக்க அதிபராகவும் பெயரெடுத்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அதிபராக வெற்றிப்பெறுவதைத் தடுப்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நீதித்துறை மற்றும் புலனாய்வுத்துறையைக் கொண்டு பைடன் அரசு தன் மீது வழக்குகளைப் போட்டிருப்பதாக அவருடைய அனுதாபிகளிடம் கூறிக்கொண்டிருக்கிறார். ஹிலரி க்ளிண்டன் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களைக் கையாண்டதில் நீதித்துறை அவருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது என்று அவரது குடியரசுக்கட்சி ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது க்ளிண்டன் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஆண்டுகளில் ரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 30,000 மின்னஞ்சல்கள் அவரது நியூயார்க் வீட்டில் உள்ள தனிப்பட்ட மின்னஞ்சல் சர்வரில் கண்டறியப்பட்டது. அவர் தேர்தலில் தோற்க அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. “அவர் ரகசியத் தகவல்களை சட்டத்தை மீறி தவறான முறையில் யாரிடமும் பரிமாறிக் கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் கவனக்குறைவாக இருந்ததற்கான சான்றுகள் இருந்தது. புலனாய்வுத்துறையினரின் விசாரணைக்கு க்ளிண்டன் ஒத்துழைத்ததாகவும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை” என்று அன்றைய புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமி பரிந்துரைத்திருந்தார்.

பதவிக்காலம் முடிந்தபின்னும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் ஆவணங்களை ஒப்படைக்காமல் அதனை மறைக்க ட்ரம்ப் சதி செய்ததும் நீதித்துறையின் தேடுதல் விசாரணை வழக்கிற்கு ஒத்துழைக்காததும் தான் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கியுள்ளது. இனி அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஃபுளோரிடா ஆளுநர் ரான் சென்டிசுடனான மோதல் எப்படி இருக்கப் போகிறது? யாரை குடியரசுக்கட்சி தங்களுடைய அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தும்? கட்சி தன்னை முன்னிறுத்தாத பட்சத்தில் தனித்துப் போட்டியிடுவாரா ட்ரம்ப் என்று பல கேள்விகள் உலவிவருகிறது. ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை வரவேற்கும் அதே நேரத்தில் அவர் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்களும் அவர் தான் அதிபர் வேட்பாளராக இருக்கவேண்டும் என ஆதரவாளர்களுமாய் குடியரசுக்கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளது.  

“நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமான தகவல்களைப் பாதுகாக்கும் சட்டங்களை மீறுவது நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும். எந்தவொரு பிரதிவாதியையும் போலவே குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை ட்ரம்ப் நிரபராதியாக கருதப்பட வேண்டும். நடுவர் மன்றத்தின் முன் விரைவான விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று இந்த வழக்கை வழிநடத்தும் அமெரிக்க சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளால் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதையும் வெற்றி பெற்றால் பதவியேற்பதையும் சட்டத்தால் தடுக்க முடியாது. அவர் கிரிமினல் விளைவுகளைச் சந்திப்பாரா என்பதை ஃபுளோரிடா நடுவர் மன்றம் முடிவு செய்யும். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கின் விசாரணைகள் சட்டம் ஒரு இருட்டறையா? என்பதை உணர்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Wednesday, July 12, 2023

அந்த நாளும் வந்திடாதோ




அமெரிக்காவில் உள்ள H-1B சிறப்பு தொழில் பணியாளர்கள் மற்றும் பிற தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவிலேயே விசா புதுப்பித்தல் வழங்கும் ஒரு பைலட் திட்டத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை பிப்ரவரி 9, 2023அன்று அறிவித்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் இந்த திட்டம், விண்ணப்பதாரர்கள் வெளிநாடு செல்வதற்கான தேவையை நீக்கி, விசா புதுப்பித்தல்களை நாட்டிற்குள் செயல்படுத்த அனுமதிக்கும். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும். கோவிட்-19 தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூதரக விவகாரங்களுக்கான பணியகத்தின் விசா சேவைகளுக்கான துணைச் செயலாளரான ஜூலி ஸ்டஃப்ட், 'ப்ளூம்பெர்க் லா'விற்கு அளித்த பேட்டியில், "இத்திட்டம் விசா புதுப்பித்தல் தொடர்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முயற்சிக்கும் பொழுது எதிர்கொள்ளும் சிரமங்களையும் நிவர்த்தி செய்ய உதவும்" என்று கூறியுள்ளார்.

