சொல்வனம் இதழ் 308ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை.
அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்குள் ‘தடாலடி’ அரசியல் நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதால் நீதிமன்றங்களில் நடக்கும் முன்னாள் அதிபர் மீதான வழக்கு, விசாரணைகள் விவாதப்பொருளாக மாறி வருகிறது. மக்களிடையே அதிபர் ஜோ பைடனின் ஆதரவு குறைந்து வரும் வேளையில் எதிர்க்கட்சியில் நடக்கும் களேபரங்களுக்கும் குறைவில்லை. அரசியல் வரலாற்றில் இன்றைய தலைமுறையினர் கேட்டிராத நிகழ்வு ஒன்று டிசம்பர் 1, 2023 அன்று அரங்கேறி அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
2022, நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் நியூயார்க்கில் குடியரசுக்கட்சி தன்னுடைய எண்ணிக்கையை எட்டு உறுப்பினர்களில் இருந்து 11ஆக அதிகரித்ததில் இருந்தே அவர்கள் பெற்று வரும் செல்வாக்கை ஜனநாயகக்கட்சியினர் விமரிசித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் தான் நியூயார்க்கின் லாங் ஐலண்ட் மக்கள் பிரதிநிதி, குடியரசுக்கட்சியின் ‘ஜார்ஜ் சாண்டோஸ்’ காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த வெளியேற்றம் என்பது சபை விதிக்கக்கூடிய மிகக் கடுமையான தண்டனை முறையாகும். அமெரிக்க அரசியலில் அவையிலிருந்து நீக்கப்பட்ட ஆறாவது பிரதிநிதி மற்றும் முதல் குடியரசுக் கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சபையிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது என்பது சாதாரணமான செயல் அல்ல. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது முதல் உள் விதிகளை மீறி “ஒழுங்கற்ற நடத்தையில்” ஈடுபட்டால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் வாக்குகளுடன் குற்றம் சாட்டப்பட்ட பிரதிநிதியைச் சபையிலிருந்து வெளியேற்ற அமெரிக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. அதன்படி, சாண்டோஸ் அவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு மூன்று கூட்டமைப்பு கிளர்ச்சியாளர்கள், இரண்டு குற்றவாளிகள் மற்றும் இன்னும் விசாரிக்கப்படாத பல குற்றங்களில் தொடர்பு கொண்டிருந்த மக்களின் பிரதிநிதி என 1861ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆறு காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே அவையிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையாக வெளியேற்றத்தை வடிவமைத்திருந்தாலும் கட்சியினரைப் பிளவுபடுத்தும் செயலாக இருப்பதால் இந்த நடவடிக்கை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் சாண்டோஸ்? ஓரினச்சேர்க்கையாளாரான ‘ஜார்ஜ் சாண்டோஸ் தேர்தலில் நின்ற நாள் முதலே பல புகார்களும் விமரிசனங்களும் அவர் மீது எழுந்தன. வெற்றி பெற்று ஜனவரி, 2023ல் பதவியேற்றபின் அவரது கல்வி, மதம், தாயின் மரணம், பிரச்சார நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, வேலை வரலாறு உட்பட அவரது பின்னணியின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய அப்பட்டமான பொய் அறிக்கைகளின் காரணமாக 2023, மார்ச் மாதம் காங்கிரசின் நெறிமுறைக் குழு (Ethics Committee) ஆரம்பகட்ட விசாரணையைத் தூண்டியது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, ஃபெடரல் கிராண்ட் ஜூரி 23 வழக்குகளில் அவர் மீது குற்றஞ்சாட்டி மே 10, 2023 அன்று காவலில் வைக்கப்பட்டார்.
