Friday, June 17, 2022

கற்றதும் பெற்றதும்

வாழ்க்கையில் முன்னேற சில அறிவுரைகள், வாழ்க்கைப்பாடங்கள், வழிகாட்டிகள் அவசியம். நாம் தடுமாறும் போதெல்லாம் நல்ல துணையாக அது வழிகாட்டும். இன்று படித்ததில் பிடித்த என் வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் சில விதிமுறைகள்.

1. தோல்வி என்பது நிரந்தரமே. அதனைக் கண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் போராடுவதில் தான் வெற்றி என்பதை பல நேரங்களில் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.

2. இறந்த காலத்தின் கசப்பான அனுபவங்களை, நிகழ்வுகளை ஒரு கட்டத்தில் விட்டு விட்டு அல்லது ஏற்றுக் கொண்டு மீண்டும் முதலில் இருந்து ஒரு புதிய துவக்கம் நிம்மதியைத் தரும். அல்லது புதிய பாடத்தைக் கற்றுத் தரும். இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

3. நம்முடைய பழக்க வழக்கங்களே நம் வாழ்வைச் செதுக்கும். அதனால் நல்ல வழக்கங்களை மேற்கொள்வது நல்லது. அனுபவத்தால் உணர்ந்த உண்மை. அது மட்டுமல்ல, நம் குழந்தைகளும் அதை நம்மிடமிருந்து கற்றுக் கொள்வதால் பெற்றோராக நாம் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டிய ஒன்று.

4. ஒன்று செய்ய முடிவெடுத்து விட்டால் எப்பாடுபட்டாவது அதைக் கற்றுக் கொண்டு முடிக்க வேண்டும். முதல் விதிமுறையை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இது வேலை செய்யுமிடத்தில் அதிகம் நான் உபயோகிப்பது. அதனாலாயே எனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

5. எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது. நம் நிம்மதிக்கு இது தான் மிகவும் அவசியம். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேரிடையாகவே இப்படிப்பட்ட மனிதர்களிடம் உங்கள் எண்ணங்கள் சரியில்லை. நீங்களாகவே விலகிச்சென்று விடுங்கள் என்று சொல்லும் தைரியம் வந்துள்ளது. எனக்கும் நிம்மதியாக இருக்கிறது.

6. அடுத்தவருடன் ஒப்பீடு செய்து கொள்ளாதீர்கள். ஒப்பீடு செய்வதால் இருக்கும் நிம்மதியும் கெட்டு குடும்பம் சிதறி விடும். பலரும் கற்றுத் தந்த பாடம். நல்ல வேளை! இந்த தீய குணம் என்னிடத்தில் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள் செல்வாக்கில், செல்வத்தில் சுழன்று கொண்டிருந்தாலும் என் மன நிம்மதி மட்டுமே எனக்கு முக்கியம் என்று நினைத்ததாலோ என்னவோ எனக்குப் பிடித்த செயல்களைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. என்னை நானே எப்பொழுதும் புதிய முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்வதும் அடுத்தவரைப் பற்றின சிந்தனையை என்னுள் வளர விடாததும் என் வாழ்க்கையைச் சுகமாக அனுபவிக்க முடிகிறது.

7. வேலைக்குச் செல்வது பணம் சம்பாதிக்க தான். அதற்காக எப்பொழுதும் பணிச்சுமையுடன் அலையாமல் சேமிப்புடன் நமக்கான வாழ்க்கையை வாழவும் முனையும் பொழுது எல்லாம் சுகமே. நம்மில் பலரும் சேமிக்க வேண்டும் என்று நம் சுகங்களைத் தியாகம் செய்வதால் மன அழுத்தம் கூடுமே ஒழிய, குறையாது. அவ்வப்பொழுது நமக்கும் ஓய்வும் தனிமையும் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றும் செய்யாமல் "சும்மா இருக்க"வும் கற்றுக் கொள்ள வேண்டும். குடும்பம் நல்லது தான். ஆனால், குடும்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல. தனி மனிதனின் சுக, துக்கங்களும் அதன் புரிதலும் அவசியம்.

8. ஏதாவது ஒன்றைப் புதிதாக கற்றுக் கொண்டே இருப்பது நல்லது. அது பணி சார்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது அவரவர் விருப்புச் சார்ந்த எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நல்ல பொழுதுபோக்கும் மகிழ்ச்சியையும் தரும்.

9. நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்கும் கற்றுத்தரலாம். அதன் மூலம் மேலும் பல நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். இதுவும் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

10. பணிவு அவசியம். நாடகத்தனமாக இல்லாது உண்மையான நேர்மையான பணிவு எக்காலத்திற்கும் பொருந்தும்.

11. ஆக்கபூர்வமான விமரிசனம் நல்லது. நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ள பலவகைகளிலும் அது உதவும். என்ன காது கொடுத்துக் கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும்.

12. நம்மை உயர்த்தினவர்களை என்றும் மறக்க கூடாது. "நன்றி மறப்பது நன்றன்று" என்று திருவள்ளுவர் சொல்லியதைப் படித்த நாம் வாழ்க்கையில் மறக்கக் கூடாத நல்ல பண்பு.

13. செய்யும் எந்த செயலையும் மனம் விரும்பிச் செய்ய வேண்டும். அது பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி, சமையலாக இருந்தாலும் சரி. ஒரு செயலைப் பிடித்துச் செய்கையில் உடலும் மனமும் ஒன்று சேர மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கும். அனைத்திற்கும் மனமே காரணம்.

14. நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம். யாரும் யாரையும் நம்பி இருப்பதில்லை. நமக்கு நாமே என்று உணரும் தருணம் வாழ்வின் பொன்னான தருணம்.

15. நாம் முட்டாள்கள் என்று உணர்ந்து விட்டால் போதும். பல பிரச்னைகள் குறைந்து விடும்.

இனிது இனிது இந்த வாழ்க்கை தான் இனிது. ஏதோ பிறந்து விட்டோம் என்று வாழாமல் நம்மால் முடிந்த அளவு உபகாரமாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருந்து விட்டால் போதும். இது தான் இதுவரையில் நான் கடந்து வந்த பாதையில் கற்றதும் பெற்றதும். இனியும் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களைக் கற்றுக் கொள்ள விழைவேன். விழைகிறேன்.



















No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...