H-1B விசா, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்குத் தேவையான ஒன்று. இரண்டு, மூன்று வருட காலத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற பலராலும் பயன்படுத்தப்படுகிறது. L-1 விசாக்கள், வெளிநாட்டு அலுவலகங்களில் இருந்து நிர்வாகப் பணியாளர்களை அமெரிக்காவிற்கு மாற்ற விரும்பும் அமெரிக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில், குறிப்பாக இந்தியாவில், எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய விசா இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, உள்நாட்டில் புதுப்பித்தல் திட்டத்தை குடிவரவு வழக்கறிஞர்கள் மற்றும் வணிகக் குழுக்கள் வெளியுறவுத்துறையை வலியுறுத்தியுள்ளன. வெளிநாடு செல்லும் பணியாளர்கள் விசா முத்திரை இல்லாமல் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. கொரோனா காலத்தில் பலரும் அவரவர் சொந்த நாடுகளில் சிக்கிக் கொண்டதால் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசியில் ஒரு புதிய தூதரகப் பிரிவை அமைத்து விசா நீட்டித்தல் விண்ணப்பங்களைக் கையாள அரசு முடிவெடுத்துள்ளதாக ஸ்டஃப்ட் கூறினார்.

நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்களின் அமெரிக்க வருகையின் பொழுது L1 மற்றும் H1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்லாமல் அமெரிக்காவிலேயே விசா புதுப்பிப்பதற்கான முத்திரையைப் பெறுவார்கள் என்ற அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வமான செய்தியை அமெரிக்காவாழ் மக்களிடையே பகிர்ந்தார். இது பலருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பது அனுபவமுள்ளவர்களுக்குப் புரியும். இந்தியர்கள் உட்பட திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களின் 'விசா புதுப்பித்தல்' பைலட் திட்டம் விரைவில் தொடங்கும் என்று பைடன் அரசு அறிவித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியதும் அவசியமானதும் கூட. கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் எச்1பி விசா ஸ்டாம்பிங் என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தொற்றுநோயால் அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டதால் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் பலரும் இந்தியாவில் சிக்கிக்கொண்டனர். இந்தியாவில் விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் அதிகமாகிக் கொண்டு வருவதால் ஹெச்1பி விசாவில் உள்ள பல இந்தியர்கள் தங்கள் அமெரிக்க வேலைகளை இழந்தனர் அல்லது வேறு பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல், விசா காலாவதியாகிவிட்டால் ஐரோப்பா வழியாக இந்தியாவிற்குச் செல்வதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள். இன்றைய நிலவரப்படி, அமெரிக்க விசா காலாவதியாகிவிட்டால், அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வழியாக இந்தியாவுக்குப் பயணிக்க ட்ரான்சிட் விசா தேவை. ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் வழியாக பயணம் மேற்கொண்டால் இந்த ட்ரான்சிட் விசா தேவை இல்லை. எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மேம்பட்ட பயண ஆவணங்கள் வழங்கப்பட்டால், அவர்கள் டிரான்சிட் விசா இல்லாமல் ஐரோப்பா வழியாகவும் இந்தியாவுக்குச் செல்ல முடியும்.