தனது அரசியல் பிரச்சாரத்திற்காகப் பெற்ற நன்கொடைகளைத் தனிப்பட்ட செலவுகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் செலவழிப்பதற்கு முன்பு அவர் கட்டுப்படுத்திய வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றியதற்காகவும் அவர் மீது பணப்பரிமாற்ற மோசடி குற்றம் சாட்டப்பட்டது. அதற்காக அவர் நிறுவிய நிறுவனம் ஒரு சமூக நல அமைப்பு என்று பிரச்சார நிதியளிப்பவர்களிடம் பொய் கூறியதும் அம்பலமாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு அரசு வழங்கிய சலுகைகளைப் பெற விண்ணப்பித்து மோசடி செய்ததாகவும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தவறான நிதி அறிக்கைகளை அளித்ததற்காகவும் வழக்குகள் தொடரப்பட்டன.
“பிரச்சாரத்திற்காக இருவரிடமிருந்து பெறப்பட்ட $50,000 நன்கொடையை தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு மாற்றி உயர்தர ஆடைகள், பயணங்கள், கடன் அட்டைகள், அழகுசாதனப் பொருட்கள், ஆபாச தளங்கள், போட்டாக்ஸ் உட்பட பல்வேறு தனிப்பட்ட செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை தேர்தல் நிதியிலிருந்து செலவிட்டதாக” அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 22 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதையடுத்து அவரை அவையிலிருந்து வெளியேற்ற ஜனநாயக கட்சியினர் நடவடிக்கை எடுத்தனர். நெறிமுறைக் குழு அதன் இறுதி முடிவுகளை வெளியிடும் வரை காத்திருப்பது சிறந்தது என்று குடியரசுக்கட்சியினர் வாதிட்டு தற்காலிகமாக வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தினர். நவம்பரில், அடையாள திருட்டு மற்றும் கிரெடிட் கார்டு மோசடி உள்ளிட்ட கூடுதல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு,சாண்டோஸை அகற்றுவதற்கான இரண்டாவது முயற்சியும் நியூயார்க் குடியரசுக்கட்சியினரால் தடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் அவையின் குடியரசுக்கட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்பதில் கட்சி மிக கவனமாக இருந்தது.
அவையின் தலைவரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சன், சாண்டோஸை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார். மனைவியை அடிப்பவர்களும் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்பவர்களும் காங்கிரசில் இருக்கும் பொழுது தான் செய்தது பெரிய குற்றமல்ல என்று சாண்டோஸ் நிராகரித்தார். இறுதியில், மூன்றாவது முறையாக விவாதம் நடந்து 311 அவை உறுப்பினர்கள் அவரை நீக்குமாறு வாக்களித்தனர். 114 உறுப்பினர்கள் இந்த முடிவை எதிர்த்தனர். ஜான்சனும் மற்ற மூத்த குடியரசுக்கட்சியினரும் அவையிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என்று வாக்களித்திருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாண்டோஸ் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
“பெரும்பாலான குடியரசுக் கட்சியினர் அவரை வெளியேற்றுவதற்கு எதிராக வாக்களித்தனர். நெறிமுறைகள் அல்லது சட்டத்தைப் பற்றி குடியரசுக்கட்சி எப்பொழுதுமே கவலைப்படுவதில்லை. அதிகாரம் மட்டுமே அவர்களின் குறியாக உள்ளது.” என்று பெர்க்லி பல்கலை பேராசிரியரும், முன்னாள் அமெரிக்கத் தொழிலாளர் செயலாளரும், கார்டியன் கட்டுரையாளருமான ராபர்ட் ஹெய்ச் கூறியுள்ளார்.
சாண்டோஸ் இடத்தை நிரப்ப 90 நாட்களுக்குள் சிறப்புத் தேர்தலை நடத்த வேண்டும். நியூயார்க்கின் ஜனநாயகக்கட்சி கவர்னர் கேத்தி ஹோக்குல், விரைவில் லாங் ஐலேண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் நியூயார்க் குடியரசுக் கட்சியின் “சிவப்பு அலையின்” ஒரு பகுதியாக சாண்டோஸ் வெற்றி பெற்றார். இதனால் ஜனநாயகக் கட்சியினர் சபையின் கட்டுப்பாட்டை இழந்தனர். குடியரசுக்கட்சியின் பெரும்பான்மையைக் குறைக்க, ஜனநாயகக்கட்சியினர் இப்போது சாண்டோஸின் இடத்தை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதற்காகத்தான் இந்த வெளியேற்றம் என்றே குடியரசுக்கட்சியினர் கூறிவருகிறார்கள்.