விசா காலம் முடியும் நேரம் பலரும் ஸ்டாம்பிங்கிற்காக இந்தியாவிற்குப் பயணிப்பார்கள். இனி இதற்காக மெனக்கெட்டுப் பயணிக்கத் தேவையில்லை.  ஊருக்குப் போக ட்ரான்சிட் விசா வாங்க வேண்டுமே என்ற கவலையுமில்லை. மெதுவாக மற்ற விசாக்களுக்கும் இந்த நடைமுறையைச் செயல்படுத்த வேண்டும். தேவையற்ற மன அழுத்தம் இல்லாமல் இந்தியாவிற்குச் சென்று குடும்பங்களுடன் செலவிடும் நேரங்கள் அதிகமாகும். 'அந்த நாளும் வந்திடாதோ' என்று ஹெச்1பி விசாவில் இருப்பவர்கள் பாட ஆரம்பித்து விட்டார்கள். விரைவில் பைடன் அரசு செயல்படுத்தும் என்று நம்புவோம்.

Tuesday, July 11, 2023

Good night


ஒரு வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து சம காலத்தில் நடக்கும் வேறு பல பிரச்சினைகளுடன் அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். குறட்டை ஒலிக்காத வீடுகள் அருகி வரும் காலத்தில் இப்படியொரு படம் தேவை தான். பொதுவாகவே, குறட்டை விடுபவர்கள் ஒன்று தாங்கள் குறட்டை விடுவதே இல்லை என்று சாதிப்பார்கள் இல்லையென்றால் அவ்வளவு மோசமில்லை என்று வாதிடுவார்கள். எல்லாரும் தான் குறட்டை விடுகிறார்கள் என்று கூட நான்கு பேரை அழைத்துக் கொள்வார்கள்.

அமெரிக்காவில் சில விவாகரத்து வழக்குகளுக்கு காரணமே கணவரின் தாங்க முடியாத குறட்டையால் சரியாக தூங்க முடியாமல் உடல்நலன் கெட்டது போன்றவை. இதில் உண்மையும் இருக்கிறது. பலரும் இன்று ஆளுக்கொரு அறையில் தூங்கி தப்பித்துக் கொள்கிறார்கள். அது தான் ஒரே வழி? ஒரு அறையில் குடித்தனம் பண்ண வேண்டியவர்கள் நிலைமையோ பரிதாபம் தான்.

இந்தப்படத்தில் வரும் கதாநாயகன் வேலைக்குச் செல்லும் வழியில் தூங்கி குறட்டை விட்டு காதலியை இழக்கிறான். அவனைப் பற்றித் தெரியாத பெண்ணை மணந்து அவதிப்பட்டு இறுதியில் சமரசம் ஆகிறார்கள் கணவனும் மனைவியும். வேறு வழி? அந்தப் பெண்ணும் தியாகியாகி... என்னவோ போடா மாதவா...😕 இந்தப் படத்தின் அழகே நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் தான். ஏதோ பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல எளிதில் கதையுடன் ஒன்ற அவர்கள் பெரிதளவில் உதவுகிறார்கள்.

அலுவலகங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள், திருமணமான பெண்ணிற்கு குழந்தை இல்லை என்றால் எப்படியெல்லாம் சமூகம் ஒருவரை சித்திரவதைக்குள்ளாக்கும், வீட்டிற்கு வேலை செய்ய வருபவர்களை வேலைக்காரர்களாக நடத்தாமல் மனிதாபிமானத்துடன் நடத்துவது என்று அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

குறட்டை விடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியங்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 'ஸ்லீப் ஆப்னியா' என்ற பெயருடன் வலம் வரும் இந்தப் பிரச்னைக்கு 'ஸ்கூபா டைவிங்' செய்வது போல  சில முகமூடிகள் போன்ற உபகரணங்களை அணிந்து தூங்கச் சொல்கிறார்கள். சரியாக தூங்கவில்லையென்றால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் என்று ஒவ்வொன்றாக கிளம்பி விடும் என பயந்து பலரும் முயற்சிக்கின்றனர்.

இப்படத்தில் வரும் 'மோட்டார்' மோகனைப் பல பல மோகன்கள் உலகில் இருக்கிறார்கள். இது சர்வதேச பிரச்னையாக்கும்😔ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் உண்டு. உடல் பருமன் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் குறட்டை விடும் நபருக்கு மூக்கெலும்பில், மூச்சுக்குழாயில் பிரச்னை இருக்கலாம். அதனால் மருத்துவரை அணுகி தெளிவு பெறலாம். இல்லையென்றால் பொறுமைசாலி குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியுடன் இருக்கலாம்.

சென்னை-மதுரை செல்லும் ரயிலில் சிலபல டெசிபல்களில் மக்கள் விதவிதமாக ஸ்வரங்கள் வாசித்துக் கொண்டிருந்த அந்த இரவைத் தான் மறக்க முடியுமா? இப்பொழுதெல்லாம் பிரயாணங்களில் குறட்டை விடாதவர்கள் பக்கத்து இருக்கையில் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது.

குறட்டைச் சத்தம் கேட்காத வீடுகளே இல்லை. குறட்டை விடாத கணவனோ/மனைவியோ வேண்டாம் என்றால் இன்று பலரும் சிங்கிளாகத் தான் திரிந்து கொண்டிருப்பார்கள். நமக்கெல்லாம் 'பேசும் படம்' கமல் மாதிரி😝

கொடுமையான உலகமப்பா😴😴😴😴😴


Wednesday, July 5, 2023

Dum Laga Ke Haisha



நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்தால் வரம். இல்லையா? கிடைக்கின்ற வாழ்க்கையை வரமாக்கிக் கொள்ள வேண்டும். இது தான் 'Dum Laga Ke Haisha' படத்தின் கரு. அதை சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை வைத்து மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள், 

படிக்காத ஒல்லிப்பையனாக அப்பாவிற்கு பயந்தவனாக ஆயுஷ்மான் குரானா நன்றாக நடித்திருக்கிறார். அப்பாவின் மிரட்டலுக்குப் பயந்து குண்டான, படித்த பட்டதாரிப் பெண்ணை வேண்டாவெறுப்பாகத் திருமணம் செய்து கொள்கிறார்.

அனைவரிடத்திலும் அன்பாக அதே நேரத்தில் ஆடல், பாடல் என்று சிரித்த முகத்துடன் கணவனின் அன்புக்கு ஏங்குபவராக, வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்ணாக பூமி பட்னேகரின் நடிப்பும் அருமை. வீடுகளில் நடக்கும் பிரச்சினைகளைச் சுவையாகப் படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரம் அந்த கால அப்பாக்களை பலருக்கும் நினைவுப்படுத்துகிறார். இந்தக்காலத்தில் அப்பாக்கள் மகன்களை மிரட்டுகிறார்களா என்ன?  அத்தையாக வருபவர் போல் வீடுகளில் ஒருவர் இருப்பார்😀

இன்றும் கூட குண்டாக இருக்கும் பெண்களின் நிலைமை கொடுமையானது. பெண் என்றால் ஒல்லியாக மெல்லிடையாளாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நவீன பாணி அடிமைத்தனம். இது பெண்களுக்குத் தான் அதிகம். உடல் ஆரோக்கியதிற்காக எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது வேறு. சமூகத்தின் கேலி, கிண்டல்களுக்குப் பயந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்று நினைத்து சைஸ் ஸீரோவாக மெனக்கெட முயன்று கொண்டே இருப்பார்கள். மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள். 

ஆணை விட பெண் அதிகம் படித்திருந்தாலும் உயர் பொறுப்பில் இருந்தாலும் அவளைச் சிறுமைப்படுத்த  சமூகம் தயங்குவதில்லை. அதை ஆங்காங்கே சிறுசிறு வசனங்கள் மூலம் அழகாகக் கூறியிருக்கிறார்கள். மிகப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய சமூகமே குண்டாக இருப்பதை அசிங்கம் என்பது போல் மக்களின் மனதில் விஷத்தைத் தூவிக் கொண்டிருக்கிறது. நாமும் அதற்குப் பலிகடாவாகிக் கொண்டிருக்கிறோம். இப்படத்தில் கதாநாயகியின் தம்பி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளின் உடல் எடையைச் சுட்டிக் காட்டுவான். யாரும் கண்டிக்காமல் இருப்பதையும் பார்க்கலாம்.  அதே போலத்தான் சமூக வலைதளங்களில், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் குண்டாக இருக்கும் பெண்களைப் பற்றின கேலியும் கிண்டலும் அதிகமாகி வருவதும் மனதளவில் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருவது தான் கொடுமை. இந்தப்படத்தில் அந்த மனநிலையை மாற்ற முயன்றிருக்கிறார்கள். 