“அவர் தானாகவே ராஜினாமா செய்து காங்கிரசைக் காப்பாற்றியிருக்க வேண்டும். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட காங்கிரஸின் மூன்றாவது உறுப்பினராக இப்போது அவர் நினைவுகூரப்படுவார்.” என்று கட்சி சார்பற்ற பிரச்சார சட்ட மையத்தின் சட்ட இயக்குனர் ஆதவ் நோட்டி கூறியுள்ளார். மேலும், “சாண்டோஸின் வெளியேற்றத்தின் மூலம் யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. நெறிமுறைகள், அமலாக்கத்தின் சக்தி மற்றும் திறன் என்பதைக் காட்டுகிறது. அமெரிக்கர்களிடமிருந்து பெற்ற பிரச்சார நிதியைப் பற்றின நேர்மையான அறிக்கையை அறிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பறிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திறம்படச் செயலாற்ற அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு.” என்றும் கூறியுள்ளார்.
அவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் பிரதிநிதிகள் பெரும் ஓய்வூதியம் உட்பட சலுகைகள் அனைத்தையும் இழக்கிறார் சாண்டோஸ். குற்றம் சாட்டப்பட்டவராயினும் மீண்டும் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை. அதில் தனக்கு நாட்டமில்லை என்று சாண்டோஸ் கூறியுள்ளார். அமெரிக்க அரசியலில், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குக் கூட பெரும்பாலும் இரண்டாவது ஆட்டம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்தில் பதவியோ இல்லையென்றால் ரியாலிட்டி டிவி அல்லது பெரிய திரையில் படமாகவோ ஒரு வாய்ப்பைக் கொடுத்து விடுகிறார்கள். இவருக்கும் அப்படியொரு வாய்ப்பு காத்திருக்கிறது!
தனக்குப் பதிலாக அப்பதவியில் முன்னாள் காவல்துறை அதிகாரியும் பாதுகாப்பு நிபுணருமான ‘மைக் சப்ரைகோன்’ சிறந்த தேர்வாக இருப்பார் என்று சாண்டோஸ் கூறியுள்ளார். சட்ட அமலாக்கம் மற்றும் வணிக உலகில் அவரது அனுபவம் எதிர்க்கட்சி வேட்பாளரான சூசியுடன் மோதுவதற்கு உதவும் பெருகாராணிகளாக இருக்கும். மீண்டும் குடியரசுக்கட்சியினரே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். ஜனநாயகக்கட்சியினரும் இழந்த எண்ணிக்கையைப் பெறுவதில் குறியாக உள்ளனர்.
ஆனாலும் அவருடைய வெளியேற்றம் என்பது மிகப்பெரிய தண்டனை என்று ஆதரவுக்குரல்களும் ஒலிக்கத்தான் செய்கிறது! இதைவிடப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள். சாண்டோஸுக்கு ஒரு வருடத்திற்குள் தண்டனை சாத்தியமானது போல சட்டத்தை மீறிய, மீறும் சட்ட நாயகர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்குமா? என்பதே மில்லினியல்களின் மில்லியன் டாலர் கேள்வி!
தவறு செய்தவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் நியதி. ஏழைக்கொரு நீதி. ஆட்பலம், அதிகாரம், பண பலம் கொண்டவர்களுக்கு ஒரு நீதி என்று தினமும் அரங்கேறும் அறமற்ற காட்சிகள் “அரசியல் ஒரு சாக்கடை” என்பதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. “இதெல்லாம் அரசியல்ல…” என மிகச்சசாதாரணமாக இரு கட்சிகளும்.கடந்து சென்று விடுகிறது. மீண்டும் குடியரசுக்கட்சியினரே அந்தத் தொகுதியில் ஜெயிக்கிறார்களா என்பதில் இருக்கிறது அரசியல் விளையாட்டு.