செய்யும் தொழிலில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் பொழுது அதற்கு மாற தடுமாறுவதையும் அழகாக எடுத்து இருந்தார்கள். நன்கு நினைவில் இருக்கிறது. மதுரையில் ஒலிநாடாவில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் காளான்கள் போல மதுரை டவுன்ஹால் தெருக்களில் சிறுசிறு கடைகள் முளைத்தது. பாடல்களைப் பதிவு செய்ய கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இருப்பார்கள். கடை உரிமையாளர்கள் பலரும் புது பணக்காரர்கள் ஆனார்கள். காலம் மாறியது. சிடிக்களில் பாடல்களைக் கேட்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. அதில் மாற தயங்கியவர்கள் தொழிலில் நஷ்டமடைந்தார்கள். இன்று அந்தக் கடைகளே இல்லாது போய்விட்டிருக்கிறது. கதாநாயகனின் கடையும் அப்படித்தான் இப்படத்தில் ஒருகட்டத்தில் தேங்கி விடுகிறது. நன்றாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இப்படி 'சபாஷ்' போட வைக்கும் காட்சிகள் இப்படத்தில் பல உண்டு.  

ஹரித்வார், ரிஷிகேஷ் என்று நாங்கள் சமீபத்தில் சென்று வந்த இடங்களை மீண்டும் படத்தில் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. குறுகிய தெருக்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரம், வீடுகள், கங்கா ஆற்றங்கரை என்று படம் முழுவதும் சாமரம் வீசும் காட்சிகள்.

பட நாயகன் ஷாகாவிற்குச் செல்வதாக காட்சிகளை அமைத்திருந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரியான காட்சிகளை இந்திப்படங்களில் தான் பார்க்க முடியும். அதிக செலவில்லாமல் ஓவர் மேக்கப், குத்தாட்டம், இரைச்சல் என்ற அக்கப்போருகள் இல்லாமல் நம் வீடுகளில் நடப்பதைப் போல் சாதாரணமாக அதுவும் நல்ல கதையுடன் அருமையாக ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர் ஷரத் கட்டாரியாவிற்கு 👏👏👏

இன்றும் பல திருமணங்களில் மனப்பொருத்தத்தை விட பணப்பொருத்தமே முதன்மையாக இருக்கிறது. திருமண உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் அன்பினால் பலப்படுவது. அதை கதாநாயகன் உணரும் வேளையில் எல்லாம் சுபமே.

இனிமையான இந்தப் பாடல் இன்னொரு முத்தாய்ப்பு💕

Ye moh moh ke dhaage
Teri ungliyon se ja uljhe
Koi Toh Toh na laage
Kis tarah girah ye suljhe
Hai rom rom iktaara
Hai rom rom iktaara
Jo baadalon mein se guzre...

மிக நல்ல பொழுதுபோக்குப் படம். அமேசானில் காண கிடைக்கிறது.


Monday, July 3, 2023

தீராக்காதல்

சமீபத்தில் பார்த்த தமிழ்ப்படங்களில் 'பரவாயில்லை' என்று சொல்ல வைத்த படம் 'தீராக்காதல்'. காதலித்தவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளவது இல்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சிலர் கடைசி வரை சேர்ந்து வாழ்வது இல்லை. விடுகிறார்கள். அப்படியே சேர்ந்து வாழ்ந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது அரிது தான். அது எல்லா திருமணங்களுக்கும் பொருந்தும் என்றாலும் காதல் திருமணங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முக்கியமான அம்சம்.

கல்லூரியில் நிறைவேறாத காதல் '96' படத்தில் வந்தது போல அவரவர் வாழ்க்கையில் நினைவுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும். எங்கும் எப்பொழுதும் மனதின் அடிஆழத்தில் சுகமான நினைவுகளாக காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும். முக்கியமாக கணவனுக்கோ, மனைவிக்கோ தெரியாது பொக்கிஷமாக பொத்தி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

சமூகவலைதள காலத்தில் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் நடந்து வருகிறது. அந்த எல்லைக்குள் இருக்கும் வரை பிரச்னையில்லை. எல்லை மீறும் பொழுது ஏற்படும் மன வருத்தங்களைத் தான் இந்தப்படம் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறது. இன்னும் கூட நன்றாக எடுத்திருக்கலாம். கதாநாயகி 'சைக்கோ'வாக மாறும் அளவிற்கு உண்மைக்காதலா? அப்படி ஒன்றும் கதை நிரூபித்த மாதிரி தெரியவில்லை. நல்லவேளையாக சரியான நேரத்தில் படத்தை முடித்திருந்தார்கள். 

கதாநாயகனின் பாத்திரப்படைப்பு உண்மையாக இருந்தது. ஜெய்யும் நன்றாக பொருந்தியிருந்தார். நிறைவேறாத காதல், கண்டுகொள்ளாத மனைவி ஆனாலும் வாழ்க்கை வாழ வேண்டியது தான். உண்மையான காதல் அன்று இருந்தது. எப்பொழுதும் இருக்கிறது. சிறிது தடுமாற்றம் இருந்தாலும் முன்னாள் காதலியின் சைக்கோத்தனம் அவளிடமிருந்து பிரியும் காரணத்தை வலுவாக்குவது போல் காட்சிகளை அமைத்திருந்தார்கள். பழைய காட்சிகள் என்ற அபத்தங்கள் இல்லாமல் காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

இதையே காதலன் சைக்கோவாக காதலியின் குடும்ப நிம்மதியைத் தொலைக்கிற மாதிரி இருந்தால் எப்படி முடித்திருப்பார்களோ ?

உண்மையான காதல் என்பது என்றுமே உயிர்ப்புடன் தான் இருக்கும். படத்தின் முடிவில் வருவது போல் காதலர்கள் எங்கிருந்தாலும் காதல் வாழும். 

வாழ வைக்கும் காதலுக்கு ஜே!

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சுட்டிக்குழந்தை, சுவேதா, நண்பன் கதாபாத்திரம் என்று அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நன்கு நடித்திருக்கிறார்கள். தேவையற்ற குறியீடுகள், பாடல்கள் போன்ற இம்சைகள் இல்லாதது மிகச்சிறப்பு. 

அமேசான் ப்ரைமில் இப்படத்தைப் பார்க்கலாம்.



Sunday, July 2, 2023

குரு பூர்ணிமா



இன்று பௌர்ணமி. வானில் மதி நிறைந்த நன்னாள். அதுவும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி, 'குரு பூர்ணிமா' அல்லது 'வியாச பூர்ணிமா' என்று இந்து மக்களால் கொண்டாடப்படும் புனித நாள். புலம்பெயர்ந்து சென்றாலும் பலரும் பௌர்ணமி பூஜையை வீடுகளில் இன்றுவரையில் செய்து வருவது சிறப்பு. இங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று சிறப்பாக பூஜைகள் நடைபெறும். தெலுங்கு பேசும் மக்கள் சிலர் வீடுகளில் வருடம் ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் பௌர்ணமி பூஜை செய்கிறார்கள்! நமக்குத்தான் அப்படியான பழக்கம் ஏதும்  இல்லை.

என் சிறுவயதில் அம்மா எங்களை அழைத்துக் கொண்டு எங்கள் சமூகத்துக் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பெண்களால் நடத்தப்படும் இந்தப் பூஜைக்குத் தவறாமல் அழைத்துச் செல்வார். பூஜையைத் தலைமையேற்று நடத்திய பெண்மணி கோவிலுக்கு அருகில் இருந்த நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலந்து கொண்டவர்கள் பலரும் கூட நெசவாளர்கள் தான். மிக எளிமையாக நடந்த பூஜை அது. கோவிலுக்குள் இதற்காகச் சிறு இடத்தை ஒதுக்கி இருந்தார்கள் அப்போது. சத்யநாராயண சுவாமி படத்தை வைத்து விநாயக, கும்ப வழிபாடுடன் துவங்கும் பூஜை, மந்திரங்கள் ஒலிக்க, தீப, தூப, மலர், நைவேத்திய ஆராதனைகள், கதைகளுடன் முடிவடையும். மதுரையில் மழை இல்லாத வானில் முழுநிலவு ஜொலிக்க, வணங்கி பூஜையை நடத்திய குருவான அந்தப் பெண்மணியிடம் ஆசீர்வாதம் வாங்கி விடைபெறுவோம். நிலவு தொடர, ரசித்துக் கொண்டே வீடு வந்து சேர்வோம்.

பௌர்ணமி பூஜை என்றாலே கமகமவென்று ரவை கேசரி வாசம் ஏங்க வைக்கும். அந்த மாலை வீடே தெய்வீகமாக இருக்க, நாங்களும் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டுப் பூஜையில் கலந்து கொள்வோம். இன்று வரையில் தொடரும் இந்தப் பூஜை பற்றின நினைவுகள் என்றுமே பசுமையானவை. வீட்டிலேயே அம்மா பூஜை செய்ய ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு அருகிலிருந்த பெண்மணி ஒருவரும் கலந்து கொண்டார். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த பொழுது, அன்று உங்கள் அம்மா செய்த பூஜை இன்று உங்களை வழிநடத்துகிறது என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப்  பேசினார். ம்ம்ம்...

ஒரு கோடை காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது வழியில் என்னுடைய கல்லூரி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் முதலாம் ஆண்டிலும் கணினியியல்  துறையிலும் வகுப்புகளை எடுத்தவர். ஆசிரியர்களில் சிறிது வித்தியாசமாக எளிமையாக வகுப்புகள் எடுப்பதில் என்னைக் கவர்ந்தவர். அவரை வணங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். வட அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக அவரின் பரிந்துரை கடிதத்திற்காகச் சந்தித்ததை நினைவு கூர்ந்தவுடன், ஞாபகம் இருக்கிறது. எங்கே எப்படி என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். கல்லூரியில் நடக்கவிருக்கும் வெள்ளிவிழா மாணவர் சந்திப்பிற்கு வந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக வருவதாகச் சொன்னவர், அங்கே வந்திருந்து வாழ்த்தியதை என்றும் மறக்க முடியாது. அவர் மட்டுமல்ல, சில பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நம்மை அறியாமலே ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையில் வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். என்றோ அவர்கள் கூறிய அறிவுரைகள் இன்றுவரை நம்மை நல்வழியில் செலுத்திக் கொண்டே இருக்கும். அந்த விதத்தில் எனக்குப் பல ஆசிரியர்கள் உண்டு. இவர்களைத்தவிர, பெற்றோர்கள், வீட்டுப்பெரியவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் வழிநடத்தி இருக்கிறார்கள். வழிநடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். பலர் நினைவுகளில். சிலர் இன்று வரையிலும் துணையாக நின்று. என்ன தவம் செய்தனை என்று இந்த நாளில் அவர்களை நினைத்து நன்றிகளைக் கூறிக்கொள்வேன்.

இந்துக்களின் வழிப்பாட்டில், வாழ்க்கைமுறையில் குருவிற்கென்று எப்பொழுதுமே சிறப்பான இடம் ஒன்று உண்டு. பள்ளியில் நமக்குப் பாடம் கற்பித்த குருக்கள் நமது ஆசிரியர்கள். நம்மைச் செழுமைப்படுத்தி வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தவர்கள். ஒருவரின் அறியாமை எனும் இருட்டு வாழ்க்கையில் இருந்து அறிவு, ஞானம், ஒழுக்கம் என்னும் தீபங்கள் ஏற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்கள் அனைவருமே குருவாக தகுதியுடையவர்களாகி மேன்மை அடைகிறார்கள். அந்த வகையில் இன்று வரை என்னை வழிநடத்தும் குருவானவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:



Